20 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 23

முன்கதை

யார் இவர் என்று தெரியாமல் குழம்பினான் ராஜசேகர். 'நீங்க யாருன்னு தெரியலையே?' 

'சார் நான் ராமராஜன், கோபால் சாரோட பி.ஏ. சார ஃபர்ஸ்ட் டைம் கோர்ட்ல ப்ரட்யூஸ் பண்ணப்போ உங்கள கோர்ட்ல பாத்துருக்கேன்.... !

'அப்படியா' என்று வியந்த ராஜசேகர் இவர் எங்க இங்கே என்று நினைத்தான். 'நீங்க எப்படி இந்த ஏரியாவுல?' 

'என் வீடு இங்கதான் சார்... பழமுதிர்சோலைக்கு பின்னால... இன்னைக்கி அப்பாவுக்கு திவசம்.... அதான் ஒன் அவர் பர்மிஷன்... ஆபிசுக்குத்தான் போய்க்கிட்டிருக்கேன்...' என்ற ராமராஜன் தன்னை சந்தேகத்துடன் பார்ப்பதை கவனித்தான்.

'அப்படிங்களா, இங்க என்னோட க்ளையன்ட் ஒருத்தர் இருக்கார்.... அவர பாக்க வந்தேன்....' என்று சமாளித்தான். பூஜை வேளையில கரடி பூந்தா மாதிரி இந்த நேரம் பாத்து இந்தாள் வேற.... நாம வந்த காரியம் கெட்டுருமோ...

'அப்ப நா கிளம்பறேன் சார்.... இங்கருந்து ஷேர் ஆட்டோ புடிச்சி லஸ் போனாத்தான் நம்ம ஆஃபீசுக்கு பஸ் கிடைக்கும்.... பாக்கலாம் சார்...' என்றவாறு ராமராஜன் கிளம்ப சட்டென்று நினைவுக்கு வந்தவனாய், 'ராமராஜன் ஒரு நிமிஷம்.' என்றான்.

'சொல்லுங்க சார்.'

'இன்னைக்கி பகல் உங்கள பாக்க வரலாமா? கேஸ் விஷயமா கொஞ்சம் கேக்கணும்.... வசந்த் ஊர்ல இல்ல... அதான்.'

ராமராஜனின் முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்தது கலவரமா என்று அவன் நினைப்பதற்குள் வாயெல்லாம் பல்லாக, 'கண்டிப்பா சார்... நீங்க வர்றதுக்கு முன்னால ஃபோன் பண்ணுங்க... என் நம்பர் வசந்த் குடுத்துருப்பாருன்னு நினைக்கிறேன்...' என்று பதிலளிக்க, 'ஆமா. இருக்கு' என்றான் ராஜசேகர்.

அடுத்த சில நொடிகளில் அவர்கள் அருகில் வந்து நின்ற ஷேர் ஆட்டோ ஒன்றில் ராமராஜன் ஏறிக்கொள்ள அது சென்று தெருக்கோடியில் திரும்புவரை அங்கேயே நின்றிருந்த ராஜசேகர் சாலையில் இறங்கி நடக்கலானான். முதல்ல மாதவி அன்னைக்கி எங்கருந்து நம்ம ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணான்னு பாக்கணும். அவனுடைய அலுவலக தொலைபேசியில் காலர் ஐடியை பார்க்கும் வசதி இருந்ததால் அன்று அவளுடைய வீட்டு தொலைபேசியில் இருந்து அழைக்கவில்லை என்பது தெரிந்திருந்தது. அது செல்ஃபோன் எண்ணும் இல்லை. அதே சமயம் அவள் அடுத்த வீடுகளில் சென்று அழைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த காலனியில் குடியிருந்த பலருக்கும் அவளை அவ்வளவாக பிடிக்காது என்பது அவனுக்கு தெரியும். அவள் ஒரு சினிமா துணை நடிகை என்பதோடு அவளுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததையும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே அவளை தங்களுடைய வீடுகளுக்குள் நுழைய அனுமதித்திருக்க வாய்ப்பில்லை. 

