30 ஜூலை 2013

கிரிமினல் அரசியல்வாதிகள்!

பணமும் பலாத்காரமும் தேர்தல்களில் மட்டும் வெற்றிபெற உதவுவதில்லை. அரசியலை பணம் பண்ணும் தொழிலாகவும் மாற்ற உதவுகிறது.

உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு கிரிமினல் குற்றங்களில் சிறை சென்றவர்கள் நாட்டில் நடைபெறவிருக்கும் எந்த தேர்தல்களிலும் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவார்கள் என்று தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.

நாட்டை ஆளும் நம் தலைவர்கள் எந்த அளவுக்கு செல்வந்தர்களாக,  கிரிமினல்களாக உள்ளனர் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள கணிப்பு ஒன்று மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வின்படி கடந்த பத்து ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சமர்ப்பித்த சொத்து விவரங்களின்படி அவர்களுள் 62,847  பேருடையை சராசரி சொத்து மதிப்பு சுமார் 1.37 கோடி!

ஆனால் அவர்களுள் ஏற்கனவே தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி!

இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல்: இவர்களுள் ஆள் கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக ரூ.4.38 கோடி!

அரசியல் மற்றும் க்ரிமினல் குற்றங்கள் மூலம் கோடிகளை சம்பாதிக்கும்  இத்தகைய வேட்பாளர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெறுவதிலும் முன்னிலை வகிக்கின்றனர் என்பதும் உண்மை.

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட தமிழ் திரைப்படம் ஒன்றில் நேர்மையுடன் செயல்படும் அமைச்சரைவிட தன் தந்தையிடமே கடத்தல் நாடகம் ஆடி பணத்தை கொள்ளையடிக்கும் அவருடைய மகனுக்கு கட்சித் தலைவரும் முதல்வருமானவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதுபோன்ற ஒரு காட்சி வைக்கபட்டிருந்தது.

நிஜ வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது என்கிறது இந்த ஆய்வு. நேர்மையாளர்கள் என்று பெயரெடுத்த வேட்பாளர்களை விட கிரிமினல்கள் என்ற குற்றத்தை சுமந்துக்கொண்டிருப்பவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறதாம்!

2004ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களில் 11,063 வேட்பாளர்கள் (18%) ஏற்கனவே கிரிமினல் வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள். இவர்களுள் 5,253 வேட்பாளர்கள் (8%) கொலை, கொள்ளை போன்ற பயங்கர வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்கிறது இந்த ஆய்வு.

அதுமட்டுமல்ல. இவர்களுள் 4182 வேட்பாளர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்களை ஆய்வு செய்தபோது இவர்களுள் 1072 வேட்பாளர்கள் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டபோதே அவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் இவர்களுள் 788 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களுடைய முழு குற்றப் பின்னணியும் தெரிந்திருந்தும் இவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளால் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.

மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்களுடைய சொத்து மதிப்பு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகரித்துள்ளதாம்!

மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட 4181 வேட்பாளர்களில் 3173 வேட்பாளர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக 2.34 கோடி உயர்ந்துள்ளதாம். அதில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமந்துக்கொண்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு இரண்டு மடங்கும் 684 பேர்களுடைய சொத்து மதிப்பு ஐந்து மடங்கும் 317 பேர்களுடைய சொத்து மதிப்பு சுமார் பத்து மடங்கும் அதிகரித்துள்ளதாம்! (ஆச்சரியக் குறி போட்டு போட்டு கை அலுத்துருச்சிங்க.... ஆய்வு முடிவுகள் அனைத்துமே ஆச்சரியம் மட்டுமல்லாமல் அதிர்ச்சியும் அளிக்கின்றன என்றால் மிகையாகாது)

இத்தகையோரை மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதித்த கட்சிகள் எவை என்று தெரிய வேண்டுமா?

