01 November 2013

சொந்த செலவில் சூன்யம் - 64

முருகேசன் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கும் என்று யோசித்தவாறே ராஜசேகர் 'location found?' என்று வைபர் சேட் பெட்டியில் வினவினான். 'Besant Nagar, Adayar' என்று பதில் வந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான். எஸ்.பி. சந்தானத்தின் அலுவலகத்திலிருந்து அடையார் சென்றடைய அதிகபட்சம் அரை மணி நேரம் ஆகும்.....

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க?' என்ற முருகேசனின் குரல் வந்ததும் அவனை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது என முடிவெடுத்தான்.

'இங்க பார் முருகேசன், நீ சொல்றத நா வேணும்னா நம்பலாம்.... ஆனா போலீஸ் நம்பாது....' 

'அது உங்க வேலை..... அதுக்குத்தான இத உங்கக்கிட்ட சொல்றேன்...?'

'முட்டாத்தனமா பேசாத..... குமார் மஜிஸ்டிரேட் கிட்ட ஏற்கனவே வாக்குமூலம் குடுத்துட்டான்.... எதுக்கு உனக்கு பாதுகாப்பு குடுக்கணும்னு நீ க்ளியரா சொன்னாத்தான்னு மஜிஸ்டிரேட் கண்டிஷன் போட்டதால வேற வழியில்லாம நீயும் ராமராஜனும் அன்னைக்கி ஆறே முக்கால் மணிக்கி அவன் பார்க்கிங்ல கார நிறுத்துனதையும் நீ மட்டும் இறங்கி மாதவி வீட்டுக்குள்ள போய் அரை மணி நேரம் கழிச்சி வந்ததையும் சொல்லிட்டான்....'

'................'

'இன்னொன்னையும் சொல்லிடறேன்.... நா ராகவன் சாரையும் மிரட்டி உண்மைய ஏற்கனவே வெளிக்கொண்டாந்தாச்சி.... அன்னைக்கி ஏழு ஏழரைக்கு மாதவி வீட்டுக்கு முன்னால வச்சி பாத்தது உன்னத்தான்னு அவர் சொன்னத டேப் பண்ணி போலீசுக்கும் போட்டு காட்டியாச்சி..... அதனால கேஸ் அடுத்த ஹியரிங் வர்றதுக்குள்ளவே போலீஸ் இந்த கேச வாபஸ் வாங்கிருவாங்க....'

'...................'

'முருகேசன்.... என்ன பதிலையே காணம்... ஷாக்காய்ட்டியா?'

'...............'

நாம் தேவையில்லாமல் பேசி அவன் ஏடாகூடமாக எதையாவது செய்திருப்பானோ? சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். போலீஸ் அவன் இருப்பிடத்தை அடைய இன்னும் கால் மணி நேரமாவது ஆகுமே.... அதற்குள் தப்பிவிடுவானோ.....ச்சை முட்டாத்தனம் பண்ணிட்டேனே..... செல்ஃபோனை பார்த்தான்..... கால் துண்டிக்கப்படவில்லை என்பது தெரிந்தது....

'முருகேசன்.......' என்றான் சற்று உரக்க.... 'நா சொல்றத கேளு.... நீ உண்மையிலேயே மாதவியையோ இல்ல ராமராஜனையோ மர்டர் பண்ணலன்னா நானே ஒனக்கு ஆஜராவறேன்......'

நீண்ட நேரத்திற்குப் பிறகு முருகேசன் சிரிப்பது கேட்டது..... 'நல்லா ஜோக்கடிக்கிறீங்க சார்..... நீங்க எனக்கு ஆஜராவப் போறிங்களா? நீங்க  மாத்திரம் அந்த கோபாலுக்கு ஆஜராவாம இருந்துருந்தா நாம் பாட்டுக்கு மாதவி வீட்லருக்கறத லூட்டடிச்சிட்டு போய்க்கிட்டே இருந்துருப்பேன்.....'

''அது ஒன்னும் பெரிய விஷயமில்ல முருகேசன்... நீ ராகவனையும் அவங்க வய்ஃபையும் விட்ரு.... ஒனக்கு வேண்டியத நா வாங்கித் தரேன்...'