ராஜசேகர் சாலையில் இறங்கி நடைபாதையில் அமைந்திருந்த கடை போர்டுகளை பார்த்தான். சட்டென்று அவனுடைய பார்வை ஒரு கடையில் மீது விழுந்தது. கட்டண தொலைபேசி பூத். அவன் நின்ற இடத்திலிருந்து மாதவியின் வீட்டைப் பார்த்தான். அங்கிருந்து அவளுடைய வீட்டு வாசல் நன்றாக தெரிந்தது. வாசற்கதவருகில் யார் நின்றாலும் இங்கிருந்து தெளிவாக பார்க்க முடியும் என்று நினைத்தான்.  

கடைக்குள் நுழைந்தான். சிறிதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. ஒரு மூன்றடிக்கு இரண்டடி குட்டி மேசை. அதன் பின்னால் இருந்த ஒரு ஃபோல்டிங் ஸ்டீல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தான். இருபது வயது இருக்குமா? இருக்கும். மேசை மீது ஒரு திறந்த நோட்டுப்புத்தகம், நடுவில் ஒரு திறந்த பால்பாய்ன்ட் பேனா நுனியில் ஒரு நூலுடன் படுத்திருந்தது. 

'ஒரு லோக்கல் பண்லாமா?' என்றான்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவன் தலை நிமிராமலே வலப்புறம் அமைந்திருந்த கண்ணாடி கூண்டை காட்டினான். 

'பண்ணிக்குங்க சார்.'

ராஜசேகர் அறைக்குள் நுழைந்து யாருக்கு டயல் செய்வது என ஒரு நொடி சிந்தித்துவிட்டு தன் அலுவலக எண்ணை டயல் செய்தான். அவன் டயல் செய்தவாறே தலைக்கு மேல் பொருத்தப்பட்ட திரையில் ஒவ்வொரு நம்பராக ஒளிர்வதைக் கவனித்தான். ஒருவேளை கஸ்டமர்கள் அழைக்கும் அனைத்து தொலைபேசி எண்களையும் எங்காவது ரிக்கார்ட் செய்வார்களோ? ரிங் போய்க்கொண்டே இருந்தது. ஒன்று, இரண்டு என அறுபது வரை எண்ணினான்.... ஒரு நிமிடம்... இணைப்பைத் துண்டித்துவிட்டு வெளியில் வந்தான். 'யாரும் எடுக்கலீங்க.' 

'பரவால்லைங்க....'

அப்போதும் அவன் தலையை குணிந்தவாறே அமர்ந்திருக்க, 'கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி மறுபடியும் ட்ரை பண்ணட்டுமா?' என்றான் ராஜசேகர்.

'சரி சார்... அந்த சேர்ல ஒக்காருங்க.' என்றவாறு தலைநிமிர்ந்தவன் தன் இடப்புறம் சுவரில் சாத்தப்பட்டிருந்த மடக்கு நாற்காலியை காட்டினான். ஆனால் அதை நிமிர்த்தி போட எந்த முயற்சியும் செய்யாமல் அமர்ந்திருக்க ஒரு மெல்லிய புன்னகையுடன் ராஜசேகர் அதை பிரித்து அமர்ந்தான். சாலையில் வாகனங்கள் விடும் கரும்புகை அடர்த்தியாக தன்னை நோக்கி வருவதைக் கண்டு கையில் வைத்திருந்த கைக்குட்டையால் மூக்கை மூடினான்.

'டெய்லி இதே ரோதனைதான் சார்.' என்ற பணியாளைப் பார்த்து புன்னகைத்தான்.

'எப்படிங்க ஒரு நா முழுக்க இங்க ஒக்காந்திருக்கீங்க?'

'என்ன சார் பண்றது வயித்து பொழப்பாச்சே?'

உண்மைதானே? அவனவன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையோர நடைபாதையில் கடைவிரித்து அமர்ந்திருக்க குறைந்தபட்சம் உட்கார ஒரு நாற்காலியும் தலைக்கு மேல் நாள் முழுக்க சுழலும் மின்விசிறியும் இருக்கும்போது அவ்வப்போது வரும் புகையைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லையே? செருப்பில்லாதவன் காலே இல்லாதவனை பார்க்கும்போது ஏற்படும் ஆறுதல் மாதிரிதான் இதுவும்.

