15 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 47


அன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தான் ஆஜராகவிருந்த வழக்கு விசாரணை முடிந்ததும் தன் அலுவலகம் திரும்பிய ராஜசேகர் அலுலகத்தில் வசந்த் காத்திருப்பதைப் பார்த்தான். 'வந்து ரொம்ப நேரமாச்சா?' என்றான். வசந்த் ராஜசேகரிடம் மீண்டும் உதவியாளரானதுமே அலுவலகத்தின் சாவி ஒன்றை அவனிடமும் கொடுத்து வைத்திருந்தான். 

'இல்ல பாஸ்.... ஒரு கா மணி நேரம் ஆயிருக்கும்.... வந்ததும் முதல் வேலையா நாகுவை போய்ட்டு வாய்யான்னு அனுப்பி வைச்சேன்... ஏன்னா இன்னைக்கி நாம டிஸ்கஸ் பண்ணப் போறது சீக்ரெட்டான விஷயமாச்சே....?' 

வசந்தின் முகத்தில் எப்போதும் காணப்படும் புன்னகையை காணாத ராஜசேகர் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையோடு தன் இருக்கையில் அமர்ந்து அவனைப் பார்த்தான். 'என்னடா படு சீரியசா இருக்கா மாதிரி தெரியுது?'

'ஆமா பாஸ்.... நீங்க குடுத்த நம்பர்லருந்து போன ரெண்டு மாசமா போயிருந்த கால்ஸ பாத்ததுலருந்துதான்...'

'அப்படியா? எங்க குடு?' என்று அவன் முன்னால் விரித்து வைத்திருந்த பட்டியலை எடுத்து மேலோட்டமாக வாசித்துப் பார்த்தான். ஏறக்குறைய இருநூறு அழைப்புகள் அந்த பட்டியலில் இருந்ததைக் கண்டான். அதில் கோபாலின் செல் எண் பல முறை.... அது அவன் எதிர்பார்த்ததுதான்..... ஆனால் அதில் இருந்த கோபாலின் பி.ஏ. ராமராஜனின் செல்ஃபோன் எண்ணும் இருந்தது அவன் சற்றும் எதிர்பாராதது..... அதுவும் போன இரண்டு வாரத்தில் அநேகமாக தினமும்.... பலமுறை..... 

'என்ன பாஸ்... ஷாக்காருக்கா.... யார் பாஸ் இந்தாள்? எங்கருந்து இந்த நம்பர் ஒங்களுக்கு கிடைச்சிது?'

ஒரு நீண்ட பெருமூச்சுடன் அந்த பட்டியலை மடித்து தன் மேசையின் மீது வைத்த ராஜசேகர் தன் கைப்பெட்டியிலிருந்த டேப் ரிக்கார்டரை எடுத்து வைத்து ரீவைன்ட் செய்தான். 'நீ இல்லாதப்ப மாதவி வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர் என்னெ வந்து பார்த்தார்... இங்கல்ல... நம்ம யூஷுவல் எடத்துல..... ஆன் பண்றேன்... பொறுமையா கேளு... அப்புறம் பேசலாம்..'

அடுத்த பத்து நிமிடம் ஒலிநாடாவில் இருந்து வந்த ராகவனின் வாக்குமூலம் வசந்தை அதிர வைத்தது..... 

ஒலிநாடா ஓடி முடிந்ததும் அதை அணைத்துவிட்டு அன்று தன்னை சந்தித்த ராகவனிடம் தான் சொன்னதையும் வசந்திடம் கூறினான். 

'என்ன பாஸ் நீங்க...? பேசாம இந்த டேப்ப அந்த தன்ராஜ கூப்ட்டு போட்டு காட்டாம..... இந்நேரம் கேஸே ஒன்னுமில்லாம போயிருக்குமே.....'

'டேய்.... லூஸ் மாதிரி பேசாத' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன்... 'இத அந்தாளுக்கு போட்டு காட்டறதுக்கு எத்தன நிமிஷம் ஆவும்? ஆனா அதுக்கப்புறம் என்னாவும்? அத யோசிச்சி பார்.... ஒருபக்கம் எப்படியாச்சும் கோபால கன்விக்ட் பண்ணி உள்ள தள்ளிறணும்னு துடிச்சிக்கிட்டுருக்கற பிபி வேணு... இன்னொன்னு நா சொனா மாதிரி சொல்லலைன்னா கொன்னுருவேன்னு இவங்கள மிரட்டிக்கிட்டுருக்கற முருகேசன்....'

