18 September 2013

வாடைகைக்கு வீடு ( நகைச்சுவை கலாட்டா.)

பாத்திரங்கள்

வீட்டு உரிமையாளர் - பார்த்திபன்
தரகர் -                                வடிவேலு
வாடிக்கையாளர் -        கவுண்டமனி.

**

(வீட்டுத் தரகர் வடிவேலு வெள்ளை ஆனால் காவியேறிய வேட்டி, அதே கலரில் சட்டை.., கக்கத்தில் ஜிப் வைத்த, நைந்து போயிருந்த ஹைதர் காலத்து ரெக்ஸின் பை சகிதம் சரக் சரக் என்று ஏற்கனவே பாதி தேய்ந்து போயிருந்த காலணிகளுடன் சற்றே தெனாவட்டான நடையில் சாலையின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை பார்த்தவாறே வருகிறார். அவருடன் முட்டிக்கு மேல் மடித்து கட்டிய சங்கு மார்க் லுங்கி, உள்புறம் அணிந்திருந்த ஜன்னல் பனியன் வெளியே தெரியும் அளவுக்கு மெல்லிய கலர் ஜிப்பா..  இரண்டு கைகளும் கக்கம் வரை பிரிமணைபோல் சுருட்டப்பட்டிருக்க.. ஒரு சுருட்டலுக்குள்ளே துருத்திக்கொண்டு நின்ற சங்கு மார்க் கைக்குட்டை.. வாயின் ஓரத்தில் பாதி காய்ந்துபோயிருந்த பீடி.. வீடு தேடி அலையும் தரகரின் வாடிக்கையாளர்..’)

க.மனி: யோவ் தரகரே.. தோ.. வீடு வருது, வீடு வருதுன்னு ஊர விட்டே வந்தாச்சு போலருக்கு.. வீட்ட காணம்?

வடி:(சிரிப்புடன்) ‘போங்கண்ணே.. ஒங்களுக்கும் எப்பவும் நக்கல்தான்’ (க.மனியின் தோளில் குத்துகிறார்.)

க.மனி:யோவ் பாத்துய்யா.. ( எட்டி குதிக்க அவருக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த ஒரு அறுபது வயது மூதாட்டியின் மேல் மோதுகிறார் அவர் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.)

பாட்டி:களவானிப்பயலுக.. பொம்பளைங்கள மோதுறதுக்குன்னே கெளம்பி வந்துடுருவானுவ..(முனுமுனுத்தவாறே செல்கிறார். க.மனி எட்டி மூதாட்டியின் சேலைத் தலைப்பை பிடிக்கிறார்..)

க.மனி: ஏய் ஓல்ட் லேடி ஸ்டாப்..

பாட்டி: (விருட்டென்று திரும்பி..) ‘என்னடே எப்படியிருக்கு ஒடம்பு.. ஓல்ட் லேடியாம்லே.. ஓல்ட் லேடி? (சலித்துக்கொள்கிறார்)

க.மனி: (வியப்புடன்) பார்றா? நீயென்ன ஓல்ட் லேடியில்லாம நியூ லேடியா? (மூதாட்டியின் மொட்டைத் தலையை தடவி விடுகிறார்) தரகர் சார், தரகர் சார்.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க.. இது ஓல்ட் லேடியா இல்ல பால்ட் லேடியா?

வடி: (விளங்காமல் தாடையை சொரிந்தவாறு) என்னண்ணே சொல்றீய.. ஓல்ட் லேடின்னா வயசான லேடி.. வெளங்குது.. அதென்ன பால்ட் லேடி.. எளவு ஒன்னும் விளங்கலையே..

க.மனி: ஆம்பள மாதிரி முழுசா சொட்டெ.. அப்புறம் பால்ட் லேடிதானெ.. (மூதாட்டி, தலையை விடுவித்துக்கொண்டு) நாசமா போறவனே.. போய் ஒங்கம்மா தலைய போய் தடவுறா.. நீ இன்னைக்கி  செருப்பால அடிபட போற. போற காரியம் ஒன்னுமே வெளங்காது. போடா போ..’ (செல்கிறார்)

வடி: அண்ணே.. இது ஒங்களுக்கு தேவையா? சும்மா போற கெளவிய புடிச்சி, வம்பு பண்ணி.. வாங்கி கட்டிக்கிறணுமா.. ஏண்ணே.. பாருங்க அந்த கெளவி சபிச்சிட்டு போறத.. இன்னைக்கி போற காரியம் வெளங்குனாப்பலத்தான்.. போய்ட்டு இன்னொரு நாளைக்கு வருவோமாண்ணே.. (வந்த வழியே செல்ல திரும்புகிறார். எதிரில் சற்று தொலைவில் பார்த்திபன் வருவது தெரிகிறது. சட்டென்று திரும்பி வேகமாக நடக்கிறார். கவுண்டமனி ஒன்றும் விளங்காமல் அவர் பின்னே ஓடுகிறார்.)

