05 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 38


'கொஞ்ச நேரத்துக்கு முன்னால மைலாப்பூர் ஸ்டேஷன்லருந்து பெருமாள்னு ஒரு இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்திருந்தாராம்....' என்றார் சீனிவாசன். 

'ஆமா அவர்தான் அந்த ஸ்டேஷன் ஹெட்.... எதுக்கு வந்தாராம்?' என்று ராஜசேகர் கேட்டான்.

'அன்னைக்கி அந்த லேடி கோபால அந்த பொண்ணு வீட்டு முன்னால நின்னுக்கிட்டிருந்தத பாத்ததாத்தான சொல்லியிருந்தாங்க?'

'ஆமா.. அப்படித்தான் கேள்விப்பட்டேன்.... வசந்த் அங்க போயிருந்தப்பவும் அப்படித்தான் சொன்னதா சொன்னான். அதுக்கென்ன? அவங்க சொல்றத சொல்லிட்டு போகட்டும் சார்...'

'இல்ல சார்... இப்ப கோபால் அந்த வீட்டுக்குள்ளருந்து வெளியில வந்தத பாத்தேன்னு கோர்ட்ல சொல்லணும்னு மிரட்றாராம்.'

இப்படியெல்லாம் போலீஸ் செய்யக்கூடும் என்று அவன் எதிர்பார்த்திருந்ததுதான். ஏனெனில் தற்போதுள்ள சாட்சிகள் இருவருமே கோபால் மாதவியின் வீட்டிற்குள் சென்று வந்ததை பார்த்தாக கூறவில்லை. இதை மட்டுமே வைத்து கோபால்தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் எத்தனை திறமையாக அரசு தரப்பில் வாதாடினாலும் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை... ஆகவே போலீஸ் இப்படியொரு சித்துவிளையாட்டை விளையாடும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் அது இவ்வளவு விரைவில், அதுவும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. 

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க?' என்ற சீனிவாசனைப் பார்த்தான். இவரை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்தான். 

'சார் போலீஸ் இப்படியெல்லாம் டர்ட்டி கேம் விளையாடுவாங்கன்னு நா எதிர்பார்த்ததுதான்.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.... அவங்க போலீஸ் சொல்றா மாதிரியே சொல்லிக்கட்டும்.... கிராஸ் எக்சாமினேஷன்ல நா பாத்துக்கறேன்... நீங்க ரிலாக்ஸ்டா இருங்க... அதுதான் இப்ப அவசியம்.. இந்த மாதிரி விளையாட்டுங்கள நிறைய ஜட்ஜ் பாத்திருப்பாங்க....? அவங்க என்ன சொன்னாங்கன்னு போலீஸ் சொன்னதே எல்லா பேப்பர்லயும் வந்தாச்சே.... இப்ப மாத்தி சொல்ல வச்சா கோர்ட் நம்பிருமா என்ன? நா பாத்துக்கறேன் சார்...'

சீனிவாசன் அப்போதும் நம்பிக்கையில்லாமல் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ராஜசேகர், 'நா வேணும்னா அந்த லேடிக்கிட்ட பேசி பாக்கவா?' என்றான்.

'ஃபோன்லயா சார்?'

'ஆமா சார்... நா நேர்ல போயி பாத்து அத போலீசுக்கு தெரிஞ்சிதுன்னா வேற வெனையே வேணாம். அது அந்த லேடியத்தான் அஃபெக்ட் பண்ணும்.... அவங்கக் கிட்ட பேசட்டுமான்னு கேட்டதே ஒங்கள திருப்திபடுத்தத்தான்.. கேஸ் ட்ரையலுக்கு வந்து அவங்களோட டெப்போசிஷன் (deposition) வர்றதுக்கு இன்னும் ஒருமாசமாவது குறைஞ்சது ஆவும். அப்ப பாத்துக்கலாம்... நீங்க ரிலாக்ஸா இருங்க...' 

