27 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 59

'எதுக்கு அப்படி சொல்றீங்க?' என்றான் ராஜசேகர். இவர் கிட்டயும் தன் கைவரிசையை காட்டியிருப்பான் போலருக்கு...

'ஒரு மூனு வருசத்துக்கு முன்னால.... 2010 கடைசின்னு நினைக்கிறேன்.... நமக்கு தெரிஞ்ச ஒருத்தர் அவனெ எங்கிட்ட அறிமுகம் செஞ்சி வச்சார்..... அக்கவுன்ட்ஸ் எல்லாம் நல்லா பாப்பான்..... ஒங்க கம்பெனிக்கு ஒர் அக்கவுன்டன்ட் வேணும்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே அதான் கூட்டியாந்தேன்னு சொன்னார்.... அவர் நமக்கு நல்லா தெரிஞ்சவர்ங்கறதால இவன சேத்துக்கிட்டேன்.....அக்கவுன்ட்ஸ் மட்டுமில்லாம பேங்க் டீலிங்க்ஸ்லாம் கூட அவன் வழியாத்தான்..... நாலஞ்சி மாசம் நல்லாத்தான் வேல பாத்தான். அதுக்கப்புறம் திடீர்னு அப்ஸ்கான்டாய்ட்டான்..... ரெண்டு மூனு வாரமா வரலை... ஒரு ஃபோன் கூட பண்ணாம  நின்னுட்டானேன்னு நினைச்சேன்..... அப்புறந்தான் தெரிஞ்சிது அவன் செஞ்சிருந்த வேலை..... ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேல சுருட்டியிருக்கான்.... அதுக்கப்புறம் அவனெ ரெக்கமன்ட் பண்ணவர்கிட்ட கேட்டா அப்படியா சார் எனக்கே இன்னொருத்தர்தான் இன்ட்ரொட்யூஸ் பண்ணார் சார்னு கழண்டுக்கிட்டார்.... அப்புறம் போலீஸ் வரைக்கும் போய் அவனெ தேடிப்புடிச்சோம்..... அவன் போலீசையே கணக்கு பண்ணி கேஸே இல்லாம செஞ்சிட்டான்..... நீங்க செக் புக் முழுசும் ப்ளாங்கா கையெழுத்த போட்டு இவன்கிட்ட குடுத்துட்டு இவன் கையாடல் பண்ணிட்டான்னு சொன்னா எப்படி சார்? கோர்ட்ல கேஸ் நிக்காது.... அதனால compromiseஆ போயிருங்க... எவ்வளவு முடியுமோ அத நாங்க அவன்கிட்ட இருந்து ரிக்கவர் பண்ணி தந்துடறோம்னு சொல்லி.....நாப்பதாயிரம் போல கலெக்ட் பண்ணி குடுத்துட்டு கம்ப்ளெய்ன்ட திருப்பி வாங்கிக்குங்கன்னு கம்பெல் பண்ணாங்க... கோபாலும் சரி விட்றலாம்பா ரவுடி மாதிரி பேசறான்னான்.... சரின்னுட்டு அத்தோட விட்டுட்டேன்....'

அவர் இறுதியாக சொன்ன கோபாலும் 'சரி விட்றலாம்பா' என்ற வரிகள் ஒருவேளை இதற்கு கோபாலும் உடந்தையாக இருந்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றியது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'சரி சார்.... இன்னொரு கேள்வி.... இப்ப கோபாலோட பிஏவா இருக்கற ராமராஜன் ஒங்க கம்பெனியில ரொம்ப நாளா இருக்காரா?' என்றான்.... 

'ரொம்ப நாள்னா.... ரெண்டு மூனு வருசம் இருக்கும் சார்..... முதல்ல மார்க்கெட்டிங்குக்காகத்தான் சேத்தோம்..... ஆளுங்கள கன்வின்ஸ் பண்றா மாதிரி பேசறதுல அவன் கில்லாடி..... எதுக்கு கேக்கறீங்க?'

'சொல்றேன்.... அவருக்கும் முருகேசனுக்கும் தொடர்பு ஏதாச்சும் இருக்க சான்ஸ் இருக்கா?'

'தெரியலயே சார்....' என்று பதிலளித்தார் சீனிவாசன்.