க.மனி: யோவ் தரகர்.. என்ன இது ஏதோ பேய கண்டா மாதிரி ஓடறீரூ?

வடி: (திரும்பி பார்க்காமல்) அண்ணே.. போன காரியம் வெளங்காதுன்னு அந்த கெளவி சொன்னப்பவே நெனச்சேன்.. அது இப்ப நடக்கப்போவுது..

க.மனி: யோவ்.. நில்லுய்யா.. நின்னு பதில் சொல்லிட்டு போய்யா.. வீடு காட்டுறேன்னு நீ கூப்ட்டுத்தானய்யா வந்தேன்.. இப்ப நீ பாட்டுக்கு நாளைக்கு பாத்துக்கலாம்னா எப்படிய்யா?

வடி: அண்ணே.. இப்ப அது முடியும்னு தோனலண்ணே.. நாளைக்கு பாத்துக்கலாம்..

க.மனி: என்னது நாளக்கா? யோவ் என்ன வெளையாடறியா? நாம்பாட்டுக்கு அந்த முள்ளம்பன்றி தலையன்கூடவாவது போயிருப்பேன்.. அவன் அளும்பு பண்ணாலும் எப்பவும் கைவசம் நாலஞ்சி வீடு வச்சிருப்பான்.. அதுவும் வேணாம்னுட்டு ஒங்கூட வந்தா என்னா வெள்ளாடறியா? நில்லுய்யா.. (எட்டி வடிவேலுவின் சட்டையைப் பிடிக்கிறார்) நின்னு பதில் சொல்லிட்டுப் போ.. எதுக்கு இப்ப வேணாங்கற?

வடிவேலு: (நின்று ஓரக்கண்ணால் திரும்பி பார்க்கிறார். பார்த்திபன் அங்கிருந்தே ஒதைப்பேன் என்று சைகைக் காட்டுகிறார்..) ஐயைய்யோ.. பாத்துட்டானே.. பாத்துட்டானே.. இப்ப இவன்கிட்டருந்து தப்பிக்கறதே பெரும்பாடாருக்கறப்ப அவன் வேற வந்து நிக்கிறானே.. நா இப்ப என்ன பண்ணுவேன்.. என்ன பண்ணுவேன்.. பேசியே கொன்னுருவானே..

க.மனி: யோவ் என்னத்தய்யா வாய்க்குள்ளவே மொனகுற? சத்தமா பேசினா நானும் சேந்து பொலம்புவேன்லே..

வடிவேலு: எண்ணே.. ஒங்களுக்கு சொன்னா வெளங்காதுண்ணே.. என்னைய விட்டுருங்க.. நாளைக்கு நானே வந்து இத விட நல்ல வீடா ஒன்னு பாத்துக்குடுக்கறேண்ணே.. நீங்க தரகர் ஃபீஸ் கூட தரவேணாம்.. போறுமா? (கெஞ்சுகிறார்)

க.மனி: என்னது தரகர் ஃபீஸ் கூட வேணாமா.. அப்ப சரி.. யூ.. கோ.. டுமாரோ.. கம்..

(வடிவேலு ஒலிம்பிக்கில் ஸ்பீட் வாக் செய்பவரைப் போல வேகமாக நடக்க கக்கத்திலிருந்த பை விழுந்து வாய் பிளந்து உள்ளே இருந்த முடியில்லாத பேனா, கிழிந்துபோன கைக்குட்டை, பொடி மட்டை.. இத்யாதிகள் சாலை முழுவதும் சிதறி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உருண்டு ஓட.. வடிவேலு நாலு காலில் பரபரத்து எல்லாவற்றையும் சேகரித்து நிமிரவும் பார்த்திபன் அவருடைய முதுகில் ஓங்கியடிக்கவும் சரியாக இருக்கிறது. வடிவேலு பதறிக்கொண்டு திரும்பி பார்க்க.. பார்த்திபன் விஷமத்துடன் புன்னகை செய்தவாறே கவுண்டமனியைப் பார்க்கிறார்.)

பார்: (கவுண்ட மனியிடம்) சார்.. இவன் ஒங்க கூடத்தான வந்துக்கிட்டுருந்தான்?