அப்போதும் சுரத்தில்லாமல், 'நீங்க சொன்னா சரி சார்.' என்று சீனிவாசன் கூற மேற்கொண்டு அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால் அவர் மேலும் டென்ஷனாகக் கூடும் என்று நினைத்த ராஜசேகர் 'நா கிளம்பறேன் சார்... டேக் கேர்.' என்று கூறிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் வாசலை நோக்கி நடந்தான்.

*****

அடுத்த நாள் காலை ராஜசேகர் சீக்கிரமே எழுந்து மீண்டும் ஒருமுறை வழக்கு சம்மரியை படித்துவிட்டு விட்டுப்போனதாக தான் கருதிய ஓரிரண்டு குறிப்புகளை குறித்துக்கொண்டு மனைவியிடம் திரும்பி வர மாலையாகும் என்று கூறிவிட்டு கிளம்பி அலுவலகத்தை அடைந்தான். 

அவன் அங்கு சென்றடையும்போதே அலுவலக படிக்கட்டில் அமர்ந்து தன் லேப்டாப்பில் மூழ்கியிருந்தான் வசந்த். 

'என்னடா வந்து ரொம்ப நேரமாச்சா?'

'பத்து நிமிஷம் ஆயிருக்கும் பாஸ்... எக்சைட்மென்ட்ல நேத்து ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லை... எப்படி விடியும்னு காத்திருந்து இங்க வந்துட்டேன்.....'

ராஜசேகர் சிரித்தான். 'ஓவர் எக்சைட்மென்ட்டும் டேஞ்சர்றா.... கோவம் மாதிரியேதான் இதுவும். ரேஷனலா திங்க் பண்ண விடாது.... வா... சாவகாசமா ஒக்காந்து பேசலாம்...'

ராஜசேகரின் கைகளில் இருந்து சாவியை வாங்கி அலுவலகத்தை திறந்த வசந்த் ஏசியை ஆன் செய்துவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தான்..... 'பத்து மணிக் கூட ஆவலை... அதுக்குள்ள என்னா வெயில் பாஸ்.....'

'ஆமாடா.... அதுக்குத்தான் ஏசியோட ஃபேனையும் சுத்த விடறது... ஏசி கூலிங் ஆவறதுக்குள்ள நம்மள உடனே காப்பாத்தறது நம்ம வேணாம்னு நினைக்கற சீலிங் ஃபேன்தான்....' என்றவாறு தன் இருக்கையில் அமர்ந்த ராஜசேகர் இருக்கையில் சாய்ந்து தலையை உயர்த்தி சில்லென்று வந்த காற்றை அனுபவித்தான்....

'நேத்து அவுட்டிங் எப்படி இருந்திச்சி பாஸ்?'

ராஜசேகர் சற்று சலிப்புடன் அவனைப் பார்த்தான். 'எப்பவும் மாதிரி எஞ்சாய் பண்ண முடியாத படி பண்ணிட்டார் சீனிவாசன்.'

'ஏன் என்னாச்சி பாஸ்? மறுபடியும் அவருக்கு ஏதாவது ஆயிருச்சா?'

'சேச்சே அதெல்லாம் இல்ல....' என்று மறுத்த ராஜசேகர் முந்தைய தினம் மாலை சீனிவாசன் தன்னிடம் கூறியதை சுருக்கமாக கூறினான். 'இப்ப சொல்லு, இந்த மூட்ல அவுட்டிங்க எப்படி அனுபவிக்கிறது? ஆனா ஒன்னுடா, என்னோட மூட தெரிஞ்சிக்கிட்டு அட்ஜ்ஸ்ட் பண்ணி போறதுல கோகியும் சரி காஞ்சனாவும் சரி.....ஜெம்ஸ்.... அந்த மாதிரி ஒரு ஃபேமிலி கிடைச்சதுக்கு நா ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..' என்றவனை அந்த மாதிரி ஒய்ஃப தான ரெண்டு வருசமா ஏமாத்திக்கிட்டிருந்தன்னு இடித்தது உள்மனசு..... Yes, I was such an idiot....

