07 November 2013

சொந்த செலவில் சூன்யம் - 70

'அந்த பொண்ணெ ரேப் பண்ணது நீயா இல்ல ராமராஜனா?' என்றார் ஷங்கர் சட்டென்று...

'என்னது, ரேப்பா?' என்றான் முருகேசன். கண்களில் உண்மையான அதிர்ச்சி தெரிந்தது. 

ஷங்கர் சிரித்தார். 'எதுக்கு ஷாக்காவற? மாட்டிக்கிட்டோம்னா?'

'சார்.... நமக்கு அதெல்லாம் வராது.' என்றான் முருகேசன். 'நமக்கு அந்த பொண்ணுக்கு ஆளுங்கள புடிச்சிக்குடுக்கற புரோக்கர் வேலைதான் தெரியும்..... இந்த மாதிரி வேலைல்லாம் தெரியாது.' 

'அப்போ ஒரு DNA டெஸ்ட் எடுத்து பாத்துறலாமா?'

'ஏன் கோபாலுந்தான் அன்னைக்கி அங்க போயிருந்தார்... அவருக்கு எடுத்து பாருங்க!'

'பாத்தாச்சி.' என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டார் ஷங்கர். 'நெகட்டிவ்னு வந்துருச்சி.... ராமராஜனுக்கு இனி செஞ்சி பிர்யோசனம் இல்ல.... மீதி இருக்கறது நீ மட்டுந்தான்... செஞ்சிரலாமா?'

'செஞ்சிரலாம் சார்....' என்று பிடிவாதத்துடன் கூறிய முருகேசனை பார்த்தார் ஷங்கர். அத இவன் செஞ்சிருக்க மாட்டான்  என்று தோன்றியது அவருக்கு. 

'ரேப் பண்ணல.... ஒத்துக்கறேன்... ஆனா அவ தலைய புடிச்சி சோபாவுல இடிச்சது நீதான். ஏன்னா ஒன் ஃபிங்கர் ப்ரின்ட் அந்த பொண்ணோட நெத்தியிலயும் காதுலயும் இருந்துருக்கு..... ரிப்போர்ட்ட காட்டவா?' இதுவும் ஒரு பொய்தான். மாதவியின் உடம்பில் இருந்து எந்த கைரேகையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. கொலையுண்டவரின் முகம் முழுவதிலும் இரத்தம் உறைந்துபோயிருந்ததால் தெளிவான கைரேகைகள் எதுவும் கிடைக்கவில்லை என்றது FIB அளித்திருந்த கைரேகை அறிக்கை. 

ஆனால் ஷங்கரின் இந்த பொய் முருகேசனை பதற்றமடையச் செய்ததை கவனித்தார். அவனுடைய கண்களில் தெரிந்த உண்மையான கலக்கம் அவனை காட்டிக்கொடுத்தது. 

'இங்க பார் முருகேசா.....நா ஃபீல்டுல ஒர்க் பண்ணதுல்ல... ஆனா நிறைய சைக்காலஜி க்ளாஸ் அட்டென்ட் பண்ணியிருக்கேன்.... நா கேட்டதும் ஒன் கண் ரெண்டுலயும் தெரிஞ்ச பயத்த வச்சே சொல்றேன்.... சொல்லவா?'

முருகேசன் பதிலளிக்காமல் தலை குணிந்து அமர்ந்திருந்தான். ஷங்கர் அவனுடைய தலையை பிடித்து நிமிர்த்தினார். 'டேய், கேள்வி கேக்கறப்போ என் முகத்த பாத்து பதில் சொல்லு....' என்று பற்களைக் கடித்தார். 'சொல்லு..... அந்த பொண்ணோட பின்னந்தலையில ரெண்டு காயம் இருந்துது..... அதுவும் ஆஃபனவர் கேப்புல..... இது எப்படி வந்துது?'

'தெரியல சார்...'

'நீ அன்னைக்கி சாயந்தரம் அந்த வீட்டுக்குள்ள போயிருக்கே.... எங்கக்கிட்ட ப்ரூஃப் இருக்கு.'

'இல்ல சார்...'

'நீ போனப்போ மணி ஆறே முக்கால்.'

'நாந்தான் போலன்னு சொல்றேனே சார்?'

'ராமராஜன் போனப்போ மணி ஆறே கால்.... ரெண்டுக்கும் நடுவுல ஆஃபனவர் கேப்...'

'நீங்க என்ன வேணா சொல்லிக்குங்க சார்..... நா என்ன சொன்னாலும் நீங்க நம்பப் போறதில்ல...'

