04 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 37

முன்கதை

'கரெக்ட் பாஸ்...'என்று ஒப்புக்கொண்டான் வசந்த். 'மேல சொல்லுங்க'

'அவர பாத்துட்டு வந்த அன்னைக்கே.... அதாவது முந்தா நேத்து ராமராஜனையும் பாத்து பேசிறலாம்னுட்டு அவருக்கு ஃபோன் பண்ணேன்..'

'அவரோட ஆஃபீசுக்கு போனீங்களா? பார்க்கிங்குக்கே இடம் இருந்துருக்காதே... சரியான டொக்கு பாஸ் அந்த ரோடு... டூவீலர் பார்க்கிங்குக்கே ரொம்ப டைட்டாருக்கும்...'

'இல்லடா... நா அங்க போவலை...'

'பின்னே? வேற எங்க மீட் பண்ணீங்க?'

ராஜசேகர் முறைத்தான். 'டேய்... குறுக்க குறுக்க கேக்காம என்னெ முழுசா சொல்ல விடறியா?'

'சாரி பாஸ்.' என்று இரு கைகளையும் உயர்த்தி சரன்டரானான் வசந்த்... 'No more questions... my lord'

ராஜசேகரும் சிரித்துவிட்டு தொடர்ந்தான். 'அவருக்கு ஃபோன் பண்ணி வரட்டுமான்னு கேட்டதுக்கு இல்ல சார் இங்க போலீஸ் வாட்ச் போட்ருக்கா மாதிரி இருக்கு... நீங்க இங்க வாராதீங்கன்னார்.'

'என்னது, போலீஸ் வாட்சா? எதுக்காம்?'

ராஜசேகர் மீண்டும் அவனைப் பார்த்து முறைத்தான். 'டேய்... இப்பத்தான சொன்னேன்?'

'சாரி பாஸ்... பழக்க தோஷம்... நீங்க சொல்லுங்க.'

'அப்புறம் ராமராஜனே நீங்க பனகல் பார்க்ல வெய்ட் பண்ணுங்க நா வந்திடறேன்னு சொல்லிட்டு சி.ஐ.டி படத்துல வருமே அதுமாதிரி என்னெ யாரோ ஃபாலோ பண்ணா மாதிரி இருந்துது சார்னு சொல்லிக்கிட்டு கால் மணி நேரத்துல வரேன்னுட்டு... முக்கா மணி நேரம் போல என்னெ காக்க வச்சிட்டு வந்தார்....' என்ற ராஜசேகர் தன் மேசை மீது இருந்த பட்டியல்களை எடுத்து அவனிடம் நீட்டினான். 'இந்த  லிஸ்ட்ங்கள்ல இருக்கறதுதான் கோபால் வீட்ல/ஃப்ளாட்டுலருந்து போலீஸ் சீஸ் பண்ணதாம்... இத சாவகாசமா பாத்து நமக்கு பாதகமா எதுவாச்சும் இருக்கான்னு நோட்பண்ணி வை.... இந்தா...'

வசந்த் அவற்றை வாங்கி ஆராயத் துவங்கினான்.

'டேய்... இப்ப பாக்காத... நா சொல்றத மட்டும் கேளு... அத அப்புறமா பாரு...' என்றான் ராஜசேகர்.

'ஓக்கே பாஸ்..' என்று அந்த பட்டியல்களை தன்னுடைய குறிப்பேட்டின் கடைசியில் சொருகி வைத்துவிட்டு ராஜசேகரை பார்த்தான். 

'அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ கோபாலோட கார்லருந்து எடுத்த மாதவி வீட்டோட டாக்குமென்ட பத்தி கேட்டேன்... அவர் அன்னைக்கி ஆட்டோவுலதான் போனாரு அப்புறம் எப்படி டாக்குமென்ட் கார்லருந்து போலீஸ் எடுத்தாங்கன்னு..'

'கரெக்ட் பாஸ்... அன்னைக்கி அவர் ஆட்டோவுல போனதாத்தான் எங்கிட்டயும் ராமராஜன் சொன்னதா ஞாபகம்.'

