02 November 2013

சொந்த செலவில் சூன்யம் - 65


'Our wave length is somewhat similar Sir....' என்றார் தன்ராஜ் புன்னகையுடன்.

'Great men think alikeனு சும்மாவா சொன்னாங்க?' என்று சிரித்தவாறே  தன்ராஜை தோளில் தட்டிக்கொடுத்தார் எஸ்.பி. சந்தானம். 'பெருமாள் கிட்ட சொல்லிட்டீங்களா?'

இந்த கேள்வியை அவரிடமிருந்து எதிர்பார்க்காத தன்ராஜ், 'இல்ல சார்... ' என்றார் தயக்கத்துடன்.

இந்த பதிலைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் என்பதுபோல் பார்த்த எஸ்.பி. தொடர்ந்தார். 'நினைச்சேன்... வேற என்ன நியூஸ்?'

சற்று தயங்கிய தன்ராஜ் அலுவலகத்தைச் சுற்றி தன் பார்வையை ஓட விட்டார். அறையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கணினிகளில் பல காவலர்கள் பணிபுரிந்துக்கொண்டிருந்தார்கள் ..... இவர்கள் மத்தியில் எப்படி இதை இவரிடம் கூறுவது.....

அவருடைய பார்வையின் பொருளை ஓரளவுக்கு உணர்ந்த எஸ்.பி வெளியேறி வராந்தாவில் நின்றார். வளாகத்தில் இடைவெளி இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைப் பார்த்தார். அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஒன்றை வெளியில் எடுக்க முடியாமல் திண்டாடும் காவலர் ஒருவர் மீது அவர் பார்வை விழுந்தது. இந்த எடத்துலருந்து எப்பத்தான் ஷிப்ட் பண்ண முடியுமோ தெரியலையே என்று நினைத்தார். கடந்த ஆட்சி காலத்தில்  ஆணையர் அலுவலகத்திற்கென்று ஒரு பலமாடி கட்டிடம் வேண்டும் என்று முடிவெடுத்து துவங்கிய கட்டுமானப் பணி இன்னமும் முடிந்தபாடில்லை......

'சார்...' என்றவாறு தன்னருகில் வந்து நின்ற தன்ராஜை திரும்பிப் பார்த்தார். 'நீங்க முதல்ல போயி அந்தாளுக்கு ஹெல்ப் பண்ணுங்க... வண்டிய எடுக்க முடியாம அந்தாள் படற அவஸ்தைய பாருங்க!'

'யெஸ் சார்...' என்று பதிலளித்த தன்ராஜ் உடனே சென்று வாகனத்தை எடுத்துக்கொண்டிருப்பவருக்கு எவ்வித உதவியும் செய்யாமல் சற்று தொலைவில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த காவலர்கள் சிலரை நெருங்கி, 'யோவ் இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? அவர்தான் வண்டிய எடுக்க முடியாம கஷ்டப்படறார் இல்ல? போயி.... பக்கத்துலருக்கற வண்டில வந்தவங்க யார்னு பாத்து கூட்டியாங்க.....' என்று எரிந்து விழுந்தார். 'சாரி.. சார்... நம்ம வண்டி தான் சார்....' என்றவாறே அவர்களில் ஒரு காவலர் தன் வாகனத்தை நோக்கி ஓட தன்ராஜ் திரும்பி சந்தானம் நின்ற இடத்தை அடைந்தார். 

'பாத்தீங்களா? நம்ம ஆளுங்களே இப்படி எந்த ஒரு ரெஸ்பான்சிபிளிட்டியுமில்லாம பார்க் பண்ணிட்டு நிக்கிறத? என்ன பண்றது இவனுங்கள?' என்ற எஸ்.பியின் கேள்விக்கு என்ன பதிலளிப்பது என தெரியாமல் நின்றிருந்தார் தன்ராஜ்.

பிறகு, 'என்னவோ சொல்ல வந்தீங்களே...?' என்றார் எஸ்.பி.

'முருகேசன் கிட்ட ராஜசேகர் பேசிக்கிட்டிருந்தத நாங்களும் கேக்கறா மாதிரி அவர் ஏற்பாடு பண்ணியிருந்தார் சார்.....'

'எப்படி?'

'முருகேசன் கிட்டருந்து கால் வரும்னு எதிர்பார்த்து அவரோட லேன்ட் லைன்லருந்து எனக்கு ஃபோன் பண்ணி ரீசிவர அவரோட செல்ஃபோன் கிட்ட வச்சிருந்தார். செல்ஃபோன்ல ஸ்பீக்கர் ஆன் பண்ணி வச்சிருந்ததால முருகேசன் அவர் கிட்ட செல்ஃபோன்ல பேசினத நாங்க லேன்ட் லைன் வழியா கேக்க முடிஞ்சது. அத்தோட அவன் கிட்ட பேசிக்கிட்டே வைபர் வழியா என்னெ கூப்ட்டு கால் வந்திருந்த லேன்ட் லைனோட நம்பரையும் குடுத்து ட்ரேஸ் பண்ணுங்கன்னு சொன்னார்......'

