26 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 58

'பாஸ்.... இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்.' என்றான் வசந்த் சட்டென்று.

'என்ன?' என்றான் ராஜசேகர்.

'பிபி PW2 சும்மானாச்சும் உடம்புக்கு சரியில்லைன்னு சர்டிஃபிக்கேட் அனுப்பிருப்பார்னு DMO முன்னால ஆஜராயி ஹெல்த் செக் பண்ணிக்கணும்னு பெருமாள் சார் கிட்ட சொல்லியிருக்காராம். இன்னைக்கி காலையிலதான் நம்ம தோஸ்த் ஃபோன் பண்ணி சொன்னான்.'

ராஜசேகர் சிரித்தான். 'அந்த பிபி அடிபட்ட ஆள்.... அவ்வளவு லேசுல  விட்றமாட்டார். சரி... ஒன்னு பண்லாம்... நாமளே ராகவன கூப்ட்டு வார்ன் பண்லாம்... ஒருவேளை நீ சொல்றா மாதிரி அவங்க சும்மா ஃபேக் (fake) சர்ட்டிபிக்கேட் வாங்கி குடுத்திருந்தா பிபி சும்மா விடமாட்டார், அதனால பேசாம அடுத்த ஹியரிங் சமயத்துல ஆஜராயிருங்கன்னு அட்வைஸ் பண்லாம், என்ன சொல்ற?'

'இது நமக்கு தேவையா பாஸ்?'  என்றான் வசந்த். 'அவங்களுக்கு என்ன டென்ஷனோ?'

'டேய்... அவங்க ஆஜரானத்தான்டா நம்ம கேஸும் க்ளோசாவும்... இல்லன்னா இழுத்துக்கிட்டே போவும்....'

'அதுவும் சரிதான் பாஸ்.... உங்கக்கிட்ட அவங்க ஃபோன் நம்பர் இருக்கா?'

'அதான் அவர் அன்னைக்கி நா மாதவி வீட்ல இருந்தப்போ கூப்ட்ருந்தாரே?'

'அப்ப சரி.... நம்பர குடுங்க கூப்ட்டு பாக்கலாம்.'

'வேணாம்....' என்று மறுத்தான் ராஜசேகர், 'நீ கூப்ட்டா எப்படி ரெஸ்பான்ட் பண்ணுவாங்களோ? நானே கூப்டறேன்.'

எதிர்முனையில் ஒரு சில நொடிகள் யாரும் எடுக்காமல் ரிங் போய்க்கொண்டே இருந்தது. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ராஜ்சேகர் இணைப்பைத் துண்டிக்கவிருந்த நொடியில் ராகவனின் குரல் கேட்டது. 

'சொல்லுங்க சார்.. நா ராகவன் பேசறேன்.'

'ஒங்க வஃய்புக்கு இப்ப எப்படி இருக்கு சார்?' என்றான் ராஜசேகர் நேரடியாக.

எதிர்முனையில் சற்று தயங்குவது தெரிந்தது. 

'எதுவாருந்தாலும் சொல்லுங்க சார்..' என்றான் ராஜசேகர்.

'வய்ஃப் நல்லாத்தான் சார் இருக்காங்க... '' என்றார் ராகவன். 'ஆனா அந்த பெருமாள் வந்து போனதுக்கப்புறம் she is psychologically affected.... ரொம்ப பயப்படறா... அதான் ப்ரஷர் ஜாஸ்தியாயிருச்சி... she is not fit for travelனு ஒரு எம்.சி வாங்கி சப்மிட் பண்ணேன்....'

'ஆனா உங்க வய்ஃபால டிராவல் பண்ண முடியும், அப்படித்தான?'

'ஆமா சார்...' என்று தயக்கத்துடன் பதில் வந்தது.

'தப்பு பண்றீங்க சார்.... இப்ப அந்த பிபி டிஸ்ட்ரிக்ட் மெடிக்கல் ஆஃபீசர் முன்னால உங்க வய்ஃப் ஆஜராகி மெடிக்கல் செக்கப் பண்ணிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு பண்ணப் போறார்னு கேள்விப்பட்டேன். DMO ஒங்க வய்ஃப் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட்டுன்னு சர்ட்டிஃபை பண்ணிட்டா உங்க பாடு திண்டாட்டமாயிரும்..... கோர்ட்ட ஏமாத்த ட்ரை பண்ணீங்கன்னு சொல்லி அரெஸ்ட் வாரன்ட் இஷ்யூ பண்ணச் சொல்லிக் கூட அவர் ட்ரை பண்லாம்....'

