24 மே 2013

மன்மோகன் நல்லவரா, கெட்டவரா?

மாலை நேரம். திண்ணையில் அமர்ந்திருக்கும் ரஹீம் வீட்டினுள் திரும்பி: 'எலேய், அந்த டிவி சவுண்டு கொஞ்சம் குறையேன். '

ரஹீம்: இந்த ஐபிஎல் என்னைக்கி முடியும் கணேஷ்?

கணேஷ்: (சிரிக்கிறார்) ஏன் டார்ச்சரா இருக்கோ?

ரஹீம்: (எரிச்சலுடன்) ஆமாய்யா. போன ஒரு மாசமா ராத்திரியானா இதே டார்ச்சர்தான். ஒரு சேனலையும் பாக்க விடாம பையன் இந்த சானலையே புடிச்சிக்கிறான். என்னமோ சூதாட்டங்கறான், ஃபிக்ஸ்ங்கரான் அப்பவும் இத பாக்கறத மட்டும் வுடமாட்டேங்கறான்களே?

கணேஷ்: ஆமா பாய். நம்ம வீட்லயும் இதே தொல்லைதான்.  WWW wrestlingனு போடுவானே? நா அடிக்கறா மாதிரி அடிக்கறேன் நீ விழுறா மாதிரி விழுன்னு அதே மாதிரிதான் போல இதுவும். டீம் ஓனருங்க குடுக்கற காச வாங்கிக்கிட்டு விளையாடுங்கடான்னா அதுக்கும் மேல யாராச்சும் குடுத்தா அதையும் வாங்கிக்கிட்டு.... தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா?

ஜோசப்: (சிரிக்கிறார்) இதுல என்ன தப்பு கணேஷ்? நம்ம ரிட்டையர்ட் ஜட்ஜ் கட்ஜுவே சொல்லிட்டாரே சிறீசாந்த வுட்றுங்கன்னு. ஒரு உழைப்பும் இல்லாம எவன் எவனோ கோடி கணக்குல சம்பாதிக்கிறான். மைதானத்துலயும் அது நடக்கட்டுமேன்னு கிண்டலடிச்சாரே. அவர் சொல்றதுதான் சரின்னு நினைக்கறேன். டெல்லி போலீஸ் என்னமோ உலகமகா சாதனைய பண்ணிட்டா மாதிரி ஒவ்வொரு சானலுக்கும் கமிஷனரே பேட்டி குடுத்துக்கிட்டு... ரெண்டு நாளா இதே நியூச கேட்டு, கேட்டு சலிச்சி போயிருச்சி பாய். 

ரஹீம்: (எரிச்சலுடன்) நீங்க ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராச்சே ஜோசப். அதனால இப்படித்தான் சொல்வீங்க. அப்போ அந்த மூனு பசங்களும் செஞ்சது தப்பே இல்லேன்னு சொல்றீங்களா?

ஜோசப்: அப்படி சொல்ல வரல பாய். ஆனா இது என்னமோ இதுவரைக்கும் எங்கயும் நடக்காத மாதிரி மணிக்கணக்கா இதையே பேசிக்கிட்டு.. சரி புடிச்சிட்டீங்க. கேஸ் போடுங்க. என்ன தண்டனையோ வாங்கி குடுங்க. அத வுட்டுபோட்டு எத்தனையோ சீரியசான விஷயங்க இருக்கறப்போ எல்லா நியூஸ் சானல்லையும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கறது ரொம்ப ஓவர் பாய். நீங்க என்ன சொல்றீங்க கணேஷ்?

கணேஷ்: (சலிப்புடன்) இப்ப நாமளும் இதத்தானே டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்? விடுங்க, வேற எதையாவது பேசுவோம்.

ஜோசப்: இந்த பாக்கிஸ்தான் எலெக்‌ஷன் இப்படி ஆயிருச்சே பாய்? யாருக்குமே மெஜாரிட்டி வராது அப்படீன்னு பிபிசிகாரன் சொன்னா மாதிரி நடக்கலையே?

ரஹீம்: ஏன், இப்பவும் அதான் நடக்கப் போவுது? நவாப் ஷெரீஃப் கட்சி பெரும்பான்மை கட்சியாத்தான் இருக்கு. தனி மெஜாரிட்டி கிடைக்கலையே. சில்லறை பார்ட்டிகளோட சேர்ந்துதான ஆட்சி அமைக்கப் போறாரு? சர்தாரி கட்சிக்குத்தான் எதிர்பார்க்காத அடி. அவரோட கட்சிக்கு வந்துருக்க வேண்டிய ஓட்டுங்க இம்ரான் கட்சிக்கு போயிருச்சி போலருக்கு. 

கணேஷ்: இந்த நவாப் பேசறத பாத்தா முன்னால இந்தி-சீனி பாய், பாய்னு சொன்னா மாதிரி இனி இந்தி-பாக்கி பாய், பாய்னு சொல்வாங்க போலருக்கு?

ரஹீம்:(எரிச்சலுடன்) ஏன், அப்படி நடக்கறது ஒங்களுக்கு புடிக்காதே. பாக்கிஸ்தான் விஷயத்தையே ஊதி, ஊதி பார்லிமென்ட் ஒழுங்கா நடக்க விடாம இனி தடுக்க முடியாதுன்னு நினைப்பு, என்ன?

கணேஷ்:(சிரிக்கிறார்) நீங்க வேற பாய். அடுத்த எலெக்‌ஷன்ல நாங்கதான டிரெஷரி பெஞ்சில ஒக்காந்திருப்போம்? நாங்களே எப்படி கூட்டத்த நடக்க விடாம தடுக்கறது? அது இனி கடுப்புலருக்கற காங்கிரஸ் வேலையாயிருக்கும்.

ரஹீம்: ஒங்க நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குத்துய்யா. அப்படியொரு டவுட் இருந்தா ஏன் மன்மோகன் மறுபடியும் ராஜ்யசாபுவுக்கு போட்டி போடப்போறார், என்ன ஜோசப்?

ஜோசப்: அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல பாய். எப்படியும் பார்லி எலக்‌ஷனுக்கு இன்னும் முழுசா ஒரு வருசம் இருக்கே. அதுவரைக்கும் அவர்தான பிஎம்? இருக்கற ப்ராப்ளம் போறாதுன்னு இது வேற புதுசா ஒரு ப்ராப்ளமா? அதுக்குத்தான் மறுபடியும் நாமினேஷன் ஃபைல் பண்ணிட்டார்.

கணேஷ்: ஏதோ பண்ணட்டும். இதுலயும் ஒரு தமாஷ் நடந்துருக்கே. சிங் ஃபைல் பண்ண அவரோட ஃபைனான்ஷியல் ரிப்போர்ட்ட பாத்தீங்களா, பேப்பர்ல போட்டுருந்தானே?

ஜோசப்: பாத்தேன், பாத்தேன். அதப் பத்தி ஃபேஸ்புக்ல கூட ஒரு ரவுண்டு ஜோக்ஸ் வந்துதே. எனக்கு ஒரு காமடி எஸ்.எம்.எஸ் கூட வந்துது. அடுத்த எலக்‌ஷன்ல தோத்துட்டா நம்ம பிஎம் நா ஒரு முன்னாள் பிஎம்னு அவரோட ப்ரொஃபைல்ல போட்டுக்கிட்டு எங்கயாச்சும் வேலை தேடி அலைய வேண்டியதுதான்னு. ஏன்னா அவருக்கு இருக்கற சொத்துக்கு அடுத்த வேளை சோத்துக்கே மறுபடியும் வேலைக்கி போவணும் போலருக்குதாம். ஆனா இவங்க எல்லாருமே விவரம் இல்லாதவங்கன்னு நினைக்கறேன். அவர் ஒன்னும் எங்கிட்ட சொத்தே இல்லைன்னு சொல்லலை. நம்மள மாதிரி அவர்கிட்டயும் குடியிருக்கறதுக்கு ஒரு வீடு இருக்கு, வாடகைக்கு குடுக்கறதுக்கு இன்னொரு ஃப்ளாட்டும் இருக்கு. இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னால சில லட்சங்களுக்கு வாங்குனது இன்னைக்கி கோடியில மதிப்பு. அப்புறம் மீதி இருக்கற அவருடைய சேமிப்பையெல்லாம் பாங்க் டெப்பாசிட்டாவே வச்சிருக்காரு. அதுவே ரூ.4.00 கோடியாம். அவர் பொருளாதாரத்துல டாக்டர் பட்டம் வாங்கினவராச்சே தெண்டத்துக்குன்னா எதுக்கு சொத்துல போயி பணத்த முடக்கணும்னு பேங்க்ல டெப்பாசிட்டா வச்சிருக்காரு. அதுவும் எங்கே ஸ்டேட் பாங்க்ல! ஒரு மனுசனுக்கு தேவைக்கு அதிகமா சொத்து இல்லைன்னாலும் ஆளுங்க நம்பலைன்னா அப்புறம் என்னதான் பண்றது? இல்லாத சொத்த இருக்குன்னா சொல்ல முடியும்? கேக்கறதுக்கே காமடியா இருக்கு.

கணேஷ்: காமடிய வுடுங்க ஜோசப். உண்மையிலேயே அவருக்கு இவ்வளவுதான் சொத்தா?

ஜோசப்:(சிரிக்கிறார்) என்னெ கேட்டா? அப்போ அவர் பொய் சொல்றார்னு சொல்றீங்களா? 

கணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப் நீங்கக் கூட.... பொய்னு சொல்லாம வேற என்னன்னு சொல்றது? எல்லாம் ஏதாச்சும் பினாமி பேர்ல வச்சிருப்பார்.. இல்லன்னா இருக்கவே இருக்குது ஸ்விஸ் பாங்க்....

ஜோசப்: சேச்சே... அப்படியெல்லாம் இருக்காது... அவர் அப்படிப்பட்டவர் இல்லைங்க.

கணேஷ்: நீங்கதான் மெச்சிக்கணும். நாங்க மட்டும் ஆட்சிக்கு வரட்டும்...

ரஹீம்:(குறுக்கிட்டு) வந்தாத்தான?

கணேஷ்: அதுல என்ன சந்தேகம் பாய்? நாங்க வர்றது வர்றதுதான். வந்ததுக்கப்புறம் முதல்ல இவரோட ஃபைனான்ஷியல் மேட்டர்ஸ பத்தி ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் வச்சிட்டுத்தான் மறுவேலை... நீங்க வேணா பாருங்க.

ரஹீம்: (எரிச்சலுடன்) அட நீங்க என்னமோ கேபினட்ல இருக்க போறா மாதிரியில்ல பேசறீங்க? அதான் டெய்லி ஒரு ஊழல் ரிப்போர்ட் வருதே அதையெல்லாம் வுட்டுப்போட்டு சிங் விஷயத்த குடைஞ்சி என்ன பெரிசா கிடைக்கப் போவுது?

கணேஷ்: இருந்தாலும் இப்படி முழு பூசணிய சோத்துல மறைக்கறா மாதிரி.... அக்கிரமம்.. இவர் அப்படி ஒரு யோக்கியரா இருந்தா... இந்த coalgate விஷயத்துல கோடி, கோடியா கைமாறியிருக்குன்னு சொல்றதெல்லாம்? 

ரஹீம்: எல்லாம் அந்த சிஏஜி ரிப்போர்ட்ல இருக்கறதத்தான சொல்றாங்க? இன்டிப்பென்டன்டா வேற யாரும் இன்வெஸ்ட்டிகேட் பண்ணலை இல்ல? 

கணேஷ்: அப்ப சிபிஐ ரிப்போர்ட்டும் பொய்யா?

ரஹீம்: (எரிச்சலுடன்) நீங்கதான் சிபிஐ எத சொன்னாலும் நம்பமாட்டீங்களேய்யா, இத மட்டும் எப்படி நம்புறீங்க? அதாவது ஒங்களுக்கு சாதகமா வந்தா அதுல உண்மை இருக்குதுன்னு சொல்வீங்க. இல்லன்னா சிபிஐ ஒரு ஆளுங்கட்சியோட கைப்பாவைம்பீங்க. நல்ல நியாயம்யா.

ஜோசப்: சரி, சரி, மறுபடியும் சண்டை வேணாம். 

கணேஷ்: இல்ல ஜோசப். சிபிஐ ரிப்போர்ட்ல் பிஎம் பத்தி என்னமோ இருந்துதுன்னுதான சென்ட்ரல் லா மினிஸ்ட்ரியில அத கரெக்ட் பண்ணியிருக்காங்க? 