இதோ பட்டியல்:

சிவசேனா: 2004லிருந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் 75% பேர் க்ரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

RJD: 46%

JD: 44%

BJP: 31%

Cong: 22%

அங்கிங்கெனாதபடி அனைத்துக் கட்சிகளிலும் நிறைந்திருக்கும் கிரிமினல்களுக்கு எதிராக வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வரை இவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சொத்து பட்டியலை மட்டுமல்லாமல் தங்களுக்கு எதிராக நிரூபணமான மற்றும் நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளைப் பற்றிய பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் சட்டம் அவர்களை தண்டிக்காவிட்டாலும் மக்கள் அவர்களை இணம் கண்டுக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் நிராகரிக்க முடியும்.

செய்யுமா தேர்தல் ஆணையம்?




19 கருத்துகள்:

  1. என்ன செய்வது தூயவர்களும் கிரிமினல்களாக ஆகும் இடம் அது தான்...

    பதிலளிநீக்கு
  2. அரசியலா?! புரியாத விசயம். மீ எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. ஆனால் பணநாயகத்தை கடைபிடிக்கின்ற நம் நாட்டில் இத்தகைய அரசியல்வாதிகளை யாரும் எதுவும் இப்போதைய நிலையில் ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் நிதர்சனம்.
    //மக்கள் அவர்களை இனம் கண்டுக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் நிராகரிக்க முடியும்.// என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒருவேளை தேர்தல் ஆணையம் அவர்களுடைய குற்றப் பின்னணியை அறிவித்தாலும் கூட நம் மக்கள் அவர்களை நிராகரிப்பார்களா என்ன?

    பதிலளிநீக்கு
  4. why there is no reference about Tamilnadu partiees?
    does it mean that no such person has contested?
    or TBR is conveniently avoiding it?

    பதிலளிநீக்கு
  5. அரசியல்வாதிக்கு சட்டம் சொல்லும் தகுதி என்ன ? எத்தனைபேர் இதில் தேறுவார்கள்

    பதிலளிநீக்கு
  6. அதிர்ச்சி தரும் தகவல்கள் தான்....

    குற்றங்கள் புரிந்திருப்பது/பழி சுமத்தப்பட்டிருப்பது கூடுதல் க்வாலிகேஷன்...... என்ன அரசியலோ.....

    பதிலளிநீக்கு
  7. என்ன செய்வது தூயவர்களும் கிரிமினல்களாக ஆகும் இடம் அது தான்...//

    ஆனால் பெருந்தலைவர் காமராஜ், கக்கன், நல்லமுத்து போன்ற நல்லவர்களும் நல்லவர்களாகவே அரசியலில் வாழ்ந்தார்கள் என்பதையும் மறுக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  8. அரசியலா?! புரியாத விசயம். மீ எஸ்கேப்//

    அப்படி சொல்லாதீங்க. பெண்கள் என்று தீவிர அரசியலில் ஈடுபடுகிறார்களோ அப்போது நாட்டின் சுபிஷம் துவங்கிவிடும். முன்பு கல்வியில்லாமைதான் அரசியலில் பெண்களை ஈடுபட விடாமல் தவிர்த்தது. இப்போதும் பெண்கள் ஓட்டு கிடைத்தால் போதும் என்றுதானே மிக்சி, கிரைன்டர் போன்ற இலவசங்களைக் கொடுக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  9. ஒருவேளை தேர்தல் ஆணையம் அவர்களுடைய குற்றப் பின்னணியை அறிவித்தாலும் கூட நம் மக்கள் அவர்களை நிராகரிப்பார்களா என்ன?//

    அனைவரும் நிராகரிப்பார்கள் என்று கூற முடியாது. ஆனால் இன்றைய படித்த இளைஞர் சமுதாயம் அவர்களை ஒதுக்கிவிட வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
  10. why there is no reference about Tamilnadu partiees?
    does it mean that no such person has contested?
    or TBR is conveniently avoiding it?//

    டிபிஆர் is not avaoiding. The analysis has concentrated only on National Parties. As you can see the parties well known for fieling criminals such SP, BSP are also not seen as they are regional parties like DMK, ADMK, TDP, etc.