'உண்மைதான் பாஸ்.... நமக்கு தேவைப்படற ஸ்ட்ரெங்த்ல பாதி வீட்ல இருக்கறவங்கக் கிட்டருந்துதான் வருது..... கோபாலோட வய்ஃபும் ரொம்ப நல்ல மாதிரின்னு கேள்விப்பட்டுருக்கேன் பாஸ்.... அந்த மாதிரி வய்ஃப வச்சிக்கிட்டு இந்த மனுஷன் மத்த பொண்ணுங்க பின்னால சுத்திக்கிட்டிருந்தார்னு நினைக்கறப்போ இவர் மாதிரியான க்ளையன்ட மாட்டிக்கிட்டு சாவுடான்னு விட்டுறணும்னுதான் தோனுது.... ஆனா அதுல நம்ம பொழப்பும் இருக்கேன்னு நினைக்கறப்ப எதுக்குடா இந்த பொழப்பும்னும் தோனுது....' வசந்திடமிருந்து இத்தகைய பதிலை எதிர்பாராத ராஜசேகர் நானும் இரண்டு ஆண்டுகளாக மனைவிக்கு துரோகம் இழைத்துக்கொண்டிருந்தவன் என்பது தெரியவந்தால் அவன் என்னை மதிப்பானா என்று தனக்கு நினைத்துக்கொண்டான். 

இருப்பினும் ராஜசேகர் தன் உள்ளத்தில் இருப்பதை மறைத்துக்கொண்டு அவனை பாராட்டினான், 'சில சமயத்துல நீ கூட சூப்பராத்தான்டா பேசற! நீ சொல்றது நூத்துக்கு நூறு சரி.... கோபால் டிசர்வஸ் டு பி பனிஷ்ட்... ஆனா அத நாம சொல்லக் கூடாது.... அவர டிஃபென்ட் பண்றோம்னு சொல்லி வாங்குன காசுக்கு உண்மையா உழைக்கணுமே.... விருப்பம் இருக்கோ இல்லையோ இந்த ப்ரொஃபஷனுக்கு வந்தாச்சி.... நாய் வேஷம் போட்டா குறைச்சித்தான்டா ஆவணும்.....' 

'உண்மைதான் பாஸ்..' என்று ஆமோதித்த வசந்த் தன் லேப்டாப்பை திறந்து தான் தயாரித்து வைத்திருந்த மனுவின் மாதிரியை ராஜசேகரிடம் காண்பித்தான். 'நீங்க ஒரு தரம் வாசிச்சி பாத்துட்டீங்கன்னா நா ப்ரின்ட் போட்டுடறேன் பாஸ்'

'அந்த வீட்ட ரீப்பொசிஷன் எடுக்கறதுக்குத்தான? கொண்டா...' என்று லேப்டாப்பை தன் பக்கம் திருப்பிய ராஜசேகர் ஒரு சில நொடிகளில் அதை வாசித்து முடித்தான். 'சூப்பர்டா... கச்சிதமா இருக்கு... தேவையில்லாத வேர்ட்ஸ் எதுவுமே இல்ல.... இதுவே போறும்.... ப்ரின்ட் போட்டுரு...' 

வசந்தின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல்.... 'தாங்ஸ் பாஸ்....'

'சரி... அப்போ அது முடிஞ்சாச்சி.... என் சம்மரிய படிச்சதுல ஏதாச்சும் விட்டுப் போயிருக்கா, பாத்தியா?'

'பாஸ்... அதுக்கு முன்னால இன்னொரு விஷயம்....'

'சொல்லு.'

'நாளைக்கி சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணிட்டா கோபாலுக்கு மறுபடியும் பெய்ல் கேக்கற ஐடிய இருக்கா?'

ராஜசேகர் பதிலளிக்காமல் சிறிது நேரம் யோசித்தான். 'கேட்டுப் பாக்கலாம்... ஆனா கிடைக்கறது டவுட்டுதான்.'

