19 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 22


'ஏறக்குறைய மாதவி செத்துக் கிடந்ததும் இதே மாதிரிதான?' என்றார் மகாதேவன். "போலீசஸ் கோபால  சந்தேகப்படறதுல தப்பே இல்லன்னுதான் சொல்ல வரேன், என்ன சொல்றீங்க?'

ராஜசேகர் பதிலளிக்காமல் அவரை பார்த்தான். அவர் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்கும் புலப்பட்டது. முதல் மனைவி குளியலறையில் பின்மண்டையில் அடிபட்டு சில மணி நேரம் கேட்பாரில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததால் மரணம். மாதவியும் அதே போன்று பின்மண்டையில் அடிபட்டு  கேட்பாரில்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததால்தான் மரித்திருக்கிறாள். இரண்டு கொலை நடந்த நேரத்திலும் கோபால் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார்.... இது போறாதா காவல்துறை அவரை சந்தேகிக்க...?

'என்ன சார் மலைச்சி போய்ட்டீங்களா? சத்தத்தையே காணம்?'

ராஜசேகர் திடுக்கிட்டு தன் முன் அமர்ந்திருந்த மகாதேவனை பார்த்தான். 'இல்ல சார்.. நீங்க சொன்னதுக்கப்புறந்தான் எனக்கும் ஸ்ட்ரைக் ஆச்சிது... அதான் இத எப்படி டீல் பண்றதுன்னு யோசனை...'

'அதுக்கு நா ஒரு ஐடியா சொல்லட்டுமா? தப்பா நினைக்கப்படாது.'

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவனுக்கு லேசாக புரிந்தது. இருப்பினும், 'சொல்லுங்க சார்' என்றான்.

'கோபாலுக்கு அன்னைக்கி ஆஜரான லாயர நீங்க ஒருதடவ மீட் பண்றது நல்லதுன்னு நினைக்கறேன் சார்.... அவர் இப்ப ஆக்டிவா இல்லேங்கறது நிஜம்தான். ஆனா கோபாலோட கேஸ் டைரிய வாங்கி நீங்க பாத்தீங்கன்னா அந்த கேஸ அவர் எப்படி டீல் பண்ணார்னு தெரிஞ்சிக்கலாம். நா வேணும்னா ஒங்கக் கூட வரேன். அத்தோட அவரோட சன்னும் க்ரிமினல் லாயராத்தான் இருக்கான்... அவர் டீல் பண்ணிக்கிட்டிருந்த கேஸ் எல்லாம் இப்ப அவந்தான் டீல் பண்றான்.... அவங்கிட்டவும் பேசிட்டு வந்தீங்கன்னா.... you will have some clarity. என்ன  சொல்றேள்?'

அவன் எதிர்பார்த்திருந்ததையே மகாதேவனும் கூற அதை எப்படி எதிர்கொள்வது என ராஜசேகர் சிந்தித்தான். 

அவனிடமிருந்து பதில் ஏதும் வராமல் போகவே, 'ஒங்களுக்கு விருப்பம் இல்லேன்னா வேணாம் சார்... I won't compel... எனக்கென்னமோ இந்த மர்டர்ல கோபால் சம்மந்தப்பட்டிருக்க சான்ஸ் இல்லேன்னுதான் படறது.. அதனாலத்தான் சொல்றேன்.'

ராஜசேகர் தன்னையுமறியாமல், 'அப்போ அந்த கேஸ்ல கோபால் கில்ட்டின்னு நினைக்கறீங்களா?' என்று கேட்டான். 

மகாதேவன்  தன்னை வியப்புடன் பார்ப்பதை உணர்ந்த ராஜசேகர் அப்படி கேட்டிருக்க வேண்டாமோ என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டான். 

'தப்பா நினைச்சிக்காதீங்க சார்... It just came out.' 