க.மனி: (சலிப்புடன் கைகளைத் தட்டியவாறு) ஆமா சார்.. சும்மாருந்த என்னைய வீடு காட்டறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இப்ப நேரம் சரியில்ல நாளக்கு காட்டறேன்னு ஓடறான் சார்.. இவனெ நம்பி நா வந்தேன் பாருங்க.. என்னைய..

பார்: என்ன செருப்பால அடிச்சிக்கணும் போல இருக்கா?

க.மனி: ஆமா சார்.. பின்னே ஒங்களையா அடிக்க முடியும்?

பார்: என்னெ எதுக்கு சார் அடிக்கறீங்க? இதோ இவனெ அடிங்க. இவந்தான ஒங்கள கூட்டிக்கிட்டு வந்தான்? இவனெத்தான் அடிக்கணும்.. (வடிவேலுவின் பின்னந்தலையில் அடிக்கிறார்)

வடி: (கோபத்துடன் அவருடைய கையைப் பிடித்து தள்ளுகிறார்) யோவ்.. வேணாம்.. பேசிக்கிட்டிருக்கறப்ப ஏன்யா அடிக்கறே? என்ன இது சின்னப்புள்ளதனமாருக்கு?

பார்: டேய்.. டேய்.. இந்த டைலாக்க எத்தனதடவடா சொல்வே.. வேற டைலாக்கே இல்லையா?

வடி: என்னது டைலாக்கா.. யோவ் இது என்ன சினிமாவா, சீரியலா.. டைலாக்கு..கிய்லாக்குன்னுட்டு..

பார்: மாட்டினியா.. மவனே. அதென்னடா கிய்லாக்கு..

வடி: (புரியாததுபோல் பார்க்கிறார்) என்னய்யா சொல்ற? கிய்லாக்கா.. அப்படீன்னா?

பார்: டேய் பேச்ச மாத்தாத.. நீ தான இப்ப சொன்ன?

வடிவேலு: நானா.. இப்பவா? என்னய்யா சொன்னேன்?

பார்: நீதானடா சொன்னே.. டைலாக்கு கிய்லாக்குன்னு.. டைலாக்கு சரி.. தமிழ்ல வசனம்னு மொழிபெயர்ப்பு பண்லாம்.. அதென்ன கிய்லாக்கு.. சைனா பாஷையா.. ஒனக்கு அதெல்லாம் கூட தெரியுமா? துபாய் மாதிரி அந்த ஊர் கக்கூசெல்லாம் கூட கழுவிருக்கியா?

வடி: யோவ்.. யோவ்.. ஒரு பேச்சுக்குச் சொன்னா.. ஏன்யா எங்க போனாலும் இப்படி தொரத்தி தொரத்தி வந்து அழும்பு பண்றே.. (அழுகிறார்)

பார்: டேய், டேய்.. நிறுத்துரா.. எதுக்கெடுத்தாலும் சின்ன பப்பாமாதிரி அழுவறே.. அதென்ன பேச்சுக்கு.. பேசாம கூட சொல்வியா?

வடி: (கவுண்ட மனியிடம்) அண்ணே.. நீங்களாச்சும் சொல்லுங்கண்ணே.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்னு சொல்றதில்லையாண்ணே..

க.மனி: எப்பா. நம்மள விட்டுருங்க.. நமக்கு அந்த கடாரத்தலையந்தான் லாயக்கு.. நீங்க ரெண்டு பேசறது ஒரு எளவும் நமக்கு புரியமாட்டேங்குது.. நா அம்பேல்.. நாளைக்கி பாக்கலாம்.. (நழுவுகிறார். ஆனால் வடிவேல் அவரைத் தாவிப் பிடித்துக்கொள்கிறார்)

வடி: அண்ணே.. நீங்களும் போய்ட்டீங்கன்னா என்னெ இவரு பேசியே கொன்னுருவாருன்னே.. ஒரேயொரு நிமிஷம் நில்லுங்கன்னே.. நானும் ஒங்களோடவே வந்துடறேன்.. .

பார்: சார்.. நீங்க ஏன் சார்.. போறீங்க? இவன் ஒங்கள எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தானோ அந்த காரியத்த முடிச்சி குடுத்தானா?

க.மனி: இல்லே.. அதுக்கென்ன இப்போ?

பார்: அதுக்கில்ல சார்.. ஒங்க காரியத்த இவன் முடிச்சி குடுத்துருந்தா நீங்க இவனுக்கு ஏதாச்சும் குடுப்பீங்க இல்லே.. அதான் சார் தரகர் ஃபீஸ்..

