13 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 45


அடுத்த பத்து நிமிடங்களில் அவர் கூறியதைக் கேட்டு மலைத்துப் போன ராஜசேகர் அவர் பேசி முடிக்கும்வரையிலும் பேசாமல் அமர்ந்திருந்தான். தான் கேள்வி கேட்டு அவர் பதிலளிப்பதுபோல் பதிவு செய்தால் போலீசார் அதை நம்பமாட்டார்கள் என்று முடிவு செய்திருந்ததால்தான் அவராக வாக்குமூலம் அளிப்பதுபோல் கூறட்டும் என்று அமைதியாக அமர்ந்திருந்தான்...

ராகவன் எவ்வித பிசிறுமில்லாமல் பேசி முடித்துவிட்டு ராஜசேகரைப் பார்த்தார். ராஜசேகர் எழுந்து ஒலிநாடாவை பின்னோக்கி ஓடவிட்டு அவர் பேசியது பதிவாகியுள்ளதா என்று சோதித்துவிட்டு அதை அணைத்து தன் கைப்பெட்டிக்குள் வைத்து மூடினான். 

பிறகு முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் அவரைப் பார்த்தான். இவ்வளவு படித்து இத்தனை உயர் பதவியில் இருந்தவருக்கா இந்த சோதனை என்று அவரை நினைத்து அனுதாபப் பட்டான்.... தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல் சமூக விரோதிகள்தான் சமுதாயத்தில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் மூல காரணம்...

'இப்பவாவது சொல்லணும்னு தோனிச்சே... அதுவரைக்கும் தாங்ஸ்..' என்று லேசாக முறுவலித்த ராஜசேகர் மீண்டும் சீரியசானான். 'இப்ப நா சொல்லப்போறத கவனமா கேளுங்க.... இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டாத்தான் என்னால ஒங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்.... அத்தோட நீங்களும் முருகேசனோட கோவத்துக்கும் ஆளாவாம தப்பிக்க முடியும்.... சரீங்களா?' 

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை தெரிந்துக்கொள்ள முடியாமல் அவர் குழம்புவதை கவனித்த ராஜசேகர், 'பயப்படாதீங்க... எனக்கு கோபாலையும் இந்த கேஸ்லருந்து விடுவிக்கணும்.... ஒங்களுக்கும் அதனால எந்த ஆபத்தும் வறாம பாத்துக்கணும்.....அதனாலதான் சொல்றேன்... என்ன சொல்றீங்க?'

'சரி சார்....'

'நீங்க இப்ப சொன்ன விஷயத்த இந்த நேரத்துல போலீஸ் கிட்ட சொன்னா கோபால இந்த கேஸ்லருந்து சேவ் (save) பண்றதுக்கு நா ஒங்களுக்கு பணம் குடுத்து சொல்ல வச்சதா போலீஸ் ஜோடிச்சிருவாங்க.... அதனால உங்க வய்ஃப் சாட்சியம் சொல்ல வர்ற வரைக்கும் இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டுந்தான் இருக்கப் போவுது...'

'புரியலையே சார்....' என்று இடைமறித்தார் ராகவன்.

அவருடைய சந்தேகத்தை விளக்கும் விதமாக தன் மனதில் எண்ணியிருந்ததை தெளிவாக சொல்லி புரியவைத்தான் ராஜசேகர். 'இதுதான் உங்களுக்கும் நல்லது.' என்றான் இறுதியில்.

அவன் பேசி முடிக்கும்வரையிலும் இருப்புக் கொள்ளாமல் தவிப்பதுபோல் காணப்பட்ட ராகவன் இது நடக்கற காரியமா என்பதுபோல் பார்ப்பதை ராஜசேகர் கவனித்தான்.... 'இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.... ஆனா இத விட்டா வேற வழி எனக்கு தெரியல.....'

