09 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 41


'பிஎம் ரிப்போர்ட்ட படிச்சிட்டா?' என்று குழப்பத்துடன் வசந்தைப் பார்த்தான் ராஜசேகர். அவன் எதை கேட்கிறான் என்பது அவனுக்கு தெரிந்திருந்தது. பிரேதப்பரிசோதனை அறிக்கையில் மாதவி அவனை வரவேண்டாம் என்று கூறிவிட்டு வேறொருவனுடன் உடலுறவு கொண்டிருந்தாள் என்ற வரிகைளப் படித்தவுடனேயே அவனையுமறியாமல் அவனுள் எழுந்த கோபம் அவனை சிறிது நேரம் அவளுடன் தான் கொண்டுவந்திருந்த இரண்டு வருட உறவு எத்தனை ஏமாளித்தனமானது என்று சிந்திக்க வைத்தது. அவள் ஏதோ தன் மீது காதல் வயப்பட்டு தன்னுடன் மட்டுமே உறவு வைத்திருந்தாள் என்று நினைத்திருந்த அவனுக்கு அவளுக்கிருந்த பல ஆண் வாடிக்கையாளர்களுள் அவனும் ஒருவன் மட்டுமே என்பது கோபாலுடன் அவளை பார்த்தபோதுதான் அவனுக்கு உரைத்தது. அந்த சிந்தனையில்தான் நான் ஆழ்ந்துபோனேன் என்பதை இவனிடம் எப்படி விவரிப்பது? 'அது ஒன்னும் இல்லடா.... பின்னந்தலையில பட்ட ஒரே அடியால ஒருத்தர செத்துருக்க முடியுமான்னு முதல்லருந்தே நினைச்சிக்கிட்டிருந்தேன்.... இப்ப பி.எம் ரிப்போர்ட்ட படிச்சதுக்கப்புறந்தான் மாதவி எப்படி செத்தாங்கன்னு க்ளியராச்சி..' என்று எதையோ சொல்லி சமாளித்தான்.

'அப்படியா?' என்று அப்போதும் சந்தேகத்துடன் அவனைப் பார்த்தான் வசந்த். 

'டேய்... அத வுடு' என்று பேச்சை மாற்றினான் ராஜசேகர். 'நீ நாளைக்கி வர்றப்போ மாதவி வீட்டு சாவிய வாங்குன கையோட ராமராஜனுக்கு ஃபோன் பண்ணி அவர மாதவி வீட்டுக்கு ஒரு பதினோரு மணிக்குள்ள வந்துறச் சொல்லு.'

'அவர் எதுக்கு பாஸ்?'

'எல்லாம் காரணமாத்தான். அந்த வீட்டுக்குள்ள நாம போறப்போ கூட கோபாலோட ரெப் (representative)
ஒருத்தர் இருக்கறது நல்லது. சீனிவாசன் சார கூப்டலாம்னு பாத்தா அவர் ஒடம்பு இருக்கற நிலமையில எப்படி கூப்டறதுன்னு தோனிச்சி.. அதான் சொல்றேன்... ராமராஜன் இருந்தா போறும்.'

'சரி பாஸ்... வேற ஏதாச்சும் இருக்கா?' என்றவாறு எழுந்து நின்றான்.

'இப்போதைக்கி இல்ல.. நா இதுலருக்கற எல்லாத்தையும் படிச்சி வைக்கிறேன்... நாளைக்கி நீ வந்ததும் எடுத்துகிட்டு போயி ஒனக்கு எதெல்லாம் வேணுமோ அதுக்கு காப்பி போட்டு எடுத்துக்கிட்டு வந்துரு.... அதுக்கப்புறம் டீட்டெய்லா பேசிக்கலாம்...'

'சரி பாஸ்...அப்போ நா கிளம்பறேன்.' என்றவாறு வசந்த் கிளம்ப, 'டேய் நா சொன்னது நினைவிருக்கட்டும்.' என்றான் ராஜசேகர். 

வாசல் வரை சென்ற வசந்த் திரும்பி பார்த்தான். 'எது பாஸ்?'

'அந்த லேடிய போயி பாக்காதேன்னு சொன்னேனே அது.....'

வசந்த் சிரித்தவாறே தன் கழுத்தில் கை வைத்தான்.... 'நிச்சயமா போ மாட்டேன் பாஸ்...'

'ரைட்... அப்ப நாளைக்கி பாக்கலாம்.... ஸ்டேஷன்ல சாவி குடுக்கறதுக்கு ஏதாச்சும் மக்கார் பண்ணாங்கன்னா கூப்டு.... அவங்க எஸ்.பி கிட்ட பேசி பாக்கலாம்.'

