28 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 60

'இல்ல பாஸ்.... நாமளும் ஒருதடவ பாடிய பாத்துட்டா நல்லதுன்னு நெனச்சேன்......' என்றான் வசந்த்.

'நாம பாத்து என்ன பண்றது?' என்று வினவினான் ராஜசேகர். 'அதுமட்டுமில்ல. நாம அங்க போனாலும் நம்மள அலவ் பண்ணணுமே? '

'அதுவும் சரிதான்... அதோட இந்த விஷயம் தன்ராஜுக்கோ இல்ல இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கோ தெரியுமான்னு தெரியலையே?'

அதுவும் ஒரு பிரச்சினையாயிற்றே என்று ஒரு சில நொடிகள் யோசித்த ராஜசேகர் ஒரு முடிவுக்கு வந்தான். 'நம்ம கேஸ் முடியற மட்டும் நம்ம கிட்ட இருக்கற டேப்ஸ போலீஸ் கிட்ட குடுக்க வேணாம்னு நினைச்சிக்கிட்டிருந்தோம் இல்ல? அந்த ஐடியாவ மாத்திக்க வேண்டியதுதான் போலருக்கு.'

'அதாவது இப்பவே அத போலீஸ் கிட்ட குடுத்துறலாம்னு சொல்றீங்களா பாஸ்?'

'ஆமா.... ஆனா E1 போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறவங்கக் கிட்ட இல்ல..... நேரா எஸ்.பிக்கிட்ட குடுத்துறலாம்.... அவர் அநேகமா இத தன்ராஜ்கிட்டதான் ஹேன்டோவர் பண்ணுவார்..... என்ன சொல்ற?'

'நீங்க சொல்றது சரிதான் பாஸ்... ஆனா இந்த விஷயம் பெருமாளுக்கும் அவர் மூலமா பிபிக்கும் தெரிய வந்தா என்ன நடக்கும்னு தெரியுமில்ல? இந்த டேப்ஸையே எரேஸ் பண்ணி கோபாலுக்கும் இந்த லேட்டஸ்ட் மர்டருக்கும் கூட முடிச்சி போட்ருவாங்க....'

'டேய்.... யோசிக்காம பேசாத..... டேப்ப எரேஸ் பண்ணா மட்டும் இத முழுசா மறைச்சிற முடியுமா? குமாரோட ஸ்டேட்மென்ட்தான் மஜிஸ்டிரேட் கிட்ட இருக்கே....'

'அட ஆமால்ல? அத நா மறந்தே போய்ட்டேன்.... சாரி பாஸ்.'

'நல்லா மறந்தே போ.... இப்பல்லாம் ஒனக்கு எல்லாமே மறந்துப்போயிருது....'

'சாரி பாஸ்.....' என்று மன்னிப்புக் கோரிய வசந்த், 'எஸ்.பிய நீங்க பாக்கப் போறப்ப நானும் வரட்டுமா பாஸ்?'

வசந்த் கூறியதை சற்று நேரம் மனதுக்குள் அசைபோட்ட ராஜசேகர் இவன் வந்தால் நம்மால் எஸ்.பியிடம் மனம் திறந்து பேச முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தான். அவருடன் பேசும்போது குறிப்பாக யார் அந்த முருகேசன், ஒங்களுக்கு அவனெ எப்படி தெரியும் என்று அவர் கேள்வி கேட்டால்? ஒருவேளை நமக்கும் மாதவிக்கும் இடையிலிருந்த உறவை விவரிக்க வேண்டி வந்தால்? மேலும் கோபால் அன்று மாலை ஆறு மணிக்கு மாதவியின் வீட்டிலிருந்து வெளியேறியதை பார்த்ததாக குமார் கூறுவதை எப்படி நம்புவது என்று எஸ்.பி கேள்வி எழுப்பும் பட்சத்தில் அதை நானும் பார்த்தேன் சார் என்று கூற வேண்டி வந்தால்? ஆகவே நாம் மட்டும் தனியாக செல்வதுதான் உசிதம் என்று முடிவு செய்தான். அதே சமயம் தன்னுடைய உதவியாளனாக இரு என்று வசந்தைக் கேட்டுவிட்டு இப்படிப்பட்ட சமயங்களில் அவனை வேண்டாம் என்று ஒதுக்குவது முறையா என்ற கேள்வியும் எழுந்தது.

