16 ஏப்ரல் 2013

உலகநாயகனின் உலக மகா தத்துவம் நம்பர் ஒன்னு!


ரஹீம் பாய், கணேஷ், ஜோசப் திண்ணையில் அமர்ந்திருக்கின்றனர்.

கணேஷ்: பாய் 'சைக்கிள் டயர உருட்டறவனெல்லாம் சைக்கிள் ஓட்ட முடியாது தெரியுமா?

ரஹீம்: (குழப்பத்துடன்) என்னய்யா கேள்வி இது? ஏதாச்சும் தத்துவமா?

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆமா பாய், அதுவும் நம்ம உலகநாயகன் சொன்னது!

ரஹீம்: என்னது கமலா இந்த ஒப்பேறாத தத்துவத்த சொன்னது?

கணேஷ்: அட ஆமா பாய். புது வருச அன்னைக்கின்னு இப்படியொரு கழுத்தறுப்பு ப்ரோகிராம போட்டு கொன்னுட்டாங்க பாய். இதுமாதிரி நிறைய தத்துவங்கள கொஞ்சம் கூட பொருத்தமில்லாத இடத்துலல்லாம் சொல்லி நம்மள மட்டுமில்லாம அவர கேள்வி கேக்க வந்திருந்த ரெண்டு சின்ன வயசு டைரக்டருங்களையும் மனுசன் ராவிட்டாரு. நல்லா நடிக்கறாரு சரி, ஆனா அதுக்காக இப்படியெல்லாமா சீன் காட்றது?

ரஹீம்: அட போய்யா, எதையாவது உருப்படியா பேசலாம்னுதான் இருக்கற வேலையையெல்லாம் உட்டுப்போட்டு நாம மூனு பேரும் இங்கன வாரம். இந்த சமயத்துல எதுக்குய்யா... நீங்க சொல்லுங்க ஜோசப் இன்னைக்கி என்ன புதுசா நியூஸ்?

ஜோசப்: நேத்தைக்கி ஜெய்ப்பூர்ல ஒரு ஆக்சிடன்ட்ல அடிபட்டு ரோட்டுல கிடந்தவங்கள அந்த வழியா போன யாருமே கண்டுக்காம ஒரு லேடியும் குழந்தையும் அநியாயமா இறந்துட்டாங்களாம் பாய். மனித நேயம் அழிஞ்சே போச்சிங்கறதுக்கு இந்த சம்பவம் ஒரு கசப்பான உதாரணம்னு பேப்பர்ல போட்ருக்கான்.



கணேஷ்: நானும் படிச்சேன். ஆனா இப்படி கண்டுக்காம போறதுக்கு மனிதாபிமானம் இல்லேங்கறது மட்டும் காரணம் இல்ல ஜோசப்.

ரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா சொல்ல வறீரு?

கணேஷ்: எல்லாம் இந்த போலீஸ்காரங்களோட தொல்லையிலருந்து தப்பிக்கலாம்னும் நினைச்சிருக்கலாம்ல? குத்துயிரும் குலையுயிருமா கிடக்கறவங்கள ஏத்திக்கிட்டு போயி வழியில அவங்க இறந்துட்டாங்கன்னு வச்சிக்குவம். அதுக்காகவே போலீசு கேசுன்னு அலையணுமேங்கற பயந்தான் காரணம்.

ஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா  அந்த வழியா போனவங்க அட்லீஸ்ட் ஒரு ஆம்புலன்ஸ்சுக்காவது ஃபோன் பண்ணி சொல்லிட்டு போயிருக்கலாம். அதோட அந்த சப்வேயிலருந்து மொபைலும் யூஸ் பண்ண முடியலையாம். பாவம் அந்த லேடியோட புருசன் இந்த விஷயம் புரியாம செல் ஃபோன்லருந்து யாரையாச்சும் கூப்டலாம்னு ட்ரை பண்ணிக்கிட்டேருந்துருக்காரு. கடைசியில மயக்கம் போட்டே உழுந்துட்டாராம்.

கணேஷ்: இதுல கொடுமை என்னன்னா இந்த் ஆக்சிடென்ட்ட டிராஃபிக் கன்ட்ரோல் ரூம்லருந்து சிசிடிவி வழியா பாத்துக்கிட்டிருந்த போலீஸ் கூட இடிச்சிட்டு ஓடிப்போன வண்டிய ட்ரேஸ் பண்றதுலதான் குறியாயிருந்துருக்காங்களே தவிர அங்கருந்தே ஒரு வயர்லெஸ் குடுத்து ஆம்புலன்ஸ வரவைக்கலங்கறத நினைச்சாத்தான் எரிச்சலா வருது.

