11 செப்டம்பர் 2013

குண்டக்க மண்டக்க (நகைச்சுவை)

(இந்த நகைச்சுவை காட்சி நான் பதிவுலகில் நுழைந்த காலத்தில் எழுதியது. இதைப் படித்துவிட்டு ரசித்த நண்பர் ஒருவர் என்னை சந்தித்தபோது 'நீங்க பாக்கறதுக்கு ரொம்ப சீரியசான ஆள் மாதிரி இருக்கீங்களே? எப்படி சார் இப்படி எழுத முடியுது என்று கேட்டார். எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அது ஒரு காலம். இப்போது எத்தனை முறை முயன்றாலும் இப்படி எழுத வருவதில்லை. )


(சாலையின் வலப்புறத்திலிருந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு வந்துகொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறார்)

வடிவேலு: யப்பா சாமி. நா இன்னைக்கி போற காரியத்த நீதாம்பா நல்லபடியா முடிச்சித்தரணும். முடிச்சி தந்தேன்னா, திரப்பி வரப்ப என்னால முடிஞ்சத உன் கோயில் உண்டியல்ல போடறேம்பா..

(எதிரில் வரும் ஒருவர்  அவரை கடந்து செல்ல, வடிவேலு  அவர் காலரைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவருடைய கன்னத்தில் அறைகிறார்.)

அறைவாங்கியவர்: (கோபத்துடன்) யோவ். உனக்கென்ன பைத்தியமா? ஏன்யா சும்மா போறவன பிடிச்சி அடிக்கறே?

வடிவேலு: டேய் நா யாரு?

யாருன்னா?

நான் யார்ரா? (தன் நெஞ்சில் கைவைத்து) நானு, நானு.

யோவ் சுத்த இவனா இருக்கியே.. பேசாம ரோட்ல போயிட்ருக்கவன இழுத்து பிடிச்சி கன்னத்துல அறஞ்சிட்டு.. நா யாரு, நா யாருன்னு கேக்கற?

( வடிவேலு மீண்டும் கன்னத்தில் அறைகிறார்) சரியா பாத்து சொல்லு.. நா யாருன்னு தெரியல?

(அறை வாங்கியவன் அழுகிறான்) யோவ் தெரியலையா.. நீதான் யார்னு சொல்லித் தொலையேன்.

உண்மையிலயே நா யாருன்னு தெரியலை?

தெரியலையா..'

சரி நீ போ..

அறைவாங்கியவர் (தனக்குள்) யார்ரா இவன்? ரோட்ல போய்க்கிட்டிருந்தவன நிறுத்தி கன்னத்துல அடிக்கிறான். ஏன்டா அடிச்சேன்னு கேட்டா நான் யார்ராங்கறான். தெரியலன்னு சொன்னா சரி போடாங்கறான். சுத்த பைத்தியக்காரனாயிருப்பான் போலருக்குதே.. இவன்கிட்ட நின்னு பேசினதே தப்பு.. போயிருவம்.. (திரும்பி திரும்பி பார்த்தவாறே அடிபட்ட கன்னத்தை தடவிக்கொண்டு செல்கிறார்)

வடிவேலு: (தனக்குள்) அப்பாடா. இந்த ஊர்ல நம்மளை தெரிஞ்சவன் யாருமில்ல போலருக்குது. தைரியமா நடமாடலாம்.

(காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார்). அலட்சியமாக சாலையில் போவோர் வருவோரை பார்க்கிறார். கால்களை அகல வைத்து தெனாவட்டாக சாலையின் நடுவில் நடக்கிறார். ஏற்கனவே அவர் ஒருவரை அடித்ததை பார்த்தவர்கள் அவரை விட்டு சற்று தள்ளியே செல்கின்றனர். அதைப் பார்த்த வடிவேலு ‘அது.. அந்த பயம் இருக்கணும்..’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார்.

திடீரென்று பின்னாலிருந்து சைக்கிளில் வந்த பார்த்திபன்  அவர் மேல் இடிக்க முகம் குப்புற விழுகிறார். அவர் அணிந்திருந்த வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி முழுவதுமாக அழுக்கடைகிறது. வடிவேலு கோபத்துடன் எழுந்து தன்னை இடித்துவிட்டு நிற்கும் பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார். அடுத்த நொடியில் அவர் முகம் இருளடைகிறது. (தனக்குள் பேசிக்கொள்கிறார்) ஐயோ, இவனா? நாம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்திற்ரானய்யா. இன்னைக்கி என்னல்லாம் குன்டக்க மன்டக்கன்னு பேசப் போறானோ தெரியலையே. திறக்கப்படாது.. அவன் என்ன பேசுனாலும் நம்ம வாயவே தெறக்கப்படாது..

