25 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 28

முன்கதை

'ஆமா சார்... அவர் கிட்ட வீட்டு சாவி ஒன்னு இருக்குதுங்க... இதுக்கு முன்னால போனப்பவும் சார் அவரோட சாவிய போட்டு திறந்துக்கிட்டு உள்ள போறத பாத்துருக்கேன்... அன்னைக்கிம் கதவ திறந்து உள்ள போறத பாத்துட்டுத்தான் நா பக்கத்து சந்துல வண்டிய பார்க் பண்ணிட்டு ஒக்காந்துருந்தேன்....' என்றார் மணி.

ஆக கோபால் அந்த வீட்டுக்குள்ள போயிருக்கார்.... இத எதுக்கு எங்கிட்டருந்து மறைக்கணும்? அந்த பொம்பள வேணும்னே டைம மாத்தி சொல்லுதுன்னு நம்ம கிட்ட சாதிச்சாரே?

'சார்....' என்று எதிர்முனையிலிருந்து குரல் வர சுதாரித்துக்கொண்ட ராஜசேகர் தன்னுடைய விசாரணையை தொடர்ந்தான்.

'அப்புறம் என்னாச்சி?'

'அஞ்சி நிமிஷத்துல வரேன்னு சொன்னவர் கால் மணி நேரமாயும் வரல சார். அதனால என்னாச்சின்னு பாக்கறதுக்கு நா ரோட்டுக்கு வந்து பாத்தேன். சார் பக்கத்து வீட்டு லேடிகிட்ட என்னமோ சத்தமா சொல்லிக்கிட்டிருந்தார்.  என்னன்னு காதுல விழல... என்னை பாத்ததும் உடனே கிளம்பி வந்துட்டார்.....'

'கோபால் உங்களோட வந்தத அந்த லேடி பாத்தாங்களா?'

'தெரியல சார்.... நா கவனிக்கல.... உடனே ஆட்டோவ கிளப்பிக்கிட்டு வந்துட்டோம்...'

அந்த லேடி பார்த்திருந்தா அதையும் போலீஸ்கிட்ட சொல்லியிருக்கணுமே! அதனால கோபால் ஆட்டோவுல ஏறி போனத அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான் ராஜசேகர்.

'அவர எத்தன மணிக்கி திருப்பி ட்ராப் பண்ணீங்க?'

'எட்டு, எட்டரை ஆயிருச்சி சார்...'

'அப்படியா,எதுக்கு அவ்வளவு நேரம்?'

'அங்கருந்து அடையார் போயி வந்தோம்... அதான் அவ்வளவு லேட்.'

'அடையாரா?'

'ஆமா சார்... கோபால் சார் அந்த வீட்லருந்து வர்றப்போ கையில ஒரு பை வச்சிருந்தார்.... அத அடையார் ஆத்துல போட்டுட்டு போயிரலாம்னு சொன்னார்....'

'அப்படியா? என்ன பை?'

'சாமிக்கு போட்ட பழைய மாலைன்னு சொன்னார் சார்.... அத குப்பையில போட மாட்டாங்களாம். அதான் போற வழியில அடையார் ஆத்துல போட்டுரலாம்னு......'

'ஓ! அப்ப சரி மணி... நீங்க அவர ஆஃபீஸ்கிட்ட ட்ராப் பண்ணிட்டு போய்ட்டீங்க அவ்வளவுதானே?'

'ஆமா சார்... நா வீட்டுக்கு நடந்து போய்க்கிறேன்னு அவர் சொன்னதால நா அவர ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்கு போய்ட்டேன்...'

அதற்கு மேலும் அவரிடம் ஏதும் கேட்க ஒன்றுமில்லை என்ற நினைத்த ராஜசேகர், 'சரிங்க... ரொம்ப தாங்ஸ்..' என்று இணைப்பை துண்டிக்க நினைத்தபோது எதிர்முனையிலிருந்து குரல் வந்தது....

'சார்... உங்கக் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.....'

'சொல்லுங்க மணி...'

'இத இதுவரைக்கும் யார்கிட்டயும் சொல்லல சார்.... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு....'

ராஜசேகர் சிரித்தான். 'தயங்காம சொல்லுங்க....'