'இது உங்க கடையா?'

பணியாள் அவனைப் பார்த்து அட நீங்க வேற சார் என்பதுபோல் புன்னகைத்தான். 'இல்ல சார்... எங்க மொதலாளிக்கு சிட்டியில இந்த மாதிரி அம்பது பூத் இருக்கு. இங்க வந்து ஒரு வாரம்தான் ஆச்சி... அடுத்த வாரம் எங்கயோ. ஒரே பூத்ல இருந்தா கஸ்டமர்ங்களோட ஃப்ரண்ட்ஷிப் ஆயிருவோம்னு மொதலாளி வாரம் ஒரு பூத்துன்னு மாத்திருவார்.'

அப்படியென்றால் மாதவி இங்கிருந்து நம்மை தொலைபேசி வழியாக அழைத்திருந்தாலும் இவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், 'இங்கருந்து லோக்கல் கால் பண்ணாக்கூட இந்த நோட்புக்ல எழுதிப்பீங்களா?' என்றான்.

பணியாள் சிரித்தான். 'எப்படி சார்? டெய்லி இருநூறு லோக்கல் கால் போவுமே... அதையெல்லாம் எழுதி வச்சா இத்துனூண்டு புஸ்தகம் ஒரு வாரத்துல தீந்துராது? எஸ்டிடி, ஐஎஸ்டி நம்பர மட்டும் எழுதிக்குவோம் சார்.... லோக்கல் கால் எத்தன போச்சின்னு மெஷினே நோட் பண்ணிக்கும். அத வச்சி கலெக்‌ஷன மொதலாளி சரிபாத்துக்குவார்.'

அப்பாடா என்றிருந்தது அவனுக்கு. ஒருவேளை மாதவி இங்கு வந்து நம்மை அழைத்து அதையும் இவர்கள் எங்காவது ரெக்கார்ட் செய்து வைத்திருந்தால் அதை வைத்தே அவள் நம்மை கொலை நடந்த அன்று அழைத்ததை போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டிருக்குமே.... 

உடனே எழுந்து சென்றால் கடையிலிருந்த பணியாளுக்கு சந்தேகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நினைத்த ராஜசேகர் 'இன்னொரு டைம் ட்ரை பண்ணவா?' என்றவாறே எழுந்து நின்றான்.

'பண்ணுங்க.'

அவன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய வீட்டு தொலைபேசி எண்ணை அழைத்தான். ஒரு சில நொடிகளுக்குள்ளாகவே கோகிலா எடுத்து, 'யார் வேணுங்க?' என்பது கேட்டது. மறுபேச்சு பேசாமல் துண்டித்தான். எதுக்கு கூப்ட்டீங்கன்னு கேட்டா என்னத்த சொல்றது? 

அறையை விட்டு வெளியில் வந்து நின்றான். 'டூ ருப்பீஸ்' என்றவனிடம் காசை நீட்டினான். பணியாளுடைய மேசை மீது அமர்ந்திருந்த பில் அடிக்கும் மெஷினைப் பார்த்தான். அதிலிருந்து அழைக்கப்பட்ட எண்ணுடன் பில் அடித்து தருவதை இதற்கு முன்பு சில கடைகளில் கண்டிருக்கிறான். 'பில் தருவீங்களா?' என்றான்.

'லோக்கல் காலுக்கெல்லாம் பில் வராது சார்....'

தலையை நிமிராமலே பதிலளித்தவனை ஒருமுறை பார்த்துவிட்டு கடையை விட்டு வெளியேறி மாதவியின் வீட்டை பார்த்தான். அன்று கோபாலை வழியனுப்ப வாசலில் வந்து நின்ற மாதவியை இங்கிருந்து யார் வேண்டுமானாலும் பார்த்திருக்க முடியும். அப்படி யாராவது பார்த்த தகவலை இந்த சாலை முழுவதும் விசாரணை செய்த போலீசாரிடம் இதுவரை தெரிவிக்காமலா இருந்திருப்பார்கள் என்று நினைத்தான். It means nobody had seen her on that day. மேலும் அவள் இங்கிருந்து அழைத்த அன்றோ அல்லது  அடுத்த நாளோ அன்று கடையிலிருந்த பணியாள் மாற்றப்பட்டிருக்கக் கூடும் என்பதும் கூட தனக்கு சாதகமாக அமைந்துவிட்டதை நினைத்து நிம்மதியடைந்தான். 