'எதுக்கு கேக்கறேன்னா அந்த  கோபாலோட வீட்ட பாக்கறதுக்கு முருகேசனும் மாதவியும் வந்தப்போ அவங்களுக்கு வீட்ட காட்டுனது ராமராஜந்தான்னு ராகவன் சொன்னார்...... அதான்....'

'இருக்கும் சார்.... ஏன்னா கோபால் அங்கருந்து ஷிப்ட் ஆனதும் வித்துறலாம்கற ஐடியாவுல அந்த ரெஸ்பான்சிபிளிட்டிய ராமராஜன்கிட்டதான் குடுத்துருந்தோம்..... ஆனா முடியல... சரி வாடகைக்கு விட்றலாம்னு டிசைட் பண்ணி ஹின்டுல ஆட் குடுத்தோம்.. அதுவும் அவர்தான் செஞ்சார்..... ஆட் வந்த அன்னைக்கி வீட்ட பாக்க வசதியா அவர்தான் அன்னைக்கி முழுசும் அங்க வெய்ட் பண்ணிக்கிட்டுருந்தார்னு நினைக்கிறேன்..... அப்போ வந்தவங்கள்ல இந்த பொண்ணும் இருந்துருக்கலாம்... ஆனா முருகேசன்தான் அந்த பொண்ண கூட்டிக்கிட்டு வந்தாங்கற விஷயம் நீங்க இப்ப சொன்னதுக்கப்புறந்தான் தெரியும்.... ஒருவேளை அப்பத்துலருந்து முருகேசன ராமராஜனுக்கு தெரிஞ்சிருக்கலாம்.....'

இதில் ஏதோ செட்டப் உள்ளது என்ற சந்தேகத்துடன் சில நொடிகள் யோசித்த ராஜசேகர் மணியை பார்த்தான். பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. 'ரொம்ப லேட்டாயிருச்சே சார்.....  மீதிய நாளைக்கி பேசலாமா?' என்றான்.

சீனிவாசனும் திரும்பி ஹால் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். 'பரவால்லை சார்.... நா ராகவன் என்ன சொன்னார்னு கேக்க நினைச்சேன்.... ஆனா இப்ப நீங்க கேக்கற கேள்விங்க என்னெ இன்னும் கன்ஃப்யூஸ் பண்ணிருச்சி.... என்னன்னு தெரிஞ்சிக்காம தூக்கம் வராது சார்..... சொல்லுங்க எதுக்கு முருகேசன பத்தியும் ராமராஜன பத்தியும் கேக்கறீங்க?'

'எல்லாத்தையும் சொல்றேன்.... கடைசியா ஒரு கேள்வி.... ராமராஜன் ரெண்டு நாளைக்கி முன்னால ஒங்க கம்பெனியிலருந்து ரிசைன் பண்ணிட்டாராமே தெரியுமா சார்?'

சீனிவாசன் இதை அறிந்திருக்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. 'தெரியாதே சார்....? நா தங்கச்சி வீட்லருந்து இன்னைக்கி சாயந்தரம்தான் திரும்பி வந்தேன்.... வந்தவுடனே ராகவன் ஃபோன் பண்ணார்..... அதுலருந்து ஒங்கள கேக்கணும், கேக்கணும்னே நினைச்சிக்கிட்டிருந்தேன்......'

