24 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 27

முன்கதை 

'ஒரு நாளப்போல நடுராத்திரியிலதான் வருவார்.' என்று பதிலளித்தார் நளினி. ' வீட்ல சமைச்சி வச்சத சாப்ட மாட்டார். வெளியிலதான் எல்லாமே.... சனி, ஞாயிறுன்னா கூட வீட்ல தங்க மாட்டார்...... அவர் செல்ஃபோன அவருக்கு தெரியாம எடுத்து பார்த்தப்போ அதுல நிறைய பொண்ணுங்களோட நம்பர் இருந்தத பார்த்திருக்கேன்.....'

அவ ஒரு சரியாத சந்தேகப்பிராணி சார் என்று கோபால் கூறியது ராஜசேகருக்கு நினைவுக்கு வந்தது. பசு மாதிரி அமைதியா இருந்துக்கிட்டு ஹஸ்பென்டோட செல்ஃபோன அவருக்கு தெரியாம எடுத்து இன்வெஸ்ட்டிகேட் பண்ற அளவுக்கு தைரியம் இருக்கா? 

'அதப்பத்தி அவர்கிட்ட எப்பயாச்சும் கேட்டுருக்கீங்களா?'

'இல்ல சார்... கேட்டா கோவப்படுவார்னு தெரியும்..... கோவம் வந்தா மனுசனாவே இருக்க மாட்டார் சார்....'

'என்ன பண்ணுவார்?'

நளினி உடனே சட்டென்று தன் சேலையை முழங்கால் வரை உயர்த்த அதை எதிர்பாராத ராஜசேகர் அதிர்ந்துபோனான். 

'இங்க பாருங்க சார்... எப்படி அடிச்சிருக்கார்னு!'

வேறு வழியில்லாமல் ராஜசேகர் நளினியின் கால்களைப் பார்த்தான். ஒரு அங்குல அகலத்தில் பட்டை, பட்டையாக கருப்பு நிறத்தில் தழும்புகள்... 'இது எப்படிம்மா?' என்றான் தயக்கத்துடன்.

'பெல்ட் சார்.... உடம்பு முழுசும் இருக்கு....' கண்களில் நிறைந்த கண்ணீருடன் தன்னை ஏறிட்டுப் பார்த்த நளினியின் முகத்தை காணச் சகியாமல் குணிந்து தன் குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்த கேள்விகளைப் பார்த்தான்.... ஆனால் கேட்க தோன்றவில்லை. எழுந்து நின்றான். 

நளினி இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவளுடைய கண்களிலிருந்தே தெரிந்தது. 'ஏதோ கேஸ் விஷயமா கேக்கணும்னு சொன்னீங்களே? அவ்வளவுதானா?'

ராஜசேகர் தயக்கத்துடன் அவளைப் பார்த்தான். 'இல்லம்மா நீங்க இப்ப இருக்கற மூட்ல..... இன்னொரு நாளைக்கி வரேன்.'

நளினியின் சிரிப்பிலும் சோகம் தெரிந்தது. 'பரவால்லை சார்.... இது வெறும் வடுதான் சார்..... ஆனா மனசு மரத்துப்போச்சி.... நீங்க கேக்க வந்தத கேட்ருங்க....'

வேறு வழியின்றி ராஜசேகர் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து தொடர்ந்தான். 'மாதவிங்கற பொண்ணோட பழக்கம் வச்சிருந்தது உங்களுக்கு தெரியுமாங்க?'

'மூனு மாசத்துக்கு முன்னாலதான் சார் தெரியும்...அவரோட செல்ஃபோன்ல அந்த பேர பாத்துருக்கேன்... ஆனா எத்தனையோ பொண்ணுங்களோட பேர்ல இதுவும் ஒன்னுன்னுதான் நினைச்சேன்... ஆனா மூனு மாசத்துக்கு முன்னால  என்னெ டைவர்ஸ் பண்ணிட்டு அந்த பொண்ண மேரேஜ் பண்றதா இருக்காரும்மான்னு அவரோட பி.ஏ. ராமராஜன் சொன்னப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த ரிலேசன்ஷிப்போட சீரியஸ்னஸ் தெரிஞ்சிது...'

'அவர்கிட்ட கேட்டீங்களா?'

'அதுதான் நா செஞ்ச பெரிய தப்புன்னு நினைக்கேன்...'

ராஜசேகர் வியப்புடன் நளினியைப் பார்த்தான். 'எதுக்கு அப்படி சொல்றீங்க?'