'அதுக்கில்ல சார்.... இந்த விஷயம் போலீஸ்க்கு தெரிஞ்சிருமோன்னுதான் பயமாருக்கு.....'

ராஜசேகர் குழம்பினான்.....போலீசுக்கு தெரியக்கூடாத அளவுக்கு அப்படியென்ன விஷயம்? 'கோபால் சார் சம்மந்தப்பட்ட விஷயமா?'

'ஆமா சார்.... அதான் யோசிக்கிறேன்.'

'நான் அவருக்கு சார்பா வாதாடப் போற வக்கீல்னு உங்களுக்கு தெரியுமில்ல? எதுவானாலும் நீங்க சொல்றது எங்கிட்டத்தான் இருக்கும்.... பயப்படாம சொல்லுங்க.'

'சார் ஒரு பை கொண்டு வந்தார்னு சொன்னேன் இல்ல சார்?'

'ஆமா.. அதத்தான் ஆத்துல போட்டுட்டார் இல்ல?'

'ஆமா சார்... ஆனா அத வச்சிருந்த இடத்துல ரத்தக் கறை இருந்திச்சி சார்... அத அடுத்த நாள் வண்டிய கழுவறப்பத்தான் நானே பாத்தேன்....'

இதை எதிர்ப்பாராத ராஜசேகர் எப்படி ரியாக்ட் செய்வதென தெரியாமல் ஒரு நிமிடம் மவுனமாகிப்போனான்....

'சார்....' என்ற மணியின் குரல் எதிர்முனையிலிருந்து வந்ததும் சுதாரித்துக்கொண்டு 'மேல சொல்லுங்க' என்றான்.

'நா உடனே சோப்பு போட்டு நல்லா கழுவி விட்டுட்டேன் சார்.'

'இத என்னெ தவிர வேற யார் கிட்டயாவது சொன்னீங்களா, அவரோட பிஏ ராமராஜன் கிட்ட...'

'எப்படி சார்? கோபால் சார் எனக்கு தெய்வம் மாதிரி சார்... எனக்கு மட்டுமில்ல... எங்க ஆட்டோ ஸ்டான்டுல இருக்கற எல்லாருக்குமே அப்படித்தான்.'

தெய்வமா? கோபாலா? அவருக்கு இப்படியொரு முகமா? 

'என்ன சொல்றீங்க மணி... கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்.'

'சொல்றேன் சார்.... ஒரு வருஷத்துக்கு முன்னால எம் பொண்ணுக்கு ஹார்ட்ல ஓட்டைன்னு டாக்டர் சொல்லி ஆப்பரேஷன் செஞ்சாத்தான் காப்பாத்த முடியும்னு சொல்லிட்டாங்க. அப்பருந்த ஆட்டோவ வித்து, பொண்டாட்டியோட நகையெல்லாம் வித்து, அங்க இங்க கைமாத்தா வாங்கியும் ஒரு லட்சம் துண்டு விழுந்துது.... அப்போ சார்கிட்டதான் போயி நின்னேன். அவர் ஒன்னுமே பேசாம ஒரு லட்சத்த எடுத்து குடுத்து ஆக வேண்டியத பாரு மணி... இன்னும் வேணும்னா தயங்காம கேளுன்னார்... அன்னையிலருந்து மாசா மாசம் என்னால குடுக்க முடிஞ்சத குடுத்துக்கிட்டுத்தான் வரேன்.... இன்னும் அம்பதாயிரத்துக்கு மேல குடுக்கணும்... வாங்குன கடனையே குடுக்க முடியல... போறாததுக்கு இப்ப ஓட்ற ஆட்டோ லோனையும் சார்தான் ஜாமீன் போட்டு வாங்கி குடுத்தார். எனக்கு மட்டுமில்லீங்க, எங்க ஸ்டான்டுலருக்கறவங்க யார் எப்ப கேட்டாலும் ஏன்னு கேக்காம பணத்த குடுத்து ஹெல்ப் பண்றவர் சார் அவர்... இன்னைக்கி வரைக்கும் வட்டின்னு ஒரு பைசா வாங்கனதில்லைங்க.... அப்படிப்பட்டவர் கொலையே செஞ்சிருந்தாலும் நா மட்டுமில்ல சார்... எங்க ஸ்டான்டுல இருக்கற யாருமே காட்டிக்குடுக்க மாட்டாங்க...'

