17 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 49


'ஆமா பாஸ்... அப்படித்தான் தோனுது..... அதனாலதான் அன்னைக்கி கோர்ட்ல வச்சி நாம பாத்த போலீஸ் க்ரைம் சீன் ஃபோட்டோவுக்கும் நீங்க எடுத்துருக்கற இந்த ஃபோட்டோஸ்க்கும் நிறைய டிஃபரன்ஸ் இருக்கு...' என்று மாதவியின் படுக்கையறை மற்றும் ஒப்பனை அறைகளில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்களை சுட்டிக்காட்டினான்.

இந்த விஷயத்தை ஏற்கனவே குறித்துவைத்திருந்த ராஜசேகர் வசந்தும் அவற்றைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சியடைந்தான். 'நா இத ஏற்கனவே நோட் பண்ணி வச்சிருக்கேன்.... அதனாலதான் இந்த விஷயத்த போலீஸ் செஞ்சிருக்க வாய்ப்பில்லேன்னு நினைச்சி அத கண்டுபுடிறான்னு சொன்னேன்..... இப்ப அது கன்ஃபர்ம் ஆயிருச்சி..... ஆனா இன்வெஸ்ட்டிகேஷன் முழுசும் முடியறவரைக்கும் க்ரைம் சீன செக்யூர் பண்ணணும்னுகூடவா இருபது இருபத்தஞ்சி வருசம் சர்வீஸ் போட்ட ஒரு எஸ்.எஸ்.ஐக்கு தெரியாம போயிருச்சி.... ஆச்சரியாமா இல்ல?'

'அந்த அளவுக்கு விஷய ஞானம் இல்லாததால தான பாஸ்.... அவருக்கு எஸ்.எஸ்.ஐனு. சும்மா கவுரவத்துக்கு ஒரு போஸ்ட குடுத்து ஒக்கார வச்சிருக்காங்க...? இல்லன்னா அவரோட சர்வீசுக்கு ஒரு டி.எஸ்.பி ரேங்க்லயாவது இருந்துருக்கணுமே...?'

'நீ சொல்றதும் வாஸ்தவம்தான்.' என்று ஆமோதித்த ராஜசேகர்... 'சரிடா....அப்ப கிளம்பு..... நெக்ஸ்ட் வீக் பாக்கலாம்...'

வசந்த் கிளம்பிச் சென்ற அடுத்த சில நிமிடங்களில் ராஜசேகரும் அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான்.

***********

ராஜசேகர் எதிர்பார்த்திருந்தபடியே அடுத்த சில தினங்களில் மாதவி கொலை வழக்கின் அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணை வந்தது. 

முந்தைய ஹியரிங்கில் கொலை வழக்கை விசாரித்த துணை ஆய்வாளர் தன்ராஜின்  நேரடி விசாரணை (direct examination) முடிவுற்றிருந்ததால் தன்ராஜ் சாட்சி கூண்டில் ஏறி நின்றதும் நீதிபதி ராஜசேகரைப் பார்த்தார் நீங்கள் குறுக்கு விசாரணையை துவங்கலாம் என்பதுபோல்.

'தாங்க் யூ யுவர் ஆனர்' என்றவாறு தன்ராஜை நெருங்கிய ராஜசேகர், அவர் பிபியின் கேள்விகளுக்கு அளித்த பதில்களை குறித்து வைத்திருந்தவற்றை மீண்டும் ஒரு முறை பார்வையிடுவதுபோல் நடித்தான். பிறகு சட்டென்று, 'உங்களுக்கு இதுக்கு முன்னால மர்டர் கேஸ ஹேன்டில் பண்ண அனுபவம் இருக்கா?' என்றான் வேண்டுமென்றே. ஏனெனில் அவர் ஏற்கனவே தன்னுடைய அனுபவங்களைப் பற்றியும் அவர் அதுவரை விசாரித்திருந்த வழக்குகளைப் பற்றியும் பிபியின் விசாரணையின்போது விவரமாக எடுத்துரைத்திருந்தார். 