'எனக்கு தெரியாம இருக்கறவரைக்கும்தான அது ரகசியம்? எனக்கு தெரிஞ்சிப் போனதுக்கப்புறம் எதுக்கு பயப்படணுங்கறா மாதிரி அவர் நினைச்சார்..... ஆமா அதுக்கென்ன அப்படீன்னார்'

'நீங்க என்ன சொன்னீங்க?'

'நா டைவர்ஸ் குடுக்கறதா இல்லன்னு சொன்னேன்...'

ஓ! அந்த அளவுக்கு தைரியம் இருக்கா என்பதுபோல் ராஜசேகர் அவளைப் பார்த்தான். 

'ஆமா சார்.... தலைக்கு மேல போனது ஜான் போனா என்ன முழம் போனா என்னங்கறா மாதிரி எனக்கு தோனிச்சி.... எங்கருந்தோ வந்த தைரியம்... அது அசட்டு தைரியமான்னு தெரியல.... ஆனா அவர் இந்த பதில எங்கிட்டருந்து எதிர்பார்க்கல போலருக்கு..... வந்த கோபத்துக்க்கு இடுப்புலருக்கற பெல்ட்ட கழட்டி கண்ணு மன்னு தெரியாம அடிச்சி போட்டுட்டு போய்ட்டார்.... ஒரு வாரம் கழிச்சித்தான் வந்தார்.... அன்னைக்கி சாயந்தரம் பாத்திரம் கழுவ வந்த செர்வன்ட்தான் கம்பெல் பண்ணி பக்கத்துலருக்கற க்ளினிக்குக்கு கூட்டிக்கிட்டு போயி ட்ரீட்மென்ட் பார்த்து.... காயம் முழுசா ஆறுறதுக்கு பத்து பதினைஞ்சி நாள் ஆச்சி... ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்கு திரும்பி வந்த மனுஷன் ஏன்னு ஒரு வார்த்தை கேக்கல சார்.... கையோட கொண்டு வந்த டைவர்ஸ் பேப்பர என் மூஞ்சில தூக்கிப் போட்டு மரியாதையா கையெழுத்து போட்டு குடுத்துரு இல்லன்னா ஒன்னெ கொல்லவும் தயங்கமாட்டேன்னு கத்தினார்....'

துவக்கத்தில் வாய் திறப்பதற்கே தயங்கியவரா இவர் என்று அவளை வியப்புடன் ராஜசேகர் பார்த்தான். கழுத்துக்கு மேல போனதுக்கப்புறம் என்று அவள் குறிப்பிட்டது சரிதான் போலிருக்கிறது என்று தோன்றியது. முழுவதுமாக மூழ்கப் போகிறோம் என்று தெரிந்தபிறகு வரும் அசாத்திய துணிச்சல் இது என்று நினைத்தான். 

'நீங்க உங்க மாமனார் கிட்ட இதப்பத்தி பேசலையா?'

'இல்ல சார்.... அவர் ஏற்கனவே ஹார்ட்பேஷன்ட்... இத வேற சொல்லி ஏதாச்சும் ஆயிருமோன்னு பயந்தேன்.... இன்னைக்கி இருக்கற நிலையில எனக்கு அவர விட்டா சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்ல சார்....' மேலே தொடர்ந்து பேசமுடியாமல் பொங்கிவந்த அழுகையையும் கட்டுப்படுத்த முடியாமல் நளினி அழுவதைப் பார்த்த ராஜசேகர் அவள் அழுது ஓயும்வரை அமைதியாக அமர்ந்திருந்தான். 

பார்வையாளர் நேரம் முடிய இன்னும் ஐந்து நிமிடங்களே இருப்பதாக வராந்தாவில் இருந்த ஒலிப்பெருக்கி அறிவித்ததை இருவருமே கேட்டனர். 

நளினி முகத்தை துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். 'சாரி சார்....I just could not....'

'பரவால்லைங்க... கொஞ்ச நேரம் அழுதாலும் துக்கம் தீந்துரும்பாங்க.... You should now feel relieved.....அப்படித்தானே?'