மலைத்துப்போனான் ராஜசேகர். அதுவரை கோபால் ஒரு பெண் பித்து பிடித்தவர், முதல் மனைவியின் மரணத்துக்கு காரணமானவர், இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தவர், மனைவி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்துபவர் என்றெல்லாம் அவருக்கு மிகவும் நெருங்கியவர்கள் கூற கேட்டிருந்தவனுக்கு அத்தகையவரை தெய்வம் என்று கருதுபவர்களும் இருக்கக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.

'அது மட்டும் இல்லீங்க சார்...'

'சொல்லுங்க.'

'அந்த பொம்பளை மாதிரி ஆளுங்கள போட்டுத் தள்றதுல தப்பே இல்ல சார்...'

அவனுக்கும் அது சரிதான் என்று தோன்றியது.. இருந்தாலும் 'எதுக்கு அப்படி சொல்றீங்க?' என்றான்.

'பின்னே என்ன சார்.... கோபால் சாரோட சம்சாரம் ரொம்ப நல்லமாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன்... அப்படியொரு சம்சாரத்த வச்சிக்கிட்டு சார் எதுக்குத்தான் இந்த மாதிரி பொம்பளைக்கிட்ட சகவாசம் வச்சிக்கிட்டிருக்காரோன்னு ஆட்டோ ஸ்டான்டுல இருக்கற எல்லாருமே பேசிக்குவோம்..... சாருக்கும் அந்தம்மா சாவுக்கும் சம்மந்தம் ஏதாச்சும் இருக்குமான்னு எனக்கு தெரியலீங்க... ஆனா அப்படியே இருந்தாலும் நா மட்டுமில்லீங்க... எங்கள்ல சேர்ந்த யாருமே அவர காட்டிக்குடுத்துற மாட்டோம் சார்... அதனாலதான் இத நா இதுவரைக்கும் யார் கிட்டயும் சொல்லல....'

'என் கிட்டயும் சொல்லாம இருந்துருக்கலாம் இல்ல? எதுக்கு சொன்னீங்க?'

'ராமராஜன் சார் தான் சொன்னார்... நீங்கதான் அவர் பக்கம் ஆஜராவப்போற வக்கீல். உங்கிட்ட அன்னைக்கி சார் கூட போனதப்பத்தி பேசணும்னு சொல்றார்.... எதையும் மறைக்காம நடந்தத அப்படியே சொல்லிருன்னு..... அதான்.....'

ராஜசேகருக்கு தன் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் கண்டு வியப்பாயிருந்தது. அவனுக்கும் மாதவி கொலையுண்டாள் என்பதை கேள்விப்பட்டபோது அது ஒரு இழப்பாக தோன்றவில்லை. எங்கே அந்த வழக்கில் நாம் சிக்கிக்கொள்வோமோ என்றுதான் துவக்கத்தில் கலவரமடைந்தான். ஆனால் மாதவியின் மரணத்திற்கு தான் நேரடி பொறுப்பாளி இல்லை  என்பதை அறிந்துக்கொண்டதிலிருந்து மாதவியின் மரணம் நியாயமானதுதான் என்றும் கூட அவன் நினைத்தான். ஒரே நேரத்தில் பல ஆண்களை தன் அழகால் மயக்கி ஆட்டிப்படைக்கும் மாதவி போன்றவர்களுடைய முடிவு இப்படித்தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்ற கோணத்தில் சென்றது அவனுடைய எண்ணம்.

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க? நா செஞ்சது தப்புன்னு நினைக்கிறீங்களா சார்?'

மணியின் குரலில் இருந்த ஒருவித கலக்கம் அவனை உலுக்கியது. 'சேச்சே... இல்ல மணி.... நா ஏற்கனவே சொன்னா மாதிரி நீங்க சொன்னது என்கிட்டருந்து யாருக்கும் போகாது.... வேற ஏதாச்சும் சொல்லணுமா?'

'இல்ல சார்..'

'நா உங்கள ஒன்னு கேக்கலாமா?'

