12 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 44


இதே சிந்தனையில் ஆழ்ந்துபோயிருந்தவன் சட்டென்று ஏதோ நினைவுக்கு வர மாதவியின் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகத்தை எடுத்து விரித்தான். இதில் யாரையாவது அழைத்து மாதவி அவர்களுக்கு எப்படி பழக்கமானாள் என்று கேட்டால் என்ன என்று நினைத்தான்..... ஆனால் முன்பின் தெரியாத ஒரு நபரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பை எடுத்து அவன் கேட்கும் இத்தகைய  தர்மசங்கடமான கேள்விக்கு பதில் அளிப்பார்களா என்ற எண்ணமும் எழுந்தது. இருந்தாலும் முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று முடிவு செய்து ரான்டமாக (random) ஒரு எண்ணை தெரிவு செய்து அழைத்தான்.

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும், 'ஹலோ இங்க மைலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்லருந்து எஸ்.ஐ. கூப்டறேன்.' என்றான் கெத்தாக. 'நீங்க மிஸ்டர்....' பெயர் சட்டென்று மறந்துபோக மேசை மீது விரிந்து கிடந்த புத்தகத்தை மீண்டும் பார்த்தான். 'பாலசுந்தரம்தான?'

'ஆமாங்க சார்... ஒங்களுக்கு என்ன வேணும்?'

'ஏறக்குறைய ஒரு மாசத்துக்கு முன்னால மைலாப்பூர் கச்சேரி ரோட்ல குடியிருந்த மாதவிங்கற லேடி மர்டரான விஷயம் ஒங்களுக்கு தெரியுமில்ல?'

'மாதவியா, அப்படி யாரையும் எனக்கு தெரியாதுங்களே?'

'என்னது தெரியாதா?' என்று எகத்தாளமாக சிரித்தான் ராஜசேகர். 'போலீஸ்கிட்டவே ஃபில்ம் காட்டறீங்களா?' என்றான். இப்படித்தான போலீசும் அடாவடியாக பேசும் என்று தனக்குள் எண்ணியவாறு அதே பாணியில் தொடர்ந்தான்.... 'நீங்க அந்தம்மா கஸ்டமர்னு எங்களுக்கு தெரியும். அதனால நா இப்ப கேக்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க...'

'சொல்லுங்க சார்...' என்று சுருதியிறங்கிய குரல் எதிர்முனையிலிருந்து வர அப்படி வா வழிக்கி என்று நினைத்தான்.  'ஒங்கள அந்த பொண்ணுக்கிட்ட இன்ட்ரொட்யூஸ் பண்ணது முருகேசங்கற ஆள்தான....?'

சில நிமிடங்களுக்கு எதிர்முனை மவுனமாகிப் போக, 'என்னங்க சத்ததையே காணம்?' என்று அதட்டினான். 'உண்மைய சொன்னா மேக்கொண்டு எந்த விசாரணையும் செய்ய மாட்டோம்... எங்களுக்கு வேண்டியது முருகேசந்தான்... நீங்க இல்ல.'

'ஆமா சார்.... அந்த பயதான் சார்..... ஆனா இப்ப அந்த பொண்ணுக்கூட நமக்கு எந்த பழக்கமும் இல்லீங்க...'

இது போதும் என்று நினைத்த ராஜசேகர், 'சரி அதுபோதும்....' என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு முதல் அழைப்பில் கிடைத்த வெற்றி களிப்பில் மேலும் இரண்டு பேரை அழைத்தான். அதே விடைதான் கிடைத்தது.

ஆக, ஃபோர்ஜரி செஞ்சிக்கிட்டிருந்தவன் இப்போ பொம்பளை தரகர் ஆய்ட்டான் போலருக்கு..... அப்போ கோபாலையும் இவந்தான் புடிச்சி குடுத்துருப்பான்... ஆனா அவனே எதுக்கு இப்போ கோபாலுக்கு எதிரா வேலை செய்யிறான்? புரியலையே.....? வசந்த் வந்ததும் முதல் வேலையா முருகேசன் நம்பர குடுத்து கால் லிஸ்ட் கிடைக்குமான்னு பாக்கணும்.....

