30 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 62


'மிசஸ் ராகவன பத்தி சொல்றேன்.... குமார் எஸ்கேப்பாய்ட்டானு தெரிஞ்சதும் அந்த லேடிய கிட்நேப் பண்ண முருகேசன் ட்ரை பண்ணா?' என்றான் ராஜசேகர்.

'அத நா பாத்துக்கறேன்....' என்ற தன்ராஜ் தன் செல்ஃபோனை எடுத்து டயல் செய்ய 'சரி சார்.... பாக்கலாம் என்றவாறு ராஜசேகர் அறையிலிருந்து வெளியேறினான்.

ராஜசேகர் வெளியேறுவதை பார்த்தவாறே நின்றிருந்த தன்ராஜ் எதிர்முனையில் எடுக்கப்பட்டதும்,' சிசிபி தான? நா E1 எஸ்.ஐ தன்ராஜ் பேசறேன்.... நா அங்கதான் வந்துக்கிட்டிருக்கேன்.... ஒரு கேஸ் விஷயமா.' என்றார்.

'...............'

'ஆமா இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷத்துல அங்க வந்துருவேன்.... அதுக்கு முன்னால நா இப்ப சொல்ற நம்பர ட்ரேஸ் பண்ண முடியுமான்னு பாத்து வைங்க.' என்ற தன்ராஜ் சற்று முன்னர் குறித்துவைத்திருந்த முருகேசனின் செல்ஃபோன் எண்ணை படித்தார். அதை சொல்லி முடித்ததும் கையிலிருந்த ராமராஜன் எண்ணையும் படித்து காட்டினார், 'இதையும் பாத்து வைங்க..... வந்துக்கிட்டே இருக்கேன்.'

இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து ஒரு சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு செல்ஃபோனை எடுத்து தன் காவல் நிலையத்தை அழைத்தார். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், 'யோவ் பெருமாள் சார் ஆஃபீஸ்ல இருக்காரா?' என்றார்.

'..............'

'சரி.... அவர் வந்தா நா சிசிபி வரைக்கும் போயிருக்கேன்னு சொல்லு.... மத்தத நா வந்து சொல்லிக்கறேன்....' என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

********

ராஜசேகர் எஸ்.பி. அலுவலகத்திலிருந்து தன்னுடைய அலுவலகத்திற்கு செல்லாமல் நேரே தன் வீட்டை சென்றடைந்தான். 'நீங்களும் எதுக்கும் கேர்ஃபுல்லா இருங்க சார்.' என்று தன்ராஜ் சற்று முன்னர் அவனை எச்சரித்ததிலிருந்து அதையே நினைத்துக்கொண்டிருந்தான். 

முருகேசனுக்கு அவன் மீது கோபம் இருப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று: அவனை இனி எந்த காரணத்திற்காகவும் தன்னை தேடி வரவேண்டாம் என்று எச்சரித்து அனுப்பியது. அதற்கு தன்னை மாதவியிடம் சிக்க வைத்து ஏற்கனவே தண்டனை அளித்துவிட்டிருந்தான் என்றாலும் அதனால் ஏற்பட்ட கோபம் இன்னும் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவது கோபாலுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராவது... நாம் தவறு செய்திருந்தும் நம்மை இருமுறை தன்னுடைய வாதத்திறமையால் அவற்றிலிருந்து விடுவித்திருந்தவராயிற்றே? அதே திறமையை பயன்படுத்தி இவர் கோபாலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துவிடுவாரோ என்ற நினைப்பால் வரக்கூடிய கோபம். மூன்றாவது ராமராஜனின் வசம் இருந்த குமாரை மீட்டு நீதிமன்றத்தில் சரணடைய வைத்த விஷயமும் முருகேசனுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு... ஆகவே அந்த கோபமும் இருக்கும் என்று நினைத்தான்.

தன்னுடைய நீண்ட நாள் கூட்டாளியான ராமராஜனையே எவ்வித தயக்கமும் இன்றி கொலை செய்யும் அளவுக்கு துணிச்சலுள்ள முருகேசன் தன்னையும் பழிவாங்க முயல்வது சாத்தியமே என்றும் தோன்றியது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக......... இதே கோணத்தில் சிந்தித்தவாறு வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தவனுக்கு சட்டென்று ஏதோ ஒன்று தோன்ற வாகனத்தின் வேகத்தை கூட்டி அடுத்த சில நிமிடங்களில் தன் குடியிருப்பை அடைந்து வாகனத்தை நிறுத்திவிட்டு நாலுகால் பாய்ச்சலில் தன் குடியிருப்பை அடைந்து அழைப்பு மணியை அடித்தான். 

