30 August 2013

சொந்த செலவில் சூன்யம் 3

கதைச் சுருக்கம்:

க்ரிமினல் லாயர் ராஜசேகருக்கும் அவனுடைய ஒருநாள் கட்சிக்காரர் மாதவிக்கும் இடையிலான தகாத உறவில் விரிசல் ஏற்படுகிறது. அவள் வேறொருவருடன் உறவு வைத்துள்ளதை அறிந்த ராஜசேகர் அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். வாக்குவாதம் சண்டையாக உருவெடுக்கிறது. கோபத்தில் அவளை பிடித்து தள்ளிவிட்டு வெளியேறும் ராஜசேகர் அடுத்த நாள் அவள் கொலையுண்டு கிடப்பதை அறிந்து கலக்கமடைகிறான். ஆனால் சம்பவ இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரை கண்டதாக ஒரு பெண் சாட்சியம் கூறியதாக தினத்தாளில் படிக்கிறான். அவனுடைய குழப்பம் அதிகரிக்கிறது.

முந்தைய இரு பகுதிகள்:

**
Death due to head injury: In these cases, the fracture generally occurs just above the ear, in the temporal bone. "There is an artery that runs above the skull and can get torn and begin to bleed above the lining of the brain. It is enough to cause death if not treated immediately"

**

ராஜசேகர் படித்துக்கொண்டிருந்த தமிழ் தினத்தாளை மடக்கி வைத்துவிட்டு ஆங்கிலப் பத்திரிகையை புரட்டினான். உள் பக்கம் ஒன்றில் சிறிதாக தமிழில் வந்திருந்த அதே செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஆக, இப்போதைக்கி கவனம் நம்ம பக்கம் இல்லை என்று தாற்காலிக நிம்மதியடைந்தான். செய்தித்தாள்களை மடித்து தன்னுடைய கைப்பெட்டியில் வைத்துவிட்டு மேசை மீது குமாஸ்தா எடுத்து வைத்திருந்த அடுத்த நாள் விசாரனைக்கு வரவிருந்த வழக்கு கட்டுகளைப் பார்வையிட துவங்கினான். ஆனால் அவனுடைய கவனம் முழுவதும் மாதவியையே சுற்றி வந்தது.

தன் முன்பிருந்த வழக்கு கட்டுகளில் கவனம் செலுத்த முடியாமல் போகவே அவற்றை அப்படியே எடுத்து கைப்பெட்டிக்குள் வைத்து எடுத்துக் கொண்டு அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். 

வீட்டிற்குள் நுழைந்தவனை வியப்புடன் பார்த்தாள் கோகிலா. 'என்னங்க இவ்வளவு சீக்கிரம்? உடம்புக்கு ஏதாச்சுமா?' 

'அதெல்லாம் ஒன்னுமில்லை.. லேசா தலைவலி... காப்பிய போட்டுக் கொண்டா... பாப்பா வந்துட்டாளா?'

'வந்துட்டா... கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு விட்டுருக்கேன்... இன்னும் ரெண்டு நாளைல பரீட்சை துவங்குதுல்ல? ராத்திரி ரொம்ப நேரம் படிக்கறா... அதான்..'

'சரி தூங்கட்டும்... நா மாடிக்கி போறேன்... நாளைக்கி கேஸ் சம்பந்தமா கொஞ்சம் படிக்கணும். காப்பிய போட்டு கொண்டா.. பாப்பா எழுந்ததும் என்னெ டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்க...'

'சரிங்க.. நீங்க போங்க... நா காப்பி போட்டு கொண்டு வரேன்.'

மனைவியின் தலை மறைந்ததும் தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தான். நல்லவேளையாக மாதவியைப் பற்றி ஒன்றும் இல்லை. அணைத்துவிட்டு கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு படியேறினான்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும் கைப்பெட்டியில் வைத்திருந்த மாலைப் பத்திரிகைகளை வெளியில் எடுத்து மாதவியைப் பற்றிய செய்தி இருந்த பக்கத்தை கிழித்து அலமாரியில் பத்திரப்படுத்தினான். பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க துவங்கினான். 

கைப்பெட்டியிலிருந்த குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான். அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிடத் துவங்கினான்.

