21 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 53


'அந்த மேன்ஷனுக்குத்தான? போலாம்... ஆனா நானும் வரேன்....' என்றான் ராஜசேகர்.

'நீங்களா எதுக்கு?' என்றான் வசந்த் வியப்புடன்.

'டேய்.... இது அந்த முருகேசனும் ராமராஜனும் சேந்து போட்ட ப்ளானா இருந்தா.... நீ தனியா போறது டேஞ்சர்...'

வசந்த் சிரித்தான். 'சரி.... நீங்க வந்தா மட்டும்? நீங்க என்ன கராத்தே ப்ளாக் பெல்டா...?'

'டேய், பி சீரியஸ்... நீ உள்ள போறப்போ நா வெளியில கார்ல வெய்ட் பண்றேன்.... ஒனக்கு எதுவும் ஆயிருச்சின்னா போலீஸ கூப்டறதுக்காவது ஒரு ஆள் வேணும்ல? அதுக்குத்தான்... சும்மா பேசிக்கிட்டிருக்காம கிளம்பு..' 

வசந்தை பதில் பேச விடாமல் எழுந்த ராஜசேகர் கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்....

வேறு வழியின்றி வசந்தும் எழுந்து அவனைத் தொடர்ந்தான்.

பீக் ஹவர் போக்குவரத்து நெரிசலை சமாளித்துக்கொண்டு அவர்கள் திருவல்லிக்கேணியை அடைந்தபோது முக்கால் மணி நேரம் கடந்திருந்தது. குறுகலான சாலைகளும் இருமருங்கிலும் ஒழுங்கில்லாமல் பார்க் செய்யப்பட்டிருந்த வாகனங்களும் ராஜசேகரை முன்னேறவிடாமல் தடுத்தன.....

வசந்த் சற்று முன் தொலைபேசியில் குமார் தெரிவித்திருந்த மேன்சன் பெயர் பலகை சற்று தொலைவில் தெரிவதை கவனித்தான்... 'பாஸ்... அந்த பையன் சொன்ன மேன்ஷன் அதோ இருக்கு பாருங்க... ஆனா கார் அங்க வரைக்கும் போகாது போலருக்கு.... வேற வழியில்லை, இங்கேயே பார்க் பண்ணிருங்க... நா போய்ட்டு வந்துடறேன்...'

ராஜசேகரும் சுமார் ஐம்பதடி தூரத்தில் தெரிந்த பெயர் பலகையைப் பார்த்தான். தட்டி முட்டி அந்த இடத்தை நெருங்கினாலும் பார்க் செய்துவிட்டு அமர்ந்திருக்க வாய்ப்பே இல்லை..... இருபதடிக்கும் குறைவாக இருந்த சாலையில் மேன்ஷன் முன்பு ஏறக்குறைய இருபது இரு சக்கர வாகனங்கள் பார்க் செய்யப்பட்டிருந்தன. 

'சரிடா.. இங்க கார விட்டுட்டுக்கூட வர முடியாது போலருக்கு.... நா கார்லயே இருக்கேன்.... நீ போய்ட்டு ஏதாச்சும் பிரச்சினைன்னா ஒரு மிஸ் கால் குடு..... என்ன?' என்ற ராஜசேகர் தன் கைப்பெட்டியை திறந்து அதில் இருந்த மினி டேப் ரிக்கார்டரை எடுத்து அவனிடம் கொடுத்தான். 'இத தேவைப்பட்டா யூஸ் பண்ணிக்க. ஆனா ஒன்னு. ஹீரோ மாதிரி ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணி வைக்காத சொல்லிட்டேன்..' 

