02 September 2013

சொந்த செலவில் சூன்யம் 5


"Administration of criminal justice is carried out through Magistrate- Courts and 
Sessions courts.  The Court at the lowest level is called Judicial Magistrate of the second class"ராஜசேகர் அலுவலகம் சென்றடைந்ததும் தன் குமாஸ்தாவை அழைத்தான்.

'யோவ் அர்ஜன்டா ஒரு வேலை.' 

நாகு என்கிற நாகேந்திரன் ஒரு கூழை கும்பிடுடன் அவனை நெருங்கினான். 'சொல்லுங்க சார்.'

மாதவியின் கொலை சம்பவத்தைப் பற்றி சுருக்கமாக கூறினான். "முதல்ல மைலாப்பூர் E1 ஸ்டேஷனுக்கு போ. அங்க இந்த கேஸ்ல அரஸ்டான அக்யூஸ்ட் இருக்காரான்னு விசாரி. அத்தோட எந்த கோர்ட்ல, எத்தனை மணிக்கி அவர இன்னைக்கி ப்ரொட்யூஸ் பண்றாங்கங்கற டீட்டெய்ல்சும் வேணும்.'

அவன் முடிப்பதற்குள் 'செஞ்சிரலாம் சார்.. இதெல்லாம் சப்பெ மேட்டர்' என்று நகன்றவனை எரிச்சலுடன் நிறுத்தினான். 

'யோவ் நில்லுய்யா, நா இன்னும் சொல்லியே முடிக்கல....'

'சொல்லுங்க சார்.' 

'அப்படியே FIR போட்டாச்சான்னு பாக்கணும். முடிஞ்சா ஒரு காப்பிய கையோடு வாங்கிட்டு வந்துரு.... என்ன புரியுதா?'

நாகு தலையை சொறிந்தான். 'FIR காப்பிக்கி.....'

'ரொம்ப சொறியாத..' என்று எரிந்து விழுந்த ராஜசேகர்,' இந்தா இத கைச் செலவுக்கு வச்சிக்கோ..' என்று 500 ரூபாய் நோட்டை நீட்டினான்.

நாகு கண்கள் வெளியில் வந்து விழுந்துவிடும் அளவுக்கு விரிந்தன. 'என்னாச்சி இவருக்கு... பணம் தன்னியா புரளுது!'

'யோவ் பெருசா முழிக்காத. பாக்கவே பயமாருக்கு... அரெஸ்டாயிருக்கறது நமக்கு வேண்டியவரோட மகன். நல்ல வசதி. அதனால செலவ பத்தியெல்லாம் யோசிக்காம காரியம் நடக்கணும். புரிஞ்சிதா. உடனே ஆட்டோவ புடிச்சி போ. ஆட்டோன்னா ஆட்டோதான் புரியுதா? பஸ்ல போய்ட்டு ஆட்டோ காச சாப்ட்டுறலாம்னு ப்ளான் பண்ணாத. எப்படியும் பகலுக்குள்ள அவர கோர்ட்டுக்கு கொண்டு வருவாங்கன்னு நினைக்கறேன். அதுக்கு முன்னால எந்தெந்த செக்‌ஷன்ல போட்ருக்காங்கறது தெரியணும். அப்பத்தான் பெய்ல் கிடைக்குமா, கிடைக்காதாங்கறது தெரியும்... போ...'

நாகு ஒரு சந்தேகத்துடன் ராஜசேகரை ஓரக் கண்ணால் பார்த்தான். சார் பயங்கர ஃபார்முக்கு வந்துட்டார் போல. இந்த மாதிரி மூச்சு விடாம இவர் பேசி எத்தனை நாளாச்சிது?

'என்னய்யா பாத்துக்கிட்டு நிக்கற? கிளம்பிப் போ...'

'இல்ல சார்... இன்னைக்கி வேற ரெண்டு கேஸ் இருக்கே... அதான்...'

'தெரியும்யா வாய்தா வாங்கிரலாம்...'

ஆமா... ஒன்னுமில்லாதவங்க கேஸ்னா வாய்தா வாங்கியே கொன்னுருங்க.... பசையுள்ள ஆள்னா... கால்ல சுடுத்தண்ணி ஊத்துனா மாதிரி....

'யோவ் நாகு.... என்னய்யா பண்றே?'