'என்ன சார் சொல்றீங்க?' என்றார் ராகவன் பதற்றத்துடன்.

'ஆமா.... அதனால நா சொல்றபடி செய்ங்க...'

'சொல்லுங்க சார்...'

'நீங்க உடனே E1 போலீஸ் ஸ்டேஷன கூப்ட்டு என் வய்ஃபுக்கு இப்ப பரவால்லை சார்.... அடுத்த ஹியரிங் அன்னைக்கி கோர்ட்டுக்கு வந்துருவாங்கன்னு  தன்ராஜ் கிட்டயோ இல்ல இன்ஸ்பெக்டர் பெருமாள் கிட்டயோ சொல்லிருங்க.. டிலே பண்ண வேணாம்...'

'அப்படியா சொல்றீங்க?' என்று மீண்டும் ராகவன் தயங்கினார். 

'இதத் தவிர அரெஸ்ட் வாரன்ட அவாய்ட் பண்றதுக்கு வேற வழியில்ல சார்..... டைம வேஸ்ட் பண்ணாம இப்பவே ஃபோன் பண்ணி சொல்லிருங்க... உங்க நன்மைக்குத்தான் சொல்றேன்... அப்புறம் ஒங்க இஷ்டம்.' என்று சற்று காட்டமாகவே சொன்ன ராஜசேகர் எதிர்முனையிலிருந்த ராகவன் மறுத்துப் பேச வாய்ப்பளிக்காமல் இணைப்பை துண்டித்துவிட்டு எதிரில் அமர்ந்திருந்த வசந்தைப் பார்த்தான். 

'நீங்க ஸ்பீக்கர்ல போட்டது நல்லதா போச்சி பாஸ்.... என்ன தைரியம் பாத்தீங்களா? கோர்ட் சம்மன் வந்தாத்தான் தெரியும்!'

'எல்லாம் அசட்டு தைரியம்தான்.... சரி அத வுடு.....' என்ற ராஜசேகர் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு வியந்தான். 'டேய் டைம் போனதே தெரியாம ஒக்காந்துருக்கோம்.... கிளம்பு.'

'சரி பாஸ்.... நாளைக்கு ஏதாச்சும் வேலையிருக்கா?'

'இல்லடா... இனி அடுத்த ஹியரிங் டேட் வந்தாத்தான்....'

'அப்பன்னா நா ரெண்டு நாள் லீவ் எடுத்துக்கட்டா பாஸ்?'

'ஏன், மறுபடியும் இன்வெஸ்ட்டிகேஷனா?' என்றான் ராஜசேகர் கேலியுடன். 

'இல்ல பாஸ்.... ராஜிக்கு கொஞ்சம் ஜ்வெல்ஸ் எடுக்கணுமாம்.... அதான்... மாப்ளை வீட்லருந்து மேரேஜ் டேட் குறிச்சி அனுப்பிச்சிருக்காங்க....'

'அடப்பாவி, இத கூடவா ஸ்லோவா சொல்லுவ?' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன். 'என்னைக்கி மேரேஜ்?'

'ஜனவரி 17 பாஸ். இன்னும்  மூனு மாசம் இருக்குன்னாலும் கோல்ட் ப்ரைஸ் டெய்லி ஏறிக்கிட்டே இருக்கே... பணம் கையில இருந்தா வாங்கிறேன்டான்னு அம்மா டெய்லி சொல்லிக்கிட்டே இருக்காங்க.... அதான் நாளைக்கு நல்ல நாளாம்....'

'சரி... சந்தோஷமா போய்ட்டு வா..... ஏதாச்சும் அர்ஜன்ட்னா ஃபோன் பண்றேன்.'

'ஓக்கே பாஸ்...' என்று வசந்த் தன் லேப்டாப் பையுடன் கிளம்ப ராஜசேகரும் அவனைத் தொடர்ந்து அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு வெளியேறினான்.

******

அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு புறப்பட்ட ராஜசேகர் வீட்டை சென்றடைந்தபோது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. 

