06 November 2013

சொந்த செலவில் சூன்யம் - 69

தன்ராஜும் ஷங்கரும் முருகேசனை விசாரிப்பதில் கடைபிடிக்க வேண்டிய உத்திகளை வரையறுத்து முடித்ததும் அறைக்குள் நுழைந்து இருக்கையில் சற்று தெனாவட்டாக அமர்ந்திருந்தவனை பார்த்தவாறு அவனுக்கு முன்னாலிருந்த மேசையின் மறுபக்கத்திலிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். 

தன் முன் அமர்ந்த இருவரையும் முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் பார்த்த முருகேசன், 'என்ன சார்? இன்னும் எவ்வளவு நேரம் இந்த ரூம்ல அடைச்சி வச்சிருப்பீங்க?' என்றான்.

'நீ ஒத்துக்கற வரைக்கும்' என்றார் ஷங்கர்.

'எத?'

'ஏன், ஒனக்கு தெரியாதா?' என்றார் தன்ராஜ். 'இங்க பார். மணி இப்ப பதினொன்னு. நானும் இவரும் மாறி மாறி ரெஸ்ட் எடுத்துக்கிட்டு ஒன்னே விசாரிப்போம். ஆனா நீ? இன்னைக்கி ராத்திரி முழுசும் இதே சேர்லதான்.... இப்பவே ஒத்துக்கிட்டா நீயும் சாப்ட்டுட்டு நிம்மதியா தூங்கலாம்.... எப்படி உன் வசதி?'

'நாந்தான் இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லென்னு சொல்லிட்டேனே சார்!' என்றான் முருகேசன் சலிப்புடன்.

'எதுக்கும் உனக்கும்?' என்ற ஷங்கர் நீ சும்மா பாத்துக்கிட்டு இரு என்பதுபோல் தன்ராஜைப் பார்த்து கண்ணசைத்தார். அவரும் சரி என்று தலையை அசைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்தார். 

'அதான் சார் அந்த பொண்ணு கொலைக்கும் எனக்கும்!'

'அப்போ ராமராஜன ஏன் மர்டர் பண்ணே?'

'சார்... அபாண்டமா சொல்லாதீங்க சார். அதான் சூயிசைட்னு அவனே எழுதி வச்சிருக்கானே?'

'அந்த லெட்டரையே நீதானடா எழுதின?' என்றார் ஷங்கர் கோபத்துடன்.

அவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் இருவரையும் மாறி மாறி பார்த்த முருகேசனின் பார்வையில் தெரிந்த அச்சத்தை இருவருமே கவனித்தனர். ஷங்கர் நா சொல்லலே என்பதுபோல் சைகை காட்டினார். 

'அது என் கையெழுத்து இல்ல சார்? நீங்க வேணா யார வேணும்னாலும் கூட்டி காமிங்க!'

ஷங்கர் தன் கையிலிருந்த கோபாலுடைய அலுவலக கோப்பிலிருந்து எடுத்த கடிதத்தையும் ராமராஜனின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கடிதத்தையும் மேசை மீது விரித்து இரண்டாவது கடிதத்தில் வட்டமிடப்பட்டிருந்த எழுத்துக்களை காட்டினான். 'இந்த லெட்டர்ல நா வட்டம் போட்டுருக்கற லெட்டர்ஸ பாத்துட்டு சொல்லு.......'

முருகேசன் அவற்றை பார்க்க மறுத்தான். 'தேவையில்ல சார்..... முடிஞ்சா கோர்ட்ல ப்ரூஃப் பண்ணிக்குங்க..... இத நா எழுதல!'

தன்ராஜ் நீ சும்மா இரு.... நா கேக்கறேன் என்பதுபோல் ஷங்கரை பார்த்தார். சரி... என்பதுபோல் தலையை லேசாக அசைத்தார் எழுந்து அறையிலிருந்த ஒரே ஜன்னல் அருகே போய் நின்றுக்கொண்டார். 
  