'ப்ரில்லியன்ட்... இந்த மாதிரி குறுக்கு வழியில திங்க் பண்றதுக்கு க்ரிமினல் லாயர்ங்களாலதான் முடியும்.... நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளுங்களும் இதையெல்லாம் படிச்சிக்கணுங்க.... அவருக்கும் நாப்பது வயசு இருக்கும்.... ஆனா இந்த வயசுலயும் வைபர் சாஃப்ட்வேர பத்தியெல்லாம் படிச்சி வச்சிருக்கார் பாருங்க..... நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளுங்க மட்டும் ஏந்தான் புதுசா எதையுமே படிச்சி வச்சிக்காம..... சில சமயத்துல ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்னு கூட நா நினைச்சதுண்டு....'

அதத்தான சார் நா தினம் தினம் நினைச்சிக்கிட்டிருக்கேன் என்று சொல்ல நினைத்தார் தன்ராஜ்...

'சரி அப்புறம்?' என்று எஸ்.பி தொடர தன்ராஜ் சுதாரித்துக்கொண்டு, 'அப்போ முருகேசன் ஒரு தகவல் சொன்னான் சார்.....' என துவங்கி மேலே தொடர்வதா வேண்டாமா என்று தயங்கினார்....

'ஏன் ஹெசிட்டேட் பண்றீங்க? எதாருந்தாலும் பரவால்லை, சொல்லுங்க...'

'அந்த ராமராஜன் பாடியில ஒரு சூயிசைட் நோட் இருந்துதாம் சார்..... அதுல மாதவி கொலைக்கி நாந்தான் காரணம்னு எழுதியிருந்துதாம்.'

இதை எதிர்பாராத எஸ்.பி. சட்டென்று திரும்பி தன்ராஜைப் பார்த்தார். 'அப்படியா? அப்ப ஏன் பெருமாள் எனக்கு ஃபோன் பண்ணப்போ இதப்பத்தி ஒன்னும் சொல்லல?'

'தெரியல சார்...'

ஒரு சில நொடிகள் மவுனம் காத்த எஸ்.பி. 'அந்த பாடிய முதல்ல ஹேன்டில் பண்ணது யாரு?'

'ட்ரிப்ளிக்கேன் எஸ்.ஐ. பாலசுந்தரம் சார்... என்னோட பேட்ச்மேட்தான்...'

'அப்போ அவருக்கு ஃபோன் போட்டு கேக்க வேண்டியதுதான?'

'நீங்க வர்றதுக்கு முன்னால அதத்தான் சார் செஞ்சேன்..... ஆமா தன்ராஜ்.... அத அப்பவே ஒங்க SHO கிட்ட குடுத்துட்டேனேன்னு சொன்னார்.'

'Is it?' என்ற எஸ்.பியின் முகம் கோபத்தால் சிவக்க இதை இவரிடம் கூறியிருக்க வேண்டாமோ என்று நினைத்தார் தன்ராஜ். 

'பெருமாளா இத செஞ்சிருக்க சான்ஸ் இல்லை... I think PP must have played a role in this.....'

இருக்கலாம் என்று சொல்ல நினைத்து அடக்கிக்கொண்டு மவுனமாக நின்றிருந்தார் தன்ராஜ்.

'சரி.... நீங்க ஒன்னு பண்ணுங்க.... முருகேசன அரெஸ்ட் பண்ண போலீஸ் டீம் வந்ததும் முதல் வேலையா அவன விசாரிங்க.... நீங்க கன்ஃபெஷன் வாங்கறதுல கில்லாடியாச்சே.... உங்க வேலைய காமிங்க.... எனக்கு இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு... அத முடிச்சிட்டு ஈவ்னிங்குள்ள வந்துடறேன்.... அதுவரைக்கும் இந்த லெட்டர் விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும்....' என்று கடகடவென உத்தரவிட்ட எஸ்.பி. 'யெஸ் சார்' என்று வணக்கம் செலுத்திவிட்டு புறப்பட்ட தன்ராஜை 'இன்னொரு விஷயம்' என்று தடுத்து நிறுத்தினார். 'மாதவி கேஸ்ல அடுத்த ஹியரிங் என்னைக்குன்னும் விசாரிங்க.... எஸ்.பி. ஆஃபீஸ்லருந்து வேணாம்.... போற வழியில கோர்ட்டுக்கு போய்ட்டு போங்க.... என்ன?'