'ஆமா அதுதான் நடந்துருக்கு.... ஆனா ராமராஜன் அதுக்கு சொன்ன காரணம் என்னன்னா கோபால் அன்னைக்கி திரும்பி வந்தப்போ எங்க ஆஃபீஸ் பூட்டியிருந்துருக்கும்.... வீட்டுக்கு எதுக்கு எடுத்துட்டு போவணும்னுட்டு சார் கார திறந்து வச்சிட்டு போயிருப்பார்னு சொன்னார்... ஆனா அது இல்ல உண்மையான காரணம்னு நா நினைக்கேன்....'

வசந்த் குழப்பத்துடன் பார்த்தான். ஆனால் கேள்வி கேட்டால் ராஜசேகர் என்ன சொல்வாரோ என்ற நினைப்பில் நுனிநாக்கு வரை வந்த கேள்வியை சிரமப்பட்டு கேட்க முடியாமல் அமர்ந்திருந்தான். 

அவனுடைய அவஸ்தையை புரிந்துக்கொண்டவன்போல் ராஜசேகர் சிரித்தான். 'கேள்வி கேக்காம இருக்க முடியல இல்ல?'

வசந்த் சிரித்தான். 'ஆமா பாஸ்....'

'சொல்றேன்... இது என் மனசுல பட்டது.... சரியான்னு தெரியல.... கேஸ் போற போக்க வச்சித்தான் இத டிசைட் பணணணும்.... எனக்கென்னமோ கோபால் வேணும்னுதான் டாக்குமென்ட கார் டேஷ் போர்ட்ல வச்சிருந்தார்னு தோனுது...'

வசந்த் பள்ளி மாணவனைப் போல் தன் விரலை உயர்த்தினான் நான் சொல்லட்டுமா என்பதுபோல்...

'சரி சொல்லு.... என்னதான் சொல்றேன்னு பாக்கலாம்..'

'கோபால் அன்னைக்கி ஆட்டோவுல போனது போலீசுக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சிருப்பார். சரிதானே பாஸ்..?'

ராஜசேகர் ஆமாம் என்று தலையை அசைத்தான். 'ஏன்...? அதையும் சொல்லேன்.'

வசந்த் பதிலளிக்காமல் கண்களை மூடி சிறிது நேரம் யோசித்தான். தலைக்கு மேல் சுற்றுக்கொண்டிருந்த மின்விசிறி சுழலும் ஓசையைத் தவிர அந்த அறையை ஒரு அலாதியான மவுனம் ஆக்கிரமித்துக்கொண்டது.

'நாம இதுவரைக்கும் நினைச்சிக்கிட்டிருக்கற மாதிரியோ, இல்ல அந்த பக்கத்து வீட்டு லேடி சொல்றா மாதிரியோ கோபால் அந்த வீட்டு கதவுக்கு முன்னால மட்டும் நிக்கலை... வீட்டுக்குள்ளயும் போய்ட்டு வந்துருக்கார்.' என்றான் வசந்த் 'ஆனா அது அந்த லேடி அவர் வீட்டுக்கு முன்னால நின்னத பாக்கணுங்கறதுக்காக அந்த சமயம் பாத்து வெளியிலருந்து வந்த பக்கத்து வீட்டு லேடிக்கிட்ட வேணும்னே வம்புக்கு போயிருக்கார். சரிதானே பாஸ்?'

ராஜசேகர் தன்னையுமறியாமல் 'சபாஷ்டா சிஷ்யா!' என்றான் உரக்க.

வசந்தும் அவனுடைய சிரிப்பில் கலந்துக்கொண்டான். 'தாங்ஸ் பாஸ்..... ஆனா அத்தோட சேர்ந்து நா நினைக்கறதும் சரியா பாஸ்?'

'என்னது?'

'கோபால்தான் இந்த மர்டர செஞ்சதுன்னு.........'

ராஜசேகர் ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான். 'அப்படித்தான்டா நானும் நினைக்கேன்.'

'இருக்கட்டுமே.... அதனால நமக்கென்ன?'