1. முதல்ல இந்த வழக்கை யார் விசாரிக்கப் போறாங்கன்னு கண்டுபிடிக்கணும்.
2. நேத்து மாதவியின் வீட்லருந்து வந்தவனைப் பற்றி விசாரிக்கணும்.
3. மாதவியின் வீடு வரை பகல் வேளையில ஒரு தடவை போய் நம்மள யாரும் அடையாளம் கண்டுக்குறாங்களான்னு பாக்கணும்...

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு மூன்றாவதாக குறித்திருந்ததை அடித்தான். 'இப்ப இந்த விஷப் பரீட்சை வேணாம்... முதல்ல போலீஸ் இன்வெஸ்டிகேஷன யார் பண்றான்னு பாக்கலாம்... அப்புறம் அந்த ஆளப் பத்தி ஏதாச்சும் தெரியுதான்னு பாக்கலாம்... அதுக்கப்புறம் எப்படி ப்ரொசீட் பண்றதுன்னு டிசைட் பண்ணலாம்..'

'காப்பி கொண்டு வந்திருக்கேன். கதவ எதுக்கு பூட்டி வச்சிருக்கீங்க?'

ராஜசேகர் மனைவியின் குரல் கேட்டதும் கையிலிருந்த குறிப்பேட்டை கைப்பெட்டிக்குள் வைத்துவிட்டு எழுந்து கதவைத் திறந்தான். 

'குளிக்க போறப்ப கதவ சாத்தினது... மறந்துருச்சி.. சரி குடு...'

'இல்ல... நானே உள்ள வந்து வைக்கிறேன்...' என்றவாறு அறைக்குள் நுழைந்த கோகிலா படுக்கையில் கிடந்த தமிழ் பத்திரிகையைக் கண்டாள்.

'என்னங்க இது? ஈவ்னிங் பேப்பர வாங்கிட்டு வந்துருக்கீங்க...? இந்த மாதிரி பேப்பர்ஸ வாங்க மாட்டீங்களே?'

'நா வாங்கல... சேம்பர்ல கிடந்தது... படிச்சிட்டு அப்படியே ப்ரீஃப்கேஸ்ல வச்சுட்டேன் போலருக்கு.... நாளைக்கி போறப்ப திருப்பி வச்சிறணும்... நீ காப்பிய வச்சிட்டு போ... ராத்திரி டிஃபன் ரெடியானதும் கூப்டு... அதுவரைக்கும் கொஞ்ச நேரம் படுக்கறேன்.. தலைவலி மண்டைய பிளக்குது...'

'சரிங்க...' என்றவள் குணிந்து படுக்கையில் கிடந்த தமிழ் செய்தித்தாளை எடுத்தாள். 'நாளைக்கித்தான திருப்பித் தரணும்... படிச்சிட்டு தரேன்.'

இதை எதிர்பாராத ராஜசேகர் சட்டென்று அவளிடமிருந்து அதை பிடுங்கி படுக்கையில் எறிந்தான். 'நீ ஒன்னும் படிக்க வேண்டாம்... நீ படிச்சிட்டு டீப்பாயில போட்டுட்டு போய்ட்டீனா பாப்பா எடுத்து கிறுக்கி வச்சிருவா... நீ போயி சமையல கவனி..' 

அவனுடைய குரலிலிருந்த கோபம் கோகிலாவை திடுக்கிட வைத்தது... 'நான் இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்தறீங்க?'

ராஜசேகர் சட்டென்று இறங்கி வந்தான். 'சாரி கோகி... ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்.. தப்பா எடுத்துக்காத... நீ என்னெ கொஞ்சம் தனியா விடேன் ப்ளீஸ்.'

'சரி.. நா கீழ போறேன்... ஏதாச்சும் வேணும்னா குரல் குடுங்க.'

கோகிலா சென்றதும் மீண்டும் அறைக்கதவை சாத்தி தாளிட்டான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாதவியின் வீட்டுக்கு சென்றுவருவதை யாரெல்லாம் பார்த்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்த்தான். மாதவியின் வீட்டுக்கு அவன் செல்லும்போது பெரும்பாலும் இரவு ஏழு மணிக்கு மேல்தான் என்பதால் அவளுடைய வேலைக்காரி அவனை பார்த்திருக்க வாய்ப்பில்லை. மாதவியும் தன்னைப் பற்றி அவளிடம் கூறியிருக்க மாட்டாள். 

