19 அக்டோபர் 2013

ராகுல் காந்தியை அடுத்த பிரதமராக தெரிவு செய்யலாமா?

நேற்றைய பதிவில் நமோ எனப்படும் நரேந்திர மோதியை அடுத்த பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை வெளியிட்டிருந்தேன். 

அவர் அதற்கு தயாராக இல்லையென்றால் அவருக்கு மாற்றாக காங்கிரஸ் முன்னிலைப்படுத்தும் ராகுலுக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்வி எழலாம் அல்லவா?

அவருக்கும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறேன்.

அவர் நேரு குடும்பத்து  வாரிசு என்றே ஒரே காரணத்திற்காக அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் கண்மூடித்தனமான காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. பல தலைமுறைகளாக காங்கிரசை ஆதரித்து வரும் குடும்பத்தை சார்ந்தவன்தான் என்றாலும் இந்திராகாந்தியின் அடாவடி ஆட்சிக்குப் பிறகு அதிலிருந்து சற்று மாறி நிற்பவன். 

ராகுலை நான் அடுத்த பிரதமராக தெரிவு செய்ய வேண்டுமென்றால் அவர் என்னென்ன செய்ய வேண்டும்? 

1. இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு தில்லியில் சீக்கியர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதற்கு சீக்கியர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 

2.முதலில் ஒரு மிகச் சிறிய அமைச்சராக மத்திய அமைச்சரவையில் இணைந்து தனக்கும் நிர்வாக மற்றும் மேலான்மை திறன் (Management and Administrative capacity) உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். 

3.மக்களிடம் இருந்தும் பொது வாழ்க்கையிலிருந்தும் அவ்வப்போது காணாமல் போகும் (sudden disappearance) பழக்கத்தை விட்டுவிட வேண்டும். 

4. பேச்சில் சுயகட்டுப்பாடு வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிக்கை விடுவது பிறகு அது தவறு என்று மன்னிப்பு கோருவது... என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது மனமுதிர்வற்ற (childish or immatured) போக்கை உடனே கைவிட வேண்டும்.

5. பொருளாதார விஷயங்களில் (Economic affairs) தன்னுடைய ஞானத்தை அல்லது விவரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

6. ஒரு கட்சியின் தலைவர் பதவி - அதையும் கூட வாரிசு அரசியல்தான் பெற்றுத் தந்தது என்பதை அவராலும் மறுக்க முடியாது - என்பது வேறு, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த தலைவர் என்பது வேறு. நாட்டிலுள்ள அனைவரையும் தலைமையேற்று நடத்த தேவையான leadership quality (ஒரு தலைவருக்கு தேவையான தகுதிகள்) தனக்கு உண்டு என்பதை அவர் நிரூபித்து காட்ட வேண்டும். 

7. ஊழலுக்கு நான் எதிரி என்று கூறினால் மட்டும் போதாது. அதிலேயே ஊன்றி திளைப்பவர்களுடன் - அதாவது கட்சிக்கு உள்ளும் புறமும் - எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அது மாயாவதியாக இருந்தாலும், முலாயம் சிங்காக இருந்தாலும் ஏன் நமது கலைஞரானாலும் அல்லது அம்மாவானாலும்.... அரசியல் கூட்டணி என்ற பெயரில் ஊழல் விஷயத்தில் எவ்வித compromiseம் செய்துக்கொள்ளக் கூடாது. Charity begins at home என்பார்கள்.... ஆகவே முதலில் தன்னுடைய சகோதரியின் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்களுக்கு பதில் சொல்லிவிட்டு நாட்டை சீர்படுத்த புறப்படட்டும்.

சரிங்க..... நமோவும் வேண்டாம் ராகுலும் வேண்டாம் என்றால் யாருக்குத்தான் உங்கள் ஓட்டு? சவசவன்னு ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் சிங்குக்கா என்கிறீர்களா?

இவர்கள் மூவருக்குமே அடுத்த பிரதமராகும் தகுதியில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. மேலும் நம் நாட்டிலுள்ள தேர்தல் விதிகளின்படி இவர்தான் பிரதமர் என்று யாரையும் நேரடியாக தெரிவு செய்ய முடியாது. 