ஜோசப்: ஆனா இதுவரைக்கும் ஒரிஜினல் ரிப்போர்ட்ல என்ன இருந்துது அதுல யார் என்ன கரெக்‌ஷன் பண்ணாங்கன்னு வெளியில வரலையே. அதுக்குள்ள எப்படி அது பிஎம் பத்தி எழுதியிருந்ததுன்னு சொல்ல முடியும்?

கணேஷ்: ஆனா சிபிஐ ரிப்போர்ட்டோட மெய்ன் பாய்ன்ட்லயே லா மினிஸ்ட்ரி ஆளுங்க கை வச்சி அதனோட சீரியஸ்னசையே மாத்திட்டாங்கன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லுதே.

ஜோசப்: ஒரு கேஸ் நடக்கறப்போ இந்த மாதிரி கமென்ட்ஸ் கோர்ட் ஜட்ஜஸ் அடிக்கறது சகஜம்தான் கணேஷ்? நம்ம சிஎம் மேல டான்சி கேஸ் நடக்கறப்பவும் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் கேஸ் நடக்கறப்பவும் கூட இந்த மாதிரி நிறைய கமென்ட்ஸ் வந்துதுன்னு சொல்வாங்க.. ஆனா கேஸ் எப்படி முடிஞ்சது?  இந்த மாதிரி பல கேஸ்ல நடந்துருக்கு. ஆனா இந்த தடவ கொஞ்சம் ஜாஸ்தியாவே டேமேஜிங் கமென்ட்ஸ் வந்ததென்னவோ உண்மைதான். அதுல சிலது லூஸ் கமென்ட்ஸ்சுன்னும் கூட சொல்லலாம். ஒரு உச்ச நீதிமன்றத்துல வரக்கூடிய கமென்ட்ஸ் மாதிரி இல்லேங்கறத நிறைய நியூஸ் பேப்பர்ஸ்ல கட்டுரை எழுதறவங்க இந்த மாதிரி judicial overdriveனு நம்ம நாட்டுக்கு தேவையான்னு கேட்டாங்களே, படிக்கலையா? பார்லிமென்ட் உண்டாக்கற சட்டத்த இன்டர்ப்ரெட் பண்றதுதான் கோர்ட்டுங்களோட வேலை. அதுக்கு மேல போயி அவங்களுக்கு மேல இருக்கற பார்லிமென்ட பத்தியோ இல்ல அதோட மேற்பார்வையில ஃபங்ஷன் பண்ற சில அதிகார வட்டங்களையோ அல்லது ஏஜென்சிகளைப் பத்தியோ விமர்சிக்கிறது அவங்க வேலை இல்லேன்னு பல பழைய ஜட்ஜஸே நினைக்கறாங்க. சுப்ரீம் கோர்ட் சொல்றா மாதிரி எந்த ஒரு சூழல்நிலையிலயும் சிபிஐக்கு எலெக்‌ஷன் கமிஷனுக்கு சமமான சுய அதிகாரம் வழங்கறதுக்கு சான்ஸே இல்ல. அது ஒரு டேஞ்சரா முடியக் கூடிய விஷயமும் கூட. 

ரஹீம்: நீங்க சொல்றதும் சரிதான் ஜோசப். சிபிஐயோட ரிப்போர்ட்ல ஏதோ ஒரு மினிஸ்டர் அவசரப்பட்டு கைய வச்சிட்டார்னு சிபிஐ ஒரு கூண்டுக்கிளிங்கறா மாதிரி கமென்ட் அடிச்சது கொஞ்சம் ஓவர்தான். 

கணேஷ்: யார் என்ன சொன்னாலும் எனக்கென்னவோ சுப்ரீம் கோர்ட்ல சொன்னா மாதிரிதான் சிபிஐ இப்ப நடந்துக்குது. அதனால அவங்க சொன்னது ரொம்பவும் சரின்னு நா நினைக்கேன்.

ரஹீம்: (எரிச்சலுடன்) நீங்கதான் நினைப்பீங்களே. எனக்கு நீங்க ஜெயிச்சி ஆட்சிக்கு வரணும். அப்ப சிபிஐ பேரட்டா, கழுகான்னு பாக்கணும். 

கணேஷ்: பாக்கத்தான போறீங்க பாய்? இந்த ஆட்சியில நடக்கற அக்கிரமத்தையெல்லாம் சிபிஐயை வச்சி விசாரிச்சிருவோம்லே?

ஜோசப்: அப்படி செஞ்சீங்கன்னா அப்ப சிபிஐ நீங்க சொல்ற படி ஆடுதுன்னு காங்கிரஸ் சொல்வாங்க, அப்படித்தானே பாய்?

ரஹீம்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். அதுதான் நடக்கப்போவுது. யார் ஆட்சிக்கு வந்தாலும் சிபிஐ இப்படித்தான் இருக்கும். ஏன்னா அவங்களா எந்த கேசையும் எடுத்து நடத்த முடியாதே? யாராச்சும் ரெஃபர் பண்ணாத்தான? ஒன்னு ஸ்டேட் கவர்ன்மென்ட்ஸ் கேக்கணும்.. இல்லன்னா சென்ட்ரல் கவர்ன்மென்ட் கேக்கணும்... என்னதான் சுய அதிகாரம் வழங்கினாலும் அத்தோட ஹெட்ட (Head) ஜனங்களா எலெக்ட் பண்ண முடியும். அவங்களையும் சென்ட்ரல் கவர்ன்மென்ட்தான அப்பாய்ன்ட் பண்ணனும்? அப்படி இருக்கறப்போ அவங்க ப்ரிப்பேர் பண்ற எந்த ரிப்போர்ட்டையும்  எனக்கு கொஞ்சம் காமின்னு ஏதாவது ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் கேக்கறப்போ எந்த சிபிஐ ஹெட்டுக்கும் முடியாதுங்கற சொல்ற அதிகாரம் இருக்கோ இல்லையோ தைரியம் இருக்காதுன்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க?

ஜோசப்: கரெக்ட்.

ரஹீம்: சரி அத விடுங்க. சிபிஐ மாதிரியே  சென்ட்ரல் கவர்ன்மென்ட் அதிகாரத்துக்கு கீழ ஃபங்ஷன் பண்ற இன்னொரு அமைப்பு மத்திய தணிக்கை அதிகாரி அலுவலகம் (CAG). போன நாலஞ்சு வருசத்துல புயல கிளப்புன பல ஊழல் விஷயங்கள கண்டுபிடிச்சி வெளியில கொண்டு வந்தவர் ரிட்டையர் ஆவப்போறாராமே? அதுக்கப்புறம் வர்றவரும் அதுமாதிரியே இருப்பாரா?

கணேஷ்: பின்னே? முன்னால எலெக்‌ஷன் கமிஷனரா சேஷன் இருந்தப்போ அந்த அமைப்போட  ஸ்டைலையே மாத்தி காமிச்சாரே அது மாதிரியில்ல இவரும் CAGன்னா எப்படி ஃபங்ஷன் பண்ணனும்னு காமிச்சவராச்சே. அதுக்கப்புறம் அவர மாதிரியே ஒரு ஆள் வந்தாத்தான ஊழல் பண்ற மினிஸ்டருங்களோட வண்டவாளம்லாம் வெளியில வரும்?

ஜோசப்: நீங்க சொல்றது ஓரளவுக்கு உண்மைதான், ஒப்புக்குறேன். ஆனா ஒரு தணிக்கை அதிகாரியோட வேலைய மட்டும் அவர் செஞ்சிட்டு போயிருந்தா நீங்க சொல்றது சரின்னு ஏத்துக்கலாம். ஆனா ஒரு அவர் மூனாந்தர அரசியல்வாதி மாதிரியில்ல நடந்துக்கிட்டாரு? அவரோட ரிப்போர்ட்ட பத்திரிகைகாரங்களுக்கு லீக் பண்ணி பப்ளிசிட்டி சம்பாதிச்சிக்கிறதுலதான குறியாயிருந்துருக்காரு? அதுமட்டுமில்லீங்க, அவருக்கு எதையுமே பிரச்சினையாக்கி அதன் மூலமா ஏற்படற சர்ச்சையில தன்னெ முன் நிறுத்திக்கிறதுல தீவிரமா இருந்தத பாக்கறப்போ தன்னோட சர்வீஸ் முடிஞ்சதுக்கப்புறம் அரசியல்ல என்ட்ரி பண்ற ஐடியா இருக்குறா மாதிரியில்ல தெரியுது? அத்தோட 2ஜி விஷயத்துலயும் சரி நிலக்கரி ஒதுக்கீடு விஷயத்துலயும் சரி அவர் சொல்றா மாதிரியெல்லாம் லட்சம் கோடி கணக்குல எல்லாம் நஷ்டம் வர்றதுக்கு சான்சே இல்ல கணேஷ். எனக்கென்னமோ அவருக்கு எதையுமே மிகைப்படுத்தி சொல்ற வியாதி இருக்குமோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. எங்க பேங்க்ல கூட இந்த மாதிரி இன்ஸ்பெக்டர்ங்கள பாத்துருக்கேன். பிராஞ்ச் இன்ஸ்பெக்‌ஷனுக்கு போனா ஒரு சின்ன மடுவையே பெரிய மலையா கற்பனை பண்ணிக்கிட்டு ஒரு பெரிய ரகளையே பண்ணிட்டு போயிருவாங்க. நம்ம CAG மாதிரியே அவங்க ரிப்போர்ட்ட எங்க HOவுக்கு அனுப்பறதுக்கு முன்னாலயே போன் மூலமா அக்கம்பக்கத்துலருக்கற எல்லா பிராஞ்சுக்கும் சொல்லி ஏதோ கோடி கணக்குல மோசடி நடந்துருக்கறா மாதிரி ஒரு பிரம்மைய ஏற்படுத்திருவாங்க. நிச்சயமா ஒரு CAGயோட வேலை அது இல்ல. அரசு இலாக்கா மற்றும் அலுவலகங்களை தணிக்கை செஞ்சி அதுல ஏதும் எல்லை மீறல்கள் இருந்தா அத மத்திய, மாநில அரசுகளோட கவனத்துக்கு கொண்டு வர்றது மட்டும்தான் அவங்க வேலை. அத வுட்டுட்டு பிரஸ்சுக்கு குடுக்கறேன் மீடியாவுக்கு குடுக்கறேன்னு சொல்றது, இத நாந்தான் கண்டுபுடிச்சேன், நாந்தான் கண்டுபுடிச்சேன்னு தம்பட்டம் அடிச்சிக்கிறது எல்லாம் அவரோட பதவிக்கு அழகே இல்லை. அதத்தான் அன்னைக்கி சேஷனும் செஞ்சார், ஏதோ இவர்தான் லோகத்தையே மாத்த வந்துருக்கற பரமாத்மா மாதிரி. இவர விட்ட இந்த நாட்ட அரசியல்வாதிகள்லருந்து காப்பத்த ஆளே இல்லேங்கறா மாதிரி ஆடுனவரு பதவியிலருந்து எறங்குனதும் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக யார், யார் கால்லல்லாம் விழுந்தாருன்னு ஒங்களுக்கு தெரியாதா கணேஷ்?  இதெல்லாம் ஒரு வேஷம் கணேஷ். உண்மைய வெளியில கொண்டு வரணும்கற வேகத்த விட தன்னை பெரிய சூரப்புலின்னு காமிச்சிக்கிற வேகம்தான் அதிகமா தெரியுது.

கணேஷ்: நீங்க என்ன சொன்னாலும்  நா ஒத்துக்க மாட்டேங்க. இந்த மாதிரி ஆளுங்க ஒன்னு ரெண்டு பேர் இருக்கணும் அப்பத்தான் எங்க ஊழல் நடந்தாலும் அது வெளியில வரும்.

ரஹீம்: ஜோசப் சொன்னத முழுசா புரிஞ்சிக்காம பேசாதய்யா. ஊழல் வெளியில வரட்டும். ஆனா அத நாந்தான் கண்டுபுடிச்சேன் சொல்லிக்கிட்டு இவர் சுயவிளம்பரம் செஞ்சிக்கிட்டு அலையறது சரியில்லன்னுதான் சொல்ல வர்றார். என்ன ஜோசப்.

ஜோசப்: கரெக்ட். 

கணேஷ். சரி பாய். ஆள வுடுங்க. இப்ப பரபரப்பா இருக்கற இன்னொரு விஷயம் இந்தியா-சீனா ரிலேஷன்ஷிப். பார்டர் விஷயம் ஒருவழியா முடியறதுக்குள்ளவே புது சீன பிரதமர் இந்தியா வர்றதும், அஞ்சாறு முக்கியமான அக்ரிமென்ட்ஸ் சைன் பண்றதும்.... இதெல்லாம் ஏதோ செட்டப் மாதிரி தெரியுதே ஜோசப்.

