27 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 30


முன்கதை

கோப்பு 1

கோப்பு 2
அவர் சொல்ல வந்தது புரிந்தும் வேண்டுமென்றே 'எங்க சார்?' என்றார் தன்ராஜ். வழக்கப்படி குற்றப்பத்திரிக்கையை தயாரித்ததும் அதை தயாரித்தவரே சம்மந்தப்பட்ட வழக்கை நடத்தவிருக்கும் அரசு வழக்கறிஞரிடம் கொண்டு சென்று விவரிப்பதுண்டு. அந்த வழக்கம் தன்ராஜுக்கு தெரிந்தும் இம்முறை அதை செய்ய அவர் விரும்பவில்லை. 

'என்ன சார் புதுசா கேக்கறீங்க? நேத்து சாயந்தரமே பி.பி. ரெண்டு தடவை கூப்ட்டுட்டார்.... நாந்தான் நீங்க வேற ஒரு கேஸ் இன்வெஸ்ட்டிகேஷனுக்கு போயிருக்கீங்க... நாளைக்கி காலைல அவர் உங்கள வந்து பாப்பார்னு சொல்லியிருக்கேன்....'

அப்போதும் தன்ராஜ் விருப்பமில்லாமல் நிற்பதை கவனித்த பெருமாள், 'தன்ராஜ், ஒரு நிமிஷம் ஒக்காருங்க.' என்றார்.

அவர் அமர்ந்ததும் ஆய்வாளர் தொடர்ந்தார். 'இங்க பாருங்க தன்ராஜ்.... இந்த கேஸ் ட்ரையலுக்கு வர்றப்போ செஷன்ஸ் கோர்ட்ல பிபிதான் ஆஜராவார்... அதனாலதான் அவர் இதுல நடுவுல வறார்னு நா நினைக்கேன். அவருக்கும் அக்யூஸ்டுக்கும் முன்விரோதம் ஏதோ இருக்குங்கறதும் தெரியுது. ஆனா அதப்பத்தி நமக்கு கவலையில்லை.... நமக்கு இந்த ஃபைல க்ளோஸ் பண்ணனும்.... அக்யூஸ்ட் கன்விக்டானா அத விசாரிச்ச உங்களுக்கும்தான நல்லது?'

'அதுலதான் சார் டவுட்டே.... அக்யூஸ்ட கன்விக்ட் பண்றதுக்கு போதுமான ஆதாரம் இருக்கான்னே தெரியலையே.... இருக்கற ரெண்டு மெயின் விட்னசுமே சம்பவத்த நேர்ல பாக்காதவங்க சார்... எல்லாமே வெறும் circumstantialஆவே இருக்கே..... அந்த டிஃபென்ஸ் லாயர் எப்படியோ தெரியல.... ஆனா விவரம் தெரிஞ்ச ஒரு லாயரால ட்ரையல் ஸ்டேஜிலயே போதுமான ஆதாரம் இல்லேன்னு டிஸ்மிஸ் பண்ண வச்சிரலாம்.... அத சொன்னா பிபிக்கி கோவம் வருது.... அத எங்கிட்ட வுட்ருங்கன்னு சொல்றார்...'

'அப்புறம் என்னங்க...? அவர்கிட்ட வுட்ருங்க....'

'அதெப்படி சார்...?' என்றார் தன்ராஜ் கோபத்துடன். 'கேஸ ஜெயிச்சா என்னாலதான்னு சொல்லிக்குவார்.... இல்லன்னா இன்வெஸ்டிகேட் பண்ணவரு சரியா பண்ணலைன்னு நம்ம மேலயே திருப்பி விட்ருவார்.... அப்ப எனக்கு கெட்ட பேர்தான சார்?'

பெருமாள் வியப்புடன் தன்ராஜை பார்த்தார். சர்வீஸ்ல சேந்து முழுசா அஞ்சி வருசம் கூட ஆவலை..... காக்கா ஒக்காந்து பனம் பழம் விழுந்த கணக்கா ஊர்ல ஏதோ ஒன்னு ரெண்டு கேஸ்ல கன்விக்‌ஷன் வாங்கிட்டு எஸ்.பி. ரெக்கமன்டேஷன்ல சிட்டிக்கி வந்துட்டான்.... இப்ப என்னடான்னா பேர் கெட்டுருமாம்....  இவன் வயசுல நாம சார்ஜ்ஷீட்ட கூட பாத்ததில்ல.... ஹூம்... எல்லாம் நேரம்...

