24 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 56

'அப்படியா?' என்ற எஸ்.பியின் பதிலிலிருந்தே அவர் தான் கூறியதை நம்பவில்லை என்பது ராஜசேகருக்கு தெரிந்தது. 

'என்ன சார்... ஒங்களுக்கு போயி ராங் இன்ஃபர்மேஷன் குடுப்பேனா?' என்றான். 'ஒரு சின்ன ரிக்வெஸ்ட் சார்.'

'சொல்லுங்க.'

'என்னோட அசிஸ்டெண்ட் அந்த பையன் குமார் கிட்டருந்து விஷயத்த தெரிஞ்சி வச்சிருந்தாலும் அத மறுபடியும் கோர்ட்ல சொல்லி முடியறவரைக்கும் உங்கக்கிட்ட சொல்ல முடியாத நிலையில இருக்கேன் சார்... என்னோட நிலைமைய நீங்க புரிஞ்சிக்கணும்.... இந்த கேஸ் முடிஞ்சிரட்டும் .. அநேகமா குமாரோட ஸ்டேட்மென்ட் கிடைச்சதுமே ட்ரையல் கோர்ட் ஜட்ஜ் அடுத்த ஹியரிங்க அட்வான்ஸ்  பண்ணிருவார்னு நம்பறேன்... மேக்சிமம் நாலஞ்சி நாள்.... 

அதுவைக்கும் நீங்க பொறுத்துக்கணும்...'

'அப்படியா?' என்று தயங்கிய எஸ்.பி. ஒரு சில நொடிகள் மவுனமாக இருந்துவிட்டு இறுதியில், 'சரி... நா தன்ராஜ ப்ரீஃப் பண்றேன்... தேவைப்பட்டா அவர உங்கள கூப்ட சொல்லட்டுமா?'

ராஜசேகர் தயங்கினான். நேற்றைய குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவர் என்னிடம் பேசுவதற்கு தயாராய் இருப்பாரா?

'என்ன சேகர்... நேத்தைய ஃபயரிங்குக்கு அப்புறம் அவர் உங்கக்கிட்ட பேசுவாரான்னு யோசிக்கிறீங்களா?' என்றபடி எஸ்.பி மறுமுனையில் சிரிக்க பயங்கரமான ஆளுய்யா இவரு... ஃபோன்லயே மனசுலருக்கறத கண்டுபிடிச்சிட்டார் என்று நினைத்தான் ராஜசேகர். 'அப்படியில்லை......' என்று இழுத்தான்.

'பரவால்லை.... அவரும் நம்ம ஊர்தான்யான்னு சொல்லிருக்கேன்.... இனி உங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இருக்காது.... You should also forget it... '

'கண்டிப்பா சார்... எனக்கு அவர்கிட்ட பெர்சனலா ஒன்னும் இல்லை.'

'அப்போ சரி... அப்புறம் பாக்கலாம்.'

'தாங்ஸ் சார்...'

ராஜசேகர் இணைப்பை துண்டித்துவிட்டு காருக்கு வெளியில் காத்திருந்த வசந்தையும் அவனுடைய நண்பர்களையும் பார்த்தான். 'என்னடா, எதுக்கு வெளியில நிக்கிற? உள்ள ஏறி ஒக்கார வேண்டியதுதான? எஸ்.பிக்கிட்டதான் பேசிக்கிட்டிருந்தேன்...'

'இல்ல பாஸ்... நாங்க இப்படியே ரூமுக்கு போறோம்... நான் வேற ராத்திரி முழுசும் வீட்டுக்கு போவலையா... நேத்து போட்ட டிரஸ்லயே நிக்கிறேன்.... நா இவனுங்கள ரூம்ல விட்டுட்டு வீட்டுக்கு ஒருநடை போய்ட்டு வந்துடறேன்..'

'அப்படியா' என்று சிறிது நேரம் தயங்கிய ராஜசேகர் பிறகு, 'சரி... அப்புறமா ஆஃபீசுக்கு வா...' என்று அவர்களிடமிருந்து விடைபெற்று தன் அலுவலகம் நோக்கி காரை செலுத்தினான். 