வசந்த் மேன்ஷனுக்குள் நுழையும்வரை காரிலிருந்தே கவனித்துக்கொண்டிருந்த ராஜசேகர் அவனைத் தொடர்ந்து வேறு யாரேனும் மேன்ஷனுக்குள் நுழைகிறார்களா என்று பார்த்தான். யாரும் நுழையவில்லை.... காரில் அமர்ந்திருக்கும் தன்னை யாரேனும் கவனிக்கிறார்களா என்றும் பார்வையை நாலாபுறமும் அலையவிட்டான்..... அந்தி மாலை நேரத்துடன் அலுவலகம் விட்டு வரும் நேரம் என்பதால் அந்த குறுகிய சாலையில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருந்தது.... ஒவ்வொரு நொடியும் காரில் அமர்ந்திருந்த அவனை சாலையில் நடந்து செல்பவர்கள் கூட எரிச்சலுடன் முறைத்துப் பார்த்துவிட்டு செல்வது தெரிந்தது.... 'யோவ்... பாத்தா படிச்ச ஆள் மாதிரி கீற? இத்துனூண்டு ரோட்ல கார பார்க் பண்ணிட்டு ஒக்காந்திருக்கே... எடுய்யா?' என்று அவனை வசைபாடி விட்டு சென்றது ஒரு சைக்கிள் ரிக்‌ஷா.... ஆனாலும் ராஜசேகர் மேன்ஷன் வாசலிலிருந்து கண் எடுக்காமல் அமர்ந்திருந்தான்.

ஐந்து நிமிடமானது.... வசந்தையோ அல்லது அவன் சந்திக்கச் சென்ற பார்க்கிங் லாட் பையனையோ காணவில்லை.... ஃபோன் செய்து பார்க்கலாமா என்று செல்ஃபோனை எடுக்கவும் அது அடிக்கவும் சரியாக இருந்தது....

'பாஸ் நாந்தான்... நீங்க வெய்ட் பண்ண வேணாம்....' என்றான் வசந்த். 'இவன் இப்ப வெளியில வர்றதுக்கு பயப்படறான்... நா என் பழைய ரூம் மேட்ட வரச்சொல்லியிருக்கேன்... கொஞ்சம் இருட்டட்டும்.... அவன கூட்டிக்கிட்டு போயி என் ரூம் மேட் கூட தங்க வச்சிட்டு வரேன்.....'

'எதுக்குடா?' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன்.... 'நான் வெய்ட் பண்றேன்.... கூட்டிக்கிட்டு போயி நம்ம ஆஃபீஸ்ல தங்க வச்சிறலாம்....'

'வேணாம் பாஸ்... நம்ம ஆஃபீஸ்ல தங்க வச்சி அது போலீசுக்கு தெரிஞ்சா பேஜாராயிரும்..... நா பாத்துக்கறேன்.... அதுவுமில்லாம ஒரு வாரமா மயக்க மருந்த போட்டு போட்டு தூங்க வச்சதுல பையன் டயர்டா இருக்கான்...... இப்ப அவன் நினைச்சாலும் வர முடியாது..... இங்கயே குளிக்க வச்சி ராத்திரியா கூப்ட்டுக்கிட்டு போறேன்.....நீங்க போங்க...'

'நா வேணா போய்ட்டு ஒரு பத்து மணி போல வரவா?'

'வேணாம் பாஸ்..... உங்கள அவன் இதுக்கு முன்னால பாத்தது இல்லையே... அதனால நம்பி வரமாட்டான்..... ஒன்னும் ஆவாது.... இங்க மேனேஜர் ரொம்ப சப்போர்ட்டிவா இருக்கார்.... ஒரு வாரமா இந்த பையன் ராமராஜன் ரூம்ல இருந்ததே அவருக்கு தெரியாதாம்.... இன்னைக்கி சாயந்தரம் மயக்கம் தெளிஞ்சி எழுந்த குமார் போட்ட சத்தத்த கேட்டுட்டுத்தான் போயி திறந்துருக்காங்க.... ராமராஜனா இப்படி செஞ்சான், நம்பவே முடியலையேங்கறாங்க இங்க இருக்கறவங்க.... அப்படியே அவன் மறுபடியும் வந்தாலும் இங்கருக்கறவங்களே அவனெ அடிச்சி போலீஸ்ல புடிச்சி குடுத்துருவாங்க போலருக்கு.... அதனால எனக்கோ அவனுக்கோ ஒன்னும் ஆவாது நீங்க நிம்மதியா போங்க.... நா அப்புறமா ஃபோன் பண்றேன்....'