ஒருசில நிமிட மவுனத்திற்குப் பிறகு ராகவன் எழுந்து நின்றார். 'சரி சார்.... இதத் தவிர வேற வழியில்லேன்னு நீங்க சொன்னதுக்கப்புறம் நா மறுத்துப் பேசறதுல அர்த்தமில்லை..... நாங்க சொன்ன பொய்க்கு கோபால் இன்னமும் ஜெயில்ல இருக்கார்..... இன்னும் ரெண்டு வாரத்துக்கு நாங்களும் இதே மாதிரியான கஷ்டத்த அனுபவிச்சிட்டு போறோம்.... உங்கள முழுசா நம்பி நா போறேன் சார்.....'

ராஜசேகரும் எழுந்து அவருடைய கையைப் பற்றி குலுக்கினான்...'கவலைப்படாதீங்க.... எல்லாம் நல்லபடியா முடியும்....'

ராகவன் வாசலை நோக்கி நடக்க சட்டென்று நினைத்துக்கொண்டவனாய் அவரை அழைத்தான். 'சார் ஒரு நிமிஷம்.'

அவர் திரும்பி பார்த்தார். 'சொல்லுங்க சார்.'

'இதுக்கிடையில முருகேசன் ஒங்கள மறுபடியும் கூப்ட்டு மிரட்டுனா நாம மீட் பண்ண விஷயம் தப்பித்தவறி கூட வெளியில வந்துறக் கூடாது...... நீ சொன்னா மாதிரியே தான் சொல்லப் போறோம்னு சொல்லி வைங்க...'

'சரி சார்....' என்று சுருக்கமாக கூறிவிட்டு அவர் வெளியேற.... ராஜசேகர் கதவை சாத்தி தாளிட்டுவிட்டு வந்து டேப் ரிக்கார்டரை ஆன் செய்து அவர் கூறியதை மீண்டும் ஒருமுறை கேட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து தன் அறையைக் காலி செய்துவிட்டு கிளம்பினான்.

இரண்டு நாட்கள் கழித்து சீனிவாசன் தன் தங்கை வீட்டிலிருந்து வந்ததும் மாதவியின் வீட்டுக்குள்ளிருந்து கண்டெடுத்த drawer சாவியை  சீனிவாசனிடம் ஒப்படைத்து தான் பார்த்ததை விவரித்தான். 'சார் அந்த ஜ்வெல்சையும் கேஷையும் எடுத்து ஏதாச்சும் பேங்க் லாக்கர்ல வச்சிட்டா நல்லதுன்னு நினைக்கேன். ஏன்னா இதுக்காகவே யாராச்சும் அந்த வீட்டுக்குள்ள நுழையறதுக்கு சான்ஸ் இருக்கு...  அத்தோட இந்த கேஸ் முடியறவரைக்கும் கதவுக்கு வெளியில பேட்லாக் பூட்டையும் பூட்டியே வைங்க.' என்றும் அறிவுறுத்தினான்.

'ஆமா சார்.... நானே அப்படித்தான் டிசைட் பண்ணியிருக்கேன்... ரெண்டு பூட்டையும் போட்டுத்தான் வச்சிருக்கேன்.' என்று பதிலளித்த சீனிவாசன் அடுத்த நாளே தன் மைத்துனருடன் சென்று அங்கிருந்த பணத்தையும் நகைகளையும் எடுத்து தன் பெயரில் இருந்த வங்கி லாக்கரில் வைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். 

அவரிடம் ராகவன் தன்னை வந்து சந்தித்தைப் பற்றி கூறலாமா என்று யோசித்தான். பிறகு இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்தான். ராகவனும் அவருடைய மனைவியும் போலீசிடம் கூறியது பொய் என்று தெரிந்தால் இவர் எப்படி ரியாக்ட் செய்வாரோ என்று அவன் அஞ்சியதும் இதற்கு ஒரு காரணம். பிறகு முருகேசனைப் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டால் என்ன என்றும் தோன்றியது... பிறகு இப்போதைக்கு அதுவும் வேண்டாம் என்று தீர்மானித்தான். 

வசந்த் திரும்பி வந்தவுடன் இதைப் பற்றி முழுமையாக விசாரித்துவிட்டு இவரிடம் தெரிவித்துக்கொள்ளலாம்...