'யெஸ் சார்.' என்றவாறு தன்ராஜ் புறப்பட்டுச் செல்ல அவர் சென்று மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பி ஆணையர் அலுவலகத்தை நோக்கி நடந்தார்...... 

*********

தன்னுடைய அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராஜசேகர் தன் குடியிருப்புக்கு செல்வதற்கு முன்பு சீனிவாசனின் குடியிருப்பை அடைந்து அழைப்பு மணியை அடித்தான். அவர் திறந்ததும் அவரிடம் முருகேசன் பிடிபட்ட விஷயத்தை சுருக்கமாக கூறினான். 

'அப்படியா சார்?' என்ற சீனிவாசன் மகிழ்ச்சியில் மேற்கொண்டு பேச முடியாமல் தவிப்பதை கவனித்த ராஜசேகர், 'சார் எமோஷனல் ஆகாதீங்க!' என்று அவருடைய தோளில் கைவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்று சோபாவில் அமர்த்திவிட்டு தானும் அவர் அருகில் அமர்ந்தான்.  

பிறகு அவர் நிதானமானதும், 'இன்னொரு விஷயம் சார். அடுத்த ஹியரிங் நாளைக்கே வருதாம்....' என்றவாறு எழுந்து நின்றான். 'அநேகமா போலீசே கேஸ வித்ட்றா பண்ணிருவாங்கன்னு நினைக்கேன்.....'

'மறுபடியும் ரொம்ப தாங்ஸ் சார்..... நீங்களே இந்த கேஸ ஹேன்டில் பண்ணா போதும்னு மகா கிட்ட  நா சொன்னப்போ நா எடுத்த முடிவு சரிதானான்னு நினைச்சிருக்கேன் சார்.... ஆனா இது ஆண்டவன் எடுத்த முடிவு போலருக்கு.... தாங்க் யூ சோ மச்....'

ராஜசேகர் லேசான புன்னகையுடன் அவரைப் பார்த்தான். 'சார்... நாளைய ஹியரிங்கும் முடியட்டும்.....'

'முருகேசந்தான் மர்டர் பண்ணேன்னு ஒத்துக்கிட்டானா சார்?'

'இல்ல சார்... ராமராஜந்தான் செஞ்சார்னு சொல்றான்..... இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கும்னு தெரியல!'

'அப்படீன்னா அவர யார் மர்டர் பண்ணது?'

'அது சூயிசைட்னு சொல்றான்.... ராமராஜன் சூயிசைட்தான் பண்ணிக்கிட்டேன்னு ஒரு லெட்டர் எழுதி வச்சிருந்தாரேன்னும் சொல்றான்... ஆனா அப்படி ஒரு நோட் இருந்துருந்தா போலீஸ் பாக்காமயா இருந்துருப்பாங்க? பாக்கலாம்..... நீங்க அதப்பத்தியெல்லாம் ஒர்றி பண்ணி ஒங்க ஹெல்த ஸ்பாய்ல் பண்ணிக்காதீங்க சார்.... இத யார் பண்ணியிருந்தா நமக்கென்ன....? நம்ம கேஸ் நல்லபடியா முடிஞ்சா சரி.... நா வரேன் சார்.....' 

'சரி சார்.' என்ற சீனிவாசன் சோபாவிலிருந்து எழுந்து அவனுடன் கூடவே வாசல் வரை வந்து வழியனுப்பினார். 

********

ராமராஜனின் பிரேத பரிசோதனை நடக்கும் மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஆய்வாளர் பெருமாள் தன் அறைக்குள் நுழைந்து அமர்ந்ததும் வாசலில் காத்திருந்த ரைட்டர் ஓடி வந்து மின்விசிறியை ஆன் செய்தார். அவர் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தமர்ந்ததைப் பார்த்தவாறே அவராக கண் விழிக்கட்டும் என்று ஒரு சில நொடிகள் காத்திருந்தான்.

கணிவிழித்து நிமிர்ந்த பெருமாள் தன் எதிரில் நின்றவரைப் பார்த்தார். 'என்னய்யா? ஏதோ சொல்ல வரா மாதிரி இருக்கு? என்ன விஷயம்?'

'சார் உங்க செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருதாம்.... பிபி கூப்ட்டுருந்தார். சார் வந்ததும் கூப்ட சொல்லுய்யான்னு.....'

தன் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து பார்த்த பெருமாள், 'ஆமாய்யா பிஎம் நடக்கற ரூம்ல இருந்ததால நாந்தான் ஆஃப் பண்ணி வச்சிருந்தேன்.....' என்றவாறு அதை ஆன் செய்துவிட்டு ரைட்டரை பார்த்தார். 'யோவ் நீ போயி எதுத்தாப்ல கடையில சூடா ஒரு ஃபில்டர் காப்பி போட்டுக்கொண்டு வரச் சொல்லு.... கொஞ்சம் ஸ்ட்ராங்காவே இருக்கட்டும்.... தலைவலி மண்டைய பொளக்குது....'

