10 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 42

முன்கதை

'சொல்லுங்க சார்.' என்றான் ராஜசேகர் தயக்கத்துடன்.

'ஒன்னுமில்ல சார்... யாரோ ஒங்க வீட்ல பூட்ட திறந்துக்கிட்டு உள்ள போறாங்க சார்னு பக்கத்து வீட்லருந்து ஃபோன் வந்துது.... அதான் உங்கள கூப்ட்டேன்....' என்றார் எதிர்முனையில் சீனிவாசன்.

அட! பக்கத்து வீட்ல இருக்கறவங்க அவ்வளவு உஷாரா இருக்காங்களா என்று வியந்த ராஜசேகர், 'யார் சார்? அந்த லேடியா?'

'ஆமா சார்..... நீங்க போயி கொஞ்சம் பாக்க முடியுமா சார்?'

ராஜசேகர் சிரித்தான். 'சார் don't worry. நாந்தான் திறந்தேன்... ஒங்கக்கிட்ட நேத்தே சொல்லணும்னுதான் ட்ரை பண்ணேன். ஆனா நேத்து அப்பார்ட்மென்ட்டுக்கு வந்தப்போ ஒங்க ஃப்ளாட் லாக்காயிருந்துச்சி.. இன்னைக்கி காலையிலயும் பாத்தேன் லாக்டாத்தான் இருந்துது... சரி அப்புறம் ஃபோன் பண்ணி சொல்லிக்கலாம்னு நினைச்சேன்... மறந்துருச்சி....'

'என்ன விஷயம் சார்? நா தங்கையோட அவ வீட்டுக்கு வந்துருக்கேன்... இன்னும் ரெண்டு மூனு நாளைக்கி இங்கதான்...'

'நேத்து போலீஸ் சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணாங்க சார்.... அப்பத்தான் இந்த வீட்டையும் எங்கக்கிட்ட ஒப்படைக்கணும்னு சொல்லி பெட்டிஷன் போட்டேன்... கோர்ட் ஆர்டர் இன்னைக்கி பகல்தான் கிடைச்சிது. இப்பத்தான் சாவிய போலீஸ் கிட்டருந்து  வாங்கிட்டு வந்து கதவ திறந்தேன்.... போலீஸ்க்கு கிடைக்காத க்ளூ எதுவும் கிடைக்குமான்னு பாக்கலாம்னுட்டு கதவ திறந்து உள்ள நுழைஞ்சி அஞ்சி நிமிஷம் கூட ஆயிருக்காது... அதுக்குள்ள உங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்துருச்சி...'

'நாந்தான் அவங்கக்கிட சொல்லி வச்சிருந்தேன் சார்..... எனக்கும் அந்த வீட்ட வந்து பாக்கணும்னு ஐடியா இருந்திச்சி... அதான் போலீஸ் மறுபடியும் வந்தா எனக்கு ஃபோன் பண்ணும்மான்னு அந்த லேடிக்கிட்ட சொல்லியிருந்தேன்...' 

'இப்ப வறீங்களா சார்?' என்றான் ராஜசேகர் இந்த சமயத்துல நீங்க இங்க வந்தா நா வந்த காரியம் கெட்ருமே என்று மனதுக்குள் நினைத்தவாறு.

'இப்பவா சார்?' என்ற சீனிவாசன் வீட்டுக்குள் திரும்பி தன் தங்கையிடம் பேசுவது கேட்டது. ' கார் வெளியில போயிருந்துச்சே வந்துருச்சா?' என்பதும் அவருடைய தங்கை 'எதுக்குண்ணா' என்று எதிர்கேள்வி கேட்டதும் கேட்டது. ஆனால் சீனிவாசனின் பதில் கேட்கவில்லை... ரிசீவரின் வாயை பொத்திவிட்டார் போலிருந்தது. காத்திருந்தான். அடுத்த நொடியே சீனிவாசனின் குரல் கேட்டது. 'சார் நீங்க பாத்து முடிச்சிட்டு... டோர சாத்திட்டு போயிருங்க.... போலீஸ் போட்ட பேட் லாக்ல பூட்ட வேணாம். டோர்லருக்கற லாக் சாவி எங்கிட்ட ஒன்னு இருக்கு.... நா சவுகரியமா வந்து பாத்துக்கறேன்.'