ரஹீம்: (எரிச்சலுடன்) ஏங்க, ஒங்களுக்கு எதையுமே நேரா பாக்க தெரியாதா? இந்தியாவும் பாக்கிஸ்தானும் சுமுகமா எதையாவது பேசி தீர்த்துக்கிட்டாலும் குத்தம் சொல்வீங்க. சரி, அது முஸ்லீம் நாடு. உங்களுக்கும் முஸ்லீம்கன்னால்ல புடிக்காது. அதனால சொல்றீங்கன்னு நினைக்கலாம். ஆனா சீனாவோட நாம பகையா இருக்கணுமா? 

ஜோசப்: பாய் சொல்றது சரிதான் கணேஷ். இந்த அக்ரிமென்ட்ஸ் எல்லாம் ஏற்கனவே மினிஸ்ட்ரி லெவல்ல டிஸ்கஸ் பண்ணி ப்ரிப்பேர் செஞ்சி வச்சிருப்பாங்கன்னுதான் நானும் நினைக்கேன். இதுக்கிடையில சீனாவுலயும் அதிகார மாற்றம் வந்துருச்சி. சரி அது முடியட்டும்னு பாத்தா அதுக்குள்ள நம்ம பார்டர தாண்டி வந்து காம்ப் அடிச்சி அத பேசி தீர்க்கறதுக்குள்ள இங்கருக்கற உங்க மாதிரி ஆளுங்க அவனெ அடிச்சி விரட்டாம அவன் கூட என்னைய்யா பேச்சுங்கறா மாதிரி எல்லாம் வீர வசனம் பேசினீங்க. ஒருவழியா யாரோட தலையீட்டாலயோ சீனா மனசு மாறி திரும்பி போய்ட்டாங்க. சரி இத இப்படியே விட்டுறக்கூடாதுன்னு நினைச்சித்தான் நம்ம ஃபாரின் அஃபைர்ஸ் மினிஸ்டர் சல்மான் அங்க போய்ட்டு வந்தாரு. ஒருவேளை அவரோட ட்ரிப்ல கூட இந்த அக்ரிமென்ட்ஸ பத்தி பேசி முடிவு செஞ்சிருக்கலாம். அதுக்கப்புறம் இப்ப சீன பிரதமரே வந்து இந்த ரீஜியன்ல இருக்கற நாம ரெண்டு பேரும் அடிச்சிக்காம சேர்ந்து வர்த்தகம் வியாபாரம்னு செஞ்சா ரெண்டு பேருக்குமே நல்லதுங்கறா மாதிரி பேசுனாரு. பென்டிங்ல இருந்த ஏழு அக்ரிமென்டையும் ஃபைனைலைஸ் பண்ணி கையெழுத்தும் போட்டுட்டாங்க. சீனா மாதிரி நிறைய கன்ஸ்யூமர்ஸ் இருக்கற மார்க்கெட்டுக்குள்ள நம்ம கம்பெனிங்கள ஈசியா விடறோம்னு சொல்றதே ஒரு நல்ல விஷயம்தானேங்க. இது ஏதோ டவுன்லருக்கற நம்ம பிஎம்மோட இமேஜ தூக்கிவிடற செட்டப்னு ஏன் நினைக்கறீங்க? நிச்சயமா அதுவா இருக்க சான்ஸே இல்ல. 

கணேஷ்: (சிரிக்கிறார்) என்னவோ சொல்றீங்க, என்னால நம்ப முடியலைங்க. ஏற்கனவே பார்லிமென்ட தொடர்ந்து நடத்த முடியாம திணறிக்கிட்டிருந்த காங்கிரசுக்கு ஒர் ப்ரீதர் கிடைச்சா மாதிரி இருக்கு சீன பிரதமரோட விசிட்டும் அவரோட நாம போட்ட அக்ரிமென்ட்சும்... பார்ப்போம் இது எத்தனை நாளைக்கின்னு....

ரஹீம்: அது சரி.. இவ்வளவு பேசறீங்களே.. சீன பிரதமர் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திச்சி பேசினார்னு சொல்றாங்களே... அது ஒங்க சுஷ்மா ஸ்வராஜ்தானேய்யா? அவர் மேலதான் ஒங்க கட்சிக்கு வெறுப்பாச்சே... அவர சந்திக்க முடியாதுன்னு சொல்லிற வேண்டியதுதானே... சேர்ல கூட சாஞ்சி ஒக்காராம ஒங்க லீடர் பயபக்தியோட சீன பிரதமர் கூட பேசினதத்தான் டிவியில காமிச்சானே... 

கணேஷ்: பாய், அதெல்லாம் ஒரு ரெஸ்பெக்ட்டுக்காக.. அதுக்காக அவர பாத்து பயந்துட்டாங்கன்னு சொல்ல முடியுமா?

ரஹீம்: (கேலியுடன்) கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைங்கற மாதிரிதான் இருக்கு நீங்க சொல்றது.

ஜோசப்: (சிரிக்கிறார்) சரி வுடுங்க பாய். இந்தோ சீனா வார் (war) போல இருக்கு நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கறது.

ரஹீம்: எனக்கு ஒரு சந்தேகம் ஜோசப்.

ஜோசப்: சொல்லுங்க

ரஹீம்: நம்ம சட்டசபைல மேடம் அடிக்கடி, ஏன் டெய்லின்னு கூட சொல்லலாம், விதி 110ன் கீழ்னு சொல்லி ஒரு அயுறிக்கை விடறாங்களே அப்படீன்னா என்ன? என்ன அந்த விதி 110?

ஜோசப்: தமிழக சட்டசைபியில யார், யாருக்கு என்ன அதிகாரம் இருக்கு, கூட்டத்தை எப்படி நடத்தறது, சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், எப்படி கூட்டத்துல நடந்துக்கணும்னுல்லாம்  தமிழக சட்டமன்ற விதிமுறைகள்ல எழுதி வச்சிருக்காங்க. அதுலருக்கற விதி எண் 110ல சொல்லியிருக்கறது என்னன்னா நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படக்கூடிய முக்கியமான அறிக்கைகளை இந்த விதியின்படி படிக்கறப்போ அத  மன்றத்துல இருக்கற யாருக்கும் எதிர்த்து பேசவோ விவாதிக்கணும்னு கேக்கவோ அதிகாரம் இல்லை. அதாவது உதாரணத்திற்கு சட்டசபையில பிற்படுத்தப்பட்டோர்களுக்கு வீட்டு மனை பட்டா இலவசமாக வழங்கப்படும்னு ஒரு அறிக்கைய இந்த விதிக்கு கீழ் இல்லாம ஒரு அமைச்சரோ இல்ல முதலமைச்சரோ வாசிக்கிறாங்கன்னு வச்சிக்குவோம். உடனே எதிர்க்கட்சி அணியிலருந்து யாராவது எழுந்து அதெப்படி, அவங்கள்ல கூட மிகவும் ஏழை எளியவங்களுக்குத்தான் அதுல கூட ஏற்கனவே சொந்த வீடு இல்லாதவங்களுக்குத்தான் கொடுக்கணும்னு பேசலாம். ஆனா அதுவே விதி எண் 110 படி வாசிச்சா வாய மூடிக்கிட்டு உக்காந்திருக்க வேண்டியதுதான். 

ரஹீம்: ஓ! அதான் சங்கதியா? அதாவது நான் வச்சதுதான் சட்டம்னு சொல்லாம சொல்றா மாதிரின்னு சொல்லுங்க.

ஜோசப்: (சிரிக்கிறார்) அப்படியும் வச்சிக்கலாம். ஆனா ஒரு கூட்டத் தொடர்ல ஒன்னு ரெண்டு அறிக்கைகள் இந்த மாதிரி வந்தா பரவாயில்லை. ஆனா ஏறக்குறைய தினமும் இப்படியொரு அறிக்கை வர்றதுன்னா அது எந்த வகையில நியாயம்னுதான் மு.கவும் ஸ்டாலினும் கேட்டாங்க.

கணேஷ்: அது மட்டுமில்லீங்க. மேடம் இதுவரைக்கும் அறிவிச்சிருக்கற திட்டங்களோட மதிப்பீடே ஏறக்குறையை தமிழக பட்ஜெட்ல அறிவிச்ச திட்டங்களோட மதிப்பீடு அளவுக்கு இருக்கும் போலருக்கே, இதுக்கெல்லாம் பட்ஜெட்ல நிதி ஏதும் ஒதுக்கலையேங்கற மாதிரியும் ஸ்டாலின் கேட்டுருக்காரே கவனிச்சீங்களா?

ஜோசப்: ஆமா, அதுவும் ஒருவகையில சரிதான். அதோட கூட மினிஸ்ட்ரியில இருக்கற எல்லா இலாக்கா சம்பந்தப்பட்ட திட்ட அறிக்கைகளையும் முதலமைச்சரே இந்த விதி கீழ படிக்கறதாருந்தா ஒவ்வொரு இலாக்காவுக்கும் எதுக்கு தனியா அமைச்சர்னும் கேட்டார் பாத்தீங்களா?

ரஹீம்: ஆமா ஜோசப். நானும் கவனிச்சேன். முன்னாலெல்லாம் இப்படி நாம கேட்டதேயில்லையேன்னுதான் எனக்கும் தோனிச்சி அதான் ஒங்கள கேட்டேன். 

ஜோசப்: கலைஞர் இத பத்தி கேக்கறதுக்கு முன்னாலயே நான் கூகுள் சேர்ச்ல போயி இந்த விதி என்ன சொல்லுதுன்னு பாத்து வச்சிருந்தேன். போன வாரமே இதப்பத்தி பேசனும்னு நினைச்சிக்கிட்டு வந்தேன் மறந்துபோயிருச்சி. அத சுருக்கமா ஆங்கிலத்திலேயே சொல்றேன், கேளுங்க.

TNSA Rule:110. (1) A statement may be made by a Minister on a matter of public importance with the consent of the Speaker.
(2) There shall be no debate on such statement at the time it is made.
(3) A Minister desiring to make a statement under sub-rule (1) shall intimate in advance the date on which the statement is proposed to be made and also send a copy of the statement in advance to the Secretary for being placed before the Speaker.

கணேஷ்: ரொம்ப க்ளியராத்தான் சொல்லியிருக்காங்க. ஆனா இந்த மாதிரி டெய்லி ஒரு திட்டம்னு அறிக்கை வற்றதுக்கெல்லாம் காரணம் இன்னைக்கி வரும், நாளைக்கி வரும்னு எதிர்பார்த்துக்கிட்டிருக்கற பார்லி எலக்‌ஷன்தான்னு நினைக்கேன், என்ன சொல்றீங்க?

ரஹீம்: இருக்கும், யார் கண்டா? ஆனா ஒன்னு. இந்த அம்மா கேன்டீன் சொல்லிட்டு தமிழ்நாடு முழுசும் திறக்கறாங்களே அது நல்ல விஷயம்தான். 

கணேஷ்: கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆரம்பத்துல இருக்கற வேகம் போகப் போக இருக்குமான்னுதான் பாக்கணும்.

ரஹீம்; எதுக்கு அப்படி சொல்றீங்க? கெட்டத கெட்டதுன்னு சொல்றா மாதிரி நல்லதையும் நல்லதுன்னு சொல்ற மனசு வேணும்யா. அதா ஒங்க கட்சிகாரங்களுக்கு கிடையவே கிடையாதே.

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், சும்மா எதையாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதீங்க. எங்களுக்கும் பாராட்ட தெரியும். இன்னும் ஒரு வருசத்துக்கு இதே வேகத்துல நடத்தட்டும் அப்புறம் பாராட்டறோம். 

ஜோசப்: சரி விடுங்க கணேஷ். நீங்க என்னதான் சொன்னாலும் இது ஒரு நல்ல ஐடியாதான். ஆனா நீங்க சொல்றா மாதிரி இடையில நின்னு போயிறாம தொடர்ந்து சக்சஸ்ஃபுல்லா செஞ்சாங்கன்னா நல்லது. சரி அடுத்த வாரம் பாக்கலாம்.

**********








16 மே 2013

தமிழ் இனி மெல்ல சாகத்தான் வேணும்!



நடப்பு கல்வியாண்டில் மேலும் சில அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை   அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளோம் என்று தமிழக கல்வியமைச்சர் அறிவித்ததிலிருந்து இதை சார்ந்தும் எதிர்த்தும் எழுதாத பத்திரிகைகளே இல்லை எனலாம். முகநூல் மற்றும் வலைப்பூக்களிலும் இதை பலரும் தங்கள் மனம் போனபோக்கில் கிழித்தெறிந்துள்ளனர்.

