23 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 55


'ஐயா எனக்கு வெளியில போறதுக்கு பயமா இருக்குங்க.' என்றான் குமார்.

'அப்படி சொன்னா போறாது... யார பாத்து எதுக்கு பயப்படறே? தெளிவா சொல்லு.....' என்றார் நடுவர் சற்று எரிச்சலுடன். அவருக்கு தன்னுடைய அலுவலக நேரம் வீணாவதில் விருப்பமில்லை. 

'ஐயா, கோபால் சார அந்த வீட்டுக்குள்ளருந்து வந்தத பாத்தேன்னு சொல்லுன்னு சொல்லி பிபி வேணு சாரும் இன்ஸ்பெக்டர் ஐயாவும் பயமுறுத்துறாங்க..... நீ கோர்ட்ல சாட்சி சொல்ல போனா எங்கள காட்டி குடுத்துறுவேன்னு சொல்லி என்னெ ரூம்ல போட்டு அடைச்சி வச்ச ரெண்டு பேரு எங்கக்கிட்டருந்து தப்பிக்க நினைச்சா கொன்னுருவேன்னு மிரட்டறாங்க... இப்படியிருக்கறப்போ நா எப்படிய்யா தைரியமா வெளியில நடமாடறது....?'

நீதிமன்ற நடுவர் பதிலளிக்காமல் குமாரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.... 'நீ சொல்றத எப்படிய்யா நம்பறது? கவர்ன்மென்ட் வக்கீலும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒன்னெ பொய் சொல்ல சொல்லி மிரட்டுனாங்களா?'

'ஆமாங்கய்யா' என்றவாறு கண்கலங்கினான் குமார். 'எங்கம்மா சத்தியமா நா சொல்றது பொய்யில்லீங்க.'

'உங்கம்மா உயிரோட இருக்காங்களா?' என்ரார் நடுவர் கேலியுடன். 

'அய்யோ... என்னய்யா இப்படியொரு வார்த்தை சொல்லிப்போட்டீங்க.' என்று குமார் அப்படியே தரையில் அமர்ந்துக்கொண்டு கண்ணீர் வடிக்க நடுவர் ஒரு நொடி திகைத்துப்போனார்.

'சரி... சரி எழுந்திரு.... சும்மாத்தான் கேட்டேன்...' என்று தன் இருக்கையில் இருந்து எழுந்த நடுவர் அவனை நெருங்கி தோளை தொட்டார். 'சென்னையிலருக்கற பயமாருந்தா செங்கல்பட்டுல போலீஸ் பாதுகாப்போட வைக்க சொல்றேன். இதுக்காகல்லாம் ஜெயிலுக்கு அனுப்ப முடியாதுய்யா.'

'போலீஸாய்யா..... அவங்களுக்கு பயந்துதானய்யா உங்கக் கிட்ட வந்துருக்கேன்... என்னெ ஜெயிலுக்கே அனுப்பிருங்கய்யா.'

நடுவர் பதிலளிக்காமல் சிறிது நேரம் சிந்தித்தார். பிறகு தன்னுடைய ஊழியர் பாஸ்கரை அழைத்து, 'மைலாப்பூர் எஸ்.பிக்கு ஃபோன் போட்டு குடுங்க.' என்றார்.

இணைப்பில் எஸ்.பி. சந்தானம் வந்ததும் குமாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியத்தை கூறி தன்னுடைய மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டில் 24 மணி நேர பாதுகாப்புடன் அவனை தங்க வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 'இவர சேஃபா கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ண வேண்டியது உங்க ரெஸ்பான்சிபிளிட்டி. அதுவரைக்கும் யாரும் இவர மீட் பண்ணக் கூடாது.  முக்கியமா கவர்ன்மென்ட் லாயர்சோ இல்ல அல்லது மைலாப்பூர் E1 ஸ்டேஷன்லருக்கற யாருமோ இவர மீட் பண்ண அலவ் பண்ணக் கூடாது.'

எதிர்முனையில் இருந்து ஆவண செய்யப்படும் என்ற உத்தரவாதம் கிடைத்ததும் குமாரைப் பார்த்தார். 'இங்க பார்யா, உனக்கு 24 மணி நேரமும் செக்யூரிட்டி குடுக்கணும்னு ஏரியா எஸ்.பி. கிட்ட சொல்லியிருக்கேன். பயப்படாம அவங்கக் கூட போ.... என்ன புரியுதா?'

'வேற வழியே இல்லைங்களாய்யா?' என்றான் குமார் தயக்கத்துடன்.

'ஆமா. ஒனக்கு ஒன்னும் ஆவாது.... அதுக்கு நா பொறுப்பு. போறுமா?'

'ஐயா சொன்னா சரிங்கைய்யா..' 