அப்பாடா தப்பித்தோம் என்று ராஜசேகர் நினைத்தான், 'சரி சார்... அப்புறம் இன்னொரு விஷயம் சார்?'

'சொல்லுங்க.'

'நா இங்க வந்துருக்கற விஷயத்த அந்த லேடிக்கிட்ட சொல்லிறாதீங்க சார்.... அப்புறம் அவங்க எங்கிட்ட பேசலாம்னு வந்து அது போலீசுக்கு தெரியவந்தா வம்பா போயிரும்..... சாவிய குடுத்த போலீஸ் இந்த வீட்ட நோட் பண்ண யாரையாச்சும் அனுப்பியிருக்கவும் சான்ஸ் இருக்கு.... அதனாலதான் சொல்றேன்.'

'சரி சார்... கண்டிப்பா சொல்ல மாட்டேன்.... போலீஸ்தான் பாக்க வந்துருக்காங்கன்னு சொல்லிடறேன்.'

'கரெக்ட்... அப்படியே சொல்லிருங்க.' என்ற ராஜசேகர் இணைப்பை துண்டித்துவிட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பிற்பகல் மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. 

அவன் வரும்போது கொண்டு வந்திருந்த கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வலப்பக்கம் இருந்த  படுக்கையறைக்குள் நுழைந்தான். அது ஹாலை விடவும் மோசமான நிலமையில் இருந்ததைக் கண்டான். ஆனால் அது போலீசாரால் சோதனையிடப்பட்ட அறையைப் போன்று இல்லாததை கவனித்தான். ஹால் முழுவதும் காணப்பட்ட கைரேகை எடுக்க தூவப்பட்டிருந்த பவுடரின் அடையாளமும் காணப்படவில்லை. கொலையாளி இந்த அறைக்குள் வர வாய்ப்பில்லை என்று போலீஸ் நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது...

மேலும் அறை இருந்த அலங்கோல நிலை யாரோ எதையோ குறிவைத்து தேடியதைப் போன்று இருந்தது. சுவர் அலமாரியில் இருந்த அனைத்து பொருட்களும் எடுத்து கட்டில் மீது வீசப்பட்டிருந்ததையும் கவனித்தான். அறை முழுவதையும் உள்ளடக்கி இரண்டு மூன்று கோணங்களில் படம் பிடித்தான். பிறகு சுவர் அலமாரியைப் பார்த்தான். 

காலியாக இருந்தது. இரைந்துக்கிடந்த துணிகளில் தான் பரிசளித்த சில சேலைகளும் இருப்பதை கவனித்தான். ஆனால் இதை வைத்து தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்துவிட முடியாது என நினைத்ததால் அதை எடுத்துச் சென்று அழிப்பது தேவையில்லாத வேலை என்ற முடிவுக்கு வந்தான். மேலும் இவன் அவற்றை எடுத்துச் சென்று அலுவலகத்தில் வைத்து அதை நாகுவோ அல்லது வசந்தோ பார்த்துவிட்டாலும் பிரச்சினை. அதில்லாமல் இவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் கோகிலாவுக்கும் பதில் சொல்ல வேண்டும். 

அறையை விட்டு வெளியில் வந்து படுக்கையறையை ஒட்டியிருந்த இன்னொரு சிறிய அறைக்குள் நுழைந்தான். அதை மாதவி தன்னுடைய உடை மாற்றும் மற்றும் மேக்கப் அறையாக பயன்படுத்தியிருந்ததை அவன் அறிந்திருந்தான்.  அந்த அறையும் படுக்கையறையைப் போன்றே அலங்கோலமாக கிடந்தது. இது நிச்சயம் போலீசாருடைய வேலை இல்லை. 

அவர்கள் வந்து சென்றதும் வீடு சீல் வைக்கப்பட்டதால் அதற்குப் பிறகு வேறு யாரும் உள்ளே நுழைந்திருக்கவும் வாய்ப்பில்லை. 