'ஏன் அப்படி சொல்றீங்க?'

'ஒன்னு, நாளைக்கி போலீஸ் சார்ஜ் ஷீட் சப்மிட் பண்ணதும் நம்ம முதல் வேலை வீட்ட பொசிஷன் எடுக்க பெட்டிஷன் ஃபைல் பண்றோம்.... அத மஜிஸ்டிரேட் என்டர்டெய்ன் பண்ணுவாரா இல்ல செஷன்ஸ் கோர்ட்ல பாத்துக்குங்கன்னு சொல்வாரான்னு தெரியல... ரெண்டு.... போலீஸ் சப்மிட் பண்ற எல்லாத்துக்கும் காப்பி கேட்டு வேற பெட்டிஷன் போடணும்.... மண்டே காஸ் லிஸ்ட்ல (cause list) மஜிஸ்டிரேட்டுக்கு ஜாஸ்தி கேசுங்க இல்லன்னா பெய்ல் பெட்டிஷன் போடறதுக்கு டைம் இருக்கும்... அத்தோட அவரோட மூடும் நல்லாருக்கணும்..... இதெல்லாம் ஒத்து வந்தா பெய்ல் மூவ் பண்ணலாம்... எனக்கென்னவோ மாதவிக்கு எதிரான மெய்ன் ரெண்டு விட்னசஸ்சோட டெப்பாசிஷன் முடியற வரைக்கும் பெய்ல் கிடைக்க சான்ஸ் இல்லேன்னுதான் தோனுது.... He may have to wait at least till that time....அவரா இழுத்து வச்சிக்கிட்டதுதானடா.. நா யாருக்கும் ஃபோன் பண்ணாதீங்கன்னு சொன்னப்போ எவ்வளவு ரூடா (rude) ரெஸ்பான்ட் பண்ணார் தெரியுமா? Let him face the consquences... அவரா வச்சிக்கிட்ட சூன்யம்.... கொஞ்ச நாள் அனுபவிக்கட்டும்.... அப்பத்தான் ட்ரையல் சமயத்துல நாம சொன்னா மாதிரி கேட்டு நடந்துப்பார்..... என்ன சொல்றே?'

வசந்த் சிரித்தான். 'அப்சல்யூட்லி கரெக்ட் பாஸ்... இதுல இன்னொன்னும் இருக்கு பாஸ்... அந்த மனுஷன் வெளியில இருந்தா நாம மாதவி வீட்டுக்குள்ள போயி டீட்டெய்லா பாக்கவும் முடியாது..... சரிதானே?'

'கரெக்ட்... அதுவும் உண்மை.... அவர் கொஞ்ச நாள் உள்ளவே இருக்கட்டும்....' கோபாலை வைத்துக்கொண்டு நாம் மாதவிக்கு பரிசளித்த பொருட்களோ அகற்றவோ அல்லது அவளுடனான தன்னுடைய உறவை காட்டிக்கொடுக்கக் கூடிய எதுவும் அங்கிருந்தால் அவற்றை அழிக்கவோ முடியுமா என்ன?

'அப்ப நா அந்த ரெண்டாவது பெட்டிஷனையும் ரெடி பண்ணிறட்டுமா பாஸ்?' என்ற வசந்த் தன்னுடைய லேப்டாப்பை மீண்டும் தன் வசம் திருப்பி ஏற்கனவே திறந்திருந்த மனுவை மூடிவிட்டு புதிய வேர்ட் டாக்குமென்ட் ஒன்றை திறந்து டைப் அடிக்க துவங்கினான். அவனுடைய செயல்பாட்டை சில நொடிகள் கவனித்துக்கொண்டிருந்த ராஜசேகர் தன் கைபெட்டியிலிருந்த குறிப்பேட்டை எடுத்து தான் குறித்து வைத்திருந்தவற்றை மீண்டும் ஒருமுறை வாசிக்க ஆரம்பித்தான். 