ரஹீம்: (எரிச்சலுடன்) அப்படியா? அந்த பயலுவள எல்லாம் ஒடனே சஸ்பென்ட் செய்யணும்யா.

கணேஷ்: சரிதான் பாய். ஆனா அதனால செத்தவங்க உயிரு திரும்பிவரவா போகுது? டூவீலருங்களுக்கு தடை பண்ணியிருக்கற பாதையில இந்த மனுசன் ஏன் போகணும்? எல்லாம் தலைவிதி பாய்.

ஜோசப்: என்னதான் சொன்னாலும் ரோட்ல கிடக்கற அந்த லேடிய ஒரசிக்கிட்டு போறமாதிரி பெரிய, பெரிய காருங்க போறத டிவியில பாக்கறப்ப வருத்தமாத்தான் இருந்தது பாய். யாராச்சும் ஒருத்தர் நின்னு ஹெல்ப் பண்ணியிருந்தா அந்த லேடியும் சரி, அந்த குழந்தையும் சரி பொழச்சிருக்க வாய்ப்பிருந்திருக்குமோ என்னவோ...

ரஹீம்: உண்மைதான் ஜோசப்...

(சிறிது நேரம் மவுனமாக மூவரும் அமர்ந்திருக்கின்றனர்)

கணேஷ்: அப்புறம் ஜோசப் இன்னைக்கி டெசோ காரங்க திடீர்னு ஒரு ஸ்டன்ட் அடிச்சிருக்காங்களே படிச்சீங்களா?

ஜோசப்: படிச்சேன், படிச்சேன்.

ரஹீம்: என்னய்யா அது? கொஞ்சம் டீட்டெய்லாத்தான் சொல்லுங்களேன் கேப்போம்.

கணேஷ்: வேற ஒன்னுமில்ல பாய். மேடம் கொஞ்ச நாளா சொல்லிக்கிட்டே இருக்காங்களே, அதான் அந்த கச்சத்தீவு விஷயம். சுப்ரீம் கோர்ட்ல கூட கேஸ் ஒன்னும் பென்டிங்ல இருக்கே?

ரஹீம்: , அதுவா? அதுல டெசோ புதுசா ஏதாச்சும் சொல்றாங்களா என்ன?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதெல்லாம் ஒன்னுமில்ல பாய். மேடம் மட்டுந்தான் கச்சத்தீவ இலங்கைக்கு குடுத்தது செல்லாதுன்னு சொல்வாங்களா, நாங்களும்தான் சொல்வோம்னு சொல்றாமாதிரி இருக்கு இவங்களோட லேட்டஸ்ட் ஸ்டன்ட்.

ரஹீம்; சரி ஜோசப். நா தெரியாமத்தான் கேக்கேன். அத இந்தியா சிலோனுக்கு தானமா குடுத்தப்போ இவருதான இங்க சி.எம்மா இருந்தாரு?

ஜோசப்: ஆமா அதுக்கென்ன இப்போ?

ரஹீம்: அப்பல்லாம் சும்மா இருந்துட்டு இப்ப ஏன் கூப்பாடு போடறாரு?

ஜோசப்: எதுக்குலன்னு யார் சொன்னா? டிஎம்கே எம்பியா இருந்தா நாஞ்சில் கே மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி எம். கல்யாணசுந்தரம் ரெண்டு பேருமே அன்னைக்கி பார்லிமென்ட்ல இந்த விஷயத்துல தமிழ் நாட்ட கலந்துக்காம எப்படி இத செய்ய போகலாம்னு ஆக்ரோசமா பேசியிருக்காங்களாமே?

ரஹீம்: அப்புறம் என்ன?

ஜோசப்: அன்னைக்கி வெளியுறவு மினிஸ்டர் ஸ்வரன் சிங். இப்பருக்கற சிங்க விட ஸ்லோ மோஷன்ல பேசறவரு. அவரு பாட்டுக்கு கூலா இந்திய வெளியுறவு விவகாரத்துல முடிவெடுக்கற உரிமை மத்திய அரசுக்குத்தான், ஸ்டேட் கவர்ன்மென்ட்டோடல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டு டிசைட் பண்ண தேவையில்லேன்னு சொல்லிட்டாராம்.

கணேஷ்: அதுல இன்னொரு விஷயமும் இருக்கே ஜோசப். அத கவனிச்சீங்களா?

ஜோசப்: என்ன விசயம்?

கணேஷ்: இந்த மாதிரி இந்தியாவுக்கு பூர்வீகமா சொந்தமா இருக்கற பகுதிகளை மத்த நாடுகளுக்கு விட்டுக்கொடுக்கறதுக்கு முன்னால பார்லிமென்ட்ல டிஸ்கஸ் பண்ணி அவங்க சம்மதத்த வாங்கணும்னு இருக்காமே? ஆனா இந்த விஷயத்துல அப்படி ஏதும் செஞ்சா மாதிரி தெரியலையே?