க.மனி: ஆமா.. அதான மொற..

பார்: சரி சார்.. ஆனா இவன் ஒங்கள கூட்டிக்கிட்டு வந்துட்டு வேலைய முடிக்கல்லேல்ல?

க.மனி: ஆமா.. அதுவும் சரிதான்..

பார்: அப்போ ஒங்களுக்கு இவன் ஏதாச்சும் குடுக்கணுமா இல்லையா?

வடி: (பதறிக்கொண்டு) யோவ்.. யோவ்.. என்னய்யா இது.. அக்கிரமமாருக்கு.. நாம்பாட்டுக்கு செவனேன்னு அண்ணனுக்கு ஒரு வீட்ட புடிச்சி குடுக்கலாம்னு போய்ட்டிருந்தா இப்படி இடையில வந்து வம்பு பண்றியே.. இது ஒனக்கே நல்லாருக்கா?

பார்: டேய்  நீ சும்மாரு.. ஒன்னைய கேட்டனா? நீங்க சொல்லுங்க சார்.. இவன் ஏதாச்சும் ஒங்களுக்கு குடுக்கணுமா, இல்லையா?

க.மனி: (சந்தேகத்துடன் பார்த்திபனைப் பார்க்கிறார்) நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு.. (வடிவேலுவைப் பார்க்கிறார்.. அவர் இருவருக்கும் தன் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்)

பார்: பாத்தீங்களா.. நா சொன்னா எப்பவுமே சரியாத்தான் இருக்கும்.. இவன் ஒளியறத பாருங்க. டேய் திரும்புடா (வடிவேலுவைப் பிடித்து திருப்புகிறார்)

வடி: என்னய்யா.. சொல்லு.. இப்ப நா என்ன பண்ணனுங்கற?

க.மனி: சார் சொன்னத கேட்டீல்லே.. சீக்கிரம் குடுத்துரு.. நா போட்டும்..

வடி: என்னண்ணே நீங்களுமா? இது நல்லால்லேண்ணே.. சொல்லிட்டேன்.. ஆம்மா..

(வடிவேலு சாலையில் சிதறி ஓடியவைகளை பொறுக்கி எடுக்க முடியாதபடிக்கு சாலையில் போவோரும் வருவோரும் தடை செய்ய வெறுத்துப் போய் கையிலிருந்த பையையும் வீசி எறிகிறார்.)

வடி: (எரிச்சலுடன்) போங்கய்யா.. போங்க.. இதையும் எடுத்துக்குங்க..

பார்: (வடிவேலுவின் தோளில் கைவைத்து தன் பக்கம் திருப்புகிறார்) டேய்.. என்ன என்னமோ பாரிவள்ளல் தேர குடுத்தா மாதிரி ஆக்ட் குடுக்கறெ? பிச்சாத்து பேக்.. என்னா ஒரு முப்பது வருசத்துக்கு முன்னால வாங்கிருப்பியா?

வடி: (பார்த்திபனின் கையை உதறிவிட்டு க.மனியை பார்க்கிறார்) அண்ணே நீங்க வாங்க.. ஒங்களுக்கு வீடுதானே வேணும்? இன்னக்கே பாத்துரலாம். இந்தாள்கிட்ட பேசிக்கிட்டிருந்தா பைத்தியம் புடிச்சிரும்.. நீங்க வாங்கண்ணே.. (அவர் முன்னே நடக்க.. க.மனி பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்.)

பார்: போங்க சார். அவர்தான் முடிச்சிடறேன்னுட்டாருல்ல.. (கழுத்தை அறுப்பதுபோல் சைகை செய்கிறார்)

(க.மனி அதை பொருட்படுத்தாமல் வடிவேலுவின் பின்னால் செல்கிறார். பார்த்திபன் சற்று தள்ளி அவர்களை பின் தொடர்கிறார்.)

வடி: (சாலையில் போவோர் ஒருவரிடம்) சார் இங்க 111 வன்னியர் தெரு எதுய்யா?

ஒருவர்: (நின்று கேலியுடன் வடிவேலுவையும் அவருடன் நின்ற க.மனியையும் மேலும் கீழும் பார்க்கிறார்) இன்னா கேட்டே.. யோவ்.. ஒன்னு வீட்ட கேளு.. இல்லாங்காட்டி ரோட்ட கேளு.. அதென்னா 111 வன்னியர் தெரு..? என்னமோ நூறு வன்னியர் தெரு இருக்கறா மாதிரி.. இன்னா ஊருக்கு புச்சா?

வடி: தப்புத்தான்யா.. தப்புத்தான்.. சரி.. வன்னியர் தெருங்கறது இதுதானய்யா..