'ராமராஜன வச்சி அவள தீர்த்துக்கட்டிறலாம்னு பாத்தே.... ஆனா அவன் ஒரு தொடநடுங்கி..... அவனால முடியல... அந்த அளவுக்கு ஒடம்புல சக்தியும் இல்ல....அதான் அவன் புடிச்சி தள்ளுனதுல அவ சாகல.  அவ சாகலைங்கறது தெரிஞ்சதுமே  நீ அவனெ இழுத்துக்கிட்டு மறுபடியும் அங்க போனீங்க...... ஆனா கடைசி நிமிஷத்துல என்னால முடியலடான்னு அவன் ஒதுங்கிட்டான். அவனெ கார்லயே வுட்டுட்டு நீ மட்டும் இறங்கிப் போனத குமார் பாத்துருக்கான்..... ஏறக்குறைய அரை மணி நேரம்.... ஏழே கால் மணிக்கி ஒன் ஃபோன் வந்ததும் பார்க்கிங்ல காத்துக்கிட்டிருந்த ராமராஜன் கார எடுத்துக்கிட்டு வந்து வீட்டு முன்னால நிறுத்தறான்... நீ அதுல ஏறிக்கிற.... இத அந்த லேடியும் பாத்துருக்காங்க.... குமாரும் பாத்துருக்கான்..... இப்ப சொல்லு....'

முருகேசன் பதிலளிக்காமல் மவுனம் காத்தான்... 

'சரி அத விடு... நீ அந்த வீட்லருந்து வெளியில வந்தத பாத்துட்டாங்களேன்னுதான அவங்கள அன்னைக்கி ராத்திரி பத்து மணிக்கி மேல கூப்ட்டு மிரட்டுன?'

'சார்... சும்மா அபாண்டமா சொல்லிக்கிட்டே போகாதீங்க... நா அவங்களுக்கு ஃபோன் பண்ணதே இல்ல.'

ஷங்கர் சிரித்தார். 'டேய் பூன கண்ண மூடுனா ஒலகமே இருட்டுங்கறா மாதிரி டூப் அடிக்காத... ஒன் செல்ஃபோன் கால் லிஸ்ட்ட பூரா பாத்தாச்சி...... அன்னையிலருந்து அவங்கள கடத்தினியே இன்னைக்கி வரைக்கும் ஏறக்குறைய பத்து தடவ ராகவன் செல்ஃபோனுக்கு ஒன் செல்ஃபோன்லருந்து கால் போயிருக்கு...... இப்ப சொல்லு....'

கையும் களவுமாக பிடிப்பட்ட கள்வனைப் போல் விழித்த முருகேசனை பார்த்து சிரித்தார் ஷங்கர். 'சொல்றா என்ன முழிக்கிறே?'

பதிலளிக்காமல் கண்களை அழுந்த தேய்த்த முருகேசன் ஷங்கரை பரிதாபமாக பார்த்தான்... 'சார்.... சோறு தண்ணிக் கூட இல்லாம நாலஞ்சி மணி நேரமாக இப்படியே ஒக்காத்தி வச்சிருக்கீங்களே சார் இது நியாயமா?'

'ஏன் தொரைக்கி தூக்கம் வருதோ....அத வேணா உன் மூஞ்சில அடிக்கட்டுமா?' என்றவாறு அறையின் வலப்புற சுவரையொட்டி இருந்த அலமாரியின் மேல் வைக்கப்பட்டிருந்த  ஸ்ப்ரே குப்பியை காட்டினார் ஷங்கர். 'லைம்ல இன்டஸ்ட்ரியல் சால்ட் மிக்ஸ் பண்ண வாட்டர்.... தூக்கம் வருதுன்னு இந்த ரூமுக்குள்ள வரவங்க சொன்னா இதத்தான் மூஞ்சில அடிப்போம்... தூக்கம் கலைஞ்சிரும்.. ஆனா ஆஃபனவர்ல லைம் அப்படியே காஞ்சி சால்ட்டோட சேந்து முகத்துல ஒட்டி ஸ்டிஃபா ஆயிரும்.... அப்புறம் கண்ணெ மூடவே முடியாது..... என்ன அடிச்சிக்கிறியா?'

'உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா சார்..... இப்படி பேசறீங்க?'

'அடிங்...... யார பாத்து மனசாட்சி இல்லேன்னு சொல்ற? ஒன்னுந் தெரியாத பொண்ண சொந்த ஊர்லருந்து ஓட்டிக்கிட்டு வந்து..... தொழில் பண்ண வச்சி..... அது கல்யாணம் பண்ணிக்கிட்டா அத வச்சி நாம நடத்தற பொழப்புல மண்ணு உழுந்துருமேன்னு அத ஈவு இரக்கமில்லாம மர்டர் பண்ணிட்டு.... எங்களுக்கு மனசாட்சி இல்லேன்னு சொல்றியா?' என்று கர்ஜித்த ஷங்கர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்..... 'இங்க பார்..... என் பொறுமைய சோதிக்காம உண்மைய சொல்லிரு.....'