தன்ராஜுக்கு அவருடைய கேள்விக்கு பின்னாலிருந்த கேலி கோபத்தை வரவழைத்தது. இருப்பினும் கோபத்தை அடக்கிக் கொண்டு, 'இருக்கு.' என்றார்.

'தோராயமா இது எத்தனையாவது கேஸ்னு சொல்ல முடியுமா?'

'கரெக்டாவே சொல்ல முடியும்.... இது எனக்கு எட்டாவது கேஸ்.'

'ஐ மீன் சென்னையில'

'ரெண்டாவது.'

'இதே ஸ்டேஷன்லயா?'

'ஆமாம்.'

'அப்போ க்ரைம் சீன்ல என்னல்லாம் செய்யணும் என்னல்லாம் செய்யக் கூடாதுன்னு ஒங்களுக்கு நல்லாவே தெரியும், அப்படித்தானே?'

என்னய்யா கேள்வி இது என்று உரக்கக் கத்தலாம் போல் இருந்தது தன்ராஜுக்கு... ஒனக்குத்தான்யா இது முதல் மர்டர் கேஸ்... என்று மனதுக்குள் கூறிக்கொண்டார். 

'ஆமாம்.' 

'ஆனா க்ரைம் சீன்ல நீங்க செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள கோட்டை விட்ரூக்கீங்கன்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும்னு நா சொன்னா ஒங்க பதில் என்னவா இருக்கும்?' என்றான் ராஜசேகர்  அவரை சீண்டும் நோக்கத்துடன். 

இத்தகைய விசாரணைகள் பலவற்றை சந்தித்திருந்த தன்ராஜ் கோபம் அடையாமல், 'நீங்க சொல்றது சரியில்லைன்னு இருக்கும்.' என்றார்.

'சரி.... பாக்கலாம்.' என்று கேலியுடன் பதிலளித்தான் ராஜசேகர், 'ஒரு க்ரைம் சீன்ல என்னெல்லாம் செய்யணும், செய்யக் கூடாதுன்னு ஒங்களுக்கு தெரியும்னு நீங்க சொல்றீங்க. இருந்தாலும் உங்க ட்ரெய்னிங் காலேஜ் ஃபார்மர் (former) பிரின்சிப்பால், ரிட்டையர்ட் டிஎஸ்பி மிஸ்டர் வி.சித்தன்னன் எழுதி பப்ளிஷ் பண்ணியிருக்கற Police Investigationகற புக்லருந்து ஒரு எஃபக்டிவ் க்ரைம் இன்வெஸ்ட்டிகேஷனுக்கு என்னல்லாம் ரிக்வயர்மென்ட்ஸ் தேவைன்னு அவர் சொன்னதுலருந்து சிலத படிக்கிறேன்... பொறுமையா கேட்டுட்டு எதையெல்லாம் செஞ்சீங்க, எதையெல்லாம் கோட்டை விட்டுருக்கீங்கன்னு சொல்லுங்க...'

தன்ராஜ் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு கூண்டில் நிற்க ராஜசேகர் சாவகாசமாக தன் இருக்கைக்கு திரும்பி மேசை மீது வைத்திருந்த புத்தகத்தில் வசந்த் குறியிட்டு வைத்திருந்த பக்கத்தை புரட்டி படிக்கலானான்.

1.The scene of occurence should not get altered. It should be preserved as far as possible so that no clues are left out.

2. The Investigating officer (IO) should not move anything from its place. It has to be described and its location noted by sketches using measuring tapes on the floor and photographed.

3. The scene even if it is in a mess should not be cleaned till thoroughly examined.

4. The IO should never leave the scene unguarded.

5. The IO or his assistants should not introduce any material, like cigarette ends, its ash, foot or footwear marks or finger prints at the scene.

6. No officer below the rank of a sub-inspector should be entrusted with the job of conducting the investigation at the scene.

