08 November 2013

சொந்த செலவில் சூன்யம் - 71

அவனுடைய கேள்வியின் நோக்கம் புரியாமல் விழித்தார் கோபால், 'ஆமா சார்..... ரெண்டு நாளைக்கு முன்னாலதான் கூட்டிக்கிட்டு வந்து விட்டாங்க..... இன்னைக்கி காலையிலயே வந்து கூட்டிக்கிட்டு போய்ட்டாங்க.... எதுக்கு கேக்கறீங்க?'

'சொல்றேன்...' என்றான் ராஜசேகர். 'அவன் உங்கக்கிட்ட வந்து ஏதாச்சும் பேச்சு குடுத்தானா?'

'ஆமா சார்.. ஆனா நா பேசல..  பாத்தாலே ரவுடி மாதிரி இருந்தான்.... அவன் கூட நமக்கென்ன பேச்சுன்னு ஒதுங்கியே இருந்தேன்..... எப்படா போவான்னு இருந்துது..... எப்பப் பாத்தாலும் பீடிய புடிச்சி.... செல் முழுசும் ஒரே நாத்தம் சார்.. தாங்க முடியல....'

'அவன் இன்னைக்கி உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல வரானாம் சார்.... அதனாலதான் கேட்டேன். நீங்க இந்த கேஸ பத்தி அவன் கிட்ட ஒன்னும் சொல்லலையே?'

கோபால் அதிர்ச்சியுடன் பார்த்தார். 'என்ன சார் சொல்றீங்க? அவன் விட்னஸ் குடுக்க வரானா? எதுக்கு?'

'அவன் சாட்சி கூண்டுல ஏறுனாத்தான் தெரியும்..... என்ன சொல்ல போறான்னு......' என்றான் ராஜசேகர். 'அவன் என்ன சொன்னாலும் அத நா பாத்துக்கறேன்... நீங்க மட்டும் டென்ஷனாக இருந்தா சரி..... அவன் என்ன சொன்னாலும் நீங்க எமோஷனல் ஆகக் கூடாது... சரீங்களா?'

பதிலளிக்காமல் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்த கோபால் நீதிமன்ற அறை வாசலில் ராகவனும் அவருடைய மனைவியும் வந்து காத்திருந்ததை கவனித்தான். அவனுடைய பார்வையை தொடர்ந்து வாசல் பக்கம் திரும்பிய ராஜசேகரும் அவர்களை பார்த்தான். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பிபி வேணு அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்ததையும் அவர்களுக்கு பின்னால் நீதிமன்ற வளாகத்தில் வந்து நின்ற காவல்துறை வாகனம் ஒன்றிலிருந்து இறங்கிய இரு காவலர்கள் குமாரை அழைத்துவருவதையும் கவனித்தான். அவனுடைய மனதில் ஒரு இனம்புரியாத நிம்மதி பிறந்தது. இவங்க ரெண்டு பேரையும விசாரிச்சி முடியறதுக்குள்ள அட்ஜேர்ன் பண்ணாம இருந்தா சரி...... இந்த ரெண்டு பேரையும் விசாரிச்சி முடிக்கறதுக்கு முன்னால அந்த தனபால விசாரிக்க நாம அலவ் பண்ணக் கூடாது.....

கோபாலுடைய இடது பக்கத்தில் அமர்ந்திருந்த வசந்த் எழுந்து ராஜசேகர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தான். 'PW1ம் 2ம் வந்தாச்சி பாஸ்.... இன்னைக்கி தீபாவளிதான்.' என்று கிசுகிசுத்தான். 

'சரிடா... ஆனா அந்த தனபால் எங்க காணம்?'

'அவனெ இப்பவே காமிச்சிட்டா நம்மள ஷாக்காக்க முடியாத பாஸ்? அத தன்னோட ஸ்டைல்ல பிபி பண்ணுவார் பாருங்க.'

