22 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 25


'அது ஒன்னும் இல்லை சார். கோபால் சார் சாதாரணமா கார ஆஃபீஸ் காம்பவுன்ட்ல பார்க் பண்ணிட்டு வீட்டுக்கு ஆட்டோவுலதான் போவார். அவர் இருக்கற அப்பார்ட்மென்ட்ல ஓப்பன் ஏர் கார் பார்க்கிங்தான். அந்த flat ராசியானதுன்னு சாருக்கு நினைப்பு. அதனாலதான் பெருசா வசதி இல்லேன்னாலும் ரெண்டு வருசமா அங்கயே குடியிருக்கார். சாரும் வய்ஃபும் மட்டுந்தான். குழந்தைங்க கிடையாது. அவரோட ஃபர்ஸ்ட் வய்ஃப் இறந்ததுக்கப்புறம் அவர் இருந்த வீட்ல இருக்க புடிக்காம அந்த சமயத்துல நாங்க ப்ரமோட் பண்ண  இந்த அப்பார்ட்மென்ட்ல விக்காம இருந்த flatஅ சாரே அவர் பெர்சனல் பேருக்கு மாத்திக்கிட்டு குடிபோனார். ஆனா அதுக்கு முன்னாலயே ஷெல்டர்ட் கார் பார்க்கிங் ஏரியாவ எல்லாம் வித்துட்டிருந்ததால ஓப்பன் ஏர் கார் பார்க்கிங்தான் இருந்துது. ஆஃபீஸ்லருந்து கால் மணி நேரம் நடைதான் இருக்கும். சில சமயங்கள்ல நடந்தே கூட போயிருவார். அன்னைக்கி மாதவி மேடம் வீட்லருந்து திரும்பி வந்த டைம்ல எங்க ஆஃபீஸ க்ளோஸ் பண்ணியிருப்பாங்க. அதான் டாக்குமென்ட மட்டும் டேஷ் போர்ட்ல வச்சி பூட்டிட்டு வீட்டுக்கு நடந்தே போயிருப்பார். அதுக்கு அடுத்த நாள் சார் ஆஃபீசுக்கே வரலை... உடம்புக்கு முடியலன்னு வீட்லருந்து ஃபோன் பண்ணார். வீட்லதான் இருப்பேன் ஏதாச்சும் அர்ஜன்ட்னா மட்டும் நீங்க கூப்டுங்க... வேற யார்கிட்டயும் நா வீட்ல இருக்கேன்னு சொல்லிறாதீங்கன்னு சொன்னார்.... ஆனா அன்னைக்கி பகலே அவர தேடிக்கிட்டு போலீஸ் இங்க வந்துட்டாங்க.... நாந்தான் அவங்க வந்த விவரத்த ஃபோன் பண்ணி சார்கிட்ட சொன்னேன்... அவங்க இங்க வரவேணாம் நானே ஆஃபீசுக்கு வரேன்னு சொல்லிட்டு புறப்பட்டு வந்தார். வந்தவர்கிட்ட விஷயத்த சொல்லி கூப்ட்டுக்கிட்டு போய்ட்டாங்க.... டாக்குமென்ட கார்ல வச்சத சார் மறந்துட்டார்னு நினைக்கறேன்..'

அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான் என்று நினைத்தான் ராஜசேகர். மாதவிக்கு அந்த வீட்டை எழுதிக் கொடுத்துவிடும் எண்ணத்தோடுதான் கோபால் அந்த வீட்டு பத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார். ஆகவே மாதவியை கொலை செய்யும் மோட்டிவ் எதுவும் அவருக்கு இல்லை என்பதை இதன் மூலம் ப்ரூஃப் பண்ணிறலாம்...

'சரிங்க.... கடைசியா ஒரு கேள்வி.'

'கேளுங்க சார்...'

'இந்த கேள்விய உங்கக்கிட்ட கேட்க கூடாதுதான்... இருந்தாலும் கேக்கறேன்... பதில் சொல்லணும்னு அவசியமில்லை... அப்ஜெக்ஷன் எதுவும் இல்லன்னா சொல்லுங்க...'