அவன் அடித்த வேகத்தைக் கண்டு பதறிப்போன அவனுடைய மனைவி கோக்கிலா அடுத்த நொடியே கதவைத் திறந்து எதிரில் நின்ற ராஜசேகரைப் பார்த்து, 'என்னங்க.... எதுக்கு இப்படி அடிக்கிறீங்க? யார்றான்னு பயந்தே போய்ட்டேன்...'

எதிரில் நின்ற மனைவியைப் பார்த்ததும் நிம்மதியடைந்த ராஜசேகர் அடுத்த நொடியே, 'ஏய், எத்தன தடவ சொல்லியிருக்கேன்? பீப் ஹோல (peep hole) வழியா யாருன்னு பாக்காம கதவ இப்படி தொறக்காதேன்னு....?' என்று எரிந்து விழுந்தான். 

அவனுடைய கேள்வியின் அர்த்தம் புரியாமல், 'ஏன்... நம்மள தேடி யார் வரப்போறா?' என்றவாறு திரும்பி ஹாலுக்குள் நடந்தவளை தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த ராஜசேகர் உடனே வாசற்கதவைத் தாளிட்டான். 'காஞ்சனா ஸ்கூல்லருந்து எத்தன மணிக்கி வரணும்?'

சமயலறையை நோக்கி நகர்ந்த கோக்கிலா நின்று வியப்புடன் அவனைப் பார்த்தாள். என்னாச்சி இவருக்கு? நேரங்கெட்ட நேரத்துல வந்துட்டு என்னென்னமோ கேட்டுக்கிட்டு நிக்கிறார்?

'என்ன பதில் சொல்லாம நிக்கே?'

'ஏன் கேக்கீங்க?'

'காரணமாத்தான் கேக்கேன்..... எத்தன மணிக்கி வரணும்?'

கோக்கிலா சுவர்க்கடிகாரத்தை பார்த்தாள். மணி பண்ணெண்டு கூட ஆவலையே..... மதியானம் நாலு மணியாவது ஆவும்.'

அவ்வளவு நேரம் ஆகுமா? இதை எப்படி எதிர்கொள்வது? நம் மனதில் இருப்பதை இவளிடம் கூறி இவளையும் தேவையில்லாத கவலைக்கு ஆளாக்கிவிடுவோமோ? ஒருவேளை நாம்தான் தேவையில்லாமல் அச்சம் கொள்கிறோமோ என்றெல்லாம் நினைத்த ராஜசேகர் பரவாயில்லை நம் மனதில் இருப்பதை இவளிடம் கூறிவிடுவோம். 

'இங்க பார்.' என்று துவங்கிய ராஜசேகர் முருகேசனைப் பற்றியும் அவனால் ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றியும் சுருக்கமாகக் கூறிவிட்டு தொடர்ந்தான். 'எதுக்கும் நாம கேர்ஃபுல்லா இருக்கறது நல்லது. இன்னையிலருந்து நா சொல்ற வரைக்கும் தனியா எங்கயும் வெளிய போகாத, நா இல்லாதப்போ யார் பெல்ல அடிச்சாலும் பீப் ஹோல்ல பாக்காம கதவ திறக்கக் கூடாது. உனக்கு சரியா அடையாளம் தெரியாத யாராருந்தாலும் கதவ திறக்காம யார் வேணும்னு கேளு. பதில் வரலைன்னா கதவ திறக்காத. அப்படியும் வந்த ஆள் போகலன்னா சீனிவாசன் நம்பர தரேன். அவருக்கு ஃபோன் பண்ணு. இல்லன்னா மேல் ஃப்ளோர்ல இருக்கற ஆடிட்டர் வீடு..... யாரையாச்சும் கூப்ட்டு விஷயத்த சொல்லு..... இதெல்லாம் இன்னும் நாலஞ்சி நாளைக்கித்தான்......அதுக்குள்ள போலீஸ் அவனெ  பிடிச்சிரும்....'

அவன் பேசி முடிக்கும்வரையிலும் முகத்தில் கலவரத்துடன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்த கோக்கிலா, 'அப்படீன்னா நம்ம காஞ்சனாவுக்கும் ஆபத்து இருக்கா?' என்றாள். 'அவள இப்பவே போயி கூட்டிக்கிட்டு வந்துறலாங்க.'