ஒரு: ஆமாய்யா.. தோ இங்கருந்து சூளை மேடு கடோசி வரைக்கும் வன்னியர் தெருதான்.. ஒனக்கு எங்க போணும் அத்த சொல்லு.. (இருகைகளையும் முடிந்தமட்டும் விரித்து காட்டுகிறார்)

வடி: என்னய்யா இவ்வளவு விரிச்சி காட்றே.. அவ்வளவு பெரிய தெருவா.. இதுல நூத்தி பதினொன்ன நா எங்க போய் தேடறது? என்னடாது ரோதனையா போயிருச்சி.. ஏன்னே பாத்தீங்கல்லே.. போற காரியம் உருப்படாதுன்னு அந்த கெளவி சும்மாவா சொல்லிச்சு..?

க.மனி: யோவ்.. ஒனக்கு வீடே தெரியாதா? அப்ப இது வரைக்கும் ஜன்னலெ தொறந்தா தலைய பிச்சிக்கிறா மாதிரி காத்து வரும்.. (முடியை பிய்த்து எடுப்பதுபோல் ஆக்ஷன் கொடுக்கிறார்) பைப்ப திறந்தா இருபத்து நாலு மணி நேரமும் தண்ணி அருவியா (காலை மடக்கியவாறு குதித்துக் காட்டுகிறார்) கொட்டும்னுல்லாம் சொன்னியே அதெல்லாம் கப்ஸாவா?

வடி: (க.மனியின் தோளில் செல்லமாக குத்துகிறார்) போங்கண்ணே.. ஒங்களுக்கு எப்பவுமே குறும்புதான்.. அதெல்லாம் ஒரு பேச்சுக்கு சொன்னா.. நம்ம தொளில்ல இதல்லாம் இருக்கறதுதானெண்ணே..?

க.மனி: (தோளை தடவிக் கொண்டே) எது.. வீட்ட பாக்காமயே புருடா விடறதா? இதெல்லாம் ஒரு தொளிலாய்யா..?

(அவர்களை நெருங்கிய பார்த்திபன்) என்ன சார் மறுபடியும் பிரச்சினை பண்றானா?

க.மனி: (சலிப்புடன்) ஆம்மா சார்.. இவன் கூட படா ரோதனை. கொஞ்ச நேரத்துக்கு முன்னால காத்து மூஞ்சிய பிச்சிக்கிட்டு போவும்.. தண்ணி இருபத்துநாலு மணி நேரம் கொட்டும்னு சொல்லிட்டு இப்ப என்னடான்னா வீட்டையே தேடிக்கிட்டு அலையறான் சார்.. நீங்களே கேளுங்க..

வடி: அண்ணே.. என்னண்ணே.. நீங்க.. அதுக்கு இந்தாள் எதுக்கு...? நீங்க வாங்கண்ணே நா கூட்டிக்கிட்டு போறேன். (க.மனியின் கைகளைப் பிடித்து இழுக்கிறார்)

பார்: டேய்.. சார் சொல்றத பாத்தா ஒனக்கே வீடு சரியா தெரியலை.. இதுல இவர எப்படி கூட்டிக்கிட்டு போயி காமிக்க போற? சரி.. இப்ப சொல்லு வீட்டு விலாசமாவது கைல வச்சிருக்கியா? இல்ல அது அந்த பிஞ்சிப்போன பையோட போயிருச்சா?

வடி: யோவ் வேணாம்.. நீ ஒஞ்சோலிய பாத்துக்கிட்டு போ.. எங்களுக்கு தெரியும்.. நாங்க போய்க்குவோம்..

பார்: டேய்.. எஞ்சோலியே நீ என்ன பித்தலாட்டம்லாம் பண்றேன்னு பாக்கறதுதானடா.. அதான ஒவ்வொரு தடவையும் எங்கிட்டயே வந்து மாட்டிக்கறே.. சரி.. எந்த வீட்டுக்கு இவர கூட்டிக்கிட்டு போறே.. எனக்கு தெரியுதான்னு பாப்பம்.. ஏன்னா நானும் இங்கதாண்டா இருக்கேன்.. சொல்லு தெரு பேர் என்ன..

வடி:ஊம்? வன்னியர் தெரு..

பார்: அது இதுதான்.. வீட்டு நம்பர்?

வடி: 111

பார்: (திடுக்கிடுகிறார்) புதுசா, பழசா?

வடி: அப்படீன்னா?

பார்: அதாண்டா.. புது நம்பரா, பழைய நம்பரா?