வழி நெடுக இருந்த வாகன நெரிசலில் சிக்கி வந்தவனிடம் 'சீனிவாசன் சார் ரெண்டு மூனு தரம் வந்து போய்ட்டாருங்க... என்னென்னு போய் பார்த்துட்டு வந்துருங்களேன்.' என்று அவனுடைய மனைவி கோக்கிலா கூற 'அவருக்கு வேற வேலையில்லடி...' என்று அவள் சற்றும் எதிர்பாராமல் எரிந்து விழுந்தான். அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள் கோக்கிலா. 

'என்ன ஆச்சிங்க...? இப்ப நா என்ன சொல்லிட்டேன்னு......' என்று பதில் பேச முனைந்தவள் அவனுடைய இறுகிய முகத்தைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டாள். ஆள் மூட் அவுட் போலருக்கு... இதுக்கு மேலயும் நாம ஏதாச்சும் பேசினா டேஞ்சர்தான் என்று நினைத்தவாறு உணவு மேசை மீது தயாராக வைத்திருந்த உணவை எடுத்து மீண்டும் சூடாக்கலாம் என்று கிச்சனுக்குள் நுழைந்துக்கொண்டாள். குளிச்சிட்டு வந்தா நார்மலாயிருவார். 

அவள் நினைத்தவாறே அடுத்த பதினைந்து நிமிடங்களில் குளித்து உடை மாற்றி வந்த ராஜசேகர், 'காஞ்ச் தூங்கிட்டாளா?' என்றான் ஒன்றுமே நடவாததுபோல். 

மறுபேச்சு பேசாமல் அவன் உணவு மேசையில் வந்தமர்ந்ததும் சூடாக்கி வைத்திருந்த சப்பாத்தியையும் தொட்டுக்கொள்ள வைத்திருந்த வெஜிடபிள் குருமாவையும் பரிமாறிவிட்டு அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனருகில் அமர்ந்திருந்தாள். 

அவன் சாப்பிட்டு முடித்து கைகழுவிய கையோடு, 'சாரி கோக்கி... ஆஃபீஸ்லருந்து வர வழி முழுசும் ஒரே டிராஃபிக் ஜாம்.... அதான் வந்ததும் வராததுமா நீ சொன்னதும் டென்ஷனாய்ட்டேன்....' என்றான்.

இதத்தான் பத்து வருசமா அனுபவிச்சிக்கிட்டிருக்கேனே என்பதுபோல் ஒரு லேசான புன்னகையுடன் எழுந்து உணவுபாத்திரங்களை எடுத்துச் சென்று கிச்சன் சிங்கில் போட்டுவிட்டு விளக்கை அணைத்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். 'அவருக்கு ஃபோன் பண்ணியாவது என்ன விஷயம்னு கேளுங்களேன்.' என்றாள்.

'சரி.' என்று சுருக்கமாக கூறிய ராஜசேகர் தன் செல்ஃபோனை எடுத்து டயல் செய்தான். அவனுடைய அழைப்பை எதிர்பார்த்திருந்தவர்போல் சீனிவாசன் உடனே எடுக்க, 'இப்பத்தான் வந்தேன் சார்..... ஏதாச்சும் அர்ஜன்ட் விஷயமா?'

'ஆமா சார்....  ராகவன் உங்கள பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்னு சொன்னார்..... அவர் சொன்ன விதம் இதுல ஏதாச்சும் புதுசா இருக்குமோன்னு நினைக்க தோனிச்சி... அதான் உங்கக்கிட்ட கேக்கலாம்னு.....'

ராகவனிடம் வழக்கு முடியும் வரையிலும் இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொல்லியிருந்தும் எதற்காக அவர் இவரிடம் போய்.....? இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான். ராகவன் அவனிடம் கூறியிருந்த விஷயம் கோபாலுக்கு சாதகமானதாகத்தான் இருந்தது என்றாலும் அதை வேறு யாராவது கராபரேட் (corroborate-ஊர்ஜிதம்) செய்யாமல் இவரிடம் எப்படி சொல்வது? எதையாவது சொல்லி சமாளிக்கலாமா? ஒருவேளை ராகவன் தன்னிடம் கூறியவற்றை முழுவதுமாக இவரிடம் கூறியிருந்தால்? அவர் சொன்னதை நம்மிடம் உறுதிசெய்துக்கொள்வதற்காக சீனிவாசன் நம்மிடம் தெரியாததுபோல் கேட்டிருப்பாரோ? நாம் வேறு எதையாவது சொல்லி சமாளிக்க ஏற்கனவே விஷயம் முழுவதையும் அறிந்துவைத்திருக்கும் இவர் நம்மை தவறாக நினைத்துவிட்டால்? 