ஷங்கரின் உரத்த குரல் அடுத்த அறையில் அரைதூக்கத்திலிருந்த தன்ராஜை எழுப்பியது. அவர் எழுந்து தூக்கக் கலக்கத்துடன் மணியை பார்த்தார்..... அதிகாலை மூன்றை நெருங்கிக்கொண்டிருந்ததை கவனித்து எழுந்து உடைகளை சரிசெய்துக்கொண்டு மீண்டும் முருகேசன் இருந்த அறைக்குள் நுழைந்தார்...

'என்ன தன்ராஜ், அதுக்குள்ள ரெண்டு மணி நேரம் ஆயிருச்சா?'

'மூனு மணி நேரம் ஆயிருக்கு..' என்றார் தன்ராஜ் மெலிதான புன்னகையுடன். 'நேத்தும் சரியா தூங்கல ஷங்கர்.. அதான் தூங்கிட்டேன்...'

'பரவால்லை..... you want to take over? I can continue for two more hours'

''இல்ல வேணாம்.... I can manage....' என்றவாறு இருக்கையில் அமர்ந்தார் தன்ராஜ். 'என்னதான் சொல்றான்? அதே பல்லவிதானா?'

'ஆமா... ஆனா இப்ப சுருதி கொஞ்சம் இறங்கியிருக்கு.....' என்று சிரித்தார் ஷங்கர். 'இப்ப சாருக்கு தூங்கணுமாம். என்ன அலவ் பண்லாமா?'

'என்ன முருகேசன்......?' என்றார் தன்ராஜ்.

இருவரையும் மாறி, மாறி பார்த்த முருகேசன் இனியும் தன்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தான். 'இப்ப உங்களுக்கு என்ன சார் தெரியணும்?' என்றான் சலிப்புடன். 'ரெண்டு மர்டரையும் நாந்தான் செஞ்சேன்னு ஒத்துக்கணும்.... அதான சார்?'

'அட பார்றா! இப்பத்தான் ஐயாவுக்கு என்ன கேக்கறோம்னே விளங்குது போல?' என்றார் ஷங்கர் சிரிப்புடன். 

'ஆமா.... ' என்றார் தன்ராஜ் கண்டிப்பான குரலில்.

***********

அரை மணி நேரம் கழித்து முருகேசனை அந்த அறையில் தனியே விட்டுவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தனர் தன்ராஜும் ஷங்கரும். மேசை மீதிருந்த டேப் ரிக்காரை ரீவைன்ட் செய்து ஓடவிட்டு பார்த்தனர். முருகேசன் கூறியிருந்த அத்தனையும் தெளிவாக பதிவாகி இருந்தது. 

தன்ராஜ் ஷங்கரின் கைகளைப் பற்றி குலுக்கினார். 'வெல்டன் ஷங்கர். நா செஞ்சிருக்க வேண்டிய வேலைய நீ சூப்பரா செஞ்சி முடிச்சிட்டே.. கங்க்ராட்ஸ்!'

'நீ வேற.....' என்றார் ஷங்கர். 'எல்லாம் நீ கேள்வி மேல கேள்வியா கேட்டு அவனெ  அடியோட கன்ஃப்யூஸ் பண்ணதாலதான்... பய கோர்வையா கேள்விங்க வரும்னு பதிலையெல்லாம் ப்ரிப்பேர் பண்ணி வச்சிருப்பான். நீ கேள்வி கேட்ட ஸ்டைல்ல பய கம்ப்ளீட்டா கன்ஃப்யூஸ் ஆய்ட்டான்.... அத்தோட சரியான டைமிங்ல நீ எழுந்து போய்ட்ட..... இல்லன்னா உன்னோட ஸ்டைல் அவனுக்கு பழகிப் போயிருக்கும்.... வாய்ல வந்தத சொல்லியே சமாளிச்சிருப்பான்..... ஆனா என் ஸ்டைல்ல போயி  நிறைய பொய்ங்கள சொல்லி அடாவடியா மிரட்டுனதுல கடைசியா வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான்.'

தன்ராஜ் சிரித்தார். 'நம்ம ரெண்டு பேரும் சரியான ஜோடின்னு நினைக்கேன்... பேசாம எஸ்.பி. கிட்ட சொல்லி க்ரைம் பிராஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் கேக்கலாமா? ரெண்டு பேரும் பேய்ரா (pair) இன்வெஸ்ட்டிகேஷன்ல இறங்கினா ஒரு கலக்கு கலக்கிறலாம்.... என்ன கேக்கலாமா?'

தன்ராஜின் கேள்விக்கு பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் யோசித்த ஷங்கர், 'எனக்கு ஃபீல்ட் இன்வெஸ்ட்டிகேஷன்னால அலர்ஜியாச்சேப்பா..... அதுவும் டிராவல்னா கேக்கவே வேணாம்.... சின்ன வயசுலருந்தே டிராவல்னாலே எனக்கு அலர்ஜி....'

'அது பரவால்லை.... ஃபீல்ட் வேலைய நா பாத்துக்கறேன்.... இன்டராகேஷன சேந்து பாத்துக்கலாம்....'

'சரி.... யோசிச்சி சொல்றேன்..... இப்ப எப்படி ஃபர்தரா ப்ரொசீட் பண்றது? இவன் ஒத்துக்கிட்டான்னு எஸ்.பிக்கிட்ட சொல்லிறலாமா?'

'இப்பவா?' என்ற தன்ராஜ் மணியை பார்த்தார். அதிகாலை நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. ' வேணாம்...  ஏழு மணி போல கூப்டலாம்....'

'சரி.' என்று சம்மதித்த ஷங்கர், 'ராத்திரி வாங்கி வச்சிருந்த பொட்டலத்த குடுத்து சாப்ட்டு படுறான்னு சொல்லலாமா?' என்றார்.

'ரைட்... அப்படியே செஞ்சிறலாம்..... நீயும் போய் படு.... காலையில மத்தத பேசிக்கலாம். குட்நைட்.' என்ற தன்ராஜ் மேசை மீது வைத்திருந்த உணவுப் பொட்டலங்களை அடுத்த அறையிலிருந்து முருகேசனிடம் கொண்டு கொடுத்தார். 'இந்தா இத சாப்ட்டுட்டு.... இங்கயே ஓரமா படு..... காலையில மஜிஸ்டிரேட் முன்னால வச்சி எதையாச்சி சொல்லி குழப்ப மாட்டியே?'

'இல்ல சார்.....' என்றான் முருகேசன் சுருக்கமாக. 

அவனுடைய பதிலில் திருப்தியடையாத தன்ராஜ் ஒரு சில விநாடிகள் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தார். அப்படி அவன் மாற்றி சொன்னால் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து கதவை சாத்திக்கொண்டு வெளியேறி அடுத்த அறையில் இருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தவாறே உறங்க முயற்சி செய்துக்கொண்டிருந்த ஷங்கருக்கு அருகில் இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்து உறங்க முயற்சி செய்தார்.

************

அடுத்த நாள் காலை ராஜசேகர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தபோதே கோபால் தன் இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டான். அவருக்கு இடப்புறத்தில் வசந்தும் அமர்ந்திருந்தான். நாம்தான் லேட்டாகிவிட்டோம் போலிருக்கிறது என்று நினைத்த ராஜசேகர் கோபாலை நெருங்கி 'வந்து ரொம்ப நேரமாச்சா?' என்றான். 

'இல்ல சார்... இப்பத்தான் அஞ்சி நிமிஷம்.' 

தன் இருக்கையில் அமர்ந்த ராஜசேகர் அவரை இன்னும் நெருங்கி, 'சார் தனபால்னு யாராச்சும் ஒங்க கூட செல்ல இருக்கானா?' என்றான்.

தொடரும்

7 comments:

Sasi Kala said...

டேப்ல பதிவானது என்னவாக இருக்கும் அடடா அதற்குள் தொடருமா ?
அடுத்த பதிவோட முடிந்து விடுமா ?
அல்லது அதற்குள் வேறு ஏதேனும் திருப்பம் வருமா ?

வே.நடனசபாபதி said...

நீதிமன்றத்தில் நடக்கப்போகும் விசாரணை எப்படி போகப்போகிறது என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.

Anonymous said...

வணக்கம்
சில நாள் வரவில்லை சிலதை இழந்துள்ளேன்... கதைஅருமை தொடர வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டிபிஆர்.ஜோசப் said...

f 3
Sasi Kala said...
டேப்ல பதிவானது என்னவாக இருக்கும் அடடா அதற்குள் தொடருமா ?
அடுத்த பதிவோட முடிந்து விடுமா ?
அல்லது அதற்குள் வேறு ஏதேனும் திருப்பம் வருமா ?//

அடுத்த பதிவோட முடியாது....அது மட்டும் நிச்சயம்.


டிபிஆர்.ஜோசப் said...

1 PM
வே.நடனசபாபதி said...
நீதிமன்றத்தில் நடக்கப்போகும் விசாரணை எப்படி போகப்போகிறது என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன். //

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

1 PM
வே.நடனசபாபதி said...
நீதிமன்றத்தில் நடக்கப்போகும் விசாரணை எப்படி போகப்போகிறது என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன். //

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

rupan said...
வணக்கம்
சில நாள் வரவில்லை சிலதை இழந்துள்ளேன்...//

பரவாயில்லை... மீண்டும் வந்தமைக்கு நன்றி