11 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 43


இரண்டாம் இழுவை முழுவதும் மாதவியின் நகைகளும்..... ஐந்தாறு கரன்சி நோட்டுக் கற்றைகளும் இருப்பதை கவனித்த ராஜசேகர் அதிர்ச்சியில் உறைந்துபோனான். மேலோட்டமாக பார்த்ததில் எப்படியும் இருநூறு, முன்னூறு பவுனுக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. கரன்சி நோட்டுகளில் பெரும்பாலானவை ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகளாகவே இருந்தன. சில லட்சங்களாவது இருக்கும் என்று கணக்கிட்டான். மாதவியுடன் பழகிய கடந்த இரண்டு ஆண்டுகளில் அவனும் மாதா மாதம் அவளுக்கு பணமாக கொடுத்தது நினைவுக்கு வந்தது. தன்னைப்போல் இன்னும் எத்தனை வாடிக்கையாளர்களோ.....? அல்லது கோபாலின் கணக்கில் வராத பணமாக இருக்குமோ....? இந்த நகைகள் மற்றும் பணத்தையும் கூட கொலையாளி குறிவைத்து தேடியிருக்கக் கூடும் என்று நினைத்தான். இதை தன்னோடு எடுத்துச் செல்வது உசிதமாகுமா என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்தான். பிறகு வேண்டாம் என்று தீர்மானித்து இழுவையை மூடி பூட்டி அதனுடைய சாவியை மட்டும் தனியே எடுத்து தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்திவிட்டு மற்ற சாவிகள் அடங்கிய கொத்தை மீண்டும் அந்த சுருக்குப் பையிலேயே வைத்து அதை கண்டெடுத்த இடத்திலேயே எறிந்தான். இனி அதை எடுப்பவர்களுக்கு எந்த பயனும் இருக்கப் போவதில்லை.

அதற்குப் பிறகு சமையலறை, குளியலறை என வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தான். சமையலறையும் மற்ற அறைகளைப் போலவே கலைத்துப் போடப்பட்டிருந்தது. இது நிச்சயம் போலீசின் வேலையல்ல என்பது தெரிந்தது. ஆனாலும் அதை உறுதிசெய்துக்கொள்வது சாத்தியமல்ல. கொலைக்களத்தை ஆய்வு செய்த காவலர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய ரகசியம் அது. ஒருவேளை வீட்டை சோதனையிட்ட எஸ்.ஐ. தன்ராஜ் தன்னுடைய நிலைய அதிகாரியான ஆய்வாளர் பெருமாளுக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கலாம். வசந்த் வந்தவுடன் இதைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கலாம். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்களே? அதுவும் இந்த மாதிரி விஷயத்துல நம்ம ஆளு கில்லாடியாச்சே? அவன் வரட்டும் பாத்துக்கலாம்...

எப்படி யோசித்தாலும் இந்த தேடுதல் வேட்டையை தனக்கு கிடைத்த கால் மணி நேர அவகாசத்தில் கோபால் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்ற பதில்தான் ராஜசேகருக்கு கிடைத்தது. ஆகவே கோபால் மீண்டும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்போ அல்லது அவர் இங்கிருந்து சென்ற பிறகோ இந்த வேலை நடந்திருக்க வேண்டும். கோபால் இரண்டாவது முறை இங்கு வருவதற்கு முன்பு நடந்திருக்க வாய்ப்பில்லை... அப்படி நடந்திருந்தால் அவர் நம்மிடம் இதைப் பற்றி கூறாமல் இருக்க வாய்ப்பில்லை... ஆனால் அவர்தான் இங்கு மீண்டும் வரவேயில்லை என்று அடித்து சொல்லிவிட்டாரே என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆகவே தன்னையும் கோபாலயும் தவிர்த்து இன்னும் ஒரு ஆள் கொலை நடந்த அன்று இந்த வீட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் ராஜசேகர். அது யாராக இருக்கும்?

ஒரு சில நிமிடங்கள் மனதுக்குள் அதையே அசைபோட்டும் ஒன்றும் பிடிபடாமல் போகவே....  சரி போறும்... வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பலாம் என்று முடிவு செய்து படுக்கையறையில் வைத்திருந்த தன்னுடைய கைப்பெட்டியை மூடி எடுத்துக்கொண்டு வாசலை நெருங்கி மீண்டும் ஒருமுறை திரும்பி ஹாலைப் பார்த்தான். இப்படி வீடு கிடக்கும் சூழலில் சீனிவாசன் இங்கு வந்தால் இதை பார்த்துவிட்டு எப்படி ரியாக்ட் செய்வார் என்று ஒரு நொடி சிந்தித்தான். இந்த முழு வீட்டையும் சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்த எப்படியும் இரண்டு மூன்று நாட்களாகும்..... ஆனால் இதை செய்வது யார்? 