மேலும் இன்றுள்ள அரசியல் சூழலில் நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசும் பிஜேபியும் கூட தனித்து தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. ஆகவே யாருடனாவது கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று தேசீய அளவில் இவ்விரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக இருப்பது கம்யூனிஸ்டுகள். இவர்கள் இவ்விரு கட்சியினருடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. அவர்களுக்குப் பிறகு வட இந்தியாவில் எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம். தென்னிந்தியாவில் திராவிட கட்சிகள், தெலுங்கு தேசம். கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஊழலுக்கு பேர்பெற்றவைகள். 

ஆகவே என்னுடைய முடிவு இதுதான்.

எந்த கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல், ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு.

நான் சாதாரணமாக lesser evil என்ற அடிப்படையில் காங்கிரசுக்குத்தான் வாக்களிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் செய்த அலங்கோல ஆட்சி, எதிலும் ஊழல் எப்போதும் ஊழல் என்கிற போக்கு EVIL என்ற தராசில் நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில்தான் என்பதை காட்டிவிட்டது.

வாக்களிக்க விரும்பவில்லை என்று 49 (ஒ) வை தெரிவு செய்வதை விட இவர்கள் எவரையுமே எனக்கு பிடிக்கவில்லை என்று வாக்களிக்கும் ஆப்ஷனை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதே, இம்முறை அதை பயன்படுத்துவதுதன் சரி என்று கருதுகிறேன். 

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்த்து யார் அதிகம் தருகிறார்களோ அல்லது தருவதாக சொல்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு என்று கருதும் பாமரன் யாருக்கு வாக்களிக்கிறானோ அவர்களே ஆண்டு விட்டு போகட்டும். 

********

24 கருத்துகள்:

  1. குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் உரிமைச் சட்டம் வந்தால் தான் நல்லது
    ========
    //எந்த கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல், ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு// நல்ல முடிவு நண்பரே..
    =========
    திராவிட கட்சிகள் ஊழல் செய்யவில்லை என்ற தகவல் உருத்துகிறதே.
    =========
    தங்களது அரசியல் அறிவு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றீங்க நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. ஊழல் செய்யாமல் ஒரு கட்சி இயங்கவே முடியாது. பச்சையப்பன் இல்லாமே எவனும் மாலை கூட போடமாட்டன்.

    பதிலளிநீக்கு

  3. அ. பாண்டியன் said...
    திராவிட கட்சிகள் ஊழல் செய்யவில்லை என்ற தகவல் உருத்துகிறதே.
    =========

    என்னுடைய பதிவில் எந்த ஒரு இடத்தில் இப்படி எழுதவில்லையே.. மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள்.

    தங்களது அரசியல் அறிவு வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.//

    எனக்கு அது கொஞ்சம் கம்மிதாங்க. அதனாலதான் இந்த முடிவு. சுட்டிக்காட்டி பாராட்டியதற்கு மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  4. தங்களது முந்தைய இடுகையையும், இந்த இடுகையையும் படித்தபிறகு தங்களது பல கருத்துக்களில் எனக்கு முரண்பாடு இருந்தாலும், தங்களின் நடுநிலைமையை மனதார பாராட்டுகிறேன்...

    எப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் நீங்கள் ஒருவருக்கு ஓட்டளிப்பேன் என்று எடுத்த முடிவிலேயே நீங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு 49-ஓ தான் தேர்வு செய்யும் தலைவிதிக்கு ஆளாகியுள்ளீர்கள்...
    பார்க்கலாம்... விடிவு காலம் எப்போதுதான் பிறக்கிறது என்று?...

    பதிலளிநீக்கு
  5. PM
    நம்பள்கி said...
    ஊழல் செய்யாமல் ஒரு கட்சி இயங்கவே முடியாது.//

    அப்படீன்னா நாமளும் அத பெருசா எடுத்துக் கூடாது. யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சுருட்டிக்கொள்ளட்டும். நாட்டுக்கு நல்லது செய்தால் போதும். சரீங்களா?

    பச்சையப்பன் இல்லாமே எவனும் மாலை கூட போடமாட்டன்.//

    இது சமீபகாலமா வந்த ட்ரென்ட்தான? அதுமட்டுமில்லாமல் பணத்த வாங்கிக்கிட்டு ஓட்டு போடற யாரும் ஊழலப்பத்தி பேசறதே இல்லீங்க.