பார்த்திபன்:(சைக்கிளில் அமர்ந்தவாறே) டேய்.. என்ன ரோடு உனக்காகத் தான் போட்ருக்குன்னு நெனப்பா உனக்கு? நடு ரோட்ல பெரிய இவன் மாதிரி.. யார்ரா நீ?

வடிவேலு: (பார்த்திபனுக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறார்) அட ஒன்னுமில்லப்பா.. நான் ஊருக்கு புதுசு.. நீ போ.. (அந்த இடத்தைவிட்டு வேகமாக செல்ல முயல்கிறார்)

டேய் நில்றா. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே?

(வடிவேலு அப்படியே நிற்கிறார். திரும்பாமலே பதில் சொல்கிறார்) நீ என்ன கேட்டே, நான் யாருன்னுதானே? அதான் நான் ஊருக்கு புதுசுன்னு சொல்லிட்டேன்லயா.. பிறவென்ன? (தனக்குள்) விடமாட்டான் போலருக்கய்யா..

ஏன், முகத்த பாத்து பேசமாட்டீங்களோ?

என் முகத்த பாத்து என்னய்யா செய்யப் போறே?

அத நான் பாத்துக்கறேன். நீ முதல்ல திரும்பி என்ன பாத்து பேசுடா.

(வடிவேலு திரும்பி முழுவதுமாக சுற்றிக்கொண்டு மீண்டும் முதுகையே காண்பிக்கிறார்) போதுமா? பாத்துட்டேல்ல? நான் போட்டா? அர்ஜண்டா ஒரு சோலிக்கி போயிட்டிருக்கேன்யா? என்ன உட்டுறேன் (அழுகிறார்).

டேய்.. முகத்த காட்றான்னா மறுபடியும் முதுகையே காட்றே? என்ன நக்கலா? அதுவும் ஏங்கிட்டயே?

இப்ப என்னய்யா பண்ணணும்கற?

ஸ்லோ மோஷன்ல திரும்பு.

(வடிவேலு ஸ்லோ மோஷன்ல மீண்டும் முழு வட்டமடித்து திரும்ப முயல.. பார்த்திபன் வடிவேலுவின் தோளைப் பிடித்து நிறுத்துகிறார். வடிவேலு தன் இரு கண்களையும் ஒன்றரை கண்ணுள்ளவன்போல் மாற்றிக்கொண்டு நிற்கிறார்.)

(ஆச்சரியத்துடன்) டேய் நீயா?

நீயான்னா? நீ நெனக்கற ஆள் நானில்லையா? என்ன உட்டுறு.

டேய்.. நா நீ யாருன்னு நெனச்சேன்னு உனக்கெப்படி தெரியும்? நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தான நீ?

(தனக்குள்) மறுபடியும் ஆரம்பிச்சிட்டான்யா. இப்படி குண்டக்க மண்டக்கன்னு பேசி எத்தனை நாளைக்கித்தான் இவன் என் கழுத்த அறுக்க போறான்னே தெரியலையே. என்னய்யா சொல்ற? ஒரெழவும் விளங்க மாட்டேங்குதே..

சரி மெதுவா உன் மர மண்டைக்கு விளங்கமாதிரி சொல்றேன். நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தானே நீ?

நீ.. நீன்னு.. எளவு வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு.. வேணாம். என்ன விட்டுரு..

என்ன வேணாம்?

என்ன வேணாம்னா?

இல்ல.. இப்ப ஏதோ வேணாம்னியே?

நானா? எப்ப?

டேய்.. என்ன விளையாடறியா? இப்ப நீதானடா வேணாம் என்ன விட்டுருன்னே? அதான் கேக்கறேன். சொல்லு, என்ன வேணாம்?

(அழுகிறான்) யோவ், ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா?

பேச்சுக்கா? அதென்ன பேச்சுக்கு? நாங்க மட்டும் பேசாமயா சொன்னோம்? சொல்றா?

(தனக்குள்) என்னடா இவன்.. முன்னால போன முட்டுறான்.. பின்னால போனா ஒதைக்கிறான்.. இன்னைக்கி விடிஞ்சாப்பலதான்.. இப்ப என்ன கேக்க வராங்கறத மறந்து போயிருச்சே..

(பார்த்திபன் வடிவேலுவின் தலையில் தட்டுகிறார்) டேய் என்ன சத்தத்தையே காணோம். சரி, அத விடு.. நீ நான் நெனச்ச ஆளா இல்லையா அத சொல்லு..

முதல்ல நான் யாருன்னு நீ நினச்சு பேசிக்கிட்டிருக்க.. அதச் சொல்லு..

டேய், என்னையே மடக்கறியா? மவனே.. அப்ப எதுக்கு நீ நெனச்ச ஆள் நான் இல்லன்னு சொன்னே?

நான் ஒரு குத்து மதிப்பா கேக்கறியாக்கும்னு சொன்னேன்யா.

குத்து மதிப்பா? அதென்னா குத்து, மதிப்பு?

யோவ் ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா..

டேய் சொன்ன டையலாக்கையே சொன்னே.. கொன்னுருவேன். சரி அதையும் விடு.. நான் சொல்றேன். நீ அந்த துபாய் கக்கூஸ் பார்ட்டிதானே..

(தனக்குள்) ஆஹா.. மாட்டிக்கிட்டம்யா.. எமகாதகானாயிருப்பான் போலருக்குதே.. துபாயா? கக்கூசா? நீ என்னய்யா சொல்றே? நான் மெட்றாசே பாத்ததுல்ல.. இதுல துபாயில போயி.. நீ நெனக்கற ஆளு நான் இல்லையா.. உலகத்துல ஒருத்தன மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு நீ கேட்டதில்ல அதுல ஒருத்தன் நான்னு வச்சிக்கயேன்..

சரி வச்சிக்கறேன்.. அதுக்குன்னு அவன் மேல அடிச்ச அதே கக்கூஸ் நாத்தமுமா ஏழுபேர் மேலயும் அடிக்கும்?

(வடிவேலு தன் மேல் முகர்ந்து பார்க்கிறார்.) எனக்கு அடிக்காத நாத்தம் இவனுக்கு மட்டும் எப்படி அடிக்குதுன்னே தெரியலையே.

என்ன அடிக்குதா?

எது?

அதான்டா.. மோந்து பாத்தியே.. அது..

(வடிவேலு விறைப்புடன் திரும்பி பார்க்கிறார்) ஆமாய்யா நீ நெனக்கற ஆளு நான்தான்.. இப்ப என்னாங்கற?

(வியப்புடன்) தோ பார்றா, கோபங்கூட வருமா உனக்கு?

பின்னே.. நான் என்ன ஒன்னுக்கும் பெறாத ஆளுன்னு நினைச்சியா.. வேணாம். சொல்லிட்டேன்.

ஒன்னுக்கு போவாத ஆளா? அது வேறயா? தள்ளி நில்றா!

(தனக்குள்) ஐயோ.. நானே வாய் குடுத்துட்டு, குடுத்துட்டு மாட்டிக்கறனே.. (கன்னத்தில் அடித்துக்கொள்கிறார்) சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா..

டேய் யார சொல்றே?

என்னது, நானா?

இப்ப ஏதோ வாய்க்குள்ளயே சொன்னியே?

(வடிவேலு வாயை மூடிக்கொள்கிறார்) 'இல்லை' என்று தலையை அசைக்கிறார்.

(பார்த்திபன் வடிவேலுவை பின்னந்தலையில் அடிக்கிறார்) வாயை தொறந்து சொல்றா?

(வடிவேலு கோபத்துடன் முறைக்கிறார்) யோவ். பேசிக்கிட்டிருக்கப்பவே.. கையை நீட்டுற.. வேணாம்.. சொல்லிட்டேன்.

'என்ன வேணாம்? என்ன சொல்லிட்டே? அடிக்கடி இதே டயலாக்க சொல்றே? என்ன வேணாம்? நான் இந்தான்னு எதையோ குடுத்தா மாதிரி!

(வடிவேலு கைகளை தலைக்குமேலே உயர்த்தி கும்பிட்டவாறு தரையில் விழுகிறார்) ஐயோ சாமி.. தெரியாம சொல்லிட்டேன்.. ஆள விடுய்யா..

( பார்த்திபன் வலது கரத்தை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. நீ சாவாம நூறு வருஷம் இரு.. (தனக்குள்) அப்பத்தான அடிக்கடி எங்கிட்ட மாட்டுவே..

(வடிவேலு எழுந்து முற்றிலும் அழுக்காகிப்போன தன் உடைகளைப் பார்க்கிறார்) இப்ப திருப்தியா?

(பார்த்திபன் வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார்) இப்பத்தான் சரியான கக்கூஸ் பார்ட்டி மாதிரி இருக்கே.. இப்படியோ போ..

(வடிவேலு தலையை குனிந்தவாறே சாலையின் ஓரத்துக்கு சென்று ஓரக்கண்ணால் பார்த்திபனை பார்க்கிறார்)

டேய் என்ன பாக்கறே?

ஒன்னுமில்லய்யா.. இதோ போய்கிட்டேயிருக்கேன்.. (செல்கிறார்)

(பார்த்திபன் தன் டிரேட் மார்க் விஷம புன்னகையுடன் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்புகிறார்)

முடிவு