18 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 50

முன்கதை 1 - 28 ;  29 - 50

(சினிமாக்காரங்க சொல்லிக்கறாப்பல 'இது வெற்றிகரமான ஐம்பதாவது நாள்' என்று சொல்லிக்கலாமா?)

நீதிபதி பதிலளிக்காமல் கேள்விக் குறியுடன் சாட்சி கூண்டில் நிற்கும் தன்ராஜைப் பார்த்தார். 'அது எங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்களோட ஃபுட் ப்ரின்ட் மாதிரிதான் தெரியுது யுவர் ஆனர்.' என்றார் அவர் சுருதியிறங்கி.

இருக்கையில் இருந்து எழுந்த பிபி தன்ராஜை எரித்துவிடுவதுபோல் பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமல் மீண்டும் அமர்ந்தார். 

ராஜசேகர் வசந்தைப் பார்த்தான். அவன் அடுத்த படத்தை க்ளிக் செய்ய அதில் தெரிந்த ஹாலின் ஒரு மூலையில் சில சிகரெட் துண்டுகள் கிடப்பது தெரிந்தது....

'என்னுடைய கட்சிக்காரருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை... அப்படியானால் இவை யாருடையவை...?'

தன்ராஜ் சங்கடத்துடன் நெளிந்தார். இதுவும் நிச்சயம் நம்ம ஆளுங்க வேலையாத்தான் இருக்கும்.... அப்படியே சொல்லிருவோம்... இல்லன்னா உண்மையான கொலையாளி என் கட்சிக்காரர் இல்லேன்னுருவாரே.... ' இதுவும் எங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்களோடதுதான்னு நினைக்கேன்..' என்றார்.

ராஜசேகர் கேலியுடன் சிரித்தான்.. 'நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால படிச்ச கண்டிஷன்ல இதுவும் இருக்கு.... Don't introduce any new materials such as cigarette ends at the scene.... ஒருவேளை க்ரைம் சீனுக்கு போன போலீஸ்காரங்களுக்கு இது தெரியாதுன்னு நினைக்கேன்...'

தன்ராஜின் முகம் அவமானத்தால் சிறுத்துப்போனதை கவனியாதவன் போல் ராஜசேகர் அடுத்த படத்தை காட்ட அதில் படுக்கையறை தெரிந்தது. அறை முழுவதும் பொருட்கள் இறைந்துக் கிடந்தன. 

'ஹால்லருக்கற படத்துல ஃபிங்கர் ப்ரின்ட் எடுத்த அடையாளங்கள பாத்தோம்.... இது மிஸ். மாதவியோட பெட்ரூம். ஆனா இங்கருந்து ஃபிங்கர் ப்ரின்ட் எடுத்ததுக்கான எந்த எவிடென்சையும் காணோம்..... அதுமட்டுமில்ல.... இந்த அறையே தலைகீழாக புரட்டி போடப்பட்டிருக்கு..... இதுக்கு போலீஸ்தான் காரணமா? அப்படீன்னா தேவையில்லாம க்ரைம் சீன டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுங்கற கண்டிஷனையும் போலீஸ் டிஸ்ரிகார்ட் பண்ணியிருக்காங்க... இதுனாலயும் கொலைக்களத்துல என் கட்சிக்காரர தவிர வேற யாராவது  இருந்திருந்தா அவங்களோட கைரேகை அல்லது அவர் விட்டுச் சென்ற முக்கியமான தடயங்கள் விடுபடறதுக்கு சான்ஸ் இருக்கலாம் என்பது என்னுடைய வாதம்...' 

தன்ராஜிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

'உங்களத்தான் கேக்கறேன் சார்..... நீங்கதான முதல்ல க்ரைம் சீன விசிட் பண்ணது? இந்த மாதிரி அலங்கோலத்துக்கு நீங்கதான் காரணமா?' என்றான் ராஜசேகர் பொய்யானதொரு கோபத்துடன். 

