01 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 34


கோபாலின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் முக்கியமானதாக அவன் கண்ணில் பட்டது:

1. கோபாலின் வங்கி கணக்கு புத்தகம்.

இது ஒரு முக்கிய எக்சிபிட்டாக இருக்கும். அதிலிருந்துதான் கோபால் மாதவி உட்பட பல பெண்களுக்கு மாதாமாதம் அளித்திருந்த தொகையின் விவரங்கள் போலீஸ் எடுத்திருக்க வாய்ப்புண்டு. இதை சாமர்த்தியமாக கையாள வேண்டும். கோபாலுக்கும் மாதவிக்கும் இடையிலிருந்த உறவின் ஆழம் அல்லது தன்மையை நிருபிக்க இந்த பணப்பட்டுவாடா விவரங்கள் ப்ராசிக்யூஷனுக்கு நிச்சயம் உதவும். ஆகவே இதை மறுத்து வாதிடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. கோபால் வேண்டுமானால் மாதவியுடன் தனக்கு வேறெந்த உறவும் இல்லை என்று வாதிடலாம். அவருடைய போக்கிலேயே சென்று வாதிட்டால் தோல்வி நிச்சயம். 

2. 12ம் தேதியிட்ட 25 லிட்டருக்கான பெட்ரோல் பில். இது எதற்காக? கொலை நடந்த அன்று தயாரிக்கப்பட்ட பில். 

ஒருவேளை கோபால் தன்னுடைய காரில் நிரப்பியதாக இருக்குமோ? மாதவி வீடு அமைந்திருந்த சாலையில் இருந்த HP பெட்ரோல் பங்கில்தான் அவனும் சாதாரணமாக பெட்ரோல் போடுவது வழக்கம். கோபாலும் கொலை நடந்த அன்று அதே பங்கில் பெட்ரோல் நிரப்பியிருப்பார் போலிருக்கிறது. ஆகவே அன்றைய தினம் அவர் மாதவியின் வீடு அமைந்திருந்த சாலை வழியாக பயணித்தார் என்பதை நிருபிக்க மேலும் ஒரு சான்றாக இதை சமர்ப்பிக்கக் கூடும். ஆனால் அதனால் ப்ராசிக்யூஷனால் பெரிதாக எதையும் நிருபிக்க வாய்ப்பில்லை. 

3. மாதவி குடியிருந்த விட்டின் சொத்து பத்திரம். அது கோபாலின் காரிலிருந்து கைப்பற்றப்பட்டது என்று ஏற்கனவே அவருடைய பி.ஏ. ராமராஜன் கூறியது நினைவிலிருந்தது. 

ஆனால் அவர் அன்று ஆட்டோவில் சென்றதாகத்தானே ராமராஜன் கூறினார்? பிறகெப்படி இது கார் டேஷ்போர்டில்.....? அதற்கு ராமராஜன் சொன்ன காரணம் அந்த நேரத்தில் பொருத்தமானதாக தோன்றியிருந்தாலும் ராஜசேகர் அதையே ஒரு சில நொடிகள் மனதுக்குள் அசைபோட்டான். இறுதியில் அவனையுமறியாமல் அவனுடைய உதடுகள் புன்னகையால் விரிந்தன. கோபால் பயங்கர கேடியா இருப்பார் போலருக்கே என்று நினைத்தான். அன்று, தான் மாதவியின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று வந்ததை போலீஸ் கண்டுபிடித்துவிடக் கூடாதென்றுதான் அவளுடைய வீட்டிலிருந்து திரும்பியதும் வீட்டுப் பத்திரத்தை தன்னுடைய கார் டேஷ்போர்டில் வைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும்....  a very clever move.... this is going to be a very significant thing in this case.....அன்று இரண்டாம் முறை அவர் மாதவியின் வீட்டிற்கு காரில் செல்லாமல் ஆட்டோவிலோ அல்லது வாடகை டாக்சியிலோ சென்றிருந்தார் என்பது போலீசுக்கு தெரிய வந்திருந்தால் அவர் மாதவியின் வீட்டிற்குள் சென்றதும் இதற்குள் வெளிவந்திருக்கும். அத்துடன் அவர் அங்கிருந்து கையோடு கொண்டு வந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள் அடங்கிய கைப்பையை திரும்பி வரும் வழியில்  ஆற்றில் வீசியதும் இந்நேரம் வெளிவந்திருக்கும். அப்படியொரு சூழலில் தன்னுடைய எதிர்தரப்பு வாதத்திற்கு வழியேயில்லாமல் இந்த வழக்கு முடிக்கப்பட்டிருக்குமே....