'கேளுங்க சார்..'

'இப்பல்லாம் நீங்களும் ஒங்க ஃப்ரென்ட்சும் அந்த ஆட்டோ ஸ்டான்டுலயே இல்லையாமே ஏன்?'

'எல்லாம் போலீசுக்கு பயந்துதான் சார்.... கோபால் சாரோட ஆஃபீஸ் வாசல்லயே போலீஸ் நிக்கிறாங்களாமே?'

'அதனால உங்களுக்கு என்ன? உங்கள யாரும் போலீஸ் விசாரிச்சாங்களா என்ன?'

'இதுவரைக்கும் இல்ல சார்....நல்லவேளையா அடுத்த நாள்லருந்தே அந்த ஸ்டான்டுக்கு போவல சார்.... கால்ல அடி இன்னும் ஒரு மாசத்துக்கு வண்டி ஓட்ட முடியாதுன்னு எங்க ஆளுங்கக்கிட்ட சொல்லிட்டேன்....'

'ஆனா உங்களுக்கு கால் நல்லாத்தான் இருக்கு....' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்.

'ஆமா சார்.... ஆனா எதுக்கும் இருக்கட்டும்னு நமக்கு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சொல்லி ஒரு மாவுகட்டு போட்டுக்கிட்டு இருக்கேன்... நம்ம ஆளுங்களே நம்மள போட்டு குடுத்துறக் கூடாதில்ல, அதுக்காக....'

ராஜசேகர் தன்னையுமறியாமல் வாய்விட்டு சிரித்தான். 'பயங்கரமாத்தான் யோசிக்கிறீங்க. ஆனா அந்த டாக்டர் யார்கிட்டயும் சொல்லிற மாட்டாரா?'

'அதுக்கும் ஒரு பொய் சொல்லியிருக்கேன் சார்.. வண்டி ஆக்சிடென்ட் ஆயிருச்சி.... எனக்கும் காயம்னு சொன்னாதான் என் வண்டியில அடிபட்ட ஆள் போலீஸ் கேஸ்னு போமாட்டான்னு சொல்லி வச்சிருக்கேன்...'

'ஆனா ஒங்க வண்டிக்கு ஆக்சிடென்ட் ஒன்னும் ஆகலை... அப்படித்தானே?'

'ஆமா சார்... எல்லாம் ஒரு செட்டப்தான்.... யாருக்கும் தெரியாது... என்னையும் உங்களையும் தவிர....'

ராஜசேகர் மீண்டும் சிரித்தான். 'கவலைப்படாதீங்க... எனக்கும் அது தெரியாது... போதுமா?'

'தாங்ஸ் சார்...'

'சரி மணி.... எம் மேல வச்சிருக்கற கான்ஃபிடன்சுக்கு ரொம்ப தாங்ஸ்ங்க... இன்னும் எத்தனை நாளைக்கி வீட்ல இருக்கறதா உத்தேசம்?'

'ரெண்டு வாரத்துக்கும் இத கன்டினியூ பண்றதா ஐடியா சார்.'

'அதுவரைக்கும் வருமானத்துக்கு என்ன பண்ணுவீங்க?'

'எப்படியோ மேனேஜ் பண்றேன் சார்...'

'சரிங்க.... வேற ஏதாச்சும் வேணும்னா கூப்டறேன்.'

'சரிங்க சார்...' என்று பதிலளித்த மணி 'இன்னொரு விஷயம் சார்....' என்றும் மீண்டும் இழுக்க.... 'இன்னும் ஏதாச்சும் இருக்கா?' என்றான் ராஜசேகர்.

'இந்த கால நீங்க உங்க ஃபோன்லருந்து டெலீட் பண்ணிட்டீங்கன்னா நல்லதுன்னு சொல்ல வந்தேன் சார்....'

ராஜசேகருக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. 'அட! பரவால்லையே.... நிறைய மர்ம கதை படிப்பீங்களோ?'

'எதுக்கு சார் அதெல்லாம்? இப்பத்தான் டெய்லி பேப்பர்ல வருதே... ஏறக்குறைய எல்லா ரவுடிங்களுமே இந்த செல்ஃபோனாலத்தான மாட்டிக்கிறாங்க?'