'ஒருவகையில நீங்க சொல்றது சரிதான் சார்..... இத யார்கிட்டயும் ஷேர் பண்ணிக்க முடியாம நா பட்ட கஷ்டம் இருக்கே.... உங்க அசிஸ்டென்ட் வந்தப்போ என்னால இந்த அளவுக்கு பேச முடியல சார்..... அப்பத்தான் அட்மிட் ஆயிருந்தேன்.... ப்ரஷர் ஜாஸ்தியாருந்துதுன்னு டாக்டர் அஞ்சே நிமிஷத்துல அவர கெளப்பி விட்டுட்டார்....'

ராஜசேகர் தன் மடியிலிருந்த குறிப்பேட்டை கைப்பெட்டிக்குள் வைத்துவிட்டு எழுந்து நின்றான். 'கவலைப்படாதீங்க நளினி...Everything has a solution.....தைரியமா இருங்க.... முடிஞ்சா இன்னொரு நாள் வரேன்... '

அவன் எழுந்து வாசலை நோக்கி நகர நளினியின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது. 

'தயவு செஞ்சி என்னெ விட்னசா கூப்ட்டுராதீங்க சார்...'

ராஜசேகர் நின்று திரும்பி பார்த்தான். 'நிச்சயமா கூப்ட மாட்டேம்மா.... ஆனா அதே மாதிரி போலீஸ் வந்து கேட்டாலும் நீங்க முடியாதுன்னு சொல்லிறணும்.... சரிங்களா?'

'அத ஏற்கனவே எஸ்.ஐ. தன்ராஜ் இங்க வந்திருந்தப்போ சொல்லிட்டேன் சார்.... எங்க டாக்டரும் நா அவருக்கு எதிரா சாட்சி சொல்ல வரமுடியாதுன்னு சொல்லிட்டார்...'

'அது போறுங்க...' என்ற ராஜசேகர், 'கடைசியா ஒன்னு கேக்கட்டுங்களா?' என்றான் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறு. இன்னும் ஒரு சில நிமிடங்கள் இருந்தன.

'என்ன சார்?'

'கோபால் கேட்ட டைவர்ஸ் பத்தி நீங்க என்ன டிசைட் பண்ணிருக்கீங்கன்னு நா தெரிஞ்சிக்கலாமா?'

'இதுக்கப்புறமும் அவரோட வாழ முடியும்னு நா நினைக்கல சார்.... இந்த கேஸ் முடியறதுக்குள்ளவே டைவர்ஸ் வாங்கிறணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்..... என் அண்ணாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னுதான் காத்துக்கிட்டிருக்கேன்.....'

ராஜசேகர் பதிலளிக்காமல் ஒருநிமிடம் அவளையே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியும் தன்னை வந்து பார்க்காத அண்ணனின் சம்மதத்திற்காக காத்திருக்கும் நளினியின் அவல நிலமையை நினைத்தவாறே தன் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவனையுமறியாமல் அவளுக்காக வருத்தப்பட்டான். என்ன மனுஷன் கோபால்.. இத்தகையவரை எதற்காக காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான்....

*********

E1 காவல்நிலைய அதிகாரியும் ஆய்வாளருமான பெருமாள் தன்னுடைய அறைக்குள் நுழைந்ததுமே மேசை மீது வைக்கப்பட்டிருந்த உறையைப் பார்த்தார்.

அதன் மீது குற்றப்பத்திரிக்கை - மாதவி கொலை - முதல் தகவல் அறிக்கை எண் 984/13-14 என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும் தொப்பியை கழற்றிவிட்டு அமர்ந்து முதல் வேலையாக அழைப்பு மணியை ஓங்கி அடித்தார். அவர் அதை அடித்த விதமே வெளியில் அமர்ந்திருந்த ரைட்டரையும் தலைமை காவலரையும் பதற வைத்தது. இருவரில் யார் அறைக்குள் நுழைவது என போட்டி போட்டவாறு அமர்ந்திருக்க அழைப்பு மணி மீண்டும் கிர்ர்ர்ர்ர்ர்ர் என்று தொடர்ந்து ஒலித்தது.

ரைட்டர் இருந்த இடத்திலிருந்து அசைவதாக இல்லை. எதையோ மும்முரமாக எழுதுவதுபோல் பாசாங்கு செய்தவாறு ஓரக்கண்ணால் ஏட்டையாவை பார்த்தார் நீங்கதான் போயாவணும் என்பதுபோல்.

வேறு வழியின்றி தலைமைக் காவலர் எழுந்து 'இரு உன்னெ வந்து கவனிச்சிக்கிறேன்.' என்று ரைட்டரைப் பார்த்து பல்லைக் கடித்துவிட்டு ஆய்வாளர் அறைக்குள் நுழைந்தார்.