'அதிருக்கட்டும் பாஸ்...  அந்த பொண்ண அந்த வீட்ல கொண்டு வந்து குடிவச்சவனே இந்த முருகேசந்தான்னு அந்த ராகவன் சொல்லியிருக்கறத பாத்தா கோபால இவ கிட்ட மாட்டிவிட்டவனும் இவனாத்தான இருக்கணும்.....? நல்ல பசையுள்ள பார்ட்டி.... ரெண்டு பேரும் நல்லா கறந்துக்கிட்டிருப்பாங்க....கடைசியில வீட்டையே எழுதிக் குடுக்கற அளவுக்கு கோபால் இவங்க ரெண்டு பேர் கிட்டயும் மாட்டிக்கிட்டார் போலருக்கு.... அப்படி இருக்கறப்போ இவர் எதுக்காக பாஸ் கோபால..............' என்று மேலே தொடர்ந்து பேசாமல் நிறுத்திவிட்டு தன் முன்னால அமைதியாக்கிபோயிருந்த டேப் ரிக்கார்டரையே பார்த்தவாறு அமர்ந்திருந்த வசந்த் சட்டென்று டேப் ரிக்கார்டரை மீண்டும் ரீவைன்ட் செய்து குறிப்பிட்ட இடம் வந்ததும் மீண்டும் கேட்டான்...... ராகவனின் பிசிறில்லாத குரல்.....'அன்னைக்கி ராத்திரி ஏழு மணிக்கி அந்த பொண்ணோட வீட்லருந்து வந்தவன் இவந்தான் சார்..... கோபால் இல்ல..... எங்களுக்கென்னவோ இவந்தான் அந்த பொண்ண மர்டர் செஞ்சிருப்பான்னு தோனுது.....'

டேப்ரிக்கார்டரை மீண்டும் அணைத்த ராஜசேகர், 'இப்ப சொல்லு.... என்ன பண்ணலாம்? போலீஸ் கிட்ட இத போட்டு காட்டுனா கேஸ் இப்ப இருக்கற ஸ்டேஜ்ல இத போலீஸ் நம்புமா? அதுமட்டுமில்லாம ப்ராசிக்யூஷன் விட்னஸோட ஒங்களுக்கு என்ன பேச்சுன்னு போலீஸ் கேட்டா என்ன பதில் சொல்வே....? இதுவும் ஒருவகையில சாட்சியங்கள கலைக்கற முயற்சிதான்டா..... இந்த ராகவன் சொல்றத மட்டும் வச்சி நாம் ப்ரொசீட் பண்ண முடியாது.....' என்றான். 'இத நாமளே இன்வெஸ்ட்டிகேட் பண்ணணும்..... அதனாலதான் இந்தாளுக்கு வேற யார் கூடவாவது கனெக்‌ஷன் இருக்கா பாக்கலாம்னுதான்  இந்த ஃபோன் டீட்டெய்ல்ஸ் வேணும்னு கேட்டேன்...' என்று தொடர்ந்தான் ராஜசேகர். 'நா ஏற்கனவே லேசா சந்தேகப்பட்டா மாதிரி கோபாலோட பி.ஏ.வுக்கும் இதுல ஏதோ ரோல் இருக்குங்கறது இப்போ கன்ஃபர்ம் ஆயிருச்சி..... முருகேசனுக்கும் அவருக்கும் இடையில ஏதோ டீலிங்க்ஸ் இருக்கு.... இல்லன்னா போன ரெண்டு, மூனு வாரத்துல எதுக்கு இத்தன கால்ஸ்?'

'நம்பவே முடியல பாஸ்... பாத்தா பசு மாதிரி இருக்கார் அந்தாள்... அவருக்கு கோபால் மேல என்ன கோவம்? எதுக்கு முட்டாத்தனமா ஒரு பொம்பள புரோக்கர் கிட்ட போயி மாட்டிக்கிட்டார்?'