வடி: (குழம்புகிறார்) இது வேறயா? சரி பழசுன்னே வச்சுக்குவோம்.. எங்கருக்கு?

பார்: (க.மனியைப் பார்க்கிறார்) பாத்தீங்களா சார்.. பழசா புதுசான்னு கேட்டா வச்சுக்குவோங்கான்.. (வடிவேலுவிடம்) டேய் இதென்ன சின்ன வீடா? வச்சிக்கலாங்கறே..

வடி: யோவ் தெரியும்னா தெரியும்னு சொல்லு.. இல்லன்னா ஆள விடு.. இப்படி இடக்கு மடக்.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் நிறுத்திக்கொண்டு தனக்குள்) ‘ஆஹா வேணாம்யா.. இந்த விளையாட்டு வேணாம்யா..’

பார்: டேய் என்னமோ சொல்ல வந்துட்டு முழுங்கறே.. சொல்லு என்னன்னுதான் கேப்பமே.. (க.மனியிடம்) என்ன சார்..

க.மனி: (சலிப்புடன்) ஒங்க ரெண்டு பேருக்கு நடுவுல என்னெ ஏன் சார் இழுக்கறீங்க? புதுசோ.. பழசோ எங்கருக்குன்னு சொல்லிருங்க சார்.. நேரம் போய்க்கிட்டேருக்குல்ல? இதுக்கு அந்த சட்டித்தலையன் கூடவே போயிருக்கலாம்.. எல்லாம் என் நேரம்..

வடி: அது ஒங்க நேரம் இல்லேண்ணே.. என் நேரம்.. அந்த கெளவி தலைய தடவுனீங்களே.. அப்ப ஆரம்பிச்சது..

பார்: (க.மனியிடம்) சார் நா கூட்டிக்கிட்டு போறேன்.. வாங்க (வடிவேலுவிடம்) டேய் நீ வேணாம்.. சார்க்கு நானே வீட்ட முடிச்சி குடுத்துடறேன்.. (இருவரும் செல்கின்றனர்)

வடி: (அவர்கள் பிறகு ஓடுகிறார்) யோவ்.. யோவ்.. இது அடுக்காதுய்யா.. எம் பொளப்புல மண்ணெ போட்றாத.. அண்ணே, அண்ணே நீங்களாச்சும் கேளுங்க.. இவன்கூட போகாதீங்க.. ஒங்கள பேசிய கவுத்துறுவான்..

பார்: (திரும்பி பார்க்காமலே) டேய்.. பின்னால வராத.. இவர்கிட்டருந்து  தரகர் ஃபீஸ் கிடைக்கும்னு மட்டும் கனவு கானாத..

க.மனி: அதான? வீடே தெரியாத ஆளு எனக்கெப்படி புடிச்சி குடுக்கறது? இதுல காத்து வரும் தண்ணி வரும்னு புருடா வேற.. நீங்க வாங்க சார்.. வந்து காமிங்க சார்.. (பார்த்திபனின் காதில் ரகசியமாக) சார் ஒங்களுக்கு கமிஷன் இருக்கா?

வடி: அண்ணே வேணாம்னே.. இவன் கூட போயிராதீங்க. வீட்டுக்காரனயும் பேசியே கொன்னுருவான்.. பெறவு வீடு கெடைக்காது ஒததான் கெடக்கும்.. இப்பவே  சொல்லிட்டன்..

க.மனி: (தனக்கே உரிய பாணியில்) போட்டே.. வீடு கெடச்சா வீடு ஒத கெடச்சா ஒத.. என்ன சார்?

பார்: அதெல்லாம் ஒங்கள மாதிரி டீசெண்டான ஆளுங்களுக்கில்ல சார்.. இவனெ மாதிரி டுபாக்கூர்ங்களுக்குத்தான்.. நீங்க வாங்க.. (வீடு வந்துவிடுகிறது) இதோ இந்த வீடுதான்.. வாங்க.. (திரும்பி வடிவேலுவை பார்க்கிறார்) டேய்.. உள்ள கிள்ள வந்த? மவனே?

வடி: (முறைக்கிறார்) யோவ்.. இப்ப என்ன சொன்னே?

பார்: யாரு.. நானா? ஏன் காதும் பொட்டையாயிருச்சா? (க.மனியிடம்) சார் நா இவன வராதேன்னு சொன்னது ஒங்களுக்கு கேட்டுதில்லே?

வடி: யோவ் பேச்ச மாத்தாத.. இப்ப நீ எங்க வராதேன்னு சொன்னே.. அத்த சொல்லு..