'தோ கெளம்பிட்டேன் சார்...'

வாசலை நோக்கி விரைந்தவனை தடுத்து நிறுத்தியது ராஜசேகரின் குரல்...

'வசந்த ஊர்ல இருக்காரா.... ஒனக்கேதாச்சும் தெரியுமா?'

'ஊர்லதான் இருக்கார் சார்... நேத்தைக்கிக் கூட கோர்ட்ல வச்சி பாத்தேன்.'

'சரி நீ போ... விவரம் தெரிஞ்சதும் ஃபோன் பண்ணு.'

'சரி சார்.' என்றவாறு நாகு வெளியேற ராஜசேகர் தன் கைப்பேசியை எடுத்து அவனுடைய முன்னாள் அசிஸ்டென்ட் வசந்தை அழைத்தான். 

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும் 'வசந்த் ஃப்ரியா இருக்கியா?' என்றான்.

'உங்க கிட்ட பிசின்னு பொய் சொல்ல முடியுமா பாஸ்' 

மாதவியின் கொலையைப் பற்றி அதுவரை நடந்தவைகளை சுருக்கமாக சொல்லி முடித்துவிட்டு, 'அது விஷயமா பேசணும்... கோர்ட்டுக்கு வாயேன்....' என்றான். 'இன்னைக்கி கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணுவாங்கன்னு நினைக்கேன். போலீஸ் கஸ்டடி கேப்பாங்களாருக்கும். அப்புறம் இன்னும் ரெண்டு கேஸ் இருக்கு. அநேகமா மத்தியானத்துக்கு மேலதான் ஹியரிங் இருக்கும்னு நினைக்கேன். அதுக்கு முன்னால லஞ்சுக்கு மீட் பண்லாம்.. என்ன சொல்றே?'

'நிச்சயமா பாஸ்... ஒரு மணி போல வரட்டுமா?'

'வந்துரு... வேற ஏதாச்சும் இடையில வந்துருச்சின்னா நா ஃபோன் பண்றேன்...'

'சரி பாஸ்...'

'என் ஃபோன் வரலைன்னா சரியா ஒரு மணிக்கி மீட் பண்றோம்...'

ராஜசேலர் இணைப்பை துண்டித்துவிட்டு அன்றைய தினம் ஆஜராக வேண்டிய கேஸ் கட்டுகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை பூட்டிக்கொண்டு கிளம்பினான்.

****

தன்னுடைய அலுவலக கட்டிட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகன கதவைத் திறந்து தன் கையிலிருந்த கைபெட்டியையும் கேஸ் கட்டுகளையும் பின்னிருக்கையில் வைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்யவும் அவனுடைய கைப்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. யாரென்று பார்த்தான். குமாஸ்தா!

'என்ன சொல்லு? எந்த கோர்ட்?'

'சைதாப்பேட்டை 12 சார்.'

'எத்தன மணிக்கி?'

'ஸ்டேஷன்லருந்து அக்யூஸ்ட்டோட கிளம்பிட்டாங்க சார்... மேக்சிமம் ஆஃப்னவர்.'

'சரி..' என்றவன் சட்டென்று நினைவுக்கு வர, 'ஒங்கிட்ட வக்காலத்து ஃபார்ம் இருக்கா?'

'இருக்கு சார்...'

'சரி... கேட்கிட்ட வெய்ட் பண்ணு.... மேக்சிமம் காலவர்...'

'சார் அப்ப நம்மளோட பார்ட்டிங்க?'

'அது ஹியரிங் வர்றதுக்குள்ள இது முடிஞ்சிரும்யா... நீ வா... பாத்துக்கலாம்....'

மீண்டும் மறுமுனையிலிருந்து அவனுடைய குமாஸ்தா ஏதோ மறுத்துப் பேசுவதற்கு முயல்வதை உணர்ந்த ராஜசேகர் அதற்கு வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்தான். 

நல்லவேளையாக அவன் செல்லும் பாதையில் அன்று வாகன நெரிசல் குறைவாகவே இருந்ததால் கால் மணி நேரத்திற்கும் முன்பாகவே அவனால் நீதிமன்ற வளாகத்தை அடைய முடிந்தது. 

அவனுடைய வாகனம் வாசலுக்குள் நுழையவே காத்திருந்தது போல் அவனுடைய கட்சிக்காரர் ஒருவர் அவனை நோக்கி ஓடி வந்தார். 

ராஜசேகர் வாகனத்தை பூட்டியவாறே தன் எதிரில் நின்ற கட்சிக்காரரிடம் பேசினான். 'என்ன சொல்லுங்க?'

'என்ன சார் அசால்டா கேக்கறீங்க? இன்னைக்கி தம்பிக்கி பெய்ல் கிடைச்சிருமா? வீட்ல ஒரே பிரச்சினை சார்.'

ராஜசேகர் அவருக்கு பதிலளிக்காமல் 12ம் எண் பெருநகர் நடுவர்  நீதிமன்ற (மெட்ரோபோலிடன் மஜிஸ்திரேட் கோர்ட்) அறையை நோக்கி நடந்தான். அவரை பின்தொடர்ந்த கட்சிக்காரர், 'என்ன சார் பேசாம போறீங்க? ஏதாச்சும் பாசிட்டிவா சொல்லுங்க சார். இன்னைக்கி பெய்ல் கிடைச்சிரும்தான?'

'கிடைச்சிரும்னுதான்யா நானும் நினைக்கேன். போனதடவை போலீஸ் சைட்லருந்து சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ற வரைக்கும் இவருக்கு பெய்ல் குடுக்கக் கூடாதுன்னாங்க. ஜட்ஜ் 15நாள் ஜூடிஷியல் கஸ்டடின்னார். அது இன்னையோட முடியுது. ஆனா இன்னைக்கி சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணுவாங்களான்னு இதுவரைக்கும் ஒரு தகவலும் இல்லை. வேணும்னே 
இழுத்தடிக்கிறாங்கன்னுதான் தோனுது...'

'எதுக்கு சார்?'

ராஜசேகர் நின்று அவரை திரும்பிப் பார்த்தான். 'ஏன், ஒங்களுக்கு தெரியாதுங்களா?'

அவர் திகைப்புடன் அவனை பார்த்தார். 'எனக்கா, என்ன சார் சொல்றீங்க?'

ராஜசேகர் அவரை முறைத்தான். 'ஏங்க, ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கறீங்க? நீங்கதான எம்எல்ஏவ தெரியும், மினிஸ்டர தெரியும்னு போலீஸ் ஸ்டேஷன்ல போயி சவடால் பேசனீங்க? ஏதாச்சும் செய்ய முடிஞ்சிதா? இல்லேல்லே? அந்த எஸ்.ஐ கடுப்பாய்ட்டார். அதான் இழுத்தடிக்கிறார்.....' 

அவன் மீண்டும் 12ம் அறையை நோக்கி வேகமாக நடக்க கட்சிக்காரர் அவர் பின்னால் ஓடி வந்தார். 'தப்புத்தான் சார்... எல்லாம் நம்ம சகல பண்ண வேலை சார்... காசுக்கு காசுக்கும் போச்சி... இப்ப மானமும் போவுது.... சார் நீங்கதான் 
எப்படியாச்சும் இன்னைக்கி......'

'சரி... நீங்க போய்ட்டு ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி வாங்க... பகலுக்கு மேலதான் ஹியரிங் இருக்கும் போலருக்கு... பாத்து செய்யிறேன்.'

கட்சிக்காரரின் பதிலுக்கு காத்திராமல் அவன் விரைந்து சென்று சென்னை பெருநகர் நடுவர் 12 என்று குறிப்பிட்டிருந்த அறைக்குள் நுழைய கட்சிக்காரர் அவனை சபித்துக்கொண்டே தன் வாகனம் நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்தார்

*****

நீதிமன்ற அறைக்குள் நுழைந்த ராஜசேகர் அறையை பார்வையால் துழாவினான். நடுவர் இருக்கை காலியாக இருந்தது. 

அவர் தன் இருக்கைக்கு வருவதற்கு இன்னும் பத்து, பதினைந்து நிமிடங்கள் ஆகும் போலிருந்ததால் ஓரிரு வழக்கறிஞர்களைத் தவிர அறை காலியாக இருந்தது. தன்னுடைய குமாஸ்தாவை தேடினான். காணாததும் அறையை விட்டு வெளியில் வந்து வராந்தாவில் நின்றான்.

