14 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 46


பிபி தன்னுடைய வாதத்தின் முடிவில், 'Your honour, இந்த வழக்கின் முடிவில் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய ஒரு இளம் பெண் எப்படி திட்டமிடபட்டு குரூரமாக கொலை செய்யப்பட்டாள் என்பதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அரசு நிரூபிக்கும். இது இரு நபர்களுக்கு இடையில் கோபத்தின் உச்சியில் ஏற்பட்ட தற்செயலான செயல் என்று எதிரியின் தரப்பில் வாதங்களை எடுத்து வைக்க வாய்ப்புள்ளது என்பதால்தான் இது அவ்வாறு நிகழ்ந்த செயல் அல்ல என்றும் முன்கூட்டியே பல நாட்கள் திட்டமிட்டு செய்யப்பட்ட குரூர கொலை என்பதையும் கணம் கோர்ட்டார் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.' என்று கூறிவிட்டு நீதிமன்ற அறை முழுவதும் தன் அகங்காரமான பார்வையை ஓடவிட்டு பிறகு தன் இருக்கையில் அமர்ந்தார்.

நீதிபதி தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு ராஜசேகரைப் பார்த்தார். 'We have another fifteen minutes...would you like to start now??' என்றார்.

ராஜசேகர் நிதானமாக எழுந்து, 'I would like to forego my opening statement your honour.' என்று அறிவிக்க நீதிமன்ற அறையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அறையில் அமர்ந்திருந்த மற்ற வழக்கறிஞர்களும் தன்னை வியப்புடன் பார்த்ததை கவனித்தான். சற்று முன்னர்தான் நீதிமன்றத்திற்குள் நுழைந்து அமர்ந்த மகாதேவனும் அதிர்ச்சியுடன் ராஜசேகரை பார்த்தார்... 'என்ன இந்த ஆளு? நல்ல ஆப்பர்சூனிட்டிய விட்டுட்டாரே?' என்றார் தனக்குள். 'இதான இந்தாளுக்கு ஃபர்ஸ்ட் மர்டர் கேஸ்....? சொதப்பாம இருந்தா சரி....'

ராஜசேகருடைய அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த கோபாலும் என்ன சார் என்பதுபோல் அவனை பார்த்தார். 'கவலைப்படாதீங்க... இது நமக்கு முக்கியமில்லை' என்று கிசுகிசுத்தான் ராஜசேகர். 

அவனுடைய பதிலை எதிர்பார்க்காத நீதிபதியும் வியப்புடன் அவனையே ஒரு சில நொடிகள் பார்த்துவிட்டு பிறகு பிபியை பார்த்தார்.... 'You can call your first witness..'

வேணு எழுந்து நின்று சற்று தள்ளி அமர்ந்திருந்த தன்ராஜை பார்த்தார். அதை புரிந்துக்கொண்ட தன்ராஜ் எழுந்து நின்றார்.

'இந்த வழக்கை புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரி எஸ்.ஐ. தன்ராஜை விசாரிக்க விரும்புகிறேன்.' என்றார் கெத்தாக...

அவருடைய தோரணை ஜட்ஜையும் கூட கவர்ந்திருக்க வேண்டும்....'ப்ரொசீட்' என்றார் லேசான புன்னகையுடன்..

நீதிமன்ற ஊழியர் அழைப்புக்கு காத்திராமல் சாட்சி கூண்டில் ஏறிய தன்ராஜ் வழக்கப்படியான உறுதிமொழிகளுக்குப் பிறகு தன்னை நெருங்கிய பி.பியை பார்த்தார்.... 'நீங்க தான் கேக்க வேண்டியத கேட்டு வாங்கிக்கணும்.... நானா சொல்வேன்னு எதிர்பார்த்தா ஒங்களுக்கு ஏமாற்றம்தான்...' என்று மனதுக்குள் கறுவினார். அவர் தன்னை சில வாரங்களுக்கு முன்பு நடத்திய விதத்தையும் தன்னைப் பற்றி எஸ்.பி.யிடம் மோசமாக முறையிட்டதையும் அவர் இன்னும் மறக்கவில்லை.