'அதுவும் சரிதான்... ஆனா நம்மகிட்டயே ஒத்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கற மனுஷன எப்படிறா முழு மனசோட டிஃபென்ட் பண்றது?'

'கஷ்டம்தான் பாஸ்.... ஆனா அதப்பத்தி நாம கவலைப்படறதுல எந்த யூசும் இல்லன்னுதான் நா நினைக்கேன் பாஸ்...'

'அதுவும் சரிதான்....'

'ஆனா இதுல இன்னொரு பாய்ன்டும் இருக்கு பாஸ்.'

'என்ன?'

'கோபால கூட்டிக்கிட்டு போன ஆட்டோ டிரைவர போலீஸ் தேடிக் கண்டுபுடிச்சிட்டா?'

ராஜசேகர் முறைத்தான். 'டேய் நா இதுவரைக்கும் சொன்னத நீ சரியா நோட் பண்ணிக்கலைன்னு தெரியுது.'

வசந்த் ராஜசேகரின் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்து தலையை குணிந்துக்கொண்டான்....

'சாரி பாஸ்... அத மறைக்கறதுக்குத்தான் கோபால் அன்னைக்கி மாதவி வீட்டுக்கு கொண்டு போன டாக்குமென்ட கார் டேஷ் போர்ட்ல வச்சி போலீஸ டைவர்ட் பண்ணிருக்கார்.... அதான பாஸ்?'

'ஆமா... இது இந்த கேஸ்ல நமக்கு சாதகமான வேலிட் பாய்ன்ட்.... அதனாலதான் உன்கிட்ட இவ்வளவு டீட்டெய்லா சொன்னேன்.... ஆனா கோபால மட்டும் நாம சாட்சி கூண்டுல எற வுட்டோம்....க்ராஸ்ல அவர் வாயிலருந்தே இந்த டாக்டிக்ஸ் வெளியில வந்தாலும் வந்துரும்..... அதனால.....'

'அவர் என்ன சொன்னாலும் அவர விட்னஸ் ஸ்டான்டுல ஏற வுடக்கூடாது... அதான பாஸ்..?'

'அதே தான்... அதுலதான் நம்ம சாமார்த்தியமே இருக்கு... ஆனா வேணு அவர அங்க கொண்டு வர்றதுக்கு எவ்வளவு கீழ வேணும்னாலும் இறங்குவார்ங்கறதும் நிச்சயம்....'

'கரெக்ட் பாஸ்.'

'அப்புறம் இன்னொரு விஷயம்...'

'என்ன பாஸ்?'

'நம்ம சைடுலருந்து சாட்சிங்கன்னு யாரும் வேணாம்னு நினைக்கேன்.....'

'ராமராஜன கூப்ட்டா?'

'டேய், மறுபடியும் யோசிக்காம பேசற! கோபால் ஆட்டோவுல போனார்ங்கறதுக்கு அவர்  ஒருத்தர்தான் இப்பத்தைக்கி   சாட்சி.... வேணு கிராஸ்ல மடக்கிட்டா?'

'கரெக்ட் பாஸ்.... நா அத யோசிக்கல.'

'யோசிடா...' என்றான் ராஜசேகர் சற்று எரிச்சலுடன். 'இதையெல்லாம் நா உங்கிட்ட சொல்றதே ஒரு ஆளுக்கு ரெண்டு ஆளா யோசிக்கலாமேன்னுதான்.....'

'சாரி பாஸ்.... கோர்ட்ல ஆஜராயி ரொம்ப நாளாச்சா... அதான்.... மூளை துருப்பிடிச்சிருச்சி....'

ராஜசேகர் சிரித்தான். 'அதுக்குத்தான் எங்கூடவே நில்றா... பிரைவேட் இன்வெஸ்ட்டிகேஷன்லாம் வேணாம்னு அப்பவே சொன்னேன்... நீதான் ஷார்ட் கட்ல காசு பாக்கலாம்னு போனே!'