வசந்த் பெயர் நினைவுக்கு வந்ததும் அவனை அழைக்கலாமா என்று நினைத்தான். ஆனால் அவன் இன்னும் ஊர் போய் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை..... ரெண்டு நாள் போவட்டும்.... கூப்டலாம்.... 

முருகேசன் வழக்கு விவரங்கள் அடங்கிய கோப்பை மூடிவிட்டு கணினியை அணைத்தான்..... அலுவலக சுவர்க்கடிகாரம் ஆறு முறை அடித்து ஓய அட! இவ்வளவு நேரம் ஆயிருச்சா என்று வியந்தவாறு எழுந்து விளக்குகளை அணைத்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறினான்.

அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்ததும் செல்ஃபோன் சிணுங்க எடுத்து பார்த்தான். சீனிவாசன். 'வீட்டுக்குள்ள போயி பாத்துட்டாரோ?' 

'சொல்லுங்க சார்.'

'சார், நீங்க பேட்லாக் பூட்டையும் போட்டுட்டு போயிருக்கீங்களே?'

தன்னுடைய தவற்றை உணர்ந்த ராஜசேகர், 'சாரி சார்... நா ஆஃபீஸ்லதான் இருக்கேன்....இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன்... வெய்ட் பண்றீங்களா?'

'இல்ல வேணாம் சார்... காலையில பாத்துக்கலாம்... நாளைக்கி நீங்க ஆஃபீஸ் போறப்போ வெளிப்பூட்ட திறந்து வச்சிருங்க.... நா ஒரு பதினோரு மணி போல வந்து பாத்துக்கறேன்.'

'சரி சார்.. அப்படியே செஞ்சிடறேன்..... தப்பா நினைச்சிக்காதீங்க.'

சீனிவாசன் சிரிப்பது கேட்டது...'இதுக்கு எதுக்கு சார் சாரின்னுக்கிட்டு..... என் தங்கையோட வீடும் இங்கருந்து பக்கத்துலதான்.....'

'சரி சார்.' என்று ராஜசேகர் இணைப்பை துண்டிக்க முயல, 'சார் ஒரு நிமிஷம்.' என்று சீனிவாசன் சொல்வது கேட்டது.

'சொல்லுங்க சார்.'

'வீடு எப்படி இருக்கு சார்? க்ளீன் பண்ண யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வரணுமா?'

அப்போதுதான் இவரிடம் அதைப்பற்றி தெரிவிக்க மறந்துவிட்டிருந்ததை நினைவுகூர்ந்தான். வீடு முழுவதும் இரத்தக் கறையாக இருக்குமே.... அத வேறப் பாத்துட்டு இந்த மனுஷனுக்கு ப்ரஷர் ஏறியிருச்சின்னா?

'ஆமா சார்... முதல்ல யாரையாச்சும் அனுப்பி க்ளீன் பண்ணச் சொல்லிட்டு அப்புறமா நீங்க உள்ள போங்க . போலீஸ் ஃபிங்கர் ப்ரிண்ட் எடுக்கறதுக்காக அடிச்ச பவுடர் வீடு முழுசும் இருக்கு.... ஒங்களால ஸ்மெல் தாங்க முடியாது.... ஒங்க வீட்டு லேடீசையும் உள்ள விடாதீங்க.... உங்க ப்ரதர் இன் லாவ மட்டும் ரெண்டு க்ளீனிங் ஆளுங்களோட முதல்ல அனுப்புங்க.... அதுக்கப்புறம் யார் வேணும்னாலும் உள்ள போலாம்.....'

'தாங்ஸ் சார்.... நீங்க வெளியில பூட்டிக்கிட்டு போனதும் நல்லதுக்குத்தான் போலருக்கு.... எனக்கு டஸ்ட் அலர்ஜியும் இருக்கு.....'