இருந்தாலும் இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நினைப்புடன் மாதவியின் வீட்டுக்கு நேர் எதிரில் அமைந்திருந்த பழமுதிர்ச் சோலை கடைக்குள் நுழைந்தான். அன்று அந்த கடை வாசலில் இருந்துதான் கோபாலை வழியனுப்ப வாசல்வரை வந்த மாதவியை அவன் பார்த்தான்.

பேருக்கு ஒருசில பழங்களை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் மேசையை நெருங்கினான். அலுவலக நேரம் என்பதால் கடையில் அவனைத் தவிர வேறு வாடிக்கையாளர் இல்லை.  பணம் வாங்கும் இளைஞன் தன் செல்ஃபோனில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கவனித்தான். 

'தம்பி...' என்றான். 

'முதல்ல பில்ல குடுங்க.'

ராஜசேகர் கையிலிருந்த பில்லுடன் அதற்கான பணத்தை வைத்தான். 'உங்கக் கிட்ட ஒன்னு கேக்கணுமே?'

'என்ன சார்?'

'எதிர் வீட்டு கதவுல சீல் வச்ச பூட்டு தொங்கறா மாதிரு இருக்குதே........'

மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்தவன் மட்டுமல்லாமல் கடையில் இருந்த அனைத்து பணியாட்களுடைய பார்வையும் தன் மீது விழுவதை உணர்ந்த ராஜசேகர் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லங்கற கதையா நாமளே மாட்டிக்கிருவமோ என்று ஒரு நொடி திகைத்துப் போனான். இவர்களில் யாருக்காவது தன்னை அடையாளம் தெரிந்துவிட்டால்....!

'ஆமா சார்.... அதுக்கென்ன இப்போ?'

'இல்ல... வீட்ட பூட்டி சீல் வச்சிருக்காங்களே எதுக்குன்னு.....' 

'எல்லாம் போலீஸ்காரங்க பண்ண வேலை சார்... அந்தம்மாவ ரெண்டு வாரத்துக்கு முன்னால யாரோ மர்டர் பண்ணிட்டாங்க... அதுலருந்து நீ பாத்தியா, நீ பாத்தியான்னு ஒரே தொல்லை சார்.. இப்பத்தான் ரெண்டு நாளா யாரையும் காணமேன்னு நினைச்சோம்.... வந்துட்டீங்க... நீங்க போலீசா சார்?' 

ரெகுலர் கஸ்டமர் என்று கூற முடியாவிட்டாலும் அவன் கடந்த ஒரு சில மாதங்களில் குறைந்தது ஐந்தாறு முறையாவது அந்த கடையிலிருந்து பழம், காய்கறி வாங்கியிருப்பான். ஆனால் அவன் அந்த கடைக்கு வரும்போதெல்லாம் கூட்டம் அலைமோதுவதை கவனித்திருக்கிறான். கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஒரு சில நிமிடங்களிலேயே வெளியேறிவிடுவது வழக்கம். 

'இல்ல தம்பி.... சும்மாத்தான் கேட்டேன்...'

'நல்லா கேட்டீங்க சார்... எங்க மறுபடியும் போலீஸ் மஃப்ட்டியில வந்துட்டாங்களோன்னு பயந்துட்டேன்... சொன்னதையே திருப்பி திருப்பி எத்தன தரம் சார் சொல்றது? விடமாட்றாங்க சார்!'

அதற்குமேலும் அங்கிருந்தால் வேறு யாராவது தன்னை அடையாளம் கண்டுக்கொள்ள வாய்ப்புள்ளது என்ற நினைப்புடன் பணத்தை கொடுத்துவிட்டு பையுடன் வெளியேறினான்.  ஒருவேளை கடையிலிருந்த யாராவது தன்னை பின் தொடர்ந்து வருவார்களோ என்ற நினைப்பில் திரும்பி, திரும்பி பார்த்தவாறு வேகமாக நடந்து தன்னுடைய வாகனத்தை அடைந்தான். 