மீண்டும் சிரித்தான் முருகேசன். 'யாரு, நீங்க?  ஒழுங்கா ஃபோர்ஜரியில அப்பப்போ கிடைச்ச காச வச்சி பொழைச்சிக்கிட்டிருந்தேன்..... நீங்க என்னான்ட வராதேன்னு சொன்னதும் சரி விட்றலாம்னுதான் ஒரு ஆள புடிச்சி அந்த கோபாலோட கம்பெனியில போய் சேர்ந்தேன்...... கையாடல் பண்ற கையிலயே பேங்க்லருக்கற மொத்தத்தையும் குடுத்தா?  சும்மா இருக்குமா? கொஞ்ச நாள் ஜாலியா இருந்தேன்.... அந்த கிழவன் எப்படியோ மோப்பம் புடிச்சிட்டான்... அதுக்கப்புறந்தான் ஆந்திராவுல சிங்கிள் டீக்கு அல்லாடிக்கிட்டிருந்தவள கூட்டாந்து மல்லேஸ்வரிங்கற பேர மாதவின்னு பாலிஷ் பண்ணி தொழில் பண்ண வச்சேன்.. ஆனா நா நெனச்ச காசு பேறல...அதான் சீரியல்ல நடிடின்னு இறக்கிவிட்டேன்.... நடிகைன்னாலே ஒரு கிக்தான? மேக்கப்போட பாத்து ஜொள்ளு விட்ட பெரிய தலைங்க நாலஞ்சி கிடைச்சிது..... நிம்மதியா ரெண்டு வருசம்....என்னைக்கி அந்த கோபால் வீட்டுக்கு அவள கொண்டு வந்து குடிவச்சனோ அன்னைக்கி புடிச்சிது சனியன்....எல்லாம் ராமராஜன் பண்ண வேலை..'

'ஏன் அவர சொல்ற? கோபால் வீடுதான்னு தெரிஞ்சிதான குடிபோனீங்க?'

முருகேசனுடன் பேசிக்கொண்டே மணியைப் பார்த்தான்... இன்னும் ஐந்தோ பத்து நிமிடங்கள்..... 'Where is Ur team?' என்று வைபர் பெட்டியில் அடித்தான்...... பதிலேதும் வரவில்லை..... இணைப்பு உள்ளதா என்று பார்த்தான்... இருந்தது.... Call duration: 27:45 என்றது. சேட் பெட்டியில் ??????????????? என்று மீண்டும் அடித்தான் 'I'm here. few more mnts... keep tlkng..' என்று பதில் வந்தது.

'ராமரஜன ஒனக்கு எப்படி பழக்கமாச்சி?'

'..................'

'முருகேசன்?' என்றான் சற்று உரக்க.....

பதில் இல்லை... திடீரென்று காதை பிளக்கும் ஒலி..... துப்பாக்கி வெடித்ததுபோல்.....

'யோவ்.... உன் லாயர் புத்திய காட்டிட்டீல்ல... இரு வச்சிக்கறேன்!' என்று முருகேசனின் குரல் வந்தது. அதிர்ந்துபோனான். இன்னும் சில நிமிடங்கள் ஆகும் என்றாரே...... எதிர்முனையிலிருந்து கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. போலீஸ்தான்.....

அடுத்த சில நிமிடங்கள். என்னென்னவோ சப்தம்..... வைபர் சேட் பெட்டியை பார்த்தவாறே காத்திருந்தான்.... 'pol. party... entd hse. accused captd... reld hostss.. tks fr ur hlp, bye' என்ற செய்தியை படித்து நிம்மதியடைந்தான்.....

சிறிது நேரம் கழித்து எதிர்முனையில் மீண்டும் ராகவனின் குரல் கேட்டது... 'சார் நா ராகவன். போலீஸ் கதவ ஒடச்சிட்டு உள்ள வந்துட்டாங்க... ரொம்ப ரொம்ப தாங்ஸ் சார்.....' மேலே தொடர முடியாமல் அவருடைய குரல் நடுங்குவதை உணர்ந்த ராஜசேகர், 'பரவால்லைங்க.... உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னுமில்லையே?' என்று வினவினான்.

'பெருசா எதுவும் இல்ல சார்.....  போலீஸ் கூப்டறாங்க...நா வீட்டுக்கு போயி கூப்டறேன்.... மறுபடியும் தாங்ஸ்...' 