Row houses எனப்படும் தனித்தனி வீடுகள் அமைந்திருந்த அந்த பகுதியில்  வசித்த பலரும் நடுத்தரத்திற்கும் சற்று மேலே உள்ளவர்கள் என்பதால் யாரும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதும் ராஜசேகருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 

ஆக, அவனுக்கு தெரிந்த வரை அவன் மாதவியுடன் தொடர்பு வைத்திருந்ததை அந்த பகுதியில் இருந்த எவரும் பார்த்திருக்க வழியில்லை என்பதை நினைத்து சற்று நிம்மதியடைந்தான்.

'என்னங்க, கொஞ்சம் இங்க வாங்களேன், டிவியில ஒரு நியூஸ்...' மனைவியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கையிலிருந்த குறிப்பேட்டை கைப்பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு கதவைத் திறந்தான். 'என்ன கோகி நீ... நாந்தான் டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னேன் இல்ல?' 

'இல்லைங்க... நம்ம அப்பார்ட்மென்ட்ல இருக்கற ஒருத்தர ஏதோ ஒரு கொலைகேஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்... நியூஸ்ல போடறான். '

'என்னது நம்ம ஃப்ளாட்டுல குடியிருக்கறவரையா? யாரு?'

'வாங்க சொல்றேன்.' என்றவாறு படியிறங்கிய மனைவியை தொடர்ந்த ராஜசேகர் ஹாலை அடைவதற்குள் அவள் குறிப்பிட்ட செய்தி முடிந்திருந்தது.

'ஐயையோ முடிஞ்சிருச்சி போலருக்கு. நீங்க எதுக்கு என்னைக்குமில்லாம கதவ பூட்டிக்கிட்டு இருக்கீங்க? ஒடனே வந்திருந்தா பார்த்திருக்கலாம்.' என்ற மனைவியை முறைத்தான். 

'நீதான் பார்த்தே இல்ல? யார்னு சொல்லேன்?'

'அதாங்க நமக்கு நேர் கீழ குடியிருக்காரே... மதுரக்காரங்க.'

'ஆமா... அவரையா அரெஸ்ட் பண்ணாங்க? என்னடி ஒளர்றே? அவரே வயசானவரு.'

'அவர இல்லீங்க... அவரோட மகன்... அப்பப்போ இங்க வருவாரு, நா பாத்துருக்கேன்.'

'எதையாவது ஒழுங்கா சொல்றியா?' எரிந்து விழுந்தான் ராஜசேகர். 'முதல்ல நம்ம ஃப்ளாட்டுல இருக்கறவர்னு சொன்னே... இப்ப அவர் இல்ல. அவரோட மகன்னு சொல்றே. சரி எங்க கொல நடந்ததுதாம்? அதையாச்சும் ஒழுங்க கேட்டியா?'

'ஆமா... சென்னையிலதான் மைலாப்பூர்ல. பேரு கூட ஏதோ மாதவியாம். தனியா இருந்த பொம்பள போலருக்கு...'

ராஜசேகருக்கு தலையை சுற்றியது. சமாளித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் 24 மணி நேர செய்தி சானல்களில் சரசரவென வலம் வந்தான். எல்லாவற்றிலும் விளம்பரங்கள்! 

'நல்லா கேட்டியா?'

கோகிலா வியப்புடன் அவனைப் பார்த்தாள். 'நீங்க ஏன் இவ்வளவு டென்ஷனாவுறீங்க?  நம்ம அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து போறவரானதால டிவியில பாத்ததும் ஒங்கக்கிட்ட சொல்ல வந்தேன். இப்ப இல்லன்னா ராத்திரி பத்து மணி நியூச பார்த்தா போச்சு. வாங்க, வந்து சாப்டுங்க.'

தன்னுடைய முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கோகிலா பார்த்திருப்பாளோ என்று நினைத்தவன் சட்டென்று சமாளித்தான். 'சாரி கோகி...இன்னைக்கி கோர்ட்ல பயங்கர டென்ஷன். நீ போயி டிஃபன எடுத்துவை. பாப்பா எங்க?'