நல்லவேளை அப்படி யாரும் வரவில்லை. வாகனத்தை கிளப்புவதற்கு முன்பு அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்தான். அடுத்து அவன் செல்லவிருந்த இடம் கோபாலின் அலுவலகம். மணியைப் பார்த்தான். நண்பகல். 

ஆனால் சிறிது நேரத்திற்கு முன்புதான் ராமராஜனிடம் பகலுக்கு மேல்  வருவதாக சொன்னது நினைவுக்கு வந்தது. 

இப்போ டிராஃபிக் திநகர் ரூட்ல பயங்கரமா இருக்கும்... எப்படியும் இங்கருந்து நாப்பது நிமிஷமாவது எடுக்கும். போற வழியில லஞ்ச்ச முடிச்சிக்கலாம்... அப்புறமும் டைம் இருந்தா போத்தீஸ்ல போயி கோகிக்கும் பாப்பாவுக்கு ஏதாச்சும் டிரஸ் வாங்கலாம்... சர்ப்ரைசா இருக்கும்.... அதுல எப்படியும் ஒரு மணி நேரம் போவும்... அப்புறம் ராமராஜனைக் கூப்பிடலாம் என்று முடிவு செய்து காரை கிளப்பினான். 

அவன் நினைத்ததற்கு மேலாக திநகர் சென்று சேரும் வரையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. திநகரைச் சென்றடையவே ஒரு மணி நேரம் பிடித்தது. வாகனத்தை நிறுத்த இடத்தை தேடியே மேலும் பத்து நிமிடம் கழிந்தது. 

திநகர் பேருந்து நிலையத்தைக் கடந்து பிரதான சாலையிலிருந்து பிரியும் சந்துகளில் ஒன்றில் நுழைந்து காரை பார்க் செய்துவிட்டு நோ பார்க்கிங் போர்டு எங்காவது தென்படுகிறதா என்று பார்த்தான். தென்படவில்லை. அங்கிருந்து கால்நடையாக சற்று தொலைவில் தெரிந்த உணவகம் ஒன்றில் நுழைந்து அரை மணியில் மதிய உணவை முடித்துக்கொண்டு வெளியில் வந்தான். அங்கிருந்து போத்தீஸ் சற்று தொலைவுதான். ஆனால் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்த தன்னுடைய வாகனத்தை எடுக்க தயங்கினான். இந்த நேரத்துல போத்தீஸ் வரைக்கும் கார்ல போனா பார்க்கிங் நிச்சயம் கிடைக்காது. பேசாம ஒரு ஆட்டோவுல போய்ட்டு வந்துறலாம் என்று நினைத்தவாறு அருகில் இருந்த ஆட்டோ ஸ்டான்டை நோக்கி நடந்தான். அவன் எதிர்பார்த்ததற்கும் மேலாக கூட்டம் இருந்ததால் அவனுடைய மனைவிக்கு ஒரு சேலையும் மகளுக்கு இரண்டு சட்டைகளும் எடுத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியில் வந்தபோது பகல் மணி இரண்டைக் கடந்திருந்தது.

கடை எதிரில் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோக்களில் ஒன்றில் ஏறி வாகனத்தை பார்க் செய்திருந்த இடத்தை அடைந்ததும் செல்ஃபோனை எடுத்து ராமராஜனை அழைத்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. துண்டித்துவிட்டு மீண்டும் அழைக்கலாம் என்று அவன் நினைத்தபோது யாரோ எடுப்பது தெரிந்தது. 

'நா அட்வகேட் ராஜசேகர் பேசறேன்... மிஸ்டர் ராமராஜன்கிட்ட பேசணும்.'

'சொல்லுங்க சார்... நாந்தான்.'

'இன்னும் அரை மணி நேரத்துல வரலாம்னு இருக்கேன். இருப்பீங்களா?'

ஒரு சில நொடிகள் பதில் வராமல் இருக்கவே, 'பிசியா இருந்தா சாயந்தரம் வரட்டுமா?' என்றான்.

'அதுக்கில்ல சார்... நீங்க இந்த நேரத்துல இங்க வரணுமான்னுதான்....'

'ஏன் ஏதாச்சும் பிரச்சினையா?'

தொடரும்

8 comments:

வே.நடனசபாபதி said...

நாளுக்கு நாள் கதையின் சுவாரஸ்யமும் சஸ்பென்சும் கூடிக்கொண்டே போகின்றன. ஆவலுடன் தொடர்கிறேன்.

T.N.MURALIDHARAN said...

சீனுவாசன்தான் கொலையாளியா இருப்பார்னு நான் யூகிக்கிறேன் சார்.

G.M Balasubramaniam said...

/அந்தக்கடைவாசலில்இருந்துதான் கோபாலை வழியனுப்ப வாசல்வரை வந்த மாதவியை அவன் பார்த்தான்./ is there a cat here.?

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
நாளுக்கு நாள் கதையின் சுவாரஸ்யமும் சஸ்பென்சும் கூடிக்கொண்டே போகின்றன. ஆவலுடன் தொடர்கிறேன்.//

ஆனால் இந்த தொடரை படிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில பதிவுகளில் சற்று குறைந்து காணப்படுவதுபோல் தெரிகிறது. க்ரைம் நாவல் என்றாலே வெட்டு, குத்து, ரத்தம் என ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள்தான் அதிகம். ஆகவேதான் ஆங்கிலத்தில் வருவதுபோன்ற க்ரைம் நாவல்கள் தமிழில் வருவதில்லை. ஒரு அத்தியாயத்தில் ஒரு கொலை என்று இருந்தால்தான் அது க்ரைம் நாவல் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துவிட்டனர் தமிழ் க்ரைம் எழுத்தாளர்கள். மாதம் ஒரு புத்தகம் பத்து ரூபாய்க்குள் என்று எழுத்தாளர்கள் எழுதி இதை மலிவாக்கிவிட்டதும் ஆங்கில நாவல்களைப் போன்று ஆழமான நாவல்கள் தமிழில் வராமல் போனதற்கு ஒரு காரண்ம்.

உங்களைப் போன்று வெகு சிலரே பொறுமையுடன் எல்லா பதிவுகளையும் படிப்பதுடன் அதற்கேற்றார்போல் கருத்துரையையும் தவறாமல் இடுகிறீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றி. இன்னும் இரண்டு வாரங்கள்தான், முடிந்துவிடும்.

டிபிஆர்.ஜோசப் said...

T.N.MURALIDHARAN said...
சீனுவாசன்தான் கொலையாளியா இருப்பார்னு நான் யூகிக்கிறேன் சார்.//

எந்த புத்துல எந்த பாம்பு இருக்குதோ.... தெரியலையே?

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...
/அந்தக்கடைவாசலில்இருந்துதான் கோபாலை வழியனுப்ப வாசல்வரை வந்த மாதவியை அவன் பார்த்தான்./ is there a cat here.?//

Is it a cat or catch? எதுவாருந்தாலும் சந்தர்ப்பத்துக்கு நல்லாவே பொருந்துது.....ஆனா இந்த அத்தியாயத்திலிருந்துதான் கதை தன் முடிவை நோக்கி நகர துவங்கியிருக்குங்கறதும் உண்மை...

Sasi Kala said...

எப்படியெல்லாம் மனுசன் தன் மீது சந்தேகம் வராத மாதிரி டெஸ் பண்ணி பார்க்கிறார்.. விறுவிறுப்பாக செல்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
எப்படியெல்லாம் மனுசன் தன் மீது சந்தேகம் வராத மாதிரி டெஸ் பண்ணி பார்க்கிறார்.. விறுவிறுப்பாக செல்கிறது.//

இதுக்குத்தான் வக்கீல்ங்கள நம்பவே கூடாதுன்னு.... மாட்டிக்காம தப்பு செய்யிறது எப்படின்னு அவங்களுக்கு நல்லாவே தெரியுது பாருங்க!