ஆரம்ப அறிமுகத்திற்குப் பிறகு தன்ராஜ் அதுவரை நடத்தியிருந்த வழக்குகள் அனைத்திலும் கன்விக்‌ஷன் பெற்றிருந்த தகவல்களை வெளிக்கொண்டு வந்த பிபி அதற்குப் பிறகு மாதவியின் கொலை வழக்கில் அவர் அதுவரை எடுத்த நடவடிக்கைகளை விலாவாரியாக விவரிக்க தேவையான கேள்விகளை தொடுக்க தன்ராஜின் பதிலுரைகளோடு அன்று அந்த வழக்கிற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்தது.

அவர் சாட்சிக் கூண்டிலிருந்து இறங்கி தன் இருக்கையை அடைந்ததும் நீதிபதி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். 'case is adjourned.....' என்று கூறிவிட்டு தன் இருக்கைக்கு கீழே அமர்ந்திருந்த நீதிமன்ற அலுவலரைப் பார்த்தார்... 'அடுத்த வாரம் ஏதாவது ஒரு டேட்டுல போட்ருங்க....' என்று கூறிவிட்டு 'அடுத்த கேஸ எது?' என்றார். 

'இந்த அளவு நேரம் ஒதுக்குனதே பெரிய விஷயம் சார்' என்றான் ராஜசேகர் தன் அருகில் அமர்ந்திருந்த கோபாலின் 'என்ன சார் அவ்வளவுதானா?' என்ற கேள்விக்கு. அவர் மேலும் பேசுவதற்கு முயல, 'வாங்க வெளியில போயி பேசலாம்.' என்று அழைத்துக்கொண்டு வராந்தாவை அடைந்தான். அவனை மீண்டு சிறைக்கு அழைத்துச் செல்ல தயாராக வந்து அருகில் நின்ற இரு காவலர்களை பார்த்த ராஜசேகர் 'இவங்கள கவனிச்சிக்கடா' என்பதுபோல் வசந்தைப் பார்த்து கண்ணசைக்க அவன் உடனே புன்னகையுடன் தன் பர்சை எடுத்தவாறு அவர்கள் இருவரையும் கண்ணசைவில் தன்னுடன் வரும்படி அழைத்துக்கொண்டு சற்று தள்ளி நின்றான். 

'அடுத்தது இன்னும் ஒருவாரம் கழிச்சின்னா.... நா எப்பத்தான் சார் வெளியில வர்றது?' என்றார் கோபால் காவலர்கள் அகன்றதும்...

ராஜசேகருக்கு அவரைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது... ஆனாலும் இது அவரே இழுத்து வைத்ததுதானே.... தன்னுடைய பேச்சைக் கேட்டு அடுத்த வீட்டு பெண்ணை அழைக்காமல் இருந்திருந்தால் சுதந்திரமாக வெளியில் இருந்திருக்கலாமே.. இவர் சாதாரணமாக பேசியதை அந்த முருகேசனின் மிரட்டலுக்கு பயந்து போலீசில் அந்த பெண் தெரிவித்ததால் வந்த வினைதானே இது?

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க?'

'என்ன சார் பண்றது? ஒவ்வொரு ஜட்ஜும் டெய்லி குறைஞ்சது இருபது கேஸையாவது விசாரிக்கணும்னு ரூல்.... அதான் அடிக்கடி தள்ளி போடறாங்க.'

'சார் நா அத கேக்கலை' என்றார் கோபால் எரிச்சலுடன். 'எனக்கு மறுபடியும் பெய்ல கிடைக்க சான்ஸே இல்லையா?'

சற்று தொலைவில் மகாதேவன் தங்களை நோக்கி வருவதை கவனித்த ராஜசேகர், 'கோச்சிக்காதீங்க... அந்த லேடிதான் அடுத்த விட்னஸ்.... அதுக்கப்புறம் இந்த கேஸே முடிஞ்சிரும்..... என்னெ நம்புங்க.' என்றான் அவசரமாக...

'என்னவோ சார்.....' என்று அலுத்துக்கொண்ட கோபால் தன்னை நோக்கி வந்த மகாதேவனை சந்திக்க விரும்பாதவன் போல் சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்த காவலர்களை, 'போலாமா சார்.' என்று அழைத்தான். 

அவர்களும் வசந்தைப் பார்த்து தலையை அசைத்துவிட்டு, 'சரிங்க சார்...' என்றவாறு அவரை அழைத்துக்கொண்டு வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த காவல்துறை வாகனத்தை நோக்கி நகர்ந்தனர். 