'பாஸ்?' 

'இல்லடா.....இப்போதைக்கி வேணாம்.... நா முதல்ல ஃபோன் பண்ணி பாக்கறேன்.... அவர் நேர்ல வாங்கன்னு சொன்னா உன்னெ கூப்டறேன்...'

'சரி பாஸ்.... அப்ப வச்சிடறேன்.'

'சரிடா... தேவைப்பட்டா காலையில கூப்டறேன்... குட்நைட்..' என்று இணைப்பைத் துண்டித்த ராஜசேகர் கேள்விக்குறியுடன் தன்னையே பார்த்தவாறு நின்ற கோக்கிலாவைப் பார்த்தான். 'நீ படுக்க போவல?' 

'இல்லைங்க தூக்கம் வரல....  நீங்க திரும்பி வந்த சத்தம் கேட்டதும் வந்தேன்.... எங்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க.... ஒங்க முகம் சட்டுன்னு ஷாக்கான மாதிரி மாருச்சே... அதான்...'

'அது ஒன்னுமில்லை... கோபாலோட பி.ஏவ யாரோ மர்டர் பண்ணிட்டாங்களாம்......'

'அடப் பாவமே.... என்னங்க இந்த கேஸ் இப்படி படுத்துது?'

'சரி....நீ போய் படு.... நா இன்னொரு ஃபோன் பண்ணிட்டு வரேன்...' என்ற ராஜசேகர் அவள் படுக்கையறைக்குள் சென்று கதவை மூடும் வரை காத்திருந்துவிட்டு எஸ்.பி. சந்தானத்தை அழைத்தான். 

ராஜசேகர் பலமுறை முயன்றும் எதிர்முனையில் எஸ்.பி ஃபோனை எடுக்கவேயில்லை. மணியைப் பார்த்தான். இரவு பதினோரு மணியை கடந்திருந்தது. ஒருவேளை சைலன்டில் போட்டுவிட்டு மறந்திருப்பாரோ என்று நினைத்து தான் அவருடன் பேச விரும்புவதாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினான். அவன் நினைத்திருந்ததுபோலவே அடுத்த நொடியே அழைப்பு வந்தது. 'சைலன்ட் மோட்ல போட்டு வச்சிருந்தேன்.... அதான் எடுக்கல... சொல்லுங்க என்ன விஷயம்?'

'ஏதாவது மீட்டிங்ல இருக்கீங்களா சார்? நா வேணும்னா காலையில கூப்டட்டுமா?'

'இல்ல.... இப்பத்தான் ஒரு மீட்டிங்லருந்து வந்தேன்..... வீட்டுக்கு வந்தாச்சு.... சொல்லுங்க..'

'சார் அந்த மாதவி கொலை கேஸ்ல..... அக்யூஸ்ட் கோபாலோட பி.ஏ. ராமராஜன்..'

'ஆமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் ஃபோன் வந்துது. அந்த விஷயமாத்தான் கூப்ட்டீங்களா?'

'ஆமா சார்....'

'சொல்லுங்க.... உங்கக்கிட்ட ஏதாச்சும் க்ளூ இருக்கா?'

'இருக்கும்னுதான் தோனுது சார்....' என்று தயக்கத்துடன் துவங்கிய ராஜசேகர் இனியும் தயங்குவது முறையல்ல என்று முடிவு செய்து தன்னிடமுள்ள ஒலிநாடாக்களின் விவரத்தை அவரிடம் சுருக்கமாக கூறினான். 'நா இந்த டேப்ஸ மாதவி கொலை கேஸ் முடிஞ்சதும் குடுத்துறலாம்னு இருந்தேன்.... ஆனா ராமராஜனோட மர்டருக்கப்புறம்...... இனியும் டிலே பண்ணா சரிவராதுன்னு நினைச்சித்தான் கூப்ட்டேன்.....'

சந்தானம் மறுமுனையில் ஒரு சில நொடிகள் பதிலளிக்காமல் மவுனம் காத்தது ராஜசேகரை சங்கடப்படுத்தியது. 

'சார்...' என்றான் மீண்டும்.

