22 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 54

அடுத்த நாள் காலை துணை ஆய்வாளர் தன்ராஜை உறக்கத்திலிருந்து எழுப்பியது அவருடைய செல்ஃபோன். 

கண்களை அழுந்த தேய்த்துக்கொண்டு எழுந்தவர் விடாமல் அடித்துக்கொண்டிருந்த செல்ஃபோனை எடுத்து யார் என்று பார்த்தார். அடுத்த நொடியே உறக்கம் அவரை விட்டகன்றது . அவரையுமறியாமல் எழுந்து நின்றார் விறைப்புடன்.

'சாரி சார்.... அலாரம் வைக்காம படுத்திட்டேன்..... சொல்லுங்க சார்.'

எதிர்முனையில் எஸ்.பி. சந்தானம் சிரித்தார். 'என்ன ராத்திரி முழுசும்........சுருதியா?'

இவருக்கு எப்படி? குரல்ல ஹேங்கோவர் தெரியுதா என்ன? 

'சரி.... சரி...' என்று மேலும் சிரித்த எஸ்.பி. அடுத்த நொடியே சீரியசானார். 'கொஞ்ச நேரத்துக்கு முன்னால அட்வகேட் ராஜசேகர் கூப்ட்ருந்தார்.'

யார் அந்தாளா? உங்கக்கிட்டயும் போட்டுக்குடுத்துட்டாரா? 'எதுக்கு சார்?'

'சொல்றேன்... அதுக்கு முன்னால ஒன்னு சொல்லிக்கறேன்... நேத்து கோர்ட்ல நடந்தது ஒரு அசம்பாவிதம்.... அது மாதிரி மறுபடியும் நடக்காம பாத்துக்கணுமே தவிர அதையே நெனைச்சி சோர்ந்துபோயிறக் கூடாது.... இதத்தான் ஒங்கப்பாக்கிட்டயும் நேத்து சொன்னேன்.... கூப்ட்டாரா?'

'ஆமா சார்.....' என்றார் தன்ராஜ் தயக்கத்துடன், 'I am really sorry Sir.'

'பரவால்லை.... ராஜசேகர் கூப்ட்ட விஷயத்துக்கு வரேன்.... மாதவி மர்டர் கேஸ்ல நீங்க தேடிக்கிட்டிருந்த அந்த பார்க்கிங் லாட் பையன் இன்னைக்கி சைதாப்பேட்டை மஜிஸ்டிரேட் கோர்ட்ல சரண்டர் ஆவறானாம்.... நேத்து ராத்திரி முழுசும் ராஜசேகர் கஸ்டடியிலதான் இருந்துருக்கான்..... நீங்க காலையில பத்து மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு போறீங்க.... அதுக்கப்புறம் என்ன செய்யணும்னு டிசைட் பண்ணிக்கலாம். அதுவரைக்கும் இந்த விஷயம் பெருமாளுக்கோ இல்ல பிபி வேணுவுக்கோ தெரியக்கூடாது. இந்த கண்டிஷன்லதான் அந்த பையன் சரண்டராவான் சார்னு ராஜசேகர் சொல்லியிருக்கார், சொல்லிட்டேன்....'

ராஜசேகருக்கு எஸ்.பி வரைக்கும் பழக்கம் இருக்கா? நாம நெனைச்சிக்கிட்டிருந்தா மாதிரி ஆளு லேசுப்பட்டவன் இல்ல போலருக்கே..... கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்..... 

'என்ன தன்ராஜ்.... பதிலையே காணம்?'

'இல்ல சார்...' என்று அவசரமாய் பதிலளித்தார் தன்ராஜ். 'அப்படியே செஞ்சிடறேன் சார்... ஆனா'

'என்ன ஆனா?' எரிச்சலுடன் வந்தது எஸ்.பியின் குரல்.

'எப்படியிருந்தாலும் இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லித்தான ஆவணும் சார்?'