இவை மூன்றைத் தவிர பட்டியலில் இருந்த மற்ற பொருட்களால் பெரிய தாக்கம் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த ராஜசேகர் அடுத்ததாக கோபாலின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலை கையில் எடுத்தான். 

அதில் இருந்தவைகளுள் அவனுடைய கவனத்தை முதலில் கவர்ந்தது... ஒரு சென்ட் பாட்டில். பூட்டியிருந்த மாதவியின் வீட்டில் முதலில் நுழைந்த காவலர்கள் இந்த மணத்தை நுகர்ந்திருக்கக் கூடும். இதை வைத்து காவல்துறை என்ன சாதிக்க முடியும்? கோபால் அன்றைய தினம் அந்த வீட்டினுள் இருந்தார் என்பதையா? அவர் அங்கு மாலையில் இருந்தேன் என்பதைத்தான் அவரே ஒப்புக்கொள்கிறாரே? அவருடைய வாதம் கொலை நடந்த சமயத்தில் நான் அந்த வீட்டிற்குள் இல்லை என்பதுதானே? 

2.கோபால் அவருடைய முதல் மற்றும் இரண்டாவது மனைவியுடன் இருந்த இரண்டு புகைப்படங்கள் மற்றும் அவருடைய இரண்டு திருமணங்களிலும் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம்.

3. முதல் மனைவி இறந்தபோது அளிக்கப்பட்ட மரண சான்றிதழ் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை. 

இவை இரண்டும் இந்த வழக்கிலும் முக்கிய சான்றாக பிராசிக்யூஷன் முன்வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. கோபாலுடைய முதல் மனைவி மற்றும் மாதவி ஆகியோருடைய மரணங்கள் இரண்டுமே திட்டமிடப்பட்ட கொலைதான் என்று பிராசிக்யூஷன் நிச்சயம் வாதாடும். இரண்டு மரணங்களுமே பின்னந்தலையில் இருந்த காயத்தால் ஏற்பட்ட மரணங்கள் என்பதும் இத்தகைய வாதத்தை வலுவாக்கக் கூடும். ஆனால் முதல் மனைவியின் மரணத்திலிருந்து ஏற்கனவே கோபால் விடுவிக்கப்பட்டிருந்ததால் இந்த வாதத்தை மிக எளிதில் தன்னால் தோற்பிக்க முடியும் என்று ராஜசேகர் நினைத்தான். ஆயினும் கோபாலின் முதல் மனைவியின் மரணத்தை பிபி தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டால் அதை உடனே எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.  

4. இரண்டாவது மனைவி மல்லிகாவின் மருத்துவ சிகிச்சை விவரங்கள் மற்றும் மருந்து ரசீதுகள் அடங்கிய கோப்பு. 

திருமணம் ஆனதிலிருந்து அவர் குழந்தைப்பேறுக்கு தகுதியானவர்தானா என்று அறிய நடத்தப்பட்ட பரிசோதனை அறிக்கைகள், அவருடைய உடம்பில் ஏற்பட்ட பலவித காயங்களுக்காக அவர் செய்துக்கொண்ட சிகிச்சை விவரங்கள், அறிக்கைகள் என பல விவரங்கள் அந்த கோப்பில் இருக்க வாய்ப்புள்ளது என்று ராமராஜன் தன்னிடம் கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. கோபாலுக்கும் அவருடைய இரண்டாவது மனைவிக்கும் இடையில் அத்தனை சுமுகமான உறவு இல்லை என்பதை நிருபிக்க தேவையான சான்றுகள் அந்த கோப்பில் இருக்கும் போலிருக்கிறது. பிராசிக்யூஷனின் அத்தகைய வாதத்தை முழுவதுமாக தன்னால் முறியடிக்க முடியாது என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். 