ராஜசேகர் பதிலளிக்காமல் புன்னகையுடன் அமர்ந்திருந்தான். முந்தைய தினம் இரவு தன்ராஜ் தனக்கு அனுப்பி வைத்திருந்த வழக்கு விவரங்களைப் பற்றி வசந்திடம் கூறலாமா என்று யோசித்தான்... பிறகு தன்ராஜ் 'இது நமக்குள்ளவே இருக்கட்டும்' என்று கூறியது நினைவுக்கு வர பிறகு கூறிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தான். 

அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி அறைக்குள் நுழைய அனைவரும் எழுந்து அவர் அமர்ந்ததும் மீண்டும் அமர்ந்தனர். அதுவரை வாசலில் நின்றிருந்த பிபி வேண்டுமென்றே நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் அறையிலுள்ள அனைவரும் தன்னை காணவேண்டுமென்ற எண்ணத்துடன் அறைக்குள் நுழைந்து நிதானமாக நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து இடமும் வலமும் அமர்ந்திருந்த தன் உதவியாளர்களுடன் ஏதோ கிசுகிசுத்துவிட்டு எழுந்து நின்று நீதிபதியைப் பார்த்தார். 

அவருடைய பார்வையின் நோக்கத்தை உணர்ந்த நீதிபதி, 'You may present your next witness.'என்றார்.

'என்னுடைய அடுத்த சாட்சியாக........' என்று நிறுத்திய பிபி வேணு திரும்பி நீதிமன்ற அறையின் வாயிலை பார்த்தார். அதற்கென்றே காத்திருந்ததுபோல் அவருடைய உதவியாளர்களுள் ஒருவர் வராந்தாவில் நின்றிருந்த ஒருவரை அழைத்துவந்தார். அவருக்கு பின்னால் இரு சிறைக் காவலர்களும் அறைக்குள் நுழைந்து அருகில் நின்றனர். 'மிஸ்டர் தனபாலை விசாரிக்க விரும்புகிறேன்.' என்று பிபி அறிவிக்கவும் நீதிபதி குழப்பத்துடன் தன் முன்னால் இருந்த அரசுதரப்பு சாட்சிகளின் பட்டியலைப் பார்ப்பதை கவனித்த ராஜசேகர் உடனே எழுந்து 'அப்ஜெக்‌ஷன்' என்றான் உரத்த குரலில்.

அவனுடைய குரலைக் கேட்டு நிமிர்ந்த நீதிபதி இருவரையும் தன் இருக்கைக்கு அருகில் வருமாறு சைகை செய்தார். 

இருவரும் அருகில் வந்ததும் நீதிபதி எரிச்சலுடன், 'What is this?' என்றார் பிபி வேணுவைப் பார்த்து, 'Who is this person? His name is not included in your witnesses list!' என்றார்.

''மன்னிக்கவும் யுவர் ஆனர்.' என்றார் வேணு. ஆனால் அவருடைய குரலில் எவ்வித மன்னிப்பும் தொனிக்காததை நீதிபதி கவனித்தாரோ இல்லையோ ராஜசேகர் கவனித்தான். 'இவர் அக்யூஸ்டோட செல்மேட். இவர்கிட்ட அக்யூஸ்ட் குற்றத்தை ஒப்புக்கொண்ட விஷயம் நேற்று இரவுதான் எனக்கு தெரிந்தது. ஆகவே இவரை முதலில் விசாரிக்க அனுமதி கோருகிறேன்.'

'I object your honour' என்றான் ராஜசேகர் சிறிதும் தாமதியாமல். 'முதலில் அரசு பட்டியலிட்ட சாட்சிகளை விசாரித்துவிட்டு பிறகு யாரை வேண்டுமானாலும் விசாரித்துக்கொள்ளட்டும்... எனக்கு ஆட்சேபனை இல்லை.'

நீதிபதி இருவரையும் பார்த்து 'நீங்கள் உங்கள் இருக்கைக்கு செல்லலாம்' என்றார்.

பிபியும் ராஜசேகரும் தங்கள் இருக்கைக்கு திரும்பியதும், 'permission denied' என்றார். 'You can proceed with the examination of the witnesses already listed in the charge sheet. Your request for examination of any additional witnessess will be considered on submission of a separate petition.' 

சுருதியிறங்கிப் போன பிபி வேணு திரும்பி ராஜசேகரை முறைத்துவிட்டு 'In that case I would like to call PW1' என்றார் கோபத்துடன். 