தன்ராஜ் க்ரைம் சீனை சென்றடைந்தபோதே அந்த அறை மட்டுமல்லாமல் அதையடுத்திருந்த அறையும் அந்த நிலையில்தான் இருந்தது. ஆகவேதான் கோபாலைத் தவிர வேறு ஒருவரும் அங்கு இருந்திருக்க வாய்ப்புண்டு என்று அவர் நினைத்தார். தான் அங்கு செல்வதற்கு முன் போலீசார் எடுத்திருந்த புகைப்படங்களை பார்த்தபிறகுதான் அந்த அறைகள் போலீசார் அங்கிருந்து சென்றதற்குப் பிறகு கலைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் அவருக்கு தெரிந்தது. அதை அவர் சுட்டிக்காட்டியும் அவருடைய ஆய்வாளர் பெருமாள் கண்டுக்கொள்ளவில்லை. அந்த மூனாம் நபர் அங்க இருந்ததுக்கான எவிடென்ஸ் இருந்தா கொண்டு வாங்க... அப்புறம் நீங்க சொல்றத பத்தி கவலைப்படலாம் என்று கூறியதையும் அவர் கேட்ட அந்த சாட்சியத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியாமல் போனதையும் நினைவு கூர்ந்தார் தன்ராஜ். மேலும் மாதவியின் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டதும் விசாரணக்குச் சென்றிருந்த இரு காவலர்களும் வீட்டைப் பூட்டிவிட்டு காவல்நிலையத்திற்கு சென்றுவிட்டார்கள் என்று எப்படி நீதிமன்றத்தில் சொல்வது? 'க்ரைம் சீனை விசாரணை முழுவதும் முடியும் வரை செக்யூர் செய்ய வேண்டும் என்ற அடுத்த கன்டிஷனையும் நீங்கள் கோட்டை விட்டுவிட்டீர்கள் என்பாரே?

'சரி... வேற மாதிரியா கேக்கறேன்..... நீங்க க்ரைம் சீனுக்கு போனப்பவே இந்த மாதிரி அலங்கோலமா இருந்துதா?'

'ஆமாம்...'

இந்த பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன் என்பதுபோல் ராஜசேகர் நீதிபதியைப் பார்த்தான். 'யுவர் ஆனர். க்ரைம் சீனில் போலீசார் எடுத்திருந்த புகைப்படங்களின் நகல்களை எங்களுக்கு வழங்கவில்லை என்பதால் அதை இப்போதாவது பார்க்க ஆசைப்படுகிறேன்.' 

நீதிபதி கேள்விக்குறியுடன் தன் இருக்கையின் கீழ் அமர்ந்திருந்த அலுவலரைப் பார்க்க அவர் தன் மேசை மீது கிடந்த வழக்கு சம்மந்தமான ஆவணங்களை துழாவி புகைப்படங்கள் இருந்த உறையை எடுத்து ராஜசேகரிடம் அளித்தார். அவன் ஏற்கனவே நீதிமன்ற ரிஜிஸ்த்ராரிடம் இருந்து அந்த புகைப்படங்களை பார்த்துவிட்டிருந்தான். ஆகவே அந்த படங்களில் தனக்கு தேவையான படங்களை எடுத்து தன்ராஜை நெருங்கி அவற்றிலிருந்து ஒரு படத்தை எடுத்து அவரிடம் காட்டினான். 'இந்த படம் ஒங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்களால எடுக்கப்பட்டதுதான?'

அவர் தான் மடக்கப்பட்டதை உணர்ந்து வெட்கிப்போனார். வேறுவழியில்லாமல், 'ஆமாம்' என்றார்.

'எந்த ரூம்னு தெரியுதுங்களா?' என்றான் ராஜசேகர்.

'பெட்ரூம்..' என்று பதிலளித்தார் தன்ராஜ்... ராஜசேகர் அடுத்து என்ன கேட்கப்போகிறார் என்பது அவருக்கு தெரிந்துதானிருந்தது. 

'டிவியில இருக்கற படத்தில் இருக்கறா மாதிரிதான் அலங்கோலமா இருக்கா?'

'இல்லை.'

ராஜசேகர் புகைப்படத்தை அவரிடம் இருந்து திரும்ப பெற்று நீதிமன்ற அலுவலரிடம் கொடுத்து அதை நீதிபதியிடம் கொடுக்குமாறு கேட்டான். அவரும் அதை வாங்கி தொலைக்காட்சி பெட்டியில் தெரிந்த படத்துடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு அலுவலரிடமே திருப்பிக் கொடுக்க அவர் அருகில் காத்துநின்ற ராஜசேகரிடம் கொடுத்தார். 