நமக்கு எதற்கு இந்த கவலை என்று நினைத்த ராஜசேகர் வீட்டு சாவியையும் மாதவியின் நகைகள் மற்றும் ரொக்கம் இருக்கும் இழுவையின் சாவியையும் சீனிவாசனிடம் ஒப்படைத்துவிட்டு நம் வேலையை பார்க்கலாம் என்ற முடிவுடன் வாசற்கதவை திறக்க முயன்றான். 

அவனுடைய கைப்பேசி அடித்தது. யார் என்று பார்த்தான். அறிமுகமில்லாத எண். எடுக்காமல் இருந்துவிடலாமா என்று ஒரு நொடி தயங்கினான். பிறகு யார் என்றுதான் பார்ப்போமே என்று எடுத்து, 'ஹலோ யாருங்க?' என்றான்.

'அட்வகேட் ராஜசேகர்தான?'

'ஆமாங்க...'

'சார், நா பக்கத்து வீட்டுலருந்து பேசறேன்... என் பேர் ராகவன்....சீனிவாசன்தான் உங்க நம்பர குடுத்தார்...'

ராஜசேகருக்கு சுர்ர்ரென்று கோபம் வந்தது. அவர்களிடம் நாம் இங்கு இருப்பதை சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் சீனிவாசன் இப்படி செய்துவிட்டாரே என்று நினைத்தான். இவர்களிடம் பேசி என்ன பயன்? இணைப்பை துண்டித்துவிடலாமா என்று யோசித்தான். 

'உங்கள மீட் பண்ணணும்னு காலையிலருந்தே நானும் என் வய்ஃபும் யோசிச்சிக்கிட்டிருக்கோம் சார்.... தயவுசெஞ்சி முடியாதுன்னு சொல்லிறாதீங்க..... யார்க்கிட்டயாவது எங்க மனசுல இருக்கறது சொல்லிறணும்னுதான் துடிச்சிக்கிட்டிருக்கோம்.... ரெண்டு நாளா வீட்லருந்து வெளியில போகக் கூட பயமாருக்கு சார்..... இதுக்கிடையில இன்ஸ்பெக்டர் பெருமாள்னு ஒருத்தர் வீட்டுக்கே வந்து மிரட்டிட்டு போறார்..... தெரியாத்தனமா ஒரு பொய்ய சொல்லிட்டு ஒரு மாசமா தூங்கக் கூட முடியாம அவஸ்தைப் படறோம் சார்....'

என்னது பொய்யா? என்று தனக்குள் நினைத்த ராஜசேகர் இந்த உரையாடலை தொடர விரும்பாமல், 'சார்.... நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு புரியல.... நீங்க ஏதாச்சும் சொல்லணும்னு நினைச்சா.... அத போலீஸ் கிட்ட சொல்லுங்க. ஒரு முறை கோபால் உங்க வய்ஃப் கிட்ட பேசினார்ங்கறதுக்காக எங்கள கூப்ட்டு மிரட்டுனார்னு கம்ப்ளெய்ன்ட் பண்ணவங்கதான சார் நீங்க? எதுக்கு இப்ப என்னெ கூப்ட்டு வம்புல மாட்டிவிட பாக்கறீங்க?' என்றான் கோபத்துடன்.

'ஐயையோ சத்தியமா அத நாங்களா செய்யல சார்..... முருகேசன்னு ஒருத்தன் எங்கள மிரட்டி செய்ய வச்சான் சார்!'

என்னது, முருகேசனா? சற்று முன்பு அந்த பெயரை படித்ததை நினைத்துப்பார்த்த ராஜசேகருக்கும் சட்டென்று முருகேசன் யார் என்பதும் நினைவுக்கு வர ஒரு சில விநாடிகள் அதிர்ச்சியால் வாயடைத்துப் போனான்....... அவனாலதான..... அவனாலதான.....