'பரவால்லைசார்.. சும்மா கேளுங்க.'

'மிஸ்டர் கோபாலுக்கும் அவரோட செக்கன்ட் வய்ஃபுக்கும் இடையில ஏதாச்சும் பிரச்சினை இருக்கா? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க... இல்லன்னா வேணாம்.'

ராமராஜன் பதிலளிக்காமல் பூங்காவைச் சுற்றியிருந்த தெருவில் ஒரு நொடி கூட இடைவெளியில்லாமல் சென்றுக்கொண்டிருந்த வாகனங்களை பார்ப்பதை ராஜசேகர் கவனித்தான். எதுக்கு இந்த கேள்விய இவர் கிட்ட கேட்டேன்.... இவர் கூட இருக்கற ஸ்மூத் ரிலேசன்ஷிப்பையும் கெடுத்துக்கிட்டேனோ... காலையில மகாதேவனோட ஃப்ரென்ட்ஷிப்ப கெடுத்தா மாதிரி? இன்னைக்கி முளிச்ச நேரம் சரியில்ல போலருக்கு....

'சாரி ராமராஜன்... நா இந்த கேள்விய உங்கக்கிட்ட கேட்டுருக்கக் கூடாது...' என்றவாறு எழுந்து நின்றான்... 'You need not answer...'

ராமராஜனும் எழுந்து நின்றான். இருவரும் வாசலை நோக்கி மவுனமாக நடந்தனர்...

'கொஞ்சம் டெலிகேட்டான கேள்விதான் சார்.... இருந்தாலும் பதில் சொல்றேன்... எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவ்வளவு ஸ்மூத்தான ரிலேஷன்ஷிப் இல்லதான் சார்.... சாரோட மைன்ட்ல அவங்கள டைவர்ஸ் பண்ணிட்டு மாதவி மேடத்தை மேரேஜ் பண்ணிக்கலாமாங்கற யோசனையும் இருந்துதுங்கற வரைக்கும் எனக்கு தெரியும்....'

இதை எதிர்பார்க்காத ராஜசேகர் அதிர்ச்சியுடன் ராமராஜனைப் பார்த்தான். 'என்ன சொல்றீங்க?'

'ஆமா சார்.... ரெண்டு மூனு மாசமவே அவர் இந்த ஐடியாவ மனசுல போட்டு குழப்பிக்கிட்டிருந்தது எனக்கு தெரியும்..... போன மாசத்துல ஒருநாள் எங்கிட்டவே இந்த விஷயத்த சொல்லிட்டு நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டார்.... அவர் அன்னைக்கி ட்ரிங்ஸ் சாப்டுருந்ததால அந்த மூட்ல கேட்ருப்பார்னு நினைச்சி நானும் அத பெருசா எடுத்துக்கல... ஆனா சாரோட வய்ஃப் ஆஸ்ப்பிட்டலைஸ் ஆனது... அதுக்கப்புறம் இப்போ மாதவி மேடத்தோட சாவு.... இதெல்லாமே ஏதோ ஒரு விதத்துல கனெக்டட் மாதிரி தெரியறதால இத வசந்த் சார் இன்வெஸ்ட்டிகேஷனுக்கு வந்தப்போ சொல்லணும்னு நினைச்சேன்.... ஆனா அப்போ இருந்த சூழ்நிலையில ஆஃபீஸ்ல வச்சி அவர்கிட்ட ஃப்ராங்கா பேச முடியாம போயிருச்சி... உங்கள பார்க்குக்கு வரச்சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணம் சார்...' 