நீதிமன்றமே அவனையும் அவன் வாசித்ததையும் கவனித்தது. படித்து முடித்துவிட்டு புத்தகத்தை மூடி வசந்திடம் கொடுத்துவிட்டு தன்ராஜைப் பார்த்தான்.

'இப்ப சொல்லுங்க... இதுல இருக்கறா மாதிரியே செஞ்சதா ஒங்களால சொல்ல முடியுமா?'

தன்ராஜ் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமையுடன், 'அப்படித்தான் நினைக்கிறேன்.' என்றார். ஆனாலும் அவருடைய உள்மனது இதில் எதையுமே நாம் சரியாக செய்யவில்லையே என்று இடித்தது.

ராஜசேகர் கேலியுடன் சிரித்தான். பிறகு நீதிபதியைப் பார்த்து, 'Your honour, I seek your permission to  project on this TV some photographs and a video taken by me after the house was released from the Police custody.' என்றான். 

அவன் 'after' என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்ததை நீதிபதியும் பிபி வேணுவும் கவனித்தார்களோ இல்லையோ சாட்சி கூண்டில் அவஸ்தையுடன் நின்றிருந்த தன்ராஜ் நன்றாகவே உணர்ந்தார். எல்லாம் அன்று கொலை நடந்த அன்று தான் ஸ்டேஷனில் இல்லாததால் வந்த விணை என்று தன் விதியை நொந்துக்கொண்டார். தன்னால் கொலைக்களத்தில் செல்ல முடியாது ஆகவே உங்களால் போக முடிந்தால் செல்லுங்கள் அல்லது லா அன்ட் ஆர்டர் உதவி ஆய்வாளரையாவது அங்கு அனுப்புங்கள் என்று அவன் கெஞ்சியூம் ஆய்வாளார் பெருமாளர் 'பரவால்லை.... எஸ்.எஸ்.ஐ இருக்கார்ல, அவர்கிட்ட என்ன செய்யணும்னு இன்ஸ்ட்ரக்ட்ஷன் குடுத்து அனுப்பிட்டு நீங்க உங்க கேஸ் முடிஞ்சதும் போய் பாத்துக்குங்க....' என்று அவருடைய கோரிக்கையை அலட்சியப்படுத்தியதால்தான் இன்னைக்கி இங்க தலை குணிஞ்சி நிக்க வேண்டியிருக்கு... 

'Permission granted.'

ராஜசேகர் வசந்தை நோக்கி தலையை அசைக்க  அவன் மாதவியின் வீட்டில் எடுத்திருந்த படங்களில் முதல் படத்தை காட்டினான். 'இது மர்டர் நடந்த வீட்டு ஹால்.... இதுதான் ஆக்சுவல் க்ரைம் சீன்.' என்ற ராஜசேகர் தொலைக்காட்சி பெட்டியை நெருங்கி சோபா தள்ளி வைக்கப்படுவதற்கு முன் அது இருந்த இடத்தில் தென்பட்ட அடையாளத்தைக் காட்டினான். 'இதுதான் சோபா ஒரிஜினலாக கிடந்த இடம் யுவர் ஆனர். அது கார்பெட்ல ஏற்படுத்தியிருக்கற மார்க்கோட டெப்தே வச்சே அது எவ்வளவு நாளா அதே இடத்துல இருந்துருக்கணுங்கறத புரிஞ்சிக்க முடியும்னு நினைக்கேன். ஆனா போலீசோட விசிட்டுக்கு அப்புறம் அதே சோபா எங்க இருக்குன்னு பாருங்க.!' என்றவாறு அவன் வசந்தைப் பார்த்து தலையை அசைக்க அவன் அடுத்த புகைப்படத்தை காட்டினான். 

நீதிபதி பதிலேதும் கூறாமல் அவன் கூறியவற்றை குறித்துக்கொண்டார்.

ராஜசேகர் சட்டென்று திரும்பி தன்ராஜைப் பார்த்தான்.