இணைப்பு துண்டிக்கப்பட செல்ஃபோனை அணைத்துவிட்டு மேசை மீதிருந்த BSNL தொலைபேசியின் ரிசீவரை எடுத்தான்.... அதுவும் இணைப்புத் துண்டிக்கப்பட்டு டயல் ஓசை மட்டும் கேட்டது.

நீண்ட நேரம் தொடர்ந்து பேசியதில் தொண்டை கரகரத்தது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். அன்று அவன் ஆஜராகவிருந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு வருவதற்கு இன்னும் அரை மணி நேரத்திற்கும் குறைவாகவே இருந்ததைக் கவனித்தான். இப்போதே கிளம்பினாலும் ஒரு வழக்கில் நிச்சயம் ஆஜராக வழியில்லை. மேலும் அவன் அப்போதிருந்த மனநிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடமுடியும் என்று தோன்றவில்லை.  நீதிமன்றத்தில் காத்திருந்த நாகுவின் தொலைபேசியும் வரவில்லையே என்று நினைத்தான். அதன் பிறகுதான் அவனுடைய செல்ஃபோனும் BSNL தொலைபேசியும் கடந்த அரை மணி நேரமாக பயன்பாட்டில் இருந்தது நினைவுக்கு வந்தது. சரி, வருவது வரட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவாறு கைகளை தலைக்குப் பின்னால் பிணைத்து அப்படியே இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்...... நேரம் போனதே தெரியாமல்....

தன்னை அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொள்ளும் பலருக்கும் இப்படித்தான் நடக்கிறது...... லேன்ட் லைனில் இருந்து பேசினால் அதை டிரேஸ் செய்வது முடியாத காரியம் என்று முருகேசன் நினைத்திருப்பான். ஆனால்  தன்ராஜ் காவல்துறையினரின் சைபர் க்ரைம் சென்டரில் காத்திருந்ததோ அல்லது தன்னுடன் பேசிக்கொண்டே தான்  அழைத்திருந்த தொலைபேசி எண்ணை  ராஜசேகரால் அவருக்கு தெரிவிக்க முடியும் என்றோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் தொலைதொடர்பு எத்தனை முன்னேறியுள்ளது!! அதற்கு முன்பு யாஹூவை விட்டால் கூகுள் டாக்.... ஆனால் இரண்டிலும் ஒருவரை சேர்க்க அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரிந்திருக்க வேண்டும்..... ஆனால் செல்ஃபோன்களுக்கென்றே கடந்த ஓராண்டில் அறிமுகமாயிருந்த வைபர் (viber), வாட்ஸப் (whatsapp) போன்ற மென்பொருட்களுக்கு ஒருவரின் செல்ஃபோன் எண் இருந்தாலே போதும் அவர்களிடமும் அதே மென்பொருள் இருக்கும் பட்சத்தில் chat, voice மற்றும் video அழைப்புகளை பெரும் பொருட்செலவில்லாமல் செய்ய   மிகவும் எளிதாகியிருந்தது. 

வசந்தை அழைத்து விவரம் தெரிவிக்கலாமா என்று நினைத்து செல்ஃபோனை எடுத்து அவனை அழைத்தான். எப்போதும் போலவே அவனுடைய அழைப்புக்கெனவே காத்திருந்தவன் போல் அவனுடைய குரல் உற்சாகமாக வந்தது. 'நானே உங்கள கூப்டலாம்னு இருந்தே பாஸ்.'

'எதுக்கு?'

'நெக்ஸ்ட் ஹியரிங் நாளைக்கே பாஸ்...இப்பத்தான் பார்த்தேன்.....'

'அப்படியா? ஆனா அதுக்கு அவசியம் இல்ல போலருக்கேடா..!'

'என்ன பாஸ் சொல்றீங்க? புரியல.'

முருகேசன் தன்னை அழைத்ததையும் அவனுடன் பேசிக்கொண்டே தன்ராஜுக்கு தகவல் அளித்ததையும் அரை மணி நேரத்தில் அவன் இருந்த இடத்தை கண்டுபிடித்து சென்று போலீஸ் அவனை சுற்றி வளைத்து கைது செய்ததையும் சுருக்கமாக சொல்லி முடித்தான். 

