15 ஜூன் 2012

ஜனாதிபதி பதவியும் மூன்று பெண்களின் ஈகோவும்..

நம் நாட்டின் மிக உயர்ந்த பதவி என கருதப்படுவது ஜனாதிபதி பதவி. ஆனால்
அந்த பதவிக்கு இதுவரை, அதாவது டாக்டர் ராதாகிரிஷ்ணனுக்குப் பிறகு, பொருத்தமானவர் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஏன், கலாம் தகுதியானவராக உங்களுக்கு தெரியவில்லையா என்றால் இல்லை என்றுதான் கூறுவேன். நடிகர் விவேக்கை தனக்கு மிகவும் பிடித்தமான ஏற்றுக்கொள்வது என்ற சிரமம்தான். மேலும் அவர் நாட்டின் சிறந்த அணு விஞ்ஞானியாக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். அல்லது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவ தலைவராக வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பதவிக்காலம் முடிந்தபிறகும் அதிலேயே மேலும் ஒட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட ஒருவரை அந்த பதவிக்கு தகுதியானவராக என்னால் கருத முடியவில்லை.

சாதாரணமாக ஜனாதிபதி பதவிக்கு நாட்டின் அனைத்து கட்சிகளும் கருத்தொருமித்து தெரிவு செய்வதுதான் சிறந்தது என்ற கருத்து இருந்தது. நாடாளுமன்றத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சி ஓரிருவரை முன்மொழிவதும் வர்களுள் ஒருவரை அதாவது  அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து  அனைவருக்கும் உகந்தவராக கருதப்படுபவரை தெரிவு செய்வது மரபாக இருந்தது.  ஆனால் வி.வி. கிரி காலத்திலிருந்து அந்த எண்ணம் தகர்த்தெறியப்பட்டு நாட்டின் உயர் பதவிக்கும் போட்டி என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு முழு காரணம் இந்திரா காந்தி அம்மையார்தான்.

அன்று முதல் இன்றுவரை ஜனாதிபதிக்கு போட்டி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் இம்முறை நம் நாட்டின் அரசியலில் மும்மூர்த்திகளாகிவிட்ட மூன்று பெண் அரசியல்வாதிகள் (அவர்கள் பெயர் தேவையில்லாத ஒன்று என்று கருதுகிறேன்.) தங்களுடைய சுய கவுரவத்திற்காக, ஏன் தாந்தோன்றித்தனமாக என்றும் கூறலாம், மூன்று நான்கு தலைவர்களின் பெயர்களை -அவர்களை கலந்தாலோசித்துதான் நடக்கிறதா என்று கூட தெரியவில்லை - அறிவித்துக்கொண்டிருப்பது இதுவரை இல்லாத ஒன்று.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது மிகவும் சகஜம். ஆனால் அதை தனிப்பட்ட கருத்து வேறுபாடாக கருதி 'நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன், நான் சொல்வதை நீ கேள்' என்ற போக்கில் ஆளுக்கொரு பெயரை அறிவித்துக்கொண்டிருப்பது நாட்டிற்குள் மட்டுமல்லாமல் நாட்டிற்கு வெளியிலும் அவப்பெயர் ஏற்படுவதை ஏன் இந்த பெண் தலைவர்கள் உணர்ந்துக்கொள்வதில்லை?

இந்த பெண் தலைவர்களுக்குப் பின்னால் சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேல் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்களும் ஓடுவதை பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.

இந்த சிக்கல் எப்போது முடிந்து யார்த்தான் அடுத்த ஜனாதிபதி நாற்காலியில் அமரப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால் ஒன்று, அதில் யார் அமர்ந்தாலும் மத்தியிலுள்ள ஆளுங்கட்சியின் கைப்பாவையாகத்தான் செயல்படப் போகிறார் என்பது மட்டும் உண்மை.
********