11 November 2013

சொந்த செலவில் சூன்யம் - 74

நீ மட்டும் வா என்பதுபோல் ராஜசேகர் சாடை காட்டினான். வசந்த் புரிந்துக்கொண்டு தன் பர்சில் இருந்து  பணத்தை எடுத்து காவலர் ஒருவரிடம் கொடுத்து 'நீங்க சாப்ட்டுக்கிட்டிருங்க....' என்று அனுப்பி வைத்துவிட்டு ராஜசேகரை நெருங்கினான்.

'சொல்லுங்க பாஸ்.... இப்ப என்ன பண்ணலாம்... அட்ஜேர்ன்மென்ட் கேக்கலாமா?' என்றான்.

'டேய், அதுக்கு முன்னால இன்னொரு முக்கியமான விஷயம்.' என்ற ராஜசேகர் முந்தைய தினம் இரவு தன்ராஜே அழைத்து தனபால் சாட்சியம் அளித்திருந்த முந்தைய வழக்கு விவரங்களை அளித்ததை கூறினான். அதை தொடர்ந்து அந்த வழக்குகளில் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பின் நகலை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்த விவரத்தையும் தெரிவித்தான். 'அந்த மூனு கேஸ்லயுமே வேணுதான்டா அட்வகேட். இதுலருந்து என்ன தெரியுது?'

'அவன் இவரோட கையாள்னு....' என்று சிரித்தான் வசந்த். 'ஒருவேளை ரெண்டு பேரும் ஒரே ஊர்க்காரங்களோ என்னவோ?'

'யார் கண்டா? இருந்தாலும் இருக்கும்.' என்ற ராஜசேகர் தொடர்ந்து, 'டேய், நீ டேட்டா கார்ட் கொண்டு வந்துருக்கியா?' என்று வினவினான்.

'அதான் நம்ம ஒடன்பிறப்பாச்சே பாஸ்... அது இல்லாம நா என்னைக்கி வெளிய போயிருக்கேன்? ஏன் கேக்கறீங்க?'

'எனக்கு ஒரு டீட்டெய்ல்ஸ் வேணும். வா, கார்ல போயி ஒக்காந்து பாக்கலாம்.'

இருவரும் ராஜசேகரின் வாகனத்தை அடைந்து வசந்தின் லேப்டாப்பை திறந்து இணைய தொடர்பை ஏற்படுத்தி புழல் ப்ரிசன் என்று கூகுளில் அடித்து அந்த தளத்தில் இருந்த சில விவரங்களை தன்னுடைய குறிப்பேட்டில் பதிந்துக்கொண்டான். 

'என்ன பாஸ் பாக்கறீங்க?'

'அது சஸ்பென்ஸ்.' என்றான் ராஜசேகர் புன்னகையுடன். அதன் பிறகு இந்திய தண்டனைச் சட்டத்தின் நகல் ஒன்றை தரவிறக்கம் செய்து அவனுக்கு வேண்டிய பிரிவுகளை தேடிப்பிடித்து அவற்றையும் அவற்றிற்கென கொடுக்கப்பட வேண்டிய தண்டனை விவரங்களையும் குறித்துக்கொண்டு இணையத்திலிருந்து வெளியேறினான். 'இந்தா ஷட்டவுன் பண்ணிரு.' என்று வசந்தின் லேப்டாப்பை அவனிடமே கொடுத்துவிட்டு 'வாடா நம்ம சீட்டுக்கு போயி ஒக்காந்துக்கலாம். அஞ்சி நிமிஷம் லேட்டானாலும் ஜட்ஜ் அட்ஜேர்ன் பண்ணாலும் பண்ணிருவார்.'

'அப்ப லஞ்ச் பாஸ்?' என்றான் வசந்த் கலக்கத்துடன்.

'டேய்... ஒரு வேளை வயிறு காஞ்சா செத்துறமாட்டே.... வா.' என்று தயங்கி நின்ற வசந்தை இழுத்துக்கொண்டு நீதிமன்ற அறையை அடைந்தான். ஆனால் நீதிபதி இன்னும் வந்திருக்கவில்லை.

அதுவரை வராந்தாவில் நிற்போம் என்று நினைத்த ராஜசேகர் அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டு, 'டேய், இந்த செஷந்தான் க்ளைமாக்ஸ்னு என் உள்மனசு சொல்லுது.' என்றான்.