'சார்....?' என்று மீண்டும் சீனிவாசன் அழைப்பது கேட்டது....

இனியும் தாமதித்து அவரை நோகடிக்க வேண்டாம் என்று நினைத்த ராஜசேகர் தன் அருகில் அமர்ந்திருந்த கோக்கிலாவைப் பார்த்தான். அவள் ஆவலுடன் தான் பேசுவதை கேட்க காத்திருந்தது புரிந்தது. இங்கிருந்து பேச வேண்டாம் என்று முடிவு செய்து எழுந்து நின்றான். 'சார் நா கீழ வந்து சொல்றேன்.' 

இணைப்பை துண்டித்துவிட்டு தன் மனைவியைப் பார்த்தான். 'நீ போய் படு.... நா கீழ போய்ட்டு வந்துடறேன்... கதவ நா பூட்டிக்கிட்டு போறேன்...' என்றவாறு அவளுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி அடுத்த சில நொடிகளில் சீனிவாசனின் குடியிருப்பை அடைந்தான்.

அவனுக்காக காத்திருந்த சீனிவாசனின் முகத்தில் தெரிந்தது கவலையா குழப்பமா என்பதை அனுமானிக்க முடியாத வகையில்...... இந்த வயசான காலத்துல இவருக்கு இந்த துன்பம் தேவைதானா என்று தோன்றியது. 

'ராகவன் என்னெ மீட் பண்ணி சில விஷயங்கள சொன்னார் சார். ஆனா அத எந்த அளவுக்கு நம்பறதுன்னு தெரியல.... இன்னும் வேற யார்கிட்டயாவது கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்னு பாத்தேன்... நா சொல்ற வரைக்கும் இது நமக்குள்ளவே இருக்கட்டும்னு கூட சொல்லியனுப்புனேன்.... இருந்தும் உங்கக் கிட்ட சொல்லியிருக்கார்....'

'அப்படியா சார்?' என்றார் சீனிவாசன் கவலையுடன்.... 

'சார் நா அவர் சொல்றதுக்கு முன்னால உங்கக்கிட்ட சில கேள்விகள கேக்கலாமா?' என்றான் ராஜசேகர்.

'என்ன கேள்விங்க சார்?'

'ஒங்களுக்கு முருகேசன்னு யாரையாச்சும் தெரியுமா?'

அவர் பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்ததைக் கவனித்தான். தெரியலைன்னா உடனே சொல்லியிருப்பாரே..... So... இவருக்கும் அவன தெரிஞ்சிருக்கு.....

'தெரியும் சார்..... சரியான ஃப்ராடு பய.....' என்றார் சீனிவாசன்.

தொடரும்...

12 comments:

வே.நடனசபாபதி said...

முக்கியமான கட்டத்தில் ‘தொடரும்’ எனப் போட்டுவிடுகிறீர்கள். என் செய்ய! நாளை வரை காத்திருக்க வேண்டியதுதான்.

சென்னை பித்தன் said...

ஆர்தர் ஹெய்லி போன்ற நாவலாசிரியர்கள் ஒரு நாவல் எழுதும் முன்,அது சம்பந்தமாய் நிறைய ஆராய்ச்சி செய்வார்களாம்.அது போல் நீங்களும், எடுத்துக்கொண்ட கருவில் ஆராய்ச்சி செய்து எழுதுவது தெரிகிறது.வாழ்த்துகள்

சென்னை பித்தன் said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்!

2008rupan said...

வணக்கம்

ஆகா...ஆகா...அருமை தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...


யாராவது எதையாவது கேட்டால்தான் பதில் சொல்கிறார்கள். கேசுக்கு அவசியமில்லாதது என்று மறைக்கிறார்களா இல்லை முக்கியமில்லாதது என்று நினைக்கிறார்களா.?ராகவன் பேசியபோதாவது முருகேசனைப் பற்றி சீனுவாசன் எண்ணவில்லையா.? தொடர்கிறேன்.