பார்: ஏன்? வீட்டுக்குள்ள வராதேன்னு சொன்னேன்..

வடி: இல்ல.. இல்ல.. நீ பேச்ச மாத்தற.. அப்படியா சொன்னே..? உள்ள, கிள்ள வராதேன்னு சொல்லலே? என்னெ சொல்லிட்டு நீ மட்டும் கிங்கன மங்கனன்னு பேசலாமாக்கும்? என்னண்ணே நீங்களே சொல்லுங்க.. உள்ள சரி.. அதென்ன கிள்ள? இவரு கேக்கும்போது நா மட்டும் கேக்க கூடாதாக்கும்.. இதென்னண்ணே நியாயம்? கேளுங்கண்ணே.. கேளுங்கண்ணே..

க.மனி (மாட்டிக்கிட்டியாடா என்பதுபோல் ஓரக்கண்ணால் பார்த்திபனை பார்க்கிறார்) சார்.. இது ஒங்களுக்கு தேவையா?

பார்: (சமாளித்துக்கொண்டு) டேய்.. ஞான சூன்யம்.. உள்ள, கிள்ள வராதேன்னா.. வீட்டுக்குள்ள வந்து ஒன் தொணதொண பேச்சால உள்ள இருக்குறவங்கள கிள்ளாதேன்னு அர்த்தம்.. அதாவது டார்ச்சர் பண்ணாதேன்னு அர்த்தம்.. புரியுதா? (க.மனியிடம்) நீங்க வாங்க சார்.. இந்த அரையணா பயகிட்ட பேசிக்கிட்டு..

வடி: ஆஹ்ஹா.. என்னமா பிலிம் காட்டறான்யா.. (தனக்குள்) சரீஈஈ.. இவனுக்கு இந்த வீட்டுக்காரனெ உண்மையிலயே தெரிஞ்சிருக்குமோ.. ரொம்ப வெரசால்லே போறான்.. எதுக்கும் பின்னாலயே பூனை மாதிரி போய் பாப்போம்.. (அக்கம் பக்கம் பார்த்துவிட்டு காவியேறிய வேட்டியை அண்டர்வேருக்கு மேலே தூக்கி கட்டிக்கொண்டு காலணியை வாசலில் கழற்றி வைத்துவிட்டு உள்ளே பதுங்கி, பதுங்கி நுழைகிறார்)

வீட்டுக்குள்..

க.மனி (ஒரு மர நாற்காலியில் அமர்ந்தவாறு) என்னடாயிது.. தோ வீட்டுக்காரனோட வரேன்னு போன இந்த ஆளையும் காணம்..? அவன் என்னைக்கி வந்து என்னைக்கி வீட்ட் பாத்து.. இன்னைக்கி யார் மொகத்துல முளிச்சனோ.. அந்த ஓல்ட் லேடி சொன்னது சரியாத்தான் இருக்கும் போலருக்கே..

வடி: (கதவு மறைவிலிருந்து) பின்னே.. நாளைக்கு பாத்துக்கலாம்னு சொன்னப்பவே போயிர வேண்டியதானே..

க.மனி (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்..) என்ன இது.. அந்த தரகர் கொரல் மாதிரி இருக்கு.. அந்தாளு ஆவியாருக்குமோ..

(வீட்டுக்குள் இருந்து பார்த்திபன் உடை மாற்றிக்கொண்டு கெத்தாக ஒரு அகண்ட புன்னகையுடன் வருகிறார்)

க.மனி: (எரிச்சலுடன்) என்ன சார் நீங்க மட்டும் வரீங்க? வீட்டுக்காரர கூப்டுங்க சார்.. பேசிட்டு போவேணாமா..? (வீட்டுக்குள் எட்டிப்பார்த்து) சார்.. சார்.. வாங்க சார்.. வந்து வீட்ட காமிங்ங்ங்க சார்.. (அழுத்தி குரலெழுப்புகிறார்)

பார்: சார்.. (அவர் வாயை பொத்துகிறார்) நீங்க மொதல்ல வீட்ட சுத்தி பாருங்க.. பிடிச்சிருந்தா வீட்டுக்காரர கூப்டறேன்..

க.மனி: (பார்த்திபனை மேலும் கீழும் பார்க்கிறார்) சரீஈஈஈ.. நீங்க எப்படி டிரஸ்ஸையெல்லாம்.. ஏன் சார் இது ஒங்க வீடுதானே?