நானும் அந்த மாதிரி ஆள்கிட்ட ஏமாந்தவந்தான்டா  என்று சொல்லவா முடியும் என்று நினைத்தான் ராஜசேகர். 'கோபால் மேல வெறுப்புன்னு சொல்ல முடியாது.... அவரையும் முருகேசன் மிரட்டி பணிய வச்சிருக்கலாம் இல்ல?' என்ற ராஜசேகர் சட்டென்று நினைவுக்கு வந்தவனாய்.... 'வசந்த் அர்ஜன்டா ஒரு காரியம் பண்ணணும். கோபாலோட ஆஃபீஸ்ல லேன்ட் லைன் இருக்குமே.... உங்கிட்ட நம்பர் இருக்கா?' என்றான்.

வசந்த் வியப்புடன் ராஜசேகரை பார்த்தான். 'எதுக்கு பாஸ்?'

'டேய்... இருக்கா இல்லையா?' என்று ராஜசேகர் எரிந்து விழ.... அவனுடைய கோபத்தை எதிர்பாராத வசந்த் மறுபேச்சில்லாமல் தன் செல்ஃபோனை துழாவினான்.... 'என்னெ கூப்டணும்னா ஆஃபீஸ் நம்பர்ல பண்ணுங்க வசந்த்... செல்ஃபோன்ல வேணாம்....' என்று ராமராஜன் அவர்களுடைய முதல் சந்திப்பிலேயே அறிவுறுத்தியது நினைவுக்கு வந்தது அவனுக்கு...... ராமராஜன் பெயர் வந்ததும் இடப்புறம் தெரிந்த ஆப்ஷனை அழுத்தி ஓப்பனை தெரிவு செய்தான். ராமராஜனின் செல்ஃபோனுடன் அவனுடைய பிரத்தியேக லேன்ட் லைன் எண்ணும் தெரிந்தது. அதை தெரிவு செய்து டயல் பட்டனை பிரஸ்சினான்....

'டேய்... செல்ஃபோன்லருந்து கூப்டாதே...' என்று அவனை தடுத்த ராஜசேகர் தன் மேசை மீதிருந்த அலுவலக தொலைபேசியை சுட்டிக்காட்டினான். 'இதுலருந்து பண்ணு.'

வசந்த் மறுபேச்சில்லாமல் செல்ஃபோனில் சென்றிருந்த காலை துண்டித்துவிட்டு அலுவலக தொலைபேசியிலிருந்து அழைத்தான். எதிர்முனையில் ரிங் போய்க்கொண்டே இருந்தது..... 'ரெஸ்பான்ஸ் இல்லையே பாஸ்...'

'கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு... மணி ஆறு கூட ஆவலை... அவர் இல்லேன்னாலும் யாராச்சும் எடுப்பாங்க... எடுத்ததும் ஸ்பீக்கர்ல போட்டுட்டு ரீசீவர மட்டும் எங்கிட்ட குடு..' 

மேலும் ஒரு சில நொடிகளுக்குப் பிறகு எதிர்முனையில் ஒரு பெண் குரல்' ஹல்லோ' என்றதும் ராஜசேகரிடம் கொடுத்துவிட்டு தன் குறிப்பேட்டை எடுத்து தயாராக வைத்துக்கொண்டு காத்திருந்தான்.

'மேடம்.... அங்க மிஸ்டர் ராமராஜன் இருக்காரா?'

'இல்ல சார்.... அவர் இப்ப நம்ம ஆஃபீஸ்ல இல்லையே..... ரிசைன் பண்ணிட்டார்.'

ராஜசேகரும் வசந்தும் ஒரு சேர அதிர்ந்தனர்... 

'என்ன மேடம் சொல்றீங்க....? போன வாரம் கூட அவர் கூட பேசினேனே?' என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டான்  ராஜசேகர்.

'இந்த நம்பர்லயா? நிச்சயம் இருக்காது சார்.... ரெண்டு வாரமா அவர் இங்க வரவே இல்லையே..... ஊருக்கு போறேன்னுட்டு போனவர்தான்.... அவரோட ரிசிக்னேஷன் லெட்டர்தான் ரெண்டு நாளைக்கி முன்னால குரியர்ல வந்துது...'