சரி.. இனியும் இவரிடம் கேள்விகள் கேட்டு துன்புறுத்த வேண்டாம் என்று நினைத்த ராஜசேகர் ராகவன் கூறியவைகளை சுருக்கமாக கூறி முடித்தான். 'ஆனா அவர் சொன்னத வச்சி கோர்ட்டுக்கு போக முடியாது சார்.... அதுவுமில்லாம கோர்ட்ல சாட்சி சொல்ல வேண்டியது மிசஸ் ராகவன்தான்.... என்கிட்ட சொன்னா மாதிரியே கோர்ட்ல சொல்றதுக்கு கவர்ன்மென்ட் லாயர் அவ்வளவு ஈசியா அலவ் பண்ணிறமாட்டார்...... இவர ஹோஸ்டைல் விட்னஸா ட்ரீட் பண்ணி இவர் சொல்ற எதையும் கணக்குல எடுத்துக்கக் கூடாதுன்னு வாதாடுவார்..... என்னோட கிராஸ் எக்சாமினேஷன்ல முழுசையும் வெளியில கொண்டு வர முடியும்னாலும் அந்த லேடி எந்த அளவுக்கு கோர்வையா சொல்வாங்கன்னும் தெரியலை.....அதான் ஒங்கக்கிட்ட சொல்லலாமா வேணாமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்.... அவங்க சொல்றத வேற யார் வழியிலாவது கன்ஃபர்ம் பண்ணிக்க முடிஞ்சா நல்லாருக்கும்.... அதுக்குத்தான் உங்கக்கிட்ட அந்த ரெண்டு பேர பத்தியும் கேட்டேன்... நீங்க இப்ப சொன்னதுலருந்து முருகேசனுக்கும் ராமராஜனுக்கும் இடையில நமக்கு தெரியாத ஏதோ ஒரு ரிலேசன்ஷிப் இருக்கு...... அது என்னான்னு கண்டுபிடிக்கணும்...... முருகேசனுக்கு ஒங்க மேல என்மிட்டி (enmity) இருக்கறதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைக்கேன்..... ஆனா ராமராஜனுக்கு இதுல ஏதாச்சும் ரோல் இருக்கான்னும் பாக்கணும்.... வசந்த் கிட்ட சொல்லி ஃபர்தரா இன்வெஸ்ட்டிகேட் பண்ணிட்டு சொல்றேன்..... அதுவரைக்கும் இதையே நினைச்சி டென்ஷனாகாம இருந்தீங்கன்னா நல்லது..... என்ன சார்?'

ராகவன் கூறியிருந்தவைகள் அதற்குப்பிறகு குமார் கூறியதுடன் ஒத்துப்போயிருந்தாலும் நீதிமன்றத்தில் அவர்கள் தன்னிடம் கூறியிருந்ததுபோன்றே கூறினால் மட்டுமே அது வழக்கின் தீர்ப்பு கோபாலுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று ராஜசேகர் நினைத்தான். அதற்கு முன்பு சீனிவாசனிடம் அதைப் பற்றி கூறி வீணாக அவர் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவனுக்கு தோன்றியது. ஆகவேதான் சற்று முன்பு குமாரின் ஒலிநாடாவில் அவன் கேட்ட விஷயங்களைக் கூட அவரிடம் கூறாமல் மறைத்துவிட்டான்.  

சீனிவாசன் பதிலளிக்காமல் ஒரு நீண்ட பெருமூச்சுடன் சோபாவிலிருந்து எழுந்தார். 'சரி சார்..... நா இதுல டென்ஷனாயி ஒன்னும் ஆவப்போறதில்ல போலருக்கு...... ஒங்களால முடிஞ்சத செய்ங்க.... குட்நைட்.'

ராஜசேகரும் எழுந்து 'குட் நைட் சார்..... கிவ் மீ டு த்ரீ டேய்ஸ்..... ஃபுல் டீட்டெய்ல்சும் தெரிஞ்சதுக்கப்புறம் வந்து பாக்கறேன்.' என்று விடையளித்துவிட்டு கிளம்பினான். 

******* 

அவன் தன்னுடைய குடியிருப்பை அடைந்ததுமே அவனுடைய செல்போன் ஒலித்தது. வசந்தா? இந்த நேரத்துல எதுக்கு கூப்டறான் என்று நினைத்தவாறு, 'என்னடா இந்த நேரத்துல?' என்றான்.

'விஷயம் இருக்கு பாஸ். அதான் கூப்ட்டேன்...'

'அப்படியென்னடா தலைபோற விஷயம்?' என்றான் வசந்தின் பீடிகையை விரும்பாதவன்போல்..'சஸ்பென்ஸ் வைக்காம விஷயத்த சொல்லு.' 

'ராமராஜன யாரோ மர்டர் பண்ணிட்டாங்க பாஸ்.'