'அப்ப நீ மாதவிய மர்டர் பண்ணல?' என்று அடுத்து கேள்வியை தொடுத்தார் தன்ராஜ்.

'நாந்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே சார்? திருப்பி, திருப்பி அதையே கேட்டா?'

'அப்புறம் எதுக்கு ராகவனையும் அவரோட மிசஸ்சையும் கிட்நேப் பண்ண?'

'அதான் நா செஞ்ச ஒரே தப்பு....' 

ஆனால் தன்ராஜ் அதை கண்டுக்கொள்ளாதவர் போல் அடுத்த கேள்வியை அவனை நோக்கி வீசினார்.

'ராமராஜன மர்டர் பண்ண யூஸ் பண்ண நைஃப எங்க ஒளிச்சி வச்சிருக்கே?'

'சார்.... இத நீங்க எத்தன தடவ கேட்டாலும் என் பதில் ஒன்னுதான் சார்.... அது சூயிசைட்!'

'சரி அது இருக்கட்டும்.... உன் பேர் என்ன?'

முருகேசன் கேலிப் புன்னகையுடன் அவரைப் பார்த்தான். 'என்ன சார் கிண்டல் பண்றீங்களா?'

'டேய்..... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில சொல்லு.... எதிர் கேள்வி கேக்காத!' என்று உறுமினார் ஷங்கர்.

'உன் ஃபுல் பேர்......' என்றார் தன்ராஜ்.

'ஓ! அதுவா.... கந்தசாமி முருகேசன்.'

'கந்தசாமி யாரு உங்க அப்பாவா?'

'இல்ல மாமா!'

அவன் குரலில் தொனித்த கேலி ஷங்கரை உசுப்ப அவர் சட்டென்று அவனை நெருங்கி அவனுடைய கழுத்தில் ஓங்கி அடித்தார். அதை எதிர்பாராத முருகேசன் இருக்கையிலிருந்து முன்பக்கமாய் தரையில் விழுந்தான். 

'ஷங்கர் ப்ளீஸ்..... நோ வயலன்ஸ்' என்ற தன்ராஜ் தன் இருக்கையிலிருந்து எழுந்து தரையில் விழுந்து கிடந்த முருகேசனை தூக்கி இருக்கையில் மீண்டும் அமர்த்திவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். 

'ஏன், உன் அப்பா என்ன ஆனார்?' 

'அவர் நா பொறக்கறதுக்கு முன்னாலயே ஆக்சிடென்ட்ல செத்துட்டாராம்... அம்மாவும் பிரசவத்துலயே செத்துட்டாங்க. மாமாவும் அத்தையும்தான் என்னெ வளத்தாங்க.'

'அப்புறம் எதுக்கு கரெக்‌ஷன் ஹோம்ல இருந்த?'

முருகேசன் சட்டென்று நிமிர்ந்து தன்ராஜைப் பார்த்தான், இது எப்படி உங்களுக்கு தெரியும் என்பதுபோல்...

'டேய்... ஒன் ஜாதகமே எங்கக் கிட்ட இருக்கு.....' என்றார் ஷங்கர் கோபத்துடன், 'நீ எந்த பொய் சொன்னாலும் தெரிஞ்சிரும்.'

'சின்ன வயசுல எனக்கு படிப்பு ஏறல.... அதனால மாமாதான் ஒரு துணிக்கடையில சேத்துவிட்டார்.'

'அங்கதான் ராமராஜன மீட் பண்ணியா?'

முருகேசன் புரியாதவன் போல் பார்த்தான். 'எங்க சார்?'

'கரெக்‌ஷன் ஹோம்ல!'

என்ன பதில் சொல்வதென யோசித்தவாறு அமர்ந்திருந்தவனை தன்ராஜும் ஷங்கரும் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர்.

'ஆமா' என்றான் முருகேசன் சில நிமிடங்கள் கழித்து. 