அதுவும் சரிதான் என்று நினைத்த ராஜசேகர், 'சரி டிரெஸ் மாத்திக்கிட்டு ரெடியாயிரு... நா சீனிவாசனுக்கும் ஃபோன் பண்ணி சொல்லிட்டு பார்க்கிங்ல வெய்ட் பண்றேன்.' என்று கூறிவிட்டு செல்ஃபோனை எடுத்து டயல் செய்தான். 

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'சார்... ஒரு அர்ஜன்ட் மேட்டர்.' என்று தன் மனைவியிடம் கூறியவற்றையே மீண்டும் கூறி முடித்தான். 'எதுக்கும் கேர்ஃபுல்லா இருங்க சார்... என் வய்ஃப் கிட்ட ஒங்க நம்பரும் ஆடிட்டர் நம்பரும் குடுத்துருக்கேன்.... In case அவளோட ஃபோன் வந்தா உடனே போலீசுக்கோ இல்ல எனக்கோ இன்ஃபர்மேஷன் குடுங்க.' என்றவன் தொடர்ந்து, 'நா எஸ்.ஐ. தன்ராஜோட நம்பரையும் குடுக்கேன்... நோட் பண்ணிக்குங்க.' என்று தன் செல்ஃபோனில் இருந்த அவருடைய எண்ணையும் கொடுத்தான். 'நா சொல்லித்தான் கூப்டறேன்னு சொன்னீங்கன்னா உடனே பாசிட்டிவா ரெஸ்பான்ட் பண்ணுவார்.... அப்படி அவர் எடுக்கலன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க... நா பாத்துக்கறேன்....'

'சரி சார்.... ஆனா அவன் அந்த அளவுக்கு போகமாட்டான்னு நினைக்கிறேன்.' என்றார் சீனிவாசன். 

'அப்படி சொல்லிற முடியாது சார்.....' என்று மறுத்தான் ராஜசேகர். 'யார் எப்போ என்ன செய்வாங்கன்னு சொல்ல முடியாது. அத்தோட அவனுக்கு நெருக்கமாயிருந்த ராமராஜனையே கொல்ல துணிஞ்சவன் எதையும் செய்வான்.... அப்புறம் இன்னொரு விஷயம்..... நம்ம செக்கரட்டரிக்கிட்ட சொல்லி நம்ம வாட்ச் மேனையும் விஜிலன்டா இருக்க சொல்லுங்க சார்.... யார் வந்தாலும் சரியா விசாரிக்காம உள்ள விடவேணாம்னு சொல்லி வச்சா நல்லது. என்ன சார்?'

'சரி சார்... இப்பவே சொல்லிடறேன்....'

'தாங்ஸ் சார்....' என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு புறப்பட தயாராக நின்றிருந்த மனைவியுடன் புறப்பட்டு பள்ளியை அடைந்தான். நல்லவேளையாக அவன் சென்றடைந்த போது உணவு இடைவேளை நெருங்கியிருந்தது. வாசல் கேட்டில் நின்றிருந்த வாட்ச்மேனிடம் தன்னையும் மனைவியையும் அறிமுகப்படுத்திக்கொண்டு பள்ளி முதல்வரை காண வேண்டும் என்றான். 'இன்னும் பத்து நிமிஷத்துல லஞ்ச் இன்டர்வெல் விட்ரும் சார்..... லஞ்ச் கொண்டு வந்திருக்கற பேரன்ட்சோட சேந்து நீங்களும் போலாம்.....' 

வேறு வழியின்றி அவனும் கோக்கிலாவும் காத்திருந்தனர். அவனைப் போலவே கேட் முன்பு கையில் உணவு பைகளுடன் காத்திருந்த பெற்றோர்களை கவனித்தான். வேகாத வெயிலில் முகத்தில் வழிந்தோடும் வியர்வையைக் கூட துடைத்துக்கொள்ளாமல் பள்ளி வாசலையே பார்த்தவாறு காத்திருந்தவர்களுடைய அனைவர் முகத்திலும் தெரிவது தவிப்பா அல்லது சலிப்பா என்று வியந்தான் ராஜசேகர். காலையிலயே லஞ்ச கட்டி குடுத்துவிடாம எதுக்கு இந்த வீண் அலைச்சல்?  கொஞ்சம் ஆறிப்போன சாப்பாட்ட சாப்ட்டாத்தான் என்னவாம்?  இப்படியெல்லாம் பேம்பர் (pamper) பண்ணி குழந்தைகள வளர்க்கணுமா?

அவனுடைய எண்ண ஓட்டத்தை மதிய உணவு இடைவேளைக்கு ஒலித்த பள்ளி மணியின் ஓசை கலைத்தது. காத்திருந்த பெற்றோர்கள் ஏதோ சினிமா நுழைவுச்சீட்டை வாங்க முனைவதுபோல் முண்டியடித்துக்கொண்டு விரைய அவர்களுடன் நுழைய முயன்ற கோக்கிலாவை தடுத்து நிறுத்தினான். 'இரு அவங்க போவட்டும்.... நிதானமா போவோம்.'

'இல்லைங்க.... இந்த கூட்டத்திலேயே அந்த படுபாவி இருந்தா?'

'நா பாத்துட்டேன்.. அவன் இங்க இல்ல.' என்று பதிலளித்த ராஜசேகர் கூட்டம் கலைந்ததும் கோக்கிலாவை அழைத்துக்கொண்டு பள்ளி முதல்வர் அறையை அடைந்தான். அடுத்த சில நிமிடங்களில் பள்ளி முதல்வர் தன் அறைக்கு வந்ததும் தான் வந்த விஷயத்தை கூறி தன் மகள் காஞ்சனாவை தன்னோடு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் அடுத்த நாலைந்து தினங்களுக்கு அவள் பள்ளிக்கு வர இயலாது என்றும் கூறினான். 'எதுக்கும் நீங்க ஒரு ரிட்டன் ரிக்வெஸ்ட் குடுத்துறுங்க சார்.' என்று அவர் கேட்டுக்கொண்டதும் சட்டென்று எழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அலுவலகத்திலிருந்தே ஒரு வெள்ளை தாளை வாங்கி மடமடவென எழுதி கொடுத்தான். அதை வாங்கி படித்தும் பாராமல்  தன் மேசை மீது வைத்த பள்ளி முதல்வர் வாசலில் நின்றிருந்த சிப்பந்தியிடம் 'ஃபிஃப்த் ஸ்டான்டர்ட் பி செக்ஷன் க்ளாஸ் டீச்சர வரச்சொல்லுங்க.' என்றார். 

அடுத்த சில நிமிடங்களில் முப்பது வயது மதிக்கத்தக்க ஆசிரியை வந்ததும் தன் மேசை மீது வைத்திருந்த கடிதத்தை அவரிடம் கொடுத்து, 'உங்க க்ளாஸ் ஸ்டூடன்ட் காஞ்சனாவோட பேரன்ட்ஸ் இவங்க.... அந்த கேர்ல இவங்க கூட அனுப்பிருங்க.... she may not attend the classes for the next four days.... நோட் பண்ணி வச்சிக்குங்க.' என்று கூறிவிட்டு ராஜசேகரை பார்த்தார். 'You can go with her' 

அவருக்கு நன்றி கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி வகுப்பறையை நோக்கி சென்ற ஆசிரியை பின்னால் தன் மனைவியை அனுப்பி வைத்தான். 'காஞ்சனாவ கூட்டிக்கிட்டு வா... நா இங்கயே நிக்கேன்.'

சுமார் பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து கோக்கிலாவும் காஞ்சனாவும் தன்னை நோக்கி வருவதைக் காணும் வரையில் கலக்கத்துடன் நின்றிருந்தான் ராஜசேகர்.

*******

எஸ்.பி சந்தானத்தின் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட செல்லும் வழியிலேயே தன்ராஜ் அவரை அழைத்தான். அவர் அவனுடைய அழைப்புக்கென்றே காத்திருந்தவர் போல் எடுத்து, 'சொல்லுங்க தன்ராஜ்.' என்றார்.

ராஜசேகரிடமிருந்து கிடைத்த தகவல்களை சுருக்கமாக தெரிவித்த தன்ராஜ், 'நா சிசிபிக்கி போய்கிட்டிருக்கேன் சார். நா மாத்திரம் சொன்னா கால் சோர்ச ட்ரேஸ் பண்ணுவாங்களான்னு தெரியல. நீங்க கொஞ்சம் கூப்ட்டு CCB டிஎஸ்பிக்கிட்ட சொல்ல முடியுமா சார்?' என்றான்.

'கண்டிப்பா.... நீங்க அங்க போய் சேர்றதுக்குள்ள கூப்ட்டு சொல்லிருவேன்...' என்று உறுதியளித்த எஸ்.பி. 'அப்புறம் இன்னொரு விஷயம்.'

'சொல்லுங்க சார்.'

'நா பெருமாள கூப்ட்டு இந்த கேஸோட இன்வெஸ்ட்டிகேஷன நானே டேக்கோவர் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன். அதோட உங்களையும் என்னோட ஆஃபீசுக்கு ஸ்பெஷல் ட்யூட்டியா போட்ருக்கேன்னும் சொல்லியாச்சி. நீங்க CCBல வேல முடிஞ்சதும் நேரா ஸ்டேஷனுக்கு போயி இந்த கேஸ் டைரியயையும் இது சம்பந்தமான இருக்கற எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்துருங்க... இந்த கேஸ் முடியற வரைக்கும்...... அப்புறம் என்ன பண்றதுன்னு டிசைட் பன்ணிக்கலாம்.'

'பெருமாள் சார் ஒன்னும் சொல்லலையா சார்?' என்றார் தன்ராஜ் தயக்கத்துடன்.

'அவர் என்னங்க சொல்றது?' என்றார் எஸ்.பி. சற்று எரிச்சலுடன்.... 'Why worry about that....? நீங்க நா சொன்னத செஞ்சிட்டு ரிப்போர்ட் பண்ணுங்க....' 

அவரை பதில்பேச அவகாசம் அளிக்காமல் இணைப்பை எஸ்.பி. துண்டிக்க அமைதியாகிப் போன செல்ஃபோனை இடுப்பிலிருந்த உறையில் சொருகிக்கொண்டு சென்னை மத்திய சைபர் க்ரைம் செல் அலுவலகத்தை நோக்கி விரைந்தார் தன்ராஜ்.

தொடரும்


10 comments:

2008rupan said...

வணக்கம்

கதை அருமை..... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகேந்திரன் said...

காத்திருப்பு... அவசரம்...
அசட்டை..
என்று அத்தனை உணர்ச்சிகளையும்
தொட்டுச் செல்கிறது கதை...
தொடருங்கள்...

வே.நடனசபாபதி said...

முருகேசனுக்கு தீபாவளி அன்று ‘தீபாவளி’ உண்டா? அறிய காத்திருக்கிறேன்.

அ. பாண்டியன் said...

கதையைப் படிக்கும் போதே அது காட்சியாய் கண்களில் பதிந்து கொள்வது உங்கள் திறமையின் அடையாளம். தொடருங்கள் சகோதரரே.. நல்லதொரு நீண்ட படைப்புக்கு நன்றிகள் தங்களுக்கு..

டிபிஆர்.ஜோசப் said...


2008rupan said...
வணக்கம்

கதை அருமை..... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம்...//

மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


மகேந்திரன் said...
காத்திருப்பு... அவசரம்...
அசட்டை..
என்று அத்தனை உணர்ச்சிகளையும்
தொட்டுச் செல்கிறது கதை...//

வந்ததற்கும் கருத்து சொன்னதுக்கும் மிக்க நன்றிங்க நண்பரே.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
முருகேசனுக்கு தீபாவளி அன்று ‘தீபாவளி’ உண்டா? //

நிச்சயம் உண்டு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


அ. பாண்டியன் said...
கதையைப் படிக்கும் போதே அது காட்சியாய் கண்களில் பதிந்து கொள்வது உங்கள் திறமையின் அடையாளம். தொடருங்கள் சகோதரரே.. நல்லதொரு நீண்ட படைப்புக்கு நன்றிகள் தங்களுக்கு..

மிக்க நன்றி சகோதரரே!

G.M Balasubramaniam said...

ஒரு கிரிமினலோட மூளை எப்படியெல்லாம் வேலை செய்யும் என்று இன்னொரு கிரிமினலுக்குத்தானே
(ஐ மீன் கிரிமினல் லாயருக்குத்தானே) தெரியும்.. முடிவை நோக்கி.....?

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
ஒரு கிரிமினலோட மூளை எப்படியெல்லாம் வேலை செய்யும் என்று இன்னொரு கிரிமினலுக்குத்தானே
(ஐ மீன் கிரிமினல் லாயருக்குத்தானே) தெரியும்..//

அதென்னவோ உண்மைதான். அதனாலதானோ க்ரிமினல்!! லாயர்னு சொல்றாங்க!


முடிவை நோக்கி.....?//

ஆமாம் சார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.