 'மர்டர் சீன்ல எந்த பொருள் எந்த இடத்துல இருந்துதுன்னு காமிக்கிறது ஒரு rough sketch வரையணும்னு ரூல் இருக்கே..... அத கோர்ட்ல சப்மிட் பண்ணியிருக்கீங்களா? ஏன்னா எனக்கு அதோட காப்பி தரலை..... அதான் கேக்கேன்....'

பிபி உடனே எழுந்து 'அப்ஜெக்‌ஷன்' என்றார். 

நீதிபதி இதுல என்னய்யா அப்ஜெக்‌ஷன் என்பதுபோல் பார்த்தார்.

பிபி அதைக் கண்டும் காணாததுபோல் தொடர்ந்தார். 'அது போலீசோட ரெஃபரன்ஸ்சுக்கு போடறது. அதையெல்லாம் டிஃபென்ஸ்சுக்கு குடுக்க தேவையில்லை.'

நீதிபதி வேண்டுமென்றே அவர் கூறியதைக் கேட்காதவர் போல், 'விட்னஸ் மே ஆன்சர் தி க்வெஸ்ட்டின்.' என்றார்.

தன்ராஜுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஏனெனில் கொலைக்களத்திற்கு சென்றிருந்த எஸ்.எஸ்.ஐ.யும் கான்ஸ்டபிளும் அடிப்படைக் கல்வி தகுதி மட்டுமே கொண்டிருந்தவர்கள். அவர்கள் வரைந்திருந்த வரைபடம் படுகேவலமாக இருந்தது. அதனால்தான் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதை தவிர்த்திருந்தார்.

 'வரைபடத்தை தாக்கல் செய்ய தவறிவிட்டது உண்மைதான்..'

ராஜசேகர் புன்னகையுடன் அவரைப் பார்த்தான். 'Either it is not drawn or whatever has been drawn is not suitable for presentation.... am I right?' என்றான் ராஜசேகர். 

தன்ராஜ் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நிற்க, 'இட் ஈஸ் ஆல்ரைட்' என்ற ராஜசேகர் வசந்தைப் பார்த்து 'அடுத்த படம்' என்றான்.

அடுத்த படத்தில் சோபாவின் அடியில் கிடந்த கார்பெட்டில் பெரும்பகுதியை மறைத்திருந்த ரத்தக்கறை படத்தில் தெரிந்தது. 'க்ரைம் ஸ்பாட்டுல கொலையாளியை அடையாளம் காட்டக் கூடிய பிரதான பொருட்களை அது எத்தனை சிறியதாகவே பெரியதாகவோ இருந்தாலும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்பது நியதி. ஆனால் கொலைக்களத்தில் மிக அளவிலான இரத்தக் கறை படிந்த இந்த தரைவிரிப்பு கைப்பற்றப்படவில்லை.... ஒருவேளை கொலையுண்டவரின் ரத்தத்ததுடன் கொலையாளியின் ரத்தமும் இதில் படிந்திருக்க வாய்ப்புள்ளதே? இதை ஏன் நீங்க சீஸ் பண்ணல?'

தன்ராஜ் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். நாமாவது இதை செய்திருக்கலாம் என்று நினைத்தார். 

அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதை கவனியாதவன்போல் ராஜசேகர் அடுத்த படத்திற்கு தாவினான். அது சோபாவின் கால்களிலிருந்து ஹாலின் வலப்புறம் இருந்த படுக்கையறை வரை சென்ற ரத்தக்கறையிலான பாத சுவடுகளை காட்டியது. 'உங்க மேன்யுவல்லருக்கற அடுத்த இன்ஸ்ட்ரக்‌ஷன்... கொலைக்களத்திற்கு விசாரணைக்குச் செல்லும் அதிகாரிகளின் பாதச் சுவடுகளோ கைரேகைகளோ கொலை நடந்த இடத்தில் பதியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...' என்றவாறு நீதிபதியைப் பார்த்தான். 

'யுவர் ஆனர்... குற்றம் சாட்டப்பட்ட என்னுடைய கட்சிக்காரரின் பாத எண் 9.. மேலும் அவர் வீட்டிற்குள் செருப்போ அல்லது ஷூவோ அணிந்து செல்லும் பழக்கம் இல்லாதவர். அவருடைய காலணியை வாசலிலேயே விட்டுச் செல்வதுதான் வழக்கம். ஆனால் இந்த படத்தில் இருக்கும் பாதசுவடுகள் 9 எண்ணுக்கு மேலுள்ள காலணிகளின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த சுவடுகள் என் கட்சிக்காரருடையதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் என்னுடைய கட்சிக்காரர் அல்லாமல் வேறொரு நபரும் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். அது யார் என்பதுதான் என் கேள்வி.'

நீதிபதி கூண்டில் நின்றிருந்த தன்ராஜை கேள்விக்குறியுடன் பார்த்தார்..

தொடரும்..
7 comments:

வே.நடனசபாபதி said...

வழக்கறிஞர் ராஜசேகரை என்னவோ என நினைத்தேன். இது அவருக்கு முதல் கேஸ் ஆனாலும் குறுக்கு விசாரணையில் ‘பிளந்து’ கட்டுகிறாரே! வாழ்த்துக்கள் உங்களுக்கு அருமையாய் தொடரை கொண்டு செல்வதற்கு!

G.M Balasubramaniam said...

காரண காரியங்களை தனராஜ் எடுத்துச் சொன்னால் கேஸ் படுத்துவிடும். பொறுப்பு என்று வரும்போது இவர் மட்டும்தான் மாட்டுவார் அல்லவா.? இண்டெரெஸ்டிங் .

T.N.MURALIDHARAN said...

ராஜசேகர் பொளந்து கட்டுகிறாரே. விசாரணை சூடு பித்தது விட்டது.

T.N.MURALIDHARAN said...

ராஜசேகர் பொளந்து கட்டுகிறாரே! விசாரணை சூடு பிடித்து விட்டது

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
வழக்கறிஞர் ராஜசேகரை என்னவோ என நினைத்தேன். இது அவருக்கு முதல் கேஸ் ஆனாலும் குறுக்கு விசாரணையில் ‘பிளந்து’ கட்டுகிறாரே! வாழ்த்துக்கள் உங்களுக்கு அருமையாய் தொடரை கொண்டு செல்வதற்கு!//

பெரும்பாலான க்ரிமினல் லாயர்கள் சற்று ஆவேசத்துடந்தான் வாதாடுவார்கள்.சிலர் நக்கலடிப்பார்கள். போலீஸ்காரர்களை விசாரிப்பது என்றால் அல்வா சாப்பிடுவதுபோல் என்றார் என்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருமுறை. 'கோர்ட்லதாங்க அவங்கள போட்டு ராவ முடியும்' என்றார்.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
காரண காரியங்களை தனராஜ் எடுத்துச் சொன்னால் கேஸ் படுத்துவிடும். பொறுப்பு என்று வரும்போது இவர் மட்டும்தான் மாட்டுவார் அல்லவா.? இண்டெரெஸ்டிங்//

கரெக்ட். எந்த ஒரு ஜூனியர் போலீஸ் அதிகாரியும் சுதந்திரமாக விசாரணையில் ஈடுபட அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. அது ஓரளவுக்கு உண்மைதான். அதிகாரிகளுக்கு முடிந்த வழக்குகளின் எண்ணிக்கை மீதுதான் கண்... unsolved files அதிகம் சேர்ந்தால் அவர்களுடைய செயல்பாடுகள் சரியில்லை என்று மேலிடம் கண்டிக்குமே என்ற அச்சம்.

டிபிஆர்.ஜோசப் said...

9 PM
T.N.MURALIDHARAN said...
ராஜசேகர் பொளந்து கட்டுகிறாரே. விசாரணை சூடு பித்தது விட்டது.//

க்ரிமினல் வழக்குகளில் போலீஸ் விசாரணையை விட நீதிமன்ற வாதங்கள்தான் சுவாரஸ்யமாக இருக்கும். ஆகவேதான் கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதுடன் நிறுத்திவிடாமல் நீதிமன்ற வாதங்களையும் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.