02 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 35


முந்தைய தினம் இரவு முழுவதும் உறக்கம் வராமல் படுக்கையில் உழன்றுக்கொண்டிருந்த ராஜசேகர் அடுத்த நாள் காலை எழுந்தபோது கண்கள் இரண்டும் திறக்க முடியாமல் கணத்தன....

அன்று சனிக்கிழமை என்பதால் அலுவலகம் செல்ல வேண்டாம் என்ற நினைப்புடன் சற்று நேரம் கழித்தே எழுந்திருந்தான். சாதாரணமாக வார இறுதி நாட்களில்  'வாக்' செல்ல மாட்டான்... 'வாரத்துல அஞ்சி நாள் நாப்பது நிமிஷம் ப்ரிஸ்க்கா நடந்தா போறுங்க.... you can keep your blood sugar level under control...'என்று மருத்துவர்கள் கூறுவதை தவறாமல் கடைபிடிப்பவர்களுள் அவனும் ஒருவன். 

யாராயிருந்தாலும் அதிகாலையில் எழுந்து நடப்பது என்றாலே சோம்பல்தான்... தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே பலரும் இதை விருப்பமில்லாவிட்டாலும் கடனே என்று செய்துக்கொண்டிருக்கின்றனர் என்று தன்னுடன் பார்க்கில் வலம் வருபவர்களுடைய முகபாவனையைப் பார்த்து அறிந்துவைத்திருந்தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த தண்டனை இல்லை என்பதில் அவனுக்கு நிம்மதி.... 

ஆனால் எதிர்வரும் வாரம் தன்னுடைய வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப்போகிறது என்கிற நினைப்பே அவனை நிம்மதியாக உறங்கவிடாமல் தடுத்தது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கில் அவனும் வசந்தும் எடுத்திருந்த முயற்சிகளை நீதிமன்றத்தில் பரீட்சித்து பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்தான்.

'ராஜசேகர். இன்னைக்குள்ள வசந்த் வந்துறணும்' என்று நினைத்தவன் செல்ஃபோனை எடுத்து அவனை அழைத்தான். 

ரிங் போய்க்கொண்டே இருந்தது..... இறுதியில் consumer is not responding என்று வரும் வரை காத்திருந்துவிட்டு செல்ஃபோனை அணைத்துவிட்டு எழுந்து குளித்து முடித்தான்.... இன்று மதியத்திற்குள்ளாவது அவன் திரும்பி வந்துவிட்டால் திங்கள் கிழமை என்ன செய்ய வேண்டும் என்பதை பேசி முடிவு செய்யலாம் என்று நினைத்தவாறே தன்னுடைய மாடி அறையிலிருந்து வெளியேறி படியிறங்கி ஹாலுக்குள் நுழைந்தான். 

சனிக்கிழமை என்பதால் வார நாட்களில்  அவனுடைய ஒரே வாரிசு காஞ்சனா பள்ளிக்கு செல்லும் வரை காணப்படும் பரபரப்பு ஏதும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது. 

'காஞ்ச் இன்னும் எழுந்துக்கலையா?' என்றவாறு சமையலறைக்குள் நுழைந்தான். ஸ்டவ்வில் ஏதோ கொதித்துக்கொண்டிருக்க அவனுடைய மனைவி கோகிலா கிச்சன் மேடையில் இன்னொரு ஸ்டவ்வில் எதையோ கிளறிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அவனை திரும்பி பார்த்தாள். 'இல்லீங்க......கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு விட்டுட்டேன்... நீங்க இன்னைக்கி ஆஃபீசுக்கு போறீங்களா?'

'போவணும்.... வசந்த் வேற ஊர்ல இல்லை... அதான் அவன் ஃபோன் வந்ததும் போலாம்னுட்டு....' என்ற ராஜசேகர், 'இன்னைக்கி என்ன டிஃபன்?' என்றான்..

'இன்னும் பண்ணலை.... என்ன பண்ணட்டும்?'