'அதாவது ரெண்டு பேருமே சின்ன வயசுலருந்தே கேடிங்க, அப்படித்தான?' என்றார் ஷங்கர் கோபத்துடன். 

'ஷங்கர்!' என்றவாறு அவரை பார்த்து முறைத்த தன்ராஜ் முருகேசனை பார்த்தார். 'சின்ன வயசுல படிப்பு வரலேன்னே... அப்புறம் எப்படி பி.காம் படிச்சிருகேன்னு உன் ஃபைல்ல இருக்கு?'

'கரெக்‌ஷன் ஹோம்ல சேந்ததுக்கப்புறம் வேற வழியில்லாம படிக்க ஆரம்பிச்சேன்....'

'அதாவது படிக்கறதுக்கு மூளை இருந்துச்சி... ஆனா அத நீ வேற வழியில யூஸ் பண்ணியிருக்கே..... சரி.... ICWAவ முடிச்சியா?'

'இல்ல..... அதுக்குள்ள.....'

'பாத்தேன்..... பார்ட் டைம் வேல செஞ்சிக்கிட்டிருந்த எடத்துல மறுபடியும் உன் வேலைய காமிச்சிருக்கே....!'

முருகேசன் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தான்...

'மாதவிய எப்ப எங்க சந்திச்சே?'

கேள்விகள் இங்கும் அங்குமாக தாவ முருகேசன் பதிலளிக்க முடியாமல் தவித்தான்....

'நெல்லூர்ல....'

'தமிழ்நாட்டு போலீஸ் கிட்டருந்து தப்பிச்சி அங்க ஓடுன, அப்படித்தான?'

'இல்ல சார்... வெளியூர்ல போயி வேல பாக்கலாமேன்னு.....'

'அப்புறம் எதுக்கு இந்த பொம்பள புரோக்கர் வேல?'

முருகேசன் பதிலளிக்காமல் அமர்ந்திருக்க, 'அதுலதாம்பா க்விக்கா காசு பாக்க முடியும்? புரியாத ஆளாருக்கியே?' என்றார் ஷங்கர் கேலியுடன். 'என்ன முருகேசா?'

அவன் அதற்கு பதிலளிப்பதற்கு முன் தன்ராஜ் சட்டென்று 'சரி... கோபால எப்படி தெரியும்?' என்றார் தன்ராஜ்.

முருகேசனை கோர்வையாக சிந்திக்க முடியாமல் திணறடிக்கவே தன்ராஜ் வேண்டுமென்றே கேள்விகளை எவ்வித தொடர்பும் இல்லாமல் கேட்டார்... 

'ராமராஜன் வழியாத்தான்....'

'அவர் வழியாத்தான் அந்த வீட்டையும் புடிச்சீங்களா?'

முருகேசன் ஆமாம் என்பதுபோல் தலையை அசைக்க ஷங்கர் கோபத்துடன் அவனை அடிக்க கைகளை ஓங்கியவாறு நெருங்கினார். 'வாய தொறந்து பேசுடா...'  

தன்ராஜ் மேசை மீதிருந்த ஆல்பம் போன்ற ஒன்றை எடுத்து திறந்து முருகேசனிடம் காட்டினார். 'இந்த ஃபோட்டோஸ் எல்லாம் நீ எடுத்ததுதான?'

அட! இது ஒங்கக்கிட்ட இருக்கா என்பதுபோல் அவனுடைய முகத்தில் தோன்றி மறைந்த வியப்பை தன்ராஜ் கவனிக்க தவறவில்லை. மாதவியின் கொலைக்களத்திற்கு முதலில் சென்ற காவலர்கள் அங்கிருந்து உருப்படியாக கொண்டு வந்தது இதை மட்டும்தான். சென்னையிலிருந்த பல பெரிய 'தலை'களின் புகைப்படங்கள் அதில் இருந்ததால் அதை மாதவியின் வீட்டிலிருந்து கைப்பற்றிய பட்டியலிலும் கூட சேர்க்காமல் ரகசியமாக தன் பொறுப்பில் வைத்திருந்தார் தன்ராஜ். 