******* 

அன்று மாலை வசந்தை சந்திக்கும் வரையிலும் வேறெதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல் தவித்துப் போனான் ராஜசேகர். 

வசந்த் ராஜசேகரின் அலுவலகத்திற்குள் நுழைந்து தன்னுடைய இருக்கையில் அமர்வதற்கு முன்பே, 'ஏன்டா இவ்வளவு நேரம்....? ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு பாத்தேன்?' என்று படபடத்தான். 

'நேத்து ராத்திரி வீட்டுக்கு போகலைன்னுட்டு அம்மா ரொம்ப டென்ஷனாய்ட்டாங்களாம் பாஸ். ப்ரஷர் பயங்கரமா எகிறிரிச்சி... நா வீட்டுக்குப் போனதுமே ராஜி சொன்னா.... எதுக்கு ரிஸ்க்குன்னு பக்கத்துலருக்கற டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போனேன்.. அங்க என்னடான்னா பயங்கர கூட்டம்... டாக்டர பாக்கறதுக்கே பகல் ஒரு மணியாயிருச்சி..... இப்பல்லாம் நடிகைங்க கிட்ட கால்ஷீட் வாங்கி வச்சிக்கறா மாதிரி டாக்டர்ங்க கிட்டயும் முன்கூட்டியே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி வச்சிக்கணும்போலருக்கு....'

'ஒனக்கு எப்ப ஜோக் அடிக்கறதுன்னு விவஸ்தையே இல்லையாடா? இப்ப அம்மாவுக்கு பரவால்லையா?'

'இடுக்கண் வருங்கால் நகுகன்னு பாரதியாரே சொல்லியிருக்காரே பாஸ்?' என்று சிரித்தான் வசந்த்.

'டேய் கொல்லாத.... அது வள்ளுவர்.' என்று எரிந்து விழுந்தான் ராஜசேகர்.... 'அம்மாவுக்கு இப்ப எப்படியிருக்குன்னு கேட்டனே?'

'இப்ப பரவால்லை பாஸ்... அம்மாவுக்கு வியாதிய விட பயம்தான் பாஸ் ஜாஸ்தி..... ஒரு ராத்திரி நா வீட்டுக்கு வரலைன்னாதும் என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு புலம்பி தள்ளிட்டாங்களாம்.... இவங்கள கூடவே வச்சிக்கிட்டு எப்படி மேனேஜ் பண்ணப் போறேன்னே தெரியல... இதுக்காகவே ஒரு கல்யாணத்த பண்ணிக்கலாம் போல... அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு என்னெ மறந்துருவாங்க இல்ல?' என்று மேலும் வசந்த் சிரிக்க கடுப்புடன் அவனை முறைத்தான் ராஜசேகர்.

அவனுடைய முறைப்பை கவனித்த வசந்த், 'சாரி பாஸ்... பழக்க தோஷம்...' என்றவாறே இருக்கையில் அமர்ந்து முந்தைய தினம் குமாரை சந்திக்க செல்வதற்கு முன் ராஜசேகர் அவனிடம் அளித்திருந்த மினி டேப்ரிக்கார்டரை எடுத்து மேசை மீது வைத்து டேப்பை ரீவைன்ட் செய்தான். 'இத முதல்ல கேளுங்க பாஸ்... அப்புறம் என்ன நடந்துதுன்னு டீட்டெய்லா சொல்றேன்...'

டேப் முழுவதும் ஓடி நிற்கும் வரையிலும் உன்னிப்பாக அதை கேட்டுக்கொண்டிருந்த ராஜசேகர் இறுதியில் அதை அணைத்து ஒதுக்கி வைத்துவிட்டு தன் குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்தவற்றை பார்த்தான். குமார் கூறியிருந்தவற்றில் பலவும் சில தினங்களுக்கு முன்பு ராகவன் தன்னிடம் கூறியிருந்தவற்றுடன் ஒத்துப்போனதை கவனித்தான். 

இதிலிருந்தே இருவரும் கூறியதில் உண்மைக்குப் புறம்பாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவானது. ஆக, இந்த இருவருமே முருகேசன் மற்றும் ராமராஜன் கூட்டணியிடம் சிக்கித்தவிக்கும் அப்பாவிகள் என்பதும் தெரிந்தது. 