என்ன, எப்படி பதிலளிப்பது என்பது தெரியாமல் மவுனமாகிப்போன ராஜசேகர் பனகல் பூங்காவின் வாசலுக்கு வந்துவிட்டதை உணர்ந்தான். 'ரொம்ப தேங்ஸ் ராமராஜன்.... இப்போ எங்கிட்ட சொல்லீட்டிங்க இல்லே... இத இத்தோட மறந்துருங்க.... இனி ஆகப்போறத நா பாத்துக்கறேன்.... முடிஞ்சா அந்த ஆட்டோ டிரவைர கூப்ட்டு நா கூப்டுவேன்னு சொல்லிருங்க..... அவர் பேர் என்னன்னு சொல்லலையே?'

'மணி, சார்..' என்று பதிலளித்த ராமராஜன், 'சார்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெளியில போவேணாம்னு நினைக்கறேன்... நா முதல்ல போறேன்.... நீங்க ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி.....'

'அதுவும் சரிதான்... நீங்க போங்க....' என்று அவரை வழியனுப்பிவிட்டு பூட்டியிருந்த கேட்டுக்கருகில் இருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தான்.

**********

துணை ஆய்வாளர் தன்ராஜ் மாதவியின் புலன்விசாரணை கோப்பை திறந்து வைத்துக்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியிருந்த குற்றப்பத்திரிக்கையை தயார் செய்வதில் முனைந்திருந்தார்.

இதுவரை விசாரணையில் கிடைத்திருந்த தடயங்கள், ஆவணங்கள், சாட்சிகள் ஆகியவற்றை வைத்தே கோபாலை குற்றவாளி என்றும் திட்டமிட்டே இந்த கொலையை செய்தார் என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபித்துவிட முடியும் என்றாலும் இன்னும் ஏதோ ஒரு முக்கியமான தகவல் கிடைக்கவில்லை என்று தன்னுடைய உள்மனம் கூறுவதை அவரால் புறக்கணிக்க முடியவில்லை.

ஒரு குற்றத்தைப் பற்றி நடத்தப்படும் புலன்விசாரணையில் கிடைக்கும் ஒவ்வொரு தடயமும், தகவலும், சாட்சியமும் ஒன்றுக்கொன்று பின்னி பிணையப்பட்ட சங்கிலியைப் போன்று இருக்க வேண்டும் என்பதை தன்னுடைய பயற்சி வகுப்பில் கேட்டது அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை அப்படி இல்லாததுபோல் அவர் உணர்ந்தார்.

அன்று காலையில் தனக்கு கிடைத்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை மீண்டும் நான்காவது முறையாக படித்து முடித்தபோதும் அந்த நெருடல் மனதை விட்டு அகலவேயில்லை.

'மாதவியின் உடம்பில் மூன்று காயங்கள். பின்னந்தலையில் இரண்டு காயங்கள். அரை மணி நேர இடைவெளியில். அவர் உடல் கிடந்த இடத்திற்கு மிக அருகில் இடப்பட்டிருந்த இரும்பு சோபாவின் கைப்பிடியில் மாதவியின் ரத்தம் படிந்திருந்தாலும் அதில் இடித்துத்தான் அவர் காயமடைந்தார் என்பதை அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை முனை தடித்த இரும்பு தடியால் அடிக்கப்பட்டிருந்தால் கூட அத்தகைய காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.' 

ஆனால் அப்படியொரு தடயம் சம்பவம் நடந்த இடத்திலோ அல்லது அக்யூஸ்ட் அலுவலகத்திலோ, அவருடைய வீட்டிலோ வாகனத்திலிருந்தோ கிடைக்கவில்லை. இது இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கக்கூடும். 

பிரேதப்பரிசோதனை அறிக்கையின் இறுதியில் கொடுக்கப்பட்டிருந்த summaryயில் காணப்படும் அந்த இறுதி வாக்கியம்.... 'Injuries at the back of the deceased head could have been caused by any blunted instrument as well..' கொலையாளி பயன்படுத்திய ஆயுதத்தை ஏன் காவல்துறையால் கைப்பற்றப்படவில்லை என்று எதிர்பரப்பில் வாதாடினால் அது வழக்கிற்கு பாதகமாகவே முடிய வாய்ப்புள்ளது. 