'அப்படியா. என்ன பாஸ் சொல்றீங்க? இன்னையோட இது முடிஞ்சிரும்னு சொல்றீங்களா?'

'ஆமாடா....  எதுக்கும் ப்ரிப்பேர்டாத்தான் வந்துருக்கேன்.... இது நம்ம பிபி பண்ண வேலைதான்..... தன்பால் சொல்றது முழுசும் பொய்னு நிரூபிச்சாலே போறும். கேஸ் டிஸ்மிஸ் ஆயிரும்.....' என்ற ராஜசேகர் தொடர்ந்தான். 'எனக்கென்னவோ ஜட்ஜும் ஒரு டிசிஷனுக்கு வந்துட்டார்னுதான் நினைக்கேன். இல்லன்னா லஞ்சுக்கு அப்புறமும் கன்டினியூ பண்ணாம அட்ஜேர்ன் பண்ணியிருப்பார்...... என்ன சொல்ற?'

'அப்படியா சொல்றீங்க? இருந்தாலும் இருக்கும்....' என்ற வசந்த் தொடர்ந்து, 'போலீஸ் முருகேசன இன்னும் இன்டரகேட் பண்ணி முடிக்கலையா பாஸ்? கேட்டீங்களா?'

'இல்லேன்னு நினைக்கிறேன். இல்லன்னா தன்ராஜ் கூப்டாம இருந்துருக்க மாட்டார்.  அப்படியே அவன் ஒத்துக்கிட்டாலும் இந்த சமயத்துல அந்த விஷயத்த கோர்ட்ல சொல்றதுக்கு வேணு நிச்சயம் ஒத்துக்கமாட்டார். அவருக்கு கோபால எப்படியாவது உள்ள தள்ளிறணும்.....'

நீதிபதி அறையை நோக்கி வருவதை கவனித்த ராஜசேகர் பேச்சை மாற்றினான். 'டேய்  நா சீட்டுக்கு போறேன்... நீ போயி கோபால் என்ன ஆனார்னு பார்த்து இழுத்துக்கிட்டு வா....' என்றவாறு அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

அவனுக்கு முன்பே வந்து தன் இருக்கையில் அமர்ந்திருந்த வேணு தன் உதவியாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. அதன் முடிவில் ஒரு கேலி புன்னகையுடன் தன்னை திரும்பி பார்ப்பதையும் கவனித்த ராஜசேகர் இந்தாள் சரியான மேனியாக்கா (maniac) இருப்பான் போலருக்கே..... என்று நினைத்தவாறு அவருடைய பார்வையை தவிர்த்து வாசலை பார்த்தான். கோபால் வருவது தெரிந்தது. அவர் வந்து இருக்கையில் அமர்ந்ததும் 'சார் என்ன நடந்தாலும் நிதானத்த இழக்காம ஒக்காந்துருங்க. நா குறுக்கு விசாரணையில இருக்கறப்போ தயவு செஞ்சி ஏதாச்சும் சொல்லி காரியத்த கெடுத்துறாதீங்க, ப்ளீஸ்.' என்றான். 

'இல்ல சார்....' 

நீதிபதி இருக்கையில் வந்து அமர்ந்ததும் நீதிமன்ற சிப்பந்தியை சாடை காட்ட அவன் தனபாலின் பெயரை உரக்க கூவினான். அடுத்த சில நொடிகளில் தனபால் வந்து சாட்சி கூண்டில் நின்றார். 

'You can proceed' என்றார் நீதிபதி ராஜசேகரைப் பார்த்து, 'But remember, you have only about thirty minutes.....'

'Yes your honour' என்ற ராஜசேகர் 'என்னுடைய குறுக்கு விசாரணையை துவக்குவதற்கு முன்பு இரண்டு விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.' என்றான். 

'Go ahead.'

'முதலாவது: சென்னை புழல் பகுதியிலுள்ள மத்திய சிறைச்சாலைதான் பரப்பளவில் நாட்டிலேயே மிகப் பெரியது. அதில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளுக்கென்று தனித்தனியாக இரு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சுமார் 1200 கைதிகளை வைக்க முடியும். இணையத்திலுள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள்படி புழல் சிறையில் 962 தண்டனைக் கைதிகளும் 1100 ரிமான்ட் மற்றும் விசாரணைக் கைதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது 1200 தண்டனைக் கைதிகள் இருக்கக் கூடிய கட்டிடத்தில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வைக்கப்பட்டிருக்கும் சூழலில் ஆயுள் கைதியான சாட்சியை எதற்காக  விசாரணைக் கைதியான என்னுடைய கட்சிக்காரருடன் ஒரே சிறை அறையில் (prison cell) தங்க வைக்க வேண்டும்?

இரண்டாவதாக, திரு தனபால் என்னுடைய கட்சிக்காரருடைய அறையில் இருந்தது இரண்டே நாட்கள்தான். அதாவது இந்த வழக்கின் கடைசி விசாரணை (last hearing)க்கு அடுத்த நாள் அங்கு கொண்டுச் செல்லப்பட்டு இன்று காலை அங்கிருந்து மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆகவே இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்று கருதுகிறேன்.'

உடனே எழுந்து நின்ற வேணு கோபத்துடன், 'Objection' என்றார். 

எதற்கு என்பதுபோல் அவரைப் பார்த்தார் நீதிபதி. 

'எதிர்தரப்பு வழக்கறிஞர் வேண்டுமென்றே ஏதோ இதை நான்தான் திட்டமிட்டு செய்ததைப் போல் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.'

'Overruled...' என்ற நீதிபதி, ' Proceed with the cross.' என்றார் ராஜசேகரைப் பார்த்து. 

மீண்டும் எதையோ சொல்ல வாயெடுத்த வேணு அதை தவிர்த்து இருக்கையில் அமர ராஜசேகர் சாட்சி கூண்டை நெருங்கி, 'நீங்க புழல் சிறையில எவ்வளவு நாளா இருக்கீங்க?'

'எட்டு வருசம் ஆவுதுங்க.'

'மிஸ்டர் கோபால ஜெயில்ல வச்சி பாக்கறதுக்கு முன்னால ஒங்களுக்கு தெரியுமா, அதாவது பழக்கம் இருக்கா?'

'இல்லீங்க.'

'எவ்வளவு நேரம் அவர் கூட பேசியிருப்பீங்க? அதாவது அவர் நாந்தான் அந்த பொண்ணெ போட்டு தள்னேன்னு சொல்றதுக்கு முன்னாடி.....?'

'பத்து பதினைஞ்சி நிமிஷம் இருக்குங்க.'

'பத்து நிமிஷம் பேசினதுமே இந்த விஷயத்த ஒங்கக்கிட்ட சொல்லிட்டாரா....? இல்ல, அடுத்த நாள், அடுத்த வேளை.... அப்படீன்னு......'

'இல்லீங்க.... அப்பவே சொல்லிட்டார்.'

'அப்படீங்களா?' என்று வியப்புடன் சொன்ன  ராஜசேகர் தன் இருக்கைக்கு திரும்பி மேசை மீது வைக்கப்பட்டிருந்த சில காகிதங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சாட்சி கூண்டை நெருங்கினான். 

'இதுக்கு முன்னால.... அதாவது 2005ல நீங்க கன்விக்டானதுக்கப்புறம் வேற ஏதாச்சும் கேஸ்ல சாட்சி சொல்லியிருக்கீங்களா? நல்லா ஞாபகப் படுத்தி சொல்லுங்க.'

ஒரு சில விநாடிகள் யோசிப்பதுபோல் நடித்த தனபால் இறுதியில், 'இல்லேன்னுதான் நினைக்கிறேன்.'

'ஒங்களுக்கு ஞாபக சக்தி ரொம்ப கம்மின்னு நினைக்கேன்...' என்ற ராஜசேகர் தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தான். 'மூனு வருசத்துக்கு முன்னால வியாசார்பாடியில ஏகாம்பரம்னு ஒரு வியாபாரிய  நாலஞ்சி பேர் வெட்டிக் கொன்ன கேஸ்ல..... இதே மாதிரி ஒங்க செல்லுல கூட இருந்த ஒருத்தர் நாந்தான் இத ப்ளான் பண்ணி செஞ்சேன்னு உங்கக்கிட்ட சொன்னதா சாட்சி சொல்லியிருக்கீங்க! இப்ப ஞாபகம் வருதுங்களா?'

பிடிபட்ட கள்வனைப் போல் திருதிருவென விழித்த தனபால் தன்னையுமறியாமல் பிபி அமர்ந்திருந்த திசையை நோக்கிப் பார்த்தான். ராஜசேகர் அதை கவனியாதவன் போல் நின்றிருந்தாலும் நீதிபதி அதை கவனிக்க தவறவில்லை. பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மகாதேவனும் அதை கவனித்தார். ஆனால் இந்த விவரம் ராஜசேகருக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்தார். அதுவும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வேணு அழைத்து வந்த சாட்சியைப் பற்றிய தகவலை அதற்குள் எப்படி? இதுக்கு பின்னால என்னமோ நடக்குது என்று நினைத்தார். சரி என்னவாருந்தா நமக்கென்ன கோபால் செய்யாத குத்தத்துக்கு எத்தன நாள்தான் அவஸ்தைப் படறது? இன்னையோட முடிஞ்சா சரிதான்....

'இப்பவும் ஞாபகம் வரலீங்களா?' என்றான் ராஜசேகர். 'அதுவரைக்கும் கவர்ன்மென்ட் சைட்லருந்து சாட்சிங்க சொன்னது எதுவுமே செல்லுபடியாகாம இருந்த சமயத்துலதான் நீங்க வந்து சாட்சி சொல்லி அந்த கேஸ்ல அவர் கன்விக்ட் ஆனார்....'

தனபால் பதிலளிக்காமல் தலை குணிந்து நிற்க இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார் வேணு..... இடியட்.... எத்தனை தடவை இவனுக்கு சொல்லியிருப்பேன்.... தலை குணிஞ்சி நிக்காம எதையாச்சும் சொல்லி வைடான்னு..... வேணுவின் இந்த உத்திக்கு துவக்கத்திலிருந்தே சம்மதிக்காத ஆய்வாளர் பெருமாள் வேணும்யா ஒமக்கு.... நீரே வச்சிக்கிட்ட சூன்யம்தான? இத்தோட நீர் க்ளோஸானாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல என்று தனக்குள் மகிழ்வடைந்தார். 

ராஜசேகர் மீண்டும் தன் கையிலிருந்த காகிதங்களை புரட்டி அதில் ஒன்றை உருவி எடுத்து படிப்பதுபோல் நடித்துவிட்டு சட்டென்று, 'நீங்க சென்னை சென்ட்ரல் ஜெய்ல் புழலுக்கு மாத்தறதுக்கு முன்னாலருந்தே இருக்கறவர்தான?'

'ஆமாங்க.'

'புழலுக்கு வந்ததுலருந்தே கன்விக்ட் ப்ரிசனர்ஸ் ப்ளாக்லதான இருக்கீங்க?'

'ஆமாங்க.'

'அப்புறம் திடீர்னு எதுக்கு ஒங்கள ட்ரையல் ப்ரிசனர்ஸ் ப்ளாக்குக்கு மாத்தினாங்க?'

'தெரியலீங்க.... போன வாரம் ஒரு நாள் அசிஸ்டென்ட் ஜெயிலர் ஐயா வந்து எங்கூட வாய்யான்னு சொல்லி அந்த ப்ளாக்குல கொண்டு விட்டார்.... இங்க ஒரு வாரம் இரு.... அப்புறம் சொல்றேன்னார்.... அதான் தெரியும்.'

'ஆனா ரெண்டு மூனு நாள்தான் இங்க இருந்தீங்க, அப்படீத்தான?'

'விசாரணை கைதிங்க இருக்கற பில்டிங்லதான் சார் இப்பவும் இருக்கேன்.... ஆனா இன்னொருத்தரோட?'

'அதாவது அவர் கிட்டருந்தும் உண்மைய வரவைக்கறதுக்குன்னு சொல்லுங்க!' என்றான் ராஜசேகர் புன்னகையுடன். 

'Objection' என்றார் வேணு உரக்க, 'இது சாட்சியை அவமதிப்பதுபோல் உள்ளது.'

'Sustained..' என்றார் நீதிபதி சற்று எரிச்சலுடன். 'Is it going to take long?' என்றார் ராஜசேகரிடம். 

'No your honour... just few more questions.'

சரி என்பதுபோல் தலையை அசைத்த நீதிபதி சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். 

'ரெண்டு வருசத்துக்கு முன்னால பனகல்பார்க்ல ஒரு சீட்டுக் கடைக்காரர் மர்டர் ஆன கேஸ்லயும் நீங்க விட்ன்ஸ் குடுத்துருக்கீங்க? அவர் பேர் ஞாபகம் இருக்கா?'

தன்பால் திருதிருவென முழித்தவாறு, 'இல்லீங்களே?'

'அதான! என்ன கேஸ், யார கொலை பண்ணாங்கன்னு தெரியாமயே சாட்சி சொல்றவர்தான நீங்க?' என்ற ராஜசேகர் வேணு இதை ஆட்சேபிப்பார் என்று எதிர்பார்த்து அதற்கு அவருக்கு வாய்ப்பளிக்காமல், 'சரி அத விடுங்க.' என்று அடுத்த கேள்விக்கு தாவினான். 

'அந்த கைதி பேராவது ஞாபகம் இருக்கா?'

சிறிது நேரம் யோசிப்பதுபோல் நடித்த தனபால், 'இல்ல சார்.' என்றான். 

இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்த வேணு சற்று தள்ளி அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளை பார்த்தார். அவருக்கும் இது வியப்பை அளித்திருந்தது என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. 

'அந்த கேஸ்லயும் நீங்க சாட்சி சொன்னதுக்கப்புறம்தான் கேஸ் கன்விக்‌ஷன்ல முடிஞ்சிது... இதுல இன்னொரு ஆச்சரியம் அதுலயும் வேணு சார்தான் கவர்மென்ட் லாயர்.....' என்ற ராஜசேகர், 'நா சொல்றது சரிதானே?' என்றான் தனபாலைப் பார்த்து.

தனபால் பதிலளிக்காமல் வேணு அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்த்தான். 


நாளையுடன் நிறைவுபெறும்.....


  


13 comments:

தருமி said...

நாளையுடன் நிறைவுபெறும்.....//

ha!!!!

வே.நடனசபாபதி said...

மிக சுவாரஸ்யமான கட்டத்தில் நாளையுடன் நிறைவுறும் எனப் போட்டுவிட்டீர்களே! நிச்சயம் கோபால் விடுதலை ஆகிவிடுவார் எனத் தெரிந்தாலும், எப்படி வழக்கறிஞர் இராஜசேகர் விசாரணை செய்து அரசு வழக்கறிஞரை இந்த வழக்கில் தோற்கடிக்க போகிறார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அ. பாண்டியன் said...

வணக்கம் சகோதரரே..
வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரிந்தாலும் தங்கள் மொழிநடையை அறிய ஆவலாக இருக்கிறேன் என்றே சொல்லலாம். கதை புனைவதில் வல்லவர் நீங்கள். தொடருங்கள் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

Packirisamy N said...

மிகவும் அருமையாக, விறுவிறுப்புக் குறையாமல் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள். முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

தருமி said...
நாளையுடன் நிறைவுபெறும்.....//

ha!!!!//

அப்பாடா முடிஞ்சிதான்னு சொல்ல வறீங்களா:))

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
மிக சுவாரஸ்யமான கட்டத்தில் நாளையுடன் நிறைவுறும் எனப் போட்டுவிட்டீர்களே! //

எங்கேயாவது போட்டுத்தான ஆகணும்? இனிமேலும் இத வளத்துக்கிட்டு போனா நல்லாருக்காது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

PM
அ. பாண்டியன் said...
வணக்கம் சகோதரரே..
வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரிந்தாலும் தங்கள் மொழிநடையை அறிய ஆவலாக இருக்கிறேன் என்றே சொல்லலாம். கதை புனைவதில் வல்லவர் நீங்கள். தொடருங்கள் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே..

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
மிகவும் அருமையாக, விறுவிறுப்புக் குறையாமல் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள். முடிவுக்காகக் காத்திருக்கிறேன்.//

அதே விறுவிறுப்புடன் முடித்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தருமி said...

//அப்பாடா முடிஞ்சிதான்னு சொல்ல வறீங்களா:)) //

அடடா ...!

Sasi Kala said...

பொய் சாட்சி என்பதை வெகு சமார்ததியமாக நிருபித்த விதம் சிறப்புங்க.

டிபிஆர்.ஜோசப் said...

தருமி said...
//அப்பாடா முடிஞ்சிதான்னு சொல்ல வறீங்களா:)) //

அடடா ...!//

இதுக்கும் ஒரே வார்த்தையில பதிலா? ஆனா நா சொன்னா மாதிரி அர்த்தம் இல்லைன்னு மட்டும் புரியுது :))

டிபிஆர்.ஜோசப் said...

9 PM
Sasi Kala said...
பொய் சாட்சி என்பதை வெகு சமார்ததியமாக நிருபித்த விதம் சிறப்புங்க//

மிக்க நன்றிங்க.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தீர்ப்பு எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ராஜசேகரின் திறமையான வாதம் சூப்பர்.