மகாதேவன் பரவாயில்லை என்பதுபோல் தலையை அசைத்தார். 'It's OK... நீங்க நினைக்கறதுல தப்பேயில்லை... But at that time all of us believed what he said...ஆனா அதுக்கப்புறம் அந்த பொண்ணோட அப்பா, அம்மா இவன் எப்படியெல்லாம் அந்த பொண்ண டார்ச்சர் பண்ணியிருக்கான்னு  என் முன்னாலயே சீனிகிட்ட சொன்னப்போ எனக்கும் ஒங்கள மாதிரியே டவுட் வந்துது.. ஆனா சீனி ஒத்துக்கவே மாட்டேன்னுட்டான்... அவங்களும் பொண்ணே போனதுக்கப்புறம் எதுக்கு வீணா போராடறது நினைச்சாளோ என்னவோ போலீஸ் எவ்வளவோ சொல்லியும் அப்பீலுக்கு போக வேணாம்னுட்டா.... அத்தோட அந்த ஃபைல க்ளோஸ் பண்ணிட்டாங்க.. ஆனா ப்ராசிக்யூஷன் சரியா ப்ரெசன்ட் பண்லைன்னு ஜட்ஜ் சொன்னத வேணு மட்டும் மறக்கவே இல்ல போலருக்கு.... அதான் மறுபடியும் கோபாலோட பேர கேட்டதும் ரிவெஞ்சுக்கு துடிக்கிறான்...'

ராஜசேகர் பதிலளிக்காமல் தன் கையில் இருந்த குறிப்பேட்டை பார்த்தான். 'சார் இன்னொரு விஷயம்..'

'சொல்லுங்கோ.'

'என்னோட இன்வெஸ்ட்டிகேஷன்ல கோபாலோட கம்பெனி சில மாடல்ஸ்ங்களோட அக்ரிமென்ட் போட்டுருந்ததா கேள்விப்பட்டேன்.... அதப்பத்தி ஏதாச்சும் ஒங்களுக்கு தெரியுமா சார்?'

'மாடல்ஸா.... எதுக்கு?'

'அவரோட ப்ர்ஜாக்ட்ஸ பத்தி டிவியில அட்வர்ட்டைஸ் பண்றதுக்காகன்னு.....'

'ஓ... அதுவா... ஆமா ரெண்டு மூனு பேரோட போட்ருக்கான்னு ஞாபகம்... ஆனா இப்ப எந்த அக்ரிமென்டும் ஃபோர்ஸ் (force) இல்லன்னு நினைக்கறேன்... சீனி அதெல்லாம் எதுக்கு வேணாம்னு சொல்லிட்டான்... அது நடந்து ஒரு ரெண்டு மூனு வருசம் இருக்கும்... .எதுக்கு கேக்கறேள்?'

'Specificஆ எதுவும் இல்லை.... ஒருவேளை மாதவியோட அப்படி ஏதாச்சும் அக்ரிமென்ட் இருந்தா... இது ஒரு ப்ரொபஷனல் ரிலேசன்ஷிப்தான்னு சொல்லலாம் இல்லையா? அதுக்குத்தான்.'

மகாதேவன் சிரித்தார். 'அக்ரிமென்ட் இருக்குதோ இல்லையோ... அந்த பொண்ணுக்கிட்ட இவன் நிறைய பணத்த கரைச்சிருக்கான்னு மட்டும் தெரியும்... வாசு சொல்லியிருக்கார்....'

ஆடிட்டருக்கும் வக்கீலுக்கும் தெரியாத விஷயமே இருக்க வாய்ப்பில்லை என்பது சரிதான் போலிருக்கிறது என்று நினைத்தான் ராஜசேகர். தன்னுடைய குறிப்பேட்டை மூடி கைப்பெட்டியில் வைத்தவாறு எழுந்தான். 'சரி சார்... நா கிளம்பறேன்.'

மகாதேவனும் எழுந்தார். 'அப்போ நா சொன்ன விஷயத்த பத்தி நீங்க ஒன்னும் சொல்லலையே?' என்றார்.

'எது சார்?'

'அதான் நம்ம பழைய லாயர மீட் பண்றத பத்தி...'

ராஜசேகர் யோசித்தான். அது தேவையில்லை என்று தோன்றினாலும் இவரை எதற்காக தேவையில்லாமல் பகைத்துக்கொள்வது என்று நினைத்தான். 'மீட் பண்லாம் சார்.... நீங்க அவரோட கன்வீனியன்ஸ கேட்டு சொல்லுங்க... போய் பாத்துட்டு வரலாம்.' என்றான்.

ஆனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது மகாதேவனுக்கு புரிந்தது. 'சரி சார்..' என்று சுருக்கமாக கூறி விடையளித்தார். 

அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய வாகனத்தை நோக்கி விரைந்த ராஜசேகர் இந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காக டீல் செய்திருக்கலாமோ என்று நினைத்தான். சரி போகட்டும். இரண்டு தினங்களுக்குப் பிறகு ஃபோனில் அழைத்து பேசலாம் என்று நினைத்தவாறு வாகனத்தில் ஏறி ஸ்டார்ட் செய்தவாறு வீட்டு வாசலை பார்த்தான். மகாதேவன் வீட்டுக்குள் சென்றுவிட்டிருப்பது தெரிந்தது. தன்னுடைய அவசரபுத்தியால் நல்லதொரு சந்திப்பை பாழ்படுத்திவிட்டதை நொந்துக்கொண்டே தன்னுடைய அலுவலகத்திற்கு திரும்பினான்.

*******

அவன் அலுவலகம் சென்று சேர்ந்தபோது அவனுக்காக வசந்த் காத்துக்கொண்டிருந்ததை கண்டான். 'என்ன வசந்த் காலையிலேயே.... ஏதாவது அர்ஜன்டா?'

'ஆமா பாஸ்.... ஊர்லருந்து லெட்டர்.... தங்கச்சிக்கு ஒரு இடத்துலருந்து சம்மந்தம் வந்துருக்காம்... ஒருநடை வந்துட்டு போடான்னு அம்மாகிட்டருந்து ஃபோன்.... அதான் உங்கக்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு வந்தேன்...'

'அப்படியா, ரொம்ப சந்தோஷம்டா... தங்கச்சிக்கு கல்யாணம்னா அடுத்தது ஒனக்குத்தான?'

வசந்த் சிரித்தான். 'அட நீங்க வேற பாஸ்.. ஒங்கள மாதிரி லைஃப்ல செட்டிலாவணும்.. அப்புறந்தான் கல்யாணம்...'

'நா ரொம்பத்தான் செட்டிலாய்ட்டேன்னு நினைப்போ....'என்று சிரித்துக்கொண்டே பதிலளித்த ராஜசேகர் சட்டென்று சீரியசானான். 'நா நேத்து சொன்ன விஷயத்த கேட்டு பாத்தியா?' 

'இன்னைக்கி காலையில வீட்லருந்து நேரா அங்கதான் பாஸ் போனேன். மாடலுங்களோட அக்ரிமென்ட் இருந்தது உண்மைதானாம். ஆனா அதெல்லாம் எக்ஸ்பயரியாயி ரெண்டு வருசத்துக்கு மேல ஆயிருச்சாம். ஆனா மாதவியோட எந்த அக்ரிமென்ட்டும் இல்ல சார்னு ராமராஜன் டிச்சி சொல்லிட்டார். எக்ஸ்பயரியாயிருந்தாலும் காப்பி இருந்தா குடுய்யான்னு அந்த ஆள தேட வச்சி ஒரு காப்பி மட்டும் வாங்கிட்டு வந்துருக்கேன்... படிச்சி பாத்ததுல பெருசா ஒன்னும் கண்டிஷன் இல்லை பாஸ். சும்மா ஏதோ செட்டப் மாதிரி தெரியுது. இதுல குடுத்துருக்கற அட்றசையும் தேடிக்கிட்டு போனேன்... அப்படி யாரும் அந்த அட்றஸ்ல ஸ்டே பண்ணதே இல்லேன்னுட்டாங்க. சோ... இதுவும் கோபாலோட சித்து விளையாட்டுல ஒன்னுன்னு நினைக்கேன்.... வேற ஏதாச்சும் இல்லன்னா நா போய்ட்டு ரெண்டு நாள்ல வந்துடறேன் பாஸ்..' 

கையில் வைத்திருந்த ஒப்பந்த நகலை மேசை மீது வைத்துவிட்டு எழுந்த வசந்தை பார்த்தான் ராஜசேகர். 'ஒன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் வசந்த்' என்றான்.

'சொல்லுங்க பாஸ்... இன்னும் ஏதாச்சும் இன்வெஸ்ட்டிகேஷனா?'

'இல்லடா... இதுவரைக்கும் பண்ணதே போறும்... நா கேக்க வந்தது... இந்த கேஸ் முடியற வரைக்கும் எனக்கு அசிஸ்டென்டா இருக்கியான்னு....'

வசந்த் சிரித்தான். 'அதுக்கெதுக்கு பாஸ் இவ்வளவு தயங்கறீங்க? நானே கேக்கலாம்னுதான் இருந்தேன்.. ஏன்னா இந்த கேஸ் கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டிங்கா... சேலஞ்சிங்கா இருக்கும்னு தோனுது... நீங்களாவே கேட்டதுனால எனக்கு ஒரு அட்வான்டேஜ்.'

'என்ன ஏதாச்சும் தேறுமான்னுதான?'

வசந்த் உரக்க சிரித்தான். 'என்னெ முழுசா தெரிஞ்சி வச்சிருக்கற ஒரே ஆள் நீங்கதான் பாஸ்...'

ராஜசேகரும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.... 'பயங்கரமான ஆள்டா நீ... சரி ஜாலியா போய்ட்டு வா... வந்து பேசிக்கலாம்...'

வசந்த் விடை பெற்று செல்ல அவன் விட்டுச் சென்ற ஒப்பந்த பத்திரத்தின் நகலை மேலோட்டமாக வாசித்தான். அவன் கூறியதுபோன்றே அது வெறும் பெயருக்கு தயாரிக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தைப் போன்றுதான் இருந்தது. அதை மடித்து கோபால் என்ற பெயரில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த கோப்பில் இருந்த மற்ற ஆவணங்களுடன் வைத்து மேசை டிராயரில் வைத்து பத்திரப்படுத்தினான். 

அன்று அவனுக்கு அவசரமான வழக்குகள் எதுவும் இல்லையென்பதால் அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். படியில் இறங்கும்போது சட்டென்று அவன் மனதில் ஒன்று தோன்ற அதை செயல்படுத்தினால் என்ன என்று காரில் ஏறி அமர்ந்து யோசித்தான். 

'இத வசந்த் இல்லாதப்பத்தான் செய்ய முடியும். இல்லன்னா நாந்தான் ஏற்கனவே கேட்டுட்டு வந்துட்டேனே சார்னு சொல்லி தடுத்துருவான்.' என்று தனக்குள் கூறிக்கொண்ட ராஜசேகர் வாகனத்தை முடுக்கி கழுத்தை நெறிப்பதுபோலிருந்த முன்பகல் நேர வாகன நெரிசலில் இணைந்து நீந்தி அவன் செல்ல நினைத்த இடத்தை அடைந்தான். 

எப்போதும்போலவே வாகனத்தை மாதவி குடியிருந்த வீடு அமைந்திருந்த பிரதான சாலையில் நிறுத்தாமல் பக்கவாட்டில் அமைந்திருந்த குறுக்குச் சாலைகள் ஒன்றில் தேடிப்பிடித்து நிறுத்திவிட்டு ஒருசில நொடிகள் தான் செய்யவிருப்பது சரிதானா என்று மீண்டும் ஒருமுறை சிந்தித்தான்.

பிறகு வருவது வரட்டும் என்ற நினைப்புடன் காரிலிருந்து இறங்கி பிரதான சாலைக்குள் நுழைந்து தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று இடமும் வலமும் பார்த்தான். பதினோரு மணி நேர வாகன போக்குவரத்து சாலையை நிரப்பியிருந்தது, பம்பர் டு பம்பர் டிராஃபிக் என்பார்களே அதுபோல. நெருக்கியடித்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்த வாகனங்களினூடே எதிரில் தெரிந்த மாதவியின் வீட்டை பார்த்தான். வாசற்கதவு அடைக்கப்பட்டு போலீசாரால் சீல் வைக்கப்பட்ட பூட்டு தொங்குவதைப் பார்த்தான். இதற்கு முன்னால் வெளியில் பூட்டி அவன் பார்த்ததில்லை. தானாக பூட்டிக்கொள்ளும் கோத்ரெஜ் பூட்டு கொண்ட கதவு அது. அதை சீல் வைக்க முடியாது என்பதால் காவல்துறையினர் புதிதாக ஒரு பேட்லாக்கைப் பொருத்தி பூட்டை தொங்க விட்டிருப்பார்கள் என்று நினைத்தான். 

அவனையுமறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு அவனிடமிருந்து வெளியானது. இதுதான் வாழ்க்கை. இருபது நாளைக்கி முன்னால எகத்தாளமா வெளியே போயிருங்கன்னு நம்மள சொன்னவ இன்னைக்கி...... என்னையும் கோபாலையும் மாதிரி இன்னும் எத்தனை ஆண்களுடன் அவள் உறவு வைத்திருந்திருப்பாள் என்று நினைத்தான். அவர்களெல்லாரும் இப்போது என்ன நினைத்துக்கொண்டிருப்பார்கள்? எங்கே இந்த வழக்கு விசாரணையில் நம்முடைய பெயரும் வெளிவந்துவிடுமோ என்று நடுங்கிக்கொண்டிருப்பார்களோ? அவனுக்கு தெரிந்தவரை மாதவிக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததில்லை. 

தமிழை படிக்கவே சிரமப்பட்டதை பலமுறை அவன் கவனித்திருக்கிறான். இந்த லட்சணத்தில் டைரி எழுதும் அளவுக்கு அவளுக்கு தமிழறிவு எங்கே இருக்கப் போகிறது? அப்படி இருந்திருந்து அதில் நம்முடைய பெயரும் இருந்திருந்தால் இன்னேரம் போலீஸ் நம்மை தேடி வந்திருக்குமே!

'சார்?' என்ற குரல் கேட்டு தன் நினைவுகளிலிருந்து மீண்ட ராஜசேகர் தனக்கு முன்னால் நின்றவரை பார்த்தான். 

தொடரும்..

6 comments:

வேடந்தாங்கல் - கருண் said...

சுவாரஸ்யமாக பொய் கொண்டிருக்கிறது.. தொடருங்கள்..

வே.நடனசபாபதி said...

வழக்கறிஞர் முன்னால் நின்றவர் யாரோ? அறிந்துகொள்ள தொடர்கிறேன் ஆவலோடு!

Sasi Kala said...

நானும் வேக வேகமா தொடர்ந்து கொண்டு வருகிறேன். நீங்களும் வேகமா ஒவ்வொரு பதிவா எழுதிட்டே போறிங்க.. அப்பப்பா சுவார்யஸ்யம் குறையாமல் எப்படித்தான் எழுத முடிகிறதோ ? ஆவலுடன் தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வேடந்தாங்கல் - கருண் said...
சுவாரஸ்யமாக பொய் கொண்டிருக்கிறது.. தொடருங்கள்..//

நன்று கருண்.

டிபிஆர்.ஜோசப் said...


Blogger வே.நடனசபாபதி said...
வழக்கறிஞர் முன்னால் நின்றவர் யாரோ? அறிந்துகொள்ள தொடர்கிறேன் ஆவலோடு!//

வருகைக்கும் உங்களுடைய ஆவலுக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


Blogger Sasi Kala said...
நானும் வேக வேகமா தொடர்ந்து கொண்டு வருகிறேன். நீங்களும் வேகமா ஒவ்வொரு பதிவா எழுதிட்டே போறிங்க.. அப்பப்பா சுவார்யஸ்யம் குறையாமல் எப்படித்தான் எழுத முடிகிறதோ ? ஆவலுடன் தொடர்கிறேன்.//

கதையை முழுவதுமாக எழுதி முடிக்க ஆறு மாத காலம் எடுத்தது. எழுதி முடித்ததை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து பதிவு செய்யும் வேலையை மட்டுமே இப்போது செய்வதால் தினமும் இடுவதில் சிரமம் இல்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... இன்னும் இரண்டு வாரங்கள்.. முடிந்துவிடும். பிறகு சில காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு புதிய கதையுடன் வருவேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.