31 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 63

மனைவி கோக்கிலாவையும் மகள் காஞ்சனாவையும் பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டு மீண்டும் தன் அலுவலகத்திற்கு  கிளம்பினான் ராஜசேகர். மாதவி கொலை வழக்கில் அடுத்த கட்ட விசாரணை மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவதற்கு அதிக நாள் ஆக வாய்ப்பில்லை என்று நினைத்தான். வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவர் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து அவர் முன் வாக்குமூலத்தை ஏற்கனவே அளித்திருப்பதாலும் அதில் அவர் சம்மந்தப்பட்ட அரசு வழக்கறிஞரும் விசாரணை செய்திருந்த காவல்துறை ஆய்வாளரும் தன்னை பொய் சாட்சி சொல்ல நிர்பந்திப்பதாக கூறியிருந்ததாலும் எந்த ஒரு நீதிபதியும் மேலும் தாமதியாமல் அடுத்த கட்ட நீதிமன்ற  விசாரணைக்கு உத்தரவிடாமல் இருக்க மாட்டார் என்று அவனுக்கு தோன்றியது.

இதே சிந்தனையில் வாகனத்தில் விரைவாக செலுத்தி அலுவலகத்தை அடைந்த ராஜசேகர் அலுவலகம் பூட்டியிருப்பதைக் கண்டான்.  அன்றும் அதற்கடுத்த நாளும் வரவிருந்த வழக்குகளில் பெரிதாக தயாரிக்க ஏதும் இல்லை. ஆகவே அன்று நாகுவை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறியிருந்தான். வசந்த் ஏற்கனவே இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தான். 

மணியை பார்த்தான். சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் அவன் ஆஜராக இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. 

அதுவரை மாதவியின் கொலை வழக்கில் எதிர் வரும் திங்களோ அல்லது அதற்கு அடுத்த தினமோ அரசுதரப்பில் சாட்சியல் சொல்லவிருந்த இரு சாட்சிகளையும் எப்படியெல்லாம் விசாரிக்கலாம் என்று குறிப்பெடுக்கலாம் என்ற எண்ணத்துடந்தான் அலுவலகம் வந்திருந்தான். இந்த சமயத்தில் வசந்தும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

அலுவலகத்தை திறந்து ஏசியையும் மின்விசிறியையும் ஆன் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கண்களை மூடினான். அதிகம் போனால் இன்னும் ஒரு வாரம். வழக்கு விசாரணையில் ஒரு முடிவு தெரிந்துவிடும். PW1, PW2 விசாரணக்குப் பிறகும் வழக்கை தொடர செஷன்ஸ் நீதிபதி அனுமதிப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை போலீசே கூட வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அதற்குள் வெளியில் இருக்கும் முருகேசனை காவல்துறை பிடித்துவிட வேண்டும். 

முருகேசனின் நினைவு வந்ததுமே சட்டென்று நினைத்துக்கொண்டவனாய் தன் செல்ஃபோனை எடுத்து ராகவனின் எண்ணை தேடிப்பிடித்து அழைத்தான். எதிர்முனையில் ரிங் போய்க்கொண்டே இருக்க இருக்கையில் நிலைகொள்ளாமல் தவித்தான். ச்சே... இவரையும் வார்ன் பண்ணாம விட்டுட்டேனே? 

இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தான். அப்போதும் பதிலில்லை. முருகேசன் ஒருவேளை இவர்களை கடத்தியிருப்பானோ.....போலீசில் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சம் அவனை எதையும் செய்ய தூண்டும் என்று நினைத்தான். ஆகவேதான் முதலில் தன் மனைவியையும் மகளையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டான். அவர்களுக்கு இனி பெரிதாக ஏதும் ஆபத்து வர வாய்ப்பில்லை. அதுபோன்றே முருகேசனின் அடுத்த எதிரியான சீனிவாசனையும் எச்சரித்தாயிற்று..... மருத்துவமனையில் இருக்கும் மல்லிகாவை அவன் நெருங்க வாய்ப்பில்லை.... மாதவியின் கொலை வழக்கில் அவனுக்கு உடந்தையாக இருந்த ராமராஜனை தீர்த்துக்கட்டிய பிறகு அவனை அதில் சிக்க வைக்கக் கூடியவர்கள் இருவர் மட்டுமே.... அதில் ஒருவன் நீதிமன்றத்தின் பாதுகாப்பில்.... மீதமிருந்தது மிஸஸ் ராகவன் மட்டுமே......

அவனுடைய மேசை மீதிருந்த செல்ஃபோன் அலறிய சத்தத்தில் நினைவுகளிலிருந்து மீண்ட ராஜசேகர் திரையைப் பார்த்தான், ராகவனின் செல்நம்பர். எடுத்து பதற்றத்துடன் 'ஹலோ' என்றான். 'என்ன சார் ரெண்டு தரம் கூப்ட்டேன்.... ஏன் எடுக்கலை?'

'அவர் எப்படி சார் எடுப்பாரு?' என்ற குரலைக் கேட்டதும் ஒரு கணம் யார் என்று பிடிபடாமல் திகைத்தான். எங்கோ கேட்ட குரல்போல் இருந்தது... ஆனால்..... ஆனால்..... 

'என்னா சார் ... குரல் அதுக்குள்ள மறந்துபோச்சா?' என்று எதிர்முனையில் முருகேசன் சிரித்தான்.....

அடப்பாவி என்றான் ராஜசேகர் தனக்குள். 'நீ எப்படி இந்த ஃபோன்ல?' என்றான்.

'இந்த ஃபோன் மட்டுமில்ல சார்...... ராகவன் சார்.... அவரோட வய்ஃப் எல்லாருமே இங்கதான்..... ஒரேயொரு நிமிஷத்துல  உங்கக்கிட்ட பேரம் பேச செமையா இருந்த சான்ஸ கோட்டை  விட்டுட்டேனே அதுக்கப்புறம் வந்த ஐடியாதான் இது....' 

முருகேசன் என்ன சொல்ல வருகிறான் என்பது ராஜசேகருக்கு புரிந்தது. இருந்தாலும், 'என்ன சொல்ற?' என்றான்.

'ஐ! ஒன்னும் புரியாத மாதிரி கேக்கறீங்க? உங்க சீமந்த புத்திரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெத்து வச்சிருக்கீங்களே..... அத தூக்கலாம்னுதான் ஸ்கூலான்ட வந்தேன்.... ஒரேயொரு நிமிஷத்துல மிஸ் பண்ணிட்டேன்! சரின்னுட்டு நேரா இங்க வந்தேன்.... நீங்க அடுத்து இவங்களதான் கூப்டுவீங்கன்னு தெரியும்... ஏன்னா அந்த குமார் பையனத்தான் ரெஸ்க்யூ பண்ணி கோர்ட்ல சரண்டர் பண்ண வச்சிட்டிங்களே.....?'

ராஜசேகர் என்ன செய்வதென சிந்தித்தான். இவனிடம் லைனில் இருக்கும்போதே போலீசுக்கு தகவல் சொன்னால் அவர்கள் இந்த ஃபோனுக்கு அருகில் இருக்கும் டவர் எது என்று கண்டுபிடித்துவிட முடியுமே.... மேசை மீதிருந்த தன் BSNL தொலைபேசியை பார்த்தான். ஆனால் முருகேசனுடன் பேசிக்கொண்டே செய்வது சிரமம். மேலும் தன்ராஜின் செல்ஃபோன் எண் இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் மொபைலில்தான் உள்ளது.... என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என்று அதையே மனதுக்குள் அசைபோட்டான். சட்டென்று ஒரு உத்தி மனதுக்குள் எழுந்தது..... அதுதான் சரி என்று முடிவு செய்தான்.

'இங்க பார் முருகேசா.... என் செல்ஃபோன்ல சார்ஜ் போகப்போவுது.... ஒரு அஞ்சி நிமிஷம் இரு..... ஷெல்ஃப்ல இருக்கற சார்ஜர எடுத்துக்கிட்டு வரேன்...... இல்லன்னா டிஸ்கனெக்ட் பண்ணிட்டு கூப்டு.... இல்லையா நானே அஞ்சி நிமிஷத்துல கூப்டறேன்....'

எதிர்முனையில் முருகேசன் சிரித்தான். 'ஐ.... என்ன விளையாடறிங்களா? என் கிட்ட பேசிக்கிட்டிருக்கறப்பவே அந்த எஸ்.ஐக்கு ஃபோன் பண்ணி சொன்னா இந்த கால ட்ரேஸ் பண்ணி கண்டுபிடிச்சிருவார்.... அதான?'

நாம தடுக்குல பாஞ்சா இவன் கோலத்துக்குள்ள பாய்வான் போலருக்கே.... படிச்ச கிரிமினலாச்சே.....'சேச்சே.... அதெல்லாம் இல்லை... ராகவனும் அவரோட வய்ஃபும் உன் கூட இருக்கறப்ப அந்த மாதிரி விளையாட்டெல்லாம் விளையாடுவேனா.... உண்மையிலேயே சார்ஜ் போகப்போவுது.... எப்பவேணும்னாலும் டிஸ்கனெக்ட் ஆயிரும் சொல்லிட்டேன்...' என்றவாறே  இணைப்பை துண்டித்துவிட்டு அடுத்த நொடியே செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். அதன் பிறகுதான் தன்ராஜின் செல்ஃபோன் எண்ணை எடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் ஆன் செய்தால் ஆபத்து என்று நினைத்தவன் எழுந்து மாதவியின் கொலைவழக்கு கோப்பை எடுத்து அதன் மேல் அட்டையில் குறித்து வைத்திருந்த தொலைபேசி எண்களில் தன்ராஜ் மற்றும் ராகவனின் செல்ஃபோன் எண்கள் உள்ளனவா என்று பார்த்தான். இருந்தன. 

BSNL தொலைபேசியை எடுத்து சுழற்றினான். அடுத்த நொடியே எதிர்முனையில் தன்ராஜ்  எடுக்க ராகவனின் தொலைபேசி எண்ணை கொடுத்து அதிலிருந்து முருகேசன் தன்னுடன் பேசியதை கூறினான்... 'சார்.... நா இந்த போனையும் டிஸ்கனெக்ட் பண்ணாம ரீசீவர டேபிள் மேல வச்சிட்டு  செல்ஃபோன்லருந்து ராகவன் நம்பர கூப்ட போறேன்..... நாங்க பேசறத இந்த ஃபோன் வழியா கேளுங்க..... If possible ரெக்கார்டும் பண்ணிக்கலாம்..... அவனோட லொக்கேஷனையும் டிரேஸ் பண்ணப் பாருங்க.....' என்று கூறிவிட்டு தன் செல்ஃபோனை ஆன் செய்தான்.  

அடுத்த நொடியே அது ஒலிக்க திரையைப் பார்த்தான்..... ராகவனுடைய செல்ஃபோன் எண் இல்லாமல் புதியதொரு எண் தெரிந்தது. அது செல்ஃபோனும் அல்ல என்பதும் தெரிந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவாறே எடுத்து, 'ஹலோ' என்றான் தயக்கத்துடன்.

'என்ன சார் முழிக்கிறீங்களா? அதே ஃபோன்லருந்து மறுபடியும் கூப்ட நா என்ன முட்டாளா.....?' 

ராஜசேகர் சுதாரித்துக்கொண்டு செல்ஃபோன் ஸ்பீக்கரை ஆன் செய்து மேசை மீதிருந்த ஒலிவாங்கியின் அருகில் வைத்தான். 'சரி நீ பெரிய அறிவாளிதான் ஒத்துக்கறேன்...' என்றான்.... ஆனால் இந்த எண்ணை தன்ராஜுக்கு தெரிவிக்க முடியாது போலிருக்கே என்று ராஜசேஜர் நொந்துப்போனான்..... சட்டென்று ஒரு யோசனை உதிக்க முருகேசனுடன் பேசியவாறே தன்னுடைய லேப்டாப்பை திறந்து இணையத் தொடர்பை ஏற்படுத்தினான். பிறகு டெஸ்டாக்ப்பில் இருந்த 'வைபர்'  (viber) மென்பொருள் சுட்டியை சொடுக்கி கான்டாக்ட்ஸில் தன்ராஜின் மொபைல் எண்ணை சேர்த்தான். பிறகு சாட் பாக்சில் (chat box) முருகேசன் அழைத்த BSNL LL எண்ணை டைப் செய்து..... இதிலிருந்துதான் முருகேசன் என்னுடன் பேசுகிறான்... நான் பேச்சை தொடர்கிறேன்... நீங்கள் லொக்கேஷனை கண்டுபிடித்து அங்கு செல்லுங்கள் என்று அடித்துவிட்டு காத்திருந்தான். அடுத்த சில நொடிகளிலேயே ஒக்கே என்று பதில் வந்தது. மகிழ்ச்சியுடன் 'ஒனக்கு இப்ப என்ன வேணும்... அதச் சொல்லு.' என்றான் முருகேசனிடம். 

'இது மேட்டர்' என்று சிரித்தான் முருகேசன். 'சொல்றேன்.... கேஸ் அடுத்த வாட்டி ஹியரிங் வர்றப்போ நா இந்தம்மாவ கோர்ட்டுக்கு கொண்டாரேன்..... போலீஸ் அந்த குமார கொண்டாந்துரும்.....நா சொல்லிக்குடுத்துருக்கறா மாதிரிதான் அவங்க ரெண்டு பேரும் சாட்சி சொல்லணும்..... அவங்கள நீங்க எந்த கிராசும் பண்ணக் கூடாது....'

முருகேசன் இதைத்தான் கேட்பான் என்பதை ராஜசேகர் ஏற்கனவே ஊகித்து வைத்திருந்தான். 'சரி... அப்புறம்?'

'மாதவி வீட்லருந்து நீங்க சுருட்ன கேஷ், நகை எல்லாத்தையும் என்னான்ட குடுத்துறணும்.'

அது வங்கி லாக்கரில் வைத்துவிட்டதாக சீனிவாசன் கூறியது நினைவுக்கு வந்தது. அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். சரி என்று சொல்லி வைப்போம். 'சரி... இதானா, இன்னும் வேற இருக்கா?'

'நா பேராசைல்லாம் படமாட்டேன் சார்... இது போதும்.... ஆனா ஒரு கண்டிஷன்.'

'என்ன?'

'இதெல்லாம் முடியற வரைக்கும் ராகவன் என் கஸ்டடியிலதான்...... இதுல ஏதாவது ஒன்னு நடக்கலன்னா கூட..... ஒங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.'

ராஜசேகர் சிரித்தான். இடுக்கண் வருங்கால் நகுக என்று சில தினங்களுக்கு முன்பு வசந்த் அடித்த ஜோக் நினைவுக்கு வந்தது. 'அதான் ஏற்கனவே ரெண்டு மர்டர் பண்ணிருக்கியே... மூனாவது பண்றது ஒனக்கு பெரிய விஷயமா?'

'என்னது? நா மர்டர் பண்ணனா? யார் சொன்னது? நம்ம தொழில் ஃபோர்ஜரியும் கையாடலும்தான் சார்.... மர்டர்லாம் நமக்கு சரி வராது!'

'இத என்னெ நம்பச் சொல்றே?'

'பின்னே? மாதவி கொலைய செஞ்சது நாந்தான்னுதான் அந்த  ராமராஜனே ஒத்துக்கிட்டான? அவன் பாடிலருந்து அவனோட சூயிசைட் நோட் போலீஸ் எடுத்துருக்குமே?' 

என்னது? ராஜசேகரும் CCB செல் அலுவலகத்தில் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தன்ராஜும் ஒருசேர அதிர்ந்தனர். 

'என்னய்யா சொல்ற? ராமராஜன் சூயிசைட் பண்ணிக்கிட்டாரா?'

'பின்னே? அந்த மாதவி இவனுக்கு கிடைக்காம போயிருவாளோங்கற ஆத்திரத்துல அவள கொன்னான். அதுக்கப்புறம்  ஏன்டா கொன்னோம்னு புலம்பிக்கிட்டே இருந்தான்.... போலீஸ் புடிச்சா தூக்குல போட்ருவாங்களேன்னு பயந்துக்கிட்டு கழுத்த அறுத்துக்கிட்டான்.....- ராஜசேகர் முருகேசனுடன் பேசியவாறே..... 'என்ன மிஸ்டர் தன்ராஜ்.... Is it true? Did you find any suicide note?' என்று ராஜசேகர் வைபரில் அடித்தான். அடுத்த நொடியே இல்லை என்று பதில் வந்தது. அதை தொடர்ந்து 'His location identified. U keep tlkng sndng a pol party from SP off..' என்று பதில் வந்தது -  கழுத்த அறுத்துக்கறதுக்கு முன்னால எனக்கு முன்னாலெயே மாதவிய நாந்தான் கொன்னேன்னு எழுதி பாக்கெட்ல வச்சான்..... சரி சும்மாதான் சொல்றான்னு நினைச்சி நா பாத்ரூமுக்கு போய்ட்டு வர்றதுக்குள்ள கழுத்த அறுத்துக்கிட்டான்.... நம்ம மேல கேஸ் வந்துருமேன்னு படாதபாடு பட்டு பாடிய ட்ரிப்ளிக்கேன்  பிரிட்ஜ் கீழ கொண்டு போட்டேன்.... போலீசுக்கு அவன் எழுதுன லெட்டர் கிடைச்சிருக்கணுமே.... இல்லன்னா அவனோட பேன்ட் பாக்கட்ட பாக்க சொல்லுங்க சார்....'

தொடரும்

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

(தமிழ்மணம் இணைத்து ஓட்டும் அளித்து விட்டேன்... நன்றி...)

அபயாஅருணா said...

நெடுங்கதை எழுதும் திறமை எல்லோருக்கும்
இருப்பதில்லை .
தொடருங்கள் .தீபாவளி வாழ்த்துக்கள்

2008rupan said...

வணக்கம்

கதை அருமையாக உள்ளது தொடருங்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...

புதிய தொழில் நுட்பங்கள் இக்கட்டான நேரங்களில் எவ்வாறு கைகொடுக்கின்றன என்பதை வெகு நேர்த்தியாக கதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நிச்சயம் முருகேசன் தீபாவளியை சிறையில்தான் ‘கொண்டாடுவான்’ என நினைக்கிறேன். காத்திருக்கிறேன் அவனின் கைது படலம் பற்றி அறிய!

தருமி said...

//டெஸ்டாக்ப்பில் இருந்த 'வைபர்' (viber) மென்பொருள் சுட்டியை சொடுக்கி ...//

என்னென்னமோல்லாம் சொல்றீங்களே ... சரி..சரி.. மயிர் இருக்கிற மவராசி ...

சென்னை பித்தன் said...

இவ்வளவு விவரங்களுடன் சுவாரஸ்யமாக எப்படி எழுத முடிகிறது?அதிசயிக்கிறேன்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எதிர் பாரா திருப்பங்கள்
தொடரட்டும்

அ. பாண்டியன் said...

இன்றைய தொழில்நுட்பம் பற்றிய தங்கள் அறிவு வியக்க வைக்கிறது. நெடுந்தொடர் எழுதுவது அவ்வளவு எளிதல்ல. தங்களின் ஒப்பற்ற பணிக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகளும் வாழ்த்துக்களும்...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

டிபிஆர்.ஜோசப் said...

திண்டுக்கல் தனபாலன் said...
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

(தமிழ்மணம் இணைத்து ஓட்டும் அளித்து விட்டேன்... நன்றி...//

மிக்க நன்றிங்க. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...


அபயாஅருணா said...
நெடுங்கதை எழுதும் திறமை எல்லோருக்கும்
இருப்பதில்லை .
தொடருங்கள் .தீபாவளி வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

2008rupan said...
வணக்கம்

கதை அருமையாக உள்ளது தொடருங்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

திய தொழில் நுட்பங்கள் இக்கட்டான நேரங்களில் எவ்வாறு கைகொடுக்கின்றன என்பதை வெகு நேர்த்தியாக கதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நிச்சயம் முருகேசன் தீபாவளியை சிறையில்தான் ‘கொண்டாடுவான்’ என நினைக்கிறேன். காத்திருக்கிறேன் அவனின் கைது படலம் பற்றி அறிய!//

மிக்க நன்றிங்க. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

தருமி said...
//டெஸ்டாக்ப்பில் இருந்த 'வைபர்' (viber) மென்பொருள் சுட்டியை சொடுக்கி ...//

என்னென்னமோல்லாம் சொல்றீங்களே ... சரி..சரி.. மயிர் இருக்கிற மவராசி ...//

எல்லாம் நம்ம பசங்க சொல்லிக்குடுத்தது. ரெண்டு பேருமே வெளிநாட்டுல இருக்கறதால அதிக செலவில்லாம பேசறதுக்கு இந்த வைபர், வாட்ஸப் போன்ற chat software ரொம்பவே யூஸ்ஃபுல்லாருக்கு.

டிபிஆர்.ஜோசப் said...

சென்னை பித்தன் said...
இவ்வளவு விவரங்களுடன் சுவாரஸ்யமாக எப்படி எழுத முடிகிறது?அதிசயிக்கிறேன்!//

மிக்க நன்றிங்க. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
எதிர் பாரா திருப்பங்கள்
தொடரட்டும்//

மிக்க நன்றிங்க. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

அ. பாண்டியன் said...
இன்றைய தொழில்நுட்பம் பற்றிய தங்கள் அறிவு வியக்க வைக்கிறது. நெடுந்தொடர் எழுதுவது அவ்வளவு எளிதல்ல. தங்களின் ஒப்பற்ற பணிக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகளும் வாழ்த்துக்களும்...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றிங்க. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.