'எங்கய்யா போயி தொலைஞ்சீங்க? எவ்வளவு நேரம் கூப்டறது?'

'மன்னிச்சிருங்கய்யா' என்றார் ஏட்டு பவ்யமாக.

'இந்த கவர் இங்க எப்படி வந்துது?' என்றார் ஆய்வாளர் தன் மேசை மீது உரையைக் காட்டியவாறு.

'ரைட்டர்தான்...'

'கூப்டுய்யா அந்த ஆள?'

தலைமைக் காவலர் விட்டால் போதும் என்று வெளியில் வந்து, 'யோவ் ஒன்னெத்தான் கூப்டறார்?' என்றார் ஒரு கேலி புன்னகையுடன். ரைட்டர் எழுந்து அறைக்கும் போகும் வழியில் அவரை கடந்து செல்ல, 'என்னைய மாட்டிவிடலாம்னு நினைச்சேல்ல? உள்ளாற போ... இருக்கு ஒனக்கு' என்றார் அடிக்குரலில்..

அதைக் கண்டுக்கொள்ளாத ரைட்டர் ஆய்வாளர் அறைக்குள் நுழைந்து விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து நின்றார். 

'இந்த கவர நீதான் இங்க கொண்டு வந்து வச்சியா?' 

'ஆமாங்கய்யா.... எஸ்.ஐ. ஐயாதான் குடுத்து வைக்க சொன்னாங்கய்யா.'

ஆய்வாளர் பெருமாளுக்கு கோபம் தலைக்கேறியது. என்னாச்சி இந்தாளுக்கு? போற போக்கே சரியில்லையே? இருப்பினும் அவரைப் பற்றி ரைட்டரிடம் குறைபட்டுக்கொள்வதில் அர்த்தமில்லை என்று அவர் உணர்ந்தார். 'சரி.... அவர் குடுத்த டைம டயரியில நோட் பண்ணியாச்சா?'

'ஆச்சி சார்.'

'சரி நீ போ.... அவர் ஸ்டேஷனுக்கு வந்தா ஒடனே வரச் சொல்லு.'

'யெஸ் சார்.' என்று மீண்டும் ஒரு சல்யூட் அடித்துவிட்டு ரைட்டர் வெளியேற பெருமாளர் உறையை திறந்து அதில் இருந்த ஆவணங்களில் முக்கியமென கருதப்பட்ட குற்றப்பத்திரிக்கையை எடுத்து வாசிக்கலானார்.


****** 

ராஜசேகர் அன்று இரவு சுமார் பத்து மணிக்கு ராமராஜன் கொடுத்திருந்த செல் நம்பரை அழைத்தான்.

ஒருசில நொடிகளிலேயே எடுக்கப்பட 'நீங்க மணி தான?' என்றான்.

'ஆமா சார்.. மணிதான் பேசறேன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ராமராஜன் சார் கூப்ட்டு சொன்னார். என்ன சார் தெரியணும்?'

ராஜசேகர் மூடியிருந்த தன் படுக்கையறையைப் பார்த்தான். அன்றும் கோகிலா மகளுடன் கீழ்தளத்திலிருந்து அறையிலேயே படுத்துவிட்டிருந்தாள். எனினும் எழுந்து சென்று உள்தாப்பாள் போடப்பட்டுள்ளதா என்று பரிசோதித்துவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தான்.

'பெருசா ஒன்னும் இல்ல மணி... அன்னைக்கி மிஸ்டர் கோபால் உங்க ஆட்டோவுலதான வந்தார்? அது விஷயமாத்தான்....'

'கேளுங்க சார்...'

'அன்னைக்கி சாயந்தரம் கோபால் ஆட்டோவுல வர்றப்போ எப்படி இருந்தார்? அதாவது ஏதாவது டென்ஷன்ல இருக்கா மாதிரி தெரிஞ்சிதா?'

'இல்லையே சார்... எப்பவும் போல நார்மலாத்தான் இருந்தார்னு நினைக்கறேன்...'

'போற  வழியில யாருக்காச்சும் ஃபோன் பண்ணாரா?'

எதிர்முனையில் மணி லேசாக சிரிப்பதை உணர்ந்தான். 

'எதுக்கு சிரிக்கிறீங்க?'