'அத நா பாத்துக்கறேன்.... நீங்க போயி அந்த பையன் மஜிஸ்டிரேட் முன்னால ஸ்டேட்மென்ட் குடுத்து முடிச்சதும் எனக்கு இன்ஃபர்மேஷன் குடுங்க.... அது போறும்... .'

'சார்... நீங்க தப்பா நினைச்சிக்கலன்னா....'

'இல்ல.... சொல்லுங்க...'

'நேத்து ராத்திரி முழுசும் அந்த விட்னஸ் அட்வகேட் ராஜசேகர் கஸ்டடியில இருந்தான்னு சொல்றீங்க... அவர் எதிரியோட லாயர்.... அவர் சொல்லிக் குடுத்த மாதிரிதான சார்.....'

'அந்த விட்னஸ் சொல்வார்னு சொல்றீங்க? அப்படித்தான?' கோபத்துடன் வந்த எஸ்.பியின் குரல் அவரை கலங்கடித்தது. தேவையில்லாம உளறிட்டமோ?

'என்னெ அவ்வளவு முட்டாள்னு நினைச்சிட்டீங்களா?' என்றார் சந்தானம் மீண்டும்.

'நிச்சயமா இல்ல சார்... சாரி சார்.' என்று அவசரமாக மறுத்தார் தன்ராஜ்.

'அப்ப நா சொல்றத கேளுங்க.... இன்னொன்னும் சொல்லிக்கறேன் ராஜசேகரும் நம்ம ஊர்தான்... அவரோட ஃபேமிலி ஃபுல்லா எனக்கு தெரியும்... உங்க அப்பா மாதிரியே அவரோட அப்பாவும் எனக்கு ரொம்ப காலமா தெரியும்.... அதனால அவர் எப்படிப் பட்டவர் என்ன செய்வார்னு உங்களவிட எனக்கு நல்லாவே தெரியும்.... புரிஞ்சிதா?'

அந்தாள் நம்ம ஊரா? அதான் இந்த அளவுக்கு திமிரா? நம்ம ஊர் தண்ணிய குடிச்சால திமிர் தானா வந்துரும்பா... அவரையுமறியாமல் ராஜசேகரை மதிக்கத் துவங்கினார் தன்ராஜ். 'புரிஞ்சிது சார்....  நீங்க சொன்ன வேலைய முடிச்சிட்டு கூப்டறேன் சார்... குட் டே சார்.' என்று உற்சாகத்துடன் கூறிவிட்டு பரபரவென்று குளித்து முடித்து கிளம்பினார். இன்றைய பொழுது நல்லபடியாக துவங்கியதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அவர் தன்னுடைய பைக்கை உதைத்த உதையிலிருந்தே தெரிந்தது.

*********

சென்னை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்ற வளாக வாசலில் தன் வாகனத்தை நிறுத்திய ராஜசேகர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த வசந்தைப் பார்த்தான்.

'டேய்... அங்க பார் தன்ராஜ் நிக்கறத!'

'எங்க பாஸ்?' என்றவாறு திரும்பி நீதிமன்ற வாசலை பார்த்தான் வசந்த். தன்ராஜ் நடுவர் நீதிமன்ற அறைகள் ஒன்றின் முன்னால் சுவரில் சாய்ந்தவாறு நிற்பது தெரிந்தது. 'இப்ப என்ன பண்றது பாஸ்?'

'நாம கவலைப்பட தேவையில்லை.... சந்தானம் சார் தான் அவர அனுப்பியிருப்பார்.... நா சொல்றா மாதிரி செஞ்சா பிரச்சினையில்லாம முடிஞ்சிரும்...'