'நீங்க செஞ்சது உங்க சைடுலருந்து பார்த்தா நியாயமா படலாம் ராஜசேகர்.... ஆனா ஒங்களுக்கு விஷயம் தெரியவந்தவுடனேயே போலீசுக்கு சொல்லியிருந்தா ஒரு உயிர காப்பாத்தியிருக்கலாமில்ல...? மாதவியோட மர்டர் கேஸ்லயும் உண்மையான குற்றவாளியாருன்னு கண்டுபுடிச்சிருக்கலாமே....?' அவர் குரலில் இருந்த போலீஸ் கண்டிப்பு ராஜசேகரை ஒரு நிமிடம் நிலைகுலைய வைத்தது..... அவர் நினைத்தால் ஒரு குற்றவாளியை போலீசிடமிருந்து வேண்டுமென்றே மறைத்த குற்றத்திற்காக தன் மீதே நடவடிக்கை எடுக்க முடியுமே என்று நினைத்தான்....

எப்படி பதிலளிப்பது என தெரியாமல், 'I am really sorry Sir...' என்றான்....

ஆனால் அடுத்த நொடியே சந்தானம் சமாதானமடைந்தது அவனுக்கு நிம்மதியைத் தந்தது. 'It's OK.... நீங்க வேறெந்த நோக்கத்தோடயும் இத மறைச்சிருக்க வாய்ப்பில்லை.....This is how most of the criminal lawyers function.....உங்களுக்கு உங்க கட்சிக்காரன்தான் முக்கியம். உங்க கட்சிக்காரனே தன்னோட குத்தத்த ஒத்துக்கிட்டாலும் அவனுக்காக வாதாடி ஜெயிக்கற உங்கள மாதிரி லாயர்ஸ் இருக்கறதாலதான நிறைய கேசுங்கள்ல உண்மையான குத்தவாளிங்க தப்பிச்சிக்கிறாங்க....? அதே சமயம் க்ரிமினல் லாயர்ஸ் எடுத்துக்கற அளவு எஃபர்ட்ஸ் (efforts) போலீஸ் எடுத்துக்கறதில்லைங்கறதும் உண்மைதான்......'

அவர் கூறியதிலிருந்த உண்மை அவனுக்கு புரியாமலில்லை.... ஆனால் அதுதான் யதார்த்தம்.... ஒரு குற்றவியல் வழக்கறிஞரின் வேலையே அதுதானே...? சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய கடமை அவனுக்கில்லையே....? அதை நிலைநாட்ட வேண்டிய போலீஸ் சரியாக நேர்மையுடன் செயல்பட்டால் க்ரிமினல் வழக்கறிஞர்கள் எத்தனை திறன் படைத்தவர்களாக இருந்தாலும் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லையே....? ஒரு குற்றவாளியை நிரபராதி என்று நிரூபிக்க க்ரிமினல் வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சிகளில் பாதியளவு முயற்சியாவது அவன் குற்றவாளிதான் என்று நிரூபிக்க போலீஸ் எடுத்தாலே போதுமே...!

எதிர்முனையில் இருந்து வந்த எஸ்.பி.யின் குரல் ராஜசேகரின் நினைவுகளை கலைத்தது. 'இப்ப அந்த ரெண்டு டேப்பும் உங்க கஸ்டடியில இருக்கா?'

'ஆஃபீஸ் சேஃப்ல வச்சிருக்கேன் சார்.... இப்பவே வேணும்னாலும் கொண்டுக்கிட்டு வரேன்....'

'வேணாம்.... நீங்க வர்ற சமயத்துல இந்த கேஸ டீல் பண்ற ஆஃபீசர்சும் இருந்தா நல்லதுன்னு ஃபீல் பண்றேன்... So... காலையில ஒரு பத்து பத்தரைக்கு ஃபோன் பண்ணிட்டு என்னோட ஆஃபீசுக்கு வந்துருங்க....'

இந்த கேஸ டீல் பண்றவங்கன்னு சொன்னா அந்த இன்ஸ்பெக்டர் பெருமாளும் வருவாரோ..... வேற வினையே வேணாமே? அவருக்கு தெரிஞ்சா அந்த பிபிக்கும் தெரிஞ்சா மாதிரிதான? 'சார்.... நா ஒன்னு சொல்லலாமா?' என்றான் தயக்கத்துடன்.

'சொல்லுங்க....' எஸ்.பியின் குரலில் லேசான எரிச்சல் தென்பட்டதை அவன் உணராமலில்லை... ஆனாலும் தன் மனதில் பட்டத்தை சொல்லிவிடுவோம் என்று முடிவு செய்தான்.