'நினைச்சேன்... அதான் சொன்னேன்.... நா காலையில ஒம்பது மணிக்கெல்லாம் திறந்து வைக்கிறேன்..... அதுக்கப்புறம் எப்ப வேணா ஒங்க ஆளுங்கள அனுப்பலாம்... வச்சிடறேன்.' என்று மேலும் பேச்சை வளர்க்க வாய்ப்பளிக்காமல் இணைப்பை துண்டித்தான்...

*********

அடுத்த நாள் காலை ராஜசேகர் முந்தையை தினம் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அறையை சென்றடைந்தபோது ரிசெப்ஷனில் 'ராகவன்னு ஒருத்தர் ஒங்களுக்காக லாபியில வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கார் சார்.' என்று தெரிவிக்க அவர்கள் சுட்டிக்காட்டிய நபரை அங்கிருந்தவாறே பார்த்தான். ஆனால் அவரை லாபியில் வைத்து விசாரிக்க விரும்பாமல், 'கொஞ்ச நேரம் கழிச்சி அவர மேல வரச்சொல்லுங்க... இப்ப வேணாம்.' என்று கூறிவிட்டு ரூம் பாயுடன் தன் அறைக்கு சென்றான்.

அறைக்குள் நுழைந்ததும் தன் கைப்பெட்டியைத் திறந்து கையோடு கொண்டு வந்திருந்த டேப் ரிக்கார்டரை எடுத்து அறையிலிருந்த மேசை மீது வைத்து பேட்டரியை செக் செய்தான்... இன்னும் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு தேவையான சார்ஜ் இருந்ததை கவனித்தான். பிறகு அதன் செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கத்துடன் இன்னும் சற்று நேரத்தில் அறைக்குள் நுழையவிருப்பவர் யார் அவர் எதற்காக தன்னைக் காண வருகிறார் என்பதை கூறி அதில் பதிவாகிறதா என்று பரிசோதித்தான். பதிவு செய்யப்பட்டிருந்ததை கேட்டுவிட்டு ... இன்டர்காமை எடுத்து, 'நா ....... ரூம்லருந்து பேசறேன்... மிஸ்டர் ராகவன்னு லாபியில ஒருத்தர் இருப்பார்.... அவர என் ரூமுக்கு அனுப்புங்களேன்.' என்று கூறிவிட்டு கதவை திறந்துவைத்துவிட்டு காத்திருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அறுபது வயது மதிக்கத்தக்க ராகவன் அறைக்குள் நுழைந்து தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்டு அமர்ந்ததும், 'ஒங்க மிசஸ் வரலீங்களா?' என்று கேட்டான். ஏனெனில் அவர்தானே காவல்துறைக்கு தகவல் தந்தவர் அவரில்லாமல் இவரிடம் பேசி என்ன பயன் என்று நினைத்தான்... 

'இல்ல சார்.... ஹோட்டல் ரூம்னதும் அவளுக்கு வர்றதுக்கு தயக்கமா இருந்திச்சி.... சரி நானே போயி பாத்துட்டு வரேன்னுட்டு அவள கொண்டு போயி என் சிஸ்டர் வீட்ல விட்டுட்டு வரேன்.' என்ற ராகவனை ஒரு நிமிடம் பார்த்தான். 

ராகவன் பார்பதற்கு ஒரு அதிகாரிபோல் இருந்தார். ஆனால் முகத்தில் ஒரு அச்சம் தெரிந்தது. முருகேசனைக் கண்டு இவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்? அவனுக்கு பயந்து எதற்காக கோபால் மீது புகார் தெரிவிக்க வேண்டும்?

'ஏன்... அவங்க வீட்ல தனியா இருக்க மாட்டேன்னுட்டாங்களா?'