    பதிலளிநீக்கு
  6. நீங்க சொன்னதில் என்னை கவர்ந்தது.//ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு//

    பதிலளிநீக்கு
  7. [[அப்படீன்னா நாமளும் அத பெருசா எடுத்துக் கூடாது. யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சுருட்டிக்கொள்ளட்டும். நாட்டுக்கு நல்லது செய்தால் போதும். சரீங்களா?]]

    நான் கொடுத்த பதில் இந்தியா எப்படி இப்ப இருக்கு என்பதை சொல்லவே தவிர...நீங்கள் சொல்வது மாதிரி ஊழல் செய்யணும் என்று சொல்லவில்லலை.

    நீங்கள் சொல்வது போல் நாட்டுக்கு நல்லது என்ன செய்தார்கள் என்று பட்டியல் இட்டுப்பாருங்கள் ஏமாற்றமே மிஞ்சும்

    பதிலளிநீக்கு
  8. //ஊழலுக்கு நான் எதிரி என்று கூறினால் மட்டும் போதாது. அதிலேயே ஊன்றி திளைப்பவர்களுடன் - அதாவது கட்சிக்கு உள்ளும் புறமும் - எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. //

    மச்சானுக்கும் மாப்பிள்ளைக்கும் நடுவில இப்படிசிண்டு முடிஞ்சா எப்படிங்க...?

    //எந்த கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல், ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு.//

    Arvind Kejriwal நம்ம ஏரியாவில நிப்பாரா??!!

    பதிலளிநீக்கு

  9. ஆய்ந்து எழுதப்பட்ட அரசியல் பதிவு. வாழ்த்துக்கள்!

    வாக்களிக்க விரும்பவில்லை என்று 49 (ஒ) வை நானும் தெரிவு செய்யவே விரும்புகிறேன். ஆனால் பெரும்பான்மையினர் தேசப்பிதா காந்தியை ‘பார்த்ததும்’ ஆட்டுமந்தையைப் போல் ஒரு பக்கம் சாய்ந்துவிடுகிறார்களே என் செய்ய!

    பதிலளிநீக்கு

  10. ராகுலிடமும் சில கேள்விகள் கேட்டு விட்டீர்கள். யாரும் பதில் தரப் போவதில்லை.பெரும்பாலும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கடைசிநேரத்தில் தோன்றும் மனசாட்சி சொல்படிதான் ஓட்டு போடுவோம். ஊழல் அது இது என்பதெல்லாம் சும்மா!

    பதிலளிநீக்கு
  11. உண்மைதான்! நானும் 49 ஒ விற்குதான் போடலாம் என்று நினைக்கிறேன்! நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. சாய்ரோஸ் said...
    தங்களது முந்தைய இடுகையையும், இந்த இடுகையையும் படித்தபிறகு தங்களது பல கருத்துக்களில் எனக்கு முரண்பாடு இருந்தாலும், தங்களின் நடுநிலைமையை மனதார பாராட்டுகிறேன்...//

    நன்றிங்க. என்னுடைய கருத்துக்கள் அனைத்துக்குமே மாற்று கருத்துக்களும் இருக்கும் இருக்க வேண்டும். அதில்தான் சுவாரஸ்யமே... எல்லாருக்கும் ஒரே கருத்து என்றால் பிறகு சர்ச்சைக்கே இடமில்லையே!

    எப்படிப்பட்ட சூழ்நிலை அமைந்தால் நீங்கள் ஒருவருக்கு ஓட்டளிப்பேன் என்று எடுத்த முடிவிலேயே நீங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு 49-ஓ தான் தேர்வு செய்யும் தலைவிதிக்கு ஆளாகியுள்ளீர்கள்...//

    நான் மட்டுமா?

    பார்க்கலாம்... விடிவு காலம் எப்போதுதான் பிறக்கிறது என்று?..//

    நிச்சயம் பிறக்கும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை :)

    பதிலளிநீக்கு

  13. வேகநரி said...
    நீங்க சொன்னதில் என்னை கவர்ந்தது.//ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு//

    நன்றிங்க. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லாமல் போனதால் வந்த குழப்பங்களைப் பார்த்த பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது. கொள்கைகளில் எவ்வித கருத்தொற்றுமையும் இல்லாத கட்சிகள் இணைந்து பிரச்சாரம் வேண்டுமானால் செய்யலாம்... ஆனால் நாட்டை நிர்வகிக்க முடியவே முடியாது என்பதைத்தான் கண்டுணர்ந்தோமே? இனியும் அதே பாதையில் போவது மூடத்தனம் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  14. நம்பள்கி said...