'Proceed' என்றார் நீதிபதி சுருக்கமாக.

அரசு தரப்பு சாட்சிகள் பட்டியலில் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருந்த ராகவனின் மனைவி தயக்கத்துடன் சாட்சி கூண்டில் ஏறி நின்றார். பயத்தில் அவருடைய கால்கள் நடுங்குவதை கண்ட நீதிபதி, 'உங்களுக்கு நிக்கறதுக்கு கஷ்டமாருக்காம்மா?' என்றார் மிருதுவாக. நீதிமன்ற அறையிலிருந்து வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அனைவருமே தன்னை நோக்கி பார்ப்பதை கவனித்த ராகவனின் மனைவிக்கு வெட்கம் மேலிட குனிந்தவாறே அவர் 'ஒக்காந்தா சவுகரியமாருக்கும்.' என்றார் மெல்லிய குரலில்.

நீதிபதி அருகில் நின்றிருந்த சிப்பந்தியைப் பார்த்து சைகை செய்ய உடனே கூண்டில் நின்றவருக்கு ஒரு இருக்கை அளிக்கப்பட்டது.

அவர் இருக்கையில் அமரும் வரையிலும் கூட காத்திருக்க விரும்பாத பிபி வேணு கூண்டை நெருங்கி, 'முதல்ல உங்க பேர சொல்லுங்க.' என்றார் சற்று விரைப்புடன். தான் விரும்பிய சாட்சியை விசாரிக்க நீதிபதியின் அனுமதி கிடைக்காததால் ஏற்பட்ட வெறுப்பு அவருடைய குரலில் தெரிந்ததை ராஜசேகர் கவனித்தான். இன்றைய விசாரணையில் தீப்பொறி பறக்கப் போவது நிச்சயம் என்று நினைத்தான்.

'ரேணுகா ராகவன்.' அவருடைய குரல் மிகவும் மெலிந்திருந்ததால் 'கொஞ்சம் சத்தமா பேசுங்க' என்றார் நீதிபதி. 'நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் நா கேட்டு ரெக்கார்ட் பண்ணணும்மா.....அதனால இன்னும் கொஞ்சம் உரக்க பேசுங்க.'

'சரிங்க சார்.' என்றார் ரேணுகா.

'எங்க குடியிருக்கீங்க?' என்றார் வேணு.

ரேணுகா தன்னுடைய வீட்டு விலாசத்தை கூறினார்.

அதை தொடர்ந்து மாதவியைப் பற்றியும் அவர் எப்போது அங்கு குடி வந்தார் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்து முடிக்க ரேணுகாவின் குரல் மெள்ள மெள்ள உயர்ந்து தெளிவாக கேட்டது. 

'மாதவி மர்டர் ஆன அன்னைக்கி சாயந்தரம் சுமார் ஏழு மணிக்கி நீங்க எங்க இருந்தீங்க?'

'நானும் என் கணவரும் பக்கத்துல இருக்கற கடைக்கி போய்ட்டு வந்துக்கிட்டிருந்தோம்....'

'அப்ப என்ன நடந்துது?'

'வாசல் கேட்ட தொறக்கறப்போ பக்கத்து வீட்டுல.....'

'பக்கத்து வீட்டுலன்னா கொலையுண்ட மாதவி வீடா?'

இதை 'He is leading the witness' என்று அப்ஜெக்ட் செய்யலாமா என்று யோசித்த ராஜசேகர் மறு நொடியே வேண்டாம் என்று தீர்மானித்தான்.

'ஆமா...'

'சரி, மேல சொல்லுங்க.'

'யாரோ நின்னுக்கிட்டிருந்தா மாதிரி தெரிஞ்சிது....'

அவருடைய பதிலில் திருப்தியடையாத வேணு சற்று எரிச்சலுடன் கேட்டார். 'நின்னுக்கிட்டிருந்தாரா இல்ல வீட்டுக்குள்ளருந்து வெளியில வந்தாரா, தெளிவா சொல்லுங்க.'