'யுவர் ஆனர், நான் சிறிது நேரத்திற்கு முன் வாசித்த அடுத்த கண்டிஷன்.. க்ரைம் சீன் should be secured till the investigation is completed..... இது எவ்வளவு முக்கியமான நியதி என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை..... இதை சரிவர கடைபிடிக்க தவறியதன் மூலம் கொலை நடந்த இடத்தை போலீசார் சோதனையிட்ட பிறகு அதாவது, போலீசார் புகைப்படங்களை எடுத்ததற்குப் பிறகு போலீஸ் அல்லாத எவரோ ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த வீட்டிற்குள் நுழைந்து இந்த வேலையை செய்திருக்கிறார்கள். அவர்களே ஏன் இந்த கொலையையும் செய்திருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கேள்வி.'

ராஜசேகரின் வாதத்திறமையில் சந்தேகப்பட்டிருந்த மகாதேவன் அவன் வாதிடும் நேர்த்தியைக் கண்டு அசந்துபோய் அமர்ந்திருந்தார். இவன் ராகவாச்சாரியை தூக்கி சாப்ட்ருவான் போலருக்கே என்று நினைத்தார். கோபாலும் அதே பிரமையில் அமர்ந்திருந்தார்.... வசந்த் பெருமையுடன் தன் குருவைப் பார்த்தான்..... பின்றீங்க பாஸ்....

ராஜசேகர் வசந்தைப் பார்த்து 'அடுத்த படம்' என்றான்.

வசந்த் மடிக்கணியை க்ளிக் செய்ததும் ராஜசேகர் எடுத்திருந்த ஒரு நிமிட வீடியோ திரையில் ஓடியது. அதில் காமரா கார்பெட்டில் இருந்த ரத்தக்கறையிலிருந்து மெல்ல நகர்ந்து படுக்கையறைக்குள் நுழைந்து குளியறைக்குள் சென்றது...... வசந்த் மீண்டும் க்ளிக் செய்ததும் படம் அசையாமல் அதே காட்சியில் நின்றது.

'உண்மையான கொலையாளி  ரத்தக்கறையோடு குளியலறைக்குள் நுழைந்து கைகால்களை கழுவியிருக்கலாம் என்பதை காட்டவே இந்த வீடியோவை எடுத்தேன்..... ஆனால் அந்த அறையில் கைரேகையோ அல்லது கால்தடங்களையோ போலிசார் எடுத்ததை போலிசாரின் அறிக்கை தெரிவிக்கவில்லை.  It is therefore very clear that even  basic requirements to ensure an effective investigation at the crime scene have not been fulfilled by the police.' என்ற ராஜசேகர் மீண்டும் தன்ராஜை நோக்கி திரும்பினான். போலீசாரின் இந்த தவறுகள் உண்மை கொலையாளியை தப்ப விட்டிருக்கலாம் என்பதுதான் என்னுடைய வாதம்.' என்றவன் மீண்டும் கூண்டில் நின்ற தன்ராஜை நெருங்கினான்.

'நீங்க சுமார் எத்தன மணிக்கி க்ரைம் சீனுக்கு போயிருப்பீங்க?' 

மீண்டும் அதையே சுத்தி சுத்தி வரியேய்யா என்று மனதுக்குள் நொந்துப்போனார் தன்ராஜ். 

இதை இனிமேலும் அனுமதித்தால் தான் தோற்கப் போவது உறுதி என்று நினைத்த பிபி ஆவேசத்துடன் எழுந்து நின்றார். 'தேவையில்லாத கேள்விகளை கேட்டு ஒரு பொறுப்புள்ள காவல்துறை அதிகாரியை இழிவுபடுத்துகிறார் எதிர்தரப்பு லாயர் ' 

நீதிபதி எரிச்சலுடன் அவரைப் பார்த்தார். 'Are you making a statement or raising an objection?' 

இந்த கேள்வியை எதிர்பாராதவர்போல் தடுமாறிய பிபி சமாளித்துக்கொண்டு, 'I am objecting it your honour.... no purpose is going to be served by this question.'

நீதிபதி அவரையே ஒரு சில நொடிகள் பார்த்தார். பிறகு அதே எரிச்சலுடன் 'overruled.... Witness may answer the question.' என்றார். 

குட்டுப்பட்ட உணர்வுடன் தன் இருக்கையில் அமர்ந்த பிபி தன் கையில் இருந்த ஆவணத்தை படிப்பதுபோல் நடிக்க ராஜசேகர் சாட்சி கூண்டில் நின்ற தன்ராஜை பார்த்தான். அவர் கொலைக்களத்தில் சென்றடைந்தபோது பிற்பகல் ஆகியிருந்தது என்பதை ஏற்கனவே வசந்த் மூலம் அறிந்திருந்தான். 'சொல்லுங்க சார்.'

'பகல் இரண்டு மணி இருக்கும்.'

'அதாவது மர்டர் பற்றிய இன்ஃபர்மேஷன் கிடைச்சி சுமார் ஏழு மணி நேரம் கழிச்சி.... அப்படித்தான?'

'ஆமாம்'

'ஏன்னு நா தெரிஞ்சிக்கலாமா?'

வேறுவழியில்லாமல் அன்று அவருடைய காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் ஏன் காவல்நிலையத்தில் இல்லை என்பதை சுருக்கமாக விவரித்தார். 'நா கோர்ட்ல இருந்தப்போ எங்க ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ தான் ஃபோன்ல கூப்ட்டு சொன்னார்... ஆனா என்னால உடனே வர முடியலை.... அதனால அவர ஸ்டேஷன்ல இருந்த ஒரு கான்ஸ்டபிள கூட்டிக்கிட்டு போயி என்னல்லாம் க்ரைம் சீன்ல செய்யணும் இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுத்து அனுப்பிச்சேன்..'

'உதவி ஆய்வாளர்கள் அந்தஸ்த்திற்கு கீழுள்ளவர்களை க்ரைம் சீன் விசாரணைக்கு அனுப்புவது கூடாது என்ற கன்டிஷனையும் மீறி இருக்கீங்க. அது சில சமயங்களில் தவிர்க்க முடியாதுதான், ஒத்துக்கறேன். ஆனால் இத்தகைய விசாரணைக்கு முறையாக பயிற்றுவிக்கப்படாத காவலர்களை அனுப்பும் அதிகாரிகள் அவர்கள் அங்கு கடைபிடிக்க வேண்டிய அனைத்தையும் கடைபிடித்தார்களா என்றும் பார்த்திருக்க வேண்டும். அடுத்ததாக அவர்கள் பார்த்ததையும் கைப்பற்றியதையும் குறித்து எழுத்து மூலமான அறிக்கையை பெற்று சரிபார்த்திருக்க வேண்டும்.... ஆனால் அத்தகைய எவ்வித அறிக்கையும் பெறப்படவில்லை என்பது அதன் நகல்கள் என் கட்சிக்காரருக்கு அளிக்கப்படாததிலிருந்தே தெரிகிறது..... அல்லது வேண்டுமென்றே அது அளிக்கப்படவில்லையா....?'

பிபி எழுந்து, 'அது போலீஸ் டிப்பார்ட்மென்டோட இன்டேர்னல் ரிப்போர்ட் யுவர் ஆனர்.. அதையெல்லாம் டிஃபென்சுக்கு தரவேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை.....' என்றார் எரிச்சலுடன்..

'I agree.' என்றார் நீதிபதி. 'ஆனால் அதை குற்றம் சாட்டப்பட்டவர் விரும்பினால் அளிக்க வேண்டும் என்பதும் நியதி, சரிதானே?'

நீதிபதியிடமிருந்து இந்த அப்சர்வேஷனை எதிர்பாராத பிபி ஒரு நிமிடம் தடுமாற்றத்துடன் தன் முன்னாலிருந்த கோப்பை கிளறினார். அதில் அத்தகைய எந்த அறிக்கையும் காணவில்லை. 

'Is there any difficulty in submitting it to the defense?' என்றார் நீதிபதி சற்று எரிச்சலுடன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு....

தொடரும்..

12 comments:

Anonymous said...

வணக்கம்
தொடர்கதை அருமை தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...

ஒரு திறமையான Defence வழக்கறிஞர் இருந்தால் காவல் துறையினரின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எறிந்துவிடலாம் என்பதை இந்த தொடர் மூலம் அறிந்துகொண்டேன்.நீதிமன்றத்தில் நடக்கும் குறுக்கு விசாரணை சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது என்பது உண்மை. வாழ்த்துக்கள்!

Packirisamy N said...

//'சரி... வேற மாதிரியா கேக்கறேன்..... நீங்க க்ரைம் சீனுக்கு போனப்பவே இந்த மாதிரி அலங்கோலமா இருந்துதா?'
'ஆமாம்...'//

Very good question, and very bad answer. Danraj should have framed to make Rajasekar changed the crime scene, if he is cunning enough.

டிபிஆர்.ஜோசப் said...


2008rupan said...
வணக்கம்
தொடர்கதை அருமை தொடர எனது வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
ஒரு திறமையான Defence வழக்கறிஞர் இருந்தால் காவல் துறையினரின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எறிந்துவிடலாம் என்பதை இந்த தொடர் மூலம் அறிந்துகொண்டேன்.நீதிமன்றத்தில் நடக்கும் குறுக்கு விசாரணை சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது என்பது உண்மை. வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
//'சரி... வேற மாதிரியா கேக்கறேன்..... நீங்க க்ரைம் சீனுக்கு போனப்பவே இந்த மாதிரி அலங்கோலமா இருந்துதா?'
'ஆமாம்...'//

Very good question, and very bad answer. Danraj should have framed to make Rajasekar changed the crime scene, if he is cunning enough. //

Rajasekah knew the answer before he asked that question.

Dhanraj is a honest officer. That's why he accepted his mistakes and kept quiet for many of the questions. Otherwise he could have, as you said, simply said 'NO' to this question. Even the judge would have believed him.

T.N.MURALIDHARAN said...

ராஜ சேகர் ஒரு மொக்கை வழக்கறிஞர் என்றே ஆரம்பத்தில் நினைத்தேன். தன்ராஜை ஒரு வழி பண்ணி விட்டார்.
நடைமுறைகளை மீறியதை பைன்ட் பை பாயின்ட் காண்பித்தது அருமை
எளிமையான ஆங்கிலத்தில்தான் உள்ளது. உண்மையில் இப்படித்தான் இருக்குமா?

டிபிஆர்.ஜோசப் said...

T.N.MURALIDHARAN said...

எளிமையான ஆங்கிலத்தில்தான் உள்ளது. உண்மையில் இப்படித்தான் இருக்குமா?//

ஆங்கிலத்தை சொல்கிறீர்களா? உண்மையில் நீதிமன்றத்தில் ஆங்கிலம் படும்பாடு என்று இந்த தொடர் முடிந்ததும் ஒரு பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன்.

காரசாரமான குறுக்கு விசாரணையை கேட்டீர்கள் என்றால். சிவில் லாயர்களை விட க்ரிமினல் லாயர்கள் சற்று வீராவேசமாகத்தான் விசாரிப்பார்கள். போலீஸ் மீதுள்ள ஆத்திரம் முழுவதும் வெளிவரும். ஆனால் நான் எழுதியது கொஞ்சம் dramatised version.

G.M Balasubramaniam said...

இந்த மாதிரி ஒரு வழக்கு விசாரணையை நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
இந்த மாதிரி ஒரு வழக்கு விசாரணையை நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.//

இப்படியொரு காரசாரமான குறுக்கு விசாரணை நடப்பது சற்று அபூர்வம்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

Sasi Kala said...

ராஜசேகரை நானும் ஒன்றும் தெரியாதவர் என்றே நினைத்திருந்தேன். அப்பப்பா இப்படி அசத்துறாரே... சூப்பர்.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
ராஜசேகரை நானும் ஒன்றும் தெரியாதவர் என்றே நினைத்திருந்தேன். அப்பப்பா இப்படி அசத்துறாரே... சூப்பர்.//

சில பேர் இப்படித்தான் எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருப்பாங்க ஆனா ஒன்னுமே தெரியாதமாதிரி இருப்பாங்க. அதுமாதிரிதான் இவரும் போலருக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.