'அடுப்புல எதுவோ கொதிக்கிதே?' என்றான் முகர்ந்தவாறே.

'அது பாப்பாவுக்கு.. சக்கரை பொங்கல்... உங்களுக்கு ஆவாதே' என்றாள் கோகிலா சிரித்தவாறு..

'என்னைக்காவது ஒருநா தான? பரவால்லை குடு...'

'அப்போ சுகர் எகிறிட்டுதுன்னு என்ன சொல்லக் கூடாது..'

'சொல்ல மாட்டேன்...' என்று ராஜசேகர் பதிலளிக்க ஹாலில் அவன் விட்டுவந்த செல்ஃபோன் அடிப்பது கேக்கவே  'கொஞ்சூண்டு எடுத்து வை....தோ வரேன்... வசந்தாத்தான் இருக்கும்..' என்றவாறு ஹாலுக்கு விரைந்தான்.  

அவன் எடுத்தவுடனேயே எதிர்முனையிலிருந்து வசந்தின் குரல் காதை குடைந்தது.

'டேய் எதுக்கு கத்தறே... காதே செவிடாயிரும் போலருக்கே?'

'இல்ல பாஸ்... ப்ஸ் ஸ்டான்டுலருந்து பேசறேன்... இங்க ஒரே சத்தமாருந்துது... அதான் கொஞ்சம்....'

'சரி பரவால்லை... இப்பத்தான் வந்துக்கிட்டிருக்கியா, எங்கருக்கே...?'

'கோயம்பேடு வந்துட்டேன் பாஸ்.... ரூமுக்கு போயி குளிச்சிட்டு வந்துடறேன்.. மேக்சிமம் ஒன்னவர்...'

'சரி.. ஊருக்கு போனியே என்னாச்சி?'

'எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது பாஸ்.... தை மாசம் நல்ல நாள் பாத்துட்டு டேட் சொல்றோம்னு மாப்பிள்ளை வீட்ல  சொல்லிட்டு போயிருக்காங்க....'

'குட்.... வீட்ல அம்மா சவுக்கியந்தான?'

'ஆமா பாஸ்... எல்லாரும் நல்லாருக்காங்க.. என்னெ தவிர' என்று சிரித்தான் வசந்த்...'ஏன் உனக்கென்ன?'

'சும்மா தமாஷுக்கு சொன்னேன் பாஸ்....சரி ஒன்னவர்ல ஆஃபீஸ்க்கு வந்துடறேன்...சரியா?'

'வேணும்னா ரெஸ்ட் எடுத்துட்டு வாயேன்... கொஞ்சம் லேட்டானாலும் பரவால்லை...'

'இல்ல பாஸ்.... ரொம்ப நாளைக்கப்புறம் கோர்ட்ல இருக்கப் போறமேங்கற ஆங்சைட்டி... நா இல்லாத நேரத்துல ஏதாச்சும் புதுசா தெரிஞ்சிதா பாஸ்?'

'நிறைய இருக்கு.... நீ வா பேசிக்கலாம். வச்சிடறேன்.' என்று அவனை மறுபேச்சு பேசவிடாமல் துண்டித்துவிட்டு ஹாலின் மறுகோடியிலிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் கோகிலா கொண்டு வைத்த சக்கரை பொங்கலை ருசி பார்த்துவிட்டு கிளம்பினான்.

*****

துணை ஆய்வாளர் தன்ராஜ் காவல்நிலைய வளாகத்திலிருந்து வெளியேறியதை தன் அறையிலிருந்தவாறே கவனித்த ஆய்வாளர் பெருமாள் தன் மேசை மீதிருந்த தொலைபேசியை எடுத்து டயல் செய்தார். எதிர்முனையில் பி.பி. எடுத்ததும், 

'சார் நா இன்ஸ்பெக்டர் பெருமாள்.' என்றார். 'நேத்து தன்ராஜ் உங்கள வந்து பார்த்தார் போலருக்கு!'

'ஏன், ஏதாச்சும் சொன்னாரா?'

'இல்ல சார்.... சார்ஜ் ஷீட்ல நிறைய கரெக்‌ஷன் இருந்தத பாத்தேன்.... அதான்....'

'அதுக்குள்ள கரெக்ட் பண்ணி குடுத்துட்டாரா? பரவால்லையே? அவர் இங்கருந்து போன விதத்த பாத்தப்போ ஏதாச்சும் வில்லங்கம் பண்ணுவார்னு நினைச்சேன்....' பிபியின் சிரிப்பு பெருமாளின் காதை துளைத்தது.  

'ஏன் சார்... அங்க ஏதாச்சும் வில்லங்கம் பண்ணாரா?'

'ஆமா சார்...லேசுல ஒத்துக்க மாட்டேன்னார்....அதுக்கப்புறம் ரெண்டு மிரட்டு மிரட்டி....நா சொன்ன மாதிரி கரெக்ட் பண்ணாத்தான் கோர்ட்டுக்கு போவேன்னேன்... பதில் பேசாம எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போனார்.... ஆனா காலாங்கார்த்தாலெயே ஒக்காந்து கரெக்ட் பண்ணி அனுப்பிருவார்னு நா நினைச்சிப் பாக்கலை...'

'அதுக்கு காரணம் இருக்கு சார்...'

'என்ன சொல்றீங்க?'

'நம்ம எஸ்.பி இருக்காருல்ல?'

'யாரு, சந்தானமா?'

'ஆமா சார். அவரும் இவரும் ஒரே ஊர்க்காரங்க.. அவர்தான் இவர் சூரப்புலி... இதுவரைக்கும் இவர் எடுத்த எல்லா கேஸ்லயுமே கன்விக்‌ஷன் வாங்கியிருக்கார்னு சொல்லி சிட்டிக்கு கொண்டு வந்தார்.... உங்க ஆஃபீஸ்லருந்து நேரா அவர பாக்க போயிருக்கார் போலருக்கு..... ஆனா அவர் என்ன சொன்னாரோ தெரியல... இன்னைக்கி காலையில ஸ்டேஷனுக்கு வந்ததும் முதல் வேலையா வேலைய முடிச்சி நம்ம கையெழுத்துக்கு அனுப்பிட்டு வெளியில போய்ட்டார்... நானும் கண்டுக்கல.... இப்பத்தான் கையெழுத்த போட்டு ஒரு பி.சிக்கிட்ட உங்க ஆஃபீசுக்கு குடுத்தனுப்பிச்சேன்....'

எதிர்முனையில் பிபி உடனே பதிலளிக்காமல் அமர்ந்திர்க்க பெருமாள் வேதாளத்த முருங்கை மரத்துல ஏத்திட்டமோ என்கிற கலக்கத்தில் அமர்ந்திருந்தார்....'சார்...' என்றார் தயக்கத்துடன்...

'எஸ்.பிக்கிட்ட போயி கம்ப்ளெய்ன் பண்ற அளவுக்கு அவன் பெரிய ஆளாய்யா?'

அவர் நினைத்ததுபோலவே வேதாளம் முருங்கையில் ஏறித்தான் விட்டது என்று நினைத்த பெருமாள், 'சார் அத பெரிசாக்கிறாதீங்க.. அப்புறம் எஸ்.பி நாந்தான் உங்கக்கிட்ட போட்டுக்குடுத்துட்டேன்னு நினைச்சிக்கப் போறார்... இத இத்தோட விட்ருங்க...' என்றார் பதற்றத்துடன்.

'எப்படிங்க விடறது? நா யாருன்னு அவனுக்கு காட்ட வேணாம்?'  