*********

அடுத்த ஒரு வாரத்திற்குள் செஷன்ஸ் கோர்ட் காஸ் லிஸ்ட்டில் மாதவியின் கொலை வழக்கு வந்திருப்பதாக அவனுடைய குமாஸ்தா நாகேந்திரன் வழியாக அறிந்தான். 

ஆனால் ஊருக்குச் சென்ற வசந்த் அப்போதும் திரும்பியிருக்கவில்லை. அவனை செல்ஃபோனில் அழைத்து இன்னும் இரண்டொரு தினங்களில் வழக்கு விசாரணைக்கு வரவிருப்பதை தெரிவித்தான். 'அம்மாவுக்கு எப்படிறா இருக்கு?'

'இப்ப பரவால்லை பாஸ்.... ஆனா தனியா விட்டுட்டு வர்றதுக்கு பயமா இருக்கு....'

'அப்ப சரி....' என்றவன் ராகவன் தன்னை வந்து சந்தித்துவிட்டு சென்றதை பற்றி கூறலாமா வேண்டாமா என்று ஒரு நொடி யோசித்தான். பிறகு வேண்டாம்.... பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துவிட்டு, 'கட்டு பிரிக்கறதுக்கு எத்தன நாள் ஆவும்னு டாக்டர் சொன்னாரா?'

'எப்படியும் ஒரு மாசமாவது ஆவுமாம் பாஸ்.... ஆனா அதுவரைக்கும் நா இங்க இருக்க முடியாதுங்கறதால என் ஃப்ரெண்ட் ஒருத்தன் கிட்ட ஒரு வீடு பாக்க சொல்லியிருக்கேன்..... இந்த மாதிரி சமயத்துல அம்மாவ தங்கச்சி பொறுப்புல விடறது சரியில்லேன்னு படுது பாஸ்..... வீடு கிடைச்சதும் கூட்டிக்கிட்டு வந்துருவேன்.... மேக்சிமம் ஒரு வாரம்.'

'அப்ப சரி..... வர்ற மண்டே அனேகமா சார்ஜஸ்தான் ஃப்ரேம் பண்ணுவாங்கன்னு நினைக்கேன்.... அதுக்கப்புறம் எப்படியும் ஒரு வாரம் டைம் இருக்கும்... அதுக்குள்ள நீ வந்தாக் கூட போறும்.... என்ன சொல்றே?'

'கண்டிப்பா பாஸ்.... வீடு கிடைச்சதும் சொல்றேன்....' என்றவாறு வசந்த் இணைப்பை துண்டித்தான். 

பிறகு ராஜசேகர் சீனிவாசனை அழைத்து வழக்கு விசாரணைக்கு வரும் விவரத்தை தெரிவித்தான். 'அந்த பக்கத்து வீட்டு லேடியோட எக்ஸாமினேஷன் முடிஞ்சிருச்சின்னா.. பெய்ல் கிடைச்சிரும் சார்.... மேக்சிமம் இன்னும் பத்து நாள்.'

'அது போறும் சார்...' அவருடைய குரலில் தெரிந்த மகிழ்ச்சி ராஜசேகரையும் நிம்மதியடையச் செய்தது.

******

வசந்த் கூறியிருந்த ஒரு வார கால அவகாசம் முடியும் முன்னரே அவன் தங்கியிருந்த அறை இருந்த ஏரியாவிலேயே இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்பு ஒன்று கிடைத்துவிட தன்னுடைய தாயையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு குடிமாறினான். 

அவன் வந்து சேர்ந்த அடுத்த இரண்டு தினங்களில் மாதவி கொலை வழக்கு விசாரணை சென்னை எக்மோரிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் துவங்கியது. சிறையிலிருந்து அழைக்கபட்ட கோபால் ராஜசேகருக்கு அருகில் வந்து அமர்ந்ததுமே, 'எப்படி இருக்கீங்க சார்?' என்றான். 'இருக்கேன் சார்...' என்று பதிலளித்த கோபால் 'அப்பா வரலீங்களா?' என்றார்.