மாதவியை கொலைசெய்த நபர்தான் தான் சம்மந்தப்பட்ட பொருட்கள் அல்லது வேறு எதையாவது குறிவைத்து வீடு முழுவதும் தேடியிருக்க வேண்டும். அது கோபாலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் அவர் அன்று மாலை இரண்டாவது முறை இங்கு வந்திருந்தபோது 6.45லிருந்து ஏழு மணி வரைதான் இங்கு இருந்திருக்கிறார். அந்த கால் மணி நேரத்தில் இவ்வளவும் செய்திருக்க முடியுமா? அல்லது நாம் இங்கிருந்து புறப்பட்டு சென்று கோபால் மீண்டும் உள்ளே வருவதற்குள் வேறு எவரேனும் இங்கு வந்து சென்றிருக்க முடியுமா?

அந்த ஒப்பனை அறை முழுவதும் சிதறிக்கிடந்த பொருட்களில் தன்னை அடையாளம் காட்டக் கூடியவை ஏதேனும் உள்ளதா என்று தேடினான். ஒன்றும் கிடைக்கவில்லை. அலங்கார மேசை மீதிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்புறம் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. மேசையின் அடி வரிசையில் இடமும் வலமும் பக்கத்திற்கு ஒன்றாக இருந்த சிறிய இழுவைகள் (drawers)இருப்பதை கவனித்தான். திறக்க முயன்றான், முடியவில்லை. பூட்டியிருந்தது. அவற்றினுடைய சாவிகள் எங்காவது கிடக்கிறதா என்று தரையில் கிடந்த பொருட்களை ஒவ்வொன்றாக ஒதுக்கிவிட்டு தேடினான்..... கிடைக்கவில்லை.... அறையை சுற்றிலும் பார்த்தான். சுவரோரம் நின்றிருந்த இரும்பு அலமாரிகள் இரண்டின் கதவுகளும் திறந்து கிடக்க அலமாரிகள் காலியாக இருந்தன. 

தரையில் கிடந்த பொருட்களுக்கு இடையில் ஒரு மூலையில் கிடந்த சிறிய கையடக்க டார்ச் லைட் அவனுடைய கவனத்தை ஈர்த்தது. எடுத்து ஆன் செய்து பார்த்தான். பளிச்சென எரிந்தது. அதன் உதவியுடன் மீண்டும் இரண்டு இரும்பு அலமாரிகளையும் ஆராய்ந்தான்..... ஒன்றும் தட்டுப்படவில்லை. குணிந்து தரையில் அமர்ந்து  அலமாரிகளுக்கு அடியில் கைகளை விட்டு துழாவினான். சிறிய சுருக்கு பை போன்று ஒன்று கையில் தட்டுப்பட அதை வெளியில் இழுத்து திறந்தான். அதில் சிறிய சாவிகளைக் கொண்ட கொத்து இருந்ததைக் கண்டான்.  

அதை எடுத்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்து வாசற்கதவு சாத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்துக்கொண்டு மீண்டும் ஒப்பனை அறைக்குள் நுழைந்து அலங்கார மேசையின் அடியில் இருந்த இழுவைகளில் வலப்புறம் இருந்ததை திறக்க முயன்றான். திறக்கவில்லை. கையிலிருந்த சாவிகளில் ஒவ்வொன்றாக அதில் இட்டு முயற்சி செய்தான். மூன்று சாவிகளுக்குப் பிறகு அது திறந்தது. 

அதில் இருந்த அனைத்தையும் எடுத்து தரையில் வைத்தான். அவற்றில் அவனை முதலில் கவர்ந்தது கையடக்க புத்தகம் ஒன்று. திறந்துப் பார்த்தான். ஐந்தாறு பக்கங்கள் இருந்த அந்த புத்தகத்தில் இருந்த அனைத்தும் தொலைபேசி எண்கள்! 