'இவனும் அன்னைக்கி மிஸ்டர் ராகவன் சொன்னதும் ஏறக்குறைய ஒன்னா இருக்குல்லே பாஸ்?' என்றான் வசந்த்.

'ஆமாடா..... இதுலருந்து என்ன தெரியுது?'

'வேறென்ன பாஸ், கோபாலுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதான பாஸ்?'

'அப்படி மொட்டையா சொன்னா போறாது. எப்படி அந்த கன்குளூசனுக்கு வந்த? அதையும் சொல்லு. ப்ரீஃபா'

'சரி பாஸ்.' என்று புன்னகைத்த வசந்த் தொடர்ந்தான். 'பாய்ன்ட் பை பாய்ன்டாவே சொல்றேன்.'

ராஜசேகரும் புன்னகையுடன் தன் சிஷ்யனை பார்த்தான். 'கரெக்ட்.. அதான் வேணும்.'

'பாய்ன்ட் நம்பர் ஒன். கோபால் சாயந்தரம் ஆறு மணிக்கி அங்கருந்து போனப்போ மாதவி வீட்டு வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புனத குமார் பாத்துருக்கான். அதனால கோபால் போனப்போ அதாவது ஆறு மணிக்கி மாதவிக்கு எந்த அடியும் படலை, she was perfectly alright. '

'சரி.'

'பாய்ன்ட் நம்பர் டூ: ஏழு மணிக்கி கோபால மாதவி வீட்டுக்கு முன்னால பாத்ததா சொன்ன மிசஸ் ராகவன் உண்மையில பாத்தது முருகேசனத்தான். இதுலருந்து மாதவிக்கு ரெண்டாவதா அடிபட்டதா பிஎம் ரிப்போர்ட்ல சொல்லியிருக்கற டைம்ல கோபால் அந்த ஸ்பாட்ல இல்லவேயில்லை.'

'கரெக்ட்.' என்றான் ராஜசேகர் திருப்தியுடன், 'அவ்வளவுதானா இல்ல இன்னும் இருக்கா?'

'இருக்கே.' என்று தொடர்ந்தான் வசந்த். 'பாய்ன்ட் நம்பர் மூனு: கோபால் அங்கருந்து ஆறு மணிக்கி போனதுலருந்து கால் மணி நேரம் கழிச்சி ராமராஜன் ஒரு மாருதி வேன்ல வந்து குமார் ரிசர்வ் பண்ணி வச்சிருக்கற இடத்துல கார நிறுத்திட்டு மாதவி வீட்டுக்குள்ள போயிருக்கார். அவர் பெல்ல அடிச்சதும் மாதவியே வந்து திறந்ததுலருந்து அப்ப வரைக்கும் மாதவி உயிரோடத்தான் இருந்துருக்காங்கங்கறது ப்ரூஃப் ஆயிருக்கு.'

அதுமட்டுமாடா என்று நினைத்தான் ராஜசேகர். நா அன்னைக்கி நிமிஷ நேரத்துல அதாவது மயிரிழையில ராமராஜன் கண்ல படாம தப்பிச்சிருக்கேன் போலருக்கு. அத்தோட மாதவி மண்டையில பட்ட முதல் அடிக்கு நாந்தான் காரணம்னு இதுவரைக்கும் நினைச்சிக்கிட்டிருந்ததும் தப்புன்னு ப்ரூஃப் ஆயிருக்கேடா? இல்லன்னா அவளால ராமராஜன் வந்தப்போ கதவ திறந்திருக்க முடியுமா? இது எவ்வளவு பெரிய நிம்மதி எனக்கு!

'இன்னும் சொல்றேன் கேளுங்க.' என்று வசந்த் உற்சாகத்துடன் தொடர்ந்தான். 'குமார் சொல்றா மாதிரி பாத்தா ராமராஜன் போன வேகத்துலயே திரும்பி வந்து கார் எடுத்துக்கிட்டு போயிருக்கார்.....அதாவது அஞ்சி பத்து நிமிஷத்துக்குள்ள.....அதுக்கப்புறம் மறுபடியும் ஆஃபனவர் கழிச்சி முருகேசனும் ராமராஜனும் அதே கார்ல வந்துருக்காங்க. 