சரி என்றவாறு தலையை அசைத்தவாறே வசந்த் வெளியேற ராஜசேகர் தன் மேசை மீதிருந்த உறையிலிருந்து இன்னும் சில ஆவணங்களை எடுத்து வாசிக்கலானான்.

*********

அடுத்த நாள் காலையிலேயே மாதவி குடியிருந்த வீட்டின் சாவி கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து மைலாப்பூர் காவல் நிலையத்திற்கு சென்ற வசந்தை வேண்டுமென்றே பிற்பகல் வரை காத்திருக்க வைத்துவிட்டுத்தான் சாவியை கொடுத்தார் ஆய்வாளர் பெருமாள். 

பொறுமையிழந்து அவரை விரோதித்துக்கொள்ள விரும்பாத வசந்த் காவல்நிலையத்தில் இருந்த எவருமே அவனைக் கண்டுக்கொள்ளாததுபோல் நடித்தும் பொறுமையுடன் காவல்நிலைய வளாகத்திலேயே காத்திருந்து சுமார் பிற்பகல் இரண்டு மணி வாக்கில் சாவியைப் பெற்றுக்கொண்டு ராஜசேகரை அழைத்தான். 

'இப்பத்தான் சாவி கிடைச்சிது பாஸ்... நா நேரா அந்த வீட்டுக்கு வந்துறவா?'

'சரி...' என்று சம்மதித்த ராஜசேகர், 'ராமராஜன் கிட்ட சொல்லிட்டியா?' என்றான்.

'அவ ஆஃபீஸ் இல்ல பாஸ்.... ஊருக்கு போயிருக்காராம்.... அங்க இருந்த மேனேஜர வரச்சொன்னேன்... நா எதுக்குன்னு பேக்கடிச்சிட்டார்.....'

ஒரு சில நொடிகள் பதிலளிக்காமல் ராஜசேகர் மவுனம் காக்க, 'என்ன பாஸ்.... ராமராஜன் ஊர்லருந்து வந்ததும் பாத்துக்கலாமா?' என்றான்.

'வேணாம்.... நாம ரெண்டு பேருமே போய்ட்டு வந்துறலாம். அங்கருந்து எதையாச்சும் எடுக்கணும்னா சீனிவாசன் சார கூப்ட்டு பெர்மிஷன் கேட்டுக்கலாம்..... நீ அங்க வந்துரு... நா இன்னும் கொஞ்சம் நேரத்துல கிளம்பிருவேன்...' 

இணைப்பைத் துண்டித்துவிட்டு வசந்த் மைலாப்பூரிலிருந்து கிளம்பினான். அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய முயல அவனுடைய செல்ஃபோன் மீண்டும் ஒலித்தது. திரையைப் பார்த்தான். ஊரிலிருந்து தங்கை அழைப்பது தெரிந்தது. உடனே பைக்கை ஆஃப் செய்துவிட்டு, 'என்ன ராஜி....?' என்றான்.

அடுத்த சில நொடிகளில் எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவனுடைய முகத்தை அடியோடு மாற்றியது.

'நீ என்ன பண்ணிக்கிட்டுருந்தே?' என்று எரிந்து விழுந்தான். 

'........'

'சரி.... இப்ப எங்கருந்து ஃபோன் பண்றே?'

'............'

'சரி... அஞ்சி நிமிஷத்துல புறப்பட்டுருவேன்... சார் கிட்ட ஒன்னு குடுக்கணும்... குடுத்துட்டு விஷயத்த சொல்லிட்டு கிடைக்கிற பஸ் புடிச்சி வரேன்... .அம்மாவ பத்திரமா பாத்துக்கோ....'

இணைப்பைத் துண்டித்துவிட்டு கிளம்பியவன் அம்மாவுக்கு ஒன்னும் ஆயிரக்கூடாதே என்று எண்ணியவாறு பைக்கை முடிந்த மட்டும் விரட்டி மாதவியின் வீட்டை அடைந்தான். 

அவன் சென்றடைவதற்கு முன்பே ராஜசேகர் அங்கு வந்து காத்திருந்ததைக் கண்டதும் அவனுடைய முகத்தில் நிம்மதி தெரிந்தது. பைக்கை நிறுத்திவிட்டு ஊரிலிருந்து தங்கை அழைத்த விவரத்தை மளமளவென்று கூறி முடித்துவிட்டு சாவியை ஒப்படைத்தான். 