'மிஸ்டர் பெருமாளும் வர்றது.......' என்று இழுத்தான்.

'நீங்க சொல்ல வர்றது புரியுது..... நாளைய மீட்டிங்குக்கு தன்ராஜ மட்டும் இன்வைட் பண்றேன்.... போறுமா?' 

'தாங்ஸ்... சார்....'

'சரி.... வேற ஒன்னும் இல்லையே?'

'இல்ல சார்... குட்நைட்...' என்று பதிலளித்த ராஜசேகர் எதிர்முனையில் இணைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருந்துவிட்டு தன் செல்ஃபோனை அணைத்துவிட்டு தன் படுக்கையறைக்குள் நுழைந்தான்....

********** 

அடுத்த நாள் காலை ராஜசேகர் தன் அலுவலகத்திற்குச் சென்று அங்கு பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு ஒலிநாடாக்களையும் எடுத்துக்கொண்டு எஸ்.பி அலுவலகத்தைச் சென்றடைந்தபோது அவருடைய அறையில் எஸ்.ஐ. தன்ராஜும் இருந்ததை கவனித்தான். 

'வாங்க சேகர்.....' என்று எஸ்.பி. அவனை அழைத்து அவர் மேசை முன் இருந்த இருக்கைகளில் ஒன்றை காண்பிக்க தன்ராஜ் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து அவரிடம், 'குட்மார்ங்' என்றவாறு கையை நீட்டினான். அவர் உடனே எழுந்து புன்னகையுடன் பதிலுக்கு காலை வணக்கம் சொல்ல இருவரையும் பார்த்து எஸ்.பி  புன்னகைத்தார். 

ராஜசேகர் தன் கைப்பெட்டியை திறந்து அதிலிருந்த டேப்ரெக்கார்டரை எடுத்து முதலில் ராகவன் பேசிய ஒலிநாடாவையும் அதனையடுத்து குமார் பேசிய ஒலிநாடவையும் ஓடவிட்டான். 

இரண்டு ஒலிநாடாக்களும் ஓடி முடியும்வரை எஸ்.பி சந்தானமும் துணை ஆய்வாளர் தன்ராஜும் உன்னிப்பாக கேட்டவாறு அமர்ந்திருக்க ராஜசேகர் இதனால் ட்ரையல் கோர்ட்டிலுள்ள தன்னுடைய வழக்கிற்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக்கூடாதே என்ற கவலையுடன் அமர்ந்திருந்தான். அத்துடன் எஸ்.பிய பாக்க போறப்போ என்னையும் 

கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னீங்களே சார் என்று வசந்த் கேட்டால் அவனை எப்படி சமாளிப்பது என்ற எண்ணமும் அவனை வாட்டியெடுத்தது. 

'அவ்வளவுதானா, இன்னும் இருக்கா?' என்ற எஸ்.பி. யின் குரல் கேட்டு நினைவுகளிலிருந்து மீண்ட ராஜசேகர் ஓடிமுடிந்திருந்த டேப் ரிக்கார்டரை பார்த்தான். 'என்ன சார் கேட்டீங்க?' என்றான்.

எஸ்.பி பதிலளிக்காமல் ராஜசேகரை ஒரு சில நொடிகள் தன் போலீஸ் பார்வையால் துளைத்தார். 'என்ன ராஜசேகர் ஏதோ டீப்பா திங்க் பண்ணிக்கிட்டிருந்தீங்க போலருக்கு? என்ன விஷயம்?'

'பென்டிங்லருக்கற கேஸ்ல இதுனால ஏதாச்சும் ப்ராப்ளம் வந்துருமோன்னு.......'

எஸ்.பி அவனுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் தன்ராஜை பார்த்தார். 'என்ன சொல்றீங்க தன்ராஜ்?'

'தெரியல சார்.... இப்பத்தைக்கி ஒன்னும் சொல்ல முடியல.....இது ரெண்டுமே அவுட்சைட் கோர்ட் வாங்கப்பட்ட ஸ்டேட்மென்ட்ஸ்.  இத வாக்குமூலம்னு கூட சொல்ல முடியாது... இவங்க ரெண்டு பேரும் இதுல சொல்லியிருக்கறா மாதிரியே கோர்ட்ல சொல்லணும்...... அதுக்கு முன்னாடி பிபி இவங்க ரெண்டு பேரையுமே ஹோஸ்டைல் விட்னஸா டிக்ளேர் பண்ண வச்சிருவார்.... அதுக்கப்புறம் இவங்க சொல்றத டிஸ்ரிகார்ட் பண்ணணும்னும் ஆர்க்யூ பண்ணுவார். ஜட்ஜ் இத எப்படி எடுத்துக்குவார்னு தெரியல.....'

