25 February 2013

கடல் - ஆழமில்லாத ஒரு அபத்தக் குப்பை!முன்பெல்லாம் தமிழ் திரைப்படங்கள் ஆழமான, அழுத்தமான கதைகளைக் கொண்டிருந்தன. காட்சிகளும், வசனங்களும் அன்றாடம் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளையும் பேச்சையும் படம் பிடித்துக் காட்டுவதுண்டு. அவற்றில் சிலவற்றை மிகைப்படுத்தி காட்டுவதும் உண்டு. நடிக, நடிகைகளின் நடிப்பு சற்றே மிகைப்படுத்தப்படுதலும் இருந்தன. ஆயினும் படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு மனநிறைவு இருந்ததை உணர முடிந்தது.

பாலசந்தர் நாடகத்துறையிலிருந்து வந்தவர் என்பதை நினைவுபடுத்தும் விதமாக அவருடைய பெரும்பாலான படங்கள் அமைந்தன - தண்ணீர், தண்ணீர் உள்பட. அவருடைய காமரா ஆங்கிளும் கூட (உ.ம். எதிர்நீச்சல்) முன்வரிசையிலிருந்து மேடையை அண்ணாந்து பார்க்கும் ஆங்கிளில் அமைக்கப்பட்டிருக்கும். அவருக்கு நெடுநாளாக 'கெட்ட வார்த்தை' ஒன்றை
தன்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தது. சில படங்களில் வாயசைப்பாக மட்டும் காட்டுவார். அபூர்வராகத்தில் துணிந்து கமல் வழியாக அதை உதிர்ப்பார். அதுதான் அவர் செய்த பெரிய புரட்சி!

அவரைத் தொடர்ந்து பாலு மகேந்திரா. இவருடைய படங்கள் பலவும் ஒரே மாதிரியான கருக்கருவைக் கொண்டிருந்ததோடு காட்சியமைப்புகளும், கதாபாத்திரங்களும் கூட அவருடைய பாணியிலேயே அமைந்து பேசியதை
காண முடிந்தது. மூன்றாம் பிறையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நினைவில் நிற்கும்படியாக ஒன்றும் இல்லை. அவருடைய படங்களில் சிறப்பம்சம் காமரா, லைட்டிங் மற்றும் மென்மையான பாடல்கள்.

பிறகு பாரதிராஜா. பதினாறுவயதினிலே ஒரு பசுமை புரட்சியாக - ஒரு நிஜமான கிராமத்தில்  நிஜமான பாத்திரங்களை உலாவ விட்டு - வெளிவந்தது. அவரும் கூட அதற்குப் பிறகு தடம்புரண்டாலும் முதல்மரியாதை, கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் யதார்த்தத்தை வெளிப்படுத்தின.

பாக்கியராஜ் doesn't deserve to be mentioned in this list. அவருடைய படங்களை இப்போது பார்த்தால் வெறும் கமர்சியல் குப்பையாகவே படுகின்றன.

மணிரத்தின் ஆரம்ப கால படங்களான பகல்நிலவு, மவுனராகம், நாயகன் முதல் சமீபத்திய கடல் வரை அவருக்கு மிகவும் பிடித்தமானது வயலன்ஸ் (violence). அவருடைய அனைத்து படங்களிலும் எந்த அளவு உணர்ச்சிவசமான
காட்சிகள் இருந்தனவோ அதே அளவுக்கு ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் இருந்தன. மாஃபியா ரக கதாபாத்திரங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.

அவர் காப்பியடிப்பதிலும் மிகவும் கைதேர்ந்தவர். அவருடைய படங்களை inspired என்பதைவிட copied என்பதுதான் சரி. சமூகத்தில் நடப்பவற்றை நகலெடுத்து சுய கற்பனையைக் கலந்து வடிப்பதுதான் 'கதை'. ஆனால்
இன்னொருவருடைய கற்பனையை சற்று இப்படியும் அப்படியும் வளைத்து தன்னுடைய கற்பனை போல் வடித்தெடுப்பது மணிக்கும் அவருடைய தோழரான கமலுக்கும் கைவந்த கலை.

மணி சமூகத்தில் காப்பியடிக்க விஷயம் கிடைக்கவில்லை என்றால் இதிகாசங்களையும் காப்பியடிப்பார். தளபதியில் மகாபாரதம், இராவணனில் ராமாயணம் என்ற தொடரில் இப்போது கடலில் பைபிள். சாத்தான் இயேசுவின் அண்ணன் என்கிறதாம் பைபிள்!!!

அவருடைய அனைத்து படங்களிலுமே protagonist,  antagonist என்று இருவர் இருப்பர். அதாவது நல்லவர் என்று ஒருத்தர் இருந்தால் அவரை எதிர்க்க கெட்டவரும் ஒருவர் இருப்பார். இருவருக்கும் இடையில் நடைபெறும்
யுத்தத்தில் நல்லவர் வெல்வார்.