'யெஸ் சார்.' என்ற சல்யூட்டுடன் ரைட்டர் வெளியேற மீண்டும் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தார். காப்பி வர வரைக்கும் கொஞ்ச நேரம் இப்படியே ரிலாக்ஸ்டா ஒக்காந்துருக்கலாம்.....

ஆனால் அவருடைய நிம்மதியை குலைக்கும் விதமாக அடுத்த நொடியே அவருடைய செல்ஃபோன் அலறியது. ச்சை... முதல்ல ரிங்டோன மாத்தணும்.... சாவு மணி அடிக்கறா மாதிரி! 

நிமிர்ந்து திரையைப் பார்த்தார். அடுத்த நொடியே அவருடைய தலைவலி இடம் தெரியாமல் பறந்தது. 

எடுத்து, 'யெஸ் ஸார்.' என்றார் விரைப்புடன்.

'என்ன பெருமாள் செல்ஃபோன் ரொம்ப நேரம் ஸ்விட்சாஃப்லயே இருந்துது?' என்றார் எஸ்.பி. சந்தானம் எதிர்முனையில்.

'ஆமா சார்..... ஒரு பிஎம் இருந்துது.... அங்க இருந்தப்போ ஆஃப் பண்ணி வச்சிருந்தேன்... இப்பத்தான் ஸ்டேஷனுக்கு ரிட்டர்ன் வந்தேன்.....'

'பிஎம்மா, எந்த கேஸ்?'

'நேத்து ட்ரிப்ளிக்கேன்லருந்து ரிக்கவர் பண்ண பாடி சார்.... ராமராஜன்னு.....'

'ஓ! அதுவா? முடிஞ்சிதா?'

'ஆமா சார்..'

'டாக்டர் என்ன சொல்றார்.'

'க்ளியரா எதுவும் சொல்லல சார்...... கழுத்துல டீப்பா ஒரு கட் மட்டும்தான்..... பாடியில வேற எங்கயும் எந்த காயமும் இல்ல..... செத்து ரெண்டு மூனு மணி நேரம் கழிச்சித்தான் பாடிய அங்க கொண்டு வந்து போட்டுருப்பாங்க போலருக்கு....வயித்துல அரைகுறையா டைஜஸ்டான சாப்பாட்டோட லிக்கர் சாப்ட அடையாளமும் இருக்குன்னார்.'

'சரி.... அது சூயிசைடா மர்டரான்னு ஐடி பண்றதுக்கு ஏதாச்சும் க்ளூ இருக்குதாம்மா, கேட்டீங்களா?'

'கேட்டேன் சார்... கழுத்துலருக்கற வூன்ட பாத்தா சூயிசைட் மாதிரி இல்லன்னு சொன்னார்.....கத்தி ரைட்லருந்து லெஃப்ட்டுக்கு போயிருக்காம்..... மர்டரானவர் ரைட் ஹேன்ட்ங்கறதால அவரா கட் பண்ணிக்கறதுக்கு சான்ஸ் ரொம்ப கம்மின்னார்..... அதப்பத்தித்தான் யோசிச்சிக்கிட்டிருந்தேன்....'

'ஓ! அப்போ இது சூயிசைட் இல்ல.....?'

தொடரும்..


5 comments:

வே.நடனசபாபதி said...

//அதத்தான சார் நா தினம் தினம் நினைச்சிக்கிட்டிருக்கேன் என்று சொல்ல நினைத்தார் தன்ராஜ்...//

சில நேர்மையான காவல் அதிகாரிகள் நினைப்பதை சரியான இடத்தில் சொல்லிவிட்டீர்கள்.

ஆய்வாளர் பெருமாள் நடந்த உண்மையை சொல்லிவிடுவார் என நினைக்கிறேன். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!

G.M Balasubramaniam said...

தொடர்ந்து படிக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
//அதத்தான சார் நா தினம் தினம் நினைச்சிக்கிட்டிருக்கேன் என்று சொல்ல நினைத்தார் தன்ராஜ்...//

சில நேர்மையான காவல் அதிகாரிகள் நினைப்பதை சரியான இடத்தில் சொல்லிவிட்டீர்கள்.

ஆய்வாளர் பெருமாள் நடந்த உண்மையை சொல்லிவிடுவார் என நினைக்கிறேன். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
தொடர்ந்து படிக்கிறேன்.//

மிக்க நன்றி சார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள்
தொடரட்டும் சுவாரசியம்