'அதுக்குத்தான் முன்னாலயே சொன்னேன், வயசான காலத்துல அவங்கள இன்னும் எதுக்குடா ஊர்ல வுட்டு வச்சிருக்கேன்னு. கேட்டியா? சரி,,, சீரியசா ஒன்னும் இல்லையே?' என்றான் ராஜசேகர். 

'முட்டிக் கீழதான் அடிபட்டுருக்காம் பாஸ்.... எக்ஸ்ரே எடுத்து பாத்ததுல முழங்கால் எலும்புல ஹேர்லைன் க்ராக் மாதிரி தெரியுதாம்.... வயசானதால கொஞ்சம் நாளாவும் போல... நா போய் பாத்துட்டு வந்துடறேன்.'

'டேய்... பாத்துட்டு வந்துடறேன்னு அசால்ட்டா சொல்றே? இங்க ஒன்னும் தலைமுழுவற அவசரம் இல்லை.... கேஸ் ட்ரையலுக்கு வர்றதுக்கு எப்படியும் ரெண்டு வாரமாவது ஆவும்.... இருந்துட்டு வா.... கேஷ் எதுவும் வேணுமா?'

'வேணாம் பாஸ்... போற வழியில ஏடிஎம்ல எடுத்துக்கறேன்... நீங்க அன்னைக்கி கொடுத்த முப்பத்தஞ்சி இருக்கே...' என்ற வசந்த் விடைபெற்றுக்கொண்டு விரைய அவன் தெருமுனை திரும்புவரை காத்திருந்த ராஜசேகர் மாதவியின் வீட்டுக்கதவை பார்த்தான்.

அவன் சில தினங்களுக்கு முன்பு பார்த்ததுபோலவே கதவில் தொங்கிய பூட்டு காவல்துறையினரால் வைக்கப்பட்ட சீலுக்குள் மறைந்திருந்தது. அதை திறக்க முயல்வதற்கு முன்பு தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தான்.... பிற்பகல் வேளையிலும் இடைவிடாமல் வாகனங்கள் இரு திசைகளிலும் சென்றுக்கொண்டிருக்க சாலையின் எதிர்புறமும் பாதசாரிகளால் நிறைந்திருந்ததைக் கண்டான். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துக்கொண்டு கதவை நெருங்கி பூட்டைச் சுற்றியிருந்த துணியை கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் கிழித்து எறிந்தான். பிறகு பூட்டை திறந்து கதவின் ஆட்டமாட்டிக் கோத்ரெஜ் பூட்டையும் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

முன் ஹால் அலங்கோலமாக கிடந்தது.  இதை அவன் எதிர்பார்த்திருந்தாலும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மாதவி அவ்வளவாக படித்திருக்கவில்லையென்றாலும் வீட்டை அழகாக வைத்துக்கொள்வதில் மிகவும் திறமைசாலி என்பதை ராஜசேகர் பலமுறை பார்த்து அனுபவித்திருக்கிறான். 'எனக்கு எல்லாமே வைச்ச இடத்துல இருக்கணுங்க... அதனாலதான் ஃபுல் டைம் வேலைக்காரிய கூட வச்சிக்கறதில்லை.' என்று அவள் பலமுறை கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. 

அப்படி அவள் பார்த்து பார்த்து அழகுபடுத்தி வைத்திருந்த வரவேற்பறை இருந்த நிலமையை பார்த்தான். தரையில் பரவிக் கிடந்த இரத்தக் கறை அப்படியே காய்ந்து போயிருந்தது. காவல்துறையினர் அதன் மீது கால்வைத்துவிட்டு நடந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களுடைய கால்தடம் சென்றவிடம் எல்லாம் ரத்தக் கறை. ரத்தக்கறை படிந்த பாதங்கள் சென்ற பாதையை காமராவை வீடியோ மோடுக்கு (Mode) மாற்றி படம் பிடித்தான். கைரேகை ஆட்கள் தூவிய பவுடர் தரை, சோபா, டீப்பாய், டிவி ஸ்டான்ட், கதவு, நிலைச்சட்டம் என பார்க்கும் இடமெல்லாம் திட்டுத்திட்டாக, பிரஷ் அடித்த சுவடுகளுடன்..... கையோடு கொண்டு வந்திருந்த தன்னுடைய டிஜிடல் கேமராவை எடுத்து பல்வேறு கோணங்களில் படம் பிடித்தான்.

த்ரீ ஃபீஸ் சோபான்னா 'ட' மாதிரி போடணும். அப்பத்தான் சவுகரியாம நெருங்கி ஒக்காந்து பேசறவங்க முகத்த பாத்து பேச முடியும்' என்பாள் மாதவி. அந்த பொசிஷன் இல்லாமல் வேறெந்த இடத்திலும் அந்த மூன்று சோபாக்களும் கிடந்து அவன் பார்த்த ஞாபகம் இல்லை.. அது இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்ததைப் பார்த்தபோது மனசு லேசாக வலிப்பதை உணர்ந்தான் ராஜசேகர். மூன்று சோபாக்களும் அவற்றினுடைய நிரந்தர இடத்திலிருந்தபோது கார்பெட்டில் இருந்த மார்க்குகளையும் (Marks) சேர்த்து தனியாக ஒரு படம் எடுத்து வைத்துக்கொண்டான். இதை நிச்சயம் வழக்கின்போது பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று கருதினான். 

காமரா லென்ஸ் வழியாக அவன் பார்த்த அங்கு இருந்த ஒவ்வொரு பொருளும் மாதவியுடனான தன்னுடைய உறவை நினைவுப்படுத்துவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. 

நல்லவேளையாக, ச்சே அப்படி நினைக்கலாமா? என்று தன்னைத்தானே திருத்திக்கொண்டான். வசந்த் ஊருக்கு போகாமல் இப்போது தன்னுடன் இருந்திருந்தால் தன்னுடைய பழைய நினைவுகளால் தன் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடித்து 'என்ன பாஸ் உங்க முகத்துல சவக்கிளை' என்று சொல்லி கேலி செய்திருப்பானே.... ராமராஜன் ஊரில் இல்லாததும் ஒருவகையில் நல்லதுதான் என்று நினைத்தான்.... எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்னு சொல்வாங்களே அது உண்மைதான் போலருக்கு.... வசந்த் திடீர்னு ஊருக்கு புறப்பட வேண்டி வரும் என்றோ அல்லது ராமராஜன் இந்த நேரம் பார்த்து ஊரில் இருக்கமாட்டார் என்றோ நேற்றுவரை அவன் நினைக்கவே இல்லையே.....

தன்னையும் மாதவியையும் இணைத்து சந்தேகப்படும் விதமாக ஏதாவது பொருள் இந்த வீட்டில் இருந்தால் அதை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிடவேண்டும் என்ற எண்ணத்தில்தானே இந்த வீட்டிற்குள் ஒருமுறையாவது மீண்டும் நுழைந்து பார்த்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தான்? அது இத்தனை எளிதில் கைகூடும் என்று அவன் நினைக்கவே இல்லை....

பழைய நினைவுகளில் இருந்து அவனை மீட்டது அவனுடைய செல்ஃபோன். 

சீனிவாசன்! எதுக்கு கூப்டறார்? நான் இங்க இருக்குறது தெரிஞ்சிருச்சோ!

தொடரும்..

6 comments:

Packirisamy N said...

// காத்திருக்க வைத்துவிட்டுத்தான் சாவியை கொடுத்தார் ஆய்வாளர் பெருமாள்//

என்ன திருப்தியோ? இது போல அல்பங்கள் நிஜ வாழ்க்கையிலும் உண்டு.

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

1 – 2 of 2
Packirisamy N said...
// காத்திருக்க வைத்துவிட்டுத்தான் சாவியை கொடுத்தார் ஆய்வாளர் பெருமாள்//

என்ன திருப்தியோ? இது போல அல்பங்கள் நிஜ வாழ்க்கையிலும் உண்டு.//

உண்மைதான். Dog in the manger என்பதுபோல.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
தொடர்கிறேன்.//

நன்றி சார்.

வே.நடனசபாபதி said...

//பிற்பகல் வரை காத்திருக்க வைத்துவிட்டுத்தான் சாவியை கொடுத்தார் ஆய்வாளர் பெருமாள். //
உடனே கொடுத்துவிட்டால் அவர்களுக்கு மதிப்பேது?

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
//பிற்பகல் வரை காத்திருக்க வைத்துவிட்டுத்தான் சாவியை கொடுத்தார் ஆய்வாளர் பெருமாள். //
உடனே கொடுத்துவிட்டால் அவர்களுக்கு மதிப்பேது?//

இந்த மாதிரி சில்லறைத்தனமா நடந்துக்கிறதாலதான் போலீஸ்னால ஜனங்களுக்கு அலர்ஜியா இருக்கு.