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் நீதிமன்ற வளாகத்தில் தன்னை சந்திக்க வந்த மாதவி இவனிடம்தானே பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்த கதையைச் சொன்னாள்? இவனிடமிருந்து பணத்தை வாங்கி கொடுத்ததிலிருந்து துவங்கியதுதானே இந்த தகாத உறவு? அவன் இவர்களை மிரட்டி கோபாலுக்கு எதிராக புகார் அளிக்க வைத்தானா? எதுவாக இருந்தாலும் இதை தொலைபேசியில் பேசினால் ஆபத்து என்று உணர்ந்தான். ஆனால் அதே சமயம் இவர்களை நம்முடைய அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ சந்திப்பது நமக்கு ஆபத்தாய் முடிய வாய்ப்புள்ளது. ஆகவே இத்தகைய சந்திப்புகளை நடத்துவதற்கென்றே அவன் எப்போதும் பயன்படுத்தும் லாட்ஜ் அறையை பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தான். 

'நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலை சார்..... இருந்தாலும் இந்த பேச்சை ஃபோன்ல கன்டினியூ பண்ண நா விரும்பலை.... நீங்க ஒன்னு பண்ணுங்க.....' என்றவன் ஈசிஆர். சாலையில் தான் வழக்கமாக அறை எடுக்கும் ஹோட்டலின் பெயரையும் விலாசத்தையும் கூறினான் ' நீங்க நாளைக்கி பதினோரு மணி போல அங்க வந்துருங்க..... அங்க வச்சி பேசிக்கலாம்... பை.' என்று எதிர்முனையிலிருந்து பதில் வருவதற்கு முன்பு இணைப்பைத் துண்டித்துவிட்டு கதவைத் திறந்து தன்னை சாலையிலுள்ளவர்கள் யாரும் கவனிக்கிறார்களா என்று இடமும் வலமும் பார்த்தான். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு கதவைப் பூட்டிக்கொண்டு தலையை குணிந்தவாறே சாலையை கடந்து தன்னுடைய வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த இடத்தை அடைந்து மீண்டும் ஒருமுறை தன்னை யாரும் பின் தொடர்ந்து வருகிறார்களா என்று அறிய காரில் ஏறி அமர்ந்து ரியர் வ்யூ கண்ணாடியையே பார்த்தவாறு சில நிமிடங்கள் அமர்ந்திருந்தான். யாரும் வரவில்லை. பிறகு தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த மாதவியின் வீட்டில் இருந்து எடுத்த இழுவையின் சாவியை டேஷ்போர்டிலிருந்த உறைக்குள் வைத்து பத்திரப்படுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

*****

ராஜசேகர் தன் அலுவலக சென்றடைந்ததும் முதல் வேலையாக அடுத்த நாளைய சந்திப்புக்கு தேவைப்படும் அறையை தொலைபேசி மூலம் ரிசர்வ் செய்தான். பிறகு தன் கைப்பெட்டிக்குள் வைத்திருந்த மாதவியின் வங்கி கணக்குப் புத்தகத்தையும் காசோலையையும்  எடுத்து அலமாரியில் பத்திரப்படுத்தினான். இதை என்ன செய்வது என்று பிறகு தீர்மானித்துக்கொள்ளலாம். 

பிறகு அமர்ந்து தன்னுடைய வாடிக்கையாளர்கள் பற்றி தான் கணினியில் உண்டாக்கி வைத்திருந்த தகவல்கள் அடங்கிய மென்பொருள் கோப்பை திறந்தான். அதில் ஏறக்குறைய அவன் வழக்கறிஞர் தொழிலை துவக்கிய நாள் முதல் அதாவது கடந்த ஐந்தாண்டுகளாக அவனை தொடர்பு கொண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களுடைய வழக்கு விவரங்கள் அனைத்தையும் ஆங்கில அகர வரிசையில் சேமித்து வைத்திருந்தான். 

அதை திறந்து சேர்ச் பெட்டியில் (search box) முருகேசன் என்று அடித்தான். அடுத்த நொடியே முருகேசனின் முழு விவரமும் அவனுக்காக ராஜசேகர் ஆஜரான இரண்டு வழக்குகளின் முழு விவரங்களும் அடங்கிய ஆவணம் அவன் கண் முன் விரிந்தது.

மா. முருகேசன்,
S/o. மாதவன்,
வயசு: 45

கடந்த மூன்றாண்டுகளில் இருமுறை ஃபோர்ஜரி மற்றும் கையாடல் வழக்குகளில் சிக்கி தன்னிடம் வந்தவனை அவற்றிலிருந்து மீட்டிருந்தான். 