    பதிலளிநீக்கு
  11. அரசியல்வாதிக்கு சட்டம் சொல்லும் தகுதி என்ன ? எத்தனைபேர் இதில் தேறுவார்கள்//

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூட தேர்தலில் போட்டியிடுபவர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களாக இருக்கலாகாது என்று கூறவில்லை. அதனால்தான் உச்ச நீதிமன்றம் இதற்கென ஒரு தீர்ப்பை தரவேண்டியிருந்தது. இதை ஒரு வழிகாட்டுதலாக ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் இந்த சட்டத்தில் இதற்கென ஒரு கன்டிஷனை வைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் இன்று ஆளும் கட்சியும் நாளை ஆளலாம் என்று காத்திருக்கும் கட்சியும்கூட இத்தகையோர்களை மீண்டும், மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கின்றனவே. ஆகவே தேர்தல் விதிமுறைகளில் வேண்டுமானால் மாற்றம் கொண்டு வர முடியுமே தவிர சட்டத்தில் நிரந்தர மாற்றம் ஏதும் வரப்போவதில்லை.

    பதிலளிநீக்கு
  12. குற்றங்கள் புரிந்திருப்பது/பழி சுமத்தப்பட்டிருப்பது கூடுதல் க்வாலிகேஷன்...... என்ன அரசியலோ.....//

    அதுதான் அரசியல்!

    பதிலளிநீக்கு
  13. // செய்யுமா தேர்தல் ஆணையம்? //
    அங்கே இருப்பவர்கள் அரசு ஊழியர்களாக, பென்சனை எதிர்பார்ப்பவர்களாக இருக்கும்வரை எதுவும் நடக்காது.

    பதிலளிநீக்கு
  14. அங்கே இருப்பவர்கள் அரசு ஊழியர்களாக, பென்சனை எதிர்பார்ப்பவர்களாக இருக்கும்வரை எதுவும் நடக்காது.//

    சேஷன் மாதிரி மறுபடியும் யாராச்சும் வந்தா நிச்சயம் செய்வார்.

    பதிலளிநீக்கு
  15. In most of the developing countries, this is the same situation. I personally feel India like countries are not fit for democracy. Till today it is like a king’s rule rather thug’s rules only. No one is interested to join in politics. If that be the case, how can one expect to get good leaders? I totally stopped reading Indian newspapers. All the newspapers are giving one sided news.

    பதிலளிநீக்கு
  16. I personally feel India like countries are not fit for democracy.//

    Even if countries ruled by Kings or Army or for that matter Dictators corrupt and criminals are still there in politics. They continue to influence Govt. decisions. If not downright criminals it is the super rich who corrupt politicians which are conveniently labelled as lobbying.

    When you view from outside the Country it looks pretty desperate. But somehow we continue to survive despite these criminal politicians!

    பதிலளிநீக்கு
  17. கேவலமான இந்த நிலை மாறத்தான் வேண்டும்!நெஞ்சு பொறுக்குதில்லையே!

    பதிலளிநீக்கு
  18. கேவலமான இந்த நிலை மாறத்தான் வேண்டும//

    உண்மைதான் சார். ஆனால் யார் மாற்றுவது? பூனைக்கு மணி கட்டியது போலத்தான்.

    இந்திய பிரதிநிதித்துவ சட்டத்தில் ஏற்கனவெ உள்ள ஷரத்தைத்தான் உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

    ஒரு க்ரிமினல் குற்றத்தில் இரு வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை மீண்டும் போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய வேண்டும் என்ற சட்டம் சொல்லத்தான் செய்கிறது. ஆனால் அதே சட்டம் அவர்கள் மேல் முறையீடுக்குச் சென்று அங்கு கீழ் நீதிமன்றத்தின் தண்டனை உறுதி செய்யப்படும் வரையிலும் அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் கூறுகிறது. இதில்தான் சிக்கலே. ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கவே மாமாங்கம் ஆகிறது. இந்த சட்ட ஓட்டையைத்தான் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  19. Mr. Pakkirisamy,

    Even though I could not publish the last two comments posted by you I fully agree with what you said.

    பதிலளிநீக்கு