'அப்படியா பாஸ், கங்கிராட்ஸ்' என்றான் வசந்த் மகிழ்ச்சியுடன். 'ரெண்டு கொலையையும் நாந்தான் செஞ்சேன்னு ஒத்துக்கிட்டானா பாஸ்?'

'எங்க? ராமராஜனே மாதவிய கொன்னுட்டு சூயிசைட் பண்ணிக்கிட்டாராம்.... கத விடறான்.'

'அப்படியா? ராமராஜன் சூயிசைட் பண்ணிக்கிட்டாராமா?'

'அப்படித்தான் சொல்றான்... சூயிசைட் நோட் கூட எழுதி பாக்கெட்ல வச்சிருந்தார்னு சொல்றான்.... உண்மையான்னு தெரியல..... தன்ராஜும் அப்படி எதுவும் இன்ஃபர்மேஷன் இல்ல சார்ன்னு சொல்றார்....'

'தன்ராஜுக்கு தெரிய சான்ஸ் இல்ல பாஸ்..... ஏன்னா அவர் பாடிய பாக்க போகலையாம்... ட்ரிப்ளிக்கேன் ஸ்டேஷன்லருந்து இன்ஃபர்மேஷன் வந்ததும் ஸ்பாட்டுக்கு போனது இன்ஸ்பெக்டர் பெருமாள்.'

'அப்படியா?' என்று வியந்த ராஜசேகர், 'அப்படீன்னா பெருமாள் வேணும்னே இத மறைச்சிருப்பார்னு சொல்றியா?'

'தெரியல பாஸ்.... ஒருவேளை இவர்கிட்ட எதுக்கு சொல்லணும்னு நினைச்சிருப்பார்.....'

'இருக்கும்.....' என்ற ராஜசேகர் சுவர் ஜன்னல் வழியாக பார்த்தான். இருட்ட துவங்கியிருந்தது. சீனிவாசனை பார்த்து விஷயத்தை கூற வேண்டும்... 'சரிடா..... நா கிளம்பறேன்.... அப்புறமா கூப்டறேன்.'

'ஓக்கே பாஸ்.... மறுபடியும் கங்கிராட்ஸ்...'

'தாங்ஸ்றா...' என்றான் ராஜசேகர், 'அதுல பெரிய பங்கு உனக்குத்தான்டா.. நீ மட்டும் வைபர் கிய்பர்னு எனக்கு சொல்லிக் குடுத்துருக்கலன்னா என்னடா பண்றதுன்னு முழிச்சிருப்பேன்..... அதுக்காகவே ஒனக்கு ஒரு பெரிய தாங்ஸ் சொல்லணும்.... கம்ப்யூட்டர்ல கேம் ஆடிக்கிட்டிருந்தவன ஒரு எக்ஸ்பேர்ட் ரேஞ்சுக்கு இம்ப்ரூவ் பண்ணிட்டே...'

'நீங்க வேற பாஸ்.... வாராதீங்க.' என்று வசந்த் உரக்க சிரிக்க 'சரிடா' என்றவாறு இணைப்பை துண்டித்தான் ராஜசேகர்.. 

*********

முருகேசனை கைதுசெய்து அவன் வசமிருந்து ராகவனையும் அவருடைய மனைவியையும் விடுவித்தாயிற்று என்ற செய்தி வந்ததுமே சென்னை சிசிபி அலுவலகத்தில் குழுமியிருந்த அனைவரும் தன்ராஜிடம், 'கன்கிராட்ஸ்' என்று கைகலுக்கினர். 

அப்போது கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எஸ்.பி சந்தானம் தகவல் அறிந்து நேரில் வந்தார். 'வெல்டன் தன்ராஜ்' என்று பாராட்டினார்.

'மிஸ்டர் ராஜசேகர் மட்டும் புத்திசாலித்தனமா எங்களுக்கு விவரமும் குடுத்து அக்யூஸ்ட் கிட்ட பேச்சும் குடுத்துக்கிட்டே இருந்திருக்கலன்னா இது பாசிபிள் ஆயிருக்க சான்ஸே இல்ல சார்.' என்றார் தன்ராஜ். 'So.... அவருக்குத்தான் நாம தாங்ஸ் சொல்லணும்.'