தன்னுடைய தொலைபேசி எண் உள்ளதா என்று பார்த்தான். இல்லை. ஏன் என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்தான். விடை கிடைக்கவில்லை. பிறகு கோபாலின் தொலைபேசியை தேடினான். இருந்தது. இது மாதவிக்கு தெரிந்த நண்பர்கள்..... இன்னும் வெளிப்படையாக சொல்லப் போனால் வாடிக்கையாளர்களுடைய எண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். மேலோட்டமாக எண்ணிப் பார்த்ததில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட  பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் இருந்தன. ஆனால் அவற்றில் யாருடைய பெயரும் அவனுக்கு தெரிந்த நபர்களாக தெரியவில்லை. இதில் எப்படி என்னுடைய நம்பர் இல்லாமல் போனது? மீண்டும் ஒருமுறை பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டினான். சட்டென்று அவனுடைய பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தியது. இடையில் ஒரீரு பக்கங்கள் கிழித்தெடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. முதல் பக்கத்தின் வலது மேல்புறம் ABCD, EFGH என ஆங்கில வரிசையில் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடப்பட்டிருந்தது. அதாவது முதல் பக்கத்தில் ABCD என்ற நான்கு எழுத்துக்களில் துவங்கிய பெயர்கள் இருந்தன... அதற்கு அடுத்த பக்கத்தில் EFGH..... அந்த வரிசையில் QRST என்ற பக்கம் கிழிக்கப்பட்டிருந்தது. ஆகவேதான் Rல் துவங்கும் தன்  பெயரின் தொலைபேசி எண் இல்லைபோலிருக்கிறது. அதே சமயம் இந்த பட்டியலை நிச்சயம் பள்ளிப் பக்கமே சென்றிராத மாதவி தயாரித்திருக்க வாய்ப்பில்லை..... அவளுக்கு துணையாயிருந்த வேறு யாரோதான் இதை தயாரித்திருக்க வேண்டும்....அது யாராக இருக்கும்?  மீண்டும் ஒரு முறை  அந்த புத்தகத்தில் பட்டியலிடப்பட்டிருந்த பெயர்களை  வாசித்து பார்த்தான்......அதில் M வரிசையில் இருந்த  முருகேசன் என்ற பெயர் அவனுடைய கவனத்தை ஈர்த்தது. முருகேசன், முருகேசன்.... என்று அந்த பெயரை பலமுறை  மனதுக்குள் அசைபோட்டான். எங்கோ கேள்விப்பட்டிருந்த பெயராக இருந்தது.... ஆனால் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அதை தன்னுடைய கைப்பெட்டியில் வைத்து பத்திரப்படுத்திவிட்டு தரையில் கிடந்த மற்றப் பொருட்களை பார்த்தான். அவற்றுள் பிரதானமாக தெரிந்த ஒரு நீல நிற ப்ளாஸ்டிக் உறையை எடுத்து திறந்து உள்ளே இருந்தவற்றை வெளியில் எடுத்தான். 

ஒரு வங்கி கணக்குப் புத்தகமும் காசோலை புத்தகமும் இருந்தன. கணக்குப் புத்தகத்தை திறந்து பார்த்தான். மாதவியின் வங்கி கணக்கு புத்தகம்! பக்கங்களை புரட்டினான். கோபாலின் வங்கி கணக்கிலிருந்து மாதா மாதம் மாற்றப்பட்ட தொகை வரவு வைக்கப்பட்டிருந்ததை கவனித்தான். இறுதியில் கையிருப்பை கவனித்தான். கையிருப்பு தொகை ஆறு இலக்கத்தில் இருந்ததைக் கவனித்ததும் அவனையுமறியாமல் அடிப்பாவி என்றான். எல்லாம் நம்ம மாதிரி ஆளுங்கக் கிட்டருந்து கொள்ளையடிச்சதாத்தான இருக்கும்? அதையடுத்து காசோலை புத்தகத்தை திறந்தான். மாதவியின் பெருவிரல் ரேகைப் பதிக்கப்பட்ட வெற்று காசோலைகள் ஐந்தாறு இருந்தன. இதை குறிவைத்துத்தான் மாதவியை கொலை செய்தவன் தேடியிருக்க வேண்டும் என்று நினைத்தான். மாதவி காசோலைகளில் கைரேகை இட்டு வைத்திருக்கும் விஷயத்தை நன்கு அறிந்த நபர்தான் இந்த தேடுதலை நடத்தியிருக்க வேண்டும். அது கோபாலாகவும் இருக்க வாய்ப்புள்ளது. 

ஏனெனில் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதவிக்கு அளித்து வந்திருந்த தொகையை தவிர பெரிதாக வேறு எந்த தொகையும் அதில் வரவு வைக்கப்பட்டிருக்கவில்லை. கடைசியாக பணம் எடுக்கப்பட்ட தேதி என்ன என்று தேடினான். 

கடந்த ஆறு மாதமாக எந்த தொகையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. கடைசியாக எடுக்கப்பட்ட தொகையும் பத்தாயிரத்திற்கும் குறைவான தொகையாகவே இருந்தது. இரண்டையும் உறைக்குள் வைத்து மூடி தன் கைப்பெட்டியில் வைத்துவிட்டு அடுத்த பக்கத்திலிருந்த இழுவையை இரண்டு மூன்று சாவிகளுக்குப் பிறகு திறந்தான். 


தொடரும்..

6 comments:

G.M Balasubramaniam said...


மாதவி வீட்டின் அலங்கோல நிலையை காவல்துறையினர் கவனிக்க வில்லையா.? அதிலிருந்த பொருட்களை ராஜசேகர் எடுத்துச் செல்ல முடியுமா.?

தி.தமிழ் இளங்கோ said...

அய்யா! தொடர் பதிவிலேயே சுவாரஸ்யமாக மூழ்கி விட்டீர்கள் போலிருக்கிறது. என்னைப் போன்று தொடர்பதிவு படிக்க முடியாமல் விட்டுப் போனவர்களுக்காக இடையிடையே சின்ன பதிவுகளையும் போடவும். உங்களோடான தொடர்பு விட்டுப் போகாமலிருக்க அவை பாலமாக இருக்கும்.நன்றி!

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...

மாதவி வீட்டின் அலங்கோல நிலையை காவல்துறையினர் கவனிக்க வில்லையா.? அதிலிருந்த பொருட்களை ராஜசேகர் எடுத்துச் செல்ல முடியுமா.?//

இந்த விஷயம் ட்ரையல் சமயத்தில்தான் வெளியில் வரும்.... போலீசாரின் அஜாக்கிரதையால்தான் இது நடந்துள்ளது.

போலீசார்வசமிருந்து வீடு திரும்ப கிடைக்கப்பெற்றதும் உரிமையாளரின் வழக்கறிஞர் என்கிற முறையில் ராஜசேகர் வழக்குக்கு தேவை என கருதும் பொருட்களையோ, ஆவணங்களையோ எடுத்துச் செல்ல முடியும். ஆனால் உரிமையாளரின் கவனத்திற்கு அதை நிச்சயம் தெரிவிக்க வேண்டும்.

டிபிஆர்.ஜோசப் said...

தி.தமிழ் இளங்கோ said...
அய்யா! தொடர் பதிவிலேயே சுவாரஸ்யமாக மூழ்கி விட்டீர்கள் போலிருக்கிறது. என்னைப் போன்று தொடர்பதிவு படிக்க முடியாமல் விட்டுப் போனவர்களுக்காக இடையிடையே சின்ன பதிவுகளையும் போடவும். உங்களோடான தொடர்பு விட்டுப் போகாமலிருக்க அவை பாலமாக இருக்கும்.நன்றி!//

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இது ஒரு க்ரைம் தொடர் என்பதாலும் இதை சுமார் 300 பேர் தினமும் வாசிக்கின்றனர் என்பதாலும் நாள் விடாமல் தொடர்ந்து பதிய வேண்டிய கட்டாயம். இன்னும் இரண்டு வாரங்கள்தான். அதன் பிறகு அடுத்த ஓரிரு மாதங்களுக்கு எந்த தொடரும் இருக்காது. அதற்கிடையில் நீங்கள் கூறியதுபோல் ஓரிரு பதிவுகளை இடுகிறேன். நன்றி.

வே.நடனசபாபதி said...

ஊரில் இல்லாததால் இன்றுதான் மூன்று பதிவுகளையும் படிக்க முடிந்தது. இரண்டாவது இழுவறையில் என்ன கிடைத்ததோ?

டிபிஆர்.ஜோசப் said...

3 PM
வே.நடனசபாபதி said...
ஊரில் இல்லாததால் இன்றுதான் மூன்று பதிவுகளையும் படிக்க முடிந்தது. //

அப்படியா சார். நானும் அப்படித்தான் நினைத்தேன்.

இரண்டாவது இழுவறையில் என்ன கிடைத்ததோ?//

அடுத்த பதிவில் தெரிந்திருக்குமே :)

நன்றி சார்.