இந்த நான்கைத் தவிர பட்டியலில் இருந்த மற்ற பொருட்களால் பிராசிக்யூஷனுக்கு பெரிதாக எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த ராஜசேகர்  எல்லா பட்டியல்களையும் மாதவி என்று பெயரிடப்பட்டிருந்த கோப்பில் வைத்துவிட்டு கடந்த மூன்று வாரங்களாக தன்னுடைய குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்த குறிப்புகளை அதே வரிசையில் தன்னுடைய மேசைக் கணினியில் ஏற்றத் துவங்கினான்.

அனைத்தையும் ஏற்றி முடித்துவிட்டு அதன் சாராம்சத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தான்.

1. கோபால்-மாதவி இவர்களுக்கிடையில் இருந்தது ஒரு extra-marital affair. மாதவியைப் போலவே இன்னும் சில பெண்களுடன் கோபாலுக்கு இத்தகைய உறவு இருந்திருக்கிறது. 

2.கோபால் மாதவியை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாகத்தான் தோன்றுகிறது. ஆனால் தன்னுடைய இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாதவியை திருமணம் செய்துக்கொள்ளவும் அவளுக்கு அவள் குடியிருந்த வீட்டையே அன்பளிப்பாக அளிக்கவும் தீர்மானித்திருந்தவர்  ஏன் திடீரென்று அவளை கொலை செய்தார்? 

3. கோபால் அந்த வீட்டை அன்பளிப்பாக கொடுக்கவிருப்பதாக வழக்கறிஞர் மகாதேவனிடம் கூறியது அவளை கொலை செய்துவிட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக  அவர் போடும் நாடகங்களில் ஒன்றா? அப்படியானால் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாதவியை திருமணம் செய்துக்கொள்ள நினைத்திருப்பதாக ராமராஜனிடம் கூறியது? அதுவும் திட்டமிடப்பட்ட நாடகம் என்றால் மாதவியை கொன்றுவிட அப்போதே கோபால் திட்டமிட்டிருந்தாரா?

4.இது திட்டமிடப்பட்ட கொலை என்றால் அதன் மோட்டிவ் என்னவாயிருக்கும்?

5. சம்பவ தினத்தன்று மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாதவியுடன் உறவாடிவிட்டு சென்றவருக்கு திடீரென அவள் மீது கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் ஏற்பட என்ன காரணம்?

6. அன்று அவர் வந்து சென்றதும் வேறொரு நபர் அவளுடைய வீட்டிற்குள் சென்று வந்திருக்கும் சூழலில் அதை எந்த வழியிலாவது கோபால் அறிந்திருக்க வாய்ப்புள்ளதா? அந்த கோபம்தான் அவளை  கொன்றுவிட அவரை தூண்டியதோ?

7. இது எதுவுமே நடந்திராத பட்சத்தில் கோபாலைத் தவிர வேறு யாரேனும் அந்த வீட்டிற்குள் நுழைந்து அவளை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதா?

எழுதி முடித்த சாராம்சத்தையும் அதன் விளைவாக தன் மனதில் எழுந்த சந்தேகங்களையும் குறித்துக்கொண்ட ராஜசேகர் தான் பட்டியலிட்டிருந்த ஒவ்வொரு கேள்வியையும் முக்கியமாக கடைசி கேள்வியை தன் மனதில் அசைபோட்டவாறே அமர்ந்திருந்தான் நேரம் போனதே தெரியாமல், அதாவது அவனுடைய கைபேசி சிணுங்கும் வரையில்.....

'என்னங்க மணி ஒன்பதாயிருச்சே... எங்க இருக்கீங்க?'

திடுக்கிட்டு சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். உண்மைதான். மணி ஒன்பதைக் கடந்திருந்தது. 'ஆஃபீஸ்லதான் கோகி... இதோ கிளம்பிட்டேன்...'

******

பி.பி. வேணுவுடனான சந்திப்பிற்கு அடுத்த நாள் காலை தன் அலுவலகத்தை அடைந்ததும் துணை ஆய்வாளர் தன்ராஜ் தன் இருக்கையில் அமர்ந்து முதல் வேலையாக  மாதவி கொலை வழக்கில் தான் தயாரித்திருந்த குற்றப்பத்திரிக்கையில் முந்தைய தினம் வேணு விரும்பிய மாற்றங்களை செய்தார். 