நடுவர் பாஸ்கரை மிண்டும் அழைத்து அவர் உள்ளே வந்ததும், 'இந்தாங்க, இந்த கவர சீல பண்ணி இந்த கேஸ டீல் பண்ற செஷன்ஸ் ஜட்ஜ் பெயருக்கு இப்பவே அனுப்பிருங்க. அப்புறம் இவர செங்கல்பட்டுல வைச்சி செக்யூரிட்டி குடுக்கறதுக்கு மைலாப்பூர் ஏரியா எஸ்.பிக்கு ஒரு ஆர்டர் அடிச்சிறுங்க. அதுல என்னோட ரிட்டன் பர்மிஷன் இல்லாம இவர யாரும் மீட் பண்ண அலவ் பண்ணக்கூடாதுன்னும்  மென்ஷன் பண்ணி ஆர்டர் போட்டு கொண்டாங்க.... சீக்கிரம்.' 

பாஸ்கர் அங்கிருந்து நகர்ந்ததும் 'சரி... வெளியில போறதுக்கு பயமாருந்தா இங்கயே ஒக்கார்....' என்ற நடுவர் தன் இருக்கையில் பாஸ்கர் உத்தரவுடன் வருவதற்காக காத்திருந்தார். 

அடுத்த சில நிமிடங்களில் பாஸ்கர் உத்தரவுடன் திரும்பி வர அதில் கையொப்பமிட்டு மைலாப்பூர் எஸ்.பிய கூப்ட்டு விஷயத்த சொல்லி உடனே ஏற்பாடு பண்ண சொல்லிருங்க... நா என் வேலைய பாக்கட்டும்.' என்றவாறு 'போலீஸ் வேன் வந்ததும் போ.' என்று குமாரிடம் கூறிவிட்டு நீதிமன்ற அறையை நோக்கி நகர்ந்தார்.

அவர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்ததும் அவர் பின்னால் குமாரும் வருவான் என்று எதிர்பார்த்த வசந்தின் நண்பர்கள் திரும்பி தங்களுக்குப் பின்னால் வாசலருகே நின்றிருந்த வசந்தை கேள்விக் குறியுடன் பார்த்தனர். வசந்த் நீங்க வாங்கடா என்பதுபோல் சைகை காட்டிவிட்டு வராந்தாவில் வந்து நின்றான். 

'என்னடா குமார காணம்?' என்றான் நண்பர்களில் ஒருவன்.

'இருங்கடா... அவசரப்படாதீங்க... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...' என்று பதிலளித்த வசந்த் வாசலுக்கு வெளியே காத்திருந்த ராஜசேகரை அழைத்து விவரத்தைக் கூறினான்... 'பாஸ்கர கூப்ட்டு என்னாச்சின்னு கேளுங்க பாஸ்....'

'சரி நா கேக்கறேன்... நீ அங்கயே வெய்ட் பண்ணு.' என்ற ராஜசேகர் பாஸ்கரை அழைத்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது.. மஜிஸ்டிரேட் ஹாலுக்கு வந்துட்டார் போலருக்கு என்று நினைத்து கட் செய்தான். பிறகு வசந்தை அழைத்தான். 'டேய், பாஸ்கர் கோர்ட்ல ஒக்காந்துருக்காரான்னு பாரு? ஃபோன் எடுக்க மாட்டேங்கறார்.'

வசந்த் அறைக்குள் திரும்பி பார்த்தான். பாஸ்கர் தன் இருக்கையில் அமர்ந்து தன்னுடைய செல்ஃபோனை தட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. 'ஆமா பாஸ்....ஃபோன்ல அடிச்சிக்கிட்டிருக்கார். ஒங்களுக்குத்தான் SMS அனுப்பறார் போல.' என்றான் சிரித்தவாறு...

'டேய்... ஜோக்கடிக்க இதுவா நேரம்?' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன். ஆனால் அவன் கூறியபடியே அடுத்த சில நொடிகளில் அவனுக்கு ஒரு SMS வந்தது. 'Witness stmt recrdd & will be sent to a safe place with police escort.' என்றது.

உடனே வசந்தை அழைத்தான். 'டேய் வந்துருங்க... ஸ்டேட்மென்ட் குடுத்துட்டானாம். குமார போலீஸ் எஸ்கார்ட்டோட எங்கயோ கொண்டு போறாங்களாம்.  இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வேன் வந்துருமாம்... நா சந்தானம் சார்கிட்ட கேட்டுக்கறேன். அவர்தான ஏரியா எஸ்.பி.? அவருக்கு தெரியாம இருக்காது...'