'ஆமா சார்... இந்த ரெண்டு மூனு வாரமாத்தான் இந்த பயம்... இதுக்கு முன்னால இப்படியில்ல.... அந்த பக்கத்து வீட்டு பொண்ணு மர்டர் ஆனதுலருந்து எங்க லைஃபும் சேர்ந்து தலைகீழா மாறிப்போயிருச்சி சார்... நாங்க பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லீங்க...... ஆனா வெளியில சொன்னா அந்த பொறுக்கி ராஸ்கல் என்ன செஞ்சிருவானோங்கற பயத்துல சொல்லவும் முடியாம சொல்லாம இருக்கவும் முடியாம.....  ரெண்டு நா முன்னால  இன்ஸ்பெக்டர் வந்து மிரட்டிட்டுப் போனதுக்கப்புறந்தான் இனியும் சைலன்டா இருந்தா சரிவராதுன்னு சீனிவாசன கூப்ட்டேன்.... அவர்தான் ஒங்க நம்பர குடுத்து நீங்க அவராண்ட பேசிக்கிறுங்கன்னு சொல்லிட்டார்... அதனாலதான் சார் நேத்து ஒங்கள கூப்ட்டேன்....'

அவர் சொல்வதை எந்த அளவுக்கு நம்பலாம் என்பதுபோல் அவரையே பார்த்தவாறு ஒரு சில விநாடிகள் அமர்ந்திருந்தான். 

'நா இப்ப சொல்லப் போறது நம்பறா மாதிரி இல்லேன்னா எழுத்துல வேணும்னாலும் குடுக்கறேன் சார்.....'

'இத இன்ஸ்பெக்டர் பெருமாள் வீட்டுக்கு வந்தப்பவே சொல்லியிருக்கலாமே?'

'சொல்றதுக்கு ட்ரை பண்ணோம் சார்... ஆனா இந்த மாதிரி டூப்படிக்கற வேலைய விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா நா இப்ப சொன்னத கோர்ட்ல சொல்லிட்டு போனா ஒங்களுக்கு நல்லதுன்னுட்டு வார்ன் பண்ணிட்டு போய்ட்டார் சார்..... போலீச இனியும் நம்பி பிரயோசனம் இல்லேன்னுட்டுத்தான் ஒங்கக் கிட்ட வந்துருக்கேன்... நீங்களும் கைவிட்டா அப்புறம் பகவாந்தான் எங்கள காப்பாத்தணும்.....' என்றார் ராகவன். 'நா ஏற்கனவே சொன்னா மாதிரி ரைட்டிங்ல வேணும்னாலும் தரேன் சார்... என்னெ நம்புங்க...'

'சரி... ஒங்கள நா நம்பறேன்.... ஆனா உங்க வய்ஃப்தான கோபால பாத்ததா போலீஸ்ல சொன்னது? இப்ப நீங்க அத இல்லேன்னு சொன்னாலும் கோர்ட்ல எப்படி செல்லுபடியாகும்...?'

'இல்ல சார்....  அன்னைக்கி நாங்க ரெண்டு பேரும் சேந்துதான் பாத்தோம்..... ஆனா எங்களுக்கு தெரியாதுங்கன்னு சொல்ல முடியாத அளவுக்கு எங்கள அந்த ராஸ்கல் மிரட்டி வச்சிருந்தான் சார்.... லேடீஸ்னா போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் கூப்ட்டு தொந்தரவு பண்ண மாட்டாங்கன்னு படிச்சிருந்ததால என் வய்ஃபே போலீஸ்கிட்ட பேசிக்கட்டும்னு பேசாம இருந்துட்டேன்..... இப்ப இன்ஸ்பெக்டர் வந்து மிரட்டிட்டு போனதுக்கப்புறம்தான் ஏன்டா அவள இதுல மாட்டி விட்டோம்னு இருக்கு.....'

'நீங்க என்னத்த, யார பாத்தீங்க? எதுக்கு கோபால் மேல அபாண்டமா ஒரு புகார குடுத்து பெய்ல கேன்ஸல் பண்ண வச்சீங்கன்னு முழுசா சொல்றதா இருந்தா கேக்கறேன்.... உங்களுக்கு சேஃபா இருக்கற விஷயத்த மட்டும் சொல்றதா இருந்தா வேணாம்..... I don't want to waste my time.....' என்றான் ராஜசேகர் கண்டிப்புடன். 'என்ன சொல்றீங்க?'