பி.பி.யின் குரலில் தெறித்த கோபம் ஆய்வாளரை கலக்கமடையச் செய்தது. இவர் கோபத்தில் ஏதாவது செய்யப்போக தேவையில்லாமல் தன் தலையும் சேர்த்து உருளுமே என்று நினைத்தார். 'சார் கோவப்படாதீங்க.. அவனெ நா பாத்துக்கறேன்... கேஸ்ல அவனொட விட்னஸ் முடிஞ்சதும் எஸ்.பி கிட்ட சொல்லி பழையபடி ஊர்பக்கம் மாத்திறலாம்....'

எதிர்முனையிலிருந்து பதில் ஏதும் வராமல் போகவே, 'என்ன சார்.... என்ன சொல்றீங்க?' என்றார் மீண்டும்.

'சரிங்க... நீங்க சொல்றீங்களேன்னு விடறேன்....'

'அப்போ சார்ஜ் ஷீட்ட பாத்துட்டு சொல்றீங்களா சார்? மண்டே கோர்ட்ல ஃபைல் பண்ண வசதியாருக்கும்.'

'சரி பாக்கறேன்.' என்ற வார்த்தைகளுடன் பி.பி. இணைப்பைத் துண்டிக்க அப்பாடா தப்பித்தோம் என்ற நினைப்புடன் ஒலிவாங்கியை வைத்துவிட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினார். இன்னும் பத்து மாசம்.... நாறிப்போன பொழப்பு..... பேரு பெத்த பேருங்கறா மாதிரிதான்..... ஊரே நம்மள பாத்து பயப்படறப்போ நாம இவனுங்களுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு.... போறும்டா சாமி.... 

அடுத்த சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தவருடைய அமைதியை கெடுக்கும் விதமாக அவருடைய மேசை மீதிருந்த தொலைபேசி அலறியது. எடுத்து, 'பெருமாள்' என்றார் வெறுப்புடன்.... 

அடுத்த நொடியே எதிர்முனையில் இருந்த எஸ்.பி சந்தானத்தின் குரலை அடையாளம் கண்டுகொண்டதும், 'குட் மார்னிங் சார்....என்றார் பதற்றத்துடன்.

'எஸ்.ஐ. தன்ராஜ்... ஸ்டேஷன்ல இருக்காரா இல்ல வெளியில......'

அவர் வெளியில் சென்றதைத்தான் பார்த்தேனே தவிர எங்கு சென்றார் எப்போது வருவார் என்பதெல்லாம் தெரியாது சார் என்று எப்படி இவரிடம் சொல்வது? 'இப்பத்தான் ஒரு கேஸ் விஷயமா போறேன்னு சொல்லிட்டு போனார் சார்.. ஏதாச்சும் அர்ஜன்டா சார்?' 

அவருடைய குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்த எஸ்.பி எதிர்முனையில் சிரித்தார். 'அதெல்லாம் இல்ல....உங்கக்கிட்டத்தான் கொஞ்சம் பேசணும்...'

'சொல்லுங்க சார்.'

'நம்ம பிபி.. நேத்து அந்த மாதவி கேஸ்ல அக்யூஸ்ட நேர்ல பாத்ததா சொன்ன விட்னஸ் ரெண்டு பேரையும் கூப்ட்டு கோர்ட்ல என்ன சொல்லணும், எப்படி சொல்லணுங்கறத சரியா சொல்லிக்குடுத்துருங்கன்னு சொன்னாராமே உங்களுக்கு ஏதாவது தெரியுமா?'

அதான் வழக்கமா செய்யிறதுதானே, இதுல என்ன புதுசா பிபி சொல்லியிருக்கப் போறாரு? இவன் போயி என்ன சொல்லி வச்சான்னு தெரியலையே?

'என்ன சைலன்டாய்ட்டீங்க? தன்ராஜ் ஒன்னும் சொல்லலையா?'

'இல்லையே சார்!'