இன்றைய தீப்பொறி பேச்சாளர் வை.கோ அவர்களும் 'தமிழினி மெல்லச் சாகும் மேலை மொழிகள் இனி இங்கு வாழும்' என கவித்துமாக கிண்டலடித்துள்ளார். அவருக்கே உச்ச நீதிமன்றத்திலும் அனைத்திந்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முன்பும் வாதாட அவருடைய ஆங்கில புலமைதான் கைகொடுக்கிறது என்பதை அவர் மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

கலைஞரும் தாய் மொழியில் பயில்வதைப் போன்றதொரு இன்பம் வேறில்லை என்று கவிதை நயத்துடன் அரசின் இந்த முடிவை எதிர்த்துள்ளார். அவருடைய பேரக் குழந்தைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயின்றனர் என்ற விவரத்தையும் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

இதைப்பற்றி நேற்றைய முகநூலில் நண்பர் மருத்துவர் புரூனோவும் செல்வா என்ற வினையூக்கியும் இதைப் பற்றியதான விவாதத்தை முன்னின்று நடத்தினர். அதில் என்னையும் கருத்து கூறுமாறு அழைக்க நான் துவக்கத்திலேயே என்னுடைய கருத்து இங்கு தெரிவித்துள்ள பலருடைய கருத்துக்கும் எதிராக இருக்குமோ என்ற அச்சத்துடனேயே எழுதுகிறேன் என்று கூறிவிட்டுத்தான் என் மனதில் அப்போது பட்ட சிலவற்றை எழுதினேன். ஆனால் அதைத் தொடர்ந்து வந்த பல கருத்துக்களையும் படித்தபோது ஏன் என்னுடைய கருத்துக்களை ஒரு தனிப் பதிவாகவே எழுதக்கூடாது என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.

இதில் முன்வைக்கப்படும் வாதங்கள் இரண்டு:

1. தாய்மொழியில் பயில்வதைப் போல் எளிதானது வேறில்லை அல்லது வாழ்க்கையில் வெற்றியடைய ஆங்கில வழி கல்வி தேவையில்லை என்பன போன்ற வாதங்கள்.

2. வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா என்பது போன்ற வாதங்கள்.

இவற்றை தனித்தனியாக விவாதிப்போம்.

முதலிலேயே கூறிவிடுகிறேன். நானும் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றவன்தான். கத்தோலிக்க குருமார்களால் நடத்தப்பட்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் (Govt aided
private school). ஒன்பதாம் வகுப்பிலிருந்து என் தாய் மாமனின் தூண்டுதலின்பேரில் (வற்புறுத்தலால் என்றும் கூறலாம்) ஆங்கில வழி கல்வி. நானோ அல்லது என்னுடன் தமிழ்வழி கல்வியில் படித்த என்னுடைய சக மாணவர்களோ வாழ்க்கையில் சோடை போய்விடவில்லை என்பதும் உண்மை. இது அந்தக் காலம். அதை விட்டுவிடுவோம்.

இது சம்பந்தமாக என்னுடைய முப்பதாண்டு அலுவலக அனுபவத்தில் நான் கற்றதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரியின் முதல்வராகஅமர்த்தப்பட்டபோது அதை என்னுடைய வங்கியில் பலரும் மறைமுகமாக எதிர்த்தனர். ஏனெனில் பயிற்சிக் கல்லூரியில் வகுப்புகளை நடத்துபவர்களாக (faculty member)தெரிவு செய்யப்படுவதற்கே குறைந்தபட்ச தகுதி முதுகலை பட்டம். ஆனால் நான் வெறும் இளநிலை பட்டதாரிதான். ஆனால் முதுகலைப் பட்டதாரி வகுப்பாளர்களை விடவும் ஆங்கிலத்தில் மிகச் சரளமாக பேசவும், எழுதவும், சொற்பொழிவாற்றவும் கூடிய திறன் என்னுள் இருந்ததை அறிந்த என்னுடைய வங்கி தலைவர் இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் என்னை அதில் அமர்த்தினார். 'இவன வேற எங்கவும் போடமுடியாதுன்னுதான் இங்க கொண்டு போட்டுட்டாங்க' என்று கேலி செய்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அதாவது கல்லூரி முதல்வராக தேவையான அடிப்படை கல்வித் தகுதி எனக்கு இல்லாதிருந்தும் எனக்கு அந்த பதவியை பெற்றுத் தந்தது என்னுடைய ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.

அங்கு நான் பணியாற்றிய மூன்று வருடங்களும் பல மறக்க முடியாத அனுபவங்களை தந்தது என்றுதான் கூற வேண்டும். அங்குதான் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்று வெளிவரும் மாணவர்கள் திறமை இருந்தும் அதை பிறருக்கு வெளிப்படுத்த முடியாமல் தங்களுக்குள்ளேயே எந்த அளவுக்கு புழுங்குகிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டேன். எனக்கு கீழே வகுப்பாளர்களாக (faculty members என்னும் வார்த்தைக்கு நிகரான தமிழ்
வார்த்தையை கண்டுபிடிக்கவே பல மணித்துளிகள் எனக்கு தேவைப் பட்டது. பயிற்சியாளர் என்றால் trainer என்றுதான் வருகிறது!)  பணியாற்றிய ஒருவர் முதுகலை பட்டதாரி என்பது மட்டுமல்ல அவர் பயின்ற யூனிவர்சிட்டியில்
முதலாக வந்தவர். தங்க பதக்கங்களுக்கு சொந்தமானவர். ஆனால் ஆங்கிலத்தில் சுத்தமாக பேச முடியாமல் தவிப்பார். அவர் வகுப்புகள் முழுவதுமே மலையாளத்தில்தான். கேட்டால் 'நா எடுக்கற பாடம் வகுப்புல இருக்கறவங்களுக்கு புரியுதாங்கறதுதான் முக்கியம்.' என்பார். ஆனால் என்னுடைய வகுப்புகள் முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதற்கு இன்னுமொரு காரணம் எனக்கு பேச்சுவழி (conversational) மலையாளம்தான் தெரியும். நீங்கள் ஆங்கிலத்தில் வேகமாக பேசுகிறீர்கள் எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று புகார்கள் வந்தபோது நான்
வகுப்பில் கூறுவதை அப்படியே பேச்சுவழி ஆங்கிலத்தில் பிரின்ட் செய்து வகுப்பு துவங்குவதற்கு முன்பே வகுப்பிலுள்ள அனைவருக்கும் (participant என்பதற்கு என்ன தமிழில், பங்குகொள்பவரா?) வினியோகிக்க துவங்கினேன்.

என்னுடைய மூன்றாண்டு கல்லூரி அனுபவத்தில் அதன் பிறகு என்னுடைய வகுப்புகளைக் குறித்து எவ்வித புகாரும் வந்ததில்லை. அத்துடன் பயிற்சிக்கு வரும் ஒவ்வொரு ஊழியரும் ஐந்து நிமிடம் தங்களுடைய அனுபவங்களைப் பற்றி ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஒரு நியதியை அறிமுகப் படுத்தினேன். அதில் பலருக்கும் துவக்கத்தில் விருப்பமில்லை. ஆனால் நாளடைவில் அதையும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு முதலில் எழுதிக்கொண்டு வந்து வாசிப்பது பிறகு தட்டுத்தடுமாறி தப்பும் தவறுமாக பேசுவது என்று துவங்கி இறுதியில் தன்னம்பிக்கையோடு  சரளமாக பேசிய பலரையும் கண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து என்னுடைய வகுப்புகளில் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்தினேன். அதையும் துவக்கத்தில் எதிர்த்து பிறகு பழகிப்போனார்கள்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் தாய்மொழிக் கல்வியை பள்ளி, கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அலுவலகங்களில் தங்களுடைய திறனை பிறருக்கு காட்ட (to expose) கொள்ள தாய்மொழி மட்டுமே போறாது என்பது தான் உண்மை. இருபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் எழுபத்தைந்து விழுக்காடு பேச்சுத்திறனும் உள்ள சிலர் அதிகார ஏணியில் மளமளவென்று ஏறிச் சென்றுவிடுவதைக் கண்டு எழுபத்தைந்து விழுக்காடு செயல்திறனும் இருபத்தைந்து விழுக்காடு ஆங்கில பேச்சுத் திறனும் உள்ள பலர் அதை கண்டு மனம் புழுங்குவது அனைத்து அலுவலகங்களிலும் காணக்கூடிய ஒன்று.

என்னுடைய இன்னுமொரு அனுபவம்.

நான் அடுத்ததாக பொறுப்பேற்றுக்கொண்டது எங்கள் வங்கியுடைய கணினி மையம். அதை விரிவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய வங்கி தலைவருக்கு எழுந்தபோது அதற்கென அனுபவமுள்ள கணினி பொறியாளர்களை பணிக்கு அமர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி மென்பொருளாக்கத்தில் (software development) இரண்டுமுதல் நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்ற நாற்பது கணினி மென்பொருள் பொறியாளர்களையும் அவர்களை தலைமையேற்று வழிநடத்த அதே துறையில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ள ஒருவரையும் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கு வந்த பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களிலிருந்து பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு எங்களுக்கு தேவையான பொறியாளர்களை பணிக்கு அமர்த்தினோம். இவர்களை தேர்வு செய்யும் முயற்சியில் எனக்கு எவ்வித பங்கும் இருக்கவில்லை என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

இவர்களுள் கொச்சி, திருவனந்தபுரம் போன்ற நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் பயின்று வந்த மாணவர்களுள் சிலர் மிகச் சரளமாகவும் வேறு சிலர் சுமாரான ஆங்கிலத்திலும் பேசும் திறனைப் பெற்றிருந்தனர். திருச்சூர்,கொல்லம் போன்ற கிராம அல்லது நடுத்தர நகர்ப்புறங்களில் பயின்ற மாணவர்கள் ஏறத்தாழ அனைவருமே மலையாளத்தில் மட்டுமே பேசக் கூடியவர்களாக இருந்தனர். அதில் சிலருக்கு ஆங்கிலத்தில் சுமாராகக் கூட எழுதவும் தெரிந்திருக்கவில்லை என்பதும் உண்மை. ஆனால் ஒரு மென்பொருளாளருக்கு தேவையான கணினி மொழிகள் (C, C+, Java, Vb) பலவற்றில் தேர்ச்சியும் அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அர்களை தலைமையேற்று நடத்த வேண்டிய தலைவருக்கோ ஒரு மென்பொரு-ளாளருக்கு தேவையான எந்த தகுதியும் இருக்கவில்லை.அவருக்கு ஒரு கணினி இணைப்பாளராக (Networking) மட்டுமே பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறனால்  கவரப்பட்டு ஒரு மென்பொருளாளர் குழுவை தலைமையேற்று நடத்த அனுபவமில்லாதிருந்தும் தெரிவு செய்யப்பட்டார். அதாவது நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போலவே ஒரு மென்பொருள் பொறியாளர்குழுவிற்கு தலைவராக பணியாற்ற தேவையான அடிப்படை தகுதி இல்லாதிருந்தும் அவருடைய மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறனே அவருக்கு இந்த பதவியை பெற்றுத் தந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குழுவில் இருந்த பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு மலையாளம் மட்டுமே தெரியும். ஆனால் அவர்களை வழிநடத்த வேண்டிய தலைவருக்கு மலையாளம் தாய் மொழி இல்லை. இவர் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் மலையாளத்தில் பேசுவார்கள். இவருக்கு அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு புரிந்ததோ. பலமுறை இங்கு ஏன் வந்தோம்னு தெரியல சார் என்று என்னிடம் வந்து புலம்புவார். ஏனெனில் அவர் முன்பு பணியாற்றிய நிறுவனம் இந்தியாவின் முதல்தரநிறுவனங்களுள் ஒன்று. அங்கு வட இந்தியர்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று வந்தவர். இவரைத் தவிர அந்த குழுவில் இருந்த  பலர் மிகச் சிறிய நிறுவனங்களில் ரூ.5000/-த்திற்கும் குறைவாகவே ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இவர்களுள் பலரும் தங்களுடைய துறையில் பிரகாசிக்க திறனும் இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரை அனுபவமும் இருந்தும் சிறிய நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியத்தில் பத்து மணி நேரத்திற்கும் கூடுதலாக சிரமப்பட்டுக் கொண்டிருக்க மிக முக்கிய காரணமாக நான் கண்டது அவர்களுடைய ஆங்கில பேச்சு திறன் இன்மையே. வேறு சிலருக்கு  கேரளத்தில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம். இதற்கும் தாய்மொழியை தவிர்த்து வேறெந்த மொழிகளிலும் பேச இயலாமையே மிக முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால் எங்கள் வங்கிக்கு தேவையான மென்பொருளை தனியாக உருவாக்கும் திறன் இந்த குழுவினருக்கு இல்லை என்பது இரண்டு மூன்று மாதங்கள் கழித்துத்தான் தெரிந்தது. ஆகவே  வங்கி மென்பொருள் துறையில் அனுபவம் மிக்க ஒரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது என்று முடிவெடுத்தோம். அதற்கென விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களுள் சென்னையைச் சார்ந்த ஒரு நிறுவனத்தை தெரிவு செய்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வங்கியின் மென்பொருளாளர்கள் குழுவும் சென்னையில் இருப்பதுதான் உசிதம் என கருதி இதற்கென பிரத்தியேகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட எங்களுடைய மென்பொருள் குழுவும் சென்னைக்கு மாற்றப்பட்டது. குழுவின் தலைவருக்கு நிம்மதி. ஏனெனில் அவர் சென்னையைச் சார்ந்தவர். மேலும் எங்களுடைய வங்கியிலிருந்து வெளியேறுவதென தீர்மானித்துவிட்டிருந்த அவருக்கு சென்னைதான் அதற்கு ஏற்ற இடம் என்பதால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

சென்னைக்கு மாற்றலாகி வந்த இரண்டே மாதங்களில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலையை தேடிக்கொண்டு சென்றுவிட்டார். ஓர் ஆண்டு முடிவதற்குள் அங்கிருந்து இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனம் எனக் கருதப்படும் Infosysல் வேலை கிடைத்து இப்போது சகல வசதிகளுடன் USல் இருக்கிறார். எங்களுடைய வங்கியின் மென்பொருள் குழுவின் தலைவராக ஆறு மாதங்கள் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் அவருக்கு உதவியிருந்தாலும் அவருடைய வானத்தையே வில்லாக வளைப்பேன்  என்பது போன்ற பேச்சுத் திறந்தான் இதற்கு முக்கிய காரணம் என்பேன். அவரைத் தொடர்ந்து அந்த குழுவில் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறன் கொண்டவர்களும் அவர்களைத் தொடர்ந்து சுமாராக பேசும் திறன் கொண்டவர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். சென்னை மாற்றத்தை முதலில் எதிர்த்த பலருக்கும் அதுவே
ஒரு blessing in disguise ஆக மாறியது. இன்று அவர்களுள் பலர் TCS, WIPRO போன்ற இந்திய-பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.

அந்த குழுவில் ஆங்கிலத்தில் பேச வராத சுமார் பதினைந்து பேர் இன்றும் சென்னையிலுள்ள எங்கள் வங்கி கணினி இலாக்காவில் பணியாற்றுகின்றனர். சொல்லப் போனால் தெரிவு செய்யப்பட்ட குழுவினரில் மென்பொருள் துறையில் நல்ல திறன் படைத்தவர்கள் இவர்கள்தான். இவர்களும் வெளியேறினால் வங்கியின் கணினி மையமே ஸ்தம்பித்துவிடும் என்று கூறக் கூடிய அளவுக்கு திறன் படைத்தவர்கள். இவர்களுக்குள்ள மென்பொருள் திறனும்  வங்கி துறையில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவமும் இப்போது அவர்கள் பெறும் ஊதியத்தை விட இரு மடங்குக்கும் கூடுதலாக பெற்றுத்தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனாலும் வேறு வழியின்றி சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பதே மேல் என்று சால்ஜாப்பு கூறிக்கொண்டு.....

என்னுடைய அனுபவத்தில் நான் கற்றறிந்தது இதுதான். எனக்கு எல்லா திறமையும் இருந்தாலும் என்னை நானே மற்றவர்களுக்கு விற்றால்தான் அதன் முழுப் பயனையும் நான் அடைய முடியும். ஒரு பொருளை விற்பதற்கு அதன் அனைத்து நற்குணங்களையும் பிறருக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் எடுத்துரைக்கும் திறன் வேண்டும். அதற்கு தாய் மொழி மட்டுமே போதாது. ஆக, நான் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றறிந்தவற்றை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தி என்னுடைய வாழ்க்கையில் சகல வசதிகளுடனும் வாழவேண்டுமென்றால் எனக்கு ஆங்கிலம் நிச்சயம் தேவை. என்னுடைய ஆங்கில திறன் அதிகரிக்க நான் சிறு வயது முதலே ஆங்கிலத்திலேயே பேச, எழுத மட்டுமல்லாமல் சிந்திக்கவும் பயிற்சி தேவை. இதை முதல் வகுப்பிலிருந்தே ஆங்கில வழி கல்வி இருந்தால் மட்டுமே அளிக்க முடியும். இதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இல்லை.

2.வசதி படைத்தோருக்கு மட்டும் ஆங்கில வழி கல்வியா?

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் ஏன்?

அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒரு பிரிவு (section) சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் இயங்கி வந்த அரசு பள்ளிகளில்  ஏறத்தாழ இருபதாண்டுகளாகவே இருக்கத்தான் செய்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி பயில வசதியில்லாத நடுத்தர மக்கள் பலருடைய குழந்தைகள் இந்த பிரிவின் மூலம் ஆங்கிலத்தில் பயிலும் பயனை ஓரளவுக்கு பெற்று வந்துள்ளனர். ஏன் ஓரளவுக்கு என்று கூறுகிறேன் என்றால் இந்த பிரிவுகளிலும் பாடங்கள் அனைத்துமே தமிழில்தான் போதிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த பிரிவுகளில் பயின்ற மாணவர்களால் ஆங்கிலத்தில் சரளமாக எழுத, படிக்க மட்டுமே  முடிந்ததே தவிர சரளமாக பேசுவது என்பது நிறைவேறாத கனவாகவே இருந்து வந்தது.

ஆகவே பொருளாதாரத்தில் நடுத்தரத்திற்கும் சற்று கீழிருக்கும் பெற்றோர்கள் கூட தற்போது அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதை கண்கூடாக கண்டபிறகுதான் அரசு நகர்ப்புற மற்றும் கிராமங்களில் இயங்கிவரும் அரசு பள்ளிகளிலும் இத்தகைய பிரிவுகளை அறிமுகப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது. கிராமத்திலுள்ள குப்பனும் சுப்பனும் அறிவாற்றலை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே சமச்சீர் கல்வியை எதிர்க்கின்றனர் என்று கூப்பாடு போட்ட சுயநலம் பிடித்த அரசியல் தலைவர்கள் அதே குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடைக்கவிருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தடுத்த நிறுத்த மீண்டும் கூப்பாடு போட துவங்கியுள்ளனர். அவர்களுக்கு கூப்பாடு போடுவதேதான் அனுதின அலுவல். அவர்களை விட்டுவிடுவோம்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் எழுதும் இன்றைய படித்த தலைமுறையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் வேடிக்கை.

அவர்களுடைய வாதம் வசதி படைத்தவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி அது இல்லாதவனுக்கு தமிழ் வழி கல்வியா?

வசதி படைத்தவனுக்குத்தான் வசதியான வாழ்க்கை என்பது நடைமுறை நிதர்சனம்! வசதி படைத்தவனால்தான் மாதம் இருபதாயிரம் வரை வாடகை கொடுத்து சொகுசு குடியிருப்புகளில் வசிக்க முடியும், குளிர்சாதன வாகனங்களில் பயணிக்க முடியும், பல ஆயிரங்கள் செலவழித்து மருத்துவம் பார்த்துக்கொள்ள முடியும், பகட்டான ஆடை அணிகலங்களைஅணிந்து வலம் வர முடியும் ஏன் பிட்சா சாப்பிட முடியும் காஃபி ஹவுஸ் சென்று வர முடியும், இன்டர்நெட் சாட் செய்ய முடியும்... இவ்வளவு ஏன், உங்களை போல் முகநூல் கணக்கு வைத்துக்கொண்டு அலுவலக நேரத்தில்காரசாரமாக இணைய தளங்களில் விவாதிக்க முடியும். எந்த சுப்பன் குப்பனால் இது முடியும்?

வசதிகள் இல்லை என்பது ஒரு விசித்திர வாதம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு vicious cycle! அடிப்படை வசதிகளான தரமான கல்வியை ஆரம்ப காலத்திலிருந்தே அனைவருக்கும் வழங்கியிருந்தால் அனைவருக்கும் வசதியான வாழ்க்கை அமைந்திருக்கும். இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் அதை செய்யவில்லை. அதை இப்போதிலிருந்தாவது படிப்படியாக செய்ய வேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கருதுவதில் என்ன தவறு?

தமிழகத்தில் மட்டுமே பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மையுள்ளோர் தமிழிலேயே தொடர்ந்து படிக்கட்டும். அவர்களுக்கு  அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கட்டும். தமிழ்நாட்டு தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளும் தமிழில் மட்டுமே நடத்தப்படட்டும். ஏன் அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐஏஸ் போன்ற தேர்வுகளுமே தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுங்கள். அதனால் தமிழ் மொழி செழித்து வளரும்!!

தமிழன் தமிழகத்தில் மட்டுமே தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் கரைத்துவிடாமல் பாரெங்கும் போய் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் தமிழைக் கட்டிக்கொண்டு சாகாமல் இருப்போம்.

அதனால் தமிழ் மொழி இனி மெல்ல, மெல்ல சாகத்தான் போகிறது என்றால் சாகட்டுமே? வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பளிக்காத ஒரு மொழி வெறும் மொழியாக இருந்துவிட்டு போகட்டும், தவறில்லை.

*********






10 மே 2013

மருத்துவர் மீது அம்மாவுக்கு அப்படி என்ன கோபம்?


கணேஷ்: என்ன ஜோசப், இந்த வாரம் டிஸ்கஸ் பண்றதுக்கு நிறைய விஷயம் இருக்கு போலருக்கு?

ஜோசப்: ஆமா கணேஷ். மேல நார்த்லருந்து கீழ தமிழ்நாடு வரைக்கும் ஒரே பிரச்சினையால்ல இருக்கு! இப்படியொரு இக்கட்டான நிலைமையில எந்த சென்ட்ரல் கவர்ன்மென்ட்டும் மாட்டிக்கிட்டு முழிச்சதுல்லன்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க பாய்?

ரஹீம்: (சலிப்புடன்) ஆமா ஜோசப். பேப்பர தொறந்தாலே ஏன்டா தொறந்தோம்னு இருக்கு.

கணேஷ்: முதல்ல இந்த காஷ்மீர் ஜெயில்ல பாக்கிஸ்தான் கைதி ஒருத்தர அடிச்சி கொன்னுட்டாங்களே அதப் பத்தி பேசுவோம். இது ஏதோ பழிக்குப் பழிங்கறா மாதிரில்ல இருக்கு? 

ரஹீம்: இதெல்லாம் திட்டம் போட்டு பண்றாங்கய்யா. அதான் நா போன வாரமே சொன்னேனே? ரெண்டு நாடும் சமாதானமா இருக்கறத புடிக்காத யாரோதான் இந்த மாதிரி செய்யிறாங்க.

ஜோசப்: அப்படியெல்லாம் சொல்லிற முடியாது பாய். இது ஒரு சாதாரண ஹ்யூமன் ரியாக்‌ஷன்னுதான் நா சொல்லுவேன். அங்க அடிபட்டு இறந்துபோனவர் நம்ம நாட்டுக்காரர். அவரோட சாவுக்கு  பழிவாங்கனும்னு இங்க இருக்கறவங்க நினைக்கறதுல என்ன தப்பு? அதுவும் ஜெயில்ல இருக்கறவங்களோட மனநிலை இப்படித்தான் இருக்கும் பாய். இதுல சம்மந்தப்பட்டிருக்கற கைதி ஒருத்தரோட தன்னிச்சையான செயல்னுதான் சொல்லணும். ஆனா இப்படியொரு சம்பவம் பாக்கிஸ்தான் ஜெயில்ல நடந்துருக்கறப்ப இங்க நம்ம நாட்டு ஜெயில்ல இருக்கற பாக்கிஸ்தான் கைதிகளுக்கு இந்த மாதிரி ஏடாகூடமா நடக்கறதுக்கு சான்ஸ் இருக்குன்னு சம்மந்தப்பட்ட ஜெயில் அதிகாரிங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். அவங்களோட அஜாக்கிரதையும் இதுக்கு ஒரு காரணம்னு சொல்லலாம். மத்தபடி இதுல வேற எந்த காரணத்தையும் என்னால பாக்க முடியல.

கணேஷ்: நீங்க சொல்றதுதான் சரின்னு நானும் நினைக்கறேன். இனிமேலயும் இந்த மாதிரி இன்சிடென்ஸ் நடக்காம ரெண்டு நாட்டு அதிகாரிங்களும் உஷாரா இருந்தா சரி.