ராமராஜன் கார்ல வெய்ட் பண்ணிக்கிட்டிருந்துருக்கார்... முருகேசன் மட்டும் வீட்டுக்குள்ள போயிருக்கார். ஆனா மாதவி வந்து கதவ திறக்கலன்னு குமார் சொல்றதுலருந்து..... முருகேசன் கையிலருந்த சாவிய போட்டு திறந்துக்கிட்டு போயிருக்கணும்னு தோனுது.... என்ன பாஸ்?'

'அதான் தெரியுதே..... இதுலருந்து நீ என்ன அஸ்யூம் பண்ணே... அதச் சொல்லு.'

'ஆறேகால் மணிக்கி ராமராஜன் வீட்டுக்குள்ள போனப்போ மாதவிக்கும் அவருக்கும் இடையில ஏதாச்சும் கசமுசா நடந்துருக்கணும்..... கோவத்துல ராமராஜன் மாதவிய புடிச்சி தள்ளி விட்ருக்கணும்......அதான் அவங்க தலையிலருக்கற முதல் வூண்ட்...... அவங்க செமி-கான்ஷியஸ் ஸ்டேஜில இருந்துருக்கல்லாம். அதனாலதான் கோபால் சாயந்தரம் 6.25க்கு ஃபோன் பண்ணப்போ ஃபோன் எடுக்க முடிஞ்சிருக்கு ஆனா பேச முடியல. ஒருவேளை அந்த ஃபோன எடுக்க ட்ரை பண்ணப்போ மறுபடியும் தலைய சுத்தி கீழ விழுந்துருக்கலாம்..... டீப்பாய்ல மோதி நெத்தியில காயம் பட்டதும் அந்த டைம்லதான்....'

'இருக்கலாம்.'

'அதனாலதான் மறுபடியும் முருகேசன் அங்க போனப்போ அவங்களால வாசல் வரைக்கும் வந்து கதவ திறக்க முடியல...'

'ரைட்.'

'இத முதல்லயே முருகேசனும் ராமராஜனும் ஆன்டிசிப்பேட் (anticipate) பண்ணித்தான் கோபால் ஆஃபீஸ்லருந்த டூப்ளிக்கேட் சாவிய எடுத்துக்கிட்டு போயிருப்பாங்க... என்ன பாஸ்?'

'இதுவரைக்கும் சொன்னது சரியாத்தான் இருக்கு.... ஆனா எதுக்காக முருகேசனும் ராமராஜனும் மறுபடியும் அங்க போனாங்க?'

தொடரும்..

.

8 comments:

Anonymous said...

very good, interesting to read.

G.M Balasubramaniam said...

புதுப்புது செய்திகள் கதை இப்படிப் போகுமென்று அனுமானிக்க முடியாமல் செய்கிறது. இது உங்கள் கதை. நான் ஏன் அனுமானிக்க வேண்டும்.? சரியா.?

வே.நடனசபாபதி said...

கதையின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோமென நினைக்கிறேன். ‘எதுக்காக முருகேசனும் ராமராஜனும் மறுபடியும் அங்க போனாங்க?' என்று அறிய நானும் தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

Anonymous said...
very good, interesting to read.//

Thankyou. Two more weeks only.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
புதுப்புது செய்திகள் கதை இப்படிப் போகுமென்று அனுமானிக்க முடியாமல் செய்கிறது. இது உங்கள் கதை. நான் ஏன் அனுமானிக்க வேண்டும்.? சரியா.?//

கரெக்ட் சார்...

அப்படியே அனுமானிக்க முடிஞ்சாலும் டிஸ்க்ளோஸ் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறேன் :))

நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
கதையின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோமென நினைக்கிறேன். //

ஆமா சார். இன்னும் ரெண்டு வாரம்தான்.

‘எதுக்காக முருகேசனும் ராமராஜனும் மறுபடியும் அங்க போனாங்க?' என்று அறிய நானும் தொடர்கிறேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

T.N.MURALIDHARAN said...

எதுக்காக போனாங்க?

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
எதுக்காக போனாங்க?//

நாளைக்கி தெரிஞ்சிரும் :))