சந்தானம் சிரித்தார். 'அவருக்கு அவரோட க்ளையன்ட எப்படியாச்சும் இந்த கேஸ்லருந்து ரிலீவ் பண்ணிக்கணும்..... அதுவே ஒரு பெரிய மோட்டிவாச்சே?'

'அப்படியில்ல சார்.' என்றார் தன்ராஜ் பணிவுடன். 'கோபால ரிலீவ் பண்றதுக்கு மட்டும்னு சொல்ல முடியாது.... மிஸ்டர் ராகவனையும் அவரோட மிசஸ்சையும் கூட காப்பாத்தணுங்கற இன்ட்ரஸ்ட நா அவரோட வாய்ஸ்ல பாத்தேன்....he is not like other lawyers..... he is more humane....'

'பரவால்லையே!' என்று உரக்க சிரித்தார் எஸ்.பி. 'அவர் கோர்ட்ல ஒங்கள பொறட்டி எடுத்து முழுசா ஒரு வாரம் கூட ஆகலை... அதுக்குள்ள அத மறந்துட்டு அவர பாராட்டறீங்க? ஆனா ஒன்னு, அவருக்கும் ஒங்க மேல ரொம்ப மதிப்பு இருந்துருக்கணும்... இல்லன்னா இந்த விஷயத்துக்கு ஒங்கள அப்ரோச் பண்ணியிருக்கமாட்டார்....'

'தெரியல சார்.... but one thing is sure Sir...'

'என்னது?' என்றார் எஸ்.பி. புன்னகையுடன்.


தொடரும்.


7 comments:

வே.நடனசபாபதி said...


முருகேசன் பிடிபட்டது பற்றிய சம்பவங்களை சுவையாக நீங்கள் விவரித்திருந்தது, ஒரு ‘மயிர்க்கூச்செறியும்’ திரைப் படத்தைப் பார்ப்பது போன்றிருந்தது. இனி என்ன’ ‘நரகாசுரன் வதம்’ தானே!

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் said...

விறு விறுப்பாக எடுத்துச் சென்று விட்டீர்கள்.அருமை

Packirisamy N said...

எப்படியிருந்தாலும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் முருகேசன் செய்தது திரைப்படம் போலாகிவிட்டது. முருகேசன் முதலில் தப்பித்தால் போதும் என்று தப்பியிருக்கலாம். படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. வரும் பதிவுகளில் எப்படித் தொடரப்போகிறது என்று அறிய காத்திருக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...

முருகேசன் பிடிபட்டது பற்றிய சம்பவங்களை சுவையாக நீங்கள் விவரித்திருந்தது, ஒரு ‘மயிர்க்கூச்செறியும்’ திரைப் படத்தைப் பார்ப்பது போன்றிருந்தது. இனி என்ன’ ‘நரகாசுரன் வதம்’ தானே!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.


தீபாவளி நல் வாழ்த்துக்கள்!//

உங்களுக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

PM
சென்னை பித்தன் said...
விறு விறுப்பாக எடுத்துச் சென்று விட்டீர்கள்.அருமை//

மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

1 PM
Packirisamy N said...
எப்படியிருந்தாலும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் முருகேசன் செய்தது திரைப்படம் போலாகிவிட்டது. முருகேசன் முதலில் தப்பித்தால் போதும் என்று தப்பியிருக்கலாம்.//

இதை அவனே பின்னால் சொல்வான்.

படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. வரும் பதிவுகளில் எப்படித் தொடரப்போகிறது என்று அறிய காத்திருக்கிறேன்.//

மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

1 PM
Packirisamy N said...
எப்படியிருந்தாலும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் முருகேசன் செய்தது திரைப்படம் போலாகிவிட்டது. முருகேசன் முதலில் தப்பித்தால் போதும் என்று தப்பியிருக்கலாம்.//

இதை அவனே பின்னால் சொல்வான்.

படிப்பதற்கு விறுவிறுப்பாக இருந்தது. வரும் பதிவுகளில் எப்படித் தொடரப்போகிறது என்று அறிய காத்திருக்கிறேன்.//

மிக்க நன்றி சார்.