ஜோசப்: பாக்கிஸ்தான்ல நடக்கற எலெக்‌ஷன் ட்ரென்ட் எப்படி இருக்கு பாய்? ஏதாச்சும் ஒங்களுக்கு தெரியுதா? 

ரஹீம்: (சிரிக்கிறார்) என்ன ஜோசப் நீங்களுமா? கணேஷ்தான் என்னெ பாக்கிஸ்தான்காரர்னு நினைச்சிக்கிட்டு இருக்கார்னு நினைச்சேன். 

ஜோசப்: இல்ல... சும்மா ஒரு கேலிக்கித்தான் கேட்டேன். சரி சீரியசா கேக்கறேன். அங்க யார் ஜெயிப்பான்னு நினைக்கறீங்க?

ரஹீம்: ஒன்னும் ஷுவரா சொல்ல முடியல. முஷராஃப் நாமினேஷன ரிஜெக்ட் பண்ணிருவாங்கன்னு யார் எதிர்பார்த்தா? 

கணேஷ்: இதுக்கிடையில் இம்ரான்கான் ஸ்டேஜ்லருந்து கீழ விழுந்து சீரியாசா இருக்கார்னு சொன்னாங்க. அப்புறம் அவர் ஹாஸ்ப்பிடல் பெட்லருந்தே கேன்வாஸ் பண்றார். இதெல்லாம் சிம்பதி க்ரியேட் பண்றதுக்காக அடிக்கற ஸ்டன்டாருக்குமோ?

ரஹீம்: யோவ்.. சும்மா ஏதாச்சும் சொல்லணுமேன்னு சொல்லாதய்யா. அதான் நேரடியா அவர் கீழ விழறதையே டிவியில காட்டுனானே. அத பாத்தா ஸ்டன்ட் மாதிரியா இருக்கு?

கணேஷ்: (சிரிக்கிறார்) எதுக்கு பாய் ஒங்களுக்கு இவ்வளவு கோவம் வருது? நீங்கதான் அந்த நாட்டுக்காரர் இல்லையே?

ஜோசப்: (குறுக்கிட்டு) சரி, சரி. இது போறாதுன்னு இப்போ நவாப் ஷெரீஃப் வேற புதுசா ஒரு அறிக்கை விட்டுருக்காரே பாத்தீங்களா?

கணேஷ்: ஆமா பாத்தேன். அதுவும் ஒரு ஸ்டன்ட்தான். என்னவோ இவர் இந்தியா மேல ரொம்ப பாசமா இருக்காராம். இது எதுக்கு தெரியுமா?

ரஹீம்: (எரிச்சலுடன்) அதையும் நீங்களே சொல்லுங்க. நீங்கதான் பாக்கிஸ்தான் எக்ஸ்பேர்ட்டாச்சே.

கணேஷ்: (சிரிக்கிறார்) கோவப்படாதீங்க பாய். எல்லாமே ஒரு பேச்சுக்குத்தான? நா என்ன சொல்ல வர்றேன்னா, பாக்கிஸ்தான்ல இருக்கற சாதாரண ஜனங்களுக்கு இன்டியன்ஸ் மேல எந்த வித வெறுப்போ கோபமோ இல்ல. அவங்களுக்கு இந்தியாவோட நட்பா இருக்கணும்னுதான் ஆசை. இத இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா அங்கருக்கற பொலிட்டிக்கல் லீடர்ஸ் புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்காங்கன்னு நினைக்கறேன். அதான் நவாப் ஷெரீஃப் அவங்கள கவர் பண்றதுக்காக இப்படியொரு அறிக்கைய வெளியிட்டிருக்கார். அதாவது நா ஜெயிச்சி வந்தா இந்தியாவோட சமாதானமா இருப்பேன், அதனால உள்நாட்டுல இனி எந்த வித பெரிய தீவிரவாத கலவரமும் இல்லாம பீஸ்ஃபுல்லா இருக்கும்னு சொல்றார். ஆனா அது தாலிபான் மாதிரி தீவிரவாதிகள் கும்பல்கள உசுப்பேத்தி விடவும் சான்ஸ் இருக்குங்கறத அவர் மறந்துட்டார் போலருக்கு. 

ஜோசப்: அது மட்டுமில்ல இந்த மாதிரி சமரசங்களுக்கு அங்க இருக்கற ஆர்மி தயாரா இருக்கான்னு தெரியலையே. சரி பாய். இப்ப சொல்லுங்க அங்க எந்த கட்சி ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்குன்னு நீங்க நினைக்கறீங்க?

ரஹீம்: இதுவரைக்கும் நடந்த எலெக்‌ஷன்ல எல்லாம் இப்ப ஆட்சியிலருக்கற பாக்கிஸ்தான் மக்கள் கட்சி, போன தடவ ஆட்சியிலிருந்த நவாப் ஷெரீஃப் கட்சி, இவங்க ரெண்டு பேருக்குள்ளதான் போட்டி இருந்துது. ஆனா இந்த தடவ இம்ரான் கான் நாடு முழுசும் பயங்கர ஆவேசத்தோட டூர் பண்ணி பேசியிருக்கார். அவர் பேச்சுல இருக்கற நியாயத்த யங்கர் ஜெனரேஷன் ஓட்டர்ஸ் அப்படியே ஏத்துக்கறாங்கன்னு கேள்வி. அத்தோட எலக்‌ஷன் மீட்டிங்ல எதிர்பாராத விதமா ஏற்பட்ட இந்த ஆக்சிடென்ட் வேற அவருக்கு நிறைய சிம்பத்தி ஓட்டுகள குடுத்துரும் போலருக்கு. அதனால இந்த தடவ இவங்கதான் ஜெயிப்பாங்கன்னு தெளிவா சொல்ல முடியல. அப்படி ஒருவேளை யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கலைன்னா பெனாசீர் கட்சியும் நவாப் ஷெரீப் கட்சியும் சேர்ந்து கூட்டணி வச்சிக்க வாய்ப்பு இருக்கு. ஏன்னா அவங்க ரெண்டு பேருக்குமே இம்ரான்கான் மேல தனிப்பட்ட வெறுப்பு இருக்குன்னு பேசிக்கறாங்க.

ஜோசப்: சூப்பரா சொல்லிட்டீங்க பாய். நீங்க சொன்னதையேத்தான் பிபிசியும் அவங்க ரிப்போர்ட்ல சொல்லியிருக்காங்க. நம்ம நாட்டுல மாதிரியே இனி அங்கயும் கூட்டணி ஆட்சிதான் போலருக்கு. 

கணேஷ்: அதுலயும் நல்ல விஷயங்கள் நடக்க சான்ஸ் இருக்கு. 

ரஹீம்: என்னய்யா நல்ல விஷயம்? இப்பவும் எதாவது எடக்கு பேசுவியே?

கணேஷ்: (கேலியுடன்) அவங்களுக்குள்ளவே அடிச்சிக்கிட்டு நம்மள மறந்துருவாங்க இல்ல? அது நமக்கு நல்ல விஷயந்தான?

ரஹீம்: (எரிச்சலுடன்) அதான பாத்தேன். இப்படி எதையாச்சும் சொல்லி என்னெ கடுப்படிக்கறதே ஒமக்கு சோலியா போச்சிய்யா.

ஜோசப்: சரி, சரி. ஒங்க ரெண்டு பேரோட சண்டைய தீக்கறதே எனக்கு சோலியா போச்சி. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.

கணேஷ்: நம்ம விஷயம்னா? தில்லியில நடக்கறதா?

ஜோசப்: அத கடைசியா வச்சிக்கலாம். இங்க நம்ம மருத்துவர இன்னமும் ரிலீஸ் பண்ணாம இருக்காங்களே?

ரஹீம்: ஆமா ஜோசப். எப்பவோ போட்ட கேசுங்களுக்கெல்லாம் இப்ப புக் பண்ணி அவர வேணும்னே டார்ச்சர் பண்றா மாதிரி இருக்கு.

கணேஷ்: இருந்தாலும் அவர் சொல்றா மாதிரி எதுவுமே பொய் கேஸ் இல்லையே? சட்டத்த மீறி போராட்டம் பண்றது, போலீஸ் போகாதீங்கன்னு சொல்ற எடத்துக்கு வேணும்னே போறது, பத்து மணிக்கி மேல கூட்டம் போடாதீங்கன்னா என்னா பெரிய விஷயம் கேஸ்தான போடுவீங்க, போட்டுக்குங்கன்னு வீராப்பா பேசறது... இதெல்லாம் தப்புதானே பாய்? ஒரு பொறுப்புள்ள கட்சி தலைவரே இப்படியெல்லாம் செஞ்சா அப்புறம் பாமர தொண்டர்கள எப்படி குத்தம் சொல்றது?

ரஹீம்: இந்த மாதிரி குத்தங்கள எந்த கட்சி தலைவர்தான் செய்யல? ஏன் போலீஸ் தடையையும் மீறி வைகோ போயி கூடங்குளத்துல பேசலையா? இவ்வளவு ஏன், இதுக்கெல்லாம் மூல காரணமா இருக்கற உதயகுமார கைது பண்ணாங்களா? அவர் மேல இல்லாத கேசாய்யா இவர் மேல இருக்கு? எல்லாம் டர்ட்டி பொலிட்டிக்ஸ்ம்பாங்களே அதான், வேற ஒன்னும் இல்ல. அவர் மேல அம்மாவுக்கு என்ன கோபமோ, யார் கண்டா?

ஜோசப்: ஆனா அன்புமணி எல்லா கேஸ்லருந்து எந்த கண்டிஷனும் இல்லாம பெய்ல் குடுத்துட்டாங்களாமே?

ரஹீம்: அதான் ஜோசப் நானும் சொல்றேன். அவர் மேல இவங்களுக்கு என்ன கோவமோ இப்படி பழி தீத்துக்குறாங்க.

கணேஷ்: ஆனா ஒன்னு கவனிச்சீங்களா பாய்? அன்புமணி காடுவெட்டி குரு கூட்டத்துல பேசின விதமும் எங்க கட்சிகாரங்க மகாபலிபுர ரதக் கோயில் மேல ஏறி கொடி ஏத்துனதும் தப்புத்தான் அதுக்கு நா மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொன்னாராமே? அதான் கண்டிஷன் ஏதும் வைக்காமே இங்க திநகர் போலீஸ் ஸ்டேஷன்ல போயி கையெழுத்து போட்டா போறும்னு ரிலீஸ் பண்ணிட்டாங்க. ஆனா கு.க.மணிய ராமநாதபுரத்துலதான் இருக்கணும்னு சொல்லிட்டாங்களாம். அவர்தான் அவங்க கட்சி தொண்டர்ங்கள தூண்டி விடறார்னு ஜட்ஜ் நினைச்சிருப்பர் போலருக்கு.

ஜோசப்: இருக்கும். உங்கள வெளியில விட்டா மறுபடியும் ஒங்க கட்சிக்காரங்கள தூண்டிவிட்டு கலவரம் பண்ணமாட்டிங்கன்னு என்ன உத்தரவாதம்கறா மாதிரி ஜட்ஜே கேட்டாராமே?

ரஹீம்: நானும் படிச்சேன். ஆனாலும் மரக்காணத்துல நடந்த கலவரத்துக்கு ஒரு கட்சிய மட்டும் குத்தம் சொல்றது சரியில்ல ஜோசப். என்ன சொல்றீங்க?

ஜோசப்: நானும் சொல்லணும்னு நினைச்சேன். நீங்களே சொல்லிட்டீங்க. சரி. இப்ப தில்லியில நடக்கறத பாப்போம். நீங்க சொல்லுங்க கணேஷ். இந்த நிலக்கரி ரிப்போர்ட் விஷயத்துல லா மினிஸ்டரும் PMO அதிகாரிங்களும் நடந்துக்கிட்ட விதம் சரியா?

கணேஷ்: (கோபத்துடன்) நிச்சயமா சரியில்லீங்க. அதெப்படி சிபிஐ இன்வெஸ்ட்டிகேஷன் ரிப்போர்ட்ல அதுல சம்மந்தப்பட்ருக்கற டிப்பார்ட்மென்ட் ஆளுங்களே கைய வைக்கறது? திருடன் கிட்டவே அவன் மேல போட்ட FIRஅ காமிச்சி இது சரியா இருக்கான்னு பாருய்யாங்கறா இல்ல இருக்கு? இத்தன வருசத்துல இப்படியொரு கேவலமான சம்பவம் நடந்ததே இல்லையே. அந்த விஷயத்துல சுப்ரீம் கோர்ட் ரொம்ப டேமேஜிங்கா அப்சர்வேஷன் செஞ்சதுக்கப்புறமும் அவர காபினெட்லருந்து நீக்கறதுக்கு இவ்வளவு யோசிக்கணுமா? எதுலதான் டிலே பண்றதுன்னு இல்லையா? இப்படியொரு பிஎம் நமக்கு தேவையா?