'என்ன பண்றது பாஸ்? கல்யாண வயசுல தங்கச்சி நிக்கறப்போ எனக்கு அதத்தவிர வேறு வழி தெரியலையே?'

வசந்தின் குரலில் தொனித்த உண்மையான கவலை ராஜசேகரை நெகிழ செய்தது. 'சாரிடா ... யோசிக்காம பேசிட்டேன்.'

'பரவால்லை பாஸ்... நீங்கதான? It's OK.'

'சரி.... இதுதான் நீ இல்லாதப்போ நடந்த விஷயங்கள்.' என்று பேச்சின் போக்கை மாற்றினான் ராஜசேகர். 'நாம இதுவரைக்கும் செஞ்ச இன்வெஸ்ட்டிக்கேஷன வச்சி ஒரு சம்மரியும் அத பேஸ் (base) பண்ணி நா லிஸ்ட் பண்ண கேள்விங்களையும் ப்ரின்ட் போட்டு வச்சிருக்கேன்... ரூமுக்கு எடுத்துக்கிட்டு போயி படி.... முடிஞ்சா நாளைக்கி காலைல மட்டுமாவது வா... டிஸ்கஸ் பண்ணி மண்டே கோர்ட்ல என்னல்லாம் பண்ணணும்னு ஃபைனலைஸ் பண்லாம், என்ன சொல்றே?'

'சரி பாஸ்.' என்ற வசந்த் ராஜசேகர் அளித்த ஆவணங்களை பெற்று தன் லேப்டாப் பையில் வைத்துக்கொண்டான். 'அப்புறம்? வேற ஏதாச்சும் இருக்கா?'

'இல்லடா.. இப்பத்தைக்கி அவ்வளவுதான்.. இன்னைக்கி சனிக்கிழமையாச்சே... நைட் டின்னருக்கு சாதாரணமா நாங்க வெளியில போறது வழக்கம். இல்லன்னா காஞ்சனா கோச்சுக்குவா... இப்பவே கிளம்புனாத்தான் சரியாருக்கும்...'

வசந்த் புன்னகையுடன் 'உண்மைதான் பாஸ்... வீக்லி ஒன்ஸ் இப்படி அவுட்டிங் போறது நல்லதுதான்..' என்றவாறு எழுந்து நின்றான். 'அப்போ நா கிளம்பறேன்.' 

வசந்த் வெளியேறிய பின்பும் ராஜசேகர் தனியே அமர்ந்து தான் தயாரித்து வைத்திருந்த வழக்கின் சாராம்சத்தையும் அதை அடுத்து அவன் பட்டியலிட்டிருந்த கேள்விகளையும் மீண்டும் ஒருமுறை படித்து பார்த்தான். இப்போதைக்கி இது போதும் என்றுதான் தோன்றியது. ஆனால் வழக்கு ட்ரையலுக்கு வரும்போது கோபால் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதைப் பொருத்தே மேற்கொண்டு நடப்பவைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து மேசை மீது பரப்பி வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆவணங்களையும் சேர்த்து கோப்பில் வைத்து இரவில் மீண்டும் ஒருமுறை வாசிக்கலாம் என்ற எண்ணத்துடன் தன் கைப்பெட்டியில் வைத்துக்கொண்டு அலுவலகத்தை பூட்டிக்கொண்டு புறப்பட்டான்.

******

'சார் ஒரு நிமிஷம் இங்க வந்து போக முடியுமா?' 

தன் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த ராஜசேகர் தன் வாகனத்தை தனக்கு குறிக்கப்பட்ட இடத்தில் பார்க் செய்துவிட்டு இறங்கி குரல் வந்த திசையை நோக்கி பார்த்தான். சீனிவாசன் தன்னுடைய பால்கணியிலிருந்து அழைப்பது தெரிந்தது. தன்னிச்சையாக மணியை பார்த்தான். மாலை ஆறு மணி என்றது அவனுடைய கைக்கடிகாரம். இப்பவே கிளம்புனாத்தான பத்து மணிக்குள்ளயாவது திரும்ப முடியும்? இவர எப்படி அவாய்ட் பண்றது?