'இல்ல சார்....' என்று அவசரமாக மறுத்தார் ராகவன். அவருடைய முகமெல்லாம் வியர்த்துக்கொண்டு வருவதை கவனித்த ராஜசேகர் இனிமேலும் அவரை சோதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து எழுந்து ஃபிரிட்ஜில் இருந்த குளிர்பானங்களில் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான். 'நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கா மாதிரி தெரியுது.... இத முதல் குடிங்க... அப்புறம் பேசலாம்....'

'தாங்ஸ் சார்.....' என்றவாறு ராகவன் அதை பெற்றுக்கொள்ள ராஜசேகர் எழுந்து சற்று முன்பு மேசை மீது எடுத்து வைத்திருந்த டேப் ரிக்கார்டரை எடுத்து டீப்பாயில் வைத்தான். 

'இது ஒரு மினி டேப் ரிக்கார்டர்.... நீங்க ரைட்டிங்ல குடுக்கறேன்னு சொன்னீங்க.... அதுக்கு பதிலா இப்ப நீங்க எங்கிட்ட சொல்லப் போறத ரிக்கார்ட் பண்ணப்போறேன்... உங்களுக்கு இதுல ஆட்சேபனை ஏதும் இருக்கா?'

'இல்ல சார்..... I don't have any objection....'

'அப்ப சரி... நா இத ஆன் பண்ணதும் நீங்க யாரு, எதுக்காக இங்க வந்திருக்கீங்கறத சுருக்கமா சொல்லிட்டு எங்கிட்ட பேசறா மாதிரியே நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க..... எழுதி வச்சி படிக்கறா மாதிரி இல்லாம இருந்தா நல்லது...' என்ற ராஜசேகர் அறைக்கதவு மூடியிருக்கறதா என்று ஒருமுறை சோதித்துவிட்டு திரும்பி வந்து டேப் ரிக்கார்டரை ஆன் செய்துவிட்டு அவரிடம் பேசுங்க என்று சைகை காட்டினான்.

தொடரும்...

7 comments:

Anonymous said...

வணக்கம்
ரிக்கார்டரை ஆன் செய்துவிட்டு அவரிடம் பேசுங்க என்று சைகை காட்டினான்.

அதற்கு பின்பு என்னதான் நடக்கத்தான் போகுது.... தொடருங்கள் கதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...

இது கூட ராஜசேகருக்கும் மாதவிக்கும் உள்ள தொடர்பை அறிந்த முருகேசனின் வேலையோ. காத்திருக்கிறேன் ராகவனின் வாக்குமூலத்தை அறிய!

டிபிஆர்.ஜோசப் said...


2008rupan said...

அதற்கு பின்பு என்னதான் நடக்கத்தான் போகுது....//

அது இன்னும் கொஞ்ச நாளைக்கு சஸ்பென்ஸாத்தான் இருக்கும்.

வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றி ரூபன்.

டிபிஆர்.ஜோசப் said...


2008rupan said...

அதற்கு பின்பு என்னதான் நடக்கத்தான் போகுது....//

அது இன்னும் கொஞ்ச நாளைக்கு சஸ்பென்ஸாத்தான் இருக்கும்.

வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றி ரூபன்.

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
இது கூட ராஜசேகருக்கும் மாதவிக்கும் உள்ள தொடர்பை அறிந்த முருகேசனின் வேலையோ. காத்திருக்கிறேன் ராகவனின் வாக்குமூலத்தை அறிய!//

வாக்குமூல விவரம் அறிய இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருக்கணுமே!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

G.M Balasubramaniam said...

இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருக்கவில்லை. இப்போது அடுத்த பதிவைத் தொடர்கிறேன், அதில் பின்னூட்டம்.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் இருக்கவில்லை. இப்போது அடுத்த பதிவைத் தொடர்கிறேன், அதில் பின்னூட்டம்.//

பரவாயில்லை சார். அதான் வந்ததுமே படிசிட்டு ஒவ்வொன்னுக்கும் தனித்தனியா கருத்துரை போட்டுட்டீங்களே!

நன்றி.