ஜோசப்: அது தெரியல கணேஷ்: ஆனா 2011 அகஸ்ட்டின் ரொசாரியோங்கறவரு RTI (தகவல் அறியும் உரிமை சட்டம்) ஆக்ட் பிரகாரம் ஒரு பெட்டிஷன் ஃபைல் பண்ணி இந்த டீட்டெய்ல்ஸ தாங்கன்னு கேட்டுருக்காரு. அதுக்கு வெளியுறவு டிப்பார்ட்மென்ட்லருந்து வந்த பதிலோட நகல படிச்சி பாத்தா 1974, 1976 சிறீலங்காவோட போட்ட ரெண்டு அக்ரீமென்டையுமே பார்லிமென்ட்ல வச்சிருக்காங்கன்னுதான் தெரியுது!

ரஹீம்: அப்படி வச்சிருந்தா அப்போ சிஎம்மா இருந்தவங்களுக்கு தெரியாமயா போயிருக்கும்? சும்மா சொல்றாங்க ஜோசப்.

ஜோசப்: அதெப்படி பாய் ஒரு அரசு அதிகாரியோட ரிப்போர்ட்ல சும்மா சொல்லியிருப்பாங்க? அப்புறம் அவர் மாட்டிக்க மாட்டாரா?

கணேஷ்: நீங்க சொல்றபடி பாத்தா ரெண்டு அக்ரீமென்டுமே பார்லிமென்ட்ல வச்சிருந்தா அது மேல ஒரு பெரிய டிஸ்கஷனே நடந்துருக்கணுமே.. அந்த சமயத்துல இங்க யாரு சிஎம்மா இருந்தது?

ஜோசப்: 1971லருந்து ஜனவரி 76 வரைக்கும் கலைஞர். அந்த மாசந்தான் அவரோட கவர்ன்மென்ட்ட டிஸ்மிஸ் பண்ணாங்க. அதுக்கப்புறம் பிரசிடென்ட் ரூல் ஒரு வருசம். அதுக்கப்புறம்  நடந்த எலக்ஷன்ல ஜெயிச்சி 77 எம்ஜிஆர்  வந்தாரு. அதுலருந்து 85 வரைக்கும் அவர்தான் சிஎம். இன்னும் சொல்லப்போனா சென்ட்ரல் கவர்ன்மென்டோட அவரு ரொம்ப க்ளோசா இருந்த சமயம். அப்பத்தான் LTTEக்கும் தமிழ்நாட்டுல ட்ரெய்னிங்லாம் குடுத்துக்கிட்டு இருந்தாங்கன்னும் கேள்வி. அதுக்கப்புறம் ரெண்டு திராவிட பார்ட்டீசும்தான் இங்க பவர்ல இருந்தாங்க. அன்னைக்கெல்லாம் கூட மீனவர்ங்க பிரச்சினை இருந்துக்கிட்டேதான் இருந்துச்சி.

ரஹீம்: என்னது, நம்ம மீனவர்ங்கள அப்பத்துலருந்தே அடிச்சிக்கிட்டுத்தான் இருந்தாங்களா?

ஜோசப்: ஆமா பாய்... அப்பல்லாம் இது பெரிசா டிஸ்கஷன்ல வராததுக்குக் காரணம் மீடியா இந்த அளவுக்கு பெருசா இல்லையே. அன்னைக்கி தூர்தர்ஷன விட்டா யார் இருந்தா? நா 1984, 85 தூத்துக்குடியில வேல செஞ்சிக்கிட்டிருந்தப்பவே அங்க அடிக்கடி மீனவர் தர்ணா, ஸ்டிரைக்குன்னு நடந்துக்கிட்டேதான் இருக்கும். புடிப்பாங்க, அப்புறம் ரிலீஸ் பண்ணுவாங்க... ஆனா இந்த அளவுக்கு நம்ம ஆளுங்கள புடிச்சி அடிக்கறது, துப்பாக்கிய வச்சி மிரட்டுறது, சுட்டுக் கொல்றது எல்லாம் அப்போ நடக்கலங்கறதும் உண்மைதான். ஆனா ஒன்னு பாய்.. இந்த விஷயத்துல அப்ப யாழ்பாணத்துல பவர்ல இருந்த LTTE காரங்களும் ஒன்னுதான். அவங்களும் நம்ம மீனவர்கள அடிச்சி விரட்டிக்கிட்டுத்தான் இருந்தாங்களாம்.

ரஹீம்: அடப்பாவிங்களா! என்னமோ இது சிங்களவனோட வெறித்தனம்னுதான் நா நெனச்சிக்கிட்டுருக்கேன்.

கணேஷ்: எல்லாம் வயித்துப் பொளப்புக்குத்தான பாய். கச்சத்தீவுக்கு பக்கத்துலதான் நிறைய மீன் பாடு கிடைக்குதாம். அது நம்ம ஆளுங்களுக்கும் வேணும், சிலோன் மீனவனுக்கும் வேணும். இது ஒரிஜினலா எங்க எடம்னு நம்ம ஆளு சொல்றான். இப்ப இது எங்களுக்குத்தான் சொந்தம்னு அவன் சொல்றான். இதான் பிரச்சினை.

ரஹீம்; அப்ப கச்சத் தீவ எங்களுக்கே திருப்பி குடுத்துறுன்னு சொல்றது நியாயந்தான?

ஜோசப்: இருக்கலாம் பாய். ஆனா நாமளா விரும்பி போட்டுக்கிட்ட ஒப்பந்தம் இது. அன்னைக்கி இந்திரா காந்தி என்ன நினைப்புல அத எழுதி குடுத்தாங்களோ யாருக்கு தெரியும்? ஆனா அப்படி போட்ட ஒப்பந்தத்த நாம மட்டும் ஒருதலைப்பட்சமா கேன்சல் பண்ண முடியாது பாய். ஒருவேளை நம்ம சுப்ரீம் கோர்ட் இது சட்டப்படி செல்லாதுன்னாலும் அது எந்த விதத்துல சிலோன பாதிக்க போகுது, சொல்லுங்க.

ரஹீம்: அதுவும் சரிதான். ஒங்க சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மென்ட் எங்கள பாதிக்காதுன்னுதான் சிங்களவன் சொல்லுவான்.

கணேஷ்: அப்படியொரு நிலைமை வந்தா international courtக்கு போகவேண்டியதுதான். என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: எனக்கு தெரிஞ்சி அது ஒன்னுதான் இந்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வா இருக்க முடியும். ஆனா அதுக்கு ரொம்ப வருசம் ஆகலாம். அதுவரைக்கும் நம்ம சென்ட்ரல் கவர்ன்மென்ட் சிலோன் கவர்ன்மென்ட் கிட்ட பேசி ஒரு இடைக்கால சொலுஷன கண்டுபிடிக்கணும். ஆனா இப்ப இருக்கற சூழ்நிலையில அதுவும் சாத்தியமான்னு தெரியல.

ரஹீம்: ஏன் அப்படி சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: அதான் ராஜபக்ஷே நம்ம சிங் மேல கடுப்புல இருக்காரே. ஐநா சபையில நாம போட்ட எதிர்ப்பு ஓட்டும் இதுக்கு ஒரு  காரணம்.

கணேஷ்: அது மட்டுமில்ல ஜோசப். அந்தாளுக்கு இப்ப LTTE அடிச்சி ஒடுக்குன திமிர். நம்மள யாரும் ஏதும் செஞ்சிர முடியாதுங்கற ஆணவம். அது அடங்கறதுக்கு கொஞ்ச நாள் ஆகத்தான் செய்யும்.

ஜோசப்: அதுவும் சரிதான். இந்த சமயத்துல அமெரிக்கா வேற அவங்க குடுத்துக்கிட்டிருக்கற aid பத்து சதவிகிதத்த குறைச்சிட்டாங்க... அதுக்கும் இந்தியா குறிப்பா தமிழ்நாடுதான் காரணம்னு நினைப்பாரு. அந்த கோபமெல்லாம் நம்ம மீனவங்க மேலதான் திரும்பும். அவரா என்னைக்கி நாம போற வழி சரியில்லன்னு உணர்ந்து தன்னையே மாத்திக்கிறாரோ அல்லது எலெக்ஷன்ல தோத்து விழுறாரோ அதுவரைக்கும் இந்த பிரச்சினை இருந்துக்கிட்டேதான் இருக்கும். அத்தோட ஒவ்வொரு எலெக்ஷன் வர்றப்பவும் நம்ம ஆளுங்க கூப்பாடு போடறதும் நடந்துக்கிட்டேதான் இருக்கும்.

ரஹீம்: சரி ஜோசப்... இன்னைக்கி ரொம்ப நேரம் பேசிட்டோம் போலருக்கு... எனக்கு கடைக்கி நேரமாச்சி.

**********

போறதுக்குள்ள இதையும் படிச்சிருங்க:








2 கருத்துகள்:

  1. ஆஹா.... இம்பூட்டு நடந்துருக்கா!!!!

    ஒன்னுமே தெரியாம இருந்துருக்கேனே:(

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    ஆஹா.... இம்பூட்டு நடந்துருக்கா!!!!//

    எதப்பத்தி சொல்றீங்கன்னு தெரியலையே!

    பதிலளிநீக்கு