'சொல்லு.... இத எதுக்கு எடுத்தே?'

'இது என்னப்பா கேள்வி?' என்றார் ஷங்கர். 'இவனுக்கு எப்பல்லாம் தேவையோ அப்பப்போ பணம் பறிக்கத்தான்.... ப்ளாக்மெய்ல்.... ஏற்கனவே ராகவனையும் அவரோட மிசஸ்சையும் கிட்நேப் பண்ண சார்ஜ் இருக்கு.... இத்தோட இதுலருக்கற யாராச்சும் ஒருத்தர்கிட்டருந்து ப்ளாக்மெய்ல் கம்ப்ளெய்ன்ட் வாங்கினா குறைஞ்சது ஏழு வருசம்.....'

'உனக்கு நாப்பது, நாப்பத்தஞ்சி இருக்குமா?' என்றார் தன்ராஜ் சற்றும் பொருத்தமில்லாமல்!

'என்ன சார்?' என்றான் முருகேசன் குழப்பத்துடன். 

'வயசு?'

'நாப்பத்திரண்டு.... ஏன் கேக்கறீங்க?'

'மாமியார் வீட்டுக்கு போனா நீ திரும்பி வரப்போ என்ன வயசிருக்கும் கணக்கு போட்டு பாக்கத்தான்.....' என்றார் ஷங்கர் கேலியுடன்.

'கோபால் ஆஃபீஸ்ல எப்படி சேந்தே? ராமராஜன் வழியாவா?'

மீண்டும் புரியாமல் விழித்தவாறு தன்ராஜை பார்த்தான் முருகேசன். இந்தாள் என்ன லூசா? கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம கேக்கறான்? ஒன்ன யோசிச்சி சொல்றதுக்குள்ள.... இந்தாள் அடுத்து என்ன கேப்பானே தெரியலையே? தன்ராஜின் கேள்விகளை கேட்ட விதம் ஷங்கரையும் கூட வியக்க வைத்தது! சூப்பர் டெக்னிக் என்று நினைத்தான். அதனாலதான் இவரால அக்யூஸ்டுங்கக் கிட்டருந்து கன்ஃபெஷன வாங்க முடியுது போல..... 

'அதுதான் நீ லாஸ்டா வேலை செஞ்ச எடம்.... சரியா?'

'ஆமா'

'கோபாலோட ஃபர்ஸ்ட் வய்ஃப ஒனக்கு எவ்வளவு நாளா பழக்கம்?'

'சார்?' என்று அதிர்ந்தான் முருகேசன். 'அந்தம்மாவ எனக்கு தெரியாது சார்!'

'ரெண்டாவது வய்ஃப?'

'ரெண்டு மூனுதரம் பாத்துருக்கேன்..... பேசனது இல்லை.'

'நீ அவர் ஆஃபீஸ்ல இருக்கறப்பத்தான அவருக்கு ரெண்டாவது கல்யாணம் ஆச்சி!'

'இல்ல சார்..... நா அங்க ஜாய்ன் பண்ணப்பவே ஆயிருச்சி..... ராமராஜன் சொல்லித்தான் அவங்க ரெண்டாவது வய்ஃபுன்னு தெரியும்.'

'அந்தம்மா அழகா இருப்பாங்களா?'

'ஆமா சார்....'

'மாதவிய விட?'

'அது ஒரு அழகு.... இது ஒரு அழகு சார்...' என்றான் முருகேசன் புன்னகைத்தவாறு...

'டேய்.... எதுக்கு இப்படி கோணலா சிரிக்கிறே?' என்றவாறு ஷங்கர் கோபத்துடன் அவனை நெருங்க தன்ராஜ் தன் பார்வையால் அவரை தடுத்தான். 