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராமராஜன் யாரிடமும் தெரிவிக்காமல் தன்னுடைய அறையில் மயங்கிக் கிடந்த குமாரைப் பற்றியும் கவலைப்படாமல் அறையைக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டதை கேட்டதிலிருந்தே இப்படி ஏதாவது நடக்கும் என்ற ஐயம் அவன் மனதுக்குள் எழுந்திருந்தது. ஆனாலும் அது நனவானபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதை எப்படி கையாள்வது? 

'என்னடா சொல்ற? ஒனக்கு யார் சொன்னா?'

'ராமராஜன் பர்சுல மேன்ஷன் விசிட்டிங் கார்ட் இருந்துருக்கும்போல.... அரை மணி நேரத்துக்கு முன்னால ட்ரிப்ளிக்கேன் எஸ்.ஐ. மேன்ஷனுக்கு வந்து விசாரிச்சிட்டு போனாராம். மேன்சன் மேனேஜர் எனக்கு ஃபோன் பண்ணியிருந்தார்.'

'குமார நாம அங்கருந்து கொண்டு போன விஷயம் போலீஸ்கிட்ட சொல்லிட்டாங்களாமா?'

'இல்ல பாஸ்... போலீஸ் அதப்பத்தி கேக்காததால நாமளா எதுக்கு சொல்லி மாட்டிக்கறதுன்னு நினைச்சி பேசாம இருந்துட்டாராம்.... நீங்களும் தப்பித்தவறி இந்த விஷயத்த வெளியில சொல்லிறாதீங்க சார்... அப்புறம் எம்பாடு திண்டாட்டமாயிரும்னு சொன்னார்.'

'சரி... அதுவும் ஒருவகையில நல்லதுக்குத்தான்.' என்ற ராஜசேகர் சட்டென்று நினைவுக்கு வர, 'என்ன சொன்னே, ட்ரிப்ளிக்கேன் போலிசா?'

'ஆமா பாஸ்.... அவரோட பாடி ட்ரிப்ளிக்கேன் மெட்ரோ ட்ரெயின் பிரிட்ஜுக்கு கீழ கிடந்துதாம். கழுத்துல ஒரேயொரு டீப் வெட்டு மட்டுந்தானாம்.... வேற எங்கயோ வச்சி மர்டர் பண்ணிட்டு அங்க கொண்டு போயி போட்ருப்பாங்க போலருக்கு..'

'அப்போ E1 போலீசுக்கு இதுவரைக்கும் தெரிய வாய்ப்பில்லைன்னு நினைக்கேன்....'

'அப்படித்தான் நானும் நினைக்கேன் பாஸ்...' என்று ஆமோதித்த வசந்த் தொடர்ந்து, 'இப்ப என்ன பண்ண போறீங்க பாஸ்?' என்றான்.

அதான? இப்ப என்ன பண்றது?  ராகவனும் அவரைத் தொடர்ந்து குமாரும் கூறியவற்றை ஒலிநாடாவில் அவன் பதிந்து வைத்திருந்தாலும் அதை காவல்துறையிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் கோபால் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான். அவர்கள் இருவரையும் சாட்சி கூண்டில் வைத்து தன்னுடைய குறுக்கு விசாரணை மூலம் மாதவியின் கொலையில் கோபால் எவ்விதத்திலும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்பதை நிருபித்து வழக்கை தள்ளுபடி செய்ய வைத்துவிடலாம் என்றும் அதன் பிறகு தன்னிடமுள்ள ஒலிநாடாக்களை போலீசிடம், குறிப்பாக, துணை ஆய்வாளர் தன்ராஜிடம் சமர்ப்பிக்கலாம் என்றுதான் அவன் எண்ணியிருந்தான். ஆனால் ராமராஜனின் மரணம் இனிமேலும் அந்த உத்தியை கடைபிடிப்பதில் பயனில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.  

'என்ன பாஸ்  சைலன்டாய்ட்டீங்க?' என்ற குரல் எதிர்முனையிலிருந்து வந்தது. 

'அதத்தான்டா யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.'

'நா உடனே புறப்பட்டு வரவா பாஸ்?' 

'வந்து?'தொடரும்..  