பார்: (விஷமத்துடன் சிரிக்கிறார். பிறகு ரகசியமாக) ஆமா சார்.. அந்த புரோக்கர் பயலுக்கு நீங்களும் கமிசன் குடுக்க வேணாம், நானும் குடுக்க வேணாம் பாருங்க.. அதான் சும்மா அப்படி நடிச்சேன்.. இப்ப பாருங்க.. நான் வீட்டுக்காரன்.. நீங்க வாடகைக்கு வர போறவர்.. இதுல மூனாம் மனுசன் அவன் எதுக்கு? நீங்க வாங்க வந்து வீட்ட பாருங்க.. பிடிச்சிருந்தா முடிச்சிருவோம்..

(வடிவேலு மறைவிலிருந்து) அட பாவிப் பயலுவளா.. இதுக்குத்தான் இந்த அளவுக்கு பம்முனானுவளா? சை.. நாசமா போக.. நாள் பூரா சுத்துனதுக்கு இதுதான் கூலியா.. வீட்டு நம்பர் 111னு இருந்தப்பவே நினைச்சேன்.. ஆனா அது இப்படி முடியும்னு தெரியாம போயிருச்சே.. (சலிப்புடன் வந்த வழியே வெளியேறுகிறார்)


நிறைவு..

இதுவும் ஒரு மீள் பதிவுதான். ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது. இன்றைய பதிவர்கள் இதை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இந்த கலாட்டா பதிவு.

8 comments:

வே.நடனசபாபதி said...

மீள் பதிவானாலும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் பதிவு இது. எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் பதிவிடலாம். வங்கியாளர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என சிலர் சொல்வதுண்டு. அதை பொய்யாக்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்! இது போன்ற பதிவுகள் வரட்டும் உங்களிடமிருந்து.

வேடந்தாங்கல் - கருண் said...

எனை மறந்து சிரிக்க வைத்த பதிவு.. நன்றி..

ஜீவன்சுப்பு said...

ஹா ஹா ஹா ....!
GREAT EFFORT ஜோசப்ஜி..! சூழலையும் , கதாபாத்திரங்களையும் ரெம்ப நகைச்சுவையுடன் எழுத்துல கொண்டு வந்துருக்கீங்க ...! சூப்பர் . ...!

//காலில் பரபரத்து எல்லாவற்றையும் சேகரித்து//

//(வடிவேலு சாலையில் சிதறி ஓடியவைகளை பொறுக்கி எடுக்க முடியாதபடிக்கு சாலையில் போவோரும் வருவோரும் தடை செய்ய வெறுத்துப் போய் கையிலிருந்த பையையும் வீசி எறிகிறார்.//)

ஏற்கனவே தான் சேகரித்து நிமிர்ந்து விட்டாரே ...!

தி.தமிழ் இளங்கோ said...

// இதுவும் ஒரு மீள் பதிவுதான். ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதியது. //

நான் இப்போதுதான் முதன் முறையாகப் படித்தேன். ரசித்தேன். பார்த்திபன் வீடு என்று தெரியாமலேயே வடிவேலு அங்குதான் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்தேன். அப்படியே நடந்தது.


டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
மீள் பதிவானாலும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் பதிவு இது. எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் பதிவிடலாம். //

நன்றி சார்.

வங்கியாளர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என சிலர் சொல்வதுண்டு. //

இப்படியும் சொல்கிறார்களோ!

இது போன்ற பதிவுகள் வரட்டும் உங்களிடமிருந்து.//

இந்த மாதிரி ஐடியாக்கள் அத்திப் பூத்தாற்போல்தான் வரும். பழைய பதிவுகள் இன்னும் சில உள்ளன. தேடிப் பிடித்து மீள்பதிவு செய்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வேடந்தாங்கல் - கருண் said...
எனை மறந்து சிரிக்க வைத்த பதிவு..//

மிக்க நன்றி கருண்.

டிபிஆர்.ஜோசப் said...

வன்சுப்பு said...
ஹா ஹா ஹா ....!
GREAT EFFORT ஜோசப்ஜி..! சூழலையும் , கதாபாத்திரங்களையும் ரெம்ப நகைச்சுவையுடன் எழுத்துல கொண்டு வந்துருக்கீங்க ...! சூப்பர் . ...! //

மிக்க நன்றி ஜீவன்!

ஏற்கனவே தான் சேகரித்து நிமிர்ந்து விட்டாரே ...!//

அதானே... சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

தி.தமிழ் இளங்கோ said...

பார்த்திபன் வீடு என்று தெரியாமலேயே வடிவேலு அங்குதான் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்தேன். அப்படியே நடந்தது.//

சூப்பர் சார்... கரெக்டா யூகிச்சிருக்கீங்க.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.