அவருடைய படங்களில் பாலசந்தர், பாலுமகேந்திரா போன்றவர்களைப் போலவே அவருடைய பாணியில்தான் அனைத்து கதாபாத்திரங்களும் வசனங்களை பேச வேண்டும். மணிரத்தினத்தின் பாத்திரங்கள் வசனம் பேசுகின்ற பாணியே ஒரு காலத்தில் பெரிய நகைச்சுவையாக பல படங்களில் காண்பிக்கப்பட்டன. இருந்தாலும் மணி அதை கண்டுக்கொள்ளவே மாட்டார். அதற்குப்பிறகு வந்த அவருடைய அனைத்துப் படங்களிலும் அதே பாணி! சலிப்பே இல்லாமல் எப்படி ஒரே பாணியை இருபதாண்டு காலமாக.. how stupid!

கடல் படத்தில் வரும் யதார்த்தத்திற்கு முரணான பல விஷயங்களை என்னுடைய நண்பர் ஜோ மில்டன் பட்டியலிட்டு விட்டார். அவர் படத்தில் வரும் பகுதியைச் சார்ந்தவர் என்பதால் அவர் எழுதிய அனைத்தும் உண்மையே! இத்தகைய அபத்தங்கள் சாதாரண ஒரு இயக்குனர் -  சிலரைக் குறிப்பிடலாம். தூத்துக்குடியை சார்ந்த ஒரு இயக்குனரையே கூட குறிப்பிடலாம்தான். வேண்டாம். ஏன் வம்பு? அவருக்கும் கூட சில விசிறிகள் இருக்கலாம்! - என்றால் சரி, அவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று விட்டுவிடலாம். ஆனால் தேசிய அளவில் தலைசிறந்த படைப்பாளி என்று பெயர் எடுத்த ஒருவர் இத்தகைய அபத்தங்களை செய்வது மன்னிக்க முடியாதது. கதை, வசனம் தன்னுடையதல்ல என்று அவர் தப்பிக்க முடியாது.

அவருடைய சாத்தான் கதாபாத்திரத்தில் வருபவருடைய பெயர் உண்மையிலேயே இன்று பிரிந்துபோன கிறிஸ்த்தவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு முன்னாள் பாதிரியாருடையது  என்பது மணிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஜெயமோகனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவரும் கத்தோலிக்க பாதிரியாராக இருந்து வெளியேற்றப்பட்டவர்தான் (excommunicated). ஆனாலும் அவர் இன்னமும் இறைப்பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய வெண்கல குரலில் வெளிவந்துள்ள அனைத்து கிறிஸ்த்துவ பாடல்களும் மிகவும்
பிரபலமானவை. அவருடைய பெயரை தன்னை சாத்தான் என்று கூறிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்திருப்பது
அபத்தத்தின் உச்சக்கட்டம்!

அதே போன்றதுதான் 'மேசைக்காரன்' என குறிப்பிடப்படுவதும். நான் தூத்துக்குடியில் மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் இந்த பட்டப்பெயரை கேள்விப்பட்டேன். தூத்துக்குடியில் இதை வசப்பெயர் என்றும்
கூறுவார்கள். அதாவது யாரையாவது கேலி செய்ய வைக்கப்படும் பெயர். தூத்துக்குடி நகரை இரண்டாக பிரிப்பது நகரின் இடையில் செல்லும் ரயில்பாதை. பாதையின் மேற்கே இருப்பவர்கள் மீனவர் அல்லாத மேல்தட்டு கிறிஸ்தவர்கள். கிழக்கே மீனவ கிறிஸ்தவர்கள். தங்களை மேல்தட்டு மக்கள் எனக் கூறிக்கொள்பவர்களும் அதே மீனவ இனத்தைச் (Paravas) சார்ந்தவர்கள்தான் என்றாலும் பெரும்பாலும்  Fernando என்ற குடும்பப் பெயரைக் கொண்டவர்கள்தான் என்றாலும் Fernando என்றால் எங்கே மீனவர்கள் என்று தங்களை மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி தங்களை Fernandez என்று கூறிக்கொள்வார்கள்!

அந்த காலத்தில் மீனவர் அல்லாத மேல்தட்டு மக்களுடைய அனைத்து வீடுகளிலும் உணவு மேசையில் (dining table) அமர்ந்துதான் உண்பார்களாம். மீனவ குடும்பங்கள் பெரும்பாலும் அதிகம் படிக்காத பாமர மக்கள் என்பதால்
அவர்கள் தரையிலேயே அமர்ந்து உண்பார்களாம்! ஆகவே அவர்களை 'மேசைக்காரர்கள்' என்று கேலியாக அவர்களுக்கு பின்னால் அழைப்பதுண்டாம். அதுபோலவே தூத்துக்குடியில்  'கோப்பைக்காரங்க', 'கப்பக்காரங்க' என பல வசவுப்பெயர்கள் உண்டு. ஆனால் அவர்களை படத்தில் வருவதுபோல மேசைக்காரரே, கப்பக்காரரே என அழைத்து நான் கண்டதும்
இல்லை கேட்டதும் இல்லை.