    நான் கொடுத்த பதில் இந்தியா எப்படி இப்ப இருக்கு என்பதை சொல்லவே தவிர...நீங்கள் சொல்வது மாதிரி ஊழல் செய்யணும் என்று சொல்லவில்லலை.//

    நானும் நீங்கள் அப்படி சொன்னீர்கள் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை.

    நீங்கள் சொல்வது போல் நாட்டுக்கு நல்லது என்ன செய்தார்கள் என்று பட்டியல் இட்டுப்பாருங்கள் ஏமாற்றமே மிஞ்சும் //

    நாட்டுக்கு நல்லது யாரும் செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியாது. கடந்த பத்தாண்டுகளில் தொழில்துறையிலும் தொலைதொடர்பு துறையிலும் விண்வெளி ஆராய்ச்சி துறையிலும் நாம் மிக அதிக அளவிலான வளர்ச்சியை கண்டுள்ளோம். நாட்டி GDP மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது என்கிறது உலக வங்கியின் ஆண்டறிக்கை. கருத்திலும் கொள்கையிலும் ஒரு ஒற்றுமையும் இல்லாத கட்சிகள் இணைந்து நடத்தும் அரசாங்கத்தாலேயே இவ்வளவு சாதிக்க முடியும் என்றால் ஒரே கட்சி ஆட்சியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும். மன்மோகன் சிங் செயலிழந்து போனதற்கு முக்கிய காரணம் அவருடைய ஆட்சியில் அங்கம் வகித்த மற்ற கட்சிகளின் செயல்பாடுகள்தான் என்று சொல்வேன்.

    பதிலளிநீக்கு

  15. வே.நடனசபாபதி said...

    ஆனால் பெரும்பான்மையினர் தேசப்பிதா காந்தியை ‘பார்த்ததும்’ ஆட்டுமந்தையைப் போல் ஒரு பக்கம் சாய்ந்துவிடுகிறார்களே என் செய்ய!//

    இங்க மட்டும் இல்லீங்க. அமெரிக்காவிலும் கூட அப்படித்தான். வாக்களிக்கும் படித்த அமெரிக்கர்களின் சதவிகிதம் கீழே விழுந்துக்கொண்டிருக்க படிப்பறிவற்ற பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அமெரிக்கர்களின் வாக்குகள்தான் நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கிறதாம். ஒபாமா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கே இதுதான் காரணமாம்! அதற்கு அவர் அளித்த 'அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவச காப்பீடு' திட்டம் ஒரு பரிசாம். இது கறுப்பின அமெரிக்கரகளுக்குத்தான் அதிகம் பயனை அளிக்குமாம். அதை சகித்துக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள் செய்த தகராறால்தான் அமெரிக்க கடன் பட்ஜெட்டை பாசாக்காமல் அரசாங்கத்தை முடங்கச் செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
  16. PM
    தருமி said...

    மச்சானுக்கும் மாப்பிள்ளைக்கும் நடுவில இப்படிசிண்டு முடிஞ்சா எப்படிங்க...?//

    அது இல்லீங்க நம்ம நோக்கம்! அது நாரதர் செய்யிற வேலை :)

    //எந்த கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல், ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு.//

    Arvind Kejriwal நம்ம ஏரியாவில நிப்பாரா??!!//

    நீங்க வேற சார். அவர் மட்டும் ஒழுங்கா என்ன? அவர் மேலயும்தான் நிறைய குற்றச்சாட்டு எழுந்து அதனாலதான ஏற்கனவே இருந்த கூட்டத்துலருந்து வெளியேத்துனாங்க.... அவர் முதல் தில்லியில ஜெயிக்கட்டும் அப்புறம் பாக்கலாம். அதுலயே நம்பிக்கையில்லாமதான எங்க கட்சி தோத்தா மக்களே தோத்தா மாதிரின்னு இப்பவே அறிக்கை விடறாரு!!

    பதிலளிநீக்கு
  17. 26 PM
    தி.தமிழ் இளங்கோ said...

    .பெரும்பாலும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து கடைசிநேரத்தில் தோன்றும் மனசாட்சி சொல்படிதான் ஓட்டு போடுவோம். ஊழல் அது இது என்பதெல்லாம் சும்மா!//

    அதாவது ஊழல்னு சொல்றதையெல்லாம் நாம கண்டுக்கக் கூடாதுன்னு சொல்றீங்க.

    நாட்டுக்கு நல்லது செஞ்சா சரிதான்னுதான் பாக்கணும்.

    அதுவும் ஒருவகையில சரிதான்.

    பதிலளிநீக்கு

  18. s suresh said...
    உண்மைதான்! நானும் 49 ஒ விற்குதான் போடலாம் என்று நினைக்கிறேன்! நல்ல பகிர்வு! நன்றி!//

    இந்த தேர்தலுக்கு இதுதான் சரியான முடிவு...

    பதிலளிநீக்கு
  19. a piece of a long mail that i received ...

    //Dear Rahul, to refresh your memory, you were arrested/detained by the FBI the BOSTON Airport in September 2001. You were carrying with you $ 1,60,000 in Cash. You couldn't explain why you were carrying so much Cash. (Incidentally He was with his Columbian girlfriend Veronique Cartelli, ALLEGEDLY, the Daughter of Drug Mafia. 9 HOURS he was kept at the Airport. Later then freed on the intervention of the then Prime Minister Mr. Vajpayee.//

    என்னென்னமோ நடக்குது இந்த உலகத்திலே ...!

    பதிலளிநீக்கு
  20. தருமி said...
    a piece of a long mail that i received ...

    //Dear Rahul, to refresh your memory, you were arrested/detained by the FBI the BOSTON Airport in September 2001. You were carrying with you $ 1,60,000 in Cash. You couldn't explain why you were carrying so much Cash. (Incidentally He was with his Columbian girlfriend Veronique Cartelli, ALLEGEDLY, the Daughter of Drug Mafia. 9 HOURS he was kept at the Airport. Later then freed on the intervention of the then Prime Minister Mr. Vajpayee.//

    என்னென்னமோ நடக்குது இந்த உலகத்திலே ...!//

    இந்த லெட்டர் புதுசு இல்ல சார். நா இத ஒரு வருசத்துக்கு முன்னாலயே படிச்சிருக்கேன். இது disinformationனு ignore பண்ணிட்டேன். இந்த மாதிரி மோடிய பத்தியும் எழுதலாம், அத்வானிய பத்தியும் ஏன் நம்ம திராவிட தலைவர்ங்கன்னு சொல்றமே அவங்கள பத்தியும் எழுதலாம்.. விட்டுத்தள்ளுங்க. இதையெல்லாம் பாமரன் படிக்க மாட்டானே? அவங்கதான நம்ம நாட்டின் தலைவிதியை முடிவு செய்றவங்க!!

    பதிலளிநீக்கு
  21. ஒருவர் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டுமென்றால் ஏராளமாகச் செலவு செய்ய வேண்டும்.செலவு செய்த பணத்தை திரும்பப்பெற நெறிமுறைகள் காற்றில் விடப் படுகின்றன. இம்மாதிரி சூழலில் அரசியல் கட்சியின் பலமில்லாமல் நல்லவனாகத் தனியே நின்று வெற்றி பெறுவது நடக்க முடியாதது. இந்நிலையில் ஒரு சாதாரண வாக்காளன் எந்தக் கட்சியின் செயல்பாடுகள் நலம் விளைக்குமோ அந்தக் கட்சி வேட்பாளருக்கே ஓட்டுப் போடுவான். கூட்டணி ஆட்சியில் பலவிதமான compromise கள் செய்துதான் தீரவேண்டி இருக்கிறது. ஆகவே சாதாரணன் பொதுவாக the lesser evil ஐயே தேர்வு செய்கிறான். நலத்திட்டங்கள் பட்டியல் இட்டுப் பார்க்கவேண்டும். ராஹுல் பிரதமராவாரா இல்லையா என்பது காங்கிரஸ் பதவிக்கு வருகிறதா என்பதைப் பொறுத்தே ஆகும்.

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா9:59 PM

    \\
    வட இந்தியாவில் எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம். தென்னிந்தியாவில் திராவிட கட்சிகள், தெலுங்கு தேசம். கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஊழலுக்கு பேர்பெற்றவைகள்.
    \\
    இந்த சொற்றொடர் முதல் முறை படிக்கும் போது எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம். தென்னிந்தியாவில் திராவிட கட்சிகள், தெலுங்கு தேசம் ஆகியவை ஊழல் செய்யவில்லை என்று நீங்கள் சொல்வது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.


    \\நன்றிங்க. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லாமல் போனதால் வந்த குழப்பங்களைப் பார்த்த பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது. கொள்கைகளில் எவ்வித கருத்தொற்றுமையும் இல்லாத கட்சிகள் இணைந்து பிரச்சாரம் வேண்டுமானால் செய்யலாம்... ஆனால் நாட்டை நிர்வகிக்க முடியவே முடியாது என்பதைத்தான் கண்டுணர்ந்தோமே?\\

    நாட்டை நிருவகிக்க கூட்டணி கட்சிகள் தடையாக இருக்கவில்லையே? சிபிஐ கேசை நீக்கினால் எந்த தவறான முடிவு என்றாலும் சப்பை கட்டு கட்டி அதற்கு ஆதரவு தெரிவித்தார்களே. சிபிஐ கேசே அவர்களை மடக்கத்தானே. என்ன, ஒரே கட்சி ஆட்சி என்றால் காங்கிரசு மட்டுமே கொள்ளை அடித்திருக்க முடியும் இப்போ மற்றவர்களும் அடித்தார்கள்.

    பொதுவுடைமைவாதிகள் மறைமுகமாக காங்கிரசையும் பாசகவையும் ஆதரிப்பவர்கள். ஊழலில் ஊரிய எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம், அதிமுக, திமுக, தெலுங்கு தேசத்தை சில தொகுதிகளுக்காக கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள், இவர்கள் ஆதரவுபெற்ற கட்சிகள் தேர்தலுக்கு பின் காங்கிரசையும் பாசகவையும் ஆதரிப்பார்கள்.

    ஒபாமா வெற்றி பெற்றதற்கு காரணம் குடியரசு கட்சியினர் கண்மூடித்தனமாக குடியேற்றத்தை குடியேறியவர்களை (எசுப்பானிய மொழி பேசுபவர்கள் என்று படிக்கவும்) எதிர்த்ததும், கற்பழிப்பு நடைபெற்றாலும் பெண்கள் கருக்கலைக்கக்கூடாது என்றதும் முதன்மையானது. கறுப்பின அமெரிக்கர்கள் வாக்கு ஒபாமா இல்லையென்றாலும் இலவச காப்பீடு இல்லையென்றாலும் குடியரசு கட்சிக்கு கிடைத்திருக்காது. ஒபாமா கறுப்பர் என்பதால் அவருக்கு அவர்களின் வாக்கு அதிகமாக இருந்தது. (வழக்கமாக வாக்கு செலுத்தாதவர்களும் செலுத்தினர்.) ஆனால் துருப்பு சீட்டு எசுப்பானிய மொழி பேசுபவர்கள். இலவச காப்பீடு காரணமாக பெருவாரியான குடியரசு கட்சியினர் வாக்கு சாவடிக்கு வந்தனர், இதனால் அதிகம் பயன் பெற்றது குடியரசு கட்சியினர் .

    -- குறும்பன்

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா10:02 PM

    \\
    வட இந்தியாவில் எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம். தென்னிந்தியாவில் திராவிட கட்சிகள், தெலுங்கு தேசம். கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஊழலுக்கு பேர்பெற்றவைகள்.
    \\
    இந்த சொற்றொடர் முதல் முறை படிக்கும் போது எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம். தென்னிந்தியாவில் திராவிட கட்சிகள், தெலுங்கு தேசம் ஆகியவை ஊழல் செய்யவில்லை என்று நீங்கள் சொல்வது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது.


    \\நன்றிங்க. கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லாமல் போனதால் வந்த குழப்பங்களைப் பார்த்த பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது. கொள்கைகளில் எவ்வித கருத்தொற்றுமையும் இல்லாத கட்சிகள் இணைந்து பிரச்சாரம் வேண்டுமானால் செய்யலாம்... ஆனால் நாட்டை நிர்வகிக்க முடியவே முடியாது என்பதைத்தான் கண்டுணர்ந்தோமே?\\

    நாட்டை நிருவகிக்க கூட்டணி கட்சிகள் தடையாக இருக்கவில்லையே? சிபிஐ கேசை நீக்கினால் எந்த தவறான முடிவு என்றாலும் சப்பை கட்டு கட்டி அதற்கு ஆதரவு தெரிவித்தார்களே. சிபிஐ கேசே அவர்களை மடக்கத்தானே. என்ன, ஒரே கட்சி ஆட்சி என்றால் காங்கிரசு மட்டுமே கொள்ளை அடித்திருக்க முடியும் இப்போ மற்றவர்களும் அடித்தார்கள்.

    பொதுவுடைமைவாதிகள் மறைமுகமாக காங்கிரசையும் பாசகவையும் ஆதரிப்பவர்கள். ஊழலில் ஊரிய எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம், அதிமுக, திமுக, தெலுங்கு தேசத்தை சில தொகுதிகளுக்காக கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள், இவர்கள் ஆதரவுபெற்ற கட்சிகள் தேர்தலுக்கு பின் காங்கிரசையும் பாசகவையும் ஆதரிப்பார்கள்.

    ஒபாமா வெற்றி பெற்றதற்கு காரணம் குடியரசு கட்சியினர் கண்மூடித்தனமாக குடியேற்றத்தை குடியேறியவர்களை (எசுப்பானிய மொழி பேசுபவர்கள் என்று படிக்கவும்) எதிர்த்ததும், கற்பழிப்பு நடைபெற்றாலும் பெண்கள் கருக்கலைக்கக்கூடாது என்றதும் முதன்மையானது. கறுப்பின அமெரிக்கர்கள் வாக்கு ஒபாமா இல்லையென்றாலும் இலவச காப்பீடு இல்லையென்றாலும் குடியரசு கட்சிக்கு கிடைத்திருக்காது. ஒபாமா கறுப்பர் என்பதால் அவருக்கு அவர்களின் வாக்கு அதிகமாக இருந்தது. (வழக்கமாக வாக்கு செலுத்தாதவர்களும் செலுத்தினர்.) ஆனால் துருப்பு சீட்டு எசுப்பானிய மொழி பேசுபவர்கள். இலவச காப்பீடு காரணமாக பெருவாரியான குடியரசு கட்சியினர் வாக்கு சாவடிக்கு வந்தனர், இதனால் அதிகம் பயன் பெற்றது குடியரசு கட்சியினர் .

    -- குறும்பன்

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா11:24 PM

    //Arvind Kejriwal நம்ம ஏரியாவில நிப்பாரா??!!
    //

    அர்விந்தின் 'ஆம் ஆத்மி பார்ட்டி' டிசம்பரில் நடக்கும் தில்லி மாநிலத் தேர்தலில் காங்கிரசுக்கும், பாஜகாவுக்கும் கடும் சவாலைத் தரும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

    //நீங்க வேற சார். அவர் மட்டும் ஒழுங்கா என்ன? அவர் மேலயும்தான் நிறைய குற்றச்சாட்டு எழுந்து அதனாலதான ஏற்கனவே இருந்த கூட்டத்துலருந்து வெளியேத்துனாங்க.... //

    இது பெரியார்/அண்ணா போல 'தேர்தல் பாதை திருடர் பாதை' என்ற கருத்து வேறுபாட்டில் அல்லவா பிரிந்தார்.

    மேலும் ஹரியானாவில் அசோக் கேம்கா என்ற IAS அரசு அதிகாரி மருமகன் ஊழலை வெளிக்கொண்டு வந்ததால் அவர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    //உண்மைதான்! நானும் 49 ஒ விற்குதான் போடலாம் என்று நினைக்கிறேன்! நல்ல பகிர்வு!//

    49O பயன்படுத்த விரும்பினால் பூத் சிலிப் சரிபார்த்து, விரலில் மை வைத்த பின், நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் 49O பயன்படுத்துவதாகத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தகுந்த படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பிவிட்டு குறித்துக் கொள்வார். இது அனைத்தும் பூத் ஏஜென்டுகள் முன்னாலே நடைபெறும். இது ரகசிய வாக்களிப்பு முறையில் ஒரு பலவீனம்.

    இத்தேர்தலில் (இருந்து) NOTA (None of the above) என்ற ஒரு பொத்தானும் வாக்கியந்திரத்தில் இருக்கும். உங்களுக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால் அந்த பொத்தானை அழுத்தி வைக்கலாம். இது ரகசியமாக யாருக்கும் தெரியாமல் இருக்கும்.

    பதிலளிநீக்கு