'இல்ல சார்... நாந்தான் வேணாம் சார்னுட்டேன்..... மகாதேவன் வரேன்னு சொல்லியிருக்கார்...' என்ற ராஜசேகர் தனக்கு இடப்புறம் அமர்ந்திருந்த வசந்தையும் அறிமுகப்படுத்தினான். 'இந்த கேஸ் முடியற வரைக்கும் உங்களுக்கு எதிரா யார் என்ன சொன்னாலும் தயவுசெய்து முகத்துல கூட ரியாக்ட் பண்ணாம இருங்க சார்....'

கோபாலின் முகம் சட்டென்று கோபத்தில் சிவந்தது. 'எப்படி சார்? செய்யாத ஒரு குத்தத்துக்கு தேவையில்லாம ஏறக்குறைய ஒரு மாசம் ஜெயில்ல இருந்துருக்கேன்... எப்படி கோவப்படாம இருக்க முடியும்?' அவருடைய குரல் அறையிலிருந்த மற்ற வழக்குகளில் ஆஜராக காத்திருந்த வழக்கறிஞர்களின் கவனத்தை ஈர்க்க அதில் பலர் தங்களை திரும்பி பார்ப்பதை கவனித்த ராஜசேகர் கோபாலின் கைகளைப் பற்றி அழுத்தினான்...' மெதுவா பேசுங்க... உங்க ஃபீலீங்ஸ் எனக்கு புரியுது.... ஜட்ஜ் சீட்டுக்கு வர நேரம்... please control yourself.....நீங்க நிதானத்தை இழந்தா அதனால பாதிக்கப்படறது நீங்கதான்... மறந்துராதீங்க...' 

அடுத்த சில நிமிடங்களில் வழக்கை விசாரிக்கவிருந்த நீதிபதி வந்து அமர அறையிலிருந்த அனைவரும் ஒரு நொடி எழுந்து மீண்டும் அமர்ந்தனர். அன்று விசாரிக்கப்படவிருந்த வழக்குகளில் முதல் வழக்கு அவர்களுடைய வழக்காக இருந்ததால் கோர்ட் அலுவலர் தன் இருக்கையிலிருந்து எழுந்து மாதவியின் வழக்கு எண் மற்றும் வாதி, பிரதிவாதிகளுக்கு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்களைப் பற்றி அறிவித்துவிட்டு சம்மந்தப்பட்ட கட்டை நீதிபதியிடம் வழங்க அதை மேலோட்டமாக வாசித்து  முடித்த நீதிபதி கோபால் மீது அரசு சுமத்தியிருந்த  ஐந்து குற்றச்சாட்டுகளையும் வாசித்தார்.. பிறகு நிமிர்ந்து சாட்சி கூண்டில் நின்றிருந்த கோபாலைப் பார்த்தார். 'How do you pray? Guilty or not guilty?'  

ராஜசேகர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தபடி, 'Not guilty' என்றார் கோபால்.

கண்டிப்புக்கும் கறாருக்கும் பெயர் பெற்றிருந்த அமர்வு நீதிமன்ற நீதிபதி கணேசமூர்த்தி, பிபி வேணுவைப் பார்த்து, 'You may present your case' என்றார்.

தன்னுடைய இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்த அரசு வழக்கறிஞர் வேணு  ராஜசேகருக்கு அருகில் அமர்ந்திருந்த கோபாலை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு அரசுதரப்பு வாதத்தை துவக்கினார். 

அவருடைய வாதத்தின் நடுவில் கோபாலுடைய முதல் மனைவி மரணமடைந்த விவகாரத்தைப் பற்றி அவர் குறிப்பிட முயன்றபோதெல்லாம் ராஜசேகர் எழுந்து, 'Objection' என்றான். ஒவ்வொரு முறையும் அவனுடைய அப்ஜெக்‌ஷனை நீதிபதியும் ஆமோதித்து 'Don't waste time Mr. PP' என்றார் நீதிபதி கறாராக. 

