19 அக்டோபர் 2013

ராகுல் காந்தியை அடுத்த பிரதமராக தெரிவு செய்யலாமா?

நேற்றைய பதிவில் நமோ எனப்படும் நரேந்திர மோதியை அடுத்த பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை வெளியிட்டிருந்தேன். 

அவர் அதற்கு தயாராக இல்லையென்றால் அவருக்கு மாற்றாக காங்கிரஸ் முன்னிலைப்படுத்தும் ராகுலுக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்வி எழலாம் அல்லவா?

அவருக்கும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறேன்.

அவர் நேரு குடும்பத்து  வாரிசு என்றே ஒரே காரணத்திற்காக அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் கண்மூடித்தனமான காங்கிரஸ் ஆதரவாளன் இல்லை. பல தலைமுறைகளாக காங்கிரசை ஆதரித்து வரும் குடும்பத்தை சார்ந்தவன்தான் என்றாலும் இந்திராகாந்தியின் அடாவடி ஆட்சிக்குப் பிறகு அதிலிருந்து சற்று மாறி நிற்பவன். 

ராகுலை நான் அடுத்த பிரதமராக தெரிவு செய்ய வேண்டுமென்றால் அவர் என்னென்ன செய்ய வேண்டும்? 

1. இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு தில்லியில் சீக்கியர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியதற்கு சீக்கியர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 

2.முதலில் ஒரு மிகச் சிறிய அமைச்சராக மத்திய அமைச்சரவையில் இணைந்து தனக்கும் நிர்வாக மற்றும் மேலான்மை திறன் (Management and Administrative capacity) உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். 

3.மக்களிடம் இருந்தும் பொது வாழ்க்கையிலிருந்தும் அவ்வப்போது காணாமல் போகும் (sudden disappearance) பழக்கத்தை விட்டுவிட வேண்டும். 

4. பேச்சில் சுயகட்டுப்பாடு வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிக்கை விடுவது பிறகு அது தவறு என்று மன்னிப்பு கோருவது... என்பன போன்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது மனமுதிர்வற்ற (childish or immatured) போக்கை உடனே கைவிட வேண்டும்.

5. பொருளாதார விஷயங்களில் (Economic affairs) தன்னுடைய ஞானத்தை அல்லது விவரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

6. ஒரு கட்சியின் தலைவர் பதவி - அதையும் கூட வாரிசு அரசியல்தான் பெற்றுத் தந்தது என்பதை அவராலும் மறுக்க முடியாது - என்பது வேறு, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த தலைவர் என்பது வேறு. நாட்டிலுள்ள அனைவரையும் தலைமையேற்று நடத்த தேவையான leadership quality (ஒரு தலைவருக்கு தேவையான தகுதிகள்) தனக்கு உண்டு என்பதை அவர் நிரூபித்து காட்ட வேண்டும். 

7. ஊழலுக்கு நான் எதிரி என்று கூறினால் மட்டும் போதாது. அதிலேயே ஊன்றி திளைப்பவர்களுடன் - அதாவது கட்சிக்கு உள்ளும் புறமும் - எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அது மாயாவதியாக இருந்தாலும், முலாயம் சிங்காக இருந்தாலும் ஏன் நமது கலைஞரானாலும் அல்லது அம்மாவானாலும்.... அரசியல் கூட்டணி என்ற பெயரில் ஊழல் விஷயத்தில் எவ்வித compromiseம் செய்துக்கொள்ளக் கூடாது. Charity begins at home என்பார்கள்.... ஆகவே முதலில் தன்னுடைய சகோதரியின் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்களுக்கு பதில் சொல்லிவிட்டு நாட்டை சீர்படுத்த புறப்படட்டும்.

சரிங்க..... நமோவும் வேண்டாம் ராகுலும் வேண்டாம் என்றால் யாருக்குத்தான் உங்கள் ஓட்டு? சவசவன்னு ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் சிங்குக்கா என்கிறீர்களா?

இவர்கள் மூவருக்குமே அடுத்த பிரதமராகும் தகுதியில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. மேலும் நம் நாட்டிலுள்ள தேர்தல் விதிகளின்படி இவர்தான் பிரதமர் என்று யாரையும் நேரடியாக தெரிவு செய்ய முடியாது. 

மேலும் இன்றுள்ள அரசியல் சூழலில் நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசும் பிஜேபியும் கூட தனித்து தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. ஆகவே யாருடனாவது கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று தேசீய அளவில் இவ்விரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக இருப்பது கம்யூனிஸ்டுகள். இவர்கள் இவ்விரு கட்சியினருடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை. அவர்களுக்குப் பிறகு வட இந்தியாவில் எஸ்.பி, பி.எஸ்.பி, ஜனதாதளம். தென்னிந்தியாவில் திராவிட கட்சிகள், தெலுங்கு தேசம். கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே ஊழலுக்கு பேர்பெற்றவைகள். 

ஆகவே என்னுடைய முடிவு இதுதான்.

எந்த கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காமல், ஊழல் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆளாகாத வேட்பாளர்களுடன் தேர்தலை சந்திக்கிறார்களோ அந்த கட்சிக்குத்தான் என்னுடைய ஓட்டு.

நான் சாதாரணமாக lesser evil என்ற அடிப்படையில் காங்கிரசுக்குத்தான் வாக்களிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் செய்த அலங்கோல ஆட்சி, எதிலும் ஊழல் எப்போதும் ஊழல் என்கிற போக்கு EVIL என்ற தராசில் நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில்தான் என்பதை காட்டிவிட்டது.

வாக்களிக்க விரும்பவில்லை என்று 49 (ஒ) வை தெரிவு செய்வதை விட இவர்கள் எவரையுமே எனக்கு பிடிக்கவில்லை என்று வாக்களிக்கும் ஆப்ஷனை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதே, இம்முறை அதை பயன்படுத்துவதுதன் சரி என்று கருதுகிறேன். 