'என்னெ பாத்துட்டும் பாக்காத மாதிரி போறான் பாத்தீங்களா சார்?' என்றார் மகாதேவன் ராஜசேகரிடம். 'உள்ள இருந்தும் புத்தி வரலை பாருங்க....'

ராஜசேகர் பதிலளிக்காமல் நின்றிருந்தான். நாம் எதையாவது சொல்லப்போயி இவர் சீனிவாசனிடம் சென்று கூறிவிட்டால்? எதுக்கு வம்பு அவராக பேசட்டும் என்று காத்திருந்தான்.....

'என்ன சார் opening statement வேணாம்னுட்டீங்க?' என்று ஏற்கனவே அவன் எதிர்பார்த்திருந்த கேள்வியை கேட்டார் மகாதேவன். 

'எதுக்கு சார் தேவையில்லாம பேசிக்கிட்டு...? அட்ஜர்ன்மென்ட் ஆவறதுக்குள்ள முதல் ரெண்டு சாட்சிங்கள்ல அட்லீஸ்ட் ஒருத்தரையாவது விசாரிச்சிருவாங்கன்னு பாத்தா பிராசிக்யூஷன் விட்னஸ் லிஸ்ட்ல எட்டாவது இருக்கற இன்வெஸ்ட்டிகேஷன் ஆஃபீசர கூப்டறார்.... என்னான்னு தெரியல....'

'நானும் கவனிச்சேன்.... எதுக்கு இந்தாள முதல்லயே கூப்ட்டுட்டார்னு.... இதுக்கு பின்னால ஏதாச்சும் வேலிட் ரீசன் இருக்கணும் சார்... விசாரிச்சி வைங்க.... எனக்கும் ஒரு டிஃபமேஷன் கேஸ் இருக்கு.... அப்புறமா கூப்டறேன்....' என்றவாறு மகாதேவன் நகர ராஜசேகர் வசந்தை திரும்பிப் பார்த்தான். அவன் சற்று தொலைவில் ஒரு ஜூனியர் வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருந்ததை கவனித்துவிட்டு வரட்டும் என்று காத்திருந்தான். 

'என்னடா... யார் அது?' என்றான் அவன் திரும்பி வந்ததும்...

'பாஸ்... ஒரு ஹாட் நியூஸ்.'

'என்ன?'

'PW 1... அதான் சார் அந்த பார்க்கிங் லாட் பையன்.... அப்ஸ்கான்டிங்காம்... அதான் இன்னைக்கி நேரா தன்ராஜ கூப்ட்டுட்டார்.'

'அப்ஸ்கான்டிங்கா... என்னடா சொல்றே?'

'ஆமா பாஸ்...' என்ற வசந்த் 'வாங்க காருக்கு போலாம்... இங்கருந்து பேச வேணாம்.' என்றவாறு ராஜசேகரின் வாகனத்தை நோக்கி நடந்தான். 

அவனைப் பின் தொடர்ந்த ராஜசேகர் கார் கதவுகளை திறந்து அதில் ஏறி அமர்ந்தான்.  வசந்தும் ஏறி அமர கார் கதவுகளை மூடிவிட்டு இக்னிஷனை ஆன் செய்து ஏசியை ஓட விட்டான். 'சொல்லு...' என்றான் வசந்திடம்.

'அதான் பாஸ்.... அந்த பையன ரெண்டு நாளா காணமாம்... எங்க போயிருக்கான்னு யாருக்கும் தெரியலையாம்....'

'என்ன திடீர்னு?'

'அந்த இன்ஸ்பெக்டர் பெருமாள் அவன ஸ்டேஷனுக்கு கூப்ட்டு கோபால ஏழு மணிக்கும் அந்த லாட்ல பாத்ததா சொல்றான்னு மிரட்டுனாராம்..... போறாததுக்கு நாலு நாள் முன்னால பிபி சாரும் ஆஃபீசுக்கு வரவழைச்சி என்ன சொல்லணும்னு சொல்லிக்குடுத்தாராம்.... பய மிரண்டுட்டான் போலருக்கு.... சொல்லாம கொள்ளாம ஓடிட்டான்...'

'சரி அந்த லேடி?'

'அவங்களுக்கு ஒடம்புக்கு முடியலையாம் பாஸ்... ஹாஸ்ப்பிட்டலைஸ்ட்.... இன்னும் ஒரு வாரத்துக்கு வர முடியாதுன்னு டாக்டர் சர்ட்டிஃபிக்கேட்ட சப்மிட் பண்ணியிருக்காங்களாம்.....'