ஒவ்வொரு முறையும் ராஜசேகரை எரித்துவிடுவதுபோல் முறைத்த பிபி ' முத நாளே மோதி பாக்கறையா? இரு வச்சிக்கறேன்.....' என்று கறுவினார்.  'சார்ஜ் ஃப்ரேமிங் முடிஞ்சி என்னோட ஓப்பனிங் ஸ்டேட்மென்ட். ஷார்ட்டா முடிஞ்சிரும்.... அது முடிஞ்சதுமே டைம் இருந்தா நாளைக்கே உங்களத்தான் விசாரிக்கப் போறேன்' என்று அவர் முந்தைய தினம் கூறியிருந்ததால்  நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த துணை ஆய்வாளர் தன்ராஜும் நீதிபதி பிபியை எச்சரித்த ஒவ்வொரு முறையும் உமக்கு வேணும்யா..... என்று மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தார். அவரும் ராஜசேகர் மீது வைத்திருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு இந்தாளுக்கு ஏத்த ஆள்தான் போலருக்கு என்று நினைத்தார். 

தொடரும்.

15 comments:

Anonymous said...

வணக்கம்
கதை அருமை தொடருங்கள்... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

T.N.MURALIDHARAN said...

நான்கு பகுதிகளை சேர்த்து படித்தேன். சுவாரசியமாக செல்கிறது கதை. எனக்கு என்னவோ சீனிவாசன்தான் கொலையாளி என்று தோன்றுகிறது

வே.நடனசபாபதி said...

வழக்கறிஞர் ராஜசேகர் தனது வாதத் திறமையால, கோபாலை வழக்கிலிருந்து விடுவித்துவிடுவார் என்றபோதிலும், உண்மையில் மாதவியின் இறப்புக்கு யார் காரணம் என்பதை இன்னும் என்னால் அனுமானிக்க முடியவில்லை. இப்போதுதான் உண்மையில் குழம்ப ஆரம்பித்திருக்கிறேன். காத்திருக்கிறேன் உண்மையை அறிய!

டிபிஆர்.ஜோசப் said...

2008rupan said...
வணக்கம்
கதை அருமை தொடருங்கள்... வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
நான்கு பகுதிகளை சேர்த்து படித்தேன். சுவாரசியமாக செல்கிறது கதை. எனக்கு என்னவோ சீனிவாசன்தான் கொலையாளி என்று தோன்றுகிறது//

சீனிவாசன கொலையாளின்னு நினைக்கறதுக்கு மோட்டிவ் என்னவோ ஸ்ட்ராங்காத்தான் இருக்கு. ஆனா physically,is it possible??

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
நான்கு பகுதிகளை சேர்த்து படித்தேன். சுவாரசியமாக செல்கிறது கதை. எனக்கு என்னவோ சீனிவாசன்தான் கொலையாளி என்று தோன்றுகிறது//

சீனிவாசன கொலையாளின்னு நினைக்கறதுக்கு மோட்டிவ் என்னவோ ஸ்ட்ராங்காத்தான் இருக்கு. ஆனா physically,is it possible??

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
வழக்கறிஞர் ராஜசேகர் தனது வாதத் திறமையால, கோபாலை வழக்கிலிருந்து விடுவித்துவிடுவார் என்றபோதிலும், உண்மையில் மாதவியின் இறப்புக்கு யார் காரணம் என்பதை இன்னும் என்னால் அனுமானிக்க முடியவில்லை. இப்போதுதான் உண்மையில் குழம்ப ஆரம்பித்திருக்கிறேன். காத்திருக்கிறேன் உண்மையை அறிய!//

இந்த குழப்பம் விரைவிலேயே தீர்ந்துவிடும் :))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Anonymous said...

Been a regular reader.. So far you have kept the suspense intact and an interesting read... :)

If Gopal has not threatened the neighbor, why hasnt he objected when he was accused of it??

Or did i miss it??

-Saturn730

டிபிஆர்.ஜோசப் said...-Saturn730 said...

If Gopal has not threatened the neighbor, why hasnt he objected when he was accused of it??