எஸ்.பி. மீண்டும் சிரிக்கும் ஒலி கேட்டது. 'சரி பரவால்லை... நானே சொல்றேன்.... நேத்து பி.பிய மீட் பண்ணப்போ... அந்த ரெண்டு விட்னஸ்களையும் அக்யூஸ்ட் அந்த வீட்டுக்குள்ள போயி வந்தத பாத்ததாவும் சொல்ல வைச்சாத்தான் கேஸ் நிக்கும்னு சொன்னாராம்.....'

'அப்படியா சார்.... நாம எப்பவும் செய்யிறதுதான சார்?'

எஸ்.பி உரக்க சிரித்தார். 'நீங்கதானே... ஆனா தன்ராஜ் இதுவரைக்கிம் அப்படி செஞ்சதில்லையாம்... அதான் உங்கள கூப்ட்டேன்...'

என்ன அக்கிரமம்யா.... அவர் முடியாதுன்னாராம் அதுக்கு இவர் சப்போர்ட்டாம்... இவரும் நேரடியா வந்தவர்தானே? ரேங்க்லருந்து அடிபட்டு மிதிபட்டு மேல வந்துருந்தா இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்..... 'சொல்லுங்க சார்... நா இப்ப என்ன பண்ணணும்?'

'அதான் சொன்னேனேங்க.... பிபி சொன்னா மாதிரி அவங்கள ரெண்டு பேருக்கும் என்ன சொல்லணும்னு சொல்லி குடுத்துருங்க..... அப்புறம் கோர்ட்ல வந்து சொதப்புனா நீங்கதான் பொறுப்பு, சொல்லிட்டேன்...'

அவர் மறுத்துப் பேசுவதற்கு முன் இணைப்பு துண்டிக்கப்பட எனக்கு இது தேவையா என்று பொருமினார் பெருமாள். வேதாளத்துக்கு வாக்கப்பட்டா முருங்கை மரத்துல ஏறித்தான ஆவணும்? அவர் மீதிருந்த கோபத்தை தன் அழைப்பு மணி மீது காட்டினார்.... அடுத்த நொடி ஸ்டேஷன் இருந்த அந்த தெருவுக்கே கேட்கும் அளவுக்கு அலறியது அவருடைய அறையிலிருந்து கிளம்பிய அழைப்பு மணியின் ஒலி....

பதறியடித்து வந்து நின்றவர் மீது எரிந்து விழுந்தார் பெருமாள். 'யோவ், அந்த மாதவி கேஸ்ல ரெண்டு விட்னஸ் இருக்காங்களே, ஒனக்கு தெரியுமில்ல?'

'ஆமா சார்.... அந்த கார்ப்பரேஷன் கார் பார்க்கிங் பையன்... அப்புறம் பக்கத்து வீட்டு அம்மா!'

'ஆமா.... முதல்ல அந்த பையைன புடிச்சி கொண்டா.... ஐயா விசாரிக்கணும்னு சொல்லு... முரண்டுபுடிச்சா ரெண்டு போட்டு கொண்டா. ஓடு.' 

ஐயா நல்லாத்தான இருந்தார்...? எதுக்கு திடீர்னு இம்புட்டு கோவம் என்று நினைத்தவாறு வெளியேறிய ஏட்டு தன்னை கேள்விக் குறியுடன் பார்த்த ரைட்டரை முறைத்தவாறே ஸ்டேஷன் வளாகத்திலிருந்து தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தார்....

தொடரும்..6 comments:

Sasi Kala said...

என்ன டென்ஷன்ல இருந்தாலும் வசந்த் போன காரியம் முடிந்ததா ? என்று கேட்டதோடு விடாமல் அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டதும் சிறப்பாக இருந்தது.

போலீஸை கண்டா மக்கள் ஏன் சாட்சி சொல்ல பயப்படுறாங்க என்பதை நிருபிக்கிறாங்க பாருங்க.. சாட்சிகளை அடித்தாவது அழைத்து வரச்சொல்வது.

டிபிஆர்.ஜோசப் said...