'அதுவும் சரிதான்...நீங்க வச்சதுமே முதல் வேலையா டெலீட் பண்ணிடறேன்... அதோட ஒங்க ஃபோன் நம்பரையும் சேவ் பண்ணிக்கலை... போறுங்களா?'

'தாங்ஸ் சார்.... மறுபடியும் கூப்டணும்னா ராமராஜன் சார் கிட்ட சொல்லிட்டீங்கன்னா போறும்... நானே கூப்டறேன்..'
என்றவாறு மணி இணைப்பை துண்டிக்க அமைதியாகிப்போன செல்ஃபோனையே பார்த்தவாறு ஒரு சில நிமிடங்கள் அமர்ந்திருந்த ராஜசேகர் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

தொடரும்...

9 comments:

Packirisamy N said...

//அத்தகையவரை தெய்வம் என்று கருதுபவர்களும் இருக்கக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.//

Even a worst criminal would have someone to love him or her. No one can through the first stone.

வே.நடனசபாபதி said...

ஒவ்வொரு மனிதனுக்கும் பல் வேறு முகங்கள் உண்டு என்பார்கள். நாம் ஒரு முகத்தைப் பார்த்து விட்டு அந்த மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அதுபோலவே கோபால் பற்றி வழக்கறிஞர் கொண்ட தவறான எண்ணம் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மணி சொன்ன தகவல்களால் அடிபட்டுப்போகிறது. அதனால்தான் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்கிறார்களோ? பொறுத்திருந்து பார்ப்போம் எப்படி கதை போகிறதென்று.

G.M Balasubramaniam said...


எனக்குக் குற்றவாளி யார் என்று தெரியும். சொன்னால் அதை மாற்றி அவரைத் தப்பிக்க விடுவீர்கள்.......!

Packirisamy N said...

Sorry Sir. It should be, no one can throw the first stone.

டிபிஆர்.ஜோசப் said...


Packirisamy N said...
//அத்தகையவரை தெய்வம் என்று கருதுபவர்களும் இருக்கக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.//

Even a worst criminal would have someone to love him or her. No one can throw the first stone.//

You are right. There is no such thing as an evil person. Everyone has some thing good in him.

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
ஒவ்வொரு மனிதனுக்கும் பல் வேறு முகங்கள் உண்டு என்பார்கள். நாம் ஒரு முகத்தைப் பார்த்து விட்டு அந்த மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அதுபோலவே கோபால் பற்றி வழக்கறிஞர் கொண்ட தவறான எண்ணம் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மணி சொன்ன தகவல்களால் அடிபட்டுப்போகிறது. அதனால்தான் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்கிறார்களோ?//

சரியாக சொன்னீர்கள்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

எனக்குக் குற்றவாளி யார் என்று தெரியும். சொன்னால் அதை மாற்றி அவரைத் தப்பிக்க விடுவீர்கள்.......!//

அப்படியா? அதனால எனக்கு என்ன சார் லாபம், சும்மா சொல்லுங்க :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sasi Kala said...

ராஜசேகர். அதுவரை கோபால் ஒரு பெண் பித்து பிடித்தவர், முதல் மனைவியின் மரணத்துக்கு காரணமானவர், இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தவர், மனைவி என்றும் பாராமல் அடித்து துன்புறுத்துபவர் என்றெல்லாம் அவருக்கு மிகவும் நெருங்கியவர்கள் கூற கேட்டிருந்தவனுக்கு அத்தகையவரை தெய்வம் என்று கருதுபவர்களும் இருக்கக்கூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.

இப்படித்தானே இந்த வக்கிலைப்பற்றியும் நினைப்பாங்க .. என்ன தான் ஆகப்போகிறது பார்ப்போம்.

டிபிஆர்.ஜோசப் said...

asi Kala said...

இப்படித்தானே இந்த வக்கிலைப்பற்றியும் நினைப்பாங்க ...//

உண்மைதான்.

அதுமட்டுமில்லாம கெட்டவங்க, நல்லவங்கன்னு யாருமே இல்லை. எல்லாம் அவரவர் பார்வையில்தாங்கறது என்னுடைய எண்ணம்.