Or did i miss it?? //

You would have read, when Rajasekah met Gopal in the lodge he denied going to Madhavi's house 2nd time on that day. He said that the lady living in the next door had purposefully twisted the time and made a false statement to the Police.

தருமி said...

//ஃப்ரேம் பண்ணுவாங்கன்னு நினைக்கேன்.... அதுக்கப்புறம் எப்படியும் ஒரு வாரம் டைம் இருக்கும்... அதுக்குள்ள நீ வந்தாக் கூட போறும்.//

முதல் வார்த்தை: நினைக்கேன். உங்கள் பிறந்த ஊரின் வழக்கு. இப்படி வருவது இயல்பே!

இரண்டாம் வார்த்தை: போறும். - உங்களுக்குப் பிடித்த மொழி.இப்படி வருவதும் இயல்பே!

ஆனால் அதுவும் இதுவும் சேர்ந்து வருவது உதைக்குது!!!!!!!!!!!!!!!


G.M Balasubramaniam said...

/ராஜசேகர் மீண்டும் சீரியசானான். 'இப்ப நா சொல்லப்போறத கவனமா கேளுங்க.... இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டாத்தான் என்னால ஒங்களுக்கு ஹெல்ப் பண்ணமுடியும்/என்ன சொன்னார்...... யூகிக்க முடியவில்லை. தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

/ நினைக்கேன்/ இந்த வார்த்தை முதலிலிருந்தே என்னை இது பற்றித் தெரிவி என்று கேட்டுக் கொண்டிருந்தது. சரி. நமக்குத் தெரியாத சட்டார வார்த்தை என்று இருந்து விட்டேன். இப்போது தருமி அவர்கள் இரண்டு வார்த்தைகள் முரணாக இருப்பதாகக் கூறுகிறார். Even though this is besides the story, would like you to comment

டிபிஆர்.ஜோசப் said...

தருமி said..

முதல் வார்த்தை: நினைக்கேன். உங்கள் பிறந்த ஊரின் வழக்கு. இப்படி வருவது இயல்பே!

இரண்டாம் வார்த்தை: போறும். - உங்களுக்குப் பிடித்த மொழி.இப்படி வருவதும் இயல்பே!

ஆனால் அதுவும் இதுவும் சேர்ந்து வருவது உதைக்குது!!!!!!!!!!!!!!!//

உதைக்குதா? ஏன்னு தெரியலையே? எங்க ஊர் பக்கம் இந்த மாதிரிதான் பேசுவோம். ராஜசேகர், தன்ராஜ், சந்தானம் இவங்க மூனுபேருக்கும் இந்த பாணியிலதான் எழுதிக்கிட்டு வரேன்.

கேக்கேன், நினைக்கேன், போறும்...இப்படித்தான் பேசுவோம்....'கேன்' 'றும்' க்கு பதிலா 'கிறேன்' 'தும்' னு இருக்கணும்னா சொல்றீங்க?

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
/ராஜசேகர் மீண்டும் சீரியசானான். 'இப்ப நா சொல்லப்போறத கவனமா கேளுங்க.... இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டாத்தான் என்னால ஒங்களுக்கு ஹெல்ப் பண்ணமுடியும்/என்ன சொன்னார்...... யூகிக்க முடியவில்லை. தொடர்கிறேன்.//

அது தெரியறதுக்கு இன்னும் கொஞ்சம் பதிவு போகணும் :)

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
/ நினைக்கேன்/ இந்த வார்த்தை முதலிலிருந்தே என்னை இது பற்றித் தெரிவி என்று கேட்டுக் கொண்டிருந்தது. சரி. நமக்குத் தெரியாத சட்டார வார்த்தை என்று இருந்து விட்டேன். இப்போது தருமி அவர்கள் இரண்டு வார்த்தைகள் முரணாக இருப்பதாகக் கூறுகிறார். Even though this is besides the story, would like you to comment//

தருமி சாருக்கு குடுத்த பதில படிங்க. எங்க முரண்பாடு வருதுன்னு எனக்கு புரியல.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.