27 மார்ச் 2013

போராட்டம் சரி, ஆனால் எதற்காக...


ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. இப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்? அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும்  தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை.

ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?

நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாகக் குறிப்பிடுவது இவை: ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு.

மேலும் ஒரு விஷயத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கள யதார்த்தத்தின் அடிப்படையிலான சித்தாந்தம்!

கடந்த இரு ஆண்டுகளில் உலகம் சந்தித்த சில முக்கியமான போராட்டங்களையும் அவற்றின் இன்றைய விளைவுகளையும் எண்ணிப் பாருங்கள்.

துனிஷியாவில் ஜைனுல் ஆபிதீன் பென் அலி; எகிப்தில் ஹோஸ்னி முபாரக்;   லிபியாவின் மம்மர் கடாபி ஆகியோரை எதிர்த்து நடந்த போராட்டங்களை நாம் எவ்வளவோ உத்வேகத்தோடு பார்த்தோம். இன்றைக்கு அங்கு நடப்பது என்ன? அண்ணா ஹசாரேவுக்குக் கூடிய கூட்டம் இப்போது எங்கே போனது? ஹியூகோ சாவேஸின் மரணத்துக்குப் பின் வெனிசுலாவின் எதிர்காலம் என்னவாகும்?

இவை எல்லாம் உணர்த்தக்கூடிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. எதிர்ப்பும் தன்னெழுச்சியும் தனிநபர் ஆளுமையும் மட்டுமே ஒரு போராட்டத்தின் இலக்கை அடையப் போதுமானவை அல்ல என்பதுதான் அது. போராட்டம் தனது இலக்கை எட்ட சித்தாந்தம் வேண்டும். அதிலும், கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம் வேண்டும்.

தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள், சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?

 1. இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான சர்வதேச விசாரணை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தனித்தமிழீழம் வேண்டும்.

தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உள்பட இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன.

இவை எல்லாம் யாரை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகள் தெரியுமா? இந்திய அரசை நோக்கி. அதாவது, எந்த அரசு ஈழப் போரைப் பின்னின்று இயக்கியது என்று இவர்களால்  குற்றம்சாட்டப்படுகிறதோ, அந்த அரசை நோக்கி!

சர்வதேச விசாரணை என்று நாம் யாரை மனதில் வைத்துக் கேட்கிறோம்? அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளை. அதாவது, எந்த நாடுகள் எல்லாம் ஈழப் படுகொலையின் பின்னணிச் சதியில் பங்கு வகித்தனவோ, அந்த நாடுகள் விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனில், நம்முடைய கோரிக்கைகள் எந்த அளவுக்குக் கள யதார்த்தத்துடன் பொருந்துபவை?

இவை எல்லாம் எந்த அளவுக்கு ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டவை?

போரில் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்ட நிலையில், மறுவாழ்வுக்கென உருப்படியாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காத சூழலில், வேலைவாய்ப்பின்மையால் சூழும் வறுமைதான் ஈழத் தமிழர்களின் இன்றைய தலையாயப்   பிரச்னை. போருக்குப் பின்னரும் வீதிக்கு வீதி நிற்கும் ராணுவமும், திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய சிங்களமயமாக்கமும்தான் அவர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடிகள். ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான்.

முதலாவது, அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள், மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்... இந்த வரிசையின் கடைசி கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாமே தவிர, முதலாவதாக அல்ல.

அதையும்கூட முன்னெடுப்பது நாமாகவோ, சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது. ஈழத் தமிழ் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்திஜி, நேருஜி, நேதாஜி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அகற்றப்பட்டு, போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?

ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும்.

சமகாலத்தில், இதற்குச் சரியான உதாரணம், கூடங்குளம் மக்களின் போரட்டம். கூடங்குளப் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு பள்ளிச் சிறுமியிடம் கேட்டுப்பாருங்கள்... தான் எதற்காகப் போராடுகிறாள், தன்னுடைய கோரிக்கைகள் என்ன, அவற்றின் சாத்தியம் என்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன? தான் செல்ல வேண்டிய தொலைவு எவ்வளவு என்கிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வைத்திருப்பாள்.

இந்தியா எல்லா அணு உலைகளையும் மூட வேண்டும். உலகம் அணு சக்திக்கு விடை கொடுக்க வேண்டும். இது கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் கடைசி வரிசையில் இருக்கக்கூடிய கோரிக்கை. அப்படி என்றால், முதல் வரிசையில் இருக்கும் கோரிக்கைகள்  என்ன? கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்; மூடும் வரை எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் - இதுதான் கள யதார்த்த அடிப்படையிலான போராட்டம். இந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகும் சித்தாந்தமும் நீடித்த தன்மையும் சேரும்போதுதான் காலம் அதற்குத் தக்க பதிலைச் சொல்லும்.

இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போர் ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாத்தன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது.

இன்னும் ஒருபடி மேலே போய், தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை.

இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள். அல்-கொய்தாவின் நியூயார்க் வான் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அது.

இலங்கை ராணுவம் சுதாரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல்.

ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம். ஆனால், பதிலுக்குத் தமிழர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்? புலிகளிடம் அன்று வெளிப்பட்ட அதே தவறான ராஜதந்திரம்தான் இன்றைக்குத் தமிழகம் வரும் சிங்களர்களைக் குறிவைத்துத் தாக்குவோரிடமும் வெளிப்படுகிறது.

அன்றைக்குப் புலிகளின் மனதை ஆக்கிரமித்தது சாகச மனோபாவம் என்றால், இன்றைக்கு  வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம்.

இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம். ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல், போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும்.

இன்னும் இந்தியாவுக்குள்ளேயே நம்முடைய நிலைப்பாட்டை எதிர்க்கும் ஏனைய மாநிலத்தவர்கள் மீது நாம் வெளிப்படுத்தும் ஆத்திரம் ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தவே செய்யும். மேலும், காஷ்மீர் பிரச்னைக்காகவோ, மணிப்பூர் பிரச்னைக்காகவோ நம்மில் எத்தனை பேர் போராடியிருக்கிறோம்... கைமாறு எதிர்பார்க்க?

ஈழப் போரின் பின்னணி ஒரு சர்வதேச சதி. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா... எந்த ஓர் நாடும் இனி ஒருபோதும் ஈழ விடுதலைக்கு உதவாது.

இன்றைக்கு ஈழத் தமிழர்களின் உடனடித் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவமயமாக்கலிலிருந்து விடுவிப்பும். இலங்கை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டிய முதல் உண்மை தமிழர்கள் நலனின்றி இலங்கையில் அமைதி சாத்தியம் இல்லை என்பதை.

ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த நம்முடைய எந்தப் போராட்டமும் இந்தக் கள யதார்த்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தொடங்க வேண்டும். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களின் மன ஆறுதலுக்காகவோ, தமிழக அரசியல் கட்சிகளின் குற்றஉணர்வை மறைப்பதற்காகவோ நாம் போராடுவதால், யாருக்கு என்ன பயன்? ஈழத்தில் வாழும் தமிழர்களின் சுதந்திரமும், நல்வாழ்வும், எதிர்காலமும், இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் மலர இருக்கும் தமிழ் ஈழமும்தான் நமது இலக்காக இருக்க வேண்டும்!

By சமஸ்
First Published : 23 March 2013 

நன்றி: தினமணி