15 February 2013

வனத்துல சுத்துனாலும்.....
எப்போதும் போலவே காதலர் தினம் வந்தது. பஜ்ரங்தல், இந்துத்வா அசட்டுத் தீவிரவாதிகளின் அராஜகங்களும் நடந்தேறின.

பல தமிழ் தொலைக்காட்சிகளில் காதலர் தினம் - சரியா, தவறா? அல்லது வேண்டுமா, வேண்டாமா?  என்ற ரீதியில் விவாத மேடைகளும் அரங்கேறின.

சொல்லி வைத்தாற்போல் அனைத்து மேடைகளிலும் லோக்கல் இந்துத்வா, பிஜேபி தலைவர்கள் ஒரே ராகத்தில், உச்சஸ்தாயியில் அதை எதிர்த்தனர். இளைஞர்கள், எழுத்தாளர்கள், நடுநிலையாளர்கள் என அவர்களுடைய எதிரணியில் திரண்ட அனைவருமே இதில் தவறேதும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான வர்த்தகமயமாக்கல்தான் காதலர் தினத்தின் புனிதத்தைக் கெடுத்துவருகின்றது என்றெல்லாம் பேசினார்கள்.

அதில் சன்நியூஸ் நடத்திய விவாத மேடையில்தான் பல முட்டாள்தனமான ஏன், கேவலமான சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டன.

'வனத்துல சுத்துனாலும் - அவர் சொன்னது 'மேய்ஞ்சாலும்(!)' இனத்துல வந்து சேரணும்னு சொல்லி வச்சிருக்குல்லே...'

எதற்கோ சொன்ன பழமொழியை காதலர் தினத்துக்கு எதிராக பயன்படுத்தியபோது எதிரணியினரை மட்டுமல்லாமல் அதை கேட்ட அனைவரையுமே நிச்சயம் முகம் சுழிக்க வைத்திருக்கும்.

அதாவது யாரை வேண்டுமானாலும் - அவனோ, அவளோ எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் காதலித்துக் கொள்ளலாமாம் (அவர் உபயோகித்த 'மேய்ஞ்சாலும்' என்ற வார்த்தைக்கு பொருள் வேறு என்பது வேறு விஷயம் - ஆனால் திருமணம் என்று வரும்போது சாதிக்குள்ளேயே செய்துக்கொள்ள வேண்டுமாம்.

எத்தனை அருமையான அறிவுரை! லட்சோப லட்சம் பார்வையாளர்கள் காணக்கூடிய ஒரு ஊடகத்திலேயே இப்படியொரு அருவருக்கத்தக்க உத்தியை ஒருவரால் துணிச்சலாக கூறமுடியும் என்றால் அவர் சார்ந்திருந்த கட்சியினரின் உண்மையான தரத்தை என்னவென்று சொல்வது?

சாதி அடிப்படையில் துவங்கப்படும் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்படும் வரையில் இத்தகைய அநாகரீகமான பேச்சுக்களும் செயல்பாடுகளும் குறைவதற்கு வாய்ப்பேயில்லை.

எல்லா காதல்களுமே திருமணத்தில் முடிவதில்லையே? பலரும் வெறும் பொழுதுபோக்காகத்தானே காதலில் ஈடுபடுகிறார்கள்? அப்படியே திருமணத்தில் முடிந்தாலும் பெரும்பாலான காதல் திருமணங்கள் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களைப் போல நீடித்து நிற்பதில்லையே என்பது போன்ற வாதம் நடுநிலையாளர்கள் பலராலும் முன்வைக்கப்பட்டன.

அதற்கு பதிலாக முன்வைக்கப்பட்ட பதில்: காதலிக்கும்போது இடையில் வரும் அனைத்து சோதனைகளையும், எதிர்ப்புகளையும் துணிச்சலுடன் எதிர்த்து போராடும் காதலர்கள் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் சில்லறை சோதனைகளிலும் சோர்ந்து போய்விடுகின்றனர். இதுதான் ஒருசில காதல் திருமணங்கள் இடையிலேயே முறிந்துவிடக் காரணம்.

இந்த வாதத்தில் ஓரளவுக்கு உண்மை இருக்கலாம். ஆனால் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில் பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்களே தலையிட்டு அவற்றை முளையிலேயே கிள்ளி எடுத்துவிட முன்வருகின்றனர். ஆனால் அதுவே காதல் திருமணங்களில் பிரச்சினை என்று வரும்போது பெரும்பாலான பெற்றோர்கள்  'நீயா பாத்து செஞ்சிக்கிட்டதுதானே, அனுபவி' என்று இரக்கமில்லாமல் கூறி ஒதுங்கிக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.

சாதி, மதம், பொருளாதாரம் என்பவற்றையெல்லாம் பார்த்து வருவதெல்லாம் காதல் இல்லை. இருவர் மனதிலும் ஒரே சமயத்தில் ஏற்படும் இனந்தெரியா உணர்வுதான் காதல், அதுக்கு சாதிங்கற வேலிய போட்டு எங்கள அதுக்குள்ள அடைக்க முயற்சி செய்யாதீங்க என்று ஒரு இளம் பெண் கண்ணீர் மல்க கூறிய போது....

காதல் என்பது புனிதமானது.... காதலிக்காதவர்களே இல்லை.... காதலை அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்... என்பதெல்லாம் அதை ஆதரிப்பவர்களின் வாதங்களாக இருந்தாலும் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

காதல், திருமணம் என்பது சம்பந்தப்பட்ட இருவருடைய தனிப்பட்ட பிரச்சினை அதில் தலையிட சமுதாயத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதுதான் என்னைப் போன்ற பல நடுநிலையாளர்களின் கருத்து. ஆனால் அதே சமயம் கண்மூடித்தனமான காதலும் நிஜவாழ்க்கைக்கு ஒத்துவராது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் சாதியோ மதமோ காதலுக்கு தடையாய் இருக்கலாகாது என்பது மட்டும் சத்தியமான உண்மை.

******


 

No comments: