29 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 61


'இவர் சொல்றது சரிதான்... நா அந்த ஆங்கிள்ல இத உங்கக்கிட்ட போட்டு காட்டல.... இப்போ இந்த கேஸ்ல போலீஸ்க்கு இருக்கற ரெண்டு மெய்ன் விட்னசஸ் இவங்க ரெண்டு பேரும்தான். இவங்க ஸ்டேட்மென்ட்லருந்து நா டிரைவ் (derive) பண்ணத சொல்றேன்.... கேட்டுட்டு சொல்லுங்க.' என்ற ராஜசேகர் தன் குறிப்பேட்டை எடுத்து அதில் முந்தைய இரவு குறித்து வைத்திருந்ததை ஒருமுறை பார்த்துவிட்டு தொடர்ந்தான். 

மாதவியோட மரணத்திற்கு அவருடைய தலைக்கு பேக்சைடுல இருக்கற ரெண்டு காயங்கள்தான் காரணம்னு பி.எம். ரிப்போர்ட் சொல்லுது. அந்த இரண்டு காயங்களுக்கு இடையில குறைந்தது அரை மணி நேரமாவது இருந்துருக்கணும்னும் சொல்லியிருக்காங்க. மரணம் இரண்டாவது அடிபட்ட நேரத்துலருந்து ஒரு மணி நேரத்துக்குள்ள அதாவது சுமார் எட்டு, எட்டரைக்குள்ள நடந்திருக்கலாம்கறது பி.எம் பண்ண டாக்டரோட அப்சர்வேஷன். அந்த ஆங்கிள்ல பாத்தா முதல் அடி சுமார் ஆறுலருந்து ஆறரைக்குள்ளயும் இரண்டாவது அடி ஆறே முக்கால்லருந்து ஏழு மணிக்குள்ளயும் நடந்துருக்கணும். 

ஆனா 

'1. கோபால் அன்னைக்கி சாயந்தரம் ஆறு மணிக்கி மாதவி வீட்லருந்து போனப்போ மாதவி வீட்டு வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புனத குமார் பாத்ததா சொல்றார். சோ..... மாதவி அந்த டைம்ல உயிரோடத்தான் இருந்துருக்காங்க.

2.அன்னைக்கி ராத்திரி ஏழு மணிக்கி மாதவி வீட்டோட நெய்பர் மிசஸ் ராகவன் அந்த வீட்டுக்கு முன்னால நாங்க பாத்தது கோபால இல்ல முருகேசனத்தான்னு சொல்றாங்க. இதுலருந்து கோபால் மறுபடியும் பர்ட்டிக்குலரா ரெண்டாவது வூன்ட் பட்ட நேரத்துலயும்  அந்த ஸ்பாட்டுல இல்லைங்கறதும் ப்ரூவ் ஆகுது. 

இதுலருந்து மாதவி தலையிலருக்கற ரெண்டு வூன்ட்ஸுக்கும் கோபால் காரணமா இருக்க முடியாதுங்கறது தெரியுது. இந்த டேப்ஸ்ல இருக்கறா மாதிரியே இவங்க ரெண்டு பேரும் கோர்ட்ல சொல்ல விடாம பிபி தடுக்க ட்ரை பண்ணாலும் அவங்கள கிராஸ் எக்ஸாமின் பண்றப்போ நா வெளியில கொண்டு வர்றத யாராலயும் தடுக்க முடியாது. இதுல இன்னொன்னையும் கவனிக்கணும்.  குமார் ஏற்கனவே மஜிஸ்டிரேட் முன்னால ஸ்வார்ன் ஸ்டேட்மென்ட் (sworn statement) குடுத்தாச்சி. அதனால ஹோஸ்டைல் விட்னசுன்னு பிபி சொன்னாலும் அத ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் ஜட்ஜ பொறுத்தது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஜஸ்டிஸ் மூர்த்தி சார் (செஷன்ஸ் ஜட்ஜ்) இத நிச்சயம் கன்சிடர் பண்ணுவார். அதனால இந்த ரெண்டு பேர் சொன்னத கேட்டதுக்கப்புறமும் கோபால்  மேல ஃபைல் பண்ணிருக்கற கேஸ கன்டினியூ பண்றது எந்த அளவுக்கு சரின்னு நீங்கதான் டிசைட் பண்ணணும்....'

ராஜசேகரின் விளக்கமான பதிலை கேட்ட எஸ்.பி. 'சேகர் சொல்றதுலயும் பாய்ன்ட் இருக்கு தன்ராஜ்.' என்றார்.

''நா இல்லேன்னு சொல்லலை சார்....' என்ற தன்ராஜ் ஒரு சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்தார். 

வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு இருக்கும் சூழலில் அதை வாபஸ் பெறுவதற்கு அதை நடத்தும் வழக்கறிஞரின் அனுமதி நிச்சயம் வேண்டும். ஆனால் அது பிபி வேணுவிடமிருந்து கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும் இந்த ஒலிநாடாக்கள் விஷயம் இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கோ அல்லது பிபி வேணுவுக்கோ தெரியவந்தால்  அதை தங்களிடம் உடனே சொல்லாமல் மறைத்தது ஏன் என்ற கோபிக்கவும் வாய்ப்புள்ளது. இவற்றை எஸ்.பி சந்தானத்தின் முன்பு இட்டுக் காட்டியபோது நாமும் அங்கு இருந்தோம் என்று தெரியவந்தால் வேறு வினையே வேண்டாம். போறாததற்கு இந்த இரண்டு ஒலிநாடாக்களின் பின்னால் இந்த வழக்கின் எதிரியான கோபாலின் வழக்கறிஞர் இருப்பது தெரியும்போது அவர்கள் எப்படி அதை கண்ணோக்குவர் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம். தன்னை இந்த வழக்கிலிருந்து ஓரங்கட்டிவிடுவது என்று பெருமாள் நினைத்திருந்ததும் அவருக்கு தெரியும். அதனால்தான் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோதே இரண்டு தினங்களுக்கு முன்பு வேறொரு வழக்கு விசாரணையை பெருமாள் தன்னிடம் ஒப்படைத்ததையும் நினைவுகூர்ந்தார். ஆனால் அந்த விஷயம் எஸ்.பிக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே இந்த தர்மசங்கடமான சூழலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வது எப்படி என்பதிலேயே தன்ராஜின் சிந்தனை சென்றது. 

'என்ன தன்ராஜ்..... என்ன யோசனை?' என்றார் எஸ்.பி. 

'இல்ல சார்.....இதுல ஃபர்தரா என்ன செய்யலாம்னு.......'

'இதுல இவ்வளவு டீப்பா திங்க் பண்றதுக்கு ஒன்னுமில்லை தன்ராஜ்......' என்று சற்று எரிச்சலுடன் கூறிய எஸ்.பி. தொடர்ந்தார். 'I fully endorse Sekar's view that Gopal is not guilty in this... நீங்களும் பெருமாளும் பிபியோட ஒக்காந்து இந்த கேஸ கன்டினியூ பண்றதா வேணாமான்னு டிஸ்கஸ் பண்ணுங்க... அதுக்கு பிபி ஒத்துக்காமாட்டார்னு நீங்க நினைச்சா.... முருகேசன பத்தி ராஜசேகருக்கு தெரிஞ்ச விஷயங்கள கேட்டுக்கிட்டு அவர டிரேஸ் பண்ணி புடிக்க பாருங்க.... இந்த ரெண்ட தவிர ஒங்களுக்கு வேற அவென்யூ ஒன்னுமில்லை..... என்ன சொல்றீங்க?' 

எஸ்.பியின் குரலில் இருந்த கண்டிப்பு தன்ராஜை சற்று அதிர்ச்சியடையச் செய்தது. ஏனெனில் இந்த இரு ஒலிநாடாக்கள் மட்டுமே கோபாலை நிரபராதி என்று முடிவு செய்ய போதும் என்ற முடிவுக்கு அவர் வருவார் என்று தன்ராஜ் எதிர்பார்க்கவில்லை. அதுவுமில்லாமல் பிபி வேணுவின் விருப்பப்படி சாட்சிகளை உண்மைக்கு புறம்பாக சாட்சியம் அளிக்கும்படி என்னால் பயிற்றுவிக்க முடியாது என்ற நிலையை அவர் எடுத்ததுமே அந்த வழக்கிலிருந்தே விடுபட்டால் போதும் என்று நினைத்துத்தானே எஸ்.பியின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இணைந்து பணியாற்ற தனக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டிருந்தார்? ஆகவேதான் ஆய்வாளர் பெருமாள் சில தினங்களுக்கு முன்பு வேறொரு வழக்கை தன்னிடம் ஒப்படைத்தபோது விட்டால் போதும் என்று நிம்மதியடைந்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் மீண்டும் எப்படி இறங்குவது? இதற்கு பெருமாள் தலைமையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையத்திலுள்ளவர்களுடைய யாருடைய ஒத்துழைப்பும் கிடைக்க வாய்ப்பில்லையே? என்னடா இது தேவையில்லாத சோதனை என்று தனக்குள்ளே நொந்துப்போனார் அவர். 

'நா கிளம்பலாமா சார்?' என்ற ராஜசேகரின் குரல் அவரை நனவுலகுக்கு இழுத்து வந்தது. 

'ஒரு நிமிஷம் சேகர்.' என்ற எஸ்.பி சந்தானம் மீண்டும் அமைதியாகிப்போன தன்ராஜை சற்று எரிச்சலுடன் பார்த்தார். 

அவருடைய பார்வையின் தாக்கத்தை உணர்ந்த தன்ராஜ் ராஜசேகரிடம், 'இந்த ரெண்டு பேரையும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்ல முடியுமா சார்?' என்றார்.

ராஜசேகர் பதிலளிப்பதற்கு முன்பு எஸ்.பி. இடைமறித்தார். 'எனக்கு அர்ஜன்டா ஒரு மீட்டிங் இருக்கு.... அதனால ஒன்னு பண்ணுங்க..... இதே ஃப்ளோர்லருக்கற மினி மீட்டிங் ரூம்ல ஒக்காந்து ஃபர்தரா எப்படி ப்ரொசீட் பண்றதுன்னு டிஸ்கஸ் பண்ணுங்க. நா கெளம்பறேன்.'

அவர்கள் இருவருடைய பதிலுக்கும் காத்திராமல் எழுந்த எஸ்.பி. விடுவிடுவென அந்த அறையிலிருந்து வெளியேறி வாசலில் அமர்ந்திருந்த காவலரிடம், 'வண்டிய போர்ட்டிக்கோவுக்கு கொண்டு வரச் சொல்லுய்யா... கமிஷனர் ஆஃபீசுக்கு போணும்....' என்றவாறு வலப்புறம் திரும்பி லிஃப்டை நோக்கி நடந்தார். 

அறையில் தனித்து விடப்பட்ட தன்ராஜும் ராஜசேகரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றிருந்தனர். 

பிறகு இருவரும் அறையிலிருந்து வெளியேறி சந்தானம் பரிந்துரைத்திருந்த கூட்டம் நடத்தும் அறையை கண்டுபிடித்து அதனுள் நுழைந்தனர்.

சுமார் இருபதடி நீள, அகலத்துடன் இருந்த அறையில் நடுவில் நீள் சதுர வடிவில் ஒரு மேசையும் அதன் இருமருங்கிலும் சுமார் இருபது பேர் தாராளமாக அமர்ந்து உரையாட இருக்கைகளும் இருந்ததை கவனித்தனர். அறையின் இடப்புறச் சுவரில் ஒரு வெண் திரையும் அதன் முன்னால் ஐந்தடி தூரத்தில் ஒரு ஓவர்ஹெட் ப்ரொஜெக்டரும் வைக்கப்படிருந்தது. தன்ராஜும் ராஜசேகரும் மேசையின் எதிரும் புதிருமாக அமர்ந்தனர். 

இவருடன் சேர்ந்து நாம் இந்த அறையில் அமர்ந்திருப்பது பிபிக்கோ அல்லது பெருமாளுக்கோ தெரியவந்தால் என்னாவது என்ற சிந்தனையில் தன்ராஜும் இவர நாம கோர்ட்ல பண்ண டார்ச்சருக்கு இந்தாள் நம்மள ஏதாச்சும் டார்ச்சர் பண்ணுவாரோ என்கிற சிந்தனையில் ராஜசேகரும் அமர்ந்திருக்க அவர்கள் இருவர் இடையிலும் ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது. 

அதை கலைக்கும் எண்ணத்துடன் ராஜசேகர் எழுந்து தலைக்கு மேல் இருந்த மின்விசிறிகளில் ஒன்றை ஓடவிட்டுவிட்டு அமர்ந்து தன்ராஜை பார்த்தான். 'சம்மர் முடியப் போவுதுன்னுதான் பேரு..... ஃபேன் இல்லாம இருக்க முடியல, இல்ல?' என்றான்.

இதற்காகவே காத்திருந்ததைப் போல் ராஜசேகரைப் பார்த்து புன்னகைத்தார் தன்ராஜ். 'ஆமா சார்.... நீங்களாவது பரவால்லை கேஷுவல் டிரஸ்ல இருக்கீங்க.... இந்த யூனிஃபார்ம்ல..... தாங்க முடியல.....'

ஒருவழியாக அவர்களுக்கிடையில் இருந்த திரை விலக இருவரும் சகஜ நிலைக்கு வந்தனர். 

தன்ராஜ் எஸ்.பி அறையில் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தான். 'முருகேசன் என்னோட பழைய க்ளையன்ட் சார்.... ரெண்டு ஃபோர்ஜரி கேஸ்லருந்து நாந்தான் அவனெ ரெஸ்க்யூ பண்ணேன்.... இனியும் இந்த மாதிரி கேஸ்ல மாட்டிக்கிட்டு எங்கிட்ட வந்தா நா டிஃபென்ட் பண்ண மாட்டேன்னு வார்ன் பண்ணி அனுப்புனேன்.... அதுக்கப்புறம் அவன்கிட்டருந்து எந்த கான்டாக்டும் இல்ல.....' 

'ராமராஜன்?'

'அவர் இந்த கேஸ் விஷயமா மீட் பண்ணப்பத்தான் பழக்கம்.'

'ஓ!' என்ற தன்ராஜ், 'இவங்க ரெண்டு பேருக்கும் இடையில கான்டாக்ட் இருந்தது ஒங்களுக்கு எப்ப தெரியும்?'

'தெரியாதுங்க..... நேத்து குமாரோட ஸ்டேட்மென்ட கேட்டதுக்கப்புறம்தான் தெரியும்.' அவன் ராகவனை சந்தித்த அன்றே இதைப்பற்றி லேசான ஐயம் ஏற்பட்டிருந்தாலும் அதை மேலும் உறுதிப்படுத்தியது குமாரின் வாக்குமுலம்தான். 

அவன் கூறிய பதிலை மனதுக்குள் அசைபோட்டவராய் அமர்ந்திருந்தார் தன்ராஜ். அவருடைய போலீஸ் மூளை ராஜசேகர் 

தன்னிடம் இருந்து எதையோ மறைக்கிறார் என்பதை உணர்த்தியது..... ஆனாலும் அவரை ஒரு குற்றவாளி போன்று விசாரிக்க மனம் வரவில்லை. அதற்கு இவரும் நம்முடைய ஊரைச் சார்ந்தவராயிற்றே என்ற பரிவும் இவர் சந்தானத்திற்கும் நெருக்கமானவர் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணம். 

'என்ன சார்.... என்ன யோசனை? இவர் சொல்றத எந்த அளவுக்கு நம்பலாம்னா?' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்...

'சேச்சே அப்படியில்ல...' என்று அவசரமாக மறுத்தார் தன்ராஜ்..

'நீங்க நெனக்கறது ஓரளவுக்கு சரிதான்....' என்ற ராஜசேகர் தன் கைப்பெட்டியிலிருந்து முருகேசனின் செல்ஃபோன் கால் லிஸ்ட்டை எடுத்து நீட்டினான். 'ராகவன் கிட்டருந்துதான் முருகேசனோட செல்ஃபோன் நம்பர் கிடைச்சிது... குமார் எங்கள கூப்டறதுக்கு முன்னாலயே நம்ம சோர்ஸ் வழியா இந்த லிஸ்ட எடுத்துட்டோம்..... இத பாத்ததுக்கப்புறந்தான் முருகேசனுக்கும் ராமராஜனுக்கும் இடையில இருக்கற ரிலேசன்ஷிப் தெரிஞ்சிது.....'

அவன் நீட்டிய பட்டியலை வாங்கி மேலோட்டமாக வாசித்த தன்ராஜ் அதில் ராமராஜனின் செல்ஃபோன் எண் கடந்த இரு வாரங்களில் மட்டும் பலமுறை இருந்ததைக் கண்டார். கோபாலின் எண்ணும் கூட அதில் பல முறை தென்பட்டதை கவனிக்க தவறவில்லை. 'போலீச விட டீப்பாவே போயிருக்கீங்க?' என்றார் புன்முறுவலுடன்.

'அக்யூஸ் பண்றத விட டிஃபென்ட் பண்றது ரொம்ப கஷ்டம் சார்.' என்றான் ராஜசேகர் அதே புன்னகையுடன். 

தன்ராஜ் தன்னையுமறியாமல் சிரித்தார். 'இந்த லிஸ்ட நா வச்சிக்கலாமா?' 

'இல்ல சார்.... இந்த கேஸ் முடியற வரைக்கும் இது வேண்டியிருக்கும்.... உங்களால முடியாத விஷயமா இது? CCBல சொன்னாத்தான் ஒரு செகன்ட்ல கிடைச்சிருமே....'

'அதுவும் சரிதான்... இவங்க ரெண்டு பேரோட ஃபோன் நம்பரஸ மட்டும் நோட் பண்ணிக்கிறேன்.... சிம் கார்ட சேஞ்ச் பண்ணியிருந்தாலும் IMIE வச்சி இப்ப எங்க இருக்காங்கன்னு ட்ரேஸ் பண்ண யூசாவும்...'

'யூ மீன் எங்க இருக்கான்னு?' 

தன்ராஜ் புரியாதவர்போல் பார்த்தார். 'அப்படீன்னா?'

ராஜசேகர் சிரித்தான். 'ராமராஜன் இருக்கற எடம்தான் தெரியுமே..... இனி தெரிய வேண்டியது முருகேசன் எடம்தான?'

'ஓ!' என்று தன்ராஜும் சிரித்தார்.....'நல்ல ஜோக்.'

இதே மூடில் விடைபெறுவதுதான் நமக்கு நல்லது என்று நினைத்த ராஜசேகர் எழுந்து நின்றான். 'நைஸ் மீட்டிங் யூ சார்..... அன்னைக்கி கோர்ட்ல நடந்தத மறந்துருப்பீங்கன்னு......'

தன்ராஜின் முகம் சட்டென்று மாறினாலும் அடுத்த நொடியே சகஜ நிலைக்கு திரும்பி ராஜசேகரை நோக்கி கையை நீட்டினார். 'அத அப்பவே மறந்துட்டேன்.... நீங்க ஜட்ஜ இம்ப்ரஸ் பண்றதுக்கு செஞ்ச டிராமாங்கறது எனக்கு நல்லாவே தெரியும்!'

இதை சற்றும் எதிர்பாராத ராஜசேகர் உரக்க சிரித்தான். 'Touch!' என்றான்..... தன்ராஜின் கரத்தைப் பற்றி குலுக்கிவிட்டு வாசலை நோக்கி நடந்தான். 'ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா சொல்றீங்களா?'

'கண்டிப்பா.....' என்ற தன்ராஜ் சட்டென்று, 'எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க ராஜசேகர்.' என்றார்.

வாசல்வரை சென்ற ராஜசேகர் நின்று திரும்பி பார்த்தான். 'எதுக்கு?' என்றான் வியப்புடன்.

'முருகேசனுக்கு நீங்களும் ஒருவிதத்துல எனிமிதான்.... மறந்துராதீங்க.'

அவர் சொன்னதில் இருந்த உள்ளர்த்தம் அவனுக்கு புரிந்தது. உண்மைதான்..... தன் மீது முன்விரோதம் ஏற்கனவே இருந்தது என்பதுடன் இந்த வழக்கில் கோபால் சார்பாக நாம் ஆஜராவதும் அவனை சீண்டி விட்டிருக்க வாய்ப்புள்ளது. 

'நீங்க சொன்னதும்தான் எனக்கும் இதுலருக்கற சீரியஸ்னஸ் புரியுது...... அவனெ நீங்க அரெஸ்ட் பண்ற வரைக்கும் நானும் கூட கேர்ஃபுல்லாத்தான் இருக்கணும் நினைக்கேன்.' என்ற ராஜசேகர் 'இன்னொரு விஷயமும் இருக்கு சார்.' என்றான். 

'சொல்லுங்க..'

தொடரும்..

10 comments:

வே.நடனசபாபதி said...

ராஜசேகர் சொன்ன செய்தி என்னவாக இருக்கும் என எண்ணிக்கொண்டு காத்திருக்கிறேன்!

2008rupan said...

வணக்கம்
அடுத்த தொடருக்காக காத்திருக்கிறோம்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
ராஜசேகர் சொன்ன செய்தி என்னவாக இருக்கும் என எண்ணிக்கொண்டு காத்திருக்கிறேன்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

நாளைக்கு தெரிந்துவிடும் :)

டிபிஆர்.ஜோசப் said...

2008rupan said...
வணக்கம்
அடுத்த தொடருக்காக காத்திருக்கிறோம்....

அடுத்த தொடருக்கா அல்லது அடுத்த பதிவுக்கா?

அடுத்த தொடர் என்றால் அதற்கு குறைந்தது இன்னும் மூன்று மாதங்களாவது ஆகும் :)

G.M Balasubramaniam said...

முடிக்க வரும்போது குழப்பம் தெரிகிறதோ. பேசாமல் கோபால் மேல் சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகளை விலக்கிக் கொண்டு முருகேசன் மேல் FIR போட்டு முதலில் இருந்தே கேஸ் துவங்கட்டுமே. அப்போது முருகேசன் ராஜசேகரை அணுகினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. தொடர்கிறேன்,

மகேந்திரன் said...

சிலரை சமாளிக்க சிலர் பேசும்
பாவனைகள் நமக்கு அப்பட்டமாக தெரியும்
அதுபோலவே.. இங்கே விசாரணையிலும்
தெரிகிறது...
நல்ல மனோவியல் தொடர் நண்பரே..
தொடருங்கள்...

Packirisamy N said...

//அவருடைய பார்வையின் தாக்கத்தை உணர்ந்த தன்ராஜ் ராஜசேகரிடம், 'இந்த ரெண்டு பேரையும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்ல முடியுமா சார்?' என்றார்.//

Sorry. Looks like, something is not correct here. waiting for the next episode. Thanks.

டிபிஆர்.ஜோசப் said...

7 PM
G.M Balasubramaniam said...
முடிக்க வரும்போது குழப்பம் தெரிகிறதோ. பேசாமல் கோபால் மேல் சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுகளை விலக்கிக் கொண்டு முருகேசன் மேல் FIR போட்டு முதலில் இருந்தே கேஸ் துவங்கட்டுமே. அப்போது முருகேசன் ராஜசேகரை அணுகினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை//

நல்ல கற்பனை. ராஜசேகரை கோபாலை இதில் சிக்க வைக்க தீவிர முயற்சி செய்வார் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


மகேந்திரன் said...
சிலரை சமாளிக்க சிலர் பேசும்
பாவனைகள் நமக்கு அப்பட்டமாக தெரியும்
அதுபோலவே.. இங்கே விசாரணையிலும்
தெரிகிறது...
நல்ல மனோவியல் தொடர் நண்பரே..
தொடருங்கள்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

டிபிஆர்.ஜோசப் said...

59 AM
Packirisamy N said...
//அவருடைய பார்வையின் தாக்கத்தை உணர்ந்த தன்ராஜ் ராஜசேகரிடம், 'இந்த ரெண்டு பேரையும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்ல முடியுமா சார்?' என்றார்.//

Sorry. Looks like, something is not correct here. waiting for the next episode. Thanks.//

Thanks for your visit and comment.