'அவளோட ரூம்ல படிக்கிறா. இன்னைக்கி நா அவ கூட கீழயே படுத்துக்கறேன்... நீங்க சாப்ட்டுட்டு நியூச பார்த்துட்டு ஒங்க ரூமுக்கு போங்க.' 

அவன் சாப்பிட்டு முடிக்கவும் இரவு பத்து மணி செய்திகள் ஒளிபரப்பாகவும் சரியாக இருந்தது. தலைப்பு செய்திகளில் ஒன்றும் முக்கியமாக சொல்லவில்லை. பத்து நிமிடங்கள் கழித்து மாதவியின் கொலை செய்தி ஒளிபரப்பானது. காமரா மாதவியின் வீட்டுப் பகுதியை ஒரு முறை வலம் வந்தது. அடுத்து, முந்தைய நாள்  மாலை மாதவியின் வீட்டிலிருந்து வெளியே வரும்போது அவன் பார்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்தான். 'இந்தாள் நம்ம ஃப்ளாட்டுக்கு வந்துருக்கானா? நாம ஒருதரம் கூட பார்த்ததில்லையே?' என்று நினைத்தான். மனதுக்குள் நாம் தப்பித்தோம் என்று நினைத்தாலும் இது ஒரு தாற்காலிகமான தப்பித்தல்தான் என்றும் தோன்றியது. 

அடுத்த காட்சியில் சென்னை துணை காவல்துறை துணை ஆணையர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசுவது தெரியவே தொலைகாட்சியின் ஒலியை சற்று கூட்டினான். 'சம்பவம் நடந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்ய முடிந்ததற்கு முக்கிய காரணம் அந்த பகுதியில் வசித்த ஒருவரின் சாட்சியத்தால்தான். இதுபோன்று கொலை நடக்கும் அனைத்து இடங்களிலும் பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க முன்வந்தால் எங்களுடைய பணி மிக எளிதாக முடிந்துவிடும்.'

'அந்த சாட்சி யாருன்னு சொல்ல முடியுமா சார்?' என்ற நிரூபர் ஒருவரின் கேள்விக்கு, 'சாரிங்க... அத கோர்ட்லதான் நீங்க பார்த்துக்கணும்.' என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர நினைத்தவரை இன்னொரு நிரூபரின் கேள்வி தடுத்து நிறுத்தியது.

'இனி ஃபர்தர் இன்வெஸ்டிகேஷன் ஏதும் இருக்காதா சார், இவர்தான் கொலையாளின்னு ஷ்யூராயிருச்சா?'

'அப்படித்தான் நினைக்கிறோம். இருந்தாலும் மைலாப்பூர் E1 ஸ்டேஷன் க்ரைம் எஸ்.ஐ. தன்ராஜ் தலைமையில நாலு பேர் கொண்ட ஒரு டீம போட்டுருக்கோம். அவங்க எவ்வளவு சீக்கிரம் விசாரனை முடிக்க முடியுமோ அதுக்குள்ள முடிச்சி ரிப்போர்ட குடுத்துருவாங்கன்னு நினைக்கறோம். முதல்ல அக்யூஸ்ட ஒரு வாரம் போலீஸ் கஸ்டடில விடணும்னு நாளைக்கி கோர்ட்ல கேக்கப் போறோம்.'

'என்னங்க சவுண்ட கொஞ்சம் குறைங்க... பாப்பா படிக்க முடியல..' மனைவியின் குரல் அசரீரியாக வர தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு எழுந்து ஹாலின் குறுக்கே நடந்து தன்னுடைய மகள் காஞ்சனாவின் அறையை எட்டிப் பார்த்தான். மகள் மும்முரமாக எதையோ படித்துக்கொண்டிருந்தாள். கோகிலா அருகில் அமர்ந்திருந்தாள்.

அறைக்குள் நுழைந்து மகளுடைய தலையை வருடினான். 'படிக்கறது அஞ்சாங் கிளாஸ். எதுக்கும்மா இப்படி விழுந்து, விழுந்து படிக்கறே. போறும் படு.'

'நீங்க சும்மா இருங்க... அதான் சாக்குன்னு படுத்துருவா. இந்த தடவையாவது ஃபர்ஸ்ட்டு ராங்க் வரணும்னு நா பாக்கேன்... நீங்க வேற.' என்ற கோகிலாவை பார்த்து சிரித்தான்.