அடுத்தது, முகத்தில் இடது புருவத்திற்கு மேல் காணப்பட்ட வெட்டுக்காயம். It could have been caused by a fall on the teapoy or by a sharp edged knife/instrument.....

கொலையைப் பற்றிய தகவல் மாதவியின் வீட்டு வேலைக்காரி தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்தபோது அவர் ஸ்டேஷனில் இல்லை. வேறொரு கொலைவழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் ஸ்டேஷன் ஆய்வாளர் சென்னை ஆணையர் அலுவலகத்திற்கும் லா அன்ட் ஆர்டர் துணை ஆய்வாளர் வேறோரு மறியல் போராட்டம் நடந்த இடத்திற்கும் சென்றிருந்ததால் ஸ்டேஷனில் அப்போதிருந்த எஸ்.எஸ்.ஐ கேசவனும் அவருக்கு துணையாக இரு பி.சி.க்கள் மட்டுமே சென்றிருந்தனர். 

தன்ராஜ் தகவல் அறிந்து உடனே புறப்பட்டு வந்தும் கொலைக்களத்திற்கு அவர் சென்றடைந்தபோது பிற்பகலாகியிருந்தது. அதற்குள் கொலைக்களத்தில் எவ்வித தடயங்களும் இருக்கவில்லை. முக்கியமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆயுதமும் அங்கு இல்லை சார் என்று அந்த இடத்தை பார்வையிட்டவர்கள் கைவிரித்துவிட்டனர். அவர்கள் வரைந்திருந்த கொலைக்களத்தை விவரிக்கும் rough sketchம் அவ்வளவு தெளிவாக இல்லை. உடல் கிடந்த இடத்திலிருந்து சோபாவும் டீப்பாயும் எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் கிடந்தது என்பன போன்ற விவரங்கள் எதுவும் குறிக்கப்படவில்லை. அவர்கள் கொலைக்களத்திற்கு சென்ற நேரத்தில் கொலையாளி யார் என்று தெரியாததால் அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் வேண்டுமென்றே தடயங்கள் மறைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பில்லை. அவர் அங்கு சென்று அடுத்திருந்த வீடுகளிலிருந்தவரளை விசாரித்தபோதுதான் அடுத்த வீட்டில் குடியிருந்த பெண் அக்யூஸ்ட் கோபாலை அங்கு வைத்து பார்த்ததாக தன்னிடம் கூறியதும் நினைவுக்கு வந்தது. 

ஆகவே கொலைக்களத்தைப் பார்வையிட சென்றவர்களை கவனக்குறைவாக நடந்துக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கலாமே தவிர வேண்டுமென்றே தடயங்களை மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. மேலும் இத்தகைய சமயங்களில் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சி விசாரணை அதிகாரமுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம்.  

இந்த எண்ணங்கள் எல்லாம் தன்ராஜின் மனதில் ஓடினாலும் இப்போது அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில் பயன் ஏதும் இல்லை என்பதும் அவருக்கு தெரிந்தது. கையில் உள்ள தடயங்களை வைத்து இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலதான் என்பதை நிரூபித்தாக வேண்டும்.

அவருடைய எண்ண ஓட்டங்களை கலைப்பதற்காகவே அவருடைய மேசை மீதிருந்த தொலைபேசி அலறியது.

எடுத்து, 'யாருங்க?' என்றார் எரிச்சலுடன்.

'சார் நான் தனபால் பேசறேன்.'

'ஸ்டேஷன்லதான இருக்கே எதுக்கு ஃபோன்ல கூப்டறே?'

'சார்... நா வெளியிலருந்து கூப்டறேன்.'

'வெளியிலன்னா.. எங்கருந்து?'

'இங்க அக்யூஸ்ட் ஆஃபீஸ் முன்னாலருந்து சார்....'

'யோவ்' என்று இரைந்தார் தன்ராஜ் எரிச்சலுடன், 'வெறுமனே அக்யூஸ்ட்னா எப்படிய்யா? யார், பேரச் சொல்லு.'

'அதான் சார்... அந்த ரியல் எஸ்டேட் ஓனர்.... கோபால் சார்.'

'அவர் ஆஃபீஸ் முன்னால நீ என்னய்யா பண்றே?'

தொடரும்..11 comments:

G.M Balasubramaniam said...


ராஜசேகர் மாதவியைத் தள்ளியதில் பின் தலைக் காயம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் மாதவியின் புருவத்தின் அருகில் அதாவது முன் பாகம் காயம். இது ராஜசேகர் காரணமில்லை என்று தொன்றுகிறது. கோபாலையும் வாதங்களால் விடுவித்தால் கொலையாளி யார். இதுவரை தலைகாட்டாத புதிய மனிதர் யாராவதா.?

வே.நடனசபாபதி said...

கதை போகிற போக்கைப் பார்த்தால் வழக்கறிஞரும், துணை ஆய்வாளர் தன்ராஜின் சந்தேக வலையில் விழப்போகிறார் என எண்ணுகிறேன். ம்...பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!

Packirisamy N said...

// என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சி, அதிகாரமுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம். //

This happens in most of the fields. The head will go for all the exhibitions and training, but in the end it is the lower level people, who have to take the responsibility for the job, without much authority.

Bagawanjee KA said...

சீக்கிரம் முடிச்சிக்களை அவிழ்த்துவிடுங்க ...இனிமேலும் சொந்த செலவில் தலையை பிச்சுக்கும் சூன்யம் வச்சுக்க முடியாது !

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

ராஜசேகர் மாதவியைத் தள்ளியதில் பின் தலைக் காயம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் மாதவியின் புருவத்தின் அருகில் அதாவது முன் பாகம் காயம். இது ராஜசேகர் காரணமில்லை என்று தொன்றுகிறது.//

அப்படித்தான் எனக்கும் தோனுது.

கோபாலையும் வாதங்களால் விடுவித்தால் கொலையாளி யார். இதுவரை தலைகாட்டாத புதிய மனிதர் யாராவதா.?//

தெரியலையே:))

வருகைக்கும் காட்டிய ஆர்வத்திற்கும் நன்றி சார்!

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
கதை போகிற போக்கைப் பார்த்தால் வழக்கறிஞரும், துணை ஆய்வாளர் தன்ராஜின் சந்தேக வலையில் விழப்போகிறார் என எண்ணுகிறேன். //

ஆமால்ல? ராஜசேகர் தேவையில்லாத ரிஸ்க்லாம் எடுக்கிறார்னுதான் தோனுது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
// என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற பயிற்சி, அதிகாரமுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதும் இதற்கு ஒரு காரணம். //

This happens in most of the fields. The head will go for all the exhibitions and training, but in the end it is the lower level people, who have to take the responsibility for the job, without much authority.//

You are absolutely right. I also have the same experience. When I was a junior I felt I should have been sent for this and that seminars. But when I was deputed for such seminars as head of the IT division later in my career I felt my juniors should have been sent for such seminars!!

டிபிஆர்.ஜோசப் said...

Bagawanjee KA said...
சீக்கிரம் முடிச்சிக்களை அவிழ்த்துவிடுங்க ...இனிமேலும் சொந்த செலவில் தலையை பிச்சுக்கும் சூன்யம் வச்சுக்க முடியாது !//

சீக்கிரமே அவுந்துருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sasi Kala said...

சிக்கலை அவிழ்க்கும் முடிவுக்கு வந்திருக்கிங்க போல..

Sasi Kala said...

சிக்கலை அவிழ்க்கும் முடிவுக்கு வந்திருக்கிங்க போல..

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
சிக்கலை அவிழ்க்கும் முடிவுக்கு வந்திருக்கிங்க போல..//

ஆமாங்க.... எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணுமில்ல? எவ்வளவு நாளைக்கித்தான் சஸ்பென்ஸ் மெய்ன்டைன் பண்ண முடியும்:)