இணைப்பைத் துண்டித்துவிட்டு உடனே எஸ்.பி சந்தானத்தை அழைத்தான். இவனுடைய அழைப்புக்கென்றே காத்திருந்தவர் போல் எதிர்முனையில் எடுத்த எஸ்.பி. 'சொல்லுங்க சேகர்.' என்றார். குடும்பத்தினரும் நெருங்கியவர்களும் அவனை அப்படி அழைப்பதுதான் வழக்கம்.

'சார் அந்த பையனோட ஸ்டேட்மென்ட மஜிஸ்டிரேட் ரிக்கார்ட் பண்ணி ட்ரையல் கோர்ட் ஜட்ஜுக்கு அனுப்பிட்டாராம்... அவனெ போலீஸ் எஸ்கார்ட்டோட எங்கயோ சேஃபா வச்சிருக்கணும்னு மஜிஸ்டிரேட் ஆர்டர் போட்ருக்காராம்...'

'ஆமா சேகர்... மஜிஸ்டிரேட் இப்பத்தான் போன் பண்ணார். அத நா பாத்துக்கறேன்.' என்று பதிலளித்த எஸ்.பி. 'சரி... தன்ராஜ மீட் பண்ணீங்களா? அங்க வரச்சொல்லியிருந்தேனே?' என்று கேட்டார்.

ராஜசேகர் இருந்த இடத்திலிருந்தே நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டான். தன்ராஜ் முன்பு நின்றுக்கொண்டிருந்த இடத்தில் காணவில்லை. 'இல்ல சார்... நா கோர்ட்டுக்குள்ளவே போவலை.... வேணு சாரோட ஜூனியர்ங்க யாராச்சும் என்னெ தன்ராஜோட பாத்துட்டா வம்பா போயிரும்னு வசந்த அந்த பையனோட உள்ள அனுப்பி வச்சேன்... மஜிஸ்டிரேட்டோட கிளார்க் பாஸ்கர எனக்கு நல்லா தெரியுங்கறதால அவர் கிட்ட காலையிலயே ஃபோன் போட்டு சொல்லியிருந்தேன்... அவர்தான் முடிச்சி குடுத்தார்....'

'அப்ப சரி... நா தன்ராஜ கூப்ட்டு சொல்லிக்கறேன்... நீங்க கெளம்புங்க...'

'சார் ஒரு விஷயம்....'

'சொல்லுங்க...'

'இன்னைக்கி சரண்டரான பையனோட ஸ்டேட்மென்ட் என்னோட கேசுக்கு ரொம்பவே முக்கியம் சார்.... அதனால அடுத்த ஹியரிங் வரைக்கும் நம்ம பிபிக்கு இவனெ வச்சிருக்கற இடம் தெரியாம இருக்கணும்.... இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கும் கூட...'

'அப்போ தன்ராஜுக்கு தெரிஞ்சா பரவால்லையா?' என்று சிரித்தார் எஸ்.பி.

'அவருக்கு தெரிஞ்சா பரவால்லைன்னுதான் தோனுது சார்.... I don't think he would do anything against law.'

'எப்படி சொல்றீங்க?' 

'அன்னைக்கி கோர்ட்ல அவர் நினைச்சிருந்தா எதையாச்சி சொல்லி சமாளிச்சிருக்கலாம். தப்பு தன் மேலதான்னு ஒத்துக்கிட்டா அது தன் கரியரையே பாதிக்கும்னு தெரிஞ்சும் நா கேட்ட பல சங்கடமான கேள்விகளுக்கும் பதில் சொல்லாம நீங்க சொல்றது சரிதாங்கறாமாதிரி சைலன்டா இருந்துட்டார்... I think he is not like other police officers....'

உதவி ஆய்வாளர் தன்ராஜை நீதிமன்றத்தில் வைத்து துளைத்தெடுத்ததை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த எஸ்.பி. 'நல்லா பேசறீங்க சேகர்....' என்றார் கேலியுடன். 'தன்ராஜ் மாதிரி எல்லாருமே ஸ்ட்ரெய்ட்ஃபார்வேர்டா இருந்தா இந்த மாதிரி சாட்சிங்கள பொய் சொல்ல வைக்கறதெல்லாம் நடக்காது. ஆனா என்ன பண்றது? அவர மாதிரியே எல்லாரலயும் இருக்க முடியலையே, என்னையும் சேர்த்து!'

இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் மவுனம் காத்தான் ராஜசேகர். ஒரு உயர் போலீஸ் அதிகாரியே சாட்சிகளை மிரட்டி பணிய வைப்பது குற்றம் என்று ஒத்துக்கொள்கிறார். ஆனாலும் அதை செய்ய வேண்டிய கட்டாயத்தில்..... தன்ராஜைப் போன்று சட்டத்தை மதிக்கும் அதிகாரிகள் காவல்துறையில் காண்பது அரிதுதான் என்பது அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது. அத்தகையவரை நாம் நீதிமன்றத்தில் அவமதிக்கும் வகையில் விசாரித்திருக்கக் கூடாதோ என்று நினைத்தான்.

'சரி. அத விடுங்க... நாய் வேஷம் போட்டா குரைச்சித்தான் ஆவணும்கறா மாதிரி இந்த வேலைக்கு வந்தா இதையெல்லாம் செஞ்சித்தான் ஆகணும்.....' என்ற சந்தானம். 'அப்புறம் இன்னொரு விஷயம். என்றார்.

'சொல்லுங்க சார்.'

'அந்த பையன் மஜிஸ்டிரேட்கிட்ட என்ன ஸ்டேட்மென்ட் குடுத்தான்னு ஒங்களுக்கு தெரியுமா?'

இத்தகைய தர்மசங்கடமான கேள்வி அவரிடமிருந்து வரும் என அவன் எதிர்பார்த்ததுதான்.... அப்படியொரு கேள்வி வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான்..... அதையே சொல்லி வைப்போம்....இந்த கேஸ் முடிஞ்சதும் மத்தத பாத்துக்கலாம்... என்று நினைத்து, 'நா அவனெ இதுவரைக்கும் மீட் பண்ணல சார். ராத்திரி முழுசும் என்னோட அசிஸ்டென்ட் வசந்தோட கஸ்டடியிலதான் இருந்தான். அவனெத்தான் கேக்கணும்.' என்றான்.

தொடரும்..

9 comments:

வே.நடனசபாபதி said...

வழக்கறிஞர் பொய் சொல்கிறார் என எஸ்.பி க்கு தெரியும் என நினைக்கிறேன்.மேற்கொண்டு அவர் என்ன சொல்லப்போகிறார் என காத்திருக்கிறேன்.

வேடந்தாங்கல் - கருண் said...

இந்தப் பதிவுக்கான உங்கள் உழைப்பு அசர வைக்கிறது.

G.M Balasubramaniam said...


போலிசும் வக்கீல்களும் சாட்சிகளும்எப்படியெல்லாம் நடக்கிறார்கள் என்று நீதிபதிகளுக்கும் தெரிந்தாலும் நிலைமையில் மாற்றங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. அது சரி, பாஸ்கர் போன்ற கோர்ட் குமாஸ்தாக்கள், முக்கிய தகவல்களை வேண்டப்பட்டவருக்குக் கொடுத்து கேசின் திசையை மாற்ற முடியுமா.?தொடருகிறேன்.

T.N.MURALIDHARAN said...

எதிர்பாராத திருப்பங்கள் சுவாரசியம் குறையாமல் உடன் பயணிக்கிறோம்

டிபிஆர்.ஜோசப் said...

:
வே.நடனசபாபதி said...
வழக்கறிஞர் பொய் சொல்கிறார் என எஸ்.பி க்கு தெரியும் என நினைக்கிறேன்.//

கரெக்டா அஸ்யூம் பண்ணிட்டீங்க. அனுபவம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


வேடந்தாங்கல் - கருண் said...
இந்தப் பதிவுக்கான உங்கள் உழைப்பு அசர வைக்கிறது.//

நன்றிங்க. தொடர்ந்து படிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...

போலிசும் வக்கீல்களும் சாட்சிகளும்எப்படியெல்லாம் நடக்கிறார்கள் என்று நீதிபதிகளுக்கும் தெரிந்தாலும் நிலைமையில் மாற்றங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. அது சரி, பாஸ்கர் போன்ற கோர்ட் குமாஸ்தாக்கள், முக்கிய தகவல்களை வேண்டப்பட்டவருக்குக் கொடுத்து கேசின் திசையை மாற்ற முடியுமா.?//

கண்டிப்பா முடியும்னு நினைக்கிறேன். ஆனா மாட்டிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...

போலிசும் வக்கீல்களும் சாட்சிகளும்எப்படியெல்லாம் நடக்கிறார்கள் என்று நீதிபதிகளுக்கும் தெரிந்தாலும் நிலைமையில் மாற்றங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. அது சரி, பாஸ்கர் போன்ற கோர்ட் குமாஸ்தாக்கள், முக்கிய தகவல்களை வேண்டப்பட்டவருக்குக் கொடுத்து கேசின் திசையை மாற்ற முடியுமா.?//

கண்டிப்பா முடியும்னு நினைக்கிறேன். ஆனா மாட்டிக்கிட்டா கம்பி எண்ண வேண்டியதுதான்.

டிபிஆர்.ஜோசப் said...

T.N.MURALIDHARAN said...
எதிர்பாராத திருப்பங்கள் சுவாரசியம் குறையாமல் உடன் பயணிக்கிறோம்//

நன்றிங்க. தொடர்ந்து வாங்க.