தெந்தமிழ்நாட்டு மீனவக் குடும்பங்கள் இறைநம்பிக்கைக்கு மிகவும் பெயர்போனவை. ஆண்கள் எப்படியோ, பெண்கள் மிகவும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். கடலுக்குள் பிழைப்பு தேடிச் செல்லும் தங்களுடைய வீட்டு ஆண்கள் நல்ல சுகத்தோடு திரும்பிவர அவர்களுக்கு இறைநம்பிக்கைதான் ஆதரவாய் இருந்து வந்துள்ளது. அவர்களுடைய நம்பிக்கையில் முதலிடம் இயேசுவின் தாயார் மாதாதான்... எந்த துன்ப நேரத்திலும் இயேசுவே என்று அழைக்கும் பெண்களை விட மாதாவே என்று கதறும் தாய்மார்கள்தான் அதிகம். அத்தகைய பெண்கள் ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கும் குருவானவரிடம் நக்கலாக, அதுவும் கேவலமாக பேசுவதுபோன்ற வசனங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு ஜெயமோகனின் வக்கிர புத்திதான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

என்னைப் போன்ற கிறிஸ்த்துவர்களுக்கு இஸ்லாமிய அல்லது இந்து மத நுணுக்கங்களைப் பற்றிய அல்லது பூசை புனஸ்காரங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி முழுவதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையோ அதுபோன்றுதான் கிறிஸ்த்தவரல்லாதவர்களுக்கும் ரோமன் கத்தோலிக்கம் என்றால் என்ன என்றோ பிரிந்து போன சகோதரரகள் (Protestants) என்றால் என்ன என்றோ அல்லது அவர்களுடைய வழிபாடுகள், வாழ்க்கை முறை, பேச்சுவழக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் முழுமையக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  அத்தகைய சூழலில் அவர்களுடைய வாழ்க்கை முறையை கதையாக வடிக்கும்போது சம்பந்தப்பட்டவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அவசியத்தைக் கூட உணராமல் குருட்டுத்தனமாக தனக்கு தோன்றியதை படம்பிடித்து வெளியிடுவது என்பது மணிரத்தினம் போன்றவர்களுக்கு நிச்சயம் அழகல்ல.

ஆனால் கடலோர கிறிஸ்துவர்களுடைய வாழ்க்கையை சரியான முறையில் படம்பிடித்து காட்டவில்லை என்பதற்காக மட்டும் இந்த திரைப்படம் தோல்வியடையவில்லை என்பதையும் அவர் உணர்ந்துக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த கதையே பலருக்கும் அன்னியமாகவும் அபத்தமாகவும் பட்டதால்தானோ என்னவோ படம் படுதோல்வியை கண்டுள்ளது.

இராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட இராவணனும் இத்தகைய தோல்வியைத்தானே தழுவியது!

இனியாவது மணிரத்தினம் விழித்துக்கொண்டால் சரி. Some people never realise their folly until it is too late!

*********

4 comments:

Robin said...

// அத்தகைய பெண்கள் ஞாயிறு திருப்பலிக்கு அழைக்கும் குருவானவரிடம் நக்கலாக, அதுவும் கேவலமாக பேசுவதுபோன்ற வசனங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு ஜெயமோகனின் வக்கிர புத்திதான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.// உண்மை.

ஒரு இந்துத்வாவாதியிடம் கிறிஸ்தவர்களைப் பற்றி கதை எழுத சொன்னால் இப்படிதான் எழுதுவார். ஜெயமோகனுக்கு, கிறிஸ்தவர்களின் மீது சேறு வாரி இறைக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தருமி said...

நான் பின்னூட்டம் எதுவும் போடலைங்க ... !

Tbr Joseph said...

ஒரு இந்துத்வாவாதியிடம் கிறிஸ்தவர்களைப் பற்றி கதை எழுத சொன்னால் இப்படிதான் எழுதுவார். ஜெயமோகனுக்கு, கிறிஸ்தவர்களின் மீது சேறு வாரி இறைக்க இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறத//

உண்மை. ஆனால் அதை அப்படியே திரையில் வடித்தெடுத்த மணிரத்தினத்தை என்னவென்று சொல்வது?

Tbr Joseph said...

நான் பின்னூட்டம் எதுவும் போடலைங்க ... !//

அப்படியா? சரிங்க:/))