வசந்தின் டைப் செய்யும் க்ளிக் க்ளிக் ஓசை நிசப்தமான அந்த அறையில் தெளிவாக கேட்டது....

*********

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஆய்வாளர் பெருமாள் மதிய உணவிற்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போட்டால் என்ன என்ற நினைப்போடு வாஷ் பேசினில் கைகளை கழுவியவாறே தன் மனைவியை பார்த்தார்.

'இங்க பார்... நா ஒரு அரை மணி நேரம் படுக்கப் போறேன்... என் செல்ஃபோன் அடிச்சாலும் கண்டுக்காத மாதிரி இருந்துரு.... நா எழுந்ததுக்கப்புறம் பாத்துக்கறேன்.... சரியா?'

'சரிங்க' என்று அவருடைய மனைவி தலையை அசைத்தார். 'இப்படித்தான் சொல்வீங்க.. அப்புறம் எனக்கு முன்னாடி எடுக்க ஓடி வருவீங்க... அதான ஒங்க பொழப்பு?'

'சரி, சரி.. சலிச்சிக்காத....' என்றவாறு அவர் தன் படுக்கையறையை நோக்கி நடக்கவும் அவருடைய செல்ஃபோன் ஹாலில் அடிக்கவும் சரியாக இருந்தது. எடுப்பதா வேண்டாமா என்று யோசித்தவாறு திரும்பி தன் மனைவியை திரும்பி பார்த்தார். அவர் சிரித்தவாறே 'என்ன பாக்கறீங்க? நா சொல்லி வாய் மூடல.. அடிக்குது.... பேசாம போய் படுங்க..'என்றார்.

பெருமாள் விருப்பமில்லாமல் ஹாலுக்குள் நுழைந்து செல்ஃபோன் திரையில் தெரிந்த எண்ணைப் பார்த்தார். 'இந்தாளுக்கு வேற வேலையில்லைய்யா...' என்று முனகியவாறே எடுத்தார். 'சொல்லுங்க சார்.'

எதிர்முனையில் 'என்ன சார்... பகல் தூக்கத்த கெடுத்துட்டனா?' என்றது பி.பி. வேணுவின் குரல்.

அதான் கெடுத்திட்டியே அப்புறம் என்ன கேள்வி என்று நினைத்தார் பெருமாள். 'சொல்லுங்க சார்...'

'என்னாச்சி சார், அந்த விட்ன்ஸ் ரெண்டு பேர் கிட்டயும் பேசினீங்களா?'

'மாதவி மர்டர் கேஸ்தான சார்?' என்றார் பெருமாள் வேண்டுமென்றே.

தொடரும்..13 comments:

வே.நடனசபாபதி said...

// கோபால் டிசர்வஸ் டு பி பனிஷ்ட்... //
வாழ்க்கையே விசித்திரமானது தான். தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த ஒருவன் அவனைப் போன்ற இன்னொருவன் தண்டனை பெறுவது சரி என்கிறான். இதைத்தான் ‘சாத்தம் வேதம் ஒதுகிறது.’ என்பதோ?

காத்திருக்கிறேன் பி‌பி ஆய்வாளர் பெருமாளிடம் என்ன சொன்னார் என அறிய.

இராஜராஜேஸ்வரி said...

'ஓவர் எக்சைட்மென்ட்டும் டேஞ்சர்றா.... கோவம் மாதிரியேதான் இதுவும். ரேஷனலா திங்க் பண்ண விடாது.

அதிகப்படியான எதுவுமே
ஆபத்துதான் ..!

கவியாழி கண்ணதாசன் said...

கதையைப் போலவே சட்ட அறிவை வளர்க்கும் உங்கள் பாணி பாராட்டத்தக்கது

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
// கோபால் டிசர்வஸ் டு பி பனிஷ்ட்... //
வாழ்க்கையே விசித்திரமானது தான். தாலி கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த ஒருவன் அவனைப் போன்ற இன்னொருவன் தண்டனை பெறுவது சரி என்கிறான். இதைத்தான் ‘சாத்தம் வேதம் ஒதுகிறது.’ என்பதோ?//

குறையில்லாதவன் மட்டுமே பிறரை குறை சொல்லலாம் என்றால் நம்மில் யாராலுமே பிறரை குறை சொல்ல முடியாதே? ராஜசேகரின் பார்வையில் கோபால் தன்னை விட குற்றவாளியாக தெரிகிறதோ என்னவோ?