வேறுவழியின்றி, 'சரிடா.... ஜாக்கிரதை..' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ராஜசேகர்.

அன்று இரவு அவனுடைய மனைவியும் குழந்தையும் உறங்கச் சென்ற பிறகும் வரவேற்பறையிலேயே எப்போது வசந்தின் ஃபோன் கால் வரும் என்று நள்ளிரவு வரை உறங்காமல் காத்திருந்தான்...

இறுதியில் வசந்தின் ஃபோன் வந்தது. 

ராஜசேகர் பதற்றத்துடன் எடுத்து, 'டேய்... ஏன் இவ்வளவு நேரம்?' என்றான்.

'வேறென்ன பாஸ் பண்றது? அவனெ சமாதானப்படுத்தி கூட்டிக்கிட்டு வர்றதுக்குள்ள பெரும்பாடாயிருச்சி.... அப்படி பயந்துபோயிருக்கான்.... எங்களுக்குத் தெரியாம எஸ்கேப் ஆவணும்னு நெனச்சே கொன்னுருவேன்னு முருகேசன் பயமுறுத்தினானாம்.... அதான் நல்லா இருட்டட்டும் சார்னு கெஞ்சினான்.... சரிடான்னு மிட்நைட்டுக்கப்புறம் நா, என் ரூம்மேட் அப்புறம் மேன்சன் ஆளுங்க ரெண்டு பேர்னு ஒரு குட்டி டீமா ஒரு கால் டாக்சியில கூப்ட்டுக்கிட்டு வந்தோம்... நீங்களும் கூடவே இருங்க சார்னு என்னையும் புடிச்சி வச்சிருக்கான்..... வேற வழியில்லாம ராஜிய கூப்ட்டு சொல்லிட்டு இன்னைக்கி ஃப்ரென்டு ரூம்லயே தங்கியிருக்கோம்.... இன்னைக்கி எங்களுக்கு சிவராத்திரிதான்.....'

அப்பாடா என்று இருந்தது ராஜசேகருக்கு.... 'சரிடா.... இனி என்ன பண்றது? அடுத்த ஹியரிங் வரைக்கும் இவனெ பாதுகாக்கணுமே?'

'அதுக்கு நா ஒரு ஐடியா வச்சிருக்கேன் பாஸ்.'

'என்ன?'

'அவனெ கூட்டிக்கிட்டு எங்க ஊர் வரைக்கும் போயி ஹியரிங் டேட்டுல கூட்டிக்கிட்டு வந்துடறேன்.'

'போடா இடியட்.... இங்க ஒங்க அம்மாவையும் தங்கச்சியையும் யார் பாத்துப்பா? எங்கூட இருங்கன்னு கூட்டிக்கிட்டு வந்துட்டு இப்ப தனியா விட்டுட்டு போகப்போறியா? அதெல்லாம் வேணாம்.... இப்ப நா சொல்ற ஐடியாவ கேளு...'

'சொல்லுங்க பாஸ்..'

'எனக்கென்னவோ இந்த பையன காலையில முதல் வேலையா மஜிஸ்டிரேட் முன்னால சரண்டராக வச்சிறலாம்னு தோனுது... தேவைப்பட்டா அவனோட ஸ்டேட்மென்ட கூட அவர் முன்னாலயே வச்சி ரெக்கார்ட் பண்ணிறலாம்.... நா காலையில எஸ்.பி. சந்தானம் சார கூப்ட்டு விஷயத்த சொல்லப் போறேன்.... அவர் என்ன சொல்றார்னு பாக்கலாம். என்ன சொல்றே?'