Sasi Kala said...
என்ன டென்ஷன்ல இருந்தாலும் வசந்த் போன காரியம் முடிந்ததா ? என்று கேட்டதோடு விடாமல் அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டதும் சிறப்பாக இருந்தது.//

பாத்திரங்கள உயிருள்ள மனுஷங்களா படிக்கறவங்க பாக்கணும்னுதான் இந்த மாதிரி வசனங்களையும் இடையில சேத்துக்கறது... அதையும் உன்னிப்பா கவனிச்சி கமென்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றிங்க...

போலீஸை கண்டா மக்கள் ஏன் சாட்சி சொல்ல பயப்படுறாங்க என்பதை நிருபிக்கிறாங்க பாருங்க.. சாட்சிகளை அடித்தாவது அழைத்து வரச்சொல்வது..//

கரெக்ட்...அதனாலதான் யாரும் எதையும் பார்த்தாக் கூட சாட்சி சொல்ல வர்றதில்லைன்னு நினைக்கேன்...

வே.நடனசபாபதி said...

காவல் நிலையத்தில் நடப்பதை நேரில் பார்ப்பதுபோல் உணர்வு தங்களது பதிவை படிக்கும்போது. அங்கே என்ன நடக்கும் என்று அனுமானித்திருந்தாலும் இப்படித்தான் நடக்கிறதோ என்று அறியும்போது நீதிக்கு இந்த நாட்டில் இடமில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது. மெனக்கிட்டு அநேக தகவல்களை சேகரித்து எழுதி தொடரை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போகிறீர்கள். வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...


விட்னெஸ் என்ன சொல்லச் சொல்ல வேண்டும் என்று பெருமாளுக்குத் தெரியுமா. ? அவருக்கு இந்த கேஸ் விஷயமெல்லாம் அத்துப்படியா.?

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
காவல் நிலையத்தில் நடப்பதை நேரில் பார்ப்பதுபோல் உணர்வு தங்களது பதிவை படிக்கும்போது. அங்கே என்ன நடக்கும் என்று அனுமானித்திருந்தாலும் இப்படித்தான் நடக்கிறதோ என்று அறியும்போது நீதிக்கு இந்த நாட்டில் இடமில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது. மெனக்கிட்டு அநேக தகவல்களை சேகரித்து எழுதி தொடரை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போகிறீர்கள். வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...

விட்னெஸ் என்ன சொல்லச் சொல்ல வேண்டும் என்று பெருமாளுக்குத் தெரியுமா. ? அவருக்கு இந்த கேஸ் விஷயமெல்லாம் அத்துப்படியா.?//

நல்ல கேள்வி சார்.

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லயும் General Station Diary, Case Diaryனு டைரிங்க இருக்கும். இதுல அந்த ஸ்டேஷன்ல ரிஜிஸ்டர் ஆயிருக்கற எல்லா FIRக்கும் என்ன ஆக்‌ஷன் யார் எடுத்துருக்காங்கன்னு விவரத்த அந்தந்த புகார்கள் விசாரணை பண்ற அதிகாரிங்க எழுதி அத ஸ்டேஷன் பொறுப்பாளரான ஆய்வாளர் (Station House Officer) பார்வைக்கு தினசரி சப்மிட் பண்ணியாவனும். அதாவது ஒரு வங்கிக் கிளையில இருக்கற மேனேஜர் மாதிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர். அவர் அநேகமாக எந்த கேஸ்லயும் நேரடியா ஈடுபட மாட்டார், unless his expertise is required in any serious crime. ஆனாலும் அவரோட ஸ்டேஷன்ல நடக்கற எல்லாத்தையும் அவர் தெரிஞ்சி வச்சிருக்கணும்.... அவர்தான் அதுக்கு பொறுப்பும் கூட. அதனால இந்த கதையில வர்ற இன்ஸ்பெக்டர் பெருமாளுக்கும் மாதவி கேஸ பத்திய எல்லா விவரங்களும் தெரியும்.