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

PM
இராஜராஜேஸ்வரி said...
'ஓவர் எக்சைட்மென்ட்டும் டேஞ்சர்றா.... கோவம் மாதிரியேதான் இதுவும். ரேஷனலா திங்க் பண்ண விடாது.

அதிகப்படியான எதுவுமே
ஆபத்துதான் ..!//

சரியா சொன்னீங்க. நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


கவியாழி கண்ணதாசன் said...
கதையைப் போலவே சட்ட அறிவை வளர்க்கும் உங்கள் பாணி பாராட்டத்தக்கது//

அங்க இங்க படிச்சத ஷேர் பண்ணிக்கணும்னு ஆசை. அதையே ஒரு கற்பனைக் கதை மூலமா சொன்னா ஈசியா எல்லாரையும் போய் சேருமேன்னுதான் இந்த தொடரையே ஆரம்பிச்சேன்..

இதை கவனித்து கருத்துரையிட்டதுக்கு நன்றி கவியாழி.

Sasi Kala said...

ஆமா சார்... நா நேர்ல போயி பாத்து அத போலீசுக்கு தெரிஞ்சிதுன்னா வேற வெனையே வேணாம். அது அந்த லேடியத்தான் அஃபெக்ட் பண்ணும்.... அவங்கக் கிட்ட பேசட்டுமான்னு கேட்டதே ஒங்கள திருப்திபடுத்தத்தான்..

மற்றவர்கள் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு வார்த்தைகளிலாவது சமாதானம் செய்வது சிறப்புங்க.

G.M Balasubramaniam said...


Is the story galloping towards the end? தொடர்கிறேன்

T.N.MURALIDHARAN said...

தொடர்ந்து படிக்காத ஐந்து பகுதிகளை படித்து முடித்து விட்டேன். தொய்வின்றி
நகர்ந்து கொண்டிருக்கிறது. கதை
கோர்ட்டில் நடைபெறும் வாதங்களை அறிய ஆவலாக உள்ளேன்.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...

மற்றவர்கள் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு வார்த்தைகளிலாவது சமாதானம் செய்வது சிறப்புங்க.//

இது ஒரு கற்பனைக் கதையென்றாலும் நாளடைவில் இதில் வரும் பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்தித்து உரையாடும் நபர்களாகவே மாறிவிட்டனர். ஆகவேதான் இப்படியெல்லாம் உணர்வுபூர்வமாக பேசுகிறார்கள்.

இப்படியான சிறு விஷயங்களையும் கூட படித்து கருத்துரை இடுகிற உங்களைப் போன்ற நண்பர்களுக்காகத்தான் இந்த வசனங்கள்.

உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

Is the story galloping towards the end?//

Yes it has to.

Thanks for coming and your comments.

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
தொடர்ந்து படிக்காத ஐந்து பகுதிகளை படித்து முடித்து விட்டேன். தொய்வின்றி
நகர்ந்து கொண்டிருக்கிறது. கதை
கோர்ட்டில் நடைபெறும் வாதங்களை அறிய ஆவலாக உள்ளேன்.//

என்னால் முடிந்த வரை சுவையாக தருகிறேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
தொடர்ந்து படிக்காத ஐந்து பகுதிகளை படித்து முடித்து விட்டேன். தொய்வின்றி
நகர்ந்து கொண்டிருக்கிறது. கதை
கோர்ட்டில் நடைபெறும் வாதங்களை அறிய ஆவலாக உள்ளேன்.//

என்னால் முடிந்த வரை சுவையாக தருகிறேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.