'அது சரி... நீ சாதிக்க முடியாதத இவள வச்சி சாதிச்சிக்கலாம்னு பாக்கியா?'

கோகிலா முறைத்தாள். 'ஜோக் அடிக்காம  போய் படுங்க... இன்னும் அரை மணி நேரம், என்னடா கண்ணா?'

காஞ்சனா தூக்கக் கலக்கத்துடன் தன் தாயைப் பார்த்தாள். 'சரிம்மா.' பிறகு நிமிர்ந்து, 'குட் நைட் டாடி...' என்று கூறிவிட்டு கண்களை மூடிக்கொண்டு படித்ததை முனுமுனுக்க ராஜசேகர் புன்னகையுடன் 'குட் நைட் காஞ்ச்..' என்றவாறு அறையை விட்டு வெளியேறினான்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும் கைப்பெட்டியை திறந்து தன்னுடைய குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு அமர்ந்தான். சற்று முன்பு குறித்துவைத்திருந்த பட்டியலைப் பார்த்தான். இத்தனை விரைவில் இரண்டுக்கும் விடை கிடைத்துவிட்ட  நிம்மதி அவனுடைய முகத்தில் தெரிந்தது. இந்த வழக்கை யார் விசாரிக்கப் போகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற குறிப்பிற்கு நேரே எஸ்.ஐ. தன்ராஜ் என்று எழுதினான். இதற்கு முன் கேள்விப்படாத பெயர் என்றாலும் க்ரைம் பிராஞ்சில் அவனுக்கு தெரிந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மூலமாக ஒரு சில தினங்களுக்குள் அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. 

இரண்டாவது, குற்றம் சாட்டப்பட்டப்பட்டவரைப் பற்றிய விவரம். பெயர் தெரியவில்லையென்றாலும் அவருடைய தந்தை அவன் இருந்த அதே குடியிருப்பில் இருந்ததால் அவரைப் பற்றிய முழு விவரங்களை ஓரிரு நாட்களில்  தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். 

சட்டென்று ஒரு உத்தி அவன் மனதில் தோன்ற நிமிர்ந்து அமர்ந்தான். சற்று நேரம் அதையே அசை போட்டான். இது சரி வருமா? ரிஸ்க் ஏதும் இருக்கா என்று அதையே பல கோணங்களிலும் இருந்து ஆராய்ந்தான். இறுதியில் அதுதான் இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக தப்பிப்பதற்கு ஒரே வழி என்று முடிவு செய்தான். அந்த முடிவை செயல்படுத்த என்னென்ன செய்யவேண்டும் என்பதை கடகடவென குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு மூடி கைப்பெட்டிக்குள் வைத்தான். 

விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான். 

தொடரும்..

6 comments:

குட்டன் said...

இன்றுதான் முழுவதும் படித்தேன்.கருமையான த்ரில்லர்.நிச்சயம் தொடர்வேன்
த.ம.1

வே.நடனசபாபதி said...

கதை பல யூகத்தை கொடுத்தாலும் வழக்கறிஞர் ராஜசேகர் அந்த குறிப்பேட்டில் குறித்துக்கொள்வது கதையின் தலைப்பை நியாயப்படுத்துகிறது. கதையை அருமையாய் கொண்டு போகிறீர்கள். வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...


குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பதேது.? என்ன உத்தி அது.? கைதானவருக்காக வாதாட எண்ணுகிறாரா.? தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வருகை தந்து உற்சாகமான கருத்துக்களை பகிர்ந்த நண்பர்கள் குட்டன், நடனசபாபதி மற்றும் GMB அவர்களுக்கு மிக்க நன்றி

Sasi Kala said...

கதை நன்றாகவே செல்கிறது.. எனக்கு என்னவோ இந்த ஆள் தான் தள்ளியதில் அந்த பெண் இறந்திருக்கலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
கதை நன்றாகவே செல்கிறது.. எனக்கு என்னவோ இந்த ஆள் தான் தள்ளியதில் அந்த பெண் இறந்திருக்கலாம்.//

அப்படியும் இருக்கலாம்... post mortem reportஐ பாத்தாத்தான் புரியும்...

கதைய விட நீங்க குடுக்கற கமென்ட் நல்லாவே இருக்கு.... மிக்க நன்றி.