என்னடா இது சோதனை என்று நினைத்தான் ராஜசேகர்..... அந்த ரெண்டு பேரோட சாட்சியத்தையும் ஒடச்சிட்டா கேஸ க்ளோஸ் பண்ணிறலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தோமே.... உண்மையிலேயே அந்த லேடிக்கி ஒடம்புக்கு முடியலையா இல்ல கோர்ட்டுக்கு வர்றதுக்கு பயமாருக்குமா?

'என்ன பாஸ்... என்ன யோசிக்கிறீங்க?'

'இல்லடா.... அந்த லேடிக்கி உண்மையிலேயே உடம்பு சரியில்லையா,,,, இல்ல...'

'அட நீங்க என்ன பாஸ்....அதான் ஆஸ்ப்பிட்டலைஸ்ட்னு பிபியோட அசிஸ்டென்டே சொன்னாரே?'

'யாரு நீ பேசிக்கிட்டிருந்தியே அந்தாளா? அவர கோர்ட்டுக்குள்ள பாக்கலையே?'

'ஆமா பாஸ்.... அவர்கிட்டருக்கற எத்தனையோ ஜூனியர்ல இவனும் ஒருத்தன்.... எல்லாரையுமா கோர்ட்டுக்குள்ள கூப்பிடுவாரு...? பாவம் இங்கயே தேவுடு காத்துக்கிட்டு நின்னுக்கிட்டிருக்கான்.. அவன் நம்ம தோஸ்த்துதான்... க்ளாஸ் மேட்........'

'அது இருக்கட்டும்.... இதுவரைக்கும் கேஸ டீல் பண்ணிக்கிட்டிருந்த மாதவன காணம்? கேட்டியா?'

'அவர டீல்ல விட்டுட்டாராம்.....'

'என்னடா சொல்றே?' என்றான் ராஜ்சேகர் எரிச்சலுடன், 'நீயும் உன் பாஷையும்....'

வசந்த் சிரித்தான். 'அவருக்கு எந்த கேஸையும் அசைன் பண்ணாம ஒக்காத்தி வச்சிருக்காராம்....'

ராஜசேகரும் சிரித்தான்... 'ஏன், மஜிஸ்டிரேட் கோர்ட்ல அவர் கேஸ சரியா டீல் பண்ணலையாமா?'

'யாருக்கு தெரியும்? அந்தாளே ஒரு மூடி (Moody) டைப்...'

'யார், வேணுவையா சொல்றே?'

'ஆமா பாஸ்...'

அந்த ஆள் மூடி மட்டுமா? இன்னைக்கி கோர்ட்ல நம்மள பாத்த பார்வையில நாம எரிஞ்சே போயிருப்போமே.... என்னா திமிர், என்னா ஆணவம்.... குறைகுடம்தான் தளும்பும்கறது நிஜம்தான் போல..... 'சரிடா... அத வுடு.... அடுத்த போஸ்ட்டிங் அப்ப பாத்துக்கலாம்... அதுக்கு முன்னால அர்ஜன்டா ஒரு விஷயம் பண்ணணும்...' என்றான் ராஜசேகர். 'ஆக்சுவலா ரெண்டு விஷயம்.'

வசந்த் சிரித்தான். 'ரெண்டுமே அர்ஜன்டா பாஸ்....'

'டேய்... பி சீரியஸ்.' என்று முறைத்த ராஜசேகர் கடந்த வாரத்தில் தான் மாதவியின் வீட்டிற்குள் பார்த்தவற்றை விவரித்தான். 'ஃபோட்டோஸும் நிறைய எடுத்துருக்கேன்... எனக்கு சைதாப்பேட்டை கோர்ட்ல ஒரு கேஸ் இருக்கு... அத முடிச்சிட்டு சாயந்தரம் ஆஃபீஸ்ல வச்சி காமிக்கேன்.... நீ அதுக்கு முன்னால இந்த ரெண்டு விஷயத்தையும் முடிக்க முடியுமான்னு பாரு.... எவ்வளவு செலவானாலும் பரவால்லை... முடியலன்னு மட்டும் வந்து நிக்காத.'

'யெஸ் பாஸ்... சொல்லுங்க... நோட் பண்ணிக்கறேன்...'

'முதல்ல அந்த வீட்ட அந்த மாதிரி கலைச்சிப் போட்டது போலீஸ்தானான்னு தெரியணும்.....'

'சரி... ரெண்டாவது?'

ராஜசேகர் தான் ஏற்கனவே முருகேசனின் செல்ஃபோனை எழுதி வைத்திருந்த பேப்பரை அவனிடம் நீட்டினான். 'இந்த ஃபோனோட கால் டீட்டெய்ல்ஸ்.... ரெண்டு இல்லன்னா மூனு மாசத்து லிஸ்ட் போறும்....'

'யார் ஃபோன் பாஸ் இது?'

'லிஸ்ட் கிடைச்சாத்தான் தெரியும்..'

'அதில்ல பாஸ்... இதெப்படி உங்கக் கிட்ட....'

'டேய்.... கேள்வி மேல கேள்வி கேக்காத.... எப்படியோ கிடைச்சிது... நீ ஒருவாரம் ஊர்ல இல்லாதப்போ நடந்த விஷயங்கள் நிறைய இருக்கு..... சாயந்தரம் சொல்றேன்..... அதுக்குள்ள இது கிடைக்கிதான்னு பாரு.... கெளம்பு....'

'யெஸ்... பாஸ்...' என்றவாறு வசந்த் கார் கதவுகளை திறந்துக்கொண்டு இறங்க, 'அம்மா இப்ப பரவால்லையா?' என்றான் ராஜசேகர். 

'ஆமா பாஸ்.... இன்னும் ஒரு வாரத்துல கட்ட பிரிச்சிறலாம்னுட்டாங்க.... ஆனா அம்மாவுக்குத்தான் இங்க இருக்க புடிக்கல... இதென்னடா ஜெயில் மாதிரி இருக்குன்னுட்டு புலம்பிக்கிட்டே இருக்காங்க...'

ராஜசேகர் சிரித்தான்....' பின்ன? வீட்ட சுத்தி தோட்டம்... அத சுத்தி வயக்காடுன்னு சுத்திக்கிட்டிருந்தவங்கள கூட்டிக்கிட்டு வந்து தொள்ளாயிரம் சதுர அடி ஃப்ளாட்டுக்குள்ள அடச்சி வச்சா எப்படிறா?'

'என்ன பண்றது பாஸ்... எப்படியிருந்தாலும் ராஜி கல்யாணம் ஆனா எங்கூடத்தான் இருந்தாவணும்.....? பழகிக்குங்கம்மான்னு சொல்லிட்டேன்.....'

'அதுவும் சரிதான்....' என்ற ராஜசேகர் வாகனத்தை நகர்த்தியவாறே வசந்தைப் பார்த்து கையசைத்தான்.... 'ஈவ்னிங் பாக்கலாம்...'

ராஜசேகரின் வாகனம் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் வரையில் காத்திருந்த வசந்த் கையில் இருந்த செல்ஃபோன் எண்களை வாசித்தவாறே தன் வாகனத்தை நோக்கி நகர்ந்தான்.

தொடரும்...

6 comments:

வே.நடனசபாபதி said...

தொடரின் சுவாரஸ்யம் வழக்கு விசாரணைக்கு வந்த பின் இன்னும் கூடிவிட்டது. காத்திருக்கிறேன் வசந்த் என்ன தகவல் கொண்டுவந்தாரென அறிய!

Packirisamy N said...

ராஜசேகர் எப்படி கேஸை எடுத்துச் செல்வார் என்றறிய காத்திருக்கிறேன்.

T.N.MURALIDHARAN said...

வழக்கு விசாரணை விறுவிறுப்பு. கோபாலுக்கு ஜாமீன் கிடைக்காது போல் இருக்கிறதே!

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
தொடரின் சுவாரஸ்யம் வழக்கு விசாரணைக்கு வந்த பின் இன்னும் கூடிவிட்டது. காத்திருக்கிறேன் வசந்த் என்ன தகவல் கொண்டுவந்தாரென அறிய!//

வழக்கு விசாரணை விரைவில் துவங்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
கோபாலுக்கு ஜாமீன் கிடைக்காது போல் இருக்கிறதே!//

ஆமாம். அரசு தரப்பு சாட்சிகளில் மாதவி வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணின் சாட்சியம் முடியும்வரையிலும் கிடைக்க வாய்ப்பில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
ராஜசேகர் எப்படி கேஸை எடுத்துச் செல்வார் என்றறிய காத்திருக்கிறேன்.//

நானும்தான் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.