'இதுவும் நல்ல ஐடியா பாஸ்... அப்படியே செஞ்சிரலாம்..' என்று பதிலளித்த வசந்த், 'பாஸ் அந்த பையன் ரூம்லருந்து கூப்டறான்... நா வச்சிடறேன்.... காலையில கூப்டுங்க.' என்று இணைப்பை துண்டிக்க எல்லாம் நல்லபடியா நடக்கணுமே என்ற பிரார்த்தனையுடன் படியேறி தன் படுக்கையறையை நோக்கி நடந்தான் ராஜசேகர். 

*********

கண்ணாடி தம்ளரில் இருந்த கடைசி துளியையும் குடித்துவிட்டு தள்ளாட்டத்துடன் எழுந்தார் துணை ஆய்வாளர் தன்ராஜ். அவருக்கு நினைவு தெரிந்த வரை இப்படியொரு மனநிலையில் அவர் இருந்ததே இல்லை....

எவ்வளவு சின்சியரா இருக்கோம்... நமக்கு ஏன் இப்படி நடந்துது? இன்னைக்கி மாதிரி நாம யார் கிட்டயுமே அவமானப்பட்டதில்லையே? ஒரு கத்துக்குட்டி வக்கீல் நம்மள இந்த அளவுக்கு வறுத்தெடுத்திட்டான? ச்சை.... இனிமேலும் இந்த யூனிஃபார்ம் வேணுமா? போடான்னுட்டு ஊருக்கே திரும்பி போய்ட்டா? 

எஞ்ஜினீயரிங் படிச்சிட்டு எதுக்குடா இந்த தூக்கு தூக்கி வேலைக்கி போறேங்கறே என்று அவனுடைய கல்லூரி நண்பர்களெல்லாரும் அவனை கிண்டல் அடித்தது நினைவுக்கு வந்தது. போலீஸ் வேலைக்கித்தான் போவணும்னா என்னெ எதுக்குப்பா எஞ்ஜினீயரிங் படிக்க விட்டீங்க? நாம்பாட்டுக்கு ஒரு பிஏவ படிச்சிட்டு... நேரா ஐபிஎஸ் எக்ஸாம் எழுதியிருப்பேனே..... பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எக்ஸாம எழுத வச்சி.... ஒரு எஸ்.ஐ.யா உள்ள நுழைஞ்சி படிப்படியா மேல வந்தாண்டா எல்லா வேலையையும் கத்துக்க முடியும்னு சொல்லி...... படிப்பறிவே இல்லாதவனுக்கெல்லாம் கூழகும்பிடு போட வச்சிட்டியேப்பா.... இது ஒங்களுக்கே நல்லாருக்கா? 

தன்ராஜின் செல்ஃபோன் அவருடைய போதையை கலைத்தது.... 

யார்றா இது இந்த நேரத்துல?

'அப்பா!'

இந்தாளுக்கு சாவே இல்ல போலருக்கு?

'என்ன? இருக்கேனா செத்தேனான்னு பாக்கறதுக்கு கூப்ட்டிங்களா? கூப்டற நேரமா இது?' என்றார் நா குழறியபடி....

எதிர்முனையிலிருந்து மவுனம் மட்டுமே பதிலாக வந்தது.

'என்ன? பேச முடியல இல்ல? அதுக்குள்ள நியூஸ் வந்துருக்குமே.....?'

'ஆமா... சந்தானம் கூப்ட்ருந்தார்.'

'இப்ப சந்தோஷமா? நாம்பாட்டுக்கு ஏதாச்சும் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில அம்பதோ அறுபதோ வாங்கிக்கிட்டு அமெரிக்காவுலயோ ஆப்பிரிக்காவுலயோ இருந்துருப்பேன்..... என்னெ இப்படி தனியா புலம்பவிட்டுட்டிங்களேப்பா... இது ஒங்களுக்கே நல்லாருக்கா?'

'டேய்... உன் வேதனை புரியுது.... இதே மாதிரியான வேதனைய நானும் அனுபவிச்சிருக்கேன்டா....'

'அப்படியா?' என்று உரக்க சிரித்தார் தன்ராஜ்.... 'இதத்தான் வேலைய கத்துக்கறதுன்னு சொன்னீங்களா?'

'டேய்... அடிபட்டு, மிதிபட்டு மேல வந்தாத்தான் அதோட அருமை தெரியும்... இது ஒன்னும் பெரிய அவமானம் இல்ல... ஒரு லெசன்.... இன்னும் இது மாதிரி நிறைய லெசன்ஸ் படிக்க வேண்டி வரும்.... நானும் இந்த மாதிரி நடுராத்திரி வரைக்கும் தண்ணிய போட்டுட்டு பல அவமானங்கள கரைச்சிருக்கேன்.... அதத்தான் நீயும் செய்வேன்னு தெரியும்... அதனாலதான் நானும் முழிச்சிக்கிட்டிருந்து கூப்டறேன்... போறும்... போய் குளி.... எல்லாத்தையும் கழுவிட்டு போய் படு.... காலையில எழுந்திருக்கறப்போ ஃப்ரெஷ்ஷா இருக்கும்.... குட் நைட்....' 

அமைதியாகிப்போன ஃபோனையே நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தன்ராஜ் தன் தந்தை இறுதியில் சொன்ன வார்த்தைகளை மனதுக்குள் அசைபோட்டார்..... அதில் இருந்த உண்மையை அவர் உணர்ந்தபோது உறக்கம் கண்களை அழுத்தியது..... தட்டுத்தடுமாறி எழுந்து தன் படுக்கையில் விழுந்தார்.  கனவுகள் இல்லாத உறக்கம் அவரை ஆட்கொண்டது...

தொடரும்...

8 comments:

வே.நடனசபாபதி said...

//அடிபட்டு, மிதிபட்டு மேல வந்தாத்தான் அதோட அருமை தெரியும்...//

சரியான அறிவுரை. இது அனுபவத்தின் வெளிப்பாடு.

காத்திருக்கிறேன். விடிவதற்கு!

T.N.MURALIDHARAN said...

அடுத்து என்ன நடக்கும்?

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
//அடிபட்டு, மிதிபட்டு மேல வந்தாத்தான் அதோட அருமை தெரியும்...//

சரியான அறிவுரை. இது அனுபவத்தின் வெளிப்பாடு. //

கரெக்டா சொன்னீங்க. சுமார் இருபத்தைந்து வருட ஆஃபீசர் உழைப்பிற்குப் பிறகும் ஒவ்வொரு பதவியிலும் என்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை அனுபவித்திருக்கிறேன். இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் நிறைய....ஆனாலும் அதையெல்லாம் வெற்றிகொண்டு எவ்வித களங்கத்திற்கும் இடம் அளிக்காமல் ஓய்வு பெற்றதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்....டிபிஆர்.ஜோசப் said...

11 PM
T.N.MURALIDHARAN said...
அடுத்து என்ன நடக்கும்?//

உங்களுடைய ஆவலுக்கு மிக்க நன்றிங்க.

G.M Balasubramaniam said...

குமார் தப்பியது ராம ராஜனுக்குத் தெரியாதா.?தொடர்கிறேன்

Sasi Kala said...

எங்கே இங்கே முன்கதை சுருக்கத்தை காணவில்லையே ?

டிபிஆர்.ஜோசப் said...

3 PM
Sasi Kala said...
எங்கே இங்கே முன்கதை சுருக்கத்தை காணவில்லையே ?//

இந்த தொடரின் ஐம்பதாவது பதிவு வரை இந்த பதிவிலும்
http://ennulagam.blogspot.com/2013/10/50.html

அதன் பிற்குள்ளவை இதிலும்

http://ennulagam.blogspot.com/2013/10/57.html

உள்ளன. இவற்றை டவுன்லோட் செய்து படிக்கலாம்.

நன்றி.

Sasi Kala said...

தகவலுக்கு நன்றிங்க.