ஜோசப்: (சிரிக்கிறார்) நீங்க என்ன கணேஷ் சுஷ்மா ஸ்வராஜ் மாதிரி பொறிஞ்சி தள்றீங்க? ஆனா நீங்க சொல்றதும் நியாயம்தான். இதுல இன்னொரு வேடிக்கை என்னன்னா சோனியாவே லா மினிஸ்டர ரிமூவ் பண்ணணும்னு ஃபீலர் விட்டுருக்காங்க. ஆனா பிஎம்தான் டிசைட் பண்ண முடியாம தடுமார்றார்னு நினைக்கறேன். 

ரஹீம்: சரிங்க. அவர் விஷயம் அப்படீன்னா இந்த ரயில்வே மினிஸ்டர் பன்சால் விஷயத்துலயாவது உடனே எதையாச்சும் முடிவெடுத்தாங்களா? அதையும் சொதப்பிக்கிட்டேதான இருக்காங்க?

கணேஷ்; வெக்கக் கேடுய்யா. ஒரு சென்ட்ரல் மினிஸ்டரோட சொந்த மருமகனே நேரடியா லஞ்சம் வாக்கறப்ப மாட்டிக்கிட்டார். கேட்டா எனக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லைன்னு மினிஸ்டர் சொல்லிட்டாராம். அதக் கேட்டுக்கிட்டு இப்பத்தைக்கு அவர் மேல எந்த நடவடிக்கையும் வேணாம்னு பிஎம் சொல்றாராம். இதுலயும் சோனியாவுக்கும் அவருக்கும் இடையில டிஃபரன்ஸ் ஆஃப் ஒப்பீனியன் இருக்கும் போலருக்கு.

கணேஷ்: நீங்க என்ன பாய், அதத்தான் போன ரெண்டு நாளா தில்லியிலருக்கற டிவி சானல்ல எல்லாம் கிழிகிழின்னு கிழிச்சிட்டாங்களே, லஞ்சம் வாங்குனவருக்கும் பன்சாலுக்கும் நெருங்குன தொடர்பு ரொம்ப நாளாவே இருக்குன்னு. அது மட்டுமா? மினிஸ்டரோட ரெக்கமன்டேஷன்ல ஒரு பப்ளிக் செக்டர் பேங்க் போர்ட்ல ஒருத்தர மெம்பரா ஆக்குனதும் அவர் மினிஸ்டரோட ஃபேமிலிக்கி கோடி கணக்குல லோன் குடுக்க வச்சதும். கேக்கறதுக்கே கேவலமா இருக்கு பாய். காங்கிரஸ் பேரியக்கம்னு சொல்லிக்கறத விட்டுப்போட்டு ஊழல் பேரியக்கம்னு வச்சிக்கலாம். 

ஜோசப்: (சிரிக்கிறார்) கணேஷ். நீங்க பிஜேபிகாரங்கள விட ஆக்ரோஷமா பேசறீங்க. பேசாம அவங்க கட்சியில சேந்துருங்க.

கணேஷ்: புதுசா வேற சேரணுமா? நா இப்பவே பிஜேபிதானங்க. உங்களுக்கு இதுவரைக்கும் தெரியலையா? அடுத்த ஆட்சி நம்மளுதுதாங்க. அப்புறம் பாருங்க.

ரஹீம்: (கேலியுடன்) என்ன நாட்டுல பாலும் தேனும் ஓடுமா? அடப்போய்யா. அதான் ஒரு அஞ்சி வருசம் ஆட்சி பண்ணீங்களே பாக்கல? அதுக்கு மேல தாக்கு புடிக்க முடியாமத்தான அடுத்த எலக்‌ஷன்ல தோத்தீங்க?

ஜோசப்: சரி கணேஷ். இவ்வளவு பேசறீங்களே நம்ம பக்கத்துலருக்கற கர்நாடகாவுலயே ஒங்க ஆட்சிய தக்க வச்சிக்க முடியலையே, ஏன்?

கணேஷ்: (சலிப்புடன்) என்ன ஜோசப் பண்றது? எல்லாம் அந்த எட்டியும் ரெட்டியும் பண்ண விஷயம்தான். அவனுங்க எல்லாத்தையும் செஞ்சிட்டு கட்சியவிட்டு போய்ட்டானுங்க. அவனுங்க பண்ணதுக்கு கட்சிக்கு அடி.

ரஹீம்: (சிரிக்கிறார்) எட்டியும் ரெட்டியும். நல்லா ரைமிங்கா இருக்கு கணேஷ். ஆனா ஒன்னு ஒங்க ரெண்டு கட்சிங்களுக்கும் கிடைச்ச அடி மரண அடி. அதுலருந்து ஒங்களால எழுந்திரிக்கவே முடியாது.

ஜோசப்: (குறுக்கிட்டு) சரி பாய். மறுபடியும் அவர உசுப்பேத்தி விடாதீங்க. ஆனா இந்த விக்டரிய ராகுல் காந்திக்கு கிடைச்ச விக்டரியா காங்கிரஸ் டாம், டாம் பண்றதும் சரியில்லான்னு நினைக்கறேன். இது முழுக்க முழுக்க பிஜேபிக்கி எதிரா விழுந்த ஓட்டு, அவ்வளவுதான். அவங்களுக்கு மாற்றா அங்க காங்கிரச தவிர வேற கட்சி இல்லாததாலத்தான் அவங்களுக்கு ஜனங்க ஓட்டு போட்ருக்காங்க. இத புரிஞ்சிக்காம காங்கிரஸ் மெத்தனமா இருந்தா அடுத்த பார்லிமென்ட் எலக்‌ஷன்லயே ஜனங்க தங்களோட சுயரூபத்த காட்டிருவாங்க. 

கணேஷ்: கரெக்டா சொன்னீங்க ஜோசப். இதான் உண்மை. கர்நாடகாவுல எதனால பிஜேபி தோத்துதோ அதையேத்தான் சென்ட்ரல்ல காங்கிரஸ் செஞ்சிக்கிட்டிருக்கு. அதனால கர்நாடகா எலக்‌ஷன் ரிசல்ட்ட எந்த விதத்துலயும் வரப்போற பார்லிமென்ட் எலக்‌ஷனுக்கு முன்மாதிரியா எடுத்துக்க முடியாது. என்ன சொல்றீங்க?

ஜோசப்: கரெக்ட். வேற ஏதாச்சும் பேச இருக்கா? இல்லன்னா இந்த வாரம் இத்தோட போறும். 

கணேஷ்: இது போறும்னு நினைக்கறேன். என்ன பாய்?

ரஹீம்: (கேலியுடன்) நீ சொன்னா அதுக்கு அப்பீலே இல்லைய்யா. அடுத்த வாரம் மீட் பண்ணுவோம்.


***********


03 மே 2013

சரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை தேவையா?


கணேஷ், ரஹீம் ஆங்கில தினத்தாள் ஒன்றில் ஆழ்ந்துபோயிருக்கும் ஜோசப்பை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கிறார்கள். ஜோசப் தான் படித்துக்கொண்டிருந்ததை முடித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அதை மடித்து வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் பார்க்கிறார்.

ரஹீம்: என்ன ஜோசப் எத படிச்சிட்டு இப்படி பெருமூச்சு விடுறீங்க?

ஜோசப்: எல்லாம் அந்த சரப்ஜித் சிங் விஷயம்தான்.

ரஹீம்: யார், அந்த பாக்கிஸ்தான் ஜெயில்ல அடிச்சே கொன்னாங்களே அவரா?

ஜோசப்: ஆமாம் பாய். ஏறக்குறைய இருபது வருசமா தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கிட்டிருந்தப்போ நம்ம கவர்ன்மென்டால இந்தியாவுக்கு கொண்டு வர முடியல. அவர வெறும் பாடியா (Body)த்தான் கொண்டுவரணுங்கறது விதி போல.

கணேஷ்: ஆனா ஒன்னுங்க. அவர் விடுதலையாகி வந்திருந்தாக் கூட இவ்வளவு மரியாதை கிடைச்சிருக்காது போல. அரசு மரியாதையோட இல்ல அவர அடக்கம் பண்ணப் போறாங்களாம்? அவ்வளவு ஈசியா கிடைக்கற மரியாதையா இது? ஒரு தூக்குத்தண்டனை குற்றவாளியா இருந்தவருக்கு இது கொஞ்சம் ஓவர்னு எனக்கு படுது. நீங்க என்ன சொல்றீங்க ஜோசப்.

ஜோசப்: இதெல்லாம் கொஞ்சம் சென்சிட்டிவான விஷயம் கணேஷ். அவர் ஒரு குத்தமும் செய்யலைன்னு அவங்களோட ஃபேமிலி சொல்றாங்களே? 26 வயசுல குடிபோதையில தெரியாம பாக்கிஸ்தான் பார்டர கடந்து போன ஒருத்தர அரெஸ்ட் பண்ணி அவர டெரரிஸ்ட்டுன்னு இருபது வருசத்துக்கு மேல ஜெயில்ல வச்சிருந்து இந்தியா எத்தனையோ தடவ கேட்டும் ரிலீஸ் பண்ணாம கடைசியில ஈவு இரக்கம் இல்லாம கூட இருந்த கைதிக ரெண்டு பேர் அவர அடிச்சி கொன்னுட்டங்கன்னு சொன்னா அது ரொம்பவே டிராஜடியான விஷயந்தானே? அந்த சிம்பத்தியும் ஒரு காரணமா இருக்கலாமே?

கணேஷ்: இருக்கட்டுங்க. ஆனா அதே சமயம் எந்த ஒரு முகாந்தரமும் இல்லாம இலங்கையில லேடீசையும் குழந்தைங்களையும் சகட்டு மேனிக்கு சுட்டுத்தள்ளுனத எவிடன்சோட காமிச்சும் இதுல நூத்துல ஒரு பங்கு சிம்பத்திய கூட சென்ட்ரல் கவர்ன்மென்ட் காட்டலையே, அதுக்கு என்ன சொல்றீங்க?

ஜோசப்: நீங்க சொல்றதும் உண்மைதான்.

கணேஷ்: பாக்கிஸ்தான்காரங்க இந்த மாதிரி அட்டூழியம் பண்றதுக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கறீங்க பாய்?

ரஹீம்: (எரிச்சலுடன்) நா என்ன சொல்றது? இந்த மாதிரி ஒன்னு ரெண்டு சம்பவங்கதான் நம்ம ரெண்டு நாடுங்களும் ஃப்ரென்ட்லியா இருக்க முடியாம பண்ணுது. இதெல்லாம் அங்க இருக்கற ஆளுங்க சிலர் வேணும்னே செய்றாங்களோன்னு கூட தோணுது.

கணேஷ்: நீங்க என்ன சொல்ல வறீங்க?

ரஹீம்: இந்தியாவும் பாக்கிஸ்தானும் அடிச்சிக்கிட்டே இருக்கணும்னே நினைக்கற நாடுங்களும் இருக்கு கணேஷ்.

கணேஷ்: என்ன பாய் சொல்றீங்க? இதுல சம்பந்தப்பட்டு இருக்கறது பாக்கிஸ்தான் ஜெயில்லருக்கற கைதிங்க. இதுல மத்த நாடுங்க எங்கருந்து வந்துது?

ரஹீம்: அதில்ல கணேஷ். இதெல்லாம் யாரோ ப்ளான் பண்ணி பண்றாங்கன்னுதான் சொல்ல வரேன். இல்லன்னா இருபது வருசத்துக்கும் மேல ஜெயில்ல இருந்தவர இப்ப ஏன் அடிச்சி சாகடிக்கணும்?

கணேஷ்: அதான் அஃப்சல் குருவ தூக்குல போட்டதுக்கு பழிக்கு பழின்னு சொன்னாங்களாமே?

ரஹீம்: (எரிச்சலுடன்) அதெல்லாம் மீடியா பண்ற டிராமா கணேஷ். அத்தோட அவர அட்டாக் பண்ண ரெண்டு கைதிங்களையும் பாக்கிஸ்தான்ல கைது பண்ணிட்டாங்களாம். என்ன நடந்துதுன்னு தீர விசாரிக்கறதுக்கும் கமிஷன் ஒன்னு வச்சிட்டாங்களாமே?