இம்முறை ராஜசேகர் சட்டென்று எழுந்து, 'அப்ஜெக்‌ஷன்' என்றான். 'He is leading the witness.'

'Sustained' என்றார் நீதிபதி.

வேணு திரும்பி ராஜசேகரை முறைத்துவிட்டு மீண்டும் சாட்சியின் பக்கம் திரும்பினார். இந்த கேள்விய எப்படி வேறு விதமாய் கேட்பது என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கும்போதே ரேணுகா 'அவர் வீட்டுக்குள்ளருந்து வந்தா மாதிரித்தான் தெரிஞ்சது.....' என்றார் தயக்கத்துடன். 

பாத்தியா உன் அப்ஜெக்‌ஷன் ஒன்னும் பலிக்கல என்பதுபோல் ராஜசேகரை பார்த்த வேணு, 'அங்க நீங்க பாத்த ஆள் இந்த கோர்ட்ல இருக்காரா?'

ரேணுகா திரும்பி கோபாலையும் அவருக்கருகில் அமர்ந்திருந்த ராஜசேகரையும் பார்த்துவிட்டு, 'இல்லைங்க' என்றார் சற்று உரக்க. 

இதை சற்றும் எதிர்பாராத வேணு உடனே திரும்பி அறையின் நடுவில் இருந்த மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். அவர் தலையை குனிந்து தன் முன் இருந்த கோப்பை பார்வையிடுவதுபோல் நடித்தார். 

ராஜசேகர் தன் அருகில் அமர்ந்திருந்த கோபாலை பார்த்தான்.  அவருடைய முகத்தில் தெரிந்தது அதிர்ச்சியா அல்லது மகிழ்ச்சியா என்பது தெரியாமால்.......'முகத்துல எந்த ரியாக்‌ஷனையும் காட்டாம இருங்க..' என்று கிசுகிசுத்தான். 'இல்லன்னா ஜட்ஜுக்கு சந்தேகம் வந்துரும்.'

'சரி சார்.' என்று பதிலளித்த கோபால் தலையை குணிந்துக்கொண்டார். 

வேணு உடனே அங்கிருந்து நகர்ந்து தன் இருக்கைக்கு சென்று உதவியாளர் ஒருவர் தயாராக எடுத்து வைத்திருந்த காகிதம் ஒன்றை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு சாட்சி கூண்டை நெருங்கினார். 'இது நீங்க போலீசுக்கு குடுத்த ஸ்டேட்மென்ட். வாசிக்கவா?' என்றார் பொறுமையுடன்.

'அது ஒருத்தரோட நிர்பந்தத்தால சொன்னதுங்க.' என்றார் ரேணுகா தெளிவாக. 'அது உண்மை இல்லை.'

கோர்ட்டில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த சலசலப்பு அடங்க சிறிது நேரம் எடுத்தது. அது அடங்கும் வரையிலும் காத்திருந்த நீதிபதி சாட்சி கூண்டில் நின்ற ரேணுகாவை பார்த்தார். 'என்னம்மா சொல்றீங்க?'

'சார்..... அவர் பேர் முருகேசன்..... அவரத்தான் நானும் என் ஹஸ்பென்டும் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ளருந்து வர்றத பாத்தோம்..... அவர் கோபாலத்தான் அங்க பாத்தோம்னு சொல்லச் சொல்லி இத்தனை நாளும் மிரட்டிக்கிட்டிருந்தார்.'

முருகேசனா இப்படி பண்ணான் என்று நினைத்தார் கோபால். அவனுக்கு மாதவி தன்னை திருமணம் செய்துக்கொள்வதில் துளியும் விருப்பமில்லை என்பது அவருக்கு தெரியும். அவரிடம் இதைப்பற்றி பல முறை பேசியதுடன் வேண்டாம் என்று எச்சரித்தும் இருந்தான். ஆனால் அதற்காக அவளை கொலை செய்யும் அளவுக்கு அவன் துணிவான் என்று நினைக்கவில்லை. 

மீண்டும் பார்வையாளர்களிடமிருந்து சலசலப்பு எழவே நீதிபதி எரிச்சலுடன் தன் சுத்தியலை தட்டினார்.