'சரிங்க... இப்ப என்ன பண்ணலாம்கறீங்க? ஃபைல ஏட்டுக்கிட்ட குடுத்தனுப்பிறவா, சொல்லுங்க.'

'அனுப்பிறுங்க சார். அவர் கூப்டா பாத்துக்கலாம்..'

பெருமாள் உடனே பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் தன் முன்னால் தலை குனிந்து அமர்ந்திருந்த தன்ராஜையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். பிறகு, 'சரி... அப்புறம் உங்க இஷ்டம்..' என்றவாறு தன் மேசை மீதிருந்த அழைப்பு மணியை அழுத்த தன்ராஜ் எழுந்து அறையை விட்டு வெளியேறினார்.

அடுத்த அரை மணிக்குள் மாதவியின் கொலை வழக்கைப் பற்றிய கோப்பு பப்ளிக் ப்ராசிக்யூட்டர் வேணுவின் மேசையை அடைந்தது.

*****

ராஜசேகர் சீனிவாசனை சந்தித்துவிட்டு தன்னுடைய குடியிருப்புக்கு திரும்பியதுமே தன் செல்ஃபோனை எடுத்து மகாதேவனை அழைத்தான். எதிர்முனையில் இருந்து பிசி டோன் கிடைக்கவே இணைப்பைத் துண்டித்துவிட்டு குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்பட தயாரானான். 

'லஞ்ச் கொண்டு போறீங்களா?' என்று சமையலறையிலிருந்து அசரீரியாக வந்த மனைவியின் குரலுக்கு, 'வேணாம்' என்று பதிலளித்தான். 

செல்ஃபோன் அடித்தது. எடுத்து திரையை பார்த்தான். மகாதேவன். அவர் எதிர்முனையிலிருந்து பேசுவதற்கு முன்பே, 'காலையில கூப்ட்டேன் சார்... பிசியா இருந்தது... அதான் ஆஃபீசுக்கு கிளம்பறப்போ கூப்டுக்கலாம்னு இருந்தேன்.' என்றான்.

'நீங்க கூப்ட்டப்போ சீனிகிட்ட பேசிக்கிட்டு இருந்துருப்பேன் போலருக்கு.....'

'அப்படியா சார்?' 

'சொல்லுங்க... இன்னைக்கி ராகவாச்சாரிய போயி பாத்துட்டு வந்துறலாமா?'

ராஜசேகர் குழம்பினான், 'ராகவாச்சாரியா?' என்றான்.

மகாதேவன் சிரித்தார். 'அவர்தான் சார் கோபால் கேஸ்ல முன்னால ஆஜரானவர்....'

'ஓ! சரி சார்... இப்ப நேரா உங்க வீட்டுக்கு வரட்டுமா?'

'வேணாம் சார்..... அவர் வீடு அடையார்லதான் இருக்கு. நா அட்ரெஸ் சொல்றேன்... உங்களுக்கு அங்கருந்து பத்து பதினைஞ்சி நிமிஷ ட்ரைவ்தான் இருக்கும்... இங்க வந்தீங்கன்னா தேவையில்லாத அலைச்சல்... நா நேரா அங்க வந்துடறேன்.. அங்க வச்சி மீட் பண்லாம்.... என்ன சொல்றீங்க?'

'சரி சார்.' என்றவாறு அவர் கூறிய விலாசத்தைக் குறித்துக்கொண்டு இணைப்பை துண்டித்தான்...

********

ஆய்வாளர் பெருமாள் மேசை மீதிருந்த தொலைபேசி அவசரமாக அடிக்க எடுத்து, 'Inspector பெருமாள்' என்றார். 