'இதைத் தவிர உங்களுக்கு வேற வழியில்லை தன்ராஜ்....' என்று வேணுவை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில் எஸ்.பி சந்தானத்துடனான சந்திப்பில் அவர் கூறியபோது அவரால் மறுத்துப்பேச முடியாமல் போனது.

'அவர் ரொம்ப இன்ஃப்ளூயன்ஷியல் பெர்சன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. தேவையில்லாம அவரை பகைச்சிக்கிட்டா அது உங்களத்தான் பாதிக்கும். அவருக்கு இருக்கற கொஞ்ச சட்ட ஞானத்த வச்சிக்கிட்டே அவரால அந்த பதவியில இவ்வளவு காலம் நீடிச்சி நிக்க முடியுதுன்னா எந்த அளவுக்கு அவர் பவர்ஃபுல்னு புரிஞ்சிக்குங்க.... அதனால அவர் சொல்ற கரெக்‌ஷன்ஸ செஞ்சி சார்ஜ்ஷீட்ட நாளைக்கே சப்மிட் பண்ணிருங்க... ஆனா இந்த தடவை நீங்க போக வேணாம்... உங்க ஸ்டேஷன்லருக்கற ஏதாவது ஒரு பி.சிகிட்ட குடுத்து விட்ருங்க... பி.பி. ஏதாச்சும் சொன்னா நா பாத்துக்கறேன்... அப்புறம் அந்த சாட்சிகள ட்யூட்டரிங் பண்ற விஷயமா நா பெருமாள் கிட்ட பேசறேன்....let him do it...'

'தாங்ஸ் சார்...' என்று பதிலளித்த தன்ராஜ், ' உங்கக்கிட்ட எனக்கு ஒரு ரிக்வெஸ்ட் இருக்கு சார்.' என்று இழுத்தார்.

'சொல்லுங்க என்ன விஷயம்?'

'இனிமேலும் எனக்கு அந்த ஸ்டேஷன்ல கன்டினியூ பண்ண தயக்கமா இருக்கு சார்..... அதனால....'

'அதனால?'

' அட்வகேட் தினகரனோட சன் மர்டர் கேஸ மறுபடியும் இன்வெஸ்ட்டிகேட் பண்றதுக்கு ஒங்க கீழ ஒரு SIT ஃபார்ம் பண்ணியிருக்கறதா கேள்விப்பட்டேனே சார்..... அதுல ஏதாச்சும் வேக்கன்ஸி இருந்தா என்னெ....'

சந்தானம் சிரித்தார். 'ஏன் பெருமாள் ஏதாச்சும் ட்ரபுள் குடுக்கறாரா?'

'இல்ல சார்.' என்று அவசரமாக மறுத்தார் தன்ராஜ்....'பிபி சொன்ன அந்த சாட்சிங்க விஷயத்துல அவர் சொன்னா மாதிரி நா செய்யலைன்னு அவர் ஏதாச்சும் மறுபடியும்......'

'ஓ!' என்ற சந்தானம் அடுத்த சில விநாடிகள் யோசனையில் அமர்ந்திருந்தார். 'சரி.... Let me think about it.....ஆனா நம்மள எதுத்துக்கிட்டு போறதா பி.பி நினைச்சிறவும் கூடாதில்லையா? அந்தாளு கரம் வைக்கறதுல யானை மாதிரின்னு கேள்விப்பட்டுருக்கேன்.... He can harm you if he comes to know that you are trying to escape from this case....அதனால கேஸ் கோர்ட்டுக்கு போவட்டும்.... உங்க டெப்பாசிஷனும் (deposition)  முடிஞ்சிரட்டும்.... பாப்போம்..... wait at least for a month.... ok?' என்ற எஸ்.பி. நீங்க போகலம் என்ற தோரணையில் தலையை அசைத்து விடைகொடுக்க அதற்கு மேலும் வற்புறுத்தினால் அவர் தவறாக நினைத்துக்கொள்ள வாய்ப்புண்டு என்று நினைத்து, 'சரி சார்.' என்று வணக்கம் செலுத்திவிட்டு விடைபெற்றார் தன்ராஜ்...