'ஏதாச்சும் அர்ஜன்டா சார்?' என்றான்.

அவன் கேட்ட தோரணை சீனிவாசனை சற்று தயங்க வைத்தது. 'ஒரு அஞ்சி நிமிஷம் வந்துட்டுப் போங்க சார், ப்ளீஸ்.'

அவர் குரலில் இருந்த கெஞ்சல் அவனை என்னவோ செய்ய லேசான குழப்பத்துடன் முதல் மாடியிலிருந்த அவருடைய குடியிருப்புக்கு சென்றான். 

சீனிவாசன் சோபா நுனியில் அமர்ந்திருந்த விதம் அவனை சங்கடப்படுத்தியது. 'என்ன சார்... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? எதுவாருந்தாலும் சொல்லுங்க..' என்றான் அவர் அருகில் அமர்ந்து.

'அந்த பொண்ணு தங்கியிருந்த வீட்டுக்கு அடுத்த வீட்லருந்து ஃபோன் வந்துது சார்..'

'அவங்களா? என்னவாம்?'தொடரும்...10 comments:

வே.நடனசபாபதி said...

அந்த தொலைபேசித் தகவல் என்ன என்று அறிய ராஜசேகர் போல நானும் காத்திருக்கிறேன்!

இராஜராஜேஸ்வரி said...

'அந்த பொண்ணு தங்கியிருந்த வீட்டுக்கு அடுத்த வீட்லருந்து ஃபோன் வந்துது சார்..'

சரிதான்.. தங்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்ல அழைத்து மிரட்டினார்களா..!

தருமி said...

இந்த மாதிரி பிரைவேட் இன்வெஸ்ட்டிகேஷன்லாம் வக்கீல்கள் செய்றாங்களா?

சென்னை பித்தன் said...

சஸ்பென்ஸில் விட்டு விட்டீர்களே!

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
அந்த தொலைபேசித் தகவல் என்ன என்று அறிய ராஜசேகர் போல நானும் காத்திருக்கிறேன்//

இன்றைக்கு தெரிந்துவிடுமே!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

PM
இராஜராஜேஸ்வரி said...
'அந்த பொண்ணு தங்கியிருந்த வீட்டுக்கு அடுத்த வீட்லருந்து ஃபோன் வந்துது சார்..'

சரிதான்.. தங்களுக்குச் சாதகமாக சாட்சி சொல்ல அழைத்து மிரட்டினார்களா..!//

அப்படியும் இருக்குமோ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...தருமி said...
இந்த மாதிரி பிரைவேட் இன்வெஸ்ட்டிகேஷன்லாம் வக்கீல்கள் செய்றாங்களா?//

முன்பு இந்த ட்ரென்ட் மேலை நாடுகளில்தான் இருந்தது. ஆனால் இப்போது இங்கும் ரிசோர்ஸ் உள்ள குற்றவாளிகளுக்கு ஆஜராகும் ஹை ப்ரொஃபைல் வக்கீல்களில் பலரும் இதை செய்கின்றனராம்!

டிபிஆர்.ஜோசப் said...


சென்னை பித்தன் said...
சஸ்பென்ஸில் விட்டு விட்டீர்களே!//

ரெண்டு மூனு பதிவுக்கு ஒருதரம் இப்படி சஸ்பென்ஸ் வச்சாத்தான் அது க்ரைம் டொடர் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Sasi Kala said...

சபாஷ் வாங்கி வசந்த் போல நானும் மகிழ்ந்தேன்..

ஆமா அவங்க ஏன் போன் செய்தாங்க ? ஆவலும் அவசரமும் ...

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
சபாஷ் வாங்கி வசந்த் போல நானும் மகிழ்ந்தேன்..//

தங்களுடைய உதவியாளர்களை பாராட்டும் குணம் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் வந்துவிடுவதில்லை. கதையிலாவது இருக்கட்டுமே என்றுதான் அந்த வசனத்தை எழுதினேன். அதை குறிப்பிட்டு எழுதியதில் எனக்கும் மகிழ்ச்சியே. நன்றி.