'பின்னே என்ன சார்? அவர் என்னைக்கி செல்ஃபோன்ல பேசாம இருந்துருக்கார்? ஆட்டோவுல ஏறினா செல்ஃபோன்தான்... இறங்கறவரைக்கும் யார் கூடவாவது பேசிக்கிட்டேதான் இருப்பார்.... அன்னைக்கிம் அப்படித்தான் பேசிக்கிட்டே இருந்தார்...'

'அவர் யார் கிட்ட பேசினார்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சிதா?'

'இப்பல்லாம் ஆட்டோவுல ஏறுர கஸ்டமர்ங்க எல்லாருமே ஃபோன்ல பேசிக்கிட்டுத்தான் டிராவல் பண்ணுங்க... அதெல்லாம் நாங்க எப்படி சார்  நோட் பண்றது? அதுவுமில்லாம அன்னைக்கி செம டிராஃபிக்... சார் வேற சீக்கிரம், சீக்கிரம்னு சொல்லிக்கிட்டே இருந்தார். என்ன அவசரமோன்னு நினைச்சிக்கிட்டு உயிர கையில புடிச்சிக்கிட்டு ஓட்டுனேன் சார்... இடையில ரெண்டு சிக்னல்ல கூட நிக்காம... போலீஸ் கிட்ட மாட்டாம இருந்தது ஆச்சர்யம்தான்...'

'சரி... மாதவி வீட்டுக்கு எத்தன மணிக்கி போய் சேர்ந்தீங்க.... ஞாபகம் இருக்கா? தோராயமா சொன்னா போறும்.'

'ஆறே முக்கால் இருக்கும் சார்...'

'அப்படியா? ஆனா அவர அந்த வீட்டு முன்னால ஏழு மணிக்கி பாத்ததா பக்கத்து வீட்டு லேடி போலீஸ்ல சொல்லியிருக்காங்களே?'

'இருக்கும் சார்... அவர் போயி கால் மணி நேரம் கழிச்சித்தான் வெளியில வந்தார்னு நினைக்கறேன்..'

'வெளியில வந்தாரா? அப்படீன்னா அவர் அந்த வீட்டுக்குள்ள போனாரா?'

தொடரும்..

10 comments:

Packirisamy N said...

The suspense keeps building up. Waiting for the next episode. I cannot figure out the culprit.

வே.நடனசபாபதி said...

//அப்படீன்னா அவர் அந்த வீட்டுக்குள்ள போனாரா?//

இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைக்குமா? வழக்கறிஞர் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்பதே எனது கேள்வி!

G.M Balasubramaniam said...


தொடர்கிறேன்

இராஜராஜேஸ்வரி said...

தொப்பையை கழற்றிவிட்டு //

தொப்பிக்குப் பதிலாக போலீஸ்காரர்கள்
தொப்பையை கழட்ட முடிந்தால் குற்றங்கள் குறையுமோ..!

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
I cannot figure out the culprit.//

Me too. Somehow I should find him before the story comes to an end!!

Thanks for your visit and the comment.

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...

இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைக்குமா? வழக்கறிஞர் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்பதே எனது கேள்வி!//

கண்டிப்பா. இந்த பதிவுல பதில் இருக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன்//

நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

இராஜராஜேஸ்வரி said...


தொப்பிக்குப் பதிலாக போலீஸ்காரர்கள்
தொப்பையை கழட்ட முடிந்தால் குற்றங்கள் குறையுமோ..!//

இப்படியொரு தவறு நடந்ததால்தானே இதுவரை வராத விருந்தாளியாக வந்துள்ளீர்கள் :)

சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. திருத்திவிட்டேன்.

அடிக்கடி வாங்க.

Sasi Kala said...

அந்த பெண்ணின் பதில்கள் மனதை என்னவோ செய்தன...
இந்த ஆட்டோ ஓட்டுனரிடம்இருந்து என்ன என்ன தகவல்கள் கிடைக்குமோ ?

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
அந்த பெண்ணின் பதில்கள் மனதை என்னவோ செய்தன...//

ஒரு பெண்ணுக்குத்தான் எவ்வளவு கஷ்டங்கள்? அதுவும் தைரியம் இல்லன்னா இந்த பாடுதான்.

இந்த ஆட்டோ ஓட்டுனரிடம்இருந்து என்ன என்ன தகவல்கள் கிடைக்குமோ ?//

ஆட்டோக்காரங்கதான எல்லா ரகசியங்களையும் தெரிஞ்சி வச்சிருக்காங்க?