இன்னும் ஒரு மாசத்துக்கு வேற வழியில்லை..... சாட்சிங்கள ட்யூட் பண்றதுலருந்தாவது விடுதலை கிடைச்சிதே என்ற மனநிறைவுடன் பி.பி. விரும்பிய அனைத்து சட்ட பிரிவுகளையும் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிட்டு புதிதாக ஒரு நகலை தயாரித்து முடித்தார். பிறகு மேசை மீதிருந்த அழைப்பு மணியை அடித்தார். அடுத்த நொடியே வந்து நின்ற பி.சி ஒருவரிடம் 'இத பெருமாள் சார் டேபிள்ல வச்சிறு. நா வெளிய போய்ட்டு வரேன்... சார் கேட்டா ஆஃபனவர்ல வந்துருவேன்னு சொல்லு...' என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திராமல் தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினார். 

தொடரும்...

10 comments:

வே.நடனசபாபதி said...

ஒவ்வொரு குற்றவாளியும் தங்களை அறியாமல் ஒரு தடயத்தை சம்பவம் நடந்த இடத்தில் விட்டு செல்வார்கள் என சொல்வதுண்டு. கோபால் அதுபோல் ஏதேனும் விட்டு சென்றாரா? இதுவரை தெரியவில்லையே? காத்திருக்கிறேன் மேற்கொண்டு நடந்ததை அறிய.

சென்னை பித்தன் said...

முழுவதையும் படித்து விட்டேன்;பிரமிப்பு ஏற்படு கிறது.ஒவ்வொன்றையும் தர்க்க பூர்வமாக அணுகும் விதம்,அடிப்படை விஷய ஞானம் என்றெல்லாமே வேறு லெவலில் இருக்கிறது!அருமை!

Packirisamy N said...

//ஒவ்வொன்றையும் தர்க்க பூர்வமாக அணுகும் விதம்,அடிப்படை விஷய ஞானம் என்றெல்லாமே வேறு லெவலில் இருக்கிறது!அருமை!//

வழிமொழிகிறேன்.

Sasi Kala said...

ஒவ்வொரு பான்ட்ஆ நாங்களும் எங்காவது க்ளு கிடைக்கும்னு தேடுறோம் இப்படி கெட்டியா பிடிச்சிருக்கிங்களே முடிவ..

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
ஒவ்வொரு குற்றவாளியும் தங்களை அறியாமல் ஒரு தடயத்தை சம்பவம் நடந்த இடத்தில் விட்டு செல்வார்கள் என சொல்வதுண்டு..//

கரெக்டா சொன்னீங்க. புத்திசாலித்தனமா செய்யிறோம்னு நினைச்சிக்கிட்டு சில்லியா எதையாச்சும் செஞ்சிட்டு மாட்டிக்கிவாங்க...

பாக்கலாம் இவர் எப்படி மாட்டிக்கிறார்னு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


சென்னை பித்தன் said...
முழுவதையும் படித்து விட்டேன்;பிரமிப்பு ஏற்படு கிறது.ஒவ்வொன்றையும் தர்க்க பூர்வமாக அணுகும் விதம்,அடிப்படை விஷய ஞானம் என்றெல்லாமே வேறு லெவலில் இருக்கிறது!அருமை!//

வந்ததுக்கும் சொன்ன கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
//ஒவ்வொன்றையும் தர்க்க பூர்வமாக அணுகும் விதம்,அடிப்படை விஷய ஞானம் என்றெல்லாமே வேறு லெவலில் இருக்கிறது!அருமை!//

வழிமொழிகிறேன்.//

உங்களுக்கும் ஒரு பெரிய தாங்ஸ் :)

டிபிஆர்.ஜோசப் said...


Sasi Kala said...
ஒவ்வொரு பான்ட்ஆ நாங்களும் எங்காவது க்ளு கிடைக்கும்னு தேடுறோம் இப்படி கெட்டியா பிடிச்சிருக்கிங்களே முடிவ..//

கடைசி வரைக்கும் முடியுமான்னு பாக்கறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


Sasi Kala said...
ஒவ்வொரு பான்ட்ஆ நாங்களும் எங்காவது க்ளு கிடைக்கும்னு தேடுறோம் இப்படி கெட்டியா பிடிச்சிருக்கிங்களே முடிவ..//

கடைசி வரைக்கும் முடியுமான்னு பாக்கறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன்