16 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 19

முன்கதை

ஃபோன்ல சொல்லக் கூடாத அளவுக்கு என்ன ரகசியம்? நாம அங்க இருந்தத கண்டுபுடிச்சிருப்பானோ? என்று நினைத்த ராஜசேகர் அடுத்த நொடியே அதற்கு வாய்ப்பே இல்லை என்று தனக்குத்தானே  கூறிக்கொண்டான். மாதவி குடியிருந்த வீடு அமைந்திருந்த சாலை எந்த நேரத்திலும் மிகவும் பரபரப்பாக இருப்பதை அவன் பலமுறை அனுபவித்திருக்கிறான். 

சாலையின் இருமருங்கிலும் இடைவெளியே இல்லாமல் பலதரப்பட்ட கடைகள் இருந்ததால் எப்போதும் மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த பகுதி அது. ஆகவே  நெருக்கடி மிகுந்த பகுதியில் அமைந்திருந்த மாதவியின் வீட்டிற்கு வந்து போகின்றவர்களை நினைவில் வைத்துக்கொள்வது அத்தனை எளிதல்ல.

சம்பவம் நடந்த தினத்தன்று அங்கு சென்று வந்த கோபால் மட்டும் அன்று மாநகராட்சி பார்க்கிங் லாட் வேலையாளிடமும் மாதவியின் அடுத்த வீட்டில் குடியிருந்த பெண்ணிடமும் தகராறு செய்யாமல் இருந்திருந்தால் அவர் வந்து சென்றதையும் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் அவருடைய துரதிர்ஷ்டம் என்று நினைத்தான்.

'சாரி பாஸ்.. அஞ்சி நிமிஷத்துக்குள்ள வரமுடியலை' என்றவாறு தன் முன் வந்து நின்ற வசந்த்தின் குரல் கேட்டதும் தன் நினைவுகளிலிருந்து மீண்ட ராஜசேகர், 'சரி பரவால்லை... உக்கார்.' என்றவாறு தன் எதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றைக் காட்டினான். 'சொல்லு, என்ன கண்டுபுடிச்சே.'

'நீங்க ரெண்டு பாய்ன்ட் சொன்னீங்க பாஸ். அதுல முக்கியமானது அன்னைக்கி மாதவி வீட்டுக்கு கோபால தவிர வேற யாராச்சும் வந்துருந்தாங்களா, அதான பாஸ்?'

'ஆமா.'

'அப்படி யாரும் வந்தா மாதிரி தெரியல பாஸ்.'

ராஜசேகர் உள்ளூர மகிழ்ச்சியடைந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'அப்படியா?' என்றான். 'நல்லா விசாரிச்சியா?'

'கோபால அங்க பாத்ததா சொன்ன பார்க்கிங் லாட் பையன் கிட்டவே கேட்டேன்.... வேற யாரையும் பாக்கலேன்னுட்டான். அப்படியே பார்த்திருந்தாலும் சொல்ல மாட்டான்னு நினைக்கறேன். ஏன்னா அவன் ஏற்கனவே போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டுருக்கான் போலருக்கு.... ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி கேள்வி மேல கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்கன்னு நொந்துபோயிருக்கான்.... இதுல நா வேற மேல, மேல கேள்வி கேட்டதும் கடுப்பாய்ட்டான்... இந்தாங்க சார் நீங்க குடுத்த பைசா... ஆள விடுங்கன்னுட்டான்...' 

'அக்கம்பக்கத்துல வேற யாரையாச்சும் கேட்டியா? எதிர்த்தாப்பல நிறைய கடைங்க இருக்கே?'

'கேட்டாச்சு பாஸ்...' என்றான் வசந்த் சலிப்புடன். 'ஏற்கனவே போலீஸ்  ரொம்ப கெடுபிடி பண்ணி விசாரிச்சிருக்கறதால அத பத்தி பேசவே எல்லாரும் பயப்படறானுங்க.... சரின்னு வந்துட்டேன்.'

'சரி. அடுத்த பாய்ன்ட் என்ன?'

'அடுத்தது கோபால் மறுபடியும் மாதவி வீட்டுக்கு போனாரா இல்லையா?'

'போயிருந்தாராமா?'

'ஷ்யூரா சொல்ல முடியல பாஸ். அந்த பக்கத்து வீட்டு லேடிய தவிர வேற யாரும் கோபால ஏழு மணிக்கி அங்க பாக்கல போலருக்கு.'

'அப்படியா?' என்றான் ராஜசேகர் வியப்புடன். 'நல்லா விசாரிச்சியா?'

'ஆமா பாஸ். பிச்சைக்காரன் மாதிரி அந்த ரோடு முழுசும் அலைஞ்சதுதான் மிச்சம்.'

'அப்போ ஒரு வேளை கோபால் சொன்னது சரியாருக்குமோ?'

'அவர் என்ன சொன்னார்?'

'அந்த பக்கத்து வீட்டு லேடி வேணும்னே டைம மாத்தி சொல்லுது சார்னு சொன்னார்.'

'அப்படியா? ஏன், எதுக்கு அப்படி சொல்லணும்?'

'அவங்களுக்கு கோபால் மேல ஏற்கனவே விரோதம் இருந்துருக்கு வசந்த். அதனாலதான் இப்படி வேணும்னே சொல்றாங்கன்னு சொல்றார்.'

வசந்த் சிரித்தான். 'இருக்காது பாஸ்.. நாந்தான் அந்த லேடிக்கிட்டயும் அவங்க ஹஸ்பென்ட் கிட்டயும் ஏற்கனவே பேசியிருக்கேனே.. நா கோபால டிஃபென்ட் பண்ற சைடுன்னு தெரிஞ்சும் எங்கிட்ட நல்லா பேசினாங்களே.'

'அப்படியா?' 

'இருந்தாலும் இந்த விஷயத்துல கரெக்டா இன்ஃபோ குடுக்கறதுக்கு கோபாலோட பி.ஏ. ராமராஜன்தான் சரியான ஆளுன்னு மறுபடியும் அந்தாள பாக்க போனேன்.'

'அந்தாளு என்ன சொன்னான்?''

அன்னைக்கி சாயந்தரம் கோபால் ஆறு, ஆறேகால் மணிபோல அவசரமா ஆஃபீசுக்கு வந்து ராமராஜன் கிட்ட மாதவி குடியிருக்கற வீட்டோட பத்திரத்த குடுங்கன்னு வாங்கிக்கிட்டு உடனே புறப்பட்டு போய்ட்டாராம்.' 

'அப்படியா? எதுக்கு சார்னு இவர் கேக்கலையாமா?'

'நீங்க வேற பாஸ். அவர் கேட்ட டாக்குமென்ட சேஃப்லருந்து தேடி எடுத்து குடுக்கறதுக்குள்ளவே மனுஷன் பொரிஞ்சி தள்ளிட்டாராம். அப்புறம் இது எதுக்கு சார்னு எப்படி கேக்கறதுன்னு நினைச்சிருப்பார்?'

'சரி.. மேல சொல்லு.'

'ஆனா ராமராஜன் அவர் போனதும் எழுந்து பின்னாலயே போய் பாத்துருக்கார். ஒருவேளை மாதவியும் அவர் கூடவே வந்து கார்ல ஒக்காந்து இருப்பாளோன்னு சந்தேகமாருக்கும்..'

'ஊம்'

'கோபால் கார்ல போகாம அவங்க ஆஃபீஸ் பக்கத்துல இருக்கற ஆட்டோ ஸ்டான்டுல நின்ன ஆட்டோவுல ஏறினத பாத்தாராம்.'

'சரி... எதுக்கு கார்ல போகாம ஆட்டோவுல போகணும்? புரியலையே?'

வசந்த் சிரித்தான். 'என்ன பாஸ்..இது ஒரு சிம்பிள் மேட்டர். கார்ல போறத விட ஆட்டோவுல ஃபாஸ்ட்டா போயிரலாமேன்னு நினைச்சிருப்பார்.'

'சரி... ஆனா அவர் மாதவி வீட்டுக்குத்தான் போனார்னு எப்படி சொல்ல முடியும்?'

'அந்த ஆட்டோ இவர் வழக்கமா யூஸ் பண்ற ஆட்டோவாம். அடுத்த நாள் கோபால் அரெஸ்டானதுக்கப்புறந்தான் அந்த ஆட்டோ டிரவரை புடிச்சி நேத்து சார எங்கய்யா கூட்டுக்கிட்டுப் போனேன்னு கேட்டுருக்கார். அவர் சார் வழக்கமா போற அந்த லேடி வீட்டுக்குத்தான் போனார்னு சொன்னானாம். ஆக அவர் அங்க போயிருப்பார்னு மிஸ்டர் சீனிவாசன் சொன்னது சரிதான்.'

வசந்த் கூறியதுபோல்தான் நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் கோபாலிடம் மீண்டும் இந்த கேள்வியைக் கேட்பதால் எந்த உண்மையான பதிலும் கிடைக்கப் போவதில்லை. இப்படியொரு பிடிவாதம் பிடிக்கும் கட்சிக்காரரை இதுவரை அவன் கண்டதில்லை. இப்படி நம்ம கிட்டருந்தே உண்மைய மறைக்கறவருக்கு ஆதரவா எப்படி வாதாடி ஜெயிக்கப் போறேன் என்று நினைத்தான். 

மாதவியை தான் பிடித்து தள்ளியதால் அவள் மரணமடைந்திருக்க வாய்ப்பில்லை என்பது இப்போது ஊர்ஜிதமாகியதுபோல் தெரிந்தாலும். மாதவியின் வீட்டு வாசல்வரை சென்றவர் வீட்டிற்குள் சென்றாரா என்பதையும் கன்ஃபர்ம் செய்துவிட்டால் போதும்... ஆனால் அது வசந்தை நம்பாமல் நாமாகவே தெரிந்துக்கொள்ள வேண்டும்....  

'என்ன பாஸ் திடீர்னு சைலன்ட்டாய்ட்டீங்க?'

ராஜசேகர் சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தான். 'எ.. என்ன கேட்டே?'

'என்ன பாஸ்... மறுபடியும் ஏதோ ஃப்ளாஷ்பேக் மாதிரி இருக்கு? இப்பல்லாம் அடிக்கடி வருதே... என்ன விஷயம்?' 

ராஜசேகர் இல்லை என்று தலையை அசைத்தான். 'அதில்லடா... போலீசோட ஸ்டேட்ன்மென்ட் படி பார்த்தா மாதவியோட மரணம் சாயந்தரம் ஏழுருந்து எட்டுக்குள்ள நடந்துருக்கு...'

'ஆமா...'

'ஆனா கோபால் டிநகர்லருந்து மைலாப்பூர் போய் சேர்றதுக்கு எப்படி பாத்தாலும் ஆஃபனவர் ஆயிரும்.... அதுவும் அப்போ சரியான பீக் ஹவர்...'

'ஆனா  சென்னை ஆட்டோகாரனுக்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல பாஸ்... மேக்சிமம் இருபது நிமிஷம் எடுத்துருப்பான்.'

'சரி அப்படியே வச்சிக்குவம்.... அப்பவும் அவர் அங்க போய் சேர்ந்தப்பவே மணி ஆறே முக்காலாயிருக்கும்...'

'கரெக்ட்தான பாஸ்...? பக்கத்து வீட்டு லேடி அவர ஏழு மணிக்கி பாத்ததாதான சொல்லியிருக்காங்க?'

'டேய்... யோசிக்காம பேசாத... அந்த லேடி கோபால் வீட்டுக்கு வெளியில நின்னுக்கிட்டு கதவ தட்டிக்கிட்டிருந்தத பாத்ததான் சொல்லியிருக்காங்க...'

'ஒருவேளை மாதவி குளிச்சிக்கிட்டு இருந்தாங்களோ என்னவோ?'

'கால் மணி நேரமாவா?' என்ற ராஜசேகர் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான். ஒன்னு, கோபால் போய் சேர்றதுக்கு முன்னாலயே மாதவி இறந்துருக்கணும்... இல்லன்னா எழுந்து கதவ திறக்க முடியாத நிலைமையில இருந்துருக்கணும்.... அப்படின்னா கோபால் ஃபோன் பண்ணப்ப மட்டும் எப்படி அட்டென்ட் பண்ண முடிஞ்சிது? 

ஆனால் ரீசிவர எடுத்தாலே கால் அட்டென்ட் பண்ணா மாதிரிதான வரும்? பேசணுங்கற அவசியம் இல்லையே? ரீசிவர எடுக்க முடிஞ்சிருக்கு ஆனா பேச முடியலை... அப்படீன்னாலும் அட்டென்ட் பண்ணா மாதிரிதான் வரும்...? அப்படீன்னா நாம தள்ளிவிட்டதுல  அவளுக்கு பலமா அடிபட்டிருக்குமோ?  

போலீஸ் எடுத்த க்ரைம் சீன் ஃபோட்டாவ பார்த்தா எல்லாம் க்ளியராய்டும்... ஆனா அத எப்படி பாக்கறது? சரி.. இதை மேல கிளறாம விட்ருவோம்... இல்லன்னா இவனே நம்மள சந்தேகப்பட ஆரம்பிச்சிருவான்..

'சரி அத வுடு....' என்ற ராஜசேகர் வசந்தைப் பார்த்தான் 'வேற ஏதாச்சும் இருக்கா?

'இல்ல பாஸ்... நீங்க அந்த அட்வகேட்.... அவர் பேர் என்ன, மகாதேவன், அவரான்ட பேசினீங்களா? எதுக்கு கோபால் ஃபோன் பண்ணாராம்? 

'இல்லடா' என்றான் ராஜசேகர் சலிப்புடன், 'மறந்தே போச்சி...இப்ப கூப்ட்டு பாக்கலாமா?'

வசந்த் தன் கைக்கடிகாரத்தை பார்த்தான்.. 'பாஸ் மணி எட்டாயிருச்சி.... இப்பவே கூப்டணுமா?'

ஆமாடா. இல்லன்னா மறுபடியும் மறந்துரும்.' என்றவாறு அவருடைய எண்ணுக்கு டயல் செய்தான். 'நா அவர் கிட்ட பேசறப்போ இடையில நீ எதுவும் பேசாத... ஸ்பீக்கர்ல போடறேன்... அவர் சொல்றத மட்டும் கேளு.'

'சரி பாஸ்..'

எதிர்முனையில் எடுக்கப்பட்டதும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

'சொல்லுங்க ராஜசேகர்... என்ன இந்த நேரத்துல?'

'சாரி சார்... வேணும்னா நாளைக்கி கூப்டவா?'

'சேச்சே... அதெல்லாம் ஒன்னுமில்லை... சொல்லுங்க என்ன விஷயம்?'

ராஜசேகர் மாதவி கொலை வழக்கு சம்மந்தமாக இதுவரை எடுத்த நடவடிக்கைகளை சுருக்கமாக கூறிவிட்டு கோபாலின் செல்ஃபோனிலிருந்து சென்றிருந்த அழைப்பு விவரங்களில் அவருடைய செல்ஃபோன் எண்ணைக் கண்டதாக கூறினான்.

'ஆமா... ஞாபகம் இருக்கு.... எதுக்குன்னு ஒங்களுக்கு தெரியணும்... அதானே?'

அவருடைய குரலில் இருந்த ஏதோ ஒன்று ராஜசேகரை தயங்க வைத்தது. 'பர்சனல்னா சொல்ல வேணாம் சார்.... இந்த கேசுக்கு சம்மந்தம் இருக்குமோன்னு நினைச்சித்தான் கூப்ட்டேன்...'

'இதே கேள்விய நேத்து போலீசும் கேட்டதால ரெண்டு பேரும் ஒரே ட்ராக்ல போறீங்களேன்னு நினைச்சேன்... வேற ஒன்னும் இல்ல.'

என்னது போலீசா என்று ஓசையில்லாமல் உதடுகளை மட்டும் அசைத்தான் வசந்த். ராஜசேகரும் அதிர்ந்தான். 'போலீசா, என்ன சார் சொல்றீங்க?'

மகாதேவன் சிரித்தார். 'என்ன ராஜசேகர்... ஒரு டிஃபென்ஸ் லாயராலயே தனி ஆளா இவ்வளவு செய்ய முடியும்னா ஒரு பட்டாலியனையே வச்சிருக்கற போலீசால செய்ய முடியாதா? ஆனா நான் எதையோ சொல்லி சமாளிச்சிட்டேன்னு வச்சிக்குங்க...'

'அப்போ கோபால் ஆக்சுவலா எதுக்கு ஃபோன் பண்ணார்னு போலீசுக்கு சொல்லல, அப்படித்தானே சார்?'

'ஆமா. நா அத சொன்னேன்னு வச்சிக்குங்க... அவனுங்க அதையே அவன் செய்யாத கொலைக்கு மோட்டிவ்னு ஜோடிச்சிருவானுங்க.. அதான் சொல்லலை.'

அவருடைய குரலில் ஏதோ மர்மம் இருந்ததை உணர்ந்த ராஜசேகர் குழப்பத்துடன் தன் எதிரில் அமர்ந்திருந்த வசந்தைப் பார்த்தான். அவன், தெரியலையே பாஸ் என்பதுபோல் தோள்களை குலுக்கினான்.

'அப்படியென்ன சொல்லியிருப்பான்னு யோசிக்கிறீங்க... அப்படித்தான?' என்றார் மகாதேவன் எதிர்முனையிலிருந்து.

'ஆமா சார்...'

'சொல்றேன்... ஆனா ஃபோன்ல வேணாம்.... நாளைக்கி காலையில வீட்டுக்கு வந்துருங்க.. அட்றஸ் சொல்றேன், எழுதிக்குங்க..'

அவருடைய மாம்பலம் வீட்டு விலாசத்தை தன்னுடைய குறிப்பேட்டில் எழுதிக்கொண்ட ராஜசேகர், 'தாங்ஸ் சார் நாளைக்கி பாக்கலாம்.' என்றவாறு இணைப்பை துண்டித்தான்.

'அவன் செய்யாத கொலைக்கு இதையே மோட்டிவா போலீஸ் ஜோடிச்சிருவானுங்க...' என்ற வார்த்தைகள் அவனை குழப்பின. மோட்டிவா? என்னவாருக்கும்? 

'என்ன பாஸ் யோசிக்கிறீங்க?' என்ற வசந்தை பார்த்தான். 

'இல்லடா... ஏதோ மோட்டிவ்ங்கறாரே என்னவாருக்கும்னு யோசிச்சேன்.'

'என்னவாருக்கும்னு நா ஒரு யூகம் பண்ணேன் பாஸ்... சொல்லவா?'

'சொல்லு....'

'மாதவி இந்த வீட்டை என் பெயருக்கு எழுதி தந்துருங்க... இல்லன்னா உங்களுக்கும் எனக்கும் நடுவுல இருக்கறத அம்பலப்படுத்திவிடுவேன்னு மிரட்டியிருப்பா.... இத எப்படி டீல் பண்லாம்னு மகாதேவன் சார் கிட்ட கேட்ருப்பார். இத போயி அப்படியே போலீஸ் கிட்ட சொன்னா சும்மாருப்பாங்களா? வீட்ட எழுதி குடுக்க இஷ்டமில்லாம மாதவிய  க்ளோஸ் பண்ணிட்டார்னு கேஸ முடிச்சிற பாப்பாங்க... சரிதானே பாஸ்...'

'ஓரளவுக்கு சரி....' என்று ஒப்புக்கொண்ட ராஜசேகர், 'ஆனா அதையே நாம நமக்கு சாதகமா யூஸ் பண்றதுக்கும் வழி இருக்கு.' என்றான் புன்சிரிப்புடன்... 

'எப்படி?' என்றான் வசந்த் குழப்பத்துடன்.

'மாதவிக்கு அவ கேட்டா மாதிரியே வீட்ட எழுதிக் குடுக்கறதுன்னு கோபால் தீர்மானிச்சிருந்தாரு. அதுக்காகத்தான் ராமராஜன் கிட்டருந்து வீட்டு பத்திரத்த வாங்கிக்கிட்டு போனாரு. அப்படியிருக்கறப்போ அவரு எதுக்கு மாதவிய கொலை பண்ணனும்னு யோசியேன்?'

'சூப்பர் பாஸ்.... நீங்க சொல்றதும் சரிதான்.' 

'பாராட்டறது இருக்கட்டும்... என் மனசுல சட்டுன்னு பட்டத சொன்னேன்.. ஆனா இத ப்ரூஃப் பண்றது அவ்வளவு ஈசி இல்ல.'

'எதுக்கு அப்படி சொல்றீங்க?'

'ஏன்னா அந்த எஸ்.ஐ. தன்ராஜும் சரி இந்த கேஸ்ல ஆஜராகப் போற பி.பி. வேணுவும் சரி... எமகாதனுங்க. இத அப்படியே நேர் மாறா திருப்பிப் போடவும் சான்ஸ் இருக்கு.'

வசந்த் குழப்பத்துடன் பார்த்தான். 'என்ன சொல்ல வறீங்க?'

ராஜசேகர் பதிலளிக்காமல் ஒரு மர்ம புன்னகையுடன், 'நீயே ப்ராசிக்யூஷன் அட்வகேட்டுன்னு நினைச்சிக்கிட்டு திங்க் பண்ணு.... அஞ்சி நிமிஷம் தர்றேன்...' என்றான்.

வசந்த் கண்களை மூடியவாறு சிந்திக்க ராஜசேகர் தன் முன் இருந்த வசந்தின் அறிக்கையை புரட்டலானான். 

அடுத்த ஒரு சில  நிமிடங்கள் அந்த அறையை மவுனம் சூழ்ந்துக்கொண்டது. 

'என்ன முடியலையா?' என்றான் ராஜசேகர் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு.

'இல்ல பாஸ்..... நீங்களே சொல்லிருங்க... சஸ்பென்ஸ் தாங்க முடியல.'


தொடரும்.. 

12 comments:

வேடந்தாங்கல் - கருண் said...

சஸ்பென்ஸ் தாங்க முடியல.'

வே.நடனசபாபதி said...

//'இல்ல பாஸ்..... நீங்களே சொல்லிருங்க... சஸ்பென்ஸ் தாங்க முடியல.'//

இதே கோரிக்கை தான் என்னுடையதும்!

G.M Balasubramaniam said...


இந்த கொலையை யார் செய்தது என்று நீங்களாவது முடிவு செய்து விட்டீர்களா.? இது எப்படி இருக்கு.? தொடர்கிறேன்.

Packirisamy N said...

தவறு என்று தெரிந்தும் செய்பவர்களுக்கு ராஜசேகரின் நிலைதான். என்று குட்டு உடைபடும் என்று, முள்ளில் மேல் இருப்பதுபோல்தான் வாழ்க்கை முழுவதும். என்னதான் நடக்கப்போகிறது என்று
பார்க்க காத்திருக்கிறேன்.

Bagawanjee KA said...

'சப் 'புன்னு கதையை முடிச்சிறாதீங்க ஜோசப் !

டிபிஆர்.ஜோசப் said...

வேடந்தாங்கல் - கருண் said...
சஸ்பென்ஸ் தாங்க முடியல.'//

எனக்கும்தான் :)

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
//'இல்ல பாஸ்..... நீங்களே சொல்லிருங்க... சஸ்பென்ஸ் தாங்க முடியல.'//

இதே கோரிக்கை தான் என்னுடையதும்!//

என்னுடையதும்தான் :))

டிபிஆர்.ஜோசப் said...

G.M Balasubramaniam said...

இந்த கொலையை யார் செய்தது என்று நீங்களாவது முடிவு செய்து விட்டீர்களா.? இது எப்படி இருக்கு.?//

ரொம்ப நல்லாவே இருக்கு!!

இந்த சமயத்துல மறைந்த சுஜாதா அவர்கள் ஒருமுறை பேட்டியில் கூறியது நினைவுக்கு வருகிறது.

சிறுகதைகளில் மட்டுமே முடிவு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிடுமாம். தொடர்கதைகளில் துவக்கத்தை மட்டுமே தீர்மானித்துவிட்டு எழுத துவங்கிவிடுவாராம். பிறகு கதை தன் போக்கிலேயே போகுமாம். அவ்வப்போது தோன்றும் எண்ணங்களுக்கேற்ப கதை சென்று அதன் முடிவை அதுவே தீர்மானிக்குமாம்.... குறிப்பாக வார இதழ்களில் வெளிவந்த அவருடைய தொடர்கதைகளில் பெரும்பாலானவை இப்படித்தான் முடிந்தனவா. நான் ஒன்றும் பெரிய கதாசிரியன் இல்லை என்றாலும் இந்த தொடரை நான் எழுதத் துவங்கியபோது எழுதி வைத்திருந்த ஸ்க்ரிப்ட்டிலிருந்து பலமுறை திசை மாறி சென்றுள்ளது உண்மைதான்...

ஆனால் கொலையாளி என்பதில் மட்டும் எவ்வித மாற்றமுமில்லை....

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
தவறு என்று தெரிந்தும் செய்பவர்களுக்கு ராஜசேகரின் நிலைதான். என்று குட்டு உடைபடும் என்று, முள்ளில் மேல் இருப்பதுபோல்தான் வாழ்க்கை முழுவதும். என்னதான் நடக்கப்போகிறது என்று
பார்க்க காத்திருக்கிறேன்.//

சரியாக சொன்னீர்கள். நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

Bagawanjee KA said...
'சப் 'புன்னு கதையை முடிச்சிறாதீங்க ஜோசப் !//

நிஜ வாழ்க்கையிலும் பல விஷயங்கள் சப்புன்னுதானங்க இருக்கு.... சினிமாவுல வர்ற விஷயங்கள்தான் த்ரில்லிங்கா இருக்கும்....

Sasi Kala said...

படிக்க படிக்க த்ரில்லா இருக்கு அடுத்த பாகமும் படித்து விட்டு தான் எழ வேண்டும் என்று நினைக்க வைக்கிறது வாசகர்களின் கமெண்டும் உங்கள் மறுமொழியும்; சிறப்புங்க.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
படிக்க படிக்க த்ரில்லா இருக்கு அடுத்த பாகமும் படித்து விட்டு தான் எழ வேண்டும் என்று நினைக்க வைக்கிறது //

மிக்க நன்றிங்க கலா.

வாசகர்களின் கமெண்டும் உங்கள் மறுமொழியும்; சிறப்புங்க.//

வெறும் நன்றின்னு சொல்லிட்டு போயிறாம அவங்க கேக்கற கேள்விங்களுக்கும் கருத்துக்களுக்கும் எதையாச்சும் பொருத்தமா சொல்லணும்கற ஆசையில எழுதுவேன்.... சிலது நல்லாருக்கும் சிலது மொக்கையாருக்கும்.... ஆனா அதையும் பர்ட்டிகுலரா நோட் பண்ணி விமர்சித்ததுக்கு நன்றி.