'அதாவது ஒரு குடும்ப பெண் மாதிரின்னு சொல்ற?' என்று தொடர்ந்தார் தன்ராஜ்.

'ஆமா சார்.'

'அப்புறம் எதுக்குடா அவள அந்தாளோட கோத்துவிட்ட?' என்ற ஷங்கரை பார்த்து மீண்டும் முறைத்தார் தன்ராஜ்.....'

யாரை யாரோட கோத்துவிட்டேங்கறார் என்று விழித்தான் முருகேசன். தன்ராஜ் அடுத்த கேள்விக்கு தாவினார்.

'கோபால் மாதவிய மேரேஜ் பண்ணிக்கலாங்கற ஐடியாவுல இருந்தாரா?'

மீண்டும் முந்தைய கேள்விக்கு எவ்வித தொடர்பும் இல்லாமல் தன்ராஜ் கேட்க எப்படி பதிலளிப்பது என்று யோசித்தான்.

'ராமராஜனுக்கும் மாதவி மேல ஒரு கண் இருந்திச்சி போலருக்கு?' என்றார் தன்ராஜ் அவனுடைய மவுனத்தை பொருட்படுத்தாமல்.

இதில் எந்த கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என தெரியாமல் முருகேசன் தவித்துக்கொண்டிருக்க தன்ராஜ் தொடர்ந்து, 'ஆனா மாதவிக்கு விருப்பமில்லை.... அப்படித்தான?'

என்னய்யா இந்தாளு? இதுல யாரோட  ஐடியாவுக்கு மாதவிக்கு விருப்பமில்லேங்கறது? மாதவிக்கு கோபாலை திருமணம் செய்துக்கொள்ள முதலில் விருப்பம் இருக்கவில்லை என்பது அவனுக்கு தெரியும்..... ஆனால் நாளடைவில் அதில் மெள்ள, மெள்ள ஆசை வந்தது உண்மைதான்... ஆனால் ராமராஜன் தன்னுடைய காதலை அவளிடம் தெரிவித்தபோது ஒரு வேலைக்காரனைப் பார்ப்பதுபோல் துச்சமாக அவனைப் பார்த்து 'வெளிய போடா நாயே' என்று மாதவி இரைந்ததும் நினைவுக்கு வந்தது...... அதிலிருந்தே அவளை பழிவாங்க வேண்டும் என்று ராமராஜன் துடித்துக்கொண்டிருந்ததும் அவனுக்கு தெரியும்...

' ராமராஜனுக்கு மாதவி மேல இப்படியொரு ஐடியா இருந்தது கோபாலுக்கு தெரியுமா?'

ராமராஜன் தன்னிடம் இப்படி நடந்துக்கொண்டதை கோபாலிடம் சொன்னதே அவள்தான். ஆனால் கோபாலின் தில்லுமுல்லுகளையெல்லாம் ராமராஜன் தெரிந்து வைத்திருந்ததால் அவனை பகைத்துக்கொள்ள கோபால் விரும்பவில்லை. அதுவரை தன்னுடைய கம்பெனியின் சேல்ஸ் இலாக்காவில் இருந்த ராமராஜனை தன்னுடைய பிரத்தியேக காரியதரிசியாக வைத்துக்கொண்டு அவனுடைய ஊதியத்தை உயர்த்தியதும் அவனை தன்னருகிலேயே வைத்துக்கொள்ளத்தான். அவனுடன் சேர்ந்து மது அருந்த ஆரம்பித்ததும் அதற்குப் பிறகுதான் என்பதும் முருகேசனுக்கு தெரியும். 