Packirisamy N said...

ஒவ்வொரு அத்தியாயத்தை முடிக்கும்பொழுதும், ஏதாவது ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்து வைத்துக் காக்கவைத்துவிடுகிறீர்கள். யாரோ முன்பே கூறியதுபோல இன்னும் கோபாலின் மனைவி மட்டும்தான் பாக்கி. பொறுத்திருந்து பார்க்கிறேன். நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
முக்கியமான கட்டத்தில் ‘தொடரும்’ எனப் போட்டுவிடுகிறீர்கள். என் செய்ய! நாளை வரை காத்திருக்க வேண்டியதுதான்.//

சஸ்பென்ஸ் தாங்க முடியல சார்னு சில பேர் சொன்னதால நாளையிலருந்து ரெண்டு பதிவுகள் போட்டு ஒரு வாரத்துக்குள்ள முடிச்சிறலாம்னு ஒரு ஐடியா.

எனக்கும் கூட வேற எந்த வெளி வேலையையும் பாக்க முடியல.. வீட்டம்மாவோட வருத்தத்தையும் சம்பாதிச்சிக்கிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


சென்னை பித்தன் said...
ஆர்தர் ஹெய்லி போன்ற நாவலாசிரியர்கள் ஒரு நாவல் எழுதும் முன்,அது சம்பந்தமாய் நிறைய ஆராய்ச்சி செய்வார்களாம்.அது போல் நீங்களும், எடுத்துக்கொண்ட கருவில் ஆராய்ச்சி செய்து எழுதுவது தெரிகிறது.வாழ்த்துகள்
1:00 PM
சென்னை பித்தன் said...
தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்!//

மிக்க நன்றி சார். சில ஆண்டுகளுக்கு முன்னால் நம் வங்கித்துறையை சார்ந்த ஒரு இருநூறு பகுதிகளைக் கொண்ட தொடர்கதையை எழுதினேன். அப்போதும் ஒரு நண்பர் இப்படி எழுதியிருந்தார். ஆர்தர் ஹெய்லியின் The Prize, Wheels மற்றும் Airport எனக்கு மிகப் பிடித்த நாவல்கள்.

இப்போதெல்லாம் ஆங்கில குறிப்பாக மேற்கத்திய எழுத்தாளர்கள் பலரும் ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகுதான் எழுதுகின்றனர். க்ரைம் நாவலகள் என்றால் இப்போது மிக்கயேல் கொனெல்லி என்கிற அமெரிக்கரின் நாவல்கள் இப்படித்தான் எழுதப்படுகின்றன. அவருடைய நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம் இந்த தொடரில் நிறையவே தெரியும்.

டிபிஆர்.ஜோசப் said...


2008rupan said...
வணக்கம்

ஆகா...ஆகா...அருமை தொடர எனது வாழ்த்துக்கள்//

தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க ரூபன்.

டிபிஆர்.ஜோசப் said...G.M Balasubramaniam said...

யாராவது எதையாவது கேட்டால்தான் பதில் சொல்கிறார்கள். கேசுக்கு அவசியமில்லாதது என்று மறைக்கிறார்களா இல்லை முக்கியமில்லாதது என்று நினைக்கிறார்களா.?ராகவன் பேசியபோதாவது முருகேசனைப் பற்றி சீனுவாசன் எண்ணவில்லையா.?//

எப்படி சார் மூனு வருசத்துக்கு முன்னால ஃப்ராடு பண்ணிட்டு போனவன பத்தி சந்தேகப்படறது?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...Packirisamy N said...
ஒவ்வொரு அத்தியாயத்தை முடிக்கும்பொழுதும், ஏதாவது ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்து வைத்துக் காக்கவைத்துவிடுகிறீர்கள். யாரோ முன்பே கூறியதுபோல இன்னும் கோபாலின் மனைவி மட்டும்தான் பாக்கி. பொறுத்திருந்து பார்க்கிறேன். நன்றி.//

உங்களுடைய பொறுமையை இனிமேலும் சோதிக்க விருப்பமில்லாமல்தான் நாளை முதல் இரண்டிரண்டு பதிவுகளாக பதிந்து ஒருவாரத்திற்குள் தொடரை முடித்துவிட எண்ணியுள்ளேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆவலை தூண்டுகிறது.