ராஜசேகர், 'எந்த ஊர்லருந்து வந்திருக்குன்னு சொல்ல முடியுங்களா?' என்றான்.... 'நா அவரோட க்ளோஸ் ஃப்ரண்டு மேடம்....'

'ஊரா... அவருக்கு ஏது சார் ஊரு.....? சென்னையிலருந்துதான்... ஆனா எந்த ஏரியாவுலருந்துன்னு பாக்கலை.... அவரோட க்ளோஸ் ஃப்ரண்டுங்கறீங்க... செல்ஃபோன்ல கூப்டறதான?'

'அது ரெண்டு மூனு நாளா டெட்டாவே இருக்கேம்மா.... நாட் ரீச்சபிள்னு வருதே.....'

'அப்படீங்களா... தெரியலீங்களே?'

'சரி.... அவர் வீடு அட்றஸ் தெரியுங்களா? மைலாப்பூர்லருக்கற பழமுதிர் சோலை கடைக்கி பின்னால இருக்கேன்னு சொன்னதா ஞாபகம்...'

'என்னது மைலாப்பூர்லயா?   இல்லையே சார்.... அவர் ரொம்ப நாளாவே ட்ரிப்ளிக்கேன்ல ஒரு பேச்சிலர் மேன்ஷன்லதான இருக்கார்....'

என்னது பேச்சிலர் மேன்ஷன்லயா? அப்போ அன்னைக்கி மாதவி வீட்டு முன்னால வச்சி நாம பாத்தது? ஒருவேளை மாதவி வீட்டை வேவு பாக்கறதுக்காக....... அந்த ஏரியாவுல சுத்திக்கிட்டுருந்துருப்பாரோ...? அதத்தான் நாங்க ரெண்டு வாரமா வீட்ட விட்டு வெளியில கூட போக முடியாம இருக்கோம்  சார்னு ராகவன் இன்டைரக்டா சொன்னாரோ...... ஆக, ராமராஜன் முருகேசன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற ஆள் இல்லை...... அவனோட கையாளாவோ இல்ல அவனோட முதலாளியாவோ கூட இருக்கலாம்..... முருகேசன கோபால்கிட்ட கூட்டிக்கிட்டு வந்த ஆளா கூட ஏன் இருக்கக் கூடாது?

'ஹல்லோ சார்...' என்ற குரல் எதிர்முனையிலிருந்து வர.... 'தாங்ஸ் மேடம்... நா தேவைப்பட்டா அப்புறமா கூப்டறேன்.' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்....

'என்ன பாஸ்... அவர் மாதவி வீட்டுக்கு எதிர்லருந்து பழமுதிர்சோலை கடைக்கு பின்னால இருந்ததா ஒங்கக் கிட்ட எப்ப சொன்னார்?' என்ற வசந்தை குழப்பத்துடன் பார்த்தான். 'என்னடா சொல்றே?'

வசந்த் சிரித்தான். 'என்ன பாஸ்.. இப்பத்தான ஃபோன்ல அந்த பொண்ணுக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தீங்க?'

'ஓ! அதுவா...? அந்தாள மீட் பண்ணத நா உங்கிட்ட சொல்லவே இல்லையோ.... பேச்சு வாக்குல விட்டுட்டேன் போலருக்கு... நீ முதல் தடவ ஊருக்கு போயிருந்தப்போ அவர பாத்தேன்னு சொன்னேனே...'

வசந்துக்கு நினைவுக்கு வந்தது. 'ஆமா சொன்னீங்க.... மாதவியோட வீடு கூட போலீஸ் சீல் பண்ணி வச்சிருக்காங்கன்னு சொன்னார்னு சொன்னீங்க.... ஆனா அவர எதுக்காக மீட் பண்ணீங்கன்னு சொல்றேன்னு சொல்லிட்டு சொல்லவே இல்ல... நானும் மறந்துட்டேன்... இப்ப சொல்லுங்க... அன்னைக்கி என்ன நடந்தது....?'

ராஜசேகர் அன்று ராமராஜனை மாதவி வீட்டிற்கு முன்பு வைத்து பார்த்ததை சொல்லாமல் அவரை பனகல் பார்க்கில் வைத்து சந்தித்த விவரங்களை மட்டும் சுருக்கமாக சொல்லி முடித்தான்.... அதற்குப் பிறகு அவர் சொல்லியிருந்த ஆட்டோ ஒட்டி மணியிடம் செல்ஃபோனில் பேசியதையும் கூறினான்.... 'அப்பத்தான் கேஷுவலா சென்னையில எங்க இருக்கீங்கன்னு கேட்டேன்.... மைலாப்பூர் பழமுதிர்சோலை கடைக்கு பின்னால ஒரு சந்துல குடியிருக்கேன் சார்னு சொன்னார்.... இப்ப அதையெல்லாம் நினைச்சி பாக்கறப்ப அன்னைக்கி அவர் சொன்ன விஷயங்களும் அவர் குடுத்த ஆட்டோக்காரனோட செல்ஃபோன் நம்பர்..... அன்னைக்கி ராத்திரி எங்கிட்ட கோபால் ஒரு தெய்வம் மாதிரி சார்னு அந்த ஆட்டோக்காரன் சொன்னது எல்லாமே ஒரு செட்டப்புன்னு தோனுதுறா...... எனக்கென்னவோ முருகேசன், ராமராஜன்... மணி.. இந்த மூனு பேருமே இதுல இன்வால்வ்ட்னு நினைக்கேன்.....'

'ஆனா பாஸ் ஒன்னு ஒதைக்குதே.....?'

'என்னது?'தொடரும்..6 comments:

வே.நடனசபாபதி said...

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதை போல், ஒவ்வொரு பதிவிலும் புதிய முடிச்சுகளை கொண்டுவந்து எங்களின் யூகத்தை தவிடுபொடியாக்கிவிடுகிறீர்கள்! இனி யார் அந்த கொலையாளி என யூகிக்கபோவதில்லை. நீங்களே அந்த சஸ்பென்ஸை உடைத்துவிடுங்கள்.

T.N.MURALIDHARAN said...

எனக்குத் தெரிந்து சீனிவாசன் தான் கொலையாளி

Sasi Kala said...

நான் தவறவிட்ட பதிவுகளின் எண்ணிக்கை கூடிப்போனதோ ?
ஆத்தி மறுபடியும் முதலில் இருந்தா ?
பிறகு வருகிறேனுங்க...
(எனக்கு மட்டும் நான் விட்டதில் இருந்து கதை சொல்ல முடியுமா ?) சும்மாங்க கோவிக்காதிங்க.

நானே வந்து படித்துக்கொள்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதை போல், ஒவ்வொரு பதிவிலும் புதிய முடிச்சுகளை கொண்டுவந்து எங்களின் யூகத்தை தவிடுபொடியாக்கிவிடுகிறீர்கள்! இனி யார் அந்த கொலையாளி என யூகிக்கபோவதில்லை. நீங்களே அந்த சஸ்பென்ஸை உடைத்துவிடுங்கள்//

சஸ்பென்ஸ இனிமேலும் மெய்ன்டெய்ன் பண்ண முடியாதுன்னு நினைக்கேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
எனக்குத் தெரிந்து சீனிவாசன் தான் கொலையாளி//

No Comments :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


Sasi Kala said...
நான் தவறவிட்ட பதிவுகளின் எண்ணிக்கை கூடிப்போனதோ ?
ஆத்தி மறுபடியும் முதலில் இருந்தா ?
பிறகு வருகிறேனுங்க...
(எனக்கு மட்டும் நான் விட்டதில் இருந்து கதை சொல்ல முடியுமா ?) சும்மாங்க கோவிக்காதிங்க.

நானே வந்து படித்துக்கொள்கிறேன்.//

நீங்க படிக்காத பதிவுகளோட காப்பி 'முன்கதை' சுட்டியில ஒரே ஃபைல கிடைக்கும். அத படிச்சாலே போதும்.

வருகைக்கும் உங்களுடைய ஆர்வத்துக்கும் நன்றிங்க.