கைப்பேசியை எடுத்து குமாஸ்தாவை அழைத்தான். 'யோவ் எங்க இருக்கே? கால் மணி நேரத்துல வந்துருவேன்னு சொன்னேன் இல்ல?'

'தோ வந்துட்டேன் சார்... மைலாப்பூர்லருந்து வர வேணாமா? ஒங்கள மாதிரி கார்லயா வரேன்?'

ராஜசேகருக்கு சுர்ர்ர்ர்ரென்று கோபம் வந்தது. அடக்கிக்கொண்டான்.  அவனுடைய குமாஸ்தாவிடம் கோபம் செல்லுபடியாகாது என்று தெரியும். 'சரி.. சரி...வா... வெய்ட் பண்றேன்.' என்று பதிலளித்துவிட்டு மீண்டும் நீதிமன்ற 
அறைக்குள் நுழைந்து நேரே நடுவர் இருக்கைக்கு முன் அமர்ந்திருந்த நீதிமன்ற அலுவலரை நெருங்கினான்.  

'என்ன பாஸ்கர் சவுக்கியமா?'

பாஸ்கர் என்ற அலுவலர் அவனை வியப்புடன் பார்த்தான். 'என்ன சார் இன்னைக்கி விசாரிப்பெல்லாம் பலமா இருக்கு? ஏதாச்சும் காரியம் ஆவணுமா?'

'அதெல்லாம் இல்லை... பாத்து ரொம்ப நாளாச்சேன்னு கேட்டேன்....'

'சரி... சொல்லுங்க.'

'நேத்து மாதவின்னு ஒரு சினிமா எக்ஸ்ட்ரா கொலை......'

'ஆமா சார், டிவியில பாத்தேன்.... ஏன் அக்யூஸ்ட இன்னைக்கி கொண்டு வராங்களா?'

'ஆமா.... அவருக்கு நாந்தான் டிஃபென்ஸ்'

பாஸ்கர் வியப்புடன் மேலிட அவனை பார்த்தான். 'என்னது நீங்களா? அக்யூஸ்ட் கொஞ்சம் பெரிய எடம் மாதிரி தெரிஞ்சிதே....'

ராஜசேகர் அவன் குரலில் இருந்த கேலியை கவனிக்க தவறவில்லை. இருந்தாலும் காரியம்தான் இன்றைக்கு பெரிசு என்று நினைத்தான். 'நக்கல் பண்ணாத பாஸ்கர்.... அவரோட அப்பா நம்ம அப்பார்ட்மென்ட்லதான் குடியிருக்கார். நீ சொன்னா மாதிரி பெரிய எடம்தான். ஆனா என்ன பண்றது? என்னோட அதிர்ஷ்டம் அவங்களுக்கு வேற யாரையும் தெரியல... அதான் நம்ம கிட்ட வந்து மாட்டிக்கிட்டாங்க...'

பாஸ்கர் சிரித்தான். 'சார் நா சும்மா ஜோக்குக்கு சொன்னேன்.... ஐயா ரெண்டு நிமிஷத்துல வந்துருவார்னு நினைக்கேன்... சேம்பர்லதான் இருக்கார்.... ஏதாச்சும் செய்யணுமா?'

'இல்லைய்யா.... சார் என்ன மூட்ல இருக்கார்?'

'அவர் என்னைக்கி நல்ல மூட்ல இருந்துருக்கார்? எப்பவும் போலத்தான்.. என்ன பெய்ல் மூவ் பண்ண போறீங்களா? மர்டர் கேஸாச்சே....'

'எனக்கு தெரியாதா பாஸ்கர்...  கேட்டாலும் கிடைக்காது... போலீஸ் என்க்வயரி பண்றப்போ கூட இருக்கலாம்னு பாத்தேன். அக்யூஸ்டோட அப்பா போலீஸ்ல என்க்வயரிங்கற பேர்ல ஃபிசிக்கலா அவர ஏதாச்சும் செஞ்சிருவாங்களோன்னு 
பயப்படறார்.... அதான் சார் நல்ல மூட்ல இருந்தா கேட்டு பாக்கலாமேன்னு.....'

அவன் பேசிக்கொண்டிருக்கும் போது நீதிமன்ற நடுவரின் ஊழியன் அறைக்குள் நுழைய பாஸ்கர், 'சரி சார்... நீங்க சீட்டுக்கு போயிருங்க... அப்புறம் அதனாலயே ஐயா மூட் அவுட் ஆயிரப்போறார்.' என்றவாறே தன் இருக்கையில் இருந்து எழுந்து நிற்க ராஜசேகர் அவசர, அவசரமாக அறையை விட்டு வெளியில் வந்தான். அந்த நடுவர் இருக்கையில் அமர்ந்த பிறகு அறைக்குள் இருந்து யாராவது வெளியேறினால் அவ்வளவுதான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். 

அவன் வராந்தாவில் வந்து நின்றதும் அவனுடைய குமாஸ்தா நீதிமன்ற வளாகத்திற்குள் ஓட்டமும் நடையுமாக நுழைவது தெரிந்தது. அவன் மூச்சிறைக்க தன் அருகில் வந்ததும்... 'பார்த்துய்யா.. இப்படி இறைக்கிது?' என்றான் கேலியாக.

'ஏன் சொல்ல மாட்டீங்க?' 

'சரி...சரி... அந்த வக்காலத்து பேப்பர்ஸ எடு...'

அவன் தன் கைப்பையிலிருந்து எடுத்து கொடுத்த வெத்து வக்காலத்து படிவத்தை தன் கைப்பெட்டியின் மீது வைத்து மளமளவென்று பூர்த்தி செய்து குமாஸ்தாவிடம் அளித்தான். 'யோவ், அக்யூஸ்ட கொண்டு வந்ததும் நா போயி அவர பார்த்து நா யார்னு சொல்லி பேச்சு குடுப்பேன்... நீ உடனே வந்து அவர்கிட்ட இதுல கையெழுத்த வாங்கி பாஸ்கர்கிட்ட குடுத்துரு... மத்தத நா பாத்துக்கறேன்...'

'சரி சார்... அதுக்கப்புறம் நா இங்க இருக்கணுமா, இல்ல....?' என்று நாகு இழுக்க..

ராஜசேகர் எரிந்து விழுந்தான். 'யோவ், ஒன்னெ நம்புனா குட்டிச்சுவர்தான்.. இன்னைக்கி அந்த அடையார் ஆசிட் கேஸ் இருக்கே... இன்னைக்கி பெய்ல் கிடைச்சிருமான்னு பார்ட்டி இப்பத்தான் வந்து கேட்டுட்டு போறார்.' தொலைவில் நின்றிருந்த அவருடைய வாகனத்தை சுட்டிக்காட்டினான். 'அதோ பார் அவர் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கார். அவர்கிட்ட நம்ம ப்ரிப்பேர் பண்ணி வச்சிருக்கற பெய்ல் பெட்டிஷன காமிச்சிரு. அப்பவாவது கொஞ்சம் நிம்மதியா இருப்பார்.... அது பகலுக்கு மேலதான் வரும் போலருக்கு...'

'சரி சார்...' என்றவாறு கட்சிக்காரர் நின்றிருந்த திசையை நோக்கி நடக்க ராஜசேகர் அவனை அழைத்தான். 

'என்ன சார்?' என்று திரும்பி வந்த குமாஸ்தாவை நெருங்கிய ராஜசேகர், 'யோவ், பார்ட்டி ஏதாச்சும் கேஷ் கொண்டு வந்துருக்காரான்னு பாரு... இன்னைக்கிம் பெய்ல் கிடைக்கலன்னா அந்த கோவத்துல நம்மள டீல்ல வுட்டுட்டு போயிருவார்... அப்புறம் ரெண்டு வாரம் வரைக்கும் ஒன்னும் பேறாது... என்ன, சொல்றது புரியுதா?'

'சரி சார்.. அத நீங்க சொல்லணுமா? நா பாத்துக்கறேன்..'

'சரி போ... ஒரு பத்தாயிரமாவது ஒப்பேறுதான்னு பாரு...'

'சரி சார்...' என்று அவன் நகர ஒரு காவல்துறை வாகனம் நீதிமன்ற வளாகத்தினுள் நுழைவதைப் பார்த்தான். வாகனத்தை தொடர்ந்து வளாகத்தினுள் நுழைந்த டொயோட்டா கார் அவனுடைய கவனத்தை ஈர்க்க வராந்தாவிலிருந்து இறங்கி அதை நோக்கி விரைந்தான். கேஸ் கைய வுட்டு போயிருமா? இந்த மனுஷன் வேற எந்த வக்கீலையாவது புடிச்சிட்டாரா என்ன?

தொடரும்..

10 comments:

வே.நடனசபாபதி said...

நீதிமன்ற நடைமுறைகளை தெரிந்தவர்களால் மட்டுமே இது போன்று எழுதமுடியும் என நினைக்கிறேன். தொடரைப் படிக்கின்றபோது நாமே வழக்கறிஞர் ராஜசேகரனோடு பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...


சரளமான நடை. .அட்வொகேட், வக்கீல் இவர்களில் வித்தியாசம் உண்டா. ? கடைசி வரி அடுத்த பதிவை எதிர்பார்க்கத்தூண்டுகிறது.

டிபிஆர்.ஜோசப் said...

நீதிமன்ற நடைமுறைகளை தெரிந்தவர்களால் மட்டுமே இது போன்று எழுதமுடியும் என நினைக்கிறேன். //

இந்த சப்ஜெக்ட எழுதறதுக்கு முன்னால ரெண்டு நாள் சைதாப்பேட்டை மஜிஸ்டிரேட் மற்றும் சம்மன்ஸ் நீதிமன்றங்களில் பார்வையாளராக அமர்ந்து நடந்துக்கொண்டிருந்த வழக்குகளை கவனித்தேன். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எவ்வித ஃபார்மாலிட்டியும் இல்லாமல் மிகவும் சகஜமாக பேசிக்கொண்டதை கண்டு வியந்தேன். அதை அப்படியே எழுத்தில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன். இனி வரும் பகுதிகளிலும் இது வெளிப்படும்.

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிகவும் நன்றி சார். நேற்றைய பதிவர் சந்திப்பில் சென்னை பித்தன் அவர்களைச் சந்தித்தேன் நீங்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றியதாக கூறினார். நீங்கள் ஊரில் இல்லை போலிருக்கிறது. உங்களையும் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு பறிபோனதில் சற்று வருத்தம்தான்.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

சரளமான நடை. .அட்வொகேட், வக்கீல் இவர்களில் வித்தியாசம் உண்டா. ?//

லாயர், அட்வகேட், வக்கீல்.... எல்லாமே வழக்கறிஞர்களைக் குறிப்பிடுவது என்றுதான் நினைக்கிறேன்.

கடைசி வரி அடுத்த பதிவை எதிர்பார்க்கத்தூண்டுகிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

Sasi Kala said...

தலைப்பு வித்தியாசமா இருக்கு முன் பதிவுகளை படித்து விட்டு வருகிறேன்.

சென்னை பித்தன் said...

நிறைய ரிசர்ச் பண்ணி எழுதறீங்கன்னு தெரியுது!விறு விறுப்பாவும் போகுது.தொடருங்கள்;தொடர்கிறேன்

Packirisamy N said...

I don’t remember reading so much about lawyers, their activities and legal procedures in Tamil. I was hesitant to read a fiction, but the information detailed makes it worthy. The flow of writing is also beautiful.Thanks.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
தலைப்பு வித்தியாசமா இருக்கு முன் பதிவுகளை படித்து விட்டு வருகிறேன்.//

'இதுவரை'ங்கற லிங்க்லயே இதுவரைக்கும் பப்ளிஷ் பண்ண கதை pdf வடிவுல இருக்கு.

வருகைக்கு மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

சென்னை பித்தன் said...
நிறைய ரிசர்ச் பண்ணி எழுதறீங்கன்னு தெரியுது!விறு விறுப்பாவும் போகுது.//

நிறைய இல்ல... கொஞ்சம் ரிசர்ச் பண்ணேன்:))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
I don’t remember reading so much about lawyers, their activities and legal procedures in Tamil.//

It is for this reason I thought that I should try this approach. A crime story should not end with the identification of the culprit. It should go on to see that he is found guilty and punished. You would be able to see not only the struggles of the police in this process and also the petty minded ego clashes among them.

I was hesitant to read a fiction, but the information detailed makes it worthy.//

Thanks for the faith in me. I think you would not be disappointed. Please continue to give me your feedback.