'டேய்.. சார் கேட்ட மூனு கேள்விக்கும் நீ இன்னும் பதில் சொல்லலை?' என்றாவாறே ஷங்கர் சுவரிலிருந்து கடிகாரத்தை பார்வையால் தன்ராஜுக்கு சுட்டிக்காட்டினார்.  அவர் காட்டிய திசையில் பார்த்த தன்ராஜ் நேரம் நள்ளிரவை கடந்திருந்ததை கவனித்துவிட்டு சரி என்பதுபோல் தலையை அசைத்தவாறு எழுந்து வாசலை நோக்கி நகர்ந்தார்.

'என்ன சார்... அவ்வளவுதானா?' என்றான் முருகேசன்....

தன்ராஜ் பதிலளிக்காமல் வெளியேற ஷங்கர் அவர் அதுவரை அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்து முருகேசனை பார்த்தார். 'அவர் ரெஸ்ட் எடுக்க போறார்... அடுத்த ரெண்டு மணி நேரம் நீ என் கஸ்டடியில..... அவர மாதிரி பொறுமையா என்னால இருக்க முடியாது....'

'என்ன சார் மிரட்டறீங்களா?' 

'சேச்சே.... அதெல்லாம் என் ஸ்டைல் இல்லை.... நேரடியா அடி, உதைன்னு போறதுதான் நம்ம ஸ்டைல்... ஒரு சாம்பிள் பாக்கறியா?' என்றவாறு எழுந்து முருகேசனை நெருங்கினார்.

ஆனால் அடுத்த நாள் நடுவர் நீதிமன்றத்தில் இவனை ஆஜர் செய்ய வேண்டுமே என்று நினைத்து மனதை மாற்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தார். 'அந்த பொண்ணெ ரேப் பண்ணது நீயா இல்ல ராமராஜனா?' என்றார் சட்டென்று...

'என்னது, ரேப்பா?'

தொடரும்..
13 comments:

வே.நடனசபாபதி said...

தொடரைப் படிக்கும்போது,வாசகர்களே விசாரணை நடக்கும் இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்ற வகையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! ஒரு சந்தேகம். நீங்கள் சில காலம் காவல் துறையில் பணியாற்றியிருக்கிறீற்களா?

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
தொடரைப் படிக்கும்போது,வாசகர்களே விசாரணை நடக்கும் இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்ற வகையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி சார்.

ஒரு சந்தேகம். நீங்கள் சில காலம் காவல் துறையில் பணியாற்றியிருக்கிறீற்களா?//

என் உருவத்தைப் பார்த்தும் பலரும் இந்த கேள்வியைக் கேட்டிருக்கின்றனர்.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
தொடரைப் படிக்கும்போது,வாசகர்களே விசாரணை நடக்கும் இடத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்ற வகையில் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி சார்.

ஒரு சந்தேகம். நீங்கள் சில காலம் காவல் துறையில் பணியாற்றியிருக்கிறீற்களா?//

என் உருவத்தைப் பார்த்தும் பலரும் இந்த கேள்வியைக் கேட்டிருக்கின்றனர்.

G.M Balasubramaniam said...

இண்டெராகேஷனில் உங்கள் திறமை பளிச்சிடுகிறது. பப்ளிக் ப்ராசிக்யூட்டர் கேசைக் கோர்ட்டுக்குக் கொண்டு போவார் போலிருக்கிறதே.

அ. பாண்டியன் said...

வணக்கம் சகோதரரே.
உருவத்தை பார்த்து மட்டுமல்ல தங்கள் படைப்பில் காவல்துறையில் துப்பறிய பயன்படுத்தும் ஒவ்வொரு நுட்பமும் அழகாக சொல்கிறீர்களே! (உதாரணம்: எங்கள் காவல் நிலையத்தில் பழைய கைதிகளின் பயோடேட்டா அடங்கிய சாப்டிவேர் உள்ளது)இப்படி நிறைய குறிப்பிட முடியும். கதையைக் காட்சியாக கண்முன்னே நிறுத்தும் வித்தையை எங்கு கற்றுக்கொண்டீர்கள் நண்பரே. எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் தங்களுக்கு. நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விசாரணை கொஞ்சம் அதிரடியாகத்தான் இருக்கிறது.