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்த்து யார் அதிகம் தருகிறார்களோ அல்லது தருவதாக சொல்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு என்று கருதும் பாமரன் யாருக்கு வாக்களிக்கிறானோ அவர்களே ஆண்டு விட்டு போகட்டும். 

********

18 அக்டோபர் 2013

நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக தெரிவு செய்யலாமா?

நாட்டின் அடுத்த பிரதமராக நான் வந்தால்...... என்று பல வாக்குறுதிகளை, அவற்றில் சில சிறுபிள்ளைத்தனமானதும் கூட, அள்ளி வீசிக்கொண்டே நாட்டை வலம் வருகிறார் நமோ என்கிற நரேந்திர மோடி.

அவர்தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் அவரால் மட்டுமே நாட்டை பிரகாசமான பொருளாதார பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்றெல்லாம் நெட்டிசன்கள் எனப்படும் பல படித்த இளைஞர்கள் கருதுகின்றனர். இப்போது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் இத்தகைய கோஷங்களை நாள்தோறும் முழங்கிவரும் இவர்கள் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தால் நமோ பிரதமராவதில் எவ்வித ஐயமும் இல்லை.

சரி, என்னைப் போன்ற பெரிசுகள்,  குறிப்பாக நான்; அதாவது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒருவன்,  பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன என்பதை ஓரளவுக்கு புரிந்து வைத்திருக்கும் ஒருவன், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அதனுடைய பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பது  மட்டும் இல்லை என்று பல ஆண்டுகளாக எண்ணிக்கொண்டிருக்கும் ஒருவன், நமோ அடுத்த பிரதமராக வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஒருசில தேவைகளை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். 

1. கோத்ராவில் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களிடத்தில் நிபந்தனையற்ற - அதாவது பேரளவுக்கு அல்லாமல் - மன்னிப்பு கோரவேண்டும். 

2.வெறுமனே குஜராத் பாணி முன்னேற்றம் என்றோ அல்லது இதுவரை காங்கிரஸ் கடைபிடித்துவந்த பொருளாதார கொள்கைகளை குறை கூறியோ வலம் வந்துக்கொண்டிருக்காமல் நான் பிரதமரானால் இன்னின்னவற்றை செய்வேன் என்று தெளிவாக பட்டியலிடவேண்டும்.

3.தன்னுடைய கட்சிக்குள் இருப்பவர்களிடமே ஒத்துப்போக முடியாத ஒருவரால், தன்னுடைய கட்சி தலைவர்களிடமிருந்தே முழு நம்பிக்கையை பெற முடியாத ஒருவரால் எப்படி கட்சிக்கு வெளியில் உள்ளவர்களுடைய - எதிர் கட்சியினரை விட்டுவிடுவோம் -  நம்பிக்கையை  பெற முடியும் என்று குரல் எழுப்புவோருக்கு என்னால் முடியும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

4.நமோ நாட்டின் பிரதமராக விரும்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்ட பிறகு எதற்காக இன்னும் குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விலகாமல் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் பிரதமாரவாதில் அவருக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் பலரும் கூறுகின்றனர். ஆகவே அவர்களுடைய எண்ணம் தவறு என்பதை நிரூபிக்க அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். 

5.உலக பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களில் அவர் இதுவரை காட்டி வந்துள்ள ஞானம் அல்லது அறிவு நகைப்புக்குரியதாகவே உள்ளது. குறிப்பாக நம்முடைய அண்டை நாட்டினருக்கு எதிராக அவர் காட்டி வரும் துவேஷ போக்கை பிரதமாரன பின்பும் தொடர்ந்து கடைபிடிப்பாரேயானால் அது நாட்டை போருக்கு தள்ளிவிடும் என்று கூறி வருவோருக்கு அவர் தகுந்த பதில் கூற வேண்டும். 

6.மதச்சார்பின்மை என்பது நம்முடைய நாட்டின் ஆணி வேர். வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டை வளர்ந்த நாடு என்று உலகம் ஏற்றுக்கொள்ளாது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரும் அதை முழுமையாக அனுபவிக்க மிகவும் தேவைப்படுவது அமைதியான சூழல். அதற்கு மிக அடிப்படையான தேவை நாட்டு மக்களிடையே  சுமூகமான உறவு. அதற்கு தேவை மதநல்லிணக்கம். மத்தியில் ஆட்சியிலுள்ளவர்களால் மட்டுமே அத்தகைய சூழலை உருவாக்க முடியும்.  மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் என்று வர்ணிக்கப்படும் இவரால்  அதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதும் சிறுபான்மையினரின் கேள்வியாக உள்ளது. முடியும் என்று நமோ உறுதியளிக்க வேண்டும். 

7.ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை பறைசாற்றிக்கொள்ளும் நமோ குஜராத் மாநில லோக் அதாலத் தலைவர் நியமனத்தில் தலையிட்டு பிடிவாதம் பிடிப்பது ஏன்? எதை மறைக்க இந்த முயற்சி? மடியில் கணம் இருந்தால்தானே இந்த அச்சம் வரும்? யார் வேண்டுமானால் வந்துக்கொள்ளட்டும் எனக்கு அதைப் பற்றி அச்சம் ஏதும் இல்லை என்ற நிலையை அவர் அறிவிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நமோ செய்தால் என்னுடைய ஓட்டு அவருக்கே.....!

ஆனால் அதற்காக அவருக்கு எதிராக காங்கிரஸ் முன்னிலைப் படுத்தும் ராகுலுக்கு என் ஓட்டா என்ற கேள்வி எழலாம்.... 

அதற்கு அடுத்த பதிவில் பதில்...

**********