'சொல்லுங்க பாஸ்' என்ற வசந்த் திரும்பி பின் இருக்கையில் தன் இரு நண்பர்களுக்கும் மத்தியில் பயந்தபடி அமர்ந்திருந்த குமாரை பார்த்தான். எத்தனை வற்புறுத்தியும் ஐந்து நாட்களாக வளர்ந்திருந்த மீசை தாடியை மழிக்க மறுத்து தலைவிரி கோலமாய் அமர்ந்திருந்தவனை பார்க்க பாவமாக இருந்தது. இதுவும் ஒருவகையில் நல்லதுதான் என்று தோன்றியது.  ஐந்து நாட்களாக போட்டிருந்த அதே அழுக்கேறிய சட்டை மற்றும் லுங்கி; தூங்கி,  தூங்கி வீங்கிப் போன கண்கள்... சரியாக சாப்பிடாததால் ஒட்டிப்போயிருந்த கன்னம்... இந்த கோலத்தில் அவனை அத்தனை எளிதில் யாராலும் அடையாளம் கண்டுக்கொள்ள முடியாது என்று நினைத்தான்.. 

ராஜசேகர் பின் இருக்கையில் அமர்ந்த வசந்தின் நண்பர்களைப் பார்த்தான். 'நீங்க ரெண்டு பேரும் குமார நடுவுல விட்டு புடிச்சிக்குங்க..  12ம் நடுவர்னு போர்டு போட்டுருக்கற ரூமுக்குள்ள போயி அங்க பாஸ்கர்னு ஒரு கிளார்க் மஜிஸ்டிரேட் மேடைக்கி முன்னால ஒக்காந்துருப்பார். நீங்க பத்து மணிக்கி வருவீங்கன்னு நா ஏற்கனவே  ஃபோன்ல சொல்லி வச்சிருக்கேன்.... நீங்க போனதும் அட்வகேட் ராஜசேகர் அனுப்புனார்னு சொல்லுங்க... அவர் ப்ரிப்பேர் பண்ணி வச்சிருக்கற ஒரு ஃபார்ம குடுப்பார். அதுல குமார் கையெழுத்துப் போட்டு குடுத்ததும் மீதிய அவரே சொல்வார்.' என்று கூறிவிட்டு ராஜசேகர் வசந்தைப் பார்த்தான். 'மஜிஸ்டிரேட் வர்றதுக்கு இன்னும் பத்து நிமிஷந்தான் இருக்கு. அதுக்குள்ள பாஸ்கர பாத்து காரியத்த முடிச்சிரணும்.... நீ இவங்களுக்கு பின்னால ஒரு பத்தடி தள்ளி போ..... குமார் ஸ்டேட்மென்ட் குடுத்து முடிக்கற வரைக்கும் இன்டர்ஃபியர் பண்ணக்கூடாதுன்னு எஸ்.பி.கிட்ட சொல்லியிருக்கேன்.... அதனால தன்ராஜ் உங்கள பாத்தாலும் ஒன்னும் பண்ண மாட்டார்னு நினைக்கேன்.....அப்படி ஏதும் பண்ணார்னா நா பாத்துக்கறேன்....'

'ஓக்கே பாஸ்...' என்ற வசந்த், 'என்னங்கடா ரெடிதான?' என்றான் தன் நண்பர்களிடம். 

அவர்களும் சரியென்று தலையை அசைக்க மூவரும் பின் இருக்கையிலிருந்து இறங்கி வளாகத்திற்குள் நுழைய ஒரு சில நிமிடங்கள் கழித்து வசந்தும் இறங்கி அவர்களை பிந்தொடர்ந்தான்.

ராஜசேகர் தன்ராஜ் ஏதும் இடைஞ்சல் செய்து காரியத்தை கெடுத்துவிடுவாரோ என்ற யோசனையுடன் அவரையே பார்த்தவாறு காரில் அமர்ந்திருந்தான்.

************

நீதிமன்ற நடுவர் பாஸ்கர் தன்னிடம் நீட்டிய மனுவை மேலோட்டமாக படித்துவிட்டு நிமிர்ந்து குமாரையும் அவருக்கு இரு புறமும் நின்றிருந்தவர்களையும் பார்த்தார். 

பிறகு தன் அலுவலரிடம், 'இந்தாளு ப்ராசிக்யூஷன் விட்னஸ்தானய்யா? எதுக்கு இங்க வந்து சரன்டர் ஆவறார்? போலீசுக்கு போக வேண்டியதுதான?'

பாஸ்கர் திரும்பி குமாரைப் பார்த்தார். 'சொல்லுங்க, ஐயா கேக்கறாரில்ல?'

'ஐயா ரெண்டுபேர் என்னைய ஒரு வாரமா ஒரு ரூம்புல பூட்டி வச்சிருந்தாங்கய்யா... நேத்துதான் வெளியில வந்தேன்.... போலீசுக்கு போக பயமாருக்குங்கய்யா.... அதான் ஐயா முன்னால சரண்டர் ஆவறதுக்கு வந்துருக்கேன்.'

நடுவர் வசந்தின் நண்பர்களை பார்த்தார். 'இவங்க யாரு? போலீசா?'

பாஸ்கர் எழுந்து ராஜசேகர் அன்று காலை தன்னிடம் தொலைபேசியில் கூறியது சுருக்கமாக தெரிவித்தான். நடுவர் சிரித்தார். 'யாரு ராஜசேகரா? அவர்தான அந்த கேஸ்ல டிஃபென்ஸ்?'

'ஆமாங்கய்யா..... அவரும் போலீசுக்கு போன்னுதான் சொன்னாருங்க... ஆனா எனக்கு பயமா இருக்குங்க.' என்ற குமார் நீதிமன்ற அறையை சுற்றிலும் பயத்துடன் பார்ப்பதை கவனித்த நடுவர் பாஸ்கரை பார்த்தார். 

'இந்தாளு ஏதாச்சும் ஸ்டேட்மென்ட் குடுக்கணுமாமா?'

'ஆமாங்கைய்யா.. அப்படித்தான் ராஜசேகர் சொன்னார்.'

'சரி.... இந்தாள என் சேம்பருக்கு கூட்டிக்கிட்டு வாங்க.' என்று தன் இருக்கையிலிருந்து எழுந்த நடுவர் தன் அறைக்கு சென்றார்.

அவர் சென்று ஒரு சில நிமிடங்கள் கழித்து, 'என்னோட வாங்க.' என்றவாறு எழுந்த நடுவரின் அறையை நோக்கி நகர்ந்த பாஸ்கர் வசந்தின் நண்பர்களும் தன் பின்னால் வருவதை கவனித்துவிட்டு நின்று, 'நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க... இந்தாள் மட்டும் வந்தா போறும்.' என்று குமாரை சுட்டிக்காட்டினான்.

'சரி சார்' என்று பதிலளித்த வசந்தின் நண்பர்கள் தயங்கி நின்ற குமாரை பார்த்தனர். 'தைரியமா போ... மஜிஸ்டிரேட் கிட்ட எல்லாத்தையும் சொல்லிரு... நாங்க இங்க வெய்ட் பண்றோம்.'

குமார் தலையை அசைத்துவிட்டு பாஸ்கர் பின்னால் சென்றான்.

அவன் நடுவர் அறைக்குள் நுழைந்ததும், 'நீங்க போலாம் பாஸ்கர்... நா ஸ்டேட்மென்ட ரெக்கார்ட் பண்ணிட்டு கூப்டறேன்.'
என்ற நடுவர் குமாரைப் பார்த்தார். 'என்னைய்யா சொல்லப் போற? சொல்லு.'

அடுத்த பத்து நிமிடங்கள் குமார் சொல்ல, சொல்ல முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் பதிவு செய்துக்கொண்ட நடுவர் முடிவில் அவனை நிமிர்ந்து பார்த்தார். 'நீ யாருடைய வற்புறுத்தலுக்கோ மிரட்டலுக்கோ பயந்து இத சொல்லலையே?'

'இல்லீங்கய்யா. நானா விரும்பித்தான் சொல்றேன்.'

'சரி... இத இங்க சொன்னா மட்டும் போறாது.... கோர்ட்லயும் சொல்லணும்... சொல்வியா?'

'சொல்வேங்கய்யா...'

'கையெழுத்து போட வருமா?'

'தெரியுங்கய்யா..... தமிழ்லதான் போடுவேன்...'

'போதும்.... இந்தா இங்க போடு..' என்று நடுவர் அவன் கையொப்பமிட வேண்டிய இடத்தை காட்ட நடுங்கும் விரல்களால் குமார் என்று எழுத்துக்கூட்டி எழுதிவிட்டு ஒதுங்கி நின்றான் குமார். அவன் கையொப்பமிட்டதும் தன்னுடைய அலுவலக முத்திரையைப் பதித்து தன் கையொப்பத்தையும் இட்டு அதை ஒரு அலுவலக உரையிலிட்டு மூடிய நடுவர் அவனைப் பார்த்தார். 

'சரி.... இப்ப என்ன பண்ணணும்?'

தொடரும்

9 comments:

வே.நடனசபாபதி said...

முக்கியமான இடத்தில் இடைவேளை விட்டாற்போல் ‘தொடரும்’ எனப் போட்டுவிட்டீர்கள். அடுத்து என்ன நடக்குமோ என நினைக்கும்போது தொடரின் கடைசி வரி எங்களை நாளை வரை காத்திருக்க, சொல்லாமல் சொல்கிறது என நினைக்கிறேன்!

Packirisamy N said...

வர்ணனைகள் காட்சிகளை கண்முன் நிறுத்துகின்றன. கதையின் வேகம் அத்தியாயத்துக்கு அத்தியாயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொடராக படிக்க விருப்பமில்லாதவர்கள் மிஸ் பண்ணுகிறார்கள். வாழ்த்துக்கள். நன்றி.

G.M Balasubramaniam said...

சரண்டர் ஆவதற்கும் பிரச்சனையா.?தொடர்கிறேன்.

மகேந்திரன் said...

எழுத்து நடை நீரோட்டம் போல
சீராக வேகமாக இருக்கிறது..
இன்று தான் முதல்முறை உங்கள் தளம் வருகிறேன்..
தொடர்கிறேன்...

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
முக்கியமான இடத்தில் இடைவேளை விட்டாற்போல் ‘தொடரும்’ எனப் போட்டுவிட்டீர்கள். அடுத்து என்ன நடக்குமோ என நினைக்கும்போது தொடரின் கடைசி வரி எங்களை நாளை வரை காத்திருக்க, சொல்லாமல் சொல்கிறது என நினைக்கிறேன்!//
ஒரு அரசு தரப்பு சாட்சி தம் முன்னால் வந்து சரணவடைவதை அந்த நடுவர் இதற்கு முன்னால் பார்த்திருக்க மாட்டாரோ என்னவோ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

53 PM
Packirisamy N said...
வர்ணனைகள் காட்சிகளை கண்முன் நிறுத்துகின்றன. கதையின் வேகம் அத்தியாயத்துக்கு அத்தியாயம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தொடராக படிக்க விருப்பமில்லாதவர்கள் மிஸ் பண்ணுகிறார்கள்.//

சிலருக்கு சஸ்பென்ஸ்னால அலர்ஜி. கதை புத்தகத்துல கடைசியில என்ன நடந்துதுன்னு பார்த்துட்டு மீதி புத்தகத்த படிக்கறவங்களையும் பாத்துருக்கேன் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
சரண்டர் ஆவதற்கும் பிரச்சனையா.?தொடர்கிறேன்.//

ஒரு ப்ராசிக்யூஷன் எதுக்கு நம்மகிட்ட வந்து சரண்டராவறான்னு நடுவர் நினைச்சிருப்பார்!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

PM
மகேந்திரன் said...
எழுத்து நடை நீரோட்டம் போல
சீராக வேகமாக இருக்கிறது..
இன்று தான் முதல்முறை உங்கள் தளம் வருகிறேன்..
தொடர்கிறேன்...//

Welcome Mahendran...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

T.N.MURALIDHARAN said...

ராக்கெட் வேகத்தில் செல்கிறது கதை