இந்த இரு வழக்குகளுக்கும் தனக்கு வரவேண்டிய வழக்கறிஞர் கட்டணத்தைக் கூட கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த முருகேசனை அவன் கடைசியாக சந்தித்தது மாதவி வழியாகத்தான். அவனுடைய பித்தலாட்டங்களை ஏற்கனவே ராஜசேகர் அறிந்துவைத்திருந்ததால்தான் 'இவனெ நம்பியா அம்பதாயிரம் குடுத்தீங்க' என்று அவன் மாதவியை முதல் முதலாக சந்தித்தபோது கேட்டான். 

ஆனால் இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது இந்த கடன் கொடுத்ததாக மாதவி தன்னிடம் சொன்னதே அவர்கள் இருவரும் போட்ட நாடகமாக இருக்குமோ என்று நினைத்தான். இனிமேல் இத்தகைய வழக்குகளில் சிக்கி தன்னிடம் வந்தால் உதவி செய்ய மாட்டேன் என்று எச்சரித்து அனுப்பிய தன்னை சிக்கலில் இழுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடந்தான் மாதவியை தன்னிடம் அனுப்பியிருக்க வேண்டும் என்று நினைத்தான். 

மேலும் கையாடல் ஃபோர்ஜரியில் ஈடுபடுவதை விட அழகான ஒரு நடிகையுடன் ஒட்டிக்கொண்டால் இன்னும் நல்ல காசு பார்க்கலாமே என்று நினைத்திருப்பானோ? இருக்கும். 

தொடரும்...

11 comments:

2008rupan said...

வணக்கம்
தொடர் கதை மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஸ்யமான புதிய பாதையில்
கதை பயணிக்கிறது..பாராட்டுக்கள்..!

Packirisamy N said...

I feel very sorry for the Madavi character. There are many real life Madavi’s are out there. Meena kumaari, Savithri, Silukku, Shoba and many more. People abuse these victim’s ignorance. The victim too, normally have no one to trust. Now the story takes off with some more twists and turns. Interesting. Thanks.

G.M Balasubramaniam said...


புதிய செய்திகளும் புது கதாபாத்திரங்களும் அறிமுகமாகி கதையின் போக்கை அனுமானிக்க முடியாமல்செய்கிறது.தொடர்கிறேன்

டிபிஆர்.ஜோசப் said...

2008rupan said...
வணக்கம்
தொடர் கதை மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ரூபன்.

டிபிஆர்.ஜோசப் said...

இராஜராஜேஸ்வரி said...
சுவாரஸ்யமான புதிய பாதையில்
கதை பயணிக்கிறது..பாராட்டுக்கள்..!//

மிக்க நன்றிங்க...

டிபிஆர்.ஜோசப் said...


4:21 PM
Packirisamy N said...
I feel very sorry for the Madavi character. There are many real life Madavi’s are out there. Meena kumaari, Savithri, Silukku, Shoba and many more. People abuse these victim’s ignorance. The victim too, normally have no one to trust. Now the story takes off with some more twists and turns. Interesting. Thanks.//

Yes most of the times these hapless women fall victims mainly due to their ignorance. They allow themselves to be expolited by ruthless men, especially the brokers.

Thanks for your visit and thoughtful comment.

டிபிஆர்.ஜோசப் said...


4:21 PM
Packirisamy N said...
I feel very sorry for the Madavi character. There are many real life Madavi’s are out there. Meena kumaari, Savithri, Silukku, Shoba and many more. People abuse these victim’s ignorance. The victim too, normally have no one to trust. Now the story takes off with some more twists and turns. Interesting. Thanks.//

Yes most of the times these hapless women fall victims mainly due to their ignorance. They allow themselves to be expolited by ruthless men, especially the brokers.

Thanks for your visit and thoughtful comment.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

புதிய செய்திகளும் புது கதாபாத்திரங்களும் அறிமுகமாகி கதையின் போக்கை அனுமானிக்க முடியாமல்செய்கிறது.தொடர்கிறேன்//

அடுத்த இரண்டு மூன்று பதிவுகளில் குழப்பங்கள் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

வே.நடனசபாபதி said...

ராஜசேகர் ராகவனை சந்திக்க ஒத்துக்கொண்டதின் மூலம் புதிய வம்பில் மாட்டிக்கொள்ளப் போகிறாரோ?

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
ராஜசேகர் ராகவனை சந்திக்க ஒத்துக்கொண்டதின் மூலம் புதிய வம்பில் மாட்டிக்கொள்ளப் போகிறாரோ?//

பொறுத்திருந்துதான் பாக்கணும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.