தீபாவளி போனஸ்: நாளை முதல் தீபாவளி வாரம் துவங்குவதால் தினமும் இரண்டு பதிவுகள் இடுவதென தீர்மானித்துள்ளேன். முதல் பதிவு நண்பகல் 12.00 மணிக்கும் இரண்டாவது பதிவு பிற்பகல் 2.00 மணிக்கும் பதிவிடப்படும். அநேகமாக தீபாவளியன்று இத்தொடர் முடிவு  பெறும். 

13 comments:

2008rupan said...

வணக்கம்

தொடரின் இறுதிப்பகுதியை தீபாவளி அன்று எதிர்பார்த்து காத்திருப்போம் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

கதையை முழுமையாக எழுதி விட்டீர் போலிருக்கு. வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

2008rupan said...
வணக்கம்

தொடரின் இறுதிப்பகுதியை தீபாவளி அன்று எதிர்பார்த்து காத்திருப்போம் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்//

நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
கதையை முழுமையாக எழுதி விட்டீர் போலிருக்கு. வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.//

ஆமா சார். இன்னைக்கித்தான் க்ளைமாக்ஸ் எழுதி முடிச்சேன். ஆனால் ஒரு சில நண்பர்கள் இரண்டிரண்டு பதிவாக வேண்டாம் படிப்பது கடினம் என்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.

உங்களுடைய கருத்து என்ன?

அ. பாண்டியன் said...

முடியும் தருவாயில் எனது வருகை இருப்பினும் உங்கள் உழைப்பு படைப்பில் தெரிகிறது.நல்லதொரு சிந்தனை கொண்ட நெஞ்சத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடருங்கள் உங்கள் தமிழ்ப்பயணத்தை..

வே.நடனசபாபதி said...

தீபாவளி போனஸாக தினம் இரண்டு பதிவிட்டு தீபாவளி அன்று தொடரை முடிப்பதாக சொல்லியுள்ளீர்கள். தினம் ஒரு பதிவே இடலாம்.

தொடர் விரைவில் முடியப்போகிறது என்பதில் வருத்தமே!ஆனாலும் எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா?

சென்னை பித்தன் said...

குமுதம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு,மூன்று குமுதம் வெளியிடுவது போல்,தினம் இரண்டு பதிவா?எழுதுபவருக்குக் கஷ்டம் இல்லாத போது,படிப்பவர்களுக்கு என்ன கஷ்டம்?வாழ்த்துகள்

Packirisamy N said...

It is already difficult to read at your speed of posting. Two episodes per day are too much for me. Thanks.

டிபிஆர்.ஜோசப் said...


அ. பாண்டியன் said...
முடியும் தருவாயில் எனது வருகை இருப்பினும் உங்கள் உழைப்பு படைப்பில் தெரிகிறது.நல்லதொரு சிந்தனை கொண்ட நெஞ்சத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடருங்கள் உங்கள் தமிழ்ப்பயணத்தை..//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
தீபாவளி போனஸாக தினம் இரண்டு பதிவிட்டு தீபாவளி அன்று தொடரை முடிப்பதாக சொல்லியுள்ளீர்கள். தினம் ஒரு பதிவே இடலாம். //

சரி சார். இன்னும் சிலரும் இதைத்தான் கூறியுள்ளனர். உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

சென்னை பித்தன் said...
குமுதம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு,மூன்று குமுதம் வெளியிடுவது போல்,தினம் இரண்டு பதிவா?எழுதுபவருக்குக் கஷ்டம் இல்லாத போது,படிப்பவர்களுக்கு என்ன கஷ்டம்?//

கதை முழுவதையும் எழுதி முடித்துவிட்டதால் இரண்டென்ன மூன்று பதிவுகளையும் கூட தினமும் இட முடியும். ஆனால் படிப்பவர்களுக்கு அதுவும் பணியில் இருப்பவர்களுக்கும் சிரமமாக இருக்கும் என்பதால் பல ?! நண்பர்களுடைய கோரிக்கைக்கு இணங்கி இப்போதுள்ளது போலவே தொடர முடிவு செய்துள்ளேன்.

இருப்பினும் உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
It is already difficult to read at your speed of posting. Two episodes per day are too much for me. Thanks.//

You are right. I'll continue with one post. Thanks for your visit and comment.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு பதிவாகவே போடுங்கள். தீபாவளியை தண்டி சென்றாலும் பரவாயில்லை