Packirisamy N said...

கதையை இன்னும் விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

PM
G.M Balasubramaniam said...
இண்டெராகேஷனில் உங்கள் திறமை பளிச்சிடுகிறது.//

மிக்க நன்றி சார்.

பப்ளிக் ப்ராசிக்யூட்டர் கேசைக் கோர்ட்டுக்குக் கொண்டு போவார் போலிருக்கிறதே.//

நிச்சயமாக. அவருடைய ஒரே குறிக்கோள் கோபாலை சிறைக்கு அனுப்புவதுதானே?

டிபிஆர்.ஜோசப் said...

PM
G.M Balasubramaniam said...
இண்டெராகேஷனில் உங்கள் திறமை பளிச்சிடுகிறது.//

மிக்க நன்றி சார்.

பப்ளிக் ப்ராசிக்யூட்டர் கேசைக் கோர்ட்டுக்குக் கொண்டு போவார் போலிருக்கிறதே.//

நிச்சயமாக. அவருடைய ஒரே குறிக்கோள் கோபாலை சிறைக்கு அனுப்புவதுதானே?

டிபிஆர்.ஜோசப் said...


அ. பாண்டியன் said...
வணக்கம் சகோதரரே.
உருவத்தை பார்த்து மட்டுமல்ல தங்கள் படைப்பில் காவல்துறையில் துப்பறிய பயன்படுத்தும் ஒவ்வொரு நுட்பமும் அழகாக சொல்கிறீர்களே! (உதாரணம்: எங்கள் காவல் நிலையத்தில் பழைய கைதிகளின் பயோடேட்டா அடங்கிய சாப்டிவேர் உள்ளது)இப்படி நிறைய குறிப்பிட முடியும்.//

இப்படி ஒரு மென்பொருள் போலீசிடம் இப்போதைக்கு இல்லை. இருந்தால் எப்படியிருக்கும் என்ற என்னுடைய கற்பனையில் உதித்தது அந்த காட்சி.

கதையைக் காட்சியாக கண்முன்னே நிறுத்தும் வித்தையை எங்கு கற்றுக்கொண்டீர்கள் நண்பரே. எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் தங்களுக்கு. நன்றி.//

மிக்க நன்றி நண்பரே.

டிபிஆர்.ஜோசப் said...


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
விசாரணை கொஞ்சம் அதிரடியாகத்தான் இருக்கிறது.//

பெரும்பாலான போலீஸ் விசாரணைகள் இப்படித்தான் இருக்கும். அடி, உதை என்பது எல்லாம் சினிமாவில்தான்.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
கதையை இன்னும் விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.//

முடியும் வரை இதே விறுவிறுப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sasi Kala said...

தன்ராஜின் கேள்விகளை கேட்ட விதம் ஷங்கரையும் கூட வியக்க வைத்தது! சூப்பர் டெக்னிக் என்று நினைத்தான். அதனாலதான் இவரால அக்யூஸ்டுங்கக் கிட்டருந்து கன்ஃபெஷன வாங்க முடியுது போல.....

ஆமாங்க எப்படியெல்லாம் மூச்சுவிடக்கூட நேரம் கொடுக்காம கேள்விகளை கேட்கிறார்.. ஹஹ நான் உங்களை வக்கிலா என்று தான் கேட்டேன். தொடரை முடிக்கும் முன்பு அனைவருக்கும் தாங்கள் என்ன பணி செய்தீர்கள் என்று சந்தேகம் வரும் போல அந்த அளவிற்கு காட்சிகளை நேரில் பார்த்தது போல தத்துருபமாக எழுதுறிங்க. நீங்க வங்கியில் பணி புரிந்த விவரத்தை எல்லோருக்கும் தெரியும் படி கொட்டை எழுத்தில் பதியுங்க..