ஜோசப்: இத இத்தோட விட்டுருவோம் பாய். நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் இந்த விஷயத்துல பாக்கிஸ்தான் செஞ்சது சரியே இல்ல. இதனால கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டிருந்த ரெண்டு நாட்டோட பகையும் மறுபடியும் ஜாஸ்தியாயிருச்சி. இப்ப போறாததுக்கு சீனாவோட அழும்பு வேற? அதுக்கு என்ன சொல்றீங்க கணேஷ்?

கணேஷ்: (எரிச்சலுடன்) இந்த மாதிரி நம்மள சுத்தி இருக்கற நாடுங்கல்லாம் நம்மள சீண்டி பாக்கறதுக்கு காரணமே ஒரு வீக்கான பி.எம் நம்ம நாட்டுக்கு இருக்கறதுதாங்க. இன்னும் பங்களாதேஷ் ஒன்னுதான் பாக்கி.

ரஹீம்: அப்போ மோடி மாதிரி ஆளுங்க வந்தா இதெல்லாம் சரியாயிருங்கறீங்க. அப்படித்தானே?

கணேஷ்: நிச்சயமா. பிஜேபி சென்ட்ரல இருக்கறப்போ பாக்கிஸ்தான் கூடத்தான் வாலாட்டாம இருந்திச்சி. ஏன்னா அவனுங்களுக்கு தெரியும் நாம ஒரு அடி அடிச்சா இந்தியா ரெண்டு அடி அடிக்கும்னு. அடுத்த தடவையும் காங்கிரசே ஜெயிச்சி இதே பி.எம் பதவிக்கு வந்தார்னா இந்தியாவோட கதி அதோகதிதான்.

ஜோசப்: (சிரிக்கிறார்) ஏன் முலாயம் சிங் கூடத்தான் கூடாரம் அடிச்சி ஒக்காந்து இருக்கற சீனாக்காரன அடிச்சி விரட்டாம அவன் கூட என்னய்யா பேச்சுன்னு கேக்கறார். அப்ப அவர பி.எம்மா ஆக்கிடலாமா?

ரஹீம்: நீங்க ஒன்னு ஜோசப். அந்த மாதிரி எல்லாம் பேசறதுக்கு அவர மாதிரி விவரமில்லாத ஆளுங்களாலத்தான் முடியும். இந்த மாதிரி விஷயத்துலல்லாம் எடுத்தோம், கவுத்தோம்கறா மாதிரி முடிவெடுக்க முடியாது. ஆனாலும் இந்த கவர்ன்மென்ட் இந்த விஷயத்த டீல் பண்ற விதமும் சரியில்லன்னுதான் எனக்கு படுது. என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: எனக்கும் அப்படித்தான் படுது. நம்ம கவர்ன்மென்ட் இங்க நிறைய பிரச்சினையில மாட்டிக்கிட்டு முழிக்கிறத சீனாவும் பாத்துக்கிட்டுத்தான இருக்கு? அதான் அட்வான்டேஜ் எடுத்துக்க பாக்கறாங்க. ஆனா சீனா விடாப்பிடியா இப்ப டென்ட் அடிச்சி இருக்கற எடத்துலேயே பெர்மனென்ட்டா இருக்கறத அமெரிக்கா பாத்துக்கிட்டிருக்காதுன்னு நினைக்கறேன். ஐநாவும் ஏதாவது செய்யும்னு நம்பலாம்.

கணேஷ்: ஒன்னு ரெண்டு பிரச்சினையிலயா இந்த கவர்ன்மென்ட் மாட்டிக்கிட்டு முழிக்கிது? டெய்லி பேப்பர தொறந்தா ஏதாவது ஒரு பிரச்சினை. நாளுக்கு ஒரு பிரச்சினைன்னு வந்துக்கிட்டேதான இருக்கு? இந்த சிபிஐயோட ரிப்போர்ட்ட லா மினிஸ்டர் எங்கள கேக்காம கரெக்ட் பண்ணிட்டார்னு ஒரு பிரச்சினை முளைச்சிருக்கே. அதுக்கு என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: அதான் சுப்ரீம் கோர்ட்டே அது தப்புன்னு சொல்லிட்டு இனிமே எந்த ரிப்போர்ட்டையும் எந்த இலாக்கா மினிஸ்டர்கிட்டயும் காமிக்க தேவையில்லேன்னு சொல்லிருச்சே.

ரஹீம்: சரி ஜோசப். ஆனா நாங்களும் கவர்ன்மென்ட்ல ஒரு அங்கம்தான் CAG மாதிரியோ இல்ல CEC மாதிரியோ சுதந்திரமா செயல்படக்கூடிய ஸ்தாபனம் இல்லேன்னு சிபிஐ சீஃபே பச்சையா சொல்லிட்டாரே?

ஜோசப்: இப்படி ஓப்பனா அட்மிட் பண்றது இதான் முதல் தடவைன்னு நினைக்கறேன். ஆனா அவர் சொல்றதுல எந்த தப்பும் இல்ல. ஏன்னா இங்க மட்டுமில்லாம அமெரிக்கா, ரஷ்யா மாதிரி நாடுங்கள்ல கூட அங்கருக்கற FBI,CIA,KGB மாதிரியான ஸ்தாபனங்கள் கூட ஆட்சியாளர்கள டிப்பென்ட் பண்ணித்தான் இருக்காங்க. அவங்கள மீறி இன்டிப்பென்டன்டா அவங்களால ஃபங்ஷன் பண்ண முடியறதில்ல. ஏன் இங்க கூட பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் நடக்கும். இது சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரிஞ்சி இருக்கத்தான் செய்யும். ஆனாலும் இப்ப திடீர்னு இந்த விஷயம் பெரிசா ஆவறதுக்கு காரணம் இப்பருக்கற லா மினிஸ்டர் பொறுப்பில்லாம செஞ்ச காரியம்தான்.

கணேஷ்: இதுக்கெல்லாம் முக்கிய காரணம் பின்னால ரிமோட் கன்ட்ரோல் வச்சிருக்கற லேடிதான்னு சொல்றாங்க?

ஜோசப்: (சிரிக்கிறார்) இருக்கலாம். ஆனா இது எத்தனை நாளைக்கி செல்லுபடியாகும்னு தெரியல. தான் இதுவரைக்கும் சேத்து வச்சிருக்கற நல்ல பேரையெல்லாம் ஒரேயடியா கெடுத்துக்கிட்டு இந்திய ஹிஸ்டரியிலேயே ரொம்பவும் ineffectiveஎ PMங்கற பேரோட போயிடறதுங்கற முடிவுக்கு சிங் வந்துட்டாரோ என்னவோ? எல்லாத்துக்கும் தலையை அசைச்சிக்கிட்டு எப்படித்தான் அவராலோ இருக்க முடியுதோ?

ரஹீம்: அது அவரோட பிறவி குணம் மாதிரில்ல தெரியுது? எந்த விஷயமானாலும் ஒரு டிசிஷனுக்கு வர்றதுக்கே தயங்கறாரே?

கணேஷ்: இந்த லட்சணத்துல மறுபடியும் காங்கிரஸ் ஜெயிச்சா இவர்தான் பி.எம்னு வேற சொல்லிக்கிறாங்க. கஷ்டம்.

ஜோசப்: சரி விடுங்க. மொதல்ல காங்கிரஸ் பெரும்பான்மையோட ஜெயிக்கட்டும் பாக்கலாம். இப்ப இருக்கற சூழ்நிலையில உடனே தேர்தல் வந்தா எமர்ஜென்சிக்கப்புறம் காங்கிரஸ் தோத்துதே அத விட படுமோசமா தோக்கும்கறது நிச்சயம்.

ரஹீம்: போன பவுர்ணமி அன்னைக்கி மாமல்லபுரத்துல நடந்த பாமக மீட்டிங்ல காடுவெட்டி பேசினத கேட்டீங்களா ஜோசப்?

ஜோச: டிவியில பாக்கல. ஆனா யூட்யூப்ல இருந்த க்ளிப்ப பாத்தேன். அதென்னங்க அப்படி ஆவேசமா பேசறாரு? ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு போயி இப்படி ஆவேசப் படறதுக்கு என்ன இருக்குன்னு தெரியல.

கணேஷ்: இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? மருத்துவர் பேசிக்கிட்டிருந்தப்போ பக்கத்துல ஒக்காந்திருந்த மணி ஏதோ ஒரு சீட்ட அவர்கிட்ட காமிச்சாரு. அதுக்கு ஐயா அதானல என்ன இப்போ, இதுக்கு ஒரு கேசு போடுவாங்க, போட்டுக்கட்டுமே, அப்படீன்னாரு.

ஜோசப்: டைம் ஆயிருச்சின்னு எழுதி காமிச்சிருப்பாருன்னு நானும் நினைச்சேன். ராத்திரி பத்து மணி வரைக்கும்தான் கூட்டத்த நடத்தணும்னு கண்டிஷனாமே. அதத்தான் எழுதி காமிச்சிருப்பாரு போல.

கணேஷ்: இருக்கும். இப்ப அதையே ஒரு புது கேசா அவர் மேல போட்டுருக்காங்க. ஏற்கனவே ஜெயில்ல இருக்கற அவருக்கு பெய்ல் கிடைச்சாலும் இந்த கேஸ்ல மறுபடியும் அரெஸ்ட் பண்ணிருவாங்களோ என்னவோ?

ஜோசப்: செஞ்சாலும் செய்வாங்க. ஆனா அது ஏற்கனவே கொதிச்சி போயிருக்கற அவரோட தொண்டர்கள மறுபடியும் சீண்டி பாக்கறா மாதிரி இருக்கும்கறது என்னோட ஒப்பீனியன். பேருக்கு ஒரு தடவ அரெஸ்ட் பண்ணியாச்சி. இத்தோட இந்த விஷயத்த முடிச்சிக்கிட்டாங்கன்னா நல்லாருக்கும்.

ரஹீம்: இன்னைக்கி அன்புமணிய வேற அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே... கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான் டிவியில சொன்னான். அதுவும் பெய்ல வெளிவர முடியாத கேச போட்ருக்காங்களாம்.

கணேஷ்: அப்படியா?

ஜோசப்: ஆமா கணேஷ். நானும் பாத்தேன். 2002ல நடந்த கூட்டத்துல அவர் ஏதோ தரக்குறைவா பேசினாராம். ஆனா போன 2002 கூட்டத்துல ராத்திரி பத்து மணிக்கு மேல பேசினதுக்காகத்தான் என் மேல வேணும்னே கேஸ் போட்டுருக்கறதா அவரே சொன்னத கேட்டேன். எது சரியோ, நாளைக்கி கோர்ட்ல அவர ப்ரெசென்ட் பண்றப்போ தெளிவா தெரியும்.

ரஹீம்: ஜோசப் இன்னொரு தமாஷான விஷயம்.

ஜோசப்: சொல்லுங்க. கடைசியா கொஞ்சம் சிரிச்சிட்டு முடிப்போம்.

ரஹீம்: பக்கத்துலருக்கற பாண்டிச்சேரியில எலக்ட்ரிக் டேரிஃப (tariff) கூட்டிட்டாங்களாம். அதனால அங்க எதிர்கட்சியாருக்கற அதிமுக போராட்டமாம். அங்க அதிகபட்சமா கட்டணம் ரூ.3.50வா ஃபிக்ஸ் செஞ்சதுக்கே இது அடுக்காதுன்னு இங்கருக்கற அம்மாவும் அறிக்கை குடுக்கறாங்க. ஆனா இங்க அதிகபட்ச கட்டணம் ரூ.5.50! இதுல என்ன தமாஷ்னா விலைவாசி விஷம்போல ஏறி இருக்கற இந்த சமயத்துல இந்த கட்டண உயர்வு தேவையான்னு கேக்குது அதிமுக? அப்ப இங்க கூட்டுனப்ப விலைவாசி என்ன இறங்கியா இருந்துச்சி? என்ன கொடுமை பாருங்க?

ஜோசப்பும் கணேஷும் சிரிக்கின்றனர்:

கணேஷ்: இதெல்லாம் அரசியல்ல சகஜம் பாய். இன்னொன்னு தெரியுமா? நேத்தைக்கி கலைஞர் நியூஸ்ல தமிழகத்துல மறுபடியும் மின் கட்டண உயர வாய்ப்புள்ளது, அரசு ஆலோசனை. அப்படீன்னு சொன்னாங்க. இதுக்கென்ன சொல்றீங்க?

ரஹீம்: நா என்னத்த சொல்றது? நா எதையாவது சொல்லப்போயி என்மேலயே கேஸ் ஏதாச்சும் பாஞ்சிருச்சின்னா? நம்மாலல்லாம் ஜெயில்ல போயி ஒக்கார முடியாதுப்பா, ஆள விடுங்க.

அவர் அவசரமாக எழுந்து செல்ல இந்த வார கூட்டம் கலைகிறது