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்பதுபோல் ராஜசேகரைப் பார்த்தார் எஸ்.பி.


தொடரும்..

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்ந்து கொண்டிருக்கிறேன்...

தொடர வாழ்த்துக்கள்...

வே.நடனசபாபதி said...


//போலீஸ் சரியாக நேர்மையுடன் செயல்பட்டால் க்ரிமினல் வழக்கறிஞர்கள் எத்தனை திறன் படைத்தவர்களாக இருந்தாலும் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லையே....?//

உண்மைதான். ஆனால் அவ்வாறு நடக்க காவல்துறை செயல்படவேண்டுமே.

அ. பாண்டியன் said...

சகோதரருக்கு வணக்கம்.
தங்கள் படைப்பாற்றல் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தொடராக வெற்றிகரமாக கொண்டு வர நீங்கள் அதிக உழைப்பைக் கொடுத்திருக்க வேண்டும். இது போன்ற படைப்புகளைத் தொடர்ந்து தாருங்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோதரரே..

டிபிஆர்.ஜோசப் said...


திண்டுக்கல் தனபாலன் said...
சுவாரஸ்யம்... தொடர்ந்து கொண்டிருக்கிறேன்..//

மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...

//போலீஸ் சரியாக நேர்மையுடன் செயல்பட்டால் க்ரிமினல் வழக்கறிஞர்கள் எத்தனை திறன் படைத்தவர்களாக இருந்தாலும் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லையே....?//

உண்மைதான். ஆனால் அவ்வாறு நடக்க காவல்துறை செயல்படவேண்டுமே. //

அரசியல்வாதிகள் இடையூறால்தான் காவல்துறையின் செயல்பாடுகள் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பது ஓரளவுக்குத்தான் உண்மை. இந்த துறையிலேயே மலிந்துக்கிடக்கும் ஊழல்தான் அதற்கு முக்கிய காரணம்.

டிபிஆர்.ஜோசப் said...


அ. பாண்டியன் said...
சகோதரருக்கு வணக்கம்.
தங்கள் படைப்பாற்றல் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தொடராக வெற்றிகரமாக கொண்டு வர நீங்கள் அதிக உழைப்பைக் கொடுத்திருக்க வேண்டும். இது போன்ற படைப்புகளைத் தொடர்ந்து தாருங்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோதரரே..//

மிக்க நன்றி சகோதரரே.

Ravi said...

I am reading from beginning. well done

டிபிஆர்.ஜோசப் said...

Ravi said...
I am reading from beginning. well done//

Thanks Mr.Ravi.

டிபிஆர்.ஜோசப் said...

Ravi said...
I am reading from beginning. well done//

Thanks Mr.Ravi.

G.M Balasubramaniam said...

டேப் டூப்ளிகேட் காப்பி வைத்துக்கொள்ள வில்லையா. குமாரின் வாக்குமூலம் மாஜிஸ்ட்ரேட் இடமும் உள்ளதே. அதுவும் இதுவும் ஒரே மாதிரி இருந்தால் குமாரை ஹோஸ்டைல் விட்நெஸ் என்று அறிவிக்க முடியுமா. தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
டேப் டூப்ளிகேட் காப்பி வைத்துக்கொள்ள வில்லையா. குமாரின் வாக்குமூலம் மாஜிஸ்ட்ரேட் இடமும் உள்ளதே. அதுவும் இதுவும் ஒரே மாதிரி இருந்தால் குமாரை ஹோஸ்டைல் விட்நெஸ் என்று அறிவிக்க முடியுமா. தொடர்கிறேன்.//

ஒரே மாதிரி இருந்தாலும் ஹோஸ்டைல் விட்னஸ் என்று அறிவிக்க முடியும். அரசு வக்கீலைப் பொருத்தவரை அவர் அழைத்திருந்த சாட்சி அவருக்கு சாதகமாக சாட்சியம் அளிக்கவில்லை அவர் ஹோஸ்டைல் விட்னஸ்தான்.