'என்ன சார் எப்பவும் இல்லாம புதுசா ஃபைல் மட்டும் வந்துருக்கு? இன்வெஸ்ட்டிகேஷன் ஆஃபீசர் வரமாட்டாராமா?' எதிர்முனையிலிருந்து வந்த பி.பி.யின் குரலில் ஏளனம் தொனித்ததை உணர்ந்த பெருமாள் உரக்க சிரித்தார். தன்ராஜ் ஸ்டேஷனில் இல்லை என்பது அவருக்கு தெரியும். 'என்ன சார் பண்றது? நா சொல்லி பாத்தேன்.... நீங்க அனுப்புங்க... அவர் ஏதாச்சும் சொன்னா பாத்துக்கலாம்னுட்டான்... எதுக்கும் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லிறலாம்னு நாலஞ்சி தரம் ட்ரை பண்ணேன்.... உங்க சைட்ல அடிச்சிக்கிட்டே இருந்தது....'

'அப்போ நாந்தான் வெத்திலை பாக்கு வச்சி கூப்டணும் போலருக்கு!'

'ஆள் இங்க இல்ல சார்.... ஏதோ இன்வெஸ்ட்டிகேஷனாம்... போயிருக்கார்.... என்ன கேஸ்னு கூட எங்கிட்ட சொல்ல தோனலை... என்ன பண்ண சொல்றீங்க? டைரக்டா வந்த ஆளுங்களாச்சே... நம்மள மாதிரி ஆளுங்க ஒன்னும் சொல்ல முடியல சார்....' 

எதிர்முனையில் பி.பி. உரக்க சிரிப்பது கேட்டது. எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தார் பெருமாள். 

'சரி பரவால்லை..... நானே அந்த ஆள் செல்லுல கூப்டறேன்... என்ன பண்றது காரியம் ஆவணுமே.... அந்தாள் செல்ஃபோன் நம்பர சொல்லுங்க.'

பெருமாள் அவசரமாக தன் செல்ஃபோனை எடுத்து தன்ராஜின் செல்ஃபோன் எண்ணை தேடிப்பிடித்து கூறிவிட்டு, 'நா சொன்னது எதுவும் அவனுக்கு தெரிய வேணாம் சார்.' என்றார்.

அதற்கும் பிபியிடமிருந்து சிரிப்பே பதிலாக வந்தது. 'என்ன சார் அவ்வளவு பயமா?'

'சேச்சே.. பயமெல்லாம் இல்ல சார்.... ரிட்டையர் ஆவற டைம்ல நமக்கு கீழ வேலை செய்யறவங்களோட எதுக்கு வீணா விரோதம்னுதான்.... இன்னும் ஒரு வருசம்.... போறப்போ மனசமாதானமா போயிறணும் சார்...'

'அதுவும் சரிதான்.... நா அவன் கிட்ட டீல் பண்ணிக்கறேன்... நீங்க இத மறந்துருங்க....'

'சரி சார்...' என்று பதிலளித்த பெருமாள் எதிர்முனையில் இணைப்பு துண்டிக்கப்படும்வரை காத்திருந்து தொலைபேசியை ஒரு நீண்ட பெருமூச்சுடன் அதன் இருக்கையில் வைத்தார்.....

********

ராஜசேகர் சென்னை அடையாரில் இருந்த அட்வகேட் ராகவாச்சாரி வீட்டைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றடைந்தபோது மகாதேவனின் கார் வாசலில் நிற்பதைப் பார்த்தான். எப்படி இவர் இவ்வளவு சீக்கிரம்? ஒருவேளை நாம கூப்ட்டப்பவே கார்ல போய்கிட்டிருந்திருப்பாரோ? இருக்கும்... நாம வர்றதுக்குள்ளவே நம்மளப்பத்தி அவர்கிட்ட பேச வேண்டியத பேசி முடிச்சிறலாம்னு நினைச்சிருப்பார்....சரி, வந்தது வந்தாச்சி.... ஏடாகூடமா எதையும் பேசாம அவங்க சொல்றத மட்டும் கேட்டுக்குவோம். அத யூஸ் பண்றதும் பண்ணாததும் நம்ம விருப்பம்தானே...? 

சென்னையின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று அடையார். சென்னை மாநகர் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பிரபலமடையும் முன்பே விண்ணை முட்டும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது இங்குதான்.  ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிதாக எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் குறுகலான சாலைகளும் அதன் இருமருங்கிலும் பார்க் செய்யப்பட்டிருந்த நாற்சக்கர வாகனங்களும் காலை நேரத்திலேயே மிகுந்த பரபரப்புடன் இருந்ததை கவனித்த ராஜசேகர் தன்னுடைய வாகனத்தை மகாதேவனின் வாகனத்திற்கு பின்புறம் இருந்த குறுகிய இடத்தில் லாவகமாக நிறுத்திவிட்டு இறங்கி வீட்டை அண்ணாந்து பார்த்தான். 

பல அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்திருந்த அந்த சாலையில் இருந்த ஒருசில பழைய பாணி தனி வீடுகளில் ராகவாச்சாரியின் வீடு ஒரு தனிச்சிறப்புடன் விளங்கியதைக் கவனித்தான். எப்படியும் ஐம்பது வருடங்களாவது ஆகியிருக்கும் போலருக்கு என்ற நினைப்புடன் வாசலை நெருங்கி பழைய பாணி பர்மா தேக் வாசற்கதவில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய அழகான வெண்கல மணியின் வாயில் ஆடிக்கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தான். வீட்டினுள் எங்கோ மணிச்சத்தம் ஒலிப்பது கேட்டது. 

அடுத்த ஒரு சில நிமிடங்களில் வாசற்கதவைத் திறந்தவாறு வந்த மகாதேவன் வாங்க சார் என்று அழைக்க ராஜசேகர் அவர் பின்னால் வீட்டினுள் நுழைந்தான். 

வாசலில் நுழைந்தவுடனேயே கற்பூர வாசனை மூக்கைத் துளைத்தது. அப்போதுதான் பூஜை முடிந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். அவனுக்கு முன்னால் சென்ற மகாதேவன் வானம் பார்த்த முற்றத்தை சுற்றிக்கொண்டு மறுப்பக்கம் அமைந்திருந்த படுக்கையறை போன்றதொரு ஒரு அறைக்குள் நுழைய அவரை தொடர்ந்து செல்வதா வேண்டாமா என்ற தயக்கத்துடன் ராஜசேகர் அங்கேயே நின்றான்.

'பரவால்லை வாங்க சார்.' என்ற மகாதேவனின் குரல் அறைக்குள் இருந்து வர வேறுவழியில்லாமல் அறைக்குள் நுழைந்தான். 

அறைக்குள் நடுநாயகமாக கிடந்த மிகப்பெரிய மரக்கட்டிலின் தலைமாட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்த சுமார் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்கவரைப் பார்த்தான். 

'ரெண்டு வருசம் ஆச்சி.... ரைட் சைட் கம்ப்ளீட்டா பாரலைஸ்ட்.... ஆரம்பத்துல பேச்சும் போயிருந்துது....இப்போ பரவால்லை.... பாடி வீக்காயிருச்சே தவிர மைன்ட் இன்னும் பயங்கர அலர்ட்....' என்றவாறு ராகவாச்சாரியின் உடல் நிலை பற்றி அறிக்கையிட்ட மகாதேவன், 'என்ன சார்.... நா சொல்றது சரிதானே?' என்றார் படுக்கையில் இருந்தவரிடம்.

ராகவாச்சாரி புன்னகையுடன், 'வாங்க ராஜசேகர்... வந்து பக்கத்துல ஒக்காருங்கோ.' என்று தன் கட்டிலின் அருகில் கிடந்த இருக்கைகளுள் ஒன்றைக் காட்டினார். 'இவன் இப்படித்தான் எதையாச்சும் சொல்லின்டே இருப்பான்....'

ராஜசேகர் தயக்கத்துடன் அவரை அணுகி அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து தன் கைப்பெட்டியை அருகில் தரையில் வைத்துவிட்டு தன் எதிரில் இருந்தவரையே பார்த்தான்.  'சாரி டு டிஸ்டர்ப் யூ சார்..' என்றான் தயக்கத்துடன்.

ராகவாச்சாரி உரக்க சிரித்தார். 'Don't be sorry. நீங்க வந்ததுல எனக்கு ஒரு டிஸ்டர்பன்சும் இல்லை..... மகாதேவன் காலையில ஃபோன்ல சொன்னதும் உடனே சரின்னுட்டேன்... என்ன வேணும்னாலும் கேளுங்கோ... எனக்கும் டைம் போவணுமே... என்ன சொல்ற மகா?' 

மகாதேவனும் சிரித்தார். வேறு வழியின்றி ராஜசேகரும் சிரித்து வைத்தான். 

'நம்ம கோபாலோட பழைய கேஸ் கட்ட கொஞ்சம் கொடுத்தேள்னா ராஜசேகர் வாசிச்சி பாத்துட்டு தந்துருவார்...' என்றார் மகாதேவன்.

'அதுக்கென்ன குடுக்கச் சொல்றேன்.... ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லிக்கறேன்.' என்றவாறு தன் தலைமாட்டில் இருந்த அழைப்பு மணி பொத்தானை அமுக்கினார். 

தொடரும்...

9 comments:

வே.நடனசபாபதி said...

ராகவாச்சாரி கோப்பை கொடுப்பதற்கு முன் என்ன சொன்னார்? அந்த செய்தி இந்த வழக்குக்கு உதவியாக இருக்குமா அல்லது இடைஞ்சலாக இருக்குமா? என்ற யோசனையோடு காத்திருக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
ராகவாச்சாரி கோப்பை கொடுப்பதற்கு முன் என்ன சொன்னார்? அந்த செய்தி இந்த வழக்குக்கு உதவியாக இருக்குமா அல்லது இடைஞ்சலாக இருக்குமா?//

இடைஞ்சலாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த வழக்கிலிருந்து கோபால் தப்பித்துக்கொண்டாரே!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Sasi Kala said...

வாசலை நெருங்கி பழைய பாணி பர்மா தேக் வாசற்கதவில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய அழகான வெண்கல மணியின் வாயில் ஆடிக்கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தான். வீட்டினுள் எங்கோ மணிச்சத்தம் ஒலிப்பது கேட்டது. ////
க்ரைம் நாவல் தான் என்றாலும் அழகான வர்ணிப்பு படிப்பவரின் கண்களுக்கு காட்சிகளை விருந்தாக்கியது.

G.M Balasubramaniam said...

clash of egos.? சில நாட்கள் வீட்டில் இல்லாததால் தாமத வருகை.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
வாசலை நெருங்கி பழைய பாணி பர்மா தேக் வாசற்கதவில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய அழகான வெண்கல மணியின் வாயில் ஆடிக்கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தான். வீட்டினுள் எங்கோ மணிச்சத்தம் ஒலிப்பது கேட்டது. ////
க்ரைம் நாவல் தான் என்றாலும் அழகான வர்ணிப்பு படிப்பவரின் கண்களுக்கு காட்சிகளை விருந்தாக்கியது.//

இந்த மாதிரி வாக்கியங்கள் எப்போதாவது நாம் அறியாமலே வந்து விழுந்துவிடும்...

அதை சுட்டிக்காட்டி எழுதியதற்கு மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
clash of egos.? சில நாட்கள் வீட்டில் இல்லாததால் தாமத வருகை.//

நீங்க வர்றதே ரொம்ப பெரிய விஷயம் சார்...

அதுவும் ஒவ்வொரு பதிவையும் படிச்சி பொருத்தமான கருத்துரையும் எடும் உங்களுடைய ஆவலுக்கு மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
clash of egos.? சில நாட்கள் வீட்டில் இல்லாததால் தாமத வருகை.//

நீங்க வர்றதே ரொம்ப பெரிய விஷயம் சார்...

அதுவும் ஒவ்வொரு பதிவையும் படிச்சி பொருத்தமான கருத்துரையும் எடும் உங்களுடைய ஆவலுக்கு மிக்க நன்றி.

T.N.MURALIDHARAN said...

நுணுக்கமா சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள். பரபரப்பு தொடர்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...

T.N.MURALIDHARAN said...
நுணுக்கமா சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள். பரபரப்பு தொடர்கிறது.//

ரிட்டையராயி வீட்ல இருக்கறப்போ பொழுது போகணுமே... சிந்திக்க நேரம் இருப்பதால் எளிதாக செய்ய முடிகிறது :)

வருகைக்கும் உங்கள் நுணுக்கமான கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.