உடனே வேணு கோபத்துடன் இரைந்தார். 'நீங்க இப்ப சொல்றதுதான் சுத்தப் பொய்..... ஒன்னு நீங்க மிஸ்டர் கோபாலுக்கு பயந்துக்கிட்டு இத சொல்லணும். இல்லன்னா அவர்கிட்ட பணத்த வாங்கிக்கிட்டு இப்படி சொல்றீங்கன்னு நா சொல்றேன்... சரிதானே?'

அவருடைய குற்றச்சாட்டை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்கள் கலங்க நீதிபதியை நிமிர்ந்து பார்த்தார் ரேணுகா: 'சார் நா சொல்றது நிஜம். ஒரு பொய்ய சொல்லிட்டு இத்தன நாளும் நானும் என் வீட்டுக்காரரும் அந்த முருகேசன்கிட்ட மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டுட்டோம்.'

'இத முன்னாலயே போலீஸ்கிட்ட சொல்லிற வேண்டியதுதான? ஏன் சொல்லல?' என்றார் வேணு மீண்டும் கோபத்துடன்.

ரேணுகா வேணுவின் பார்வையை தவிர்த்து நீதிபதியைப் பார்த்தார். 'சார்.... போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் எங்க வீட்டுக்கு வந்துருந்தப்போ கூட நானும் என் வீட்டுக்காரரும் இந்த விஷயத்த சொன்னோம். ஆனா இந்த மாதிரி பொய்யெல்லாம் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க, நாங்க சொல்லிக் குடுத்தா மாதிரி சொல்லலன்னா உங்களுக்குத்தான் டேஞ்சர்னு சொல்லி மிரட்டிட்டு போனாருங்க.'

நீதிபதி உடனே திரும்பி அறையில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பெருமாளைப் பார்த்தார். ரேணுகாவின் பகிரங்க குற்றச்சாட்டை எதிர்பாராத பெருமாள் சங்கடத்துடன் தலையை குணிந்து கொண்டார். பிபி வேணுவின் முகம் கோபத்தால் சிவக்க 'I submit that this witness be declared hostile and request that all her statements disregarded.' என்றார் ஆவேசத்துடன். 

'Objection' என்றான் ராஜசேகர் எழுந்து.

தொடரும்...  

6 comments:

வே.நடனசபாபதி said...

விசாரணை சூடு பிடித்து உச்சத்துக்கு போகும்போது ‘தொடரும்’ எனப் போட்டுவிட்டீர்களே! இது நியாயமா?

அ. பாண்டியன் said...

எதிர்பார்ப்புகளை அகிர விட்டு கதையை முடிப்பது சிறப்பு சகோதரரே. நேர்த்தியான கதை பின்னல். அடுத்தடுத்து திருப்பம். அருமை. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
விசாரணை சூடு பிடித்து உச்சத்துக்கு போகும்போது ‘தொடரும்’ எனப் போட்டுவிட்டீர்களே! இது நியாயமா?//

என்ன பண்றது சார்... இல்லன்னா ரொம்பவும் நீளமான பதிவாருக்குமே...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

PM
அ. பாண்டியன் said...
எதிர்பார்ப்புகளை அகிர விட்டு கதையை முடிப்பது சிறப்பு சகோதரரே. நேர்த்தியான கதை பின்னல். அடுத்தடுத்து திருப்பம். அருமை. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே.

Sasi Kala said...

அடுத்து என்ன நடக்கும் என்ன கேட்பாங்க என ஆர்வமுடன் தொடர வைக்கும் பகிர்வு.

இத்தனை பதிவு எப்ப பகிர்ந்திங்க எனக்கு தெரியவில்லையே.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...


இத்தனை பதிவு எப்ப பகிர்ந்திங்க எனக்கு தெரியவில்லையே.//

போன ரெண்டு மாசமா டெய்லி ஒரு பதிவுன்னு போட்டுக்கிட்டே இருக்கேன்... ஆனா படிக்கறவங்களாலதான் தொடர்ந்து படிக்க முடியல.... பரவாயில்லை... நேரம் கிடைக்கறப்போ படிங்க.