04 April 2013

திண்ணை - விவாத மேடைதினமலர் நாளிதழில் வெளியாகும் டீக்கடை பெஞ்சு பகுதியைப் போன்றதுதான் எனது ‘திண்ணை’யும்.

இதில் வாரம் ஒருமுறை அந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் உள்ளிட்ட நாட்டு நடப்புகளை பாரபட்சமில்லாமல் அலசுவேன்.
இதில் என்னுடன் இரண்டு கற்பனை பாத்திரங்களையும் இணைத்துக்கொண்டால்தான் சுவாரஸ்யம் இருக்கும் என்பதால் கணேசு, ரஹீம்பாய் என்ற இருவரும் இந்த திண்ணை விவாத மேடையில் பங்கு பெறுகிறார்கள்.  ரஹீம் பாய் சென்னையில் வியாபாரம் செய்கிறார். அவர் வீட்டுத் திண்ணைதான் எங்களது விவாத களம். கணேசு என்கிற கணேஷ்ராம் அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். மூவருமே சமவயதினர்.

இதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் யாவும் என்னுடைய கருத்துக்கள் என்று எடுத்துக்கொள்ளலாகாது.

ரஹீம்: வாய்யா கணேசு. ஒரு நாளும் நேரத்துக்கு வரமாட்டீரே.

கணேசு: ஆம்ம்ம்மா… வெறும் வெட்டிப்பேச்சுதானய்யா நடக்குது? இதுல நேரத்துல வரலன்னாதான் என்ன? வீட்டம்மா இன்னைக்கி போனாத்தான் ரேஷன்ல ரெண்டு பருப்பும், பாமாயிலும் கெடைக்கும், வாங்கிக் குடுத்துட்டு எங்கயாச்சும் போங்கன்னு சொன்னா. அத தட்டிட்டு வரமுடியாமாய்யா? ஆமா எங்க ஜோசப்ப காணம்?

ரஹீம்: (உரக்க சிரிக்கிறார்)அவர் வர்றது இருக்கட்டும். உம்ம ஒன்னு கேக்கணும். ஏன்யா நீரு கவர்ன்மென்ட்ல அதிகாரியா இருந்து ரிட்டயர்ட் ஆனவரு. இப்பவே இருபதுக்கு மேல பென்ஷன் வாங்கறீரு. அப்ப சர்வீஸ்ல இருக்கறப்ப குறைஞ்சது அம்பதாவது சம்பளம் இருந்திருக்கும். அத்தோட கிம்பளம் வேற. ஒமக்கு எப்படிய்யா ரேஷன் சாமான்லாம் கிடைக்கிது?

கணேசு: யோவ் பாய், வாய கழுவுய்யா. யாருக்கு எல்லா சாமானும் கிடைக்கிது? எனக்கு அரிசி, மண்ணெண்ணை, மைதா இதெல்லாம் கிடையாது. ரெண்டு வருசத்துக்கு முன்னால வரைக்கும் வெறும் சக்கரை மட்டுந்தான். என்னமோ தெரியல இப்ப ரெண்டு வருசமா துவரை, உளுந்து, அத்தோட பாமாயிலும் குடுக்கான். அதுக்கூட அஞ்சாம் தேதிக்கு உள்ளாற போனாத்தான். இல்லன்னா வெறும் சக்கரை மட்டுந்தான்.

ரஹீம்: அட! அது ஏன்? ஒரு கடையில இருக்கற எல்லா கார்டுக்கும்தான பருப்பு அரசு சப்ளை பண்ணுவாங்க?

கணேசு: அப்படித்தான்யா நானும் நெனச்சிக்கிட்டு அவன் கிட்ட போயி சண்டை போட்டேன். அப்புறந்தான் தெரியுது கடையில ரெஜிஸ்டர் ஆயிருக்கற 1000 கார்டுல 500 கார்டுக்கு தேவையான பருப்பு சாமான் மட்டுந்தான் சப்ளையாம். ஆயிலும் அப்படித்தான். சக்கரை மட்டுந்தான் முழுசா வருதாம். அதனாலதான் மாச துவக்கத்துலயே ஆளுங்க வந்து க்யூவுல நின்னு வாங்கிக்கிட்டு போயிடறாங்க. என்னெ சொல்றீயே அங்க க்யூவுல வந்து பாரு. அவனவன் பைக்ல ஏன் கார்ல கூட வந்து சாமாங்கள வாங்கிகிட்டு போறான். இவனுங்களுக்கு மட்டும் எப்படி எல்லா சாமானும் கிடைக்கற ரேஷன் கார்ட் கிடைச்சிதோ தெரியல. இந்த மாதிரி ஆளுங்களாலதான் கிடைக்க வேண்டிய ஆளுங்களுக்கு ரேஷன் சாமான் கிடைக்க மாட்டேங்குது. சரி.. இவ்வளவு பேசறியே ஒனக்கும் ஃபுல் ரேஷன் கார்டு இருக்குல்ல? நீ என்ன கொஞ்சமாவா சம்பாதிக்கறே? ஸ்மக்ளிங் பிசினஸ்னா சும்மாவா?

ரஹீம்: (சிரிக்கிறார்) யோவ் ரேஷன் கடையில போயி நிக்கறதெல்லாம் வீட்டு பொம்பளைங்க செய்ய வேண்டியது. நம்ம வேலை சம்பாதிக்கறது. அவ்வளவுதான். ஒம்ம மாதிரி ஓஞ்சி போயி வூட்ல ஒக்காந்தா இப்படித்தான்.

கணேஷ் கோவத்துடன் பதில் சொல்ல வாயெடுக்க ஜோசப் வருவதை பார்த்துவிட்டு  ஒதுங்கி அவர் அமர இடம் கொடுக்கிறார்.

ஜோசப்: என்ன ரஹீம் பாய் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலருக்கு?
கணேஷ்: இந்த பாய்க்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தியாயிட்டுது ஜோசப் என்னெ போயி ஓஞ்சிப் போன கேசுங்கறார்.

ஜோசப் சிரிக்கிறார். விடுங்க கணேஷ் நம்ம ரெண்டு பேருமே ரிட்டயர்ட் கேஸ்தான? அதத்தான் அப்படி சொல்லியிருப்பார். விடுங்க. இன்னைக்கி எல்லா காலேஜும் மறுபடியும் திறந்துட்டாங்களாமே தெரியுமா?
கணேஷ்: ஆமாய்யா.. கேள்விப்பட்டேன். ஆனா செமஸ்டர் எக்ஸாம்லாம் தள்ளிப் போட முடியாது வேணும்னா சாட்டர்டே சண்டே க்ளாஸ் வச்சி போர்ஷன முடிச்சிக்குங்கன்னு சொல்லிட்டாங்களாம் எல்லா யூனிவர்சிட்டியிலயும். பசங்கதான் பாவம்.

ரஹீம்: (கோபத்துடன்) என்னய்யா பாவம்? இவனுங்கள யாரு ஸ்டிரைக் பண்ண சொன்னது? என் பொண்ணுக்கூட காலேஜுக்கு போக முடியாம இப்ப செய்யாத தப்புக்கு தண்டனைங்கறா மாதிரி சனி, ஞாயிறுல்லாம் காலேஜுக்கு போவணும். இதுக்கெல்லாம் ஸ்ட்ராங்கான சட்டம் வரணும்யா. யார் ஸ்டிரைக் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போயிருச்சி. ஃபீஸ் கட்டறது நாம, ஸ்டிரைக், போராட்டம்னு சொல்லி கூத்தடிச்சிட்டு அலையறது இந்த பசங்க.

ஜோசப்: என்ன பாய் இப்படி சொல்லிட்டீங்க. ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான ஸ்டிரைக் செஞ்சாங்க?

ரஹீம்: எதுய்யா நல்ல விஷயம்? எங்கயோ இருக்கற ஆளுங்கள பத்தி கவலைப்படறானுங்களே இப்படி காலேஜுக்கு போகாம ரோட்ல ஒக்காந்து போலீஸ்ல அடிபட்டு மண்ட, கை காலு ஒடஞ்சு சில பேரு ஆஸ்பட்ல இருக்காங்களாமே அதுக்கு செலவு பண்றது யாரு? பேரன்ட்ஸ்தான? அட செலவ வுடுய்யா. ஒடம்பு சரியாவற வரைக்கும் காலேஜுக்கு போக முடியாது. பாடம் போயிரும். அப்புறம் அடுத்த செமஸ்டரும் போயிரும். அவனுங்கள பெத்தவங்களுக்கு எவ்வளவு டென்ஷன்? இவனுங்கள தூண்டிவிட்டுட்டு பின்னால நிக்கற அரசியல்வாதிங்களா இதுக்கு ரெமடி பண்ணப்போறாங்க?

கணேஷ்: பாய் சொல்றதும் ஒருவகையில சரிதான் ஜோசப். சரி, இந்த பசங்க ஸ்டிரைக் பண்றாங்களேன்னு சொல்லி அங்க ராஜபக்‌ஷே ஒடனே தமிழாளுங்களுக்கு ஏதாச்சும் செஞ்சிறப் போறாரா?

ஜோசப்: ஏன், நம்ம கலைஞர் மத்தியிலருந்து ரிசைன் பண்ணதுக்கு இவங்கதான காரணம்?

ரஹீம்: (எரிச்சலுடன்) அடப்போய்யா நீ ஒன்னு சுத்த வெவரம் இல்லாத ஆளாருக்கே. கலைஞர் ரிசைன் பண்ணதுக்கு காரணமே வேற.

ஜோசப்: என்ன பாய் சொல்றீங்க?

ரஹீம்: அட ஆமாய்யா. அடுத்த எலெக்‌ஷன்ல காங்கிரசோட கூட்டு சேந்து நின்னா ஒரு சீட் கூட ஒப்பேறாதுன்னு அவருக்கு நல்லாவே தெரியும். இப்பன்னு இல்ல, ஒரு வருசமாவே இந்த சிக்கல்லருந்து எப்படிறா தப்பிச்சிக்கறதுன்னு பார்த்துட்டே இருந்திருப்பாரு. பிரபாகரன் பையன ஈவு இரக்கமில்லாம சுட்டுதள்ளுன விவகாரம், அப்புறம் அந்த ஐநா சபையில அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம். எப்பவும் முடிவெடுக்க முடியாம சொதப்புற மன்மோகன் இதுலயும் கடைசி நேரம் வரைக்கும் டிசைட் பண்ணாம சொதப்புவாருன்னு கலைஞருக்கு தெரியும். அவர் நினைச்சா மாதிரியேதான் சிங்கும் பண்ணாரு. அது அவர் பிறவி குணம். அத சாக்கா வச்சிக்கிட்டு எப்படியும் மிஞ்சிப் போனா இன்னும் அஞ்சாறு மாசந்தான், தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் வந்துரும் இதான் சரியான நேரம்னு டிசைட் பண்ணி வெளிய வந்துட்டாரு.

கணேஷ்: இதுல இன்னொரு சூட்சுமமும் இருக்குன்னு பேசிக்கறாங்களே பாய்.

ரஹீம்: அழகிரி விஷயந்தானே. இதுல என்ன பெரிய சூட்சமம் இருக்கு? அவரோட போக்குதான் கொஞ்ச நாளாவே க்ளியரா தெரியுதே! சென்ட்ரல் மினிஸ்டர் போஸ்ட் கிடைச்சதுலருந்தே அவர் போடற ஆட்டத்த கலைஞர் பாத்துக்கிட்டுத்தான இருக்காரு? ஒரே கல்லுல ரெண்டு மாங்காங்கறா மாதிரி கால சுத்திக்கிட்டிருந்த பாம்பையும் கழட்டி விட்டுட்டாரு கழுத்த நெறிக்கற மாதிரி இருந்த துண்டையும் தூக்கிப் போட்டுட்டாரு.

ஜோசப்: சிரிக்கிறார். இதுல பாம்பு எது, துண்டு எது பாய்?

ரஹீம்: அதெல்லாம் அவங்கங்க என்ன நினைச்சிக்கிறீங்களா அது மாதிரின்னு வச்சிக்கங்களேன். நா என்ன சொல்ல வறேன்னா ஸ்டூடன்ஸ் பண்ண ஸ்டிரைக்குக்கும் கலைஞர் எடுத்த முடிவுக்கும் எந்த கனெக்‌ஷனும் இல்ல.

கணேஷ்: சரி பாய். நீங்க சொல்றது சரின்னே வச்சிக்குவம். அப்ப இப்ப தமிழ்நாட்ல கொஞ்ச நாளா நடக்கற ஆர்ப்பாட்டத்துக்கெல்லாம் எந்த யூசும் இல்லைன்னு சொல்றீங்களா?

ரஹீம்: பின்னே… சரிய்யா, நா ஒன்னு கேக்கறேன். எல்ட்டீடீய சுத்தமா அடிச்சிக்கிட்டிருந்தப்போ இந்த ஆவேசம் ஏன் வரல? அது முடிஞ்சி மூனு வருசமாயிருச்சி. இப்ப எதுக்கு இந்த ஆவேசம்?

ஜோசப்: என்ன பாய் இப்படி கேக்கறீங்க? அந்த பிஞ்சி பையன கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம சுட்டு தள்ளியிருக்காங்க. இப்ப கூட பேசாம இருந்தா எப்படி?

ரஹீம்: சும்மாருங்க ஜோசப். பிரபாகரன் மகன் மட்டுந்தான் இப்படி செத்தானா? இவனெ மாதிரி எத்தன பசங்கள சுட்டுத்தள்ளியிருக்கறதா நியூஸ் வந்துச்சி? எத்தன அப்பாவி ஜனங்கள கேடயமா யூஸ் பண்ணி அந்த கேப்டன் ஃபைட் பண்ணாரு? அப்ப யாராச்சும் அவர அப்படி செய்யாதய்யான்னு சொன்னீங்களா? இங்க அவரோட ஆத்மார்த்த சிநேகிதங்கன்னு சொல்லிக்கற வைகோ, சீமான் ஏன் நெடுமாறன், இவங்க எல்லாம் அப்பாவி தமிழாளுங்கள தப்பிச்சிப் போக விட்டுருய்யா. அவங்கள கேடயமா பயன்படுத்தாம தைரியமா நின்னு போராடுங்கன்னு சொல்ல வேண்டியதுதான? தப்பிச்சி போக பாத்தவங்களையும் ஈவு இரக்கமில்லாமல் எல்ட்டீட்டியே கொன்னாங்களாமேய்யா. இதையெல்லாம் பிபிசி சொன்னப்பா டூப் வுடறான்னு சொன்னவங்கதான இவங்க? அதான் இப்ப சானல் ஃபோர்ல காட்டறத சிங்களவன் டூப்ங்கறான்!

ஜோசப்: நீங்க என்ன சொல்ல வறீங்க பாய்? அந்த பையன சுட்டு தள்ளுனத டூப்புன்னு நீங்களும் சொல்றீங்களா?

ரஹீம்; அப்படியில்ல ஜோசப். இதுக்கு மட்டும் ஏன் இப்படி ஆவேசப்படறீங்கன்னு கேக்கறேன். விடுதலை வாங்கிறலாம், வாங்கிறலாம்னு ஆசை காட்டி ஒரு தலைமுறையையே போராளியாக்கி இப்ப அவங்கள நம்பி இருக்கற குடும்பங்களையெல்லாம் நிர்க்கதியா நிக்கறாங்களே அதுக்கு யார்யா காரணம்? சரி அதெல்லாம் போவட்டும். இப்ப எங்களுக்கு தனி நாடு வேணும் கேக்கற நிலையிலயா அங்க இருக்கறவங்க இருக்காங்க? அன்னாடம் சோத்துக்கும், தங்கறதுக்கு இடமுமில்லாம தவிச்சிக்கிட்டிருக்கறவங்கக் கிட்ட போயி இன்னும் கொஞ்ச நாளைல ஒங்களுக்கு தனிநாடு நாங்க வாங்கி குடுத்துறுவோம் அது வரைக்கும் பசிய பொறுத்துக்குங்கன்னு சொன்னா என்னய்யா அர்த்தம்? இதுக்கு சிங்களவனா செய்யாட்டியும் இங்கருந்து போற உதவி பணத்தையாவது அங்கருக்கற தமிழனுங்களுக்கு கிடைக்கறதுக்கு ஏதாச்சும் செய்ய முடியுமான்னு பாக்கணும். அதுக்கு நம்ம எதிரின்னாலும் பரவால்லைன்னு சிங்களவங்கூட சேர்ந்து இருக்கறா மாதிரி பொறுமையாத்தான் இருக்கணும். அவனுங்க தமிழனுக்கு ஏதாச்சும் செய்யணும்னா அதுக்கு அவனெ நாம தொந்தரவு குடுக்காம இருக்கணும். அத வுட்டுப்போட்டு சிங்களவன எதிரியா நினைச்சி அவன் பண்ண அக்கிரமத்துக்கெல்லாம் நாம தண்டன குடுக்கணும்னு பாத்தா அது நேர்மாறான விளைவுகளத்தான் ஏற்படுத்தும். அவனெ எதுக்கறதுக்கு ஆளுங்க இருக்கறா மாதிரியே சைனா, பாக்கிஸ்தான் மாதிரி ஆதரிக்கறதுக்கும் ஆளுங்க இருக்கத்தானய்யா செய்யிறாங்க? அதுக்கு என்ன சொல்றீங்க?

கணேஷ்: அப்ப இவ்வளவு நடந்தக்கப்புறமும் நாம இலங்கைய நட்பு நாடா நினைச்சி அவங்கூட உறவாடணும்னு சொல்றீங்களா பாய்? 

ரஹீம்: சிரிக்கிறார். நான் என்ன சொல்ல வறேன்னா அவங்கள எதிரி நாடா நெனைச்சி நம்ம கோவத்த காட்டறதால எந்த யூசும் இல்ல. அதுலயும் நம்மள சுத்தி இருக்கற மூனு நாடுமே நம்மளுக்கு நேர் எதிரா நடந்துக்கறப்ப நாம மட்டும் தனியா நிக்கறா மாதிரி இல்ல தெரியுது? இதுனால யாருக்கு என்னய்யா பிரயோஜனம்? இங்க ராஜபக்‌ஷே கொடும்பாவிய எரிச்சி கோவத்த வெளிய காமிக்கறீங்க? அங்க என்ன பண்றாங்க? அன்னைக்கே தமிழ் பகுதியில எல்லாம் செக் போஸ்ட்ட ஜாஸ்தியாக்கி வூட்ட வுட்டு போற ஓவ்வொருத்தனையும் சோதன பண்றேன்னு கொடும படுத்தறான். தமிழாளுங்களுக்குன்னு இந்தியா கட்டிக்குடுத்த வூடுங்கள்ல சிங்களவன குடி வைக்கிறான். நாம நடத்தற ஒவ்வொரு போராட்டமும் இந்த மாதிரி விளைவுங்களதான் ஏற்படுத்தும். இது இங்க இருக்கற தலைன்னு சொல்லிக்கிட்டு திரியறவங்களுக்கும் தெரியத்தான் செய்யிது. ஆனாலும் அவங்க பொழப்பே அதானேய்யா? அவங்களுக்கு வேற ஏதாச்சும் வேல வெட்டி இருக்கா என்ன?

ஜோசப்: பாய், இருந்தாலும் நீங்க ரொம்பதான் நம்ம தலைவருங்கள நக்கல் பண்றீங்க.

ரஹீம்: அடப் போங்கய்யா. தலைவருன்னு சொல்றவங்க முதல்ல பட்டினி கிடக்கட்டும், போலீஸ்ல அடிபடட்டும், ஜெயில்ல போயி ஜாமீன் கேக்காம இருக்கட்டுமே பாக்கலாம்? அடிபடறதும் ஜெயிலுக்கு போறதும் அப்பாவி தொண்டங்கதானய்யா? இது எந்த விதத்துல நியாயம்?

கணேஷ்: சரி பாய். நீங்க ரொம்ப டென்ஷன்ல இருக்காப்பல தெரியுது. மீதிய அடுத்த வாரம் பேசிக்கலாம். சாப்பாட்டு டைமுக்கு வீட்டுக்கு போகலன்னா அப்புறம் சாப்பாடு கிடைக்காது. நா வரேன். (கிளம்புகிறார்)

ஜோசப்: சரி பாய். நானும் வரேன். அடுத்த வாரம் கொஞ்சம் சாந்தமாவே வாங்க.

ரஹீம்: அட போங்க ஜோசப். ஒங்களுக்கு படிக்கற பசங்க இல்ல. அதான் கஷ்டம் தெரியல. நம்ம பொண்ணு இந்த செமஸ்டர் எப்படி வாப்பா பாஸ் பண்ணப் போறேன்னு அழுவுதுய்யா. அதான் எனக்கு பயங்கர ஆத்திரமா வந்துருச்சு. இதுக்கு இந்த பாழாப்போன அரசியல்வாதிங்கதானே காரணம்?

ஜோசப்: சரி, சரி வுடுங்க. வீட்டுக்குள்ள போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா கடைக்கி போங்க. வரேன். (ரஹீம் பாயின் பதிலுக்கு காத்திராமல் திண்ணையிலிருந்து இறங்கி தெருவில் நடக்க ரஹீம் அவர் செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு வீட்டுக்குள் நுழைகிறார்.

************


2 comments:

வேகநரி said...

இன்று தான் இதை படித்தேன் அந்த ரஹீம் உண்மைகளை அப்படியே புட்டு புட்டு வைக்கிறாரே.

டிபிஆர்.ஜோசப் said...

இன்று தான் இதை படித்தேன் அந்த ரஹீம் உண்மைகளை அப்படியே புட்டு புட்டு வைக்கிறாரே.//
அப்பாடா. நாலு மாசம் கழிச்சி ஒரு பின்னூட்டம் வந்துதே, ரொம்ப சந்தோஷம்.

இந்த மாதிரி எழுதுனா வரவேற்பு இருக்கும்னு நினைச்சி எழுதுனேன். யாருமே கண்டுக்கல. சரி போதும்னு விட்டுட்டேன். நீங்களாச்சும் வந்தீங்களே, அதுக்கு ரொம்ப நன்றி.

ரஹீம் பாய் சொன்னது எல்லாமே நம்மள்ல நிறைய பேர் சொல்லணும்னு நினைக்கறதுதான். ஆனால் சொல்ல தைரியம் வரமாட